Advertisement

அத்தியாயம் முப்பத்தி மூன்று:

அன்றைய நிகழ்வுகள் :

வெங்கட ரமணன் வரமஹாலக்ஷ்மி திருமணம் முடிந்து ஆறு மாதங்களுக்கு பிறகு கல்பனா மீண்டும் தாய்மை அடைந்தாள்.

சிறிது மாதங்களுக்கு முன்பு தான் அசம்பாவிதம் நிகழ்ந்திருந்தால் மிகவும் ஜாக்கிரதையாக………… சொல்ல போனால் ஒரு கண்ணாடி பாத்திரத்தை கையாள்வது போல் பார்த்துக்கொண்டனர், ஒன்பதாவது மாத இறுதியில் மீண்டும் ஒரு பெண் மகவை ஈன்றெடுத்தாள்.

எல்லோரையும் விட வரமஹாலக்ஷ்மிக்கு தலை கால் புரியாத சந்தோஷம். குழந்தையை அவள் அன்னையிடம் கூட பால் கொடுப்பதற்காக மட்டுமே கொடுத்தாள்.

“கையில் வைத்து பழக்காதே வரா….. பின்பு கீழே படுக்க வைத்தாள் குழந்தை அழுவாள்”, என்று சொன்னதற்கு கூட வரா அவளை கீழே படுக்க வைக்கவில்லை.

“பரவாயில்லை, அழுதா நான் தூக்கி வச்சுக்கறேன்”, என்றாள்.

ஹாஸ்பிடலில் குழந்தை தூங்கும் நேரம் சிறிது நடந்துவிட்டு வரலாம் என்று வெளியே நடக்க வரும்பொழுது எதிர்பாராத சந்திப்பு ஸ்ரீதருடன்………….

அவனை கடந்து போகும் பொழுதுதான் யாரோ தன்னை பார்ப்பது உணர்ந்து திரும்ப, அது ஸ்ரீதர்………………

பார்த்துக்கொண்டே  பேசாமல் தான் கடந்து சென்றான்.

கடந்த பிறகு தான் அது ஸ்ரீதர் என்பதை உணர்ந்தாள். அவன் பார்த்த பார்வை…………. அந்த கண்களில் தெரிந்த வலி………. அவளையறியாமல் கால்களை அவன் புறம் இழுத்து சென்றது.

வேகமாக எட்டு வைத்து அவனை அடைந்து………. “ஹலோ ஸ்ரீதர், எப்படி இருக்க”, என்றாள்.

நின்றவன் அவளை பதில் சொல்லாமல் பார்த்தான். அவளும் அமைதியாக ஸ்நேக பாவத்தோடு பார்த்திருக்க………………

“இதுக்கு நான் என்ன பதில் சொல்லனும்னு எதிர்பார்க்கற வரா”, என்றான்.

பதிலே அவளை குற்றம் சொல்லியது.

குழந்தை பிறந்த சந்தோஷத்தில் இருந்த அவள் முகம் விழுந்து விட்டது. திரும்பி அமைதியாக நடக்க துவங்கினாள்.

இப்போது ஸ்ரீதருக்கு அவள் முகம் விழுந்தது, பொறுக்க முடியாமல், “நில்லு வரா”, என்றான்.

“நல்லாயிருக்கேன்”, என்றான்.

பார்த்தால் உடம்பு சரியில்லாத மாதிரி தோற்றமளிக்க…………. “இன்னும் ஆக்சிடென்ட்ல அடிபட்டது. சரியாகலையா”, என்றாள்.

புரியாத பார்வை பார்த்தான்.

“ஏன் இப்படி பார்க்கிறான்”, என்று அவள் நினைத்துக்கொண்டிருக்க…………   

“அதுக்கப்புறம் கொஞ்சம் சரியில்லாம போச்சு வரா”, என்றான்.

“என்ன ஆச்சு?”, என்றாள்.

பெருமூச்சு விட்டவன்…………. “நான் விரும்பின பொண்ணு, என்னை விரும்பறேன்னு சொல்லிட்டு………. என்னவோ தெரியலை……… திடீர்ன்னு மனசு  மாறிட்டா”.

“நான் பண்ணின சில காரியங்கள்னால சில அசம்பாவிதங்கள் நடந்துடுச்சு. ஆனா நான் எதையும் வேணும்னு செய்யலை. இதுவே நான் அவளை திருமணம் செஞ்சதுக்கு அப்புறம் நடந்திருந்தா……….. என்ன பண்ணியிருப்பா”, என்று அவனுக்கு அவனே பேசுவது போல சொன்னவன்……….,

“ஆனா ரொம்ப நம்பிக்கையோட இருந்தேன். சண்டை போட்டாலும் சமாதானமாகிடலாம்னு. ஆனா இப்படி என்னை ஏமாத்திட்டு கல்யாணம் செஞ்சுப்பான்னு நினைக்கலை”, என்று அவன் குரலில் ஒரு வலியோடு  சொல்லும்போதே வராவின் கண்கள் குளமாக ஆரம்பித்தன.

அதை கவனியாத ஸ்ரீதர் சொல்லிக்கொண்டே சென்றான்………….. “அதை தாங்க முடியாம, நீ சொன்ன மாதிரி முட்டாள்தனமா தற்கொலைக்கு முயற்சி செஞ்சேன்”.

“ஆனா பாரேன், சாவுக்கு கூட என்னை பிடிக்கலை போல, என்னை வேண்டாம்னு சொல்லிடுச்சு”, என்று சொல்லியவன் நிமிர்ந்து வராவை பார்க்க கண்களில் கண்ணீர் நிற்காமல் வடிந்து கொண்டே இருந்தது.

“ஹேய்! என்ன இது அழாத”, என்றான் பதட்டமாக………… “அது முடிஞ்சு போச்சு. நான் இப்போ நல்லா இருக்கேன். இது என்னோட ஜெனரல் செக் அப் தான்”, என்றான்.   

கண்களை துடைத்து அவனை பார்த்தவள, “ஏமாத்திட்டேன்னு சொல்லாத ஸ்ரீதர். நான் உன்னை கல்யாணம் பண்ணியிருந்தா, அது தான் நீ சொன்னதுக்கு சமம். நான் உன்னை காதலிக்கவேயில்லை ஸ்ரீதர். அது தெரியாம நடந்திடுச்சு. முடிஞ்சா அதை மறந்துடு”, என்று சொல்லியவள் நிற்காமல் செல்ல………

“வரா”, என அழைத்து பின்னோடு வந்தான் ஸ்ரீதர். பேச வந்த ஸ்ரீதரை பேசவே விடவில்லை, வரா. “ப்ளீஸ் ஸ்ரீதர் மேல மேல முட்டாள்தனம் பண்ணி இந்த ஜன்மத்துக்கு நான் நிம்மதியா வாழ தகுதியில்லாதவளா ஆக்கிடாதே”,

“இல்லைன்னா நீ செஞ்ச மாதிரி ஏதாவது நானும் தற்கொலைன்னு முட்டாள்தனம் செய்யற மாதிரி செஞ்சிடாதே” என்று கூறி சென்று விட்டாள்.

குழந்தை பிறந்ததை கேள்விப்பட்ட ரமணன் அந்த சந்தோஷத்தில் அப்போது பார்த்து வராவை அழைத்தான் அவளின் வருத்தம் தெரியாமல்…..

அவன் அழைத்தவுடனே எடுத்த வரா பொறிந்தாள். “ஏன் வெங்கி என்கிட்ட சொல்லாம மறைச்ச”, என்றாள்.

“எதை மறைச்சேன் நான் உன்னை காதலிச்சதையா?”, என்றான் உற்சாகமாய்.

“காதல்! காதல்! ஏன்? இந்த வார்த்தையை வெச்சு எல்லாரும் என்னை ஏன்…………… என்னை ஏன்………… இப்படி கொல்றீங்க. எனக்கு அது வேண்டாம்!”, என்று கத்தினாள்.

“ஏய் என்னடி ஆச்சு?”, என்று கோபத்தில் ரமணன் கத்திய பிறகே உணர்வுக்கு வந்தவள்.

“ஸ்ரீதர் தற்கொலைக்கு முயற்சி பண்ணினானாமே! ஏன் என்கிட்ட சொல்லலை”, என்றாள்.

“எதுக்கு சொல்லனும், சொன்னா என்ன பண்ணுவ நீ. ஐயோ! நீ சாகாதன்னு அவனோட போய்டுவியா”, என்றான்

“ஒஹ்! போய்டுவேன்னு நினைச்சு தான், நீ என்கிட்ட சொல்லலையா”, என்றாள் இவள் பதிலுக்கு அதே ஆத்திரத்துடன்.

வாயடைத்து போனான் ரமணன்.

“நீ இப்படி பண்ணுவேன்னு நான் நினைக்கவே இல்லை”, என்று வரா போனை வைத்து விட்டாள்.

அப்பொழுது தான் ரமணனுக்கு உரைத்தது, இத்தனை நாட்கள் இல்லாமல் இப்பொழுது இது எப்படி இவளுக்கு தெரிந்தது என்று  

உடனே மறுபடியும் போன் அடித்தான். எடுக்கப்படவில்லை என்ற பிறகு மறுபடியும் மறுபடியும் அடிக்க……………

அதற்கு மேல் தவிர்க்க முடியாமல் எடுத்தாள்………..

எடுத்தவுடனேயே…………. “இப்போ என்ன பிரச்சனையை இழுத்து விட்டிருக்கே”, என்று ரமணன் கோபமாக கேட்க…………..

“எதையும் இழுத்துவிடலை, உன் வேலையை பார். எனக்கு என்னை பார்த்துக்க தெரியும். மீறி என்னை பார்க்கணும்னா, இங்கே வந்து பார்த்துக்கோ”,

“ஏன்னா நான் இப்போவும் அங்கே வரமாட்டேன்”, என்றாள்.

“இந்த முறை என்னடி, மறுபடியும் ஏதாவது சாமிக்கிட்ட சொல்லிகிட்டியா”, என்றான் எரிச்சல் முழுவதுமாய் குரலில் ஒலிக்க………….

“இல்லை சாமிக்கிட்ட எல்லாம் சொல்லலை. ஆனா ஸ்ரீதர் கல்யாணம் பண்ணிகிட்டா தான் வருவேன்”, என்றாள்.

“ஏய்! நீ வராதடி………… வரவே வராத………….. நீ அங்கேயே இரு! நான் இங்கேயே இருக்கேன்! அடுத்தவன் கல்யாணம் பண்ணிக்கட்டும், நம்ம கல்யாணம் இல்லாம போயிடட்டும், அடுத்தவன் குழந்தை பெத்துக்கட்டும், நீ அதை பார்த்துட்டு, இங்கே வரவே வராத!”, என்று சொல்லி போனை வைத்தவன் தான், பிறகு வராவை அழைக்கவே இல்லை.

அவளும் மிகுந்த குற்ற உணர்ச்சியில் இருந்ததால் கூப்பிடவில்லை.

எத்தனை முறை யார் அழைத்தாலும் எடுக்க மாட்டான்.

வராவின் அழைப்புக்காக காத்திருக்க அவளும் அழைக்கவில்லை.

அவன் எப்பொழுதாவது அங்கே கம்பத்திற்கு அன்னையையும் தந்தையையும் பார்க்க வரும்பொழுது………. அவர்கள் வராவை வரவழைப்பர் அங்கே…………….

ஆனால் அவள் வந்தவுடனே………….. உடனே இவன் கிளம்பி விடுவான்…………

இந்த கண்ணாமூச்சி ஆட்டத்தை கிட்டதட்ட மூன்று வருடங்கள் நடந்தது,

சிவசங்கரன் ராம்பிரசாத் ஒருபக்கம் அழைத்துக்கொண்டே இருக்க………..

மறுபக்கம் ராமநாதன் சொல்ல…………

இன்னொரு புறம் சுந்தரவல்லி கோபத்தை காட்ட……………

ஒருவழியாக சென்னை வந்து சேர்ந்தான் வெங்கட ரமணன் வரமஹாலக்ஷ்மி யோடு குடும்பம் நடத்துவதற்காக……………

அத்தியாயம் முப்பத்தி நான்கு

இன்றைய நிகழ்வுகள்:

வேகமாக வந்தவன்…………. அவனுடைய அலுவலத்தை அடைந்ததும், “நோ ஆத்திரம்”, என்று தன்னை தானே ஆசுவாசபடுத்தினான்.

தன்னுடைய சிறு தவறும் சிறுமிகளை பாதித்து விட்டால்……………………..

அமைதியானவன், முதலில் அவர்கள் எங்கே இருக்கிறார்கள்……………. தங்கள் ஏரியாவிலா இல்லை பக்கத்துக்கு ஏரியாவிலா குழம்பி நின்ற போது, “சாரை பார்க்கணும்”, என்று வந்தான் அவனுடைய டீக்கடை நண்பன்…………. அந்த பையன்.

“இப்போ சார் பிஸி”, என்று அவன் வாயில் காவலர் சொன்ன பிறகும் “அவசரம்”, என்று நின்றான்.

அவன் சில சமயம்  ரமணன் சொன்னால் ஆஃபீசிர்கே டீ எடுத்து வருவான், அதனால் அவனை அங்கிருப்பவர்களுக்கு தெரியும்.

“ என்ன விஷயம்”, என்று கேட்டாலும் சொல்லவில்லை.

“ஒரு தபா  நான் பார்க்கணும்னு சொல்லு சாரு”, என்றான் கெஞ்சுதலாக…………..

“இப்போ எல்லாம் கேட்க முடியாது போடா, சொன்ன புரிஞ்சிகோடா”, என்று சொல்ல, சத்தம் கேட்டு ரமணன் வந்து பார்த்தான்.

“என்னடா”, என்றான் அந்த பையனை  பார்த்து…………

“அர்ஜென்டுகா அஞ்சு நிமிட்டு உன்னை பார்க்கனும் சாரு”

“சரி வா”, என்று உள்ளே அழைத்து போக………….

“சாரு நம்ம கடையாண்ட ஒருத்தன் இப்போ கொஞ்ச டைம் முன்னாடி டீ குடிக்க வந்தான் சாரு”.

“ஆளு ஒரே திருட்டு முழி சும்மானாச்சுக்கும் திரும்பி திரும்பி பார்த்துட்டு இருந்தானா………. எனக்கு ஒரே டவுட்டுகா ஆயிடுச்சு”.

“எங்க பூத்தாண்ட இருந்து ஒரு போன் பண்ணுனானா, நான் ஒட்டு கேட்டேன் சாரு”.    

“யாராண்டையோ பேசினான்”,

“டேய்! நீ சொன்னேன்னு ரெண்டு பொண்ணுங்களையும் யாருக்கும் தெரியாம இட்டாந்துட்டேன்………. நீ எங்கடா போய்டேன்னு…………….. கத்திட்டு இருந்தான் சாரு. அவனுகளுக்கு போன போட்டு பணத்த கேட்கக்கனும் சீக்கிரம் வாடா. மயக்க மருந்து எவ்வளவு நேரம் தாங்கும்னு தெரியாதுன்னு சொன்னான்,

 “பின்ன, என்னது? சாயந்தரம் ஸ்கூல் விட்டதுக்கு அப்புறம் தான் போன் பண்ணனுமா. எதுவா இருந்தாலும் வந்து தொலைடா! எனக்கு தனியா பயமாயிருக்குன்னு சொல்லி வெச்சிட்டான் ”,    

“அவன் போன பின்னாடியே நான் போனா……………. நம்ம ஸ்ட்ரீட்டு தாண்டி அப்பால ஒரு சந்துல ஒரு வீட்டுக்குள்ள போய்ட்டான்”. 

“அவன் பேசுனது எனக்கு டௌப்ட்டா பூடுச்சு சாரு. அதான் உங்கையாண்ட ஒரு தபா சொல்லிகலாம்னு வந்தேன்”, என்றான்.

அவன் தோளில் தட்டி தன் சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டவன்…………….

“டேய் தம்பி………….. நீ என்ன செஞ்சிருக்கன்னு உனக்கே தெரியலைடா, சரி யார்கிட்டயும் இதைபத்தி பேசாத………… நீ அந்த சந்துக்குள்ள ஒரு தடவை போயிட்டு வர முடியுமா”.

“அந்த வீட்ல என்ன நடக்குதுன்னு வெளில ஜன்னல் மாதிரி ஏதாவது இருக்கான்னு பார்க்க முடியுமா. நீ அந்த சந்துக்குள்ள முதல்லயே போய் இருக்கியா” என்றான்.

“இருக்கேன் சார். அங்க அதிகமா யாரும் பூமாட்டாங்கோ………… அதனால அங்க தான் எல்லாரும் உச்சா விட பூவானுங்கோ”, என்று தயக்கமாக உரைத்தான்.

அங்கே சிறுமிகளை அடைத்து வைத்திருக்கிறானா மனம் பாரமாகியது  

“செய்ய முடியுமாடா”, என்றான்.  

“செய்யறேன் சாரு. நீ சொல்லி நான் செய்யாம இருப்பானா”,

“நீ போய் பார்த்துட்டு வா”, என்றவன்…………….

“டேய் இருடா…………”, என்றவன் இது என் நம்பர் ஏதாவதுன்னா அங்கேயே இருந்துட்டே என்னை கூப்பிடு. பேச முடியலைன்னா………. போன் பண்ணு நம்பர் பார்த்த அடுத்த நிமிஷம் நான் அங்க இருப்பேன்”, என்றான்.

போலீஸ் ஸ்டேசனில் இருந்தவர் போனை கொடுத்தனுப்பினான்.

அங்கே சென்ற சிறிது நேரத்திற்கு எல்லாம் அழைத்த அந்த பையன்…………. “ஒண்ணுமே தெரியலை சாரு, சைலன்டுகா இருக்கு! நான் இங்கயே யாரும் உள்ள போறாங்களா, வெளில வர்றாங்கங்களா, பார்த்துட்டு இருக்கேன், நீ வந்துடு சாரு”, என்றான்.

ஒரு நான்கைந்து பேரை அழைத்துக்கொண்டு ரமணனே சென்றான்.

ஸ்ரீதரும் உறவினர்களும் உடன் வர………….. அவர்களை தவிர்க்க முடியாமல்  “வாங்க ஆனா தூரமா நில்லுங்க, அங்க வந்து என்னை மீறி எதுவும் செய்ய கூடாது”,  என்றான்.

அந்த இடத்திற்கு வந்தபொழுது, “சாரு, இன்னொருத்தன் உள்ளே போனான்”, என்றான்.

 உடன் வந்த போலிசாருக்கே அந்த வீட்டை பற்றி தெரிந்திருந்தது. “சார், முன்புறம் வேற வீடு. இது பின்புறம். வாஸ்து படி, பின்புறம் படி மட்டும்  போகும். ரெண்டு மாடி. மேல மொட்டை மாடி இருக்கும்”, என்றான்.

“அப்போ முன்னால போக முடியுமா”, என……………

“முன்னால போக முடியாது சர். வீடு அப்படியே முடிஞ்சிடும்”.

பக்கத்தில் இருக்கும் மாடி வழியாக போகலாம் என்றால் இருபுறமும் ஒட்டு வீடு மட்டுமே. ஒட்டு வீட்டின் பக்கத்தில் ஒரு புறம் மாடி வீடு இருந்தது. 

வேகமாக அங்கே சென்று பார்த்தால் மாடியில் யாரும் இல்லை.

படியிலேயே அநேகமாக அடைத்து வைத்திருக்க வேண்டும். அதுவும் அந்த பையன் சொல்லியதை வைத்து பார்த்தால் மயங்கிய நிலையிலேயே வைத்திருக்க வேண்டும்.

அதுவும் பெண்பிள்ளைகள் ஒருவள் சிறுமி, மற்றவள் பருவம் எய்தும் நிலையில் உள்ள சிறுமி……….., நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும்பொழுது  நிறைய நேரம் எடுத்துக்கொள்ளவும் ரமணனுக்கு தயக்கமாக இருந்தது.

ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்துவிட்டால்…………..       

அந்த இடத்தை பார்த்து தேர்ந்தெடுத்து இருகின்றனர். யாரும் அங்கே போவது இல்லை. அந்த கதவை மூடி விட்டால் உள்ளே போக வேறு வழியில்லை.

சுவரும் எந்த பிடிமானமும் இன்றி செங்குத்தாக இருந்தது. ஏறுவது சிரமம்! நிறைய தேர்ந்தவர்களால் மட்டுமே முடியும்! அதுவும் மேலே இருப்பவர்கள்  பார்த்துவிட்டால், அவர்கள் ஏறும் கயிற்றை எடுத்துவிட்டால் மரணம் நிச்சயம்.

அவன் மட்டும் சென்று கதவு தள்ளி பார்த்தான் திறக்கவில்லை. கதவை கழட்ட முயன்று பார்த்தால் அதுவும் முடியவில்லை.

சத்தம் கேட்டு அவன் உஷாராகி சிறுமிகளை ஏதாவது செய்துவிட்டால். யாரையாவது தீயணைப்பு பிரிவில் இருந்து வர சொல்லலாம் என்று யோசித்தான். நேரம் கடத்தவும்  பயமாகியது. அங்கே அந்த சந்தில் ஒரு மயான அமைதி நிலவியது.

அத்தனை பேர் இருந்தும் சிறு சத்தம் கூட இல்லை. ஏதாவது சத்தம் கேட்குமா என்று எல்லாரும் பார்த்திருக்க………………

அந்த ஏரியாவில் இருந்த செட்டிக்கு அந்த கடத்தல் காரை பற்றி விசாரிப்பதற்காக அறிவழகன் அங்கே வந்திருந்தான். இவர்கள் எல்லாரும் அந்த சந்தின் புறம் போவதை பார்த்ததுமே அவன் வந்து எட்டி பார்த்தான்.

ரமணன் எப்படி எறிவது என்று அந்த சுவரை பார்த்திருந்தவன்,

அவனே ஏற முடிவெடுத்து, கயிற்றை கொண்டு வர சொல்ல……… கயிறு வந்தவுடன் அதை எப்படி மேலே எறிவது என்று பார்த்திருக்க…………

அருகில் வந்தான் அறிவழகன் எல்லாரும் அவனை விலக்க முற்பட……..

சைகையாலேயே, “அவனை விடுங்கள்”, என்றான் ரமணன். வந்தவன் ரமணன் கையில் இருந்த கயிற்றை வாங்கினான். ரமணன் கொடுக்க மாட்டேன் என்பது போல் கூற……

“எனக்கு சின்ன வயசுல ஏறி நிறைய பழக்கம்”, என்றான் ஒற்றை வார்த்தையில். அவன் அப்பொழுது ஈடுபட்டிருந்தது திருட்டுகளில் தானே.

“கொடுக்கமாட்டேன்”, என்பது போல அப்பொழுதும் ரமணன் மறுக்க…….. “குடுங்க அண்ணா”, என்று இழுத்தான்.

வேறு வழியில்லாமல் கொடுத்தவன், யாரும் அறியாமல் அவன் கைகளில் கயிட்ற்றோடு சேர்த்து துப்பாக்கியையும் திணித்தான்.

“ரொம்ப ரிஸ்க் எடுக்காத! முடிஞ்சா பாரு! முடியாட்டி போட்டுடு!”, என்றான்.

அவன் மெதுவாக கூறினாலும்……………… அமைதியாக இருந்ததால் எல்லோர் காதிலும் அது நன்றாகவே விழுந்தது. “அவனுங்க ரெண்டு பேர் ஜாக்கிரதை”, என்றான் மறுபடியும். 

“பார்த்துக்கறேன் அண்ணா!”, என்றான்.

அப்பொழுதுதான் அங்கே இருப்பவர்களுக்கு இவன் ரமணனுக்கு தெரிந்தவன் போல்  என்று தெரிந்தது.

அவன் மேலே அந்த கயிறை போட்ட சத்தம் நன்கு கேட்டது.

இங்கே வெளியே ட்ராபிக் நிறுத்தி வைத்திருந்தனர்.

அறிவழகன் மேலே லாவகமாக ஏறினான்.

“சரியான ஆள்தான்”, என்று எல்லோருக்கும் தோன்றும்படியாக ஏறினான். 

அமைதி…………… மறுபடியும் மயான அமைதி. அந்த அமைதிய கிழித்து கொண்டு சில சத்தம். அதற்காகவே காத்திருந்தது போல ரமணன் கதைவை உடைத்து வேகமாக ஏறினான்.

மொட்டை மாடி ஆரம்பிக்கும் இடத்தில் ஐந்து வயது பெண் மயங்கி கிடந்தாள். இன்னொரு பெண் மொட்டை மாடியில் படியேறும் இடத்தில் மயங்கி கிடந்தாள்.

ஆடைகளை கலைக்க முயற்சி நடந்தது போல தோன்றின.

குற்றம் இழைத்த நபர்களை பார்க்காமல்……….. எல்லாரும் வருவதற்க்கு முன் படுத்த நிலையில் இருந்த, அந்த சிறுமியை அமர வைத்தான். சட்டென்று கதவை அடைத்தவன், பார்த்தால் அறிவழகன் அந்த இருவரையும் துப்பாக்கி முனையில் உட்கார வைத்திருந்தான்.

“என்ன அறிவு நீ பார்த்தே…………”

இதுல ஒருத்தன் அந்த பொண்ணை……….. மேலே முடிக்கவில்லை. இன்னொருத்தன் அவனை விடாம இழுத்துட்டு இருந்தான்.

துப்பாக்கியை பார்த்ததும் உட்கார்ந்துட்டாங்க,

“எவண்டா அவன்”, என ரமணன் கேட்க………………

அதில் ஒருத்தனை கைகாட்டினான். “நீ இந்த பொண்ணை தூக்கிட்டு வெளிய மட்டும்  போ, கீழ போகாத, நான் கீழே வந்தவுடனே நீ கிளம்பிடு”,   என்று துப்பாக்கியை வாங்கி கொண்டு………… அவனை கதவை திறந்து வெளியே அனுப்பினான்.

இரண்டு சத்தங்கள், இரண்டுமே அந்த நபர்களின் அலறல் சத்தங்கள். சிறிது நேரம் கழித்து வெளியே வந்தவன் எஸ்.பி யிடம் ஏதோ கூறி சென்றான்.

பத்திரிக்கையாளர்கள் விவரம் தெரிந்து வரும் முன் சிறுமிகளை ஹாஸ்பிடல் சேர்க்குமாறு அனுப்பினான்.

மயக்க மருந்தில் இருந்ததால் இருவருமே அதுவரையும் முழிக்க வில்லை.

அவர்கள் செல்வதற்கும், பத்திரிக்கையாளர்கள் வருவதற்கும் சரியாக இருக்க…………….

வழக்கமான கேள்வி………… “சார் என்ன நடந்தது?”,.

“குழந்தைங்க கடத்தல்! நோக்கம் என்னன்னு தெரியாது. ஒருத்தன் செத்துட்டான். இன்னொருத்தன் மயக்கமாயிருக்கான்”.

“கோர்ட்ல அவனை நிறுத்தும் போது தெளிவா சொல்றேன். இப்போ அவனுங்க போடோஸ் மட்டும் சீக்கிரம் எடுத்துட்டு விடுங்க!”, என்று அவன் கிளம்ப…………… பின்பு ஆம்புலன்ஸ் தன் கடமையை செய்தது.

பத்திரிக்கைகளில் செய்தி வெளியானது, “நிறைய நாள் தேடப்பட்ட கைதி சுட்டு கொலை. அவன் நண்பன் குண்டடிபட்டு கைது”, என்று……….

நிறைய வேலைகள் இதில் நடுவில் அறிவழகனை அழைத்து பாராட்டி, அந்த பையனை அழைத்து பாராட்டி………….. அவன் மறுபடியும் வீடு வந்த போது மாலை ஆகியிருக்க……………

“வர்றியா வரா! அந்த பொண்ணுங்களை பார்க்க போறேன்”, என்றான்.

“எனக்கு அதுக்கு முன்னாடி ஒரு இடத்துக்கு போகணும்”, என்றாள் சீரியசாக……

கேட்டவன், “அங்கே எதற்கு”, என………..

“ப்ளீஸ்! கூட்டிட்டு போங்க”, என்றாள்.

“எனக்கு ஒரே ஒரு கேள்வி கேட்கணும்”,

“கூட்டிட்டு போங்களேன்!”, என்றாள்.

இதையெல்லாம் பார்த்திருந்த ராம் பிரசாத்தும் ராஜேவரியும், “வேண்டாம்”, என்று மறுக்க………

“அத்தை பயம் வேண்டாம்! என் கூட தான் வர்றா!”, என்று அவள் தாயையும், அண்ணனையும் சமாதானப்படுத்திய பிறகு அவளை அழைத்து சென்றான்.   

சென்று……….. மறுபடியும் அவர்கள் சென்ற இடம்………… அந்த குழந்தைகள் இருந்த ஹாஸ்பிடல். மயக்க மருந்தின் வீரியம் அதிகமாக இருந்ததால் கண் விழிப்பதும் சிறிது கண் சொருகுவதுமாக இருந்தனர் சிறுமிகள்.

அவர்களின் மொத்த குடும்பமும் அங்கே தான் இருந்தது.

ரமணனை பார்த்த நிமிடத்தில் ஸ்ரீதரின் தந்தை வேகமாக வந்து கையை பற்றினார்,

விவரம் கூறினான்……………… “உங்க வீட்டு டிரைவர் பணத்துக்காக தான் கடத்தியிருக்கான். அதுக்குள்ள அவனுக்கு திட்டம் போட்டு குடுத்த நண்பன் பொண்ணு கிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணியிருக்கான். உங்க டிரைவர் விடாம அவனை இழுத்து………… கைகலப்பு நடந்த போது நம்மாளு போய்ட்டான்”.

“அதான் அந்த டிரைவர்………. அவன் பணத்துக்காக பண்ணினான், இருந்தாலும் உங்க பொண்ணை காப்பாத்த முயற்சி பண்ணின்னான்னு உயிரோட  விட்டுடேன், இன்னொருத்தனை அனுப்பிட்டேன்”, என்றான் மேலே கைகளை காட்டியபடி………..

மொத்த குடும்பமும் அவனை தெய்வம் போலே பார்த்தது.   

“அன்னைக்கும் நீங்க தான் தம்பி, என் பையனை காப்பாற்றிணீங்க, இன்னைக்கும் எங்க குழந்தைங்களை நீங்க தான் காப்பாற்றியிருகீங்க, ரொம்ப நன்றின்றது சின்ன வார்த்தைன்னு, எனக்கே தெரியுது. இருந்தாலும்…………”, என்று கண்கலங்கினார்.

“எனக்கு நீங்க நன்றி சொல்லனும்னா, உங்க ஆளுங்கன்னு ஒரு வெறியோட சில காரியங்கள் செய்யறீங்க இல்லையா, அதை தவிர்த்திடுங்க”, என்றான்.

ரமணன் கவனமாக ஜாதி என்ற வார்த்தையை தவிர்த்து……….

இதை கேட்டவுடன் உறங்கும் அச்சிறுமிகளை பார்த்துகொண்டிருந்த வராமஹாலக்ஷ்மி பொறிய ஆரம்பித்துவிட்டாள்.  

“நீங்க தான் ஸ்ரீதர் அப்பாவா, இவரை நான் எங்க வீட்ல பார்த்திருக்கேன், எங்களை வந்து மிரட்டிட்டு போனப்போ”, என்றாள் அவர் சித்தப்பாவை பார்த்து .

“உங்களுக்கு தெரியுமா, நான் இப்போ எங்க இருந்து வர்றேன்னு. ஹாஸ்பிடல்ல இருந்து, அடிபட்ட கைதியை பார்த்துட்டு வர்ரேன்”,

“எதுக்கு தெரியுமா? அவன் என்ன ஜாதின்னு கேட்க”,

“எனக்கு தெரியும்! நீங்க வேற ஜாதி ஆட்களை உங்க இடத்துல வேலைக்கு வைக்க மாட்டீங்க இல்லையா. அதனால தான் கேட்டேன். அவன் உங்க ஜாதி தான்……….. எந்த ஜாதினா, நீங்க சொல்ற பிறப்புசான்றிதல் சாதி மட்டுமல்ல………. உங்களை மாதிரி அடாவடியான ஜாதி கூட”,

“நிமிஷத்துல எங்க ராம் அண்ணாவை கடத்திணீங்களே! என்ன அச்சு? இப்போ அது உங்க வீட்ல நடக்க எவ்வளவு நாள் ஆச்சு? சில வருஷங்கள் மட்டுமே இல்லையா……………”,

“ஆனா அன்னைக்கும் இன்னைக்கும்…………”, ரமணன் கையை பிடித்தவள், “இவர் இல்லைன்னா உங்க பசங்க இல்லை. இவர் உங்க ஜாதி இல்லையே! காப்பாத்த தேவைப்படும் போது மட்டும் ஜாதி பேதம் இல்லையா! மற்ற நேரங்களில் எல்லாம் இருக்கா!”, என்று அவள் கேட்க……………

அவர்கள் வீட்டினர் ஒவ்வொருவரின் உயிரும் போய் வந்தது.

“அடுத்த வீட்டு பொண்ணுங்கன்னா என்ன வார்த்தைவேனா பேசுறீங்க இல்லையா………. அதே நிலைமை உங்க வீட்டு பொண்ணுக்கு வர எத்தனை நேரம் ஆச்சு”,.

“எத்தனை கொடுமைகள் நீங்க ஜாதி பேரை சொல்லி செய்யறீங்க! எந்த ஜாதி இப்படி சொல்லியிருக்கு. உங்க கிட்ட ஏதாவது இதை பத்தி புக் இருக்கா, இல்லை ஏதாவது மகான் சொல்லியிருக்காங்களா, யார் சொன்னது உங்களுக்கு இப்படி?”,

“உங்களுக்கு தேவைன்றதுக்காக நீங்களே சொல்லிகிட்டது. இதுல பணம் இருக்குன்ற திமிர் வேற. பிறக்கும்போதே கோடீஸ்வரன்ன்னு பேசறீங்களே!   நீங்க உபயோகிக்கரீங்கலே பணம். அதுக்கு இருக்கா ஜாதி பேதம்”,.

அப்படியே வராவை கட்டிபிடித்து தூக்க வேண்டும் போல் ரமணனுக்கு ஆசை பொங்கியது.

“வேற ஜாதிக்காரன் தொட்டுட்டான்னு அந்த பணத்தை  நீங்க  தொடுறது இல்லையா உபயோகபடுத்தறது இல்லையா………………”.

“அறிவுககெட்டவங்களா உங்களாள எங்க பாப்பா போச்சு! இன்னும் இது மாதிரி நீங்க என்ன செஞ்சிருகீங்களோ”,  என்று ஆவேசமாக அவள் கத்திகொண்டே போக………….

“வரா”, என்று ரமணன் அவளை அழைத்து, அழைத்து, பார்த்தான். அவள் நிறுத்தவேயில்லை………….

அவள் தோள் சுற்றி கைகள் போட்டு அழுத்தி பிடித்தவன், “அமைதியாயிரு வரா, இப்போ அவங்க பட்டதே! அவங்க உணர்றதுக்கு போதுமானது, அப்புறம் பார்க்காலாம்”, என்று அனைவரிடமும் கூறி…………  “வா”, என்று அழைத்து சென்றான். 

வெளியே வந்து அவளை அமர வைத்தவன்……….. அவன் மட்டும் உள்ளே சென்று, “சொல்லபோனா அன்னைக்கு உங்களால ராம் அண்ணாக்கு, வராக்கு நடந்ததுக்கு எல்லாம் உங்களை ஒரு வழி பண்ணியிருப்பேன். நான் பண்ணலைன்னாலும் என் வீட்டு ஆளுங்க பண்ணியிருப்பாங்க”.

“ஆனா  நாங்க யாரும் எதுவும் செய்யாததுக்கு காரணம் வரமஹாலக்ஷ்மி தான். அவ இதை பத்தி இனி எப்போவும் நினைக்க கூடாதுன்னு நான் நினச்சதால தான் நீங்க பொழைச்சீங்க”.

“நான் விட்டாலும் கடவுள் காட்டிட்டார் பார்த்தீங்களா……….. இனிமேலாவது ஜாதி பேர்ல எந்த கலாட்டாவும் பண்ணாம அமைதியா வாழுங்க”, என்று கூறி திரும்ப……………

“நிச்சயம்”, என்று ஸ்ரீதரின் தந்தை அவனுக்கு வாக்கு கொடுத்தார்.   

அவர்கள் செல்வதை அனைவரும் பார்த்து இருக்க……….. அப்பொழுதுதான் தான் அவர்களுக்கு நன்றி கூறாததை உணர்ந்த ஸ்ரீதர் வேகமாக அவர்கள் பின்னே ஓடிவந்து, “தேங்க்ஸ் சர்”, என்றான் ரமனனை பார்த்து……….

“உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா ஸ்ரீதர்”, என்றான் ரமணன்.

“இல்லை”, என்பது போல் ஸ்ரீதர் தலையசைக்க…………   

“எனக்கு நிஜமாவே, நீங்க தேங்க்ஸ் சொல்லனும்னு நினைச்சீங்கன்னா, நீங்க ஒரு கல்யாணம் பண்ணிக்கங்க ஸ்ரீதர்”, என்றான் ரமணன்.

“கட்டாயம் அடுத்த முறை உங்களை என் கல்யாண பத்திரிகையோடு தான் சந்திப்பேன்”, என்றான் ஸ்ரீதர்.

இப்பொழுதும் மனதில் வராவை மிஸ் செய்த வருத்தம் இருந்தாலும் ரமணன் வராவின் நெருக்கம் இனி நினைத்து பயனில்லை என்று ஸ்ரீதருக்கு தெளிவாக உணர்த்தியது.

அதற்குள் பேக் டு நார்மல் ஆகியிருந்த வரமஹாலக்ஷ்மி, “யார் ஸ்ரீதர் அது கல்யாண பொண்ணு உங்க அத்தை பொண்ணு சித்ராவா”, என்று முகத்தை பாவமாக வைத்து தன் கணவனின் தோள் சாய்ந்தவள் கேட்க………

“இல்லை வரா, அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சு…………”,

“அப்போ நீ க்ரேட் எஸ்கேப்பா”, என்று சொல்லி வரா கலகலவென சத்தமாக சிரிக்க……….

“இப்படி சிரிச்சே மறுபடியும் அவனை பின்னால சுத்த வைப்பா போல”, என்று மனதிற்குள்ளேயே வராவை ரமணன் கடிந்தான்………

அவனிடம் கண்களாலேயே விடைபெற்ற ரமணன், “இது என்னதிது உன் மாமனார் சிரிப்பு உனக்கும் வந்துடுச்சா”, என்று சொல்லி அவன் பெருங்குரலெடுத்து சிரித்தான்.

“அய்யே! என்ன சிரிப்பு”, என்றாள் வரா அவனை பார்த்து……….

மறுபடியும் அவள் முக சேஷ்டை பார்த்து அவன் சிரிக்க……… “நீங்க பெரிய க க க ன்னு எல்லாரும் நினைக்கறாங்க. அப்படியே மெயின்டைய்ன் பண்ணுங்க. இப்படி சிரிச்சு ஸ்பாயில் பண்ணாதீங்க”, என் அவள் கூற………….

“அது என்ன க க க”,  என்று மறுபடியும் சிரிக்க…………..

“அது கடமை கண்ணியம் கட்டுப்பாடு”, என்று அவள் சொல்ல………..

“இதப்பார்றா நம்மளை இவ கிண்டல் பண்ணுறா”, என்று மறுபடியும் சிரிக்க…….. இப்பொழுது வராவுக்கும் மறுபடியும் சிரிப்பு வர………..

இருவருமே சந்தோஷமான மனநிலையில் இருந்ததால் காரணமில்லாமல் சிரிப்பு வந்தது.  

“இதுக்கு எங்கப்பா சிரிப்பே பரவாயில்லை”, என்றான் மறுபடியும். 

“இரு! வள்ளிமா கிட்ட சொல்றேன்”, என்று உடனே அவள் வள்ளிமாவை அழைத்தாள்………..

“பாருங்க வள்ளிமா, இவங்க கிண்டல் பண்றாங்க, தாத்தாவை சொல்லி”, என்று எப்பொழுதும் போல் புகார் வாசிக்க…….

அவளிடம் இருந்து போனை பிடிங்கியவன்………… “எங்கம்மா பிடிச்சீங்க இவளை. ஆன்னா ஊன்னா உங்களுக்கு போன் பண்ணிடறா”, என…………

“நாங்க எங்கடா பிடிச்சோம். நீதாண்டா பிடிச்ச! அதுவும் நான் பிடிச்ச முயலுக்கு மூணு கால்ன்னு நின்னு, மூணு நாள்ல கல்யாணத்தை வைக்க சொன்ன”, என்று திருப்ப………..

“அம்மா! இதுக்கு இவளே பரவாயில்லைமா”, என்று ரமணன் பயந்தது போல் நடிக்க…………….

“டேய்! அவகிட்ட குடுறா”, என்று அதட்டிய வள்ளிமா……..

“மகாலக்ஷ்மி!”, என்று அதட்டல் போட்டவர்………. “அவன் சொன்ன மாதிரி சும்மா ஆன்னா ஊன்னா போன் பண்ண கூடாது, அடுத்த தடவை நீ போன் பண்றது நாங்க பாட்டி தாத்தாவாயிட்டோம்ற செய்தியோட தான்”, என்று அவர் சொல்ல………..”,

இந்த முறை யாரும் இல்லாமலேயே………. எதுவும் சொல்லாமலேயே………. ரமணன் பின்னால் ஒளிந்தாள்.

“என்ன வரா?”, என்று கேட்டு அவன் திரும்ப முற்பட………. அவன் முதுகுக்கு பின்னாலேயே அவளும் சுற்றி எப்பொழுது போல் கண்ணாமூச்சி ஆட……….

இப்படி பேச்சும் சிரிப்புமாய் இவர்கள் நின்றது ஹாஸ்பிடல் நுழைவாயில்.

சட்டென்று இன்னுமே அடக்க முடியாமல் சிரித்தான் வெங்கட ரமணன்.

“எதுக்கு இவ்வளவு சிரிப்பு போதும்”, என்று வரா கூற………..

“சிரிக்காம என்ன பண்ணுவாங்க……….. அங்க பாரு இன்னும் காணோம்னு………. என்னவோ ஏதோன்னு உங்க அண்ணன் வந்துட்டான், கூடவே உங்க அண்ணியும் வந்துட்டா”, என்றான்.

பார்த்தாள்……… அவர்கள் இருவரும் தான். தீடீரென்று சீரியஸ் ஆன வரா……. “நாம மறைக்கறது தப்பில்லையா”, என்றாள். எந்த சூழ்நிலையில் கல்பனா கீழே விழுந்தாள் என்பதை நினைவு படுத்தி கேட்க……..

“உண்மை நம்ம அத்தனை பேருக்கும் கஷ்டத்தை கொடுக்கும்னா, அதை மறைக்கறது தப்பில்லை. கல்பனா வர்றா அமைதியாயிரு”, என்றான் ரமணன்.

“என்ன? நான் வர்றேன்னு உன் பொண்டாட்டிக்கிட்ட வேகமா சொன்ன?”, என்றாள் கல்பனா.

“ம், அண்ணி நீங்க ரொம்ப நல்லவங்கன்னு சொல்றாங்க”, என்றாள் வரா குழந்தைகளோடு சேர்ந்து சொல்வது போல்………..

“பாரு! பாரு! எத்தனை தடவை சொல்றேன். யாராவது இவளை கேக்கறீங்களா”, என்று கல்பனா……….. சிறிது டென்ஷன் ஆக…………..

எப்பொழுதும் போல் ரமணன், “வரா கல்பனாவை டென்ஷன் பண்ணாதா” என்று மெல்லிய குரலில் மிரட்டினான்.

“வாயை மூடுடான்னா பேசிட்டு இருக்கான் இவன்”, என்று கல்பனா ரமணனை கடிந்து கொள்ள…………   

வராமஹலக்ஷ்மி ரமணனுக்கு மட்டும் கேட்குமாறு……… “இத்தனை பேர் இருக்கும் போது நீ எப்படி என் வாயை மூடுவ”, என்று ஒரு பெரிய சந்தேகத்தை எழுப்பினாள்.

புரியாமல் ரமணன் பார்க்க………. “உன் வாயல எப்படி என் வாயை மூடுவ”, என்று கேட்க…………

கேட்ட ரமணன் அவளுக்கு மட்டும் கேட்குமாறு சிறு குரலில் அலறினான்……… “அம்மா தாயே! நீ ஆளை விடு! நான் போலிஸ் ஸ்டேசன் போறேன். நீ உன் பாச மலர்களை கூட்டிட்டு வீடு போய் சேர்”, என்றான்,

இவர்களை ரசித்து பார்த்து கொண்டிருந்தனர் ராம் பிரசாத்தும் கல்பனாவும்.

“அண்ணா நான் கிளம்பறேன், பை கல்பனா, கொஞ்சம் வேலை”, என்றவன் கண்களாலேயே வராவிடம் விடைபெற்று கிளம்பினான். 

இத்தனையையும் அமைதியாக வேடிக்கை பார்த்துகொண்டிருந்த ராம் பிரசாத்தையும், பக்கத்தில் இருந்த கல்பனாவையும், வரமஹாலக்ஷ்மிக்கு காட்டிய படியே………… கையசைத்து படிகளில் இறங்கினான்.

தலைவியின் நாயகன் கடமையை நோக்கி செல்ல…………….

வேகமாக படிகளில் தன் நாயகன் இறங்குவதை கண்களால் தலைவி சிறையெடுக்க……..

தலைவியை பார்க்கும் ஆசையில் நாயகன் திரும்ப………..  

அவனை அதிலிருந்து மீள முடியாமல் சிறைபடுத்தினாள் நம் தலைவி.

                       தலைவியின் நாயகன் 

 

 

 

 

 

Advertisement