Advertisement

அத்தியாயம் முப்பத்தி ஒன்று:

இன்றைய நிகழ்வுகள்:

வெங்கட ரமணன் சென்னையில் பணியில் சேர்ந்து மூன்று மாதங்களாகி விட்டது. அதற்குள் சென்னை சிட்டிக்குள் நிறைய மாற்றங்கள் கொண்டு வந்தான்.

எல்லாம் கட்டுக்குள் இருந்தது என்று சொல்ல முடியாது………….. இருந்தாலும் பெரிதாக எந்த குற்றங்களும் வீதிகளிலோ, அல்லது சொல்லும்படியான இடங்களிலோ நடக்கவில்லை.

தினமும் ஒரு மணி நேரம், எந்த ஏரியா என்று தீர்மானமாக இல்லாமல் ஏதாவது ஒரு ஏரியா ரௌண்ட்ஸ் செல்வான்.

நேரடியாக தானே தான் பார்ப்பான். நிறைய போலிஸ் ஆபீசர்ஸ் அவன் சொல் கேட்டு நடக்க பிரியப்பட்டனர்.

எல்லாரும் இந்த காவல் துறையில் சேரும்போது உண்மையாக, நேர்மையாக, குற்றங்களை, ஒடுக்குபவனாக இருக்க வேண்டும் என்று தான் சேருவர்.

சில ரௌடியிசம் தலையீடுகள், அரசியல் தலையீடுகள், பேராசைகள், அவர்களை அவர்கள் இந்த பணியில் சேரும்போது நினைத்த மாதிரி இருக்க விடுவதில்லை.

ஆனால் வெங்கட ரமணன் கீழ் பணிபுரியும் போது அவர்களுக்கு எந்த நிர்பந்தமும் இல்லாமல் சுதந்திரமாக செயல்பட முடிந்தது. அது அவர்களுக்கு புதிய உற்சாகத்தை கொடுத்தது.

எங்கே சென்றாலும் எந்த வேலையில் இருந்தாலும் தினமும் ஒரு வேளை வந்து அவனுடைய டீக்கடை நண்பன்………… அந்த பையனிடம் டீ குடிப்பதை மறக்க மாட்டான்.

அவனுடைய கமிஷனர் அலுவலக ஏரியாவில் என்ன நடக்கிறது என்று அந்த பையன்  மூலமாகவே அவனுக்கு தெரிந்துவிடும்.        

 

முடிந்தவரை இந்த கட்டபஞ்சாயத்து முறைகளை கட்டுக்குள் கொண்டுவந்தான்.

சிறிய அளவில் இருந்த ரௌடிகளை கூப்பிட்டு எச்சரித்தான், மேலும் குற்றங்கள் செய்யாமல் இருந்தால் அவர்களை கைது செய்யாமல் விட்டு விடுவதாக………….

“நீ என்ன சொல்வது, நாங்கள் என்ன கேட்பது”, என்ற மனப்பான்மையில் அதற்கு பிறகும் இருந்த ரௌடிகள், அவனின் அப்போதைய செயல் கண்டு அவன் சொல்வதை கேட்பதே உத்தமம் என்று நினைக்க செய்தான்.

நிறைய குற்றங்களை செய்து……………. காவல் துறையினரிடம் அகப்படாமல், தன்னுடைய குற்றங்களுக்கும் மற்றவர்களை சரணடைய வைத்து கொண்டிருந்த………….. சென்னையை பதட்டபடுத்தி கொண்டிருந்த ஒரு ரௌடியை மக்கள் பார்க்க, பார்க்க, தப்பி ஓடுகிறான்………… என்ற பெயரில் என்கவுன்ட்டர் செய்தான்.

மிகவும் கோரமான மரணம் அந்த ரௌடிக்கு. அந்த ரௌடி மேல் கிட்ட தட்ட பன்னிரெண்டு கொலை வழக்குகள் இருந்தது.

அதை விடவும் அந்த ரௌடி செய்து வந்த காரியம்……….. தனியாக இருக்கும் வயதான தம்பதிகளுக்கு, அவர்கள் பெயரில் வீடு இருந்தால் மிக குறைந்த விலையில் அவர்களுக்கு இஷ்டமுண்டோ இல்லையோ வாங்கி விடுவது.

அவனால் இருக்க இடமின்றி வீடு இழந்தவர் பலர். வந்த ஒன்றிரண்டு மாதங்களிலேயே அவனை பற்றி முழு விசாரணையில் இறங்கினான், காவல்துறை மூலமாகவும்………. அறிவழகன் மூலமாகவும். 

பின்பு யாரையும் நடுவில் வர விடாமல், யாருக்கும் தெரியாமல்  முதலமைச்சரிடம் நேரடியாக  பேசி முடிவெடுத்து…………..  

அவனுக்கு ஒரு கோரமான மரணத்தை வழங்கி, மற்றவர்களுக்கு அதன் மூலம் ஒரு பயத்தை கொடுத்தான்.

அந்த இறந்த உடலை உடனே எடுக்காமல் வேண்டுமென்றே தாமதித்து…… காலையில் நடந்ததை, மாலை வரை அப்படியே விட்டு மெதுவாக அப்புறப்படுத்தினான்.

ரமணனனுக்கு பணியில் இருக்கும் பொழுது வேறு எந்த நினைவும் இருக்காது.  அவன் நகரில் மாற்றங்கள் நிகழ்த்திய போது அவனுக்கு எந்த வகையான சிறு தொந்தரவும் வரமஹாலக்ஷ்மி கொடுக்கவில்லை.

அவன் சிரித்தால், அவளும் சிரித்தாள். அவன் முகத்தை தூக்கி வைத்திருந்தால் அவள் அவனை மேலும் பதட்டபடுத்தாமல் அமைதி காத்தாள்.

சந்தர்ப்பம் கிடைக்கும் போது வரா அவனை ஒரு வழியாக்கினாலும்………… அவனுக்கு அவளால் ஒரு தொந்தரவும் வரவில்லை.

அவளோடான அவனுடைய மிகவும் தாமதமாக ஆரம்பித்த திருமண வாழ்க்கை, ரமணனுக்கு நிறைவையே கொடுத்தது. திருமண வாழ்கையை பூரணமாக அனுபவித்தான் என்றே சொல்ல வேண்டும்.

“வீடு அல்லாட் ஆகிவிட்டது ராம் அண்ணா, நாங்கள் அங்கே போகவா?”, என்று ரமணன் கேட்டதற்கு………… சிவசங்கரனும் ராஜேஸ்வரியும் கூட, “சரி”, என்று விட்டனர். ஆனால் ராம் பிரசாத்தும்  கல்பனாவும் ஒத்துக்கொள்ளவில்லை.

“ஊருக்குள்ள இருக்கிற அத்தனை பேருகிட்டயையும் நீ ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபிசர் ஆகிட்ட, உன்னை நம்பி பொண்ணை அனுப்பிட்டு, நீ இல்லாத நேரம் இவளுக்கு யாராவது தொந்தரவு கொடுத்துட்டா……….., நீ உன் வேலையை பாற்ப்பியா இல்லை இவளையே நினைச்சிட்டு இருப்பியா.  அதெல்லாம் முடியாது, அவளை தனியா எல்லாம் அனுப்பமாட்டோம்”, என்றாள் கல்பனா பளிச்சென்று.

“அவளை அனுப்பிட்டு என் புருஷன் முகத்தை தூக்கி கவலையா வச்சிருக்கிறதை யாரு பார்ப்பா”, என்று மனதிற்க்குள்ளேயே நினைத்தாள்.

அப்படியே அதை கல்பனாவிடம் திருப்பினான் ரமணன், “இதை நீ எங்களுக்காக சொல்கிற மாதிரி………. ராம் அண்ணாக்காக சொல்றியா”, என்றான்.      

“தெரியுதில்லை, அப்புறம் அதை ஏன் சொல்ற நீ!………… அவரை மட்டும் என்றாலும் நான் சமாளிப்பேன்…………. ஸ்ருதி.? வாய்பேயில்லைப்பா………. என்னால சமாளிக்க முடியாது! என்றாள் பரிதாபமாக.

“ஒரு வேளை நீ மாமனார் வீட்ல இருக்கிறது கௌரவ குறைச்சல்ன்னு நினைச்சா……………….. நீ புது வீட்டுக்கு போ! அடுத்த நாள் நாங்க எல்லாம் அங்க வந்து இருக்கிறோம்”, என்றான் ராம் பிரசாத்.

இந்த யோசனையை கேட்ட அடுத்த நிமிடம் வரா……….. போனில் அவளுடைய மாமியாரை அழைத்தவள், “வள்ளிம்மா இந்த வெங்கி…………”, என்று ஆரம்பித்தவள்……………… பெயர் சொன்னால் வள்ளிமாவிடம் திட்டு விழும் என்று உடனே அவங்க என்று மாற்றி………….

“அவங்க  என்னென்னவோ சொல்றாங்க…………… ராம் அண்ணா அதை விட ஏதோ சொல்றாங்க”, என்று இருவரை பற்றி புகார் வாசிக்க……………

கேட்ட சுந்தரவல்லி, “எல்லாம் அவங்க அவங்க வேலையை பார்க்க சொல்லு வரா, நீயே சொல்லு…………. எங்கேயும் போகவேண்டாம். அங்கேயே இருங்க………….”, என்று முடித்து விட்டார்.

““என்னோட மருமக எல்லாரையும்……… அதட்டி……….. உருட்டி……….. மிரட்ட……….. வேண்டாமா? அப்புறம் இங்க வந்து நீ எப்படி பண்ணையம் பார்க்கிறது. ரமணன் அப்பா இங்கே இப்போ எல்லாம் வர்றதேயில்லை. எல்லாமே நான் தான்”.

“ரமணன் போலிஸ்ல இருக்கிறதுனால, அவனுக்கும் இதை பார்க்கறது  சிரமம். சீக்கிரம் சமயம் கிடைக்கும் போது வந்து இதையெல்லாம் பார்த்து பழகு”, என்று அதட்டலோடு முடித்தார்.

“நீ ஸ்ருதி பாப்பாக்கு என்ன சொல்லி கொடுக்கறியோ…………. அது நீதான்”, என்றார்.

அவள் ஸ்ருதிக்கு அடிக்கடி சொல்லும் வாக்கியம், “யூ ஆர் தெ பெஸ்ட்”, என்பது.

போனை வைக்கும் போது மனதிற்குள்ளே வரா அவளுக்கு அவளே சொல்லி கொண்டாள்………….. “ஐ அம் தி பெஸ்ட்”, என்று புன்னகையோடு……..

எதற்கு இவள் வள்ளிமாவோடு பேசிய பிறகு இப்படி புன்னகைக்கிறாள் என்று மூவரும் அவளையே பார்த்தனர்.

“என்ன”,………… என்று கண்களாலேயே கேட்ட வெங்கட ரமணனை பார்த்து, வரமஹாலக்ஷ்மி கண்ணடிக்க………….

அவசரமாக யாராவது பார்த்துவிட்டார்களா என்று பார்த்தான் ரமணன்.

“நான் உங்களை பார்த்து கண்ணடிச்சதை யாரும் பார்க்கலை”, என்று சத்தமாக கூறி………… மறுபடியும் அவனை பார்த்து கண்ணடிக்க, ரமணனை பார்த்து ராம் பிரசாத்தும் கல்பனாவும் வாய் விட்டு சிரித்தனர்.               

இந்த பேச்சு காலையில் அவர்கள் டிஃபன் சாப்பிடும் சமயம் நடந்து கொண்டிருந்தது. அன்று மெதுவாக ரமணன் கிளம்பி கொண்டிருந்தான். நேரம் காலை பத்தை கடந்திருந்தது.

அவன் கிளம்பி வெளியே வந்த போது அவர்கள் வீட்டுக்குள் வந்துகொண்டிருந்த ஆளை பார்த்து அதிர்ந்தனர்.

வந்தது ஸ்ரீதர், முகத்தில் நிறைய பதட்டத்தோடு வந்தான். அப்பொழுது தான் பார்த்தனர்………… அவன் பின்புறம் அவன் தங்கை, முன்பொரு காலத்தில் வராவின் தோழியான பத்மாவும் இருந்தாள்.

வரா வெளியே வராமல் உள் வாயிலிலேயே நின்றாள். அதை கவனித்த ரமணன், “வரா, வந்தவங்களை வான்னு சொல்லு”, என்றான்.

“என்ன ஸ்ரீதர்? ரொம்ப பதட்டமா இருக்கீங்க என்ன விஷயம்”, என்றான், முன்பு நிகழ்ந்தவைகள் எதையும் காட்டி கொள்ளாமல்…………..

“குழந்தைங்க காணோம்”, என்றான் பதட்டத்தில் மொட்டையாக.

இப்போது இன்னும் அதிர்ந்த வரா வெளியே வந்தாள்.

பத்மாவிடம், “என்ன நடந்தது பத்மா?”, என்றாள் வரமஹாலக்ஷ்மி.

“காலையில ஸ்கூலுக்கு போன குழந்தைங்க காணோம்”, என்றாள் அழுகையோடு.

“ரெண்டு பேரும் இப்படி பேசினா……….. எனக்கு என்ன புரியும்”, என்றான் வெங்கட ரமணன். “நீங்க நடந்ததை தெளிவா சொன்னீங்கன்னா தான் என்ன நடந்ததுன்னு எனக்கு தெரியும். என்ன செய்யலாம்னு நான் யோசிப்பேன்”, என்றான்.

பத்மா பேசினாள்………….. “என்னுடைய குழந்தை அஞ்சு வயசு, இப்போதான் யு.கே.ஜி போகிறா. அவளும் என் கணவரோட அண்ணன் பொண்ணு பன்னிரெண்டு வயசு, செவன்த் படிக்கறா. ரெண்டு பேரும் டெய்லி ஸ்கூல்க்கு எங்க கார்ல தான் போவாங்க. டிரைவர் கூட்டிட்டு போவான்”.

“இன்னைக்கும் அவன் தான் கூட்டிட்டு போனான். எட்டரைக்கு ஸ்கூல்ல ப்ரேயர். அவர் அண்ணா பொண்ணுக்கு கொஞ்சம் மூச்சு திணறல் வரும். அவளுக்கு ஆஸ்த்மா இருக்கு. அதனால எப்பவும் சேஃப்ட்டிக்கு  ஆஸ்த்மாக்கு வைக்கிற பஃப் கொடுத்து விடுவோம். இன்னைக்கு மறந்துட்டோம்”.

“உடனே ஞாபகம் வந்து டிரைவர்க்கு கூப்பிட்டா………. போன் சுவிச் ஆஃப்ன்னு வருது. ஸ்கூல்க்கு உடனே என் கணவரோட அண்ணன் அதை கொடுக்க போனாங்க, அங்கே குழந்தைங்க வரவேயில்லை”.

“இந்த ஒரு மணி நேரமா எல்லா இடமும் நாங்களே தேடி பார்த்தோம் காணலை. அப்பாவும் சித்தப்பாவும்  ஸ்டேசன்ல கம்ப்ளைன்ட் கொடுக்க போயிருக்காங்க………….. என் கணவர், அவங்க அண்ணா, எங்க மற்ற ஆளுங்க தேடிட்டு இருக்காங்க. ஸ்ரீதர் தான் சொன்னான்……… நாம வராவோட கணவரை போய் பார்க்கலாம்னு”, என்று படபடவென பேசி முடித்து அழத்துவங்கினாள்.

“ப்ளீஸ் ஏதாவது பண்ணுங்களேன்”, என்றான் ஸ்ரீதர்.

“வாங்க”, என்றவன், அவர்களை தன்னுடைய வாகனத்தில்லேயே ஏற்றி கொண்டு பறந்தான்.

“எந்த ஏரியா?”,………..

“வீடு வளசரவாக்கம்…………….. ஸ்கூல் கே கே நகர்”, என்றாள் பத்மா”.

“என்ன வண்டி, வண்டி நம்பர் என்றதற்கு………..”,

“இண்டிகோ  TN 07  AB 3345”, என்றாள்.

கண்ட்ரோல் ரூம் அழைத்து………….. எல்லா ஸ்டேசனுக்கும் அழைத்து தேடச் சொல்லி…….. சொல்ல……… சொன்னவன்……… அப்படியே சிட்டி லிமிடில் உள்ள எல்லா செக் போச்டையும் அழைத்து……….. இந்த வண்டி வந்தால் நிறுத்தி தனக்கு உடனே தகவல் தருமாறு சொன்னான்.

கையோடு அறிவழகனையும் அழைத்தவன், “அறிவு ஏதாவது மெக்கானிக் செட்ல, இந்த வண்டி நம்பர் ஏதாவது மாத்தறாங்களா பாரு”, என்றான்.

அறிவழகன் கடந்த ஐந்து ஆறு வருடங்களாக………… மெக்கானிக் ஷெட்டோடு கார் வாங்கி விற்கும் வேலையும் செய்வதால் நிறைய செட் அவனுக்கு பழக்கம்.

அதை பார்க்க சொன்னவன், பின்பு………….. “இந்த வண்டி எந்த ஏரியாவில் உள்ள பெட்ரோல் பங்கிலாவது பெட்ரோல் போட்டிருக்கிறார்களா”, என்று, அந்த அந்த போலீஸ் ஸ்டேசன் மூலமாக  செக் செய்ய சொன்னான்.

பின்பு அந்த டிரைவர் பற்றிய விசாரணையில் இறங்கிய போது அவர்கள் ஏரியா ஸ்டேசன் வந்திருந்தது.

ஏற்கனவே காணாமல் போனது நகரில் மிகவும் செல்வாக்குள்ள ஆட்களின் மக்கள் என்பதால் சிறிது பரபரப்போடு தான் ஸ்டேசனில் தேடும் படலம் இருந்தது.

தற்பொழுது கமிசனர் நேரடியாக இறங்கியதால் பரபரப்பு தொற்றி கொண்டது.

ரமணன்  அங்கு வந்து இறங்கி உள்ளே வந்தவுடனேயே, அங்கே இருந்த ஸ்ரீதரின் தந்தை……….. அவனை பார்த்ததும் வேகமாக வந்தவர்……….. “ஒரு தடவை நீங்க தான் என் பையனை காப்பாற்றி கொடுத்தீங்க, எப்படியாவது எங்க குழந்தைங்களை காப்பாற்றி கொடுங்க”, என்று அவன் கையை பிடித்து குரல் கரகரக்க கேட்டது அவனையே சற்று அசைத்தது.

எவ்வளவு பெரிய ஆட்களாக இருந்தாலும், பிள்ளைகள்………….. அதுவும் பெண் பிள்ளைகள்…………. எனும் பொழுது இன்னுமே பதட்டம் தொற்றும்.

“கட்டாயம் கண்டு பிடிச்சிடலாம், தைரியமா இருங்க. உங்க நல்ல காலம் அவங்க காணாம போனது உங்களுக்கு சீக்கிரமே தெரிஞ்சிருச்சி”,  என்று சொன்னவன்,

“அந்த டிரைவர் செஞ்சானா………. இல்லை அந்த டிரைவரையும் சேர்த்து வேற யாராவது தூக்கியிருக்காங்களா நம்ம பார்க்கணும். அந்த டிரைவர் யாரு? உங்க வீட்ல எவ்வளவு நாளா வேலை செய்யறான்”, என்று கேட்டான்.

‘இப்போ ஒரு வருஷமா வேலை பார்க்கிறான். அதுவும் கடைல தான் இருக்கான். பழைய டிரைவர் உடம்பு சரியில்லாததால ஒரு வாரமா தான் குழந்தைகளை இவன் கொண்டு போய் விடறான்”.

“சும்மா பத்து நாள் தான் அவனுக்கு அந்த வேலை. மறுபடியும் இன்னும் மூணு நாள்ல பழைய டிரைவர் வந்தவுடனே மாறிடுவான்”, என்றார். 

“இந்த மாதிரி ஆகும்னு எதிர்பார்க்கவில்லை”, என்றார்.

“அவன் போன் நம்பர் கொடுங்க”, என்றவன் அதை அழைக்க……….. “தற்பொழுது அணைத்து வைக்க பட்டுள்ளது”, என்று வந்தது.

“என்ன நம்பர் இதுன்னு பாருங்க………….. ஏர்டெல், பி எஸ் என் எல், ஏர்செல் எதுன்னு சீக்கிரம் பாருங்க, பார்த்து நேத்து இருந்து இவன் பேசின கால் லிஸ்ட் உடனே வாங்குங்க”, என்று சொல்ல சொல்ல வேலைகள் மிக வேகமாக நடந்தன………….

அவன் அங்கே என்ன என்று பார்த்து கொண்டு இருக்கும் போதே, அறிவழகன் அழைத்தான், “அண்ணா உங்க கமிசனர் ஆபீஸ் ஏரியால இருக்கிற ஒரு செட்ல வண்டிய விட்டவன் ஆள் திரும்ப வரலை”.

“எதுக்குடா விட்டான் அவன்” என்று கோபமாக ரமணன் கேட்க……….. “வாட்டர் வாஷ்ன்னு சொல்லி விட்டுருக்கான்”.   

 “விவரம் சரியா சொல்ல தெரியாம, ஒனர் வர்றார் கூட்டிட்டு வந்துடரேன்னு ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே போய் இருக்கான்”, என்றான்.

“சரி நான் பார்த்துக்கறேன், இருந்தாலும் வண்டிய தேடி யாராவது வந்தா……….. உடனே என் போன் நம்பர் கொடுத்து என்னை உடனே கூப்பிட சொல்லு”, என்றான்.

“நம்பர் நெட் வொர்க் என்னன்னு பார்த்தீங்களா”, என்று கேட்டு கொண்டே பம்பரமாக இருந்த இடத்தில் இருந்தே சுழன்று எல்லோரிடத்திலும் வேலையை வாங்கி தகவலை சேகரித்தான்.  

அதற்குள் எந்த நம்பரில் அவன் நேற்று இருந்து பேசினான் என்ற லிஸ்ட் வர……………….., அதில் யாரோடு, எவ்வளவு நேரம் பேசினான் என்று பார்த்தான். ஒரு நம்பரிடம் ஆறு முறை பேசியுள்ளான் என தெரிந்தது.

“அந்த நம்பர்க்கு யாரையாவது விட்டு போன் செய்யவாங்க சர்”,  என்று அந்த ஏரியா இன்ஸ்பெக்டர் கேட்க………..

“வேண்டாம்……….. இந்த நம்பர்க்கு வர்ற கால் ட்ரேஸ் பண்ண சொல்லி,  அந்த போன் நெட்வொர்க்ல சொல்லுங்க.  எந்த ஏரியாள இருக்குன்னு மட்டும் பாருங்க”, என்றான். 

மறுபடியும் அது அவனின் கமிசனர் ஆபீஸ் பக்கத்தில் உள்ள ஏரியாவை காட்டியது.

“என் ஏரியா பக்கத்துல இருந்துட்டு எவனுக்குடா இந்த மாதிரி செய்யறதுக்கு தைரியம்”, என்று வண்டியையை அவன் அலுவலகத்துக்கு  புயல் போல கிளம்பி சென்றான்.

மற்றவர்கள் அவனை பின் தொடர்ந்தனர்.              

அத்தியாயம் முப்பத்தி இரண்டு

அன்றைய நினைவுகள்:

பிடிவாதம்……………….. யார் சொன்னாலும் காதில் போட்டுகொள்லாத பிடிவாதம்……………… ரமணனிடத்தில் திடீரென்று தோன்றியது.

“ஏன் தனக்கு இவ்வளவு பிடிவாதம்”, என்று வெங்கட ரமணனுக்கே புரியவில்லை.

ஏதோ உள்ளுணர்வு சொன்னது, ஸ்ரீதர் வராவை அவ்வளவு சீக்கிரமாக மறந்து விட மாட்டான். அவள் வேண்டாம் என்றாலும் விட்டு விட மாட்டான். ஏதாவது ஒரு வகையில் அவளுக்கு தொந்தரவு கொடுப்பான் என்று.

அதுவும் வரா இஷ்டமில்லாமல் அவளை கட்டாயபடுத்தி அழைத்து சென்றான் என்று தெரிந்ததில் இருந்து, மறுபடியும் அந்த மாதிரி ஏதாவது செய்து கல்யாணத்தை முடித்து விட்டால்………….?

இப்படி பல யோசனைகள் உள்ளுக்குள்  ஓடினாலும்…………. உண்மையான யோசனை ரமணனுக்கு வராவை மறுபடியும் தொலைக்க மனமில்லை என்பதே உண்மை,

அவள் அன்று இரவு அவனை அழைத்து, “என்னை ஏன் வேண்டாமென்று சொன்னே?”, என்று கேட்ட பிறகு தோன்றிய ஒரு உணர்வு………….

இங்கே வந்து அவள் காணோம் என்று தெரிந்து………….. முதன் முறையாக அவனுள் எழுந்த பயம்…………..

அவளை கண்டுபிடித்து குழியில் அவளை ரத்த வெள்ளத்தில் பார்த்த போது…….. தன்னுடைய கால்கள் தொய்ந்து தான் விழுந்துவிடுவோமோ என்று………………

எல்லாம் முடிந்ததோ என்ற உணர்வு…………

எல்லாமுமாக அவன் உணர்ந்தது அவள் தனக்குரியவள் என்பது தான். ஆனால் ஸ்ரீதரோடு அவள் விருப்பப்பட்டு சென்றாள் என்று நினைத்து கொண்டிருந்ததால் மேலே வராவை பற்றி சிந்திப்பதில் தடுமாறிக்கொண்டு இருந்தான். 

அதுவும் ஸ்ரீதரிடம் அவள் தற்போது பேசிய போது தோன்றிய ஒரு உணர்வு தனக்கு மட்டுமே உரியவள் என்பது தான்.    

ஸ்ரீதரை சமாளிப்பது என்பது வெங்கட ரமணனை பொருத்தவரை ஒரு பெரிய விஷயமல்ல.

ஆனால் வரா விஷயத்தில் அவனுக்கு சிறிதளவு கூட ஆபத்தான முயற்சி  எடுக்க விருப்பமில்லை. அதுவும் ஸ்ரீதர், “நீ தான் என் மனைவி”, என்று சொன்னபோது அவனை கொன்றுவிட வேண்டும் போல் ஒரு ஆத்திரம் தோன்றிய போது தான், அவன் வராவை நேசிப்பதை அவனுக்கு அவனே உணர்ந்தான்.    

எல்லோருக்கும் இப்படி தீடீர் என்று திருமணம் ஏன் என்ற கேள்வி இருந்தது, முக்கியமாக ராஜேஸ்வரிக்கு, கல்பனாவுக்கு, இவர்கள் எல்லோரையும் விட வரமஹாலக்ஷ்மிக்கு.

எல்லோருக்கும், “ஏன்”, என்ற கேள்வி மட்டுமே இருந்தது. “வேண்டாம்”, என்று யாரும் நினைக்காததால் வேலைகள் மளமளவென நடந்தது. அதுவும் ராம் பிரசாத் எல்லாவற்றையும் வேகமாக நடத்தி முடித்தான்.

தனக்கு வெங்கட ரமணனுடனான திருமணம் ஒரு புதிய தைரியத்தை வரமஹாலக்ஷ்மிக்கு கொடுத்து. அவள் மனதளவில் திருமணத்திற்கு உடனடியாக தயாரில்லை என்றபோதும் அன்று ஸ்ரீதரை பார்த்து விட்டு வந்த பிறகு ஒரு பயம் அவளையறியாமல் மனதிற்குள் சூழ ஆரம்பித்தது.

ஸ்ரீதரிடம் இருந்து தப்பித்தால் போதும் என்ற உணர்வே ஓங்கி இருந்தது. அதுவும் நேற்று அவனை பார்த்த பிறகு அன்றைய தின ஞாபகங்கள், “மெதுவாக போ”, என்று அவள் கதறியது அவளுக்கே திரும்ப திரும்ப தோன்றி ஒரு பயத்தை கொடுத்தது.

அவளுக்கு இருந்த மனப்பான்மை யாரையோ திருமணம் செய்வதற்கு ரமணன் அவளுக்கு பிடித்தமே. ஸ்ரீதருடன் அவள் உறவை மேலே சிந்திக்க விருப்பம் இல்லாததால் வேறு யாரை பற்றியும் யோசிக்க மனம் இடம் கொடுக்கவில்லை. குற்ற உணர்ச்சி அதிகமாக அவளை தின்றது.   

அதனால் அவள் தந்தை அவளிடத்தில் கேட்ட போது “சரி”, என்று விட்டாள்.

நேற்று முடிவெடுத்து………. நாளை திருமணம்………… என்பதால் இன்று வேலைகள்……………. மும்மும்முறமாக நடந்து கொண்டிருந்தன.  வடபழனி கோயிலில் முதல் நாள் திருமணம், பின்பு கம்பத்தில் மறுநாள் ஒரு விருந்து, என்று சுருக்கமாக முடித்தனர்.

திருமணம் மிக எளிமையாக நெருங்கிய சொந்தங்களை மட்டுமே அழைத்து  நடந்தது. ஆனால் ரமணன் ஊரான கம்பத்தில் நடந்த விருந்தை ராமநாதன் அமர்க்களப்படுத்தி விட்டார். பொதுவாக விருந்துக்கு வருபவர்கள் அன்பளிப்பை கொடுப்பர்.

ஆனால் ராமநாதன் தன் ஒரே மகனின் திருமணத்திற்கு வந்த அத்தனை பெண்களுக்கும் வெள்ளி கொலுசுகள், மற்றும் ஆண்களுக்கும் வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுப்பதற்காக அதே………….. மற்றும் தங்களிடத்தில் வேலை செய்பவர்கள் அனைவருக்கும் ஆளுக்கு ஒரு ஏக்கர் நிலத்தை சொந்தமாக கொடுத்தார்.

இங்கே விமரிசையாக திருமண விருந்து நடைபெற்று கொண்டிருக்கும் போதே ரமணனுக்கு தகவல் வந்தது. “என்னடா இது?”, என்று இருந்தது ரமணனுக்கு.

தனக்கும் வராவுக்கும் திருமணம் நடந்ததை ஸ்ரீதரின் காதுகளுக்கு செல்லுமாறு பார்த்து கொண்டான். அதற்கு ஸ்ரீதர் என்ன செய்ய போகிறான் என்று அவன் பார்க்க நினைத்தான். வராவிடம் வந்து சண்டை போடுவான் இல்லையென்றால் வேறு ஏதாவது கலாட்டா செய்வான் என்று அவன் நினைத்து இருக்க…………….

ஸ்ரீதர் செய்ததோ தற்கொலை முயற்சி. இதை ரமணன் எதிர்பார்க்கவில்லை.   

இது வராவுக்கு தெரிந்தாள் நிச்சயம் கலங்குவாள் என்று தெரிந்த ரமணன் அவளிடம் இருந்து மறைத்து விட்டான்.

இப்படி ஏதோ ஒன்று இருவர் மனதிற்குள்ளும் இருந்ததால், பெரிதாக இருவருமே திருமணம் நடக்கும் போதோ……………. அது முடிந்த பிறகோ பேச ஆர்வம் காட்டவில்லை.

அதுவும் ஸ்ரீதர் விஷயம் கேள்விப்பட்டதில் இருந்து மிகவும் டென்ஷனாக இருந்தது ரமணனுக்கு, “ஸ்ரீதர் பிழைக்க வேண்டுமே”, என்று.

தனது தந்தையிடம் மட்டும் விஷயத்தை சொன்னவன்……. “எனக்கு பயமா இருக்குது அப்பா”, என்றான்.

“ஏன்பா”, என்றவரிடம்………….. “அடுத்தவன் சாவுலையா என் திருமணம் நடக்கணும்” என்று கலங்க…………..

“ஒண்ணும் ஆகாதுப்பா……………. அவன் பொழைச்சுக்குவான்”, என்று அவனிடத்தில் ஆறுதல் கூறியவர்.

“அவன் பிழைத்ததர்க்கு பிறகு நான் அவர்களை என்ன செய்கிறேன் பார்”, என்று மனதிற்க்குல்லேயே நினைத்தார்……………. வெளியே சொல்லவில்லை.

விருந்து  முடிந்தவுடனே அங்கே இருக்க பிடிக்காதவனாக……………. ரமணன் உடனே பணியில் சேருவதற்காக கிளம்பினான், “எங்கே போய் விட போகிறாள் வரா. ஒரு வாரம் கழித்து அழைத்து கொள்ளலாம்”, என்று.

ஸ்ரீதர் ஒரு வழியாக பிழைத்து விட்டான் என்று தெரிந்த பிறகே அவனால் வராவோடு பேச முடிந்தது.

வராவை தொலைபேசியில் அழைத்தவன். “எப்போ வரா இங்கே வர்ற?”, என்றான்.

“வரணுமா………. எதுக்கு”, என்றாள்.

“என்ன வரா இப்படி பேசுற”, என்ற அவனின் கேள்விக்கு…………. “வந்த……… ரெண்டு நாள்ல கல்யாணம்ன…………. விருந்து முடிஞ்சவுடனே விட்டுட்டு போய்ட்ட…………. இப்போ எதுக்கு கூப்பிடற…………”, என்றாள் மரியாதையெல்லாம் காற்றில் பறக்க விட்டவளாக.

சிறிதும் கூச்சபடாமல், “சாரி”, என்றான் உடனே, “ஐ அம் ரியல்லி சாரி வரா, தப்பு தான். உன் கிட்ட கல்யாணத்துக்கு கூட கேட்கலை. ஏதோ டென்ஷன் விட்டுடேன்”, என்றான் தணிந்த குரலில் உண்மையாக.

“என்ன டென்ஷன்”, என்றாள்.

“அது ஸ்ரீதரின் டென்ஷன் என்று சொல்லவா முடியும், இல்லை ஒரு வேளை நீ மறுத்துவிட்டாள் என்று சொல்ல முடியுமா”,

“ஏதோ டென்ஷன், ப்ளீஸ் விட்டுடேன், எனக்காக”, என்றான்.

வெங்கட ரமணனை பற்றி நன்கு அறிந்தவள் ஆதலால், அவன் இப்படி பணிவாக தணிந்த குரலில் பேசுவது அவன் இயல்புக்கு மீறிய ஒன்று என்று தெரிந்து, “ம்”, என்று சத்தம் மட்டும் கொடுத்தாள்.    

அவன் குரலில் இருந்த உண்மை அவளை அசைக்க அவளால் மேலும் சண்டை வளர்க்க முடியவில்லை.  

“எப்போ வர்றே வரா” என்றான் மறுபடியும்.

“அது நீங்க இங்கயே வந்துடரீங்களா”, என்றாள்.

“ஏன் நீ வரமாட்டியா”, என்றான்.

“எனக்கு வரமுடியாது”, என்றாள்.

“ஏன்……………????????????”,

மௌனமே பதிலாக கிடைத்தது.

“பேசு வரா…….. பேசாம எதுவும் சரியாகாது”, என்று மிகவும் வற்புறுத்திய பிறகு, “அண்ணிக்கு குழந்தை பிறந்த பிறகு தான் நான் இங்கே இருந்து வருவேன்னு சொல்லிகிட்டேன்”, என்றாள்.

“யார்கிட்ட?”, என்றவனிடம்………….

“சாமிக்கிட்ட”, என்றாள்.

இருவரிடமும் ஆழ்ந்த மெளனம். 

மெளனம் நிமிடங்கள் வரை நீடித்தது.

இதற்கு பிறகு என்ன செய்ய முடியும். சொல்லப்போனால் வராவை விட ரமணனுக்கு கடவுள் பக்தி அதிகம். அவளே வேண்டியிருக்கும் போது அவன் என்ன சொல்வான்.

“வீட்ல எல்லாரும் கேட்பாங்க……. என்ன சொல்லுவ”, என்றான்.

“அதெல்லாம் எனக்கு தெரியாது, நீ தான் அவசரமா கல்யாணம் பண்ணிகிட்ட…………  நீயே சொல்லிடு”, என்று அவள் மனதின் பாரம் குறைந்தவளாக, அந்த பாரத்தை அவனிடம் ஏற்றி, தொலைபேசியை வைத்து விட்டாள்.

எல்லோரையும் சமாளிக்கும் பொறுப்பை அவன் தலையில் கட்டினாள்.

எல்லோருக்கும் ரமணனே………….. “தான் தற்பொழுது ஒரு முக்கியமான பணியில் ஈடுபட்டு இருப்பதாகவும்……… இதில் நிறைய ஆபத்து குடும்பத்தாருக்கு வர வாய்பிருப்பதால், வரா இப்பொழுது தன்னோடு வர வேண்டாம், சிறிது மாதங்கள் கழித்து அழைத்து கொள்கிறேன்”, என்றான்.          

அவனே எதிர்பார்க்கவில்லை அவர்கள் பிரிவு வருடக்கணக்கில் நீண்டு விடும் என்று.

 

  

Advertisement