Advertisement

அத்தியாயம் ஐந்து:

இன்றைய நிகழ்வுகள்:

கைதியை அரை மயக்க நிலைக்கு தள்ளிய ரமணன் கான்ஸ்டப்ளை கூப்பிட்டு கைதிக்கு ஒரு டம்பளர் கைதிக்கு ஒரு டம்பளர் க்ளுகோஸ் தண்ணீர் மட்டும் கொடுக்க சொன்னான். கைதி தன்னை சிறிது ஆசுவாசபடுத்திக்கொள்ள சமயம் கொடுத்தவன்.

இன்னும் கொஞ்சம் நேரம் டைம் கொடுக்கறேன், நான் மறுபடியும் கூப்பிடும் போது……. எல்லா விஷயத்தையும் என்கிட்ட சொல்லற மாதிரி உன்னை நீ தயார் பண்ணிக்கோ”, என்று மிரட்டலாகவே கூறினான்.

ஒரு வழியாக அவன் தன்னுடைய விசாரணையை ஒத்தி போடவும் உள்ளே எஸ்.பி. வந்தார்.

அவன் மிக சிறிய வயதிலேயே உயர் பதவியை அடைந்து விட்டதால், அவனுக்கு கீழே அடுத்த நிலையில் இருப்பவர்கள் நிறைய வருட சர்வீஸில் இருப்பவர்களாகவே இருப்பார்கள்.

அதனால் அவர்களுக்கு அவர்களுடைய பதவிக்கு மரியாதை கொடுக்கிறானோ இல்லையோ, அத்தனை வருட சர்வீஸ்க்கு கட்டாயம் மரியாதை கொடுப்பான்.

எழுந்து நின்று கைகுலுக்கி அவரைஅறிமுகபடுத்தி கொண்டான்.

சார்! நான் தனபால், சுப்பரின்ட்டேன்டன்ட் ஆப் போலீஸ்! என்று அவர் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டு,

அலுவலக விவரங்களை பகிர, அவரிடம் அவனுடைய பேச்சு ஏறுக்குறைய ஒரு மணி வரை நீடிக்க…….

முடித்தவன் மணி பார்த்தால் ஆறு என்றது. எழுந்தவன் மீண்டும் கைதியை அழைத்தான். வேலையை முடிக்கும் வரை நடுவில் சாப்பிட கூட எதுவும் எடுக்க மாட்டான். இரண்டு முறை கான்ஸ்டபிள் வந்து டீ அல்லது காபி, கொண்டுவரவா என்று கேட்ட போது கூட மறுத்து விட்டான்.

சொல்லு!”, என்று இவன் மறுபடியும் ஆரம்பிக்க, அவன் பயத்தோடு பார்த்தான். ரமணன் இவ்வளவு நேரமாக கேட்ட கேள்விகளை மறுபடியும் கேட்க ஆரம்பித்தான்.

நீ ஏன் வேணும்னு அரஸ்ட் ஆன?, என்ன பிரச்சனையை திசை திருப்பறதுக்காக, யாரும் இல்லை நீங்க, நீ இந்த கேஸ்லயே இரு. உன்னை நான் தொந்தரவு பண்ண மாட்டேன். எனக்கு தேவை என பின்னணி மட்டும் தான்!.

உன் பேர் வெளிய வராது! நீ அப்ரூவரா மாறன்னு சொல்ல மாட்டேன். ஸ்டேட்மென்ட் குடுன்னு எதுவும் சொல்ல மாட்டேன்! நீ நேரடியா இருந்தன்னா, அதை நிறுத்திடு!”,

இதையெல்லாம் கேட்டுக்கொண்டும் சொல்லிக்கொண்டும் இருக்கும்போது ரமணனை பார்த்த கைதிக்கு பயம் அதிகரித்து கொண்டே வந்தது.

எனக்கு உனக்கு தண்டனை வாங்கி கொடுக்கறது முக்கியமில்லை. குற்றம் மேலும் நடக்காம தடுக்கணும், சொல்லு!என்றான்.

உனக்கு இதை விட்டா வேற வழி கிடையாது. நீ என்ன நினைச்சு செஞ்சியோ தெரியாது. ஆனா ஏற்கனவே இங்க நீ ஒரு கலாட்டா பண்ணி உடனே எப். ஐ. ஆர் போடுற மாதிரி செஞ்சிருக்கு, அதையே சாக்கா வெச்சு மறுபடியும் நீ கலாட்டா பண்ணி தப்பிக்க பார்த்தன்னு சொல்லி போட்டு தள்ளிடுவேன்!

கைதிக்கு பயத்தில் அவனுடைய இருதய துடிப்பு அவனுக்கே கேட்க ஆரம்பித்தது.

மிஞ்சி போனா என்ன ஆகும் எனக்கு. ஒரு விசாரணை கமிஷன் முன்னாடி பதில் சொல்ல வேண்டி இருக்கும். அது ஒண்ணும் எனக்கு புதுசு இல்லை. ஏற்கனவே நிறைய முறை பதில் சொல்லி இருக்கேன்.

கைதியின் பயத்தை பூரணமாக உணர்ந்த ரமணன், மிரட்டல் தொனியை சற்று குறைத்து,

நம்பு! உன் மூலமா தகவல் கிடைச்சதுன்னு யாருக்கும் தெரியாது! உன்னை இதே கேஸ்லயே உள்ள போட்டுடறேன், எனக்கு தகவல் மட்டும் தான் வேணும்”,

கைதிக்கு சிறிது நம்பிக்கை அளிக்கும் விதமாக, “என்னால் உனக்கு என்ன செய்ய முடியுமோ செய்யறேன், சொல்லு!”,

நீ சீக்கிரம் சொல்லிட்டன்னா பரவாயில்லை! இன்னும் எதுக்காக உனக்கு இந்த டார்ட்சர்ன்னு யாருக்கும் தெரியாது. ரொம்ப நேரம் பண்ணினேன்னா வேற ஏதோ விஷயம் போலன்னு சந்தேகம் வரும். நாளைக்கு நானா ட்ரேஸ் பண்ணி கண்டுபிடிச்சா கூட உன் பேர் வரும், இல்லை…. நான் ஒண்ணுமே கண்டு பிடிக்கலைன்னா கூட……. நீ இப்போ சொல்லலைனா, நீ ஏதோ சொன்ன மாதிரி நான் ப்ரெஸ் கூப்பிட்டு சொல்லிடுவேன்! அப்புறம் இந்த போட்டு தள்ற வேலையை நான் பார்க்க வேண்டியதில்லை உன் கூட்டாளிங்களே பார்த்துப்பாங்க! உன்னை போடுவாங்களா, இல்லை உன் குடும்பத்தை போடுவாங்களா, எது வேணா நடக்கலாம் யோசி!

யோசி! யோசி! என்று அவனை சிறிதும் யோசிக்க விடாமல் விஷயத்தை வாங்க ஆரம்பித்தான்.

இனம் புரியாத பயம் ஆட்கொள்ள கைதி வாயை திறந்தான்.

சரக்கு சப்ளை மட்டும் தான் என்னோட வேலை, மற்றபடி எங்க இருந்து வருது எனக்கு தெரியாது. ரெண்டு மூணு பெட்டி கடைக்கு ரெகுலரா சப்ளை பண்ணுவேன். நான் பெரியவங்களுக்கு மட்டும் தான் விக்க சொல்லுவேன். அதுல ஒருத்தன் ஸ்கூல் பசங்க ரெண்டு மூணு பேருக்கு குடுத்துட்டான், அவனுங்க அதை ஏத்திக்கிட்டு படுதிருந்தப்போ மாட்டிகிட்டாங்க”.

யார்க்கு குடுத்தான்? மறுபடியும் சொல்லு!”, என ரமணன் கேட்க, அவன் குரலில் ஒலித்த கர்ஜனை இன்னைக்கு நம்ம முடிந்தோம் என்றே கைதியை நினைக்க வைத்தது.

இவன்ஸ்கூல் பசங்களுக்கு”, என்று திக்கித்திணறி பயத்தோடு சொல்ல…….

கேட்டுகொண்டிருந்த ரமணன், அவன் உட்கார்ந்திருந்த சேரை நோக்கி விட்ட ஒரு உதையில், அவன் சேர்ரோடு தூக்கி எறியப்பட்டு சுவரோடு மோதி விழுந்தான்.

அது எழுப்பிய சத்தமும், கைதியின் ஓலமும், கேட்டு எல்லாரும் ஓடி வர, எல்லோரையும் சைகையாலே வெளியே அனுப்பினான். ஒரு கான்ஸ்டப்ளை மட்டும் உள்ளே வர சொல்லி, மறுபடியும் அவனை தூக்கி உட்கார வைக்க சொன்னான்.

கொஞ்சம் அவனுக்கு குடிக்க தண்ணி குடுங்க! நீங்க வெளில போங்க!”, என்றவன்.

சொல்லு!”, என்றான் மறுபடியும்.

வீட்ல மாட்டியிருந்தான்னா பெத்தவங்க விஷயம் வெளில வராம பாத்துப்பாங்க!, அதனால பிரச்சினை வராது! நாங்க பொதுவா மாட்டிக்க மாட்டோம்! இந்த மாதிரி அடிக்கடி நடக்கறது தான்! ஆனா இவனுங்க ஸ்கூல்ல மாட்டிகிட்டாங்க! கடைக்காரன் மாட்டிக்கிட்டான்! என்னை எப்படியும் அவன் சொல்லிடுவான்னு தெரியும்!, ஏன்னா சப்ளை எல்லாம் என் மூலமா மட்டும் தான் வேற யார் மூலமாவும் இல்லை. அதனால எனக்கு மேல இருக்கறவங்க இந்த மாதிரி பண்ணி இங்க வர சொன்னாங்க. அதுக்கு முன்னாடி இங்க வந்துட்டன்னா, அவன் சொல்லியிருந்தான்னா கூட அவன் குடும்பத்தை மிரட்டி அவன் ஸ்டேட்மென்ட்டை வாபஸ் வாங்க வச்சிடுவாங்க. நான் ஒரு வருஷம் ரெண்டு வருஷம் இருந்துட்டு வெளில வந்துடலாம்னு சொன்னாங்க!”,

உனக்கு மேல யார் இருக்கா!”, என்று ரமணன் கேட்டவுடனே அழ ஆரம்பித்துவிட்டான்.

சார், நீங்க சொன்ன மாதிரி, என்னை ஏதாவது பண்ணினா கூட பரவாயில்லை! என் குடும்பத்தை ஏதாவது பண்ணிட்டா?”, என்று அவன் அழ,

உன் குடும்பம் மட்டும் தான் குடும்பமா? அப்போ ஊருக்குள்ள இருக்கறவன் எல்லாம் என்ன பண்ணுவான். காலேஜ் பசங்கன்னா கூட தெரிஞ்சு பண்ணுவாங்கன்னு சொல்லலாம்…… நீங்க ஸ்கூல் பசங்களை கூட விடலையே…. உன்னை எல்லாம் எப்படிடா உயிரோட விடறது”, என்று அவன் சொன்ன விதம் கைதியின் உயிரை அப்போதே எடுத்து விடுமாறு இருக்க……

உனக்கு வேற வழியே கிடையாது நீ சொல்லறத தவிர, பின்னாடி உன் பேர் வெளில வராம பார்க்க முயற்சி பண்ணறேன், நான் உன்னோடதை வாக்குமூலமா ரெகார்ட் பண்ணலை எழுத்து மூலமா வாங்கலை என்னை தவிர யாருக்கும் தெரியாது. சொல்லு……”, என்று கூற,

வேறு வழியில்லாமல் இப்போது ரமணனின் சொல் கேட்பதை தவிர வேறு வழி கிடையாது என்று……, கைதி அவனுடைய வேலையின் ஆதிமுதல் அந்தம் வரை அவனுக்கு தெரிந்த விவரங்களை கூற……

கேட்ட ரமணன் கிரகித்து கொண்டான்.சரக்குன்னா எதெது?”,

கஞ்சாவும் அபினும் மட்டும் தான் சார். வேற எல்லாம் இன்னும் ரிஸ்க்கு, ஈசியா கிடைக்காது, விலையும் அதிகம், தப்பா ஏதாவது பசங்க உபயோகிச்சா உயிரை எடுத்திடும்”, என்றான் அந்த நேரத்திலும் அந்தக் கைதி….

போ!”, என்றவன், “டேய் விஷயம் என்மூலமா போகாது, நீயே போய் எவன்ட்டயாவது உளறி வெச்ச நான் பொறுப்பில்லை. போடா”, என்றவன்,

மறுபடியும், “இங்க வாடா”, என்றான்.ஸ்கூல் பசங்களுக்கு சப்ளை பண்ணுவீங்களா”, என்று கோபமாக இரண்டு அறை கொடுத்து, ஒரு உதை விட, மூலையில் சென்று விழுந்தான். ரமணன் விட்ட அறையில் கைதியின் உதடுகள் பிய்ந்து ரத்தம் கொட்ட ஆரம்பித்தது.

கான்ஸ்டபளை அழைத்து……. “இவனை பொறுக்கிட்டு போய் விசாரணை ரூம்ல போட்டு வைங்க…. சாப்பிட ஏதாவது குடுங்க……. யாரும் கை வச்சிடாதீங்க……. செத்துற போறான்!”, என்றவன் அவ்வளவு தான் தன் பேச்சு முடிந்தது என்பது போல், அவன் வைத்திருந்த பாக்கெட் டைரியில் கைதி சொன்ன விவரங்களை தனக்கு மட்டும் புரியுமாறு சிறிய ஹிண்டாக எழுதி, “ஒரு டென் மினிட்ஸ் வெளியே போயிட்டு வரேன்”, என்றான், கைதியை தூக்க வந்த கான்ஸ்டபள், “இவன் எங்க சாப்பிடுவான். இன்னும் ஒரு வாரத்துக்கு வாயn தொறக்க முடியாது”, என்று நினைத்தவனாக கைதியை தூக்கினான்.

அவனுடன் வந்த காவலர்களை தவிர்த்து, ஜீப் எடுக்க கிளம்பியவர்களை தடுத்து காலாற நடக்க ஆரம்பித்தான்.

எல்லாரும் ஸ்டேசனில் அவனை வித்தியாசமாக பார்த்தனர். எப்போதும் யாருடைய பார்வையையும் பொருட்படுத்தும் வழக்கம் ரமணனிடத்தில் கிடையாது. எந்த பார்வையில் யார் அவனை பார்க்க ஆரம்பித்தாலும் இறுதியில் அவனிடத்தில் ஒரு மரியாதையான ஆச்சர்யமான பார்வையே நிலைக்கும்.

அவனுடைய வேலை பார்க்கும் ஸ்டைல் வித்தியாசமானது. யாராலும் அனுமானிக்க முடியாது. இந்த விசாரணையெல்லாம் அவன் செய்ய வேண்டிய அவசியமில்லை தனக்கு கீழ் இருப்பவர்களை பணித்தாலே போதும். ஆனால் அப்படியெல்லாம் செய்யாமல் சிறு விஷயம் என்றாலும் அவனுடைய நேரடி பார்வையிலேயே இருக்கும்.

சென்றவன் நடுவில் இருந்த குறுக்கு சந்தில் புகுந்து அடுத்த வீதிக்கு வந்து, ஒரு சாதாரண டீக்கடையில் நின்று டீ சாப்பிட ஆரம்பித்தான். அவன் புதியவன் என்பதால் யாருக்கும் அவனை தெரியவில்லை, அவன் யுனிபோர்மிலும் இல்லை.

அங்கே இருந்த கடை பையனிடம் வாயடிக்க ஆரம்பித்து, அந்த ஏரியாவில் உள்ள நிலவரங்களை அறிந்து கொண்டான். கிளம்பும் போது அவனுக்கு தாராளமாக சிறிது டிப்ஸ் கொடுத்து, அவனை ஃபிரன்ட் ஆக்கிகொண்டான்.

வரட்டா வேலு!”, என்று அவனிடம் விடைபெற்று கிளம்பும் போது கடைபையனுக்கு மிகவும் சந்தோஷமாகி, “சர்தான் சார், நெக்ஸ்ட் தபா நம்ம ஸ்டாளுக்கே வா சார். வரும்போது ஸ்பெஷல் டீ இஞ்சி ஏலக்கா எல்லாம் போட்டு நாயராண்ட தர சொல்லறேன்”, என்று வாயில் இருக்கும் அத்தனை பற்களையும் காட்டி ரமணனுக்கு சலாம் வைத்தான்.

ரமணனுக்கு தெரியும் இது அவனுக்கு கிடைக்கும் மரியாதையில்லை. இன்னும் அவன் யார் என்பதும் இங்குள்ளவர்களுக்கு தெரியாது. இது அவன் பணத்திற்கு கொடுக்கும் மரியாதை என்று.

இது எல்லா இடத்திலும் எழுதப்படாத ஒரு விதியாகி விட்டது. ஏன் கோயிலில் கூட இதை கொடுத்தால் தான் சுவாமியை அருகில் சென்று தரிசிக்க முடியும். தட்டில் பணம் போட்டால் தான் அர்ச்சகர் பிரசாதம் தருவார்.

முன்பெல்லாம் ஆண்களின் வீரம் என்பது அவன் உடல் பலத்தால் கணக்கிடப்பட்ட ஒன்று, ஆனால் இன்றைய காலத்தில் வீரம் என்பது ஒரு ஆண்மகன் சம்பாதிக்கும் சம்பாதணையை கொண்டே கணக்கிடுகிறார்கள். சொல்லப்போனால் காலம் மாறமாற வேட்டையாடும் வீரமான ஆண்களை பெண்கள் விரும்ப ஆரம்பித்து……. பின்னர் நல்ல வீரமான போராளிகளாகி…. பின்பு நல்ல பதவியில் இருக்கும் கம்பீரமான ஆண்மகனாகி…… பிறகு இன்று வீரம் என்பது அவனுடைய சம்பாத்தியம்……. என்ற வகையில் நின்று விட்டது.

அதுவே நிறைய குற்றங்களின் அடிப்படை என்றாகி விட்டது. பணமில்லாதவன் தவறு செய்வதை விட அதை இருப்பவன் அதிகப்படுத்திக்கொள்ள செய்யும் தவறுகளின் விகிதம் அதிகமாகிவிட்டது.

இது காலத்தின் கட்டாயம் என்பது போல் தோற்றமளிக்க ஆரம்பித்துவிட்டது, என்று அவன் எண்ண அலைகள், கரையை தொட்டு செல்லும் அலையின் வேகத்திற்கு இணையாக அடிக்க ஆரம்பித்தது.

இதுதான் தான் அவனின் தலையாய பிரச்சினை. சிறிது தனிமை கிடைத்தாலும் ஏதாவது சமூக சிந்தனைகள் அவனை திண்ணத் துவங்கிவிடும். வேறு சிந்தனைகள் அவனாக யோசிக்க முற்பட்டாலும் கூட அவனை அணுகுவதில்லை.

எண்ணங்களை கட்டுபடுத்தும் விதமாக அவன் ஆபீஸ் வந்திருக்க, நுழையும் முன்னேயே அவனுக்கு தெரிந்து விட்டது. அவனை பார்க்க வந்திருக்கிறார் என்றார். அங்கே இருந்த கட்சி கொடியுடன் இருக்கும் கார்கள், அதுவுமில்லாமல் கமாண்டோ செக்யுரிட்டி வந்திருப்பது யார் என்று அவனுக்கு தெளிவாக உணர்த்தியது.

அத்தியாயம் ஆறு :

அன்றைய நினைவுகள்

வராவை கைபிடித்து அழைத்து சென்றவன், அவனுடைய அம்மாவின் அருகில் அமர வைத்தான்.

ராமநாதன் அதற்குள், “பொண்ணுக்கு வாங்கிட்டு வந்தது எங்க வள்ளி, மாட்டி விடுஎன, “என்னங்க அண்ணி இதெல்லாம்”, என ராஜேஸ்வரி கேட்டு கொண்டிருக்கும் போதே, “மஹாலக்ஷ்மியை பார்க்க வரும்போது வெறும் கையோடையா வர முடியும்”, என்றவர், அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய தங்க கடிகாரத்தை அவளுடைய கைகளில் அணிவித்தார்.

இது ரமணனுடைய வேலை என்பது வராவினுடைய பெற்றோருக்கு புரிந்தது. அவள் தினமும் இஷ்டமாக வாட்ச்சை மாற்றி மாற்றி கட்டுவாள். இதை அவன் கவனித்து அவன் அம்மாவிடம் கூறியிருக்க வேண்டும். அதனால் தான் அவர் இந்த பரிசை வாங்கி வந்திருக்கிறார் என புரிந்தது.

அது வராவுக்குமே சந்தோஷத்தை கொடுக்க…… தன்னிடம் பேச்சுக்கொடுத்த சுந்தரவல்லியிடம் அவள் பிரியமாக பேச ஆரம்பித்தாள். அவர் பொறுமையாக அவள் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல, ராஜேஸ்வரி ரமணனுடைய வராவை சமாளிக்கும் திறமை யாரிடம் இருந்து வந்தது என்று புரிந்தது.

இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே ராம் பிரசாத் வர மஹாலக்ஷ்மியின் அண்ணன் வந்தான். ராமநாதன் வருவதால் அவனை சிவசங்கரன் வரச்சொல்லி இருந்தார். தன்னுடைய தந்தையின் உயரத்திற்கு பின்னால் நிற்கும் ஏணி ராமநாதன் என்று ராம் பிரசாத் நன்கு அறிவான்.

அவன் வந்து அவர்களை வணங்க, “பாரு வள்ளி, பையன் என்னமா வளந்துட்டான். ஹீரோ கணக்கா இருக்கான்”, என்று சொல்லி ராமநாதன் தன்னுடைய சிரிப்பை அரங்கேற்ற…. பயத்தில் மறுபடியும் வரா இப்போது பக்கத்தில் இருந்த சுந்தரவல்லியிடம் ஒன்டினால்.

நீங்க இங்க இருந்து போற வரைக்கும் சிரிக்கக்கூடாது. மகாலக்ஷ்மி பயப்படுது பாருங்க”, என்று செல்லமாக வைதார்.

என்னை சாப்பிடாம கூட இருக்க சொல்லு வள்ளி இருக்கேன். ஆனா சிரிக்காம இருன்னு சொன்னா என்னால முடியுமா?”, என்று சொல்லி அதற்கும் பெருங்குரலெடுத்து சிரிக்க, “அப்பா!என்ற ரமணனின் ஒரு அதட்டல் வேலை செய்ய சற்று அடங்கினார்.

அன்று தான் ராம் பிரசாத் சிறிது வளர்ந்த பிறகு ரமணனை பார்க்கிறான். உயரமாக ஒல்லியாக தீர்க்கமான பார்வையோடு இருந்த அவனை ராம் பிரசாதிற்க்குமே முதல் பார்வையிலேயே பிடித்துவிட்டது. அவன் அம்மா மூலமாக வேறு அனுதினமும் இந்த ஒரு வாரமாக அவன் புகழை வேறு கேட்கிறான் அல்லவா!

அன்றே அவனுடைய அட்மிஷன் வரா படிக்கும் பள்ளியிலேயே செய்தார்கள். அது மிகவும் புகழ் பெற்ற இருபாலரும் படிக்கும் பள்ளி என்பதால் அங்கேயே அட்மிஷன் செய்தார்கள். சென்ட்ரல் மினிஸ்டர் நேரே வந்து அட்மிஷன் கேட்டதால் உடனே கிடைத்தது.

நாட்கள் வேகமாக நகர்ந்தன என்று சொல்வதை விட ஓடின என்று தான் சொல்ல வேண்டும். போகும்போது இருவரும் சேர்ந்தே பள்ளிக்கு சென்றனர். ஆனால் வரும்போது இருவரும் வேறு வேறு நேரங்களில் வருவர். ரமணன் பெரிய வகுப்பு என்பதால் ஸ்பெஷல் கிளாஸ் இருக்கும். அது முடிந்து ஸ்போர்ட்ஸ் ப்ராக்டிஸ் முடிந்து தான் வருவான். கிட்டதட்ட எட்டு மணிக்கு தான் வருவான். வரும் போது கார் அனுப்ப ராஜேஸ்வரி கேட்டாலும், “இல்லை அத்தை நான் பஸ்சில் வருகிறேன். அது எனக்கு பிடித்திருக்கிறதுஎன்று விடுவான்.

ஏதாவது தேவை என்றால் தான் ராஜேஸ்வரியிடமே கேட்பான். ராம் ஊருக்கு வரும் நாட்களில் மட்டும் அவனுடைய குரல் சிறிது கேட்கும்.

ராம் அப்படியெல்லாம் அவனை ஒதுங்கி இருக்க விடமாட்டான். அவன் வராவிடம் பேசும் நேரங்களும் மிக குறைவே. காலையில் இருவரும் சேர்ந்து பள்ளிக்கு போகும் தருணங்களில் மட்டுமே பேச்சுக்கள் இருக்கும்.

அந்த வருடம் முடிந்து அடுத்த வருடம் ஆரம்பிக்க, வரா ஆறாவது வகுப்பிற்கும், இவன் பன்னிரெண்டாம் வகுப்பிற்கும் செல்ல, சற்று விவரம் தெரிய ஆரம்பித்து விட்டதால் வராவின் குழந்தைத்தனமான பேச்சுகளும் விளையாட்டுகளும் குறைந்தன. ஆனால் பிடிவாதம் எல்லோரையும் எடுத்தெறிந்து பேசும் குணம் இஷ்டம் போல் வளர்ந்திருந்தது.

தாயும் தந்தையும் அவளை கண்டித்தாலும் அது சிறிதும் பயனளிக்காது. நான் அப்படித்தான். எனக்கு அதுதான் வேண்டும் போன்றவைகள், அதிகமாக இருக்கும். ராம் பிரசாத்தும் படிப்பை முடித்து வர சென்னையிலேயே அவன் தந்தை ஒரு ஹை கோர்ட் லாயரிடம் ஜூனியராக சேர்த்து விட்டார். ராம் பிரசாத்தும் வராவிற்கு அதிக செல்லமே கொடுப்பான்.

அவள் வீட்டில் யாருக்காவது சிறிது பயப்படுகிறாள்.  சொல் பேச்சு கேட்கிறாள் என்றாள் அது ரமணனிர்க்கு மட்டும் தான். அந்த பயம் அவளுக்கு அவனுடைய நடவடிக்கைகளை பார்த்து தானாக வந்தது. வீட்டில் அப்பாவும், அம்மாவும் அண்ணனும் அவனுக்கு கொடுக்கும் முக்கியத்துவம். ஸ்கூலில் அவனுக்கு இருக்கும் ஒரு முக்கியத்துவம், தானாக அவன் இருக்கும் இடத்தில் அவன் முக்கியமான ஆள் ஆகி விடுவான்.

ஒருமுறை ஸ்கூல் பக்கத்தில் ஏதோ ஒரு லோக்கல் பெஸ்ட்டிவல் ஸ்கூல் லீவும் விட முடியாத சூழ்நிலை. அந்த சமயத்தில் சில பேர் குடித்து விட்டு வந்து அத்து மீறி உள்ளே நுழைந்து கலாட்டா செய்ய, ஸ்கூல் நிர்வாகம் போலீசிற்கு போன் செய்ய…… அவர்கள் வருவதற்க்கு முன்னதாகவே இவர்கள் சத்தம் போட்டு கொண்டு ஆபீஸ் ரூமிற்குள் நுழைய முற்பட, அவர்கள் நிறைய போதையில் இருந்தார்கள்.

கேட்க கூச்சப்படும் வார்த்தைகளை பிரயோகித்து கொண்டிருந்தார்கள். கேட்கப்போன வாட்ச்மேன் மற்றும் ஆபீஸ் அசிஸ்டன்ட் மக்களை அவர்கள் காயமாகும் அளவுக்கு அடிக்க, எல்லாரும் பயந்து பின்வாங்க, என்ன சத்தம் என்று மாணவர்கள் எல்லாரும் கிளாஸ் வாயிலில் நின்று பார்க்க, சில மாணவர்கள் வந்து பார்க்க, அதில் ரமணனும் இருக்க……

வந்தவன் நிமிடத்தில் அவன் கையில் என்ன இருந்தது என்றே தெரியவில்லை, குடிபோதையில் இருந்த ஆட்களை நிமிடத்தில் அடித்து துவைத்து விட்டான். அவர்களால் திரும்ப தாக்க முடியவில்லை. இவனை பார்த்து வேறு சில மாணவர்களும் வர சரியாக போலீசும் வந்து விட நிலைமை கட்டுக்குள் வந்தது. அன்றிலிருந்து ஸ்கூலில் எல்லோருக்கும் அவன் ஹீரோ. ஆனால் நம் வராவிர்க்கு…… அவன் அடித்ததை வந்து வீட்டில் பெரிய கதையாக வரா சொல்ல, ராம் அவனிடம், “கையில் என் வைத்திருந்தே”, என்று தனியாக கேட்கபென்சில் ஷார்ப் செய்யும் ப்ளேட்”, என அவன் சொல்ல…….

அன்று அவன் அடித்ததை பார்த்து பயந்தவள் தான் வரா, அன்றிலிருந்து அவனிடம் சிறிது தள்ளியே தான் நிற்பாள். வீட்டிலும் ஏதாவது செய்து விட்டாள்.அம்மா!., வெங்கி கிட்ட சொல்லிடாதீங்க……”, என்பாள்.

பேர் சொல்லி தான் அழைப்பாள். முன்பு கூப்பிட்டு பழகியது, அப்படியே நின்று விட்டது. அதனால் இவள் வீட்டில் ஏதாவது கலாட்டா செய்தாள் கூட ரமணன் கிட்ட சொல்லிடுவேன் என்பது போல் தான் அவளை பயமுறுத்தி கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

வேகமாக அவனுடைய பன்னிரெண்டாம் வகுப்பு இறுதிதேர்வும் வந்துவிட, ராமநாதனும் சுந்தரவல்லியும் அவனை பரிச்சைக்கும் முன் பார்த்துவிட்டு போக வந்திருந்தனர். ராமநாதன் வருகிறார் என்றால் எந்த வேலையாக இருந்தாலும் தள்ளி வைத்துவிட்டு சிவசங்கரன் வந்து விடுவார்.

அது போல் அன்றும் வந்து பேசிக்கொண்டிருக்க, சிவசங்கரன், “என்ன தம்பி படிக்க விருப்பப்படறீங்க, எதுவாக இருந்தாலும் சொல்லுங்க சீட்டு வாங்கிடலாம்”, என்று சொல்லி கொண்டிருக்க,

ரமணன் அவன் அம்மாவை பார்த்தான், “என்ன அண்ணி நீங்க ஏதாவது சொல்லியிருக்கீங்களா”, என்று சிவசங்கரன் கேட்க, அவர்ஆமாம்பா அக்ரி படிக்க சொன்னேன். எங்களால பார்க்க முடியலை, நிறைய வீணாப்போகுது, மிளகு எஸ்டேட், ரப்பர் எஸ்டேட், எதையும் பார்க்க முடியலை, நானும் ஒத்த பொண்ணாப் போயிட்டேன். அவரும் அவர் வீட்ல ஒரே பையன். சொத்தை கவனிக்க முடியலை. அதுவுமில்லாம இவருக்கும் எனக்கும் வயசாயிடுச்சு, முதல்ல அக்ரி பண்ணி, பின்ன மேனேஜ்மெண்ட் கோர்ஸ் பண்ணினா சௌகர்யமா இருக்கும்னு பார்த்தேன்”, என்றார்.

எல்லாரும் அதையே பேசிகொண்டிருக்க ரமணனும் தாயின் முடிவில் தான் இருந்தான். அவனுக்குமே தெரியும் அவர்களுடைய பண்ணையின் வருமானம் போல் எந்த தொழிலிலும் வராது என்று. அம்மா சொன்னது போல் இன்னும் மிளகையும் ரப்பர் தொழிலும் கால் பதித்தால் கொள்ள முடியாத வருமானம் பெருக்கலாம் என்று.

அதே யோசனையில் உழன்று கொண்டிருக்க, வரா அவள் அண்ணனிடம் ஏதோ சொல்லி கொண்டிருந்தாள். அதை பார்த்த ரமணனின் தந்தை, “நம்ம பொண்ணு என்னவோ சொல்லுது கேட்போம்”, என

என்ன?”, என்றதற்குஒன்றுமில்லை”, என்று அண்ணனும் தங்கையும் ஒரு சேர தலையாட்டினர். ராம் சொல்லாததின் காரணம் பெரியவர்கள் பேசும் போது அதிகப்ரசிங்கிதனமாக நடுவில் நுழைய கூடாது என்பதால். ஆனால் வரா சொல்லாமல் இருந்தது ரமணனுக்கு பயந்து.

அவளை பார்த்த ரமணன் இவள் தான் ஏதோ சொல்லியிருக்கிறாள் என்பதை புரிந்து, “என்ன?”, என்றான்.

அவள் ஒன்றுமில்லை என்று கூறி அண்ணன் பின் ஒண்ட முற்பட, “எப்போவுமே யாராவது பின்னாடி ஒளிஞ்சிட்டே இருப்பியா! என்னன்னு சொல்லு!”, என்று ஒரு அதட்டல் போட, “டேய் பொண்ண பயமுறுத்தாதடா”, என்று அவன் அப்பா கூற வராவை அருகில் அழைத்த சுந்தரவல்லி, “நீ சொல்லு மகாலக்ஷ்மி!”, என

அது…… அது வந்து…….”, என இழுக்க, “சொல்றியா! இல்லையா!என ரமணன் சொல்ல, அப்பாவிடம் ஓடி…… “வெங்கி போலிஸ் தான்பா ஆகமுடியும். எல்லாரையும் எப்போவும் மிரட்டிட்டே இருக்காங்க. என்னை கூட இப்போ மிரட்றாங்க”, என்று குற்ற சாட்டு படிக்க,

கேட்ட எல்லாரும் சிரித்தனர். ஆனால் சுந்தரவல்லி நிஜமாகவே சிந்தித்தார்.மகாலக்ஷ்மி சொல்றது சரிதான். இவன் எப்போ யார் கிட்ட வம்பு வளர்பானோன்னு பார்த்துகிட்டு இருக்கறதுக்கு பேசாம இவனை போலிஸ் ஆக்கிடலாம்”, என…….

நம்ம பொண்ணு சொல்றது தான் கரக்ட்”, என ராமநாதனும் கூற ரமணன் வராவை முறைத்து பார்த்தான்.

எல்லாரும் உணவருந்திய பிறகு அவனுக்கு, “பெஸ்ட் ஆப் லக்!”, கூறி விடை பெற, அவர்கள் சென்ற பிறகு வராவிடம் வந்தவன், “உனக்கு ஏதாவது ஆகணும்னா, நீ சொல்லு! அதை விட்டு நான் என்ன ஆகணும்னு நீ ஏன் சொல்லற!”, என்று அதட்டி கேட்க, அவள் அண்ணனிடம் அதை பற்றி குற்ற பத்திரிக்கை வாசிக்க ஓடினாள்.

Advertisement