Advertisement

 

அத்தியாயம் ஏழு:

இன்றைய நிகழ்வுகள்

உள்ளே நுழைந்தவன் அவன் நினைத்தது போல் வந்தவரை பார்த்தவன் “வணக்கம் அய்யா”, என்றான்.

“வணக்கம் தம்பி”, என்றார் பதிலுக்கு சிவசங்கரன்.

பத்திரிக்கைகளில் நியூஸ் சேனல்களில் அடிக்கடி அவரை, அவரின்  புகைப்படங்களை பார்க்க நேர்ந்தாலும் அவரை நேரில் பார்த்து வருடமாகிவிட்டது.

அவன் அவரை பார்த்த பின்பும் அவரை அளவெடுத்தபடி இருந்தாலும் ஒன்றும் பேசாமல், பார்த்திருக்க…………..

அவரை சுற்றி நிறைய பேர் இருந்தனர். வெளியே எல்லாரும் நின்றிருக்க உள்ளே அவருடன் அவர் பி ஏ மற்றும் சிலரும் நின்றிருந்தனர்.

எல்லாரும் இருக்கிறார்கள் என்றுணர்ந்து அவரின் பதவியின் மரியாதையின் பொருட்டு பேசும் அவசியத்தை உணர்ந்தவனாக, “எப்படி இருக்கீங்க ஐயா, பேப்பர்ல பார்த்தேன்! நாளைக்கு நீங்க வெளிநாடு போறதா“, என்றான்.

“ஆமாங்க தம்பி, நாளைக்கு கிளம்பறேன்!. உங்களை போறதுக்கு முன்னாடி பார்த்துட்டு போலாம்னு வந்தேன்!.”

அவனுக்கு தெரியும், இது அம்மாவின் ஏற்பாடாக இருக்கும் என்று, என்ன பேசுவது என்று தெரியாமல் ரமணன் நிற்க, “வேலை முடிஞ்சதுங்களா, வீட்டுக்கு போகலாமா”, என்றார்.

அவர் தன்னுடைய எல்லா வேலைகளையும் விட்டு இங்கே அவசரமாக கிளம்பி வந்த வேலை அதுதானே!

“ஒரு பத்து நிமிஷம் இன்னும் வேலை இருக்கு! விசாரனைக் கைதி ஒருத்தனை இங்கே வச்சிருக்கோம். அவனை மறுபடியும் ஜெயில் அனுப்ப சொல்லிட்டு வந்துடறேன்”, என்றான்.

அவன் எஸ். பி. யிடம் வேண்டிய தகவல்களை மட்டும் சொல்லி அவனை திரும்ப அனுப்ப சொல்லிவிட்டு வருவதற்குள்………….

நிறைய ப்ரெஸ் மக்கள் குழுமியிருந்தனர். புது ஜாயின்ட் கமிஷனர் பொறுப்பேற்க வந்திருக்கிறார், என்றவுடனேயே காலையிலேயே பத்திரிக்கையாளர்கள் ரமணனை பார்க்க விருப்பம் தெரிவிக்க…………………..,

ஆனால் கமிஷனர் அவராகவே கூப்பிடுவார் என்று சொன்னதால் அமைதியாக இருந்தனர். ஆனால் அவரை பார்க்க மனித வள மேம்பாட்டுத்துறை மத்திய அமைச்சர் வந்திருக்கிறார் என்ற செய்தி பரவ உடனே பத்திரிக்கையாளர்கள் வர ஆரம்பித்தனர்.

சிவசங்கரனுக்கு யாரையும் பார்க்க விருப்பம் இல்லை. “ரமணன் சென்னை வந்திருக்கிறான்! உங்கள் பேச்சை தட்ட மாட்டான். அவன் வேறு இடம் தங்க பார்க்கும் முன் அவனை வீட்டுக்கு கூட்டிச்சென்று விடுங்கள்”, என்று சுந்தரவல்லி சொல்லியதால்……….

தன்னுடைய வேலைகள் அத்தனையும் ஒதுக்கி வைத்து அவர் வந்திருக்கிறார். இதில் பத்திரிக்கையாளர் சந்திப்பை அவர் விரும்பவில்லை.

அவர் என்ன செய்வது என்ற யோசனையில் இருக்க, வெங்கட ரமணன் வேலையை முடித்து வர………….. வெளியே வந்தால் நிறைய பத்திரிக்கையாளர்கள்.

“சர் உங்களை பார்க்க காத்திருக்காங்க. உங்களை ரெண்டொரு நாள்ல பார்க்கரேன்ன்னு சொல்லியிருக்காங்கன்னா, அமைச்சர் எல்லாம் வந்திருக்காங்க என்ன விஷயம்னு தெரிஞ்சிக்க ஒரே ஆர்வம். கண்டிப்பா பார்க்கனும்றாங்க!”, என்று கூற………….,

ரமணன் சிவசங்கரனை பார்க்க………………. “எனக்கு யாரையும் பார்க்க விருப்பமில்லை தம்பி”, என்றார். அவரின் நிலை உணர்ந்தவனாக, “நீங்க இருங்க நான் பார்க்கிறேன்”, என்றவன்.

பத்திரிக்கையாளர்களை பார்த்தான், “தயவு செய்து சீக்கிரம் முடித்து கொள்ளுங்கள். இன்று தான் வந்தேன்! அதனால் தான் உங்களை நாளை சந்திப்பதாக கூறினேன்”, என்றான்.

அதில் ஒருவர், “சர் வெல்கம் டு சென்னை. உங்களை பற்றி நிறைய கேள்விபட்டிருக்கிறோம். உங்களின் கைகளில் எங்களின் சென்னை இன்னும் குற்றங்கள் குறைந்து இருக்க வாழ்த்துக்கள்”, என………..

“நன்றி!”, என்றவன், “எங்களின் சென்னைன்னு ஏன் சொல்றீங்க! நானும் தமிழ் நாட்டை சேர்ந்தவன் தான். சொந்தவூர் கம்பம், எனக்கு சென்னையும் ஒருவகையில் சொந்தம் தான்! நான் படிச்சது இங்கே தான்! என் மனைவியின் ஊரும் இதுதான்! என்றான்.

“சர் உங்களை பார்க்க மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் ஏன் வந்திருக்கிறார்” என்று அடுத்த கேள்வி வர………..,

“என்னை பார்க்க என் மாமனார் வந்திருக்கிறார். ஃபார்சுனேட்லி அவர் அமைச்சராக போய்விட்டார்”, என……………..

அங்கே எல்லோருக்கும் புதிய செய்தி, “என்ன? அவர் உங்க மாமனாரா!”, என்று ஆச்சர்யப்பட……………,

அங்கே கமிஷனர் ஆபீஸ் மக்களுக்குமே இது புதிய செய்தி, அடடா இவனும் ஸ்ட்ரிக்ட் இடமும் பெரிய இடம் இவனை எப்படி சமாளிக்கபோறோம் என்று அங்கிருந்தவர்களின் யோசனை ஒடிக்கொண்டிருக்க………………….

இந்த வாக்கியத்தை கேட்ட அமைச்சரின் பி.ஏ அதனை அப்படியே அமைச்சரிடம் ஒப்புவிக்க, அமைச்சரில் இருந்து சிவசங்கரன் ஆன அவருடைய மனநிலை என்ன மாதிரி உணர்ந்தது என்று அவரால் விவரிக்க முடியாது. அவருக்கு அவனை பார்க்க வரும்போது இருந்த டென்ஷன் விலகி அவர் தன்னையே சிறிது ஆசுவாசபடுத்தி கொண்டார்.

 “இதில் ஆச்சர்யப்பட என்ன இருக்கு? நான் அதிகம் தமிழ் நாட்டுக்கு வேலையில் சேர்ந்த பிறகு வரவில்லை. எங்கள் திருமணத்தை கோயிலில் சிம்பிள் ஆக மிக நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் மட்டுமே நடந்தது”.

“கல்யாணம் எல்லாரும் தான் பண்ணிக்கறாங்க, இது எல்லாம் பெரிய விஷயமா என்ன? நான் என் மாமனார் அமைச்சர் என்பதால் என் பணியின் காரணமாக தள்ளியே நிற்பேன். அதுவுமில்லாம எனக்கு கொடுக்கப்பட்ட அஸ்சைன்மென்ட் எல்லாம் மிகவும் ஆபத்தானது”.

“நானே அதிகம் மீடியாக்களுடன் அதிக தொடர்பில் இருக்க மாட்டேன். அதனால் என்னுடைய பெர்சனல் வாழ்கை பற்றி நான் மீடியாக்களிடம் அதிகம் பேசியதில்லை. அதனால் என்னை பற்றி அதிகம் உங்களுக்கு தெரியவில்லை. என்னை என்பது என் மனைவியையும் சேர்த்து தான் அவள் யாருடைய மகளாக இருந்தாள் என்ன?”,

“அவர் என்னை மாமனார் என்ற முறையில் மட்டுமே பார்க்க வந்திருக்கிறார். வேறு எந்த காரணமும் இல்லை. அதை விட்டு வேறு ஏதாவது கேட்க வேண்டும் என்றால் கேளுங்கள்!”, என்றான்.

“அப்போ அவர் தான் உங்க ட்ரான்ஸ்பர்க்கு காரணமா”, என்று ஒருவன் கேட்க”,,………

கேட்டவனை சிறிது நேரம் அமைதியாக பார்த்தவன்,  

“உண்மையா சொல்லனும்னா இந்த மாதிரி கேள்விகளை தவிர்பதர்க்காக தான் நான் தமிழ் நாட்டுக்கு வரவேயில்லை!. நான் மிக சில வருடங்களில் அடைந்திருக்கும் இந்த பதவி உயர்வுக்கு தேவையில்லாத என்னுடைய மாமனார் அமைச்சர் என்ற காரணத்திற்க்காக பல சங்கடங்களை நான் சந்திக்க வேண்டியிருக்கும்னு தான் வரவேயில்லை”.

“உங்களுக்கு தெரியாததில்லை! என் மாமனார் அமைச்சர்ன்னு நாட்ல நான் இருக்கிற இடத்தில குற்றம் நடக்காம இருக்குமா? இல்லை குற்றவாளிங்க தானா வந்து சரணடைஞ்சிடுவாங்களா?”. சிறிது இடைவெளி விட்டவன்,

“இவ்வளவு நாளா இல்லாம இப்போ ஏன் வந்தீங்கன்னு கேட்கலாம். இரண்டு காரணங்கள். ஒண்ணு முன்னமே எனக்கு தமிழ்நாட்டுக்கு ட்ரான்ஸ்பர் வந்தப்போ வேண்டாம்னு மறுத்துட்டேன்”.

“அதனால இப்போ ஒத்துக்கிட்டேன். ரெண்டாவது பாருங்க, என் மனைவி தமிழ் நாட்டை விட்டு வர மாட்டேங்கறா. எவ்வளவு நாள் நான் தனியா இருக்க முடியும் சொல்லுங்க! அதான் வந்துட்டேன்!”, என்று சிறு புன்னகையோடு கூறி,

“ப்ளீஸ் தப்பா எடுக்காதீங்க! நான் நாளைக்கு உங்களை பார்க்கிறேன்! உங்க ஒத்துழைப்பு இல்லைன்னா என்னால பெருசா ஒண்ணும் சாதிச்சிட முடியாது. சாதனைன்னு நான் சொல்லறது என்னோடது இல்லை”.

“இங்கே சென்னையின் சேஃப்டி அண்ட் செக்யூரிட்டி. பத்திரிக்கையில இந்த தப்பு நடந்திடுச்சுன்னு நீங்க போடுற அதே சமயம் எனக்கும் தகவல் குடுங்க, உங்க பத்திரிகை வெளில வர்றதுக்கு முன்னாடி என்ன நடவடிக்கை எடுக்கனுமோ, நான் எடுத்திருப்பேன்”.

“திஸ் இஸ் அ ப்ராமிஸ் வாட் ஐ கிவ் யூ பீபோர் ஐ டேக் சார்ஜ்!”. அவன் குரல் கம்பீரமாக ஒலித்தது. அது கேட்பவர்களை கட்டிப் போட்டது.

நான் தான் பெரியவன் என்று இல்லாமல் இருந்த இந்த பணிவான பேச்சு, அதே சமயம் குரலில் ஒலித்த திண்மை, கண்டிப்பு எல்லோருக்கும் அவனை நம்பலாம் என்ற உணர்வையே கொடுத்தது. 

“அவர் நாளை சுற்று பயணம் போகிறார். என்னை பார்த்துவிட்டு போக வந்திருக்கிறார்.  அதனால் நான் போனால் தான் அவர் சீக்கிரம் பயணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்வார், அதனால் பிறகு சந்திக்கலாம்”, என்று கூறி மேலே யாரும் பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்காமல் கிளம்ப………….. .

அவனோடேயே சிவசங்கரனும் கிளம்பினார். அவரிடம் கேள்வி கேட்க பத்திரிக்கையாளர்கள் முனைய, “நான் சீக்கிரம் கிளம்ப வேண்டும். உங்களுக்கு தேவையான என்னுடைய பயண விவரங்களை என்னுடைய பி ஏ கூறுவார்”, என்று கூறி அவரும் எதுவும் கேட்க வாய்ப்பு கொடுக்காமல் விரைவாக கிளம்பினார்.  

அதற்கு சற்று முன்னர் தான் அவரின் பி ஏ அவரிடம் ஒப்புவித்ததை அப்படியே தன்னுடைய மனைவியிடம் ஒப்புவித்தார். அதை அவரின் மனைவி ராஜேஸ்வரி அப்படியே ரமணனுடைய அம்மாவிடம் கூற, அவருமே பதட்டம் வடிந்தவராக போனை கையில் வைத்தது வைத்தபடியே சமைந்து நிற்க………….,

 

ராஜேஸ்வரி சுந்தரவல்லியிடம் போனில் பேசும்போது இந்த செய்தியை ராம் பிரசாத் கேட்டு அவன் முகம் புன்னகையை பூச, அவனுடைய எட்டு வயது மகனுக்கு பாடம் சொல்லிக்கொடுத்தபடியே இந்த செய்தியை கேட்டு கொண்டிருந்த அவன் மனைவி கல்பனா……………,

சட்டென்று திரும்பி ராம் பிரசாத்தின் மூன்று வயது மகளுக்கு சாதம் ஊட்டிக்கொண்டிருந்த வரமஹாலக்ஷ்மியை பார்க்க, எல்லோர் முகத்திலும் வடிந்த பதட்டம்  வராவின் முகத்தில் வேகமாக ஏறிக்கொண்டிருந்தது.       

அத்தியாயம் எட்டு:

அன்றைய நினைவுகள்

அண்ணனிடம் சென்று ரமணன் என்னை மிரட்டுகிறான் என்று அவள் கூறி கையோடு அவனை இழுத்துக் கொண்டு வந்தாள். “விடு வரா”, அப்புறம் கேட்கலாம் என்று ராம் பிரசாத் சொல்லியும் விடாமல்…………….,

“நீங்க வாங்க அந்த வெங்கி ( மனதிற்குள் மங்கி என்றவள் ) என்னை மிரட்றான்”, என்றவள் ரமணன் முன் ராம் பிரசாத்தை கொண்டு நிறுத்தினாள்.

“என்ன ராமண்ணா”, என்று ரமணன் கேட்க………. “நீ இவளை மிரட்றியாம்”, என்றான் சிறு புன்னகையோடு, “அடிக்காமல் விட்டேன்னு சந்தோஷப்பட சொல்லுங்க! அதிகப்ரசங்கி! இவளை யார் அம்மா கிட்ட என்னை போலிஸ் ஆக்கனும்னு சொல்ல சொன்னா?”, என்றான் கோபத்தோடு.

“நீ என்னை அடிப்பியா போடா!”, என்று அவளின் அண்ணனின் பின் வேகமாக ஒளிந்தாள். உட்கார்ந்திருந்த ரமணன் எழுவது போல் பாவனை காட்ட அடித்துவிடுவானோ என்ற பயத்தில் அவள் அம்மாவிடம் ஓடினாள்.

“ஹே ரமணன்! ஏன் இவ்வளவு கோபம்! , டென்ஷன்! சின்ன பொண்ணு அவ“,

“உங்களுக்கு தெரியாது ராமண்ணா, அம்மாக்கு எப்போவும் என்னை பத்தி டென்ஷன்! இங்கே என்னை அனுப்பி வெச்சதும் அவங்க தான்.  நான் ஏதாவது பிரச்சனையை இழுத்து விட்டுக்கரேன் என்று எப்போவும் பயத்துலயே இருப்பாங்க.

அட்வைஸ் பண்ணியே என்னை கொன்னுடுவாங்க!. இவ விளையாட்டுத்தனமா சொன்னது அம்மாவுக்கு பெரிய ஐடியா மாதிரி ஆயிடுச்சு. இப்போவே இந்த எக்ஸாம் முடிஞ்சவுடனே, அதுக்குரிய என்ன ப்ரீப்ரேஸன ஆரம்ப்பிச்சிடு அப்படின்றாங்க”.

“ஏன் உனக்கு இன்ட்ரெஸ்ட் இல்லையா!”,. என்றான் மென்மையாக,

“நான் அதை யோசிச்சதே இல்லை! அப்பாக்கு நான் கூட இருக்கனும்னு ரொம்ப ஆசை! இப்போவே அவருக்கு அரௌன்ட் சிக்ஸ்டி, அம்மாக்கு பிப்டி ஃபைவ்! எனக்கு அவங்களோட போகணும்! இருக்கணும்! அம்மா என்ன சொன்னாலும் கேட்க மாட்டேங்கறாங்க!”,

“அது…………..?”, என்று இழுத்த ராம்,  “நீ ஏதாவது அடிக்கடி கலாட்டா பண்ணிடற! அவங்க என்ன பண்ணுவாங்க. பாரு, ஸ்கூல்ல நீ ப்ளேடு போட்டுருக்க! இங்க நீ அப்பாவோட இருக்கறதால ப்ரோப்ளேம் இல்லை! இல்லைன்னா, அந்த ஆளுங்க உன்னை சும்மா விட்டிருக்க மாட்டாங்க!”,

“என்ன பண்ணிடுவாங்க!”, என்று ரமணன் எகிற…………,

“உன்னோட இந்த கோபம் தான் உங்க அம்மாக்கு பயம். அந்த ரௌடிங்க வந்தாலும் ரமணா, நீ சமாளிப்பேன்றது வேற விஷயம். ஆனா அதே வேலையா இருக்க முடியுமா? உன்னால யாருக்காவது அநியாயம் நடந்தா பார்த்துட்டு இருக்க முடியாது”.

“அப்படியிருக்கறப்போ வரா சொல்றது ரொம்ப சரி! உங்க அம்மாவோட பயமும் நியாயமானது!”, என……………. ரமணன் முகத்தில் யோசனையின் சாயல் படிந்தது.

“எனிவே……., இன்னும் நிறைய நாள் இருக்கு. முதல்ல உன்னோட பப்ளிக் எக்ஸாம் நல்லா பண்ணு!”, என்று தற்காலிகமாக அதற்கு முற்றுபுள்ளி வைத்தான்.

வராவிடமும் சென்று, “பாரு பாப்பா! ( அவனும் அவன் தந்தையை போல் வராவை பாப்பா என்று தான் அழைப்பான் ) அவனுக்கு பப்ளிக் எக்ஸாம்! தயவு செஞ்சு அவனை டிஸ்டர்ப் பண்ணாத! அப்புறம் அண்ணா இல்லாதப்போ பாப்பாவை அடிச்சிடுவான்!”,   என்றான்.

“நீங்க கேட்க மாட்டீங்களா அந்த மங்கிய”, என வரா சொல்ல,  

“என்ன பாப்பா! இப்படி பேசறீங்க! இப்படியெல்லாம் பேசக்கூடாது!”, என்று ஒரு அதட்டல் போட, அவளுக்கு அழுகையில் உதடு பிதுங்கியது. பிறகு அவளை சமாதானம் செய்வதற்கே ராமிற்கு வெகு நேரமாகியது.

அவனிடம் சமாதானமாகிவிட்டாலும் அந்த கோபமெல்லாம் ரமணனிடம் திரும்பியது. அவனால் தான் அவளுடைய செல்ல அண்ணன் அவளை அதட்டுகிறான் என்று நினைக்க துவங்கினாள்.

அன்றே ரமணனின் அம்மாவிற்கு போன் செய்து, “வள்ளிமா!”, என்று அழைத்தவள், ஸ்கூலில் அவன் ப்ளேடு வைத்து ரௌடிகளை அடித்ததை கூறிவிட்டாள்.

சுந்தரவல்லிக்கு இன்னும் ரமணனை பற்றிய கவலை அதிகமாகிவிட்டது என்றே சொல்ல வேண்டும். பொதுவாக ரமணனின் செயல்கள் இந்த மாதிரி சில பிரச்சனைகளை உள்ளடக்கி இருக்கும் போது ராமநாதனின் காதுகளுக்கு சுந்தரவல்லி கொண்டு செல்ல மாட்டார்.

சுந்தரவல்லியின் மறு பிறப்பு ரமணன் என்று சொல்லலாம். மிகவும் தைரியமான பெண்மணி. அவராலேயே அவர் கண்முன்னால் நடக்கும் அநியாயங்களை பார்க்க முடியாது. அவனின் நிறைய குணங்கள் அன்னையை கொண்டே இருக்கும்.  

அவருக்கு நிறைய நாட்கள் தவமிருந்து கிடைத்த பொக்கிஷம் “வெங்கட ரமணன்”, கிட்டதட்ட பதினேழு ஆண்டுகள் கழித்து, நிறைய சிகிச்சைகளுக்கு பின் சுந்தரவல்லி பெற்றெடுத்த மகவு ரமணன்.

அவனை பெற்றேடுப்பதர்க்குள் குழந்தையின்மைக்காக அவரும் அவர் கணவரும் மற்றவர்களிடத்தில் வாங்கிய வார்த்தைகள் கொஞ்ச நஞ்சமல்ல.

முன்னாள் நன்றாக பேசுவர், “இந்த கோவிலுக்கு போங்கள் அந்த டாக்டரிடம் போங்கள்”, என்பர். பின்னால், “என்ன பாவம் செஞ்சாங்களோ! இத்தனை சொத்து பத்து இருந்தும் ஆண்டு அனுபவிக்கறதுக்கு குழந்தைங்க இல்லை”, என்று பரிகசிப்பர்.

அதுவும் ஒரு கல்யாணம் காட்சி என்று சென்று வந்து விட்டால், அன்றைக்கு அவருக்கு ஊண் உறக்கம் எதுவும் இருக்காது. முயன்று அதை அந்த வலியை ஒரே நாளில் தாண்டி விடுவார். எதற்கும் கலங்காத பெண்மணி சுந்தரவல்லி.

இப்படி எல்லாச் செல்வங்கள் இருந்தும் பிள்ளை செல்வம் இல்லாததால் மிகவும் கலங்கியிருந்த ராமநாதனை தன்னுடைய கலக்கங்கள் தெரியாமல் மறைத்து அவரை மற்றவர்களுக்கு உதவும் படியான மனப்பான்மையை வளர்த்து பார்த்துகொண்டவர் சுந்தரவல்லி. இந்த சூழலில் அவர்களுடைய நெடுநாளைய வரமாய் கிடைக்கபெற்று வந்தவன் வெங்கட ரமணன்.    

அதற்காக சுந்தரவல்லி அவனுக்கு அதிக செல்லமெல்லாம் கொடுத்தாறில்லை. கண்டிப்போடு தான் வளர்த்தார். இல்லை என்றால் அவனை கட்டு படுத்துவது சுலபமல்ல. அதற்கு நேர் எதிர் அவனுடைய தந்தை.

நிறைய ஏக்கங்களுக்கு பிறகு பிறந்தவன்,  அதனால் ராமநாதனுக்கு ரமணன் மேல் நிறைய பாசம். அவனுக்கு ஏதாவது ஒன்றென்றால் இவர் துடித்து விடுவார். அவனின் செய்கைகளை பார்த்து அவர் பயப்படுவது பிடிக்காமல் தான் ரமணனை சிவசங்கரனிடத்தில் சுந்தரவல்லி அனுப்பி வைத்தார்.

அவனுடைய ப்ளேடு உபயோகித்த செயல் அவருக்கு எத்தனை பதட்டத்தை கொடுத்தது என்று வார்த்தையால் விவரிக்க முடியாது. அந்த செயல் ஸ்கூலில் ஹீரோவாக காட்டி இருக்கலாம்.

ஆனால் அவனுடைய அன்னைக்கு?……………… எதிராளிக்கு எதுவும் ஆகாத வரையில் பயமில்லை. ஏதாவது ஆகிவிட்டால் அவனுடைய எதிர்காலம் ஒரே நாளில் உருக்குளைந்துவிடும். 

இன்றைய வராவின் கூற்றை கேட்ட பிறகு நிச்சயம் அவனை போலிஸ் துறைக்கு அனுப்புவது தான் சிறந்தது என்று முடிவெடுத்தார்.

“மகாலக்ஷ்மி நான் பார்த்துக்கறேன்! இப்போ அவன் படிக்கட்டும்! பரிட்ச்சை முடிஞ்சதும் நான் ஊருக்கு வரும் போது பார்த்துக்கறேன்! என்று அவளிடம் உறுதியளித்து விட்டு அவருடைய பதட்டத்தை தணிக்க கடவுளிடம் சரணடைந்தார்.

இது எதுவும் அறியாத ரமணன் தன்னுடைய படிப்பை மட்டுமே பார்க்க, அவனை சிறிதும் யாரும் தொல்லை செய்ய ராம் பிரசாத் விடவில்லை. அவனுடைய பரீட்ச்சை முடியும் வரை தன்னுடைய வேலைகளை ஒதுக்கி விட்டு அவனுடனே நேரத்தை செலவழித்தான்.

அவனுடைய பரிச்சை முடிந்த அடுத்த நாளே சுந்தரவல்லியும் ராமநாதனும் பார்க்க வர, தனியாக அவனை யாரும் அறியாமல் கூட்டிச்சென்று சுந்தரவல்லி அவனை ஒரு வழி செய்துவிட்டார் என்றே சொல்ல வேண்டும். ரமணன் அவனுடைய அன்னையிடம் அவன் பிறந்ததில் இருந்து அவ்வளவு திட்டு வாங்கியிருக்க மாட்டான்.

இது யாருக்கும் தெரியாவிட்டாலும் வராவிற்கு தெரிய……….. அவளுடைய மலர்ந்த முகத்தை பார்த்ததுமே ரமணனுக்கு புரிந்து விட்டது இது அவளுடைய வேலை தான் என்று.

மற்றவர்கள் முன்னிலையில் சுந்தரவல்லி மகனின் தவறுகள் எதையும் காட்டி கொள்ளவில்லை, ஆனாலும் ரமணனின் முகம் தெளியவில்லை.

“இப்போ இருந்தே என்ட்றன்ஸ் எக்ஸாம் கோச்சிங் கிளாஸும், மற்ற நேரத்தில் யு.பி.எஸ்.சி கோச்சிங்கும் போ! உனக்கு புரியுதோ புரியலையோ போ!”, என்றார், “அம்மா நான் ஊருக்கு வர்றேன்!”, என்றவனிடம் கூட, “ரிசல்ட் வரட்டும் அப்புறம் பார்க்கலாம்!”, என்று விட்டார்.

ரமணனுக்கு வந்த கோபம் அளவிட முடியாதது. அவன் திட்டு வாங்கியது! அவனை அம்மா ஊருக்கு வர வேண்டாம்! என்று சொன்னது எதுவுமே அவனுக்கு பொருட்டில்லை.

ஆனால் அவனுடைய செயல், அவனுடைய அம்மாவிற்கு விளைவித்த வருத்தம், எல்லாம் அவன் வாங்கிய திட்டிலேயே அவனுக்கு தெரிந்தது. திட்டி முடித்து அவர் அழுத அழுகை அவனை அசைத்து பார்த்தது.

இதற்கு எல்லாம் காரணமாயிருந்த வராவின் மேல் காரணமில்லாமல் கோபம் வந்தது. அம்மா சென்ற பிறகு அவளிடம் வந்தவன்…………..,

“என்னை பத்தி எங்கம்மாகிட்ட பேசறதை இதோட விட்டுடு, இனிமே நீ என்னை பற்றி ஒரு வார்த்தை கூட பேசக்கூடாது, மீறி பேசினே………….”, என்று அவள்  சிறுபெண்  என்பதையும் மறந்து அவன் பார்த்த பார்வை, வராவை காய்ச்சலில் தள்ளியது.      

Advertisement