Advertisement

அத்தியாயம் நான்கு:

அன்றைய நினைவுகள்:

 இழுக்க முடியாமல் ரமணனை வீட்டுக்குள் இழுத்து கொண்டு போய் விட்ட வரமஹாலக்ஷ்மி, “ஹப்பா!”, என்று மூச்சு விட்டாள். ஏதோ வேலை செய்தவள் போல், கையை தட்டுவது போல் தேய்த்தாள், வராவின் பாவனை அவனுக்கு புன்னகையை வரவழைத்தது.

அவள் இழுக்க முடியாமல் இழுக்கிறாள் என்றவுடனே………….. அவனே தான் நடந்து வந்தான். அதனால் அவளுடைய இந்த பாவனை அவனுக்கு புன்னகையை கொடுக்க, ஒன்றும் சொல்லாமல் அவளை பார்த்து புன்னகைத்தான்.

அவனை திரும்பி பார்த்து முகத்தை சுருக்கியவள், “நான் அப்பா என்ன வாங்கியிருக்காங்கன்னு பார்த்துட்டு வரேன், நீங்க இங்கயே உட்கார்ந்துட்டு இருங்க” என்றவள்………., வெளியே போகவும்……, அவளுடைய அன்னையும் தந்தையும் உள்ளே வரவும்……….., என்ன வாங்கி வந்திருக்கிறார் என்று பார்க்க………….,

அது கலர் கலராக ஸ்ட்ராப் மாற்றி  கொள்ளும்படியான வாட்ச், அவளுக்கு வாட்ச்கள் என்றாள் மிகவும் பிரியம். அவர் கையில் கொடுத்தவுடனே அதை மாற்றி, மாற்றி, கட்ட முயற்சி செய்ய,

“அப்பா இப்போ தான் வந்திருக்காங்க வரா! நீ அவரை தொந்தரவு பண்ணாத! இன்னும் கொஞ்சம் நேரம் போனா அப்பாவை பார்க்க யாராவது வந்துடுவாங்க. அப்பா அதுக்குள்ள கொஞ்சம் ஃப்ரெஷ் ஆகி வரட்டும் விடு”, என்று அன்னை சொல்ல…………….,

“இப்போவே!”, என்று அடம் பிடித்தாள் வரமஹாலக்ஷ்மி, அதனை பார்த்த ரமணன், “விடுங்க! நான் மாத்தி தர்றேன்”, என்றவன் அவரை எப்படி அழைப்பது என்று தெரியாமல், “நான் உங்களை எப்படி கூப்பிடட்டும்!”, என்றான்.

ராஜேஸ்வரி என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் சிவசங்கரனை பார்க்க, “என்னை ஏன் அங்கிள் சொல்லாம! ஐயா சொல்ற!”, என்றார்.

“அப்பா அப்படி தான் கூப்பிடனும் சொன்னாங்க, நீங்க ரொம்ப மரியாதையான பதவியில இருக்கீங்க, அதனால அப்படிதான் கூப்பிடனும்னு சொன்னாங்க!”, என்றான்.

“உனக்கு எப்படி பிரியமோ அப்படி கூப்பிடு!”, என்றார், “அம்மான்னு கூப்பிடவா?”, என்று அவன் சொல்லும்போதே வரமஹாலக்ஷ்மி, “எனக்கும் அண்ணாக்கும் மட்டும் தான் அவங்க அம்மா”, என்றாள் வெடுக்கென்று,

பெற்றோர் இதை எதிர்பார்க்கவில்லை, “வரா!…………..”, என்று அன்னை அதட்டும் முன்பே, “பாப்பா!!”, என்று தந்தை ஒரு சொல் சொல்லும் முன்பே, “நீ அப்படி கூப்பிட கூடாது”, என்றாள் திரும்பவும்,

“உன் அம்மா தானே, அப்போ வரா அம்மான்னு கூப்பிடவா?”, என்றான் வெங்கட ரமணன்.

“ஏன் இவ்வளவு வாக்குவாதம், அத்தைன்னு கூப்பிட்டேன்”, என்று சிவசங்கரன் சொல்ல, “இல்லல்ல அவங்க வரா அம்மா தானே! அப்படியே கூப்பிடட்டும்!”, என்றாள் வரா பெரிய மனுஷியாய்,

தாங்கள் அவளை செல்லம் கொடுத்து கெடுக்கிறோமோ என்று பெற்றோரை வருத்தப்பட வைத்துக்கொண்டு இருந்தாள். ஆனாலும் பெற்றோருக்கு அவளை அதட்ட மனமில்லை,

“கண்ணு இப்படி எல்லாம் பேசக்கூடாது”, என்று அவளுக்கு சமாதானம் சொல்லி கொண்டிருக்க,

“விடுங்க அத்தை! நான் வரா அம்மானே கூப்பிடறேன்”, என்றான் இருவருக்கும் பொதுவாக.

அவன் சமாளித்து கொள்வான் என்றுணர்ந்த ராஜேஸ்வரி, “வாப்பா முகம் கைகால் கழுவி பால் சாப்பிடலாம்”, என்று கூப்பிட…….. மறுபடியும் வாட்சில் வந்து நின்றாள் செல்ல மகள்.

“நீங்க போங்க அத்தை, ஐயாக்கு கொடுங்க. நான் வரேன்!”, என்றவன், “வரா அம்மாக்கு சரியா இது மாட்ட தெரியாது, நான் மாட்டாடுமா?”, என்றான் வரமஹாலக்ஷ்மியிடம்…………..

“சரி”, என்று அவள் தலையாட்ட வாட்ச்சை எடுத்து கொண்டு இருவரும் அமர…………… பெற்றோர் அந்த இடத்தை விட்டு அகன்றனர்.

ராஜேஸ்வரி சிவசங்கரனிடம், “ரொம்ப பொறுமையான பையன் இல்லை, நம்ம வராவை நல்லா சமாளிக்கறான்” என்று சொல்ல சிவசங்கரன் வாய் விட்டு சிரித்தார்.

பொதுவாக அவர் அப்படி எல்லாம் சிரிக்க மாட்டார். அபூர்வமாகமாக தான் அப்படி சிரிப்பார். அதனால் அவரை ஆச்சர்யமாக விழிவிரித்து ராஜேஸ்வரி பார்க்க…………..

“ஏன் இந்த முழி முழிக்கறீக!…… கெட்டது போ!………. பய புள்ள பொறுமைசாலியா?”, என்று சொன்னவர் மறுபடியும் சிரித்தார்.

“இப்போ ஏன் அவன் இங்க வந்திருக்கான்னு தெரியுமா, பய ஒருத்தன் மேல கைய வச்சிட்டான், அவன் இப்போ ஹாஸ்பிடல்ல கொஞ்சம் சீரியஸா இருக்கான். உயிருக்கு ஒண்ணும் ஆபத்தில்லை, இருந்தாலும் அண்ணன் கொஞ்சம் பயப்படறார்”.

“அவருக்கு வயசாயிடுச்சு, இல்லைனா என் உதவியெல்லாம் தேவையில்லை. நான்தான், நான் பார்த்துக்கறேன்………….. இந்த பிரச்சனையெல்லாம் அடங்கர வரைக்கும், பய நம்ம வீட்ல இருக்கட்டும்னு கூட்டிட்டு வந்துட்டேன்”.

“அண்ணனுக்கு அப்போவும் பையன விட மனசில்லை, ரொம்ப வருஷம் கழிச்சு  பொறந்திருக்கான், ஒரே பையன் வேற, அண்ணி தான் பயந்துட்டு, பிடிவாதமா என்னோட அனுப்பி வெச்சிட்டாங்க”, என்றார்.      

“சின்ன பையன், அடிதடில இறங்கரான………….. பார்த்தா அப்படி தெரியலையே எனக்கு”, என்றார்.

“தப்பா நினைக்காத அவனை ராஜி, ரொம்ப நல்ல பையன். யார் ரத்தம் அவன்?. அண்ணனோடது இல்லையா!. வந்தவுடனே அவன் கிட்ட என்ன பார்த்த? அந்த பெரியவர் சிரமப்படறார்ன உடனே ஓடினான் இல்லியா, அது தான் அவனோட பிரச்சினை. யாராவது சிரமப்பட்டா, ஏதாவது பிரச்சனைன்னா உடனே ஓடிடறான்”.

“இந்த அடிதடி கூட அவனுக்காக இல்லை. யாரோக்காக தான். அதான் இங்க கூட்டிட்டு வந்துட்டேன்”, என்றார்.

“இங்க ஏதாவது பிரச்சினை பண்ணினா”,

“நம்ம பையன்னா விட்டுடுவோமா!. அவனும் நம்ம பையன் மாதிரி தான்!. அவங்க அப்பா எனக்கு உதவியிருக்கலைனா, நானெல்லாம் ஒண்ணுமேயில்லை!”.

“என்னோட படிப்பு, தொழில், இப்போ இருக்கிற இந்த பதவி! அந்தஸ்து! எதுவுமே இல்லை. இத்தனை செஞ்சவங்க, அது அவங்களால தான் அப்படின்னு தெரிவிச்சிக்க மாட்டாங்க! மத்தவங்களுக்கு தெரிய விடவும் மாட்டாங்க!”.

“அவனை பார்த்துகறது என்னோட கடமை. அவனுக்கு இங்க எந்த குறையும் வரக்கூடாது. நீ பார்த்துக்குவேன்ற தைரியத்துல தான், உன்கிட்ட கேட்காம கூட கூட்டிட்டு வந்துட்டேன். பார்த்துக்குவ தானே!”, என்றார்.

“கட்டாயம் பார்த்துக்கறேன்”, என்றார் ராஜேஸ்வரி.

“கோபம் அதிகமா வரும் போல, மத்தபடி நானும் பார்த்தவரைக்கும், எனக்கு நல்ல மரியாதையான பையன்னு தான் தோணுது”, என்றார் சிவசங்கரன்.

ரமணன் அங்கே வந்து இரண்டு மூன்று நாட்கள் ஆகிவிட்டது. அவர்கள் ஊர் கிராமம் என்பதால் நல்ல ஆங்கில வழி கல்வி, அவர்கள் இடத்தில் சற்று சிரமமாக இருந்ததால், அது கிடைக்க அவனை சிறுவயது முதலே அவன் பெற்றோர் அவனை ஊட்டியில் தான் படிக்க வைத்தனர்.

இந்த வருடம் தான் தங்கள் அருகில் வைத்துக்கொள்ள ஆசைப்பட்டு, கூட்டி வர…………. யாருக்கும் எந்த அநியாயம் நடந்தாலும் உடனே அங்கே ஓடி விடுவான்.

எடுத்தவுடன் அப்படி அடிதடிக்கு போகும் ரகமில்லை. முதலில் வார்த்தையால் மட்டுமே சொல்லுவான். கேட்காத பட்சத்தில் அது யாராக இருந்தாலும்……….. கை பேசிவிடும்.

அப்பா பெரிய மிராசுதார் என்பதால் அவனுக்கு திரும்ப பிரச்சினை பண்ணுமளவுக்கு யாருக்கும் அங்கே தைரியமில்லை. இப்போது கூட மனது உறுத்த அவன் தந்தைதான் அவனை அங்கே இருந்து அனுப்பி வைத்தார்.  

அங்கே வரமஹாலக்ஷ்மியின் வீட்டில் எந்த தொந்தரவும் அவன் கொடுக்கவில்லை. சிறுவயது முதலே ஹாஸ்டலில் இருந்ததால் அவனுக்கு பெற்றோரை விட்டு வேறு இடத்தில் இருப்பது பெரியதாக ஒன்றும் தெரிவிக்கவில்லை.

வராவின் வீட்டில் அவர்களாக அழைத்தால் மட்டுமே அவர்கள் பேச்சில் கூட இணைவான். அன்னை, தந்தை, அவர்கள் செல்ல மகள் என்று இருக்கும் பொழுது அவர்களுடைய தனிமையில் வரமாட்டான். அனாவசியாமாக எந்த விஷயத்திலும் சிறு உரிமை கூட எடுத்து கொள்ளவில்லை.

அதனால் தான் வரமஹாலக்ஷ்மி அமைதியாக இருந்தாள் என்று கூறலாம். அவளுக்கு எப்பொழுதுமே தன்னுடைய வீடு!, தான் தான் முதல்! போன்ற எண்ணங்கள் அதிகம். அவள் இஷ்டம் தான் அங்கே எல்லாமே.

சிவசங்கரனுமே ரமணனுக்கு எந்த சௌகரிய குறைச்சலும் வைக்கவில்லை. தனி ரூம் எல்லா வசதிகளுடன் அவன் எதற்கும் யாரையும் எதிர்பார்க்காதவாறு……….. கேட்க தேவையிராதவாறு………. பார்த்துகொண்டார்.

அடுத்த வாரம் அவனை சென்னையிலுள்ள பள்ளியில் சேர்க்க உத்தேசித்து இருக்க………….. ரமணனுடைய பெற்றோர் வருவதாக கூறினர்.

வரமஹாலக்ஷ்மி தன்னுடைய வீட்டில் அவன் புதிதாய் இருப்பதற்கு ஆரம்பத்தில் அட்சேபித்தாலும், அவன் எதற்கும் அவளை சீண்டுவது இல்லை. அவள்  இருக்கும் இடத்தில் இல்லாதவாரே பார்த்துக்கொண்டான்.

அவளாக தேடி வந்து வம்பிளுத்தாளும் அவன் பொறுமையாக அவளை கையாண்டு விடுவான். அங்கே அந்த வீட்டின் நிகழ்வுகளோடு அவன் இருப்பதே தெரியாமல் தன்னை அவன் இணைத்து கொண்டான். 

அவனுடைய அந்த செய்கைகள் அங்கே ராஜேஸ்வரிக்கும் சிவசங்கரனுக்கும் மிகவும் பிடித்து விட்டது. அவனாக தள்ளி தள்ளி போனாலும் அவர்களாக இழுத்து பிடித்து அவனை தங்களுள் இணைத்துக்கொள்வர்.

நாட்கள் நகர ரமணனுடைய அப்பாவும், அம்மாவும் அவனை பார்க்க வர, அவர்கள் வந்த விதத்தை பார்த்ததுமே……….. வரமஹாலக்ஷ்மி தன்னுடைய தாயின் பின் ஒளிந்து கொண்டாள். 

 அவர்கள் டாட்டா சுமோவில் வர…………. அவர்களோடு ஒரு டெம்போ நிறைய ஆட்கள் சென்னையை சுற்றி பார்க்க வென்று வந்தனர். எல்லாம் அவர்கள் பண்ணையில் நிறைய நாட்களாக வேலை பார்க்கும் ஆட்கள்.

ராமநாதன், ரமணனுடைய தந்தை, பார்க்க………….. கல்யாண சமையல் சாதத்தில் வரும் பழைய நடிகர் ரங்காராவை போல் இருந்தார். நல்ல உயரமாக பெரிய மீசை வைத்துக்கொண்டு ஆஜானுபாகுவாக இருந்தார்.

யானை வரும் பின்னே மணி யோசை வரும் முன்னே என்பது போலே அவர் வரும் முன்னே அவருடைய சிரிப்பு சத்தம் வந்தது. அவருக்கு சற்றும் சம்பந்தமில்லாமல் ரமணனுடைய தாயார் சுந்தரவல்லி இருந்தார். ஓடிசலாக, அளவான உயரத்தில், பார்வைக்கு அழகான, ஆர்பாட்டமில்லாத, அமைதியான பார்வையோடு இருந்தார்.

அவர் வந்தவுடனே தனது தந்தை வேகமாக அவரை அழைக்க போன விதத்தை பார்த்தவுடனே என்னவோ ஏதோவென்று பயந்து வரமஹாலக்ஷ்மி அன்னையிடம் ஒன்டினால்.

அவர்கள் வந்து அமர்ந்த பிறகு கூட தனது தந்தை அவர்கள் அருகில் பவ்யமாக நின்று கொண்டே இருப்பதை பார்த்தாள். எப்பொழுது தனது தந்தையின் முன் தான் மற்றவர்கள் இப்படி நின்றிருப்பதை பார்த்திருப்பவள், இப்பொழுது இதை பார்த்துகொண்டு நின்றாள்.

இது எதையும் உணராதவராக ராமநாதன் பேச்சை ஆரம்பித்துவிட்டு இருக்க, சுந்தரவல்லி சிவசங்கரன் நின்று கொண்டிருப்பதை உணர்ந்தவராக, “தம்பிய உட்கார சொல்லுங்க, நின்னுட்டுடே இருக்காங்க”, என்று கணவரிடம் மெல்லிய குரலில் கூற,

“ஆமாமில்லை!”, என்று அதற்கும் பெருங்குரலெடுத்து சிரித்தவர், “தம்பி உட்காருங்க, நம்ம வீட்டம்மா நம்மளை கோபிக்கறாங்க, உங்க பதவிக்கு நான் தான் எழுந்து நிக்கணும்”, என்றபடி அவர் எழபோக…………,

“இருங்க ஐயா!”, என்று பதறியவராக சட்டென்று சிவசங்கரன் அமர்ந்தார். ராஜேஸ்வரி அவர்களுக்கு தாகத்திற்கு தண்ணீர் எடுத்து வர போக, அவர் சேலையை பிடித்துக்கொண்டே வரா சென்றாள்.  

அவர்களுடன் வந்தவர்கள், வீட்டிற்குள் ரமணனுடைய பெற்றோர், இங்கு வரும்போது கொண்டுவந்ததை பரப்ப………… அந்த பெரிய ஹால் நிரம்பி விட்டது. கூடை கூடையாக காய்கள், கனிகள் என்று இருந்தது. “எல்லாம் நம்ம பண்ணைல விளஞ்சது”, என்றார் ராமநாதன்.

அவளுடைய அம்மாவின் பின்னே வந்து தண்ணீர் கொடுக்கும் வரை அவர் பின்னே நின்ற வரமஹாலக்ஷ்மி, அவர் போக திரும்பியதும் அவளும் திரும்பி அவர் பின்னே சென்றாள். இதை பார்த்த ராமநாதன்……….. 

“பொண்ணு பயந்து நிக்குது பாரு! அதை கூப்பிடு வள்ளி!”, என்று ராமநாதன் அழைக்க……… அவருடைய சிரிப்பை பார்த்து பயந்து போயிருந்த வரா, தனது தந்தையுமே அவரிடத்தில் மரியாதையாக நின்றிருப்பதை பார்த்து, இன்னுமே தாயிடம் ஒன்டினால்.

நடப்பவை எல்லாவற்றையும் அமைதியான பார்வையோடு வெங்கட ரமணன் பார்த்திருக்க……… அவனுடைய அன்னை அவனிடம், “உங்க அப்பா சிரிக்கறத பார்த்தே பொண்ணு பயந்திருப்பா, கூப்பிடு ரமணா அவளை”, என்று சொல்ல………….

அவன் எதுவும் சொல்லாமல் தன்னுடைய தாயின் பின் நின்றிருந்த அவளின், அருகே சென்று, அவள் இங்கு ரமணன் வந்தபோது சொன்ன மாதிரியே………..

“அம்மாவும் அப்பாவும் சொல்லறாங்க இல்லை, கேட்க மாட்டீங்க……… நீங்க வாங்க!”, என்று மெதுவாக அவளுக்கு மட்டும் கேட்குமாறு கூறி………. அவளை போலவே கையை பிடித்து இழுத்து வந்தான்.  

 

 

Advertisement