Advertisement

அத்தியாயம் மூன்று :

இன்றைய நிகழ்வுகள் :

அந்த கைதி இவன் சொன்னதையும் செய்வான் சொல்லாததையும் செய்வான் என்று பயத்தோடு பார்த்துக்கொண்டு இருக்க, எழில் வேந்தனை அழைத்துக்கொண்டு உள்ளே சென்ற ரமணன்,

அங்கே இருந்த கமிஷனர் சேரில் அமராமல், சோபாவில் அமர்ந்து, உரையாடலை துவங்கி, அவனிடம் தனக்கு தேவையான விவரங்கள் வாங்கிய பிறகு, மரியாதை நிமித்தம் இரண்டொரு வார்த்தை பேசி முடிக்க, எழில் பிறகு வருவதாக கூறி விடைபெற, இவனை பார்க்க நிறைய பேர் வர ஆரம்பித்தனர்.

அங்கே இருந்த இன்-சார்ஜிடம் பத்திரிக்கையாளர்கள் யார் வந்தாலும் மரியாதையாக பேசி, “வெங்கட ரமணன் அவங்களே தனியா பிரஸ் மீட் இன்னும் ரெண்டு மூணு நாள்ல ஆரேன்ஜ் பண்ணுவாங்கன்னு சொல்லுங்க. எந்த கடினமான வார்த்தைகளையும் உபயோகிக்க வேண்டாம்!”, என்று கூறினான்.

எல்லோரையும் அவரவர் இடத்தில் இருக்குமாரு பணித்து, இவனே சென்று சந்தித்தான். எல்லோரிடமும் இரண்டொரு அளவான வார்த்தைகள் அளவளாவ, அதை திரும்ப யாராலும் செய்ய முடியவில்லை. அவன் கேட்பதற்கு மட்டுமே பதிலளிக்க முடிந்தது.  

எல்லோருக்கும் இதுவே ஒரு ஆச்சர்யம்!! ஏனென்றால் எந்த உயர் அதிகாரி வந்தாலும் இவர்கள், அதிகாரியை சென்று பார்ப்பது தான் வழக்கம். அதிகாரிகளும் அதைத்தான் விரும்புவர். ஆனால் இவன் அந்த முறைமைகளை எல்லாம் விரும்பவில்லை.

இவனே சென்று எல்லோரையும் சந்தித்தான். அதில் ஒரு ஸ்நேகபாவத்தை அவன் காட்டினான் இல்லை. ஒரு கண்டிப்பு இருந்தது. அவனாக இப்படி! அப்படி! என்று எந்த ரூல்ஸ்ம் பேசவில்லை, கேள்வியும் கேட்கவில்லை!. எது எப்படி இருக்கிறது என்ற கணிப்பை மட்டுமே செய்தான்.

எல்லோரையும் பார்த்தது மட்டுமில்லாமல், கட்டிடத்தையும் சுற்றி பார்த்தான். இது அத்தனையும் செய்யும் போது அங்கே, இங்கே, நடக்க இருக்க, அப்போதெல்லாம் அவன் அந்த விசாரணைக் கைதியை பார்த்த பார்வை, கைதியினுள் மெதுவாக பயத்தை அதிகரித்து கொண்டே இருக்க, அந்த பயம் அவன் கண்களில் நன்றாக தெரியும் வரை ரமணன் விடவில்லை.

வந்தது முதல் மதியம் வரை இதே வேலையில் இருந்தான். பிறகு உணவை தருவித்து உண்டு கொண்டு இருக்கும் போது தான் சென்னையை தொட்டது முதல் அணைத்து வைத்திருந்த தொலைபேசியை உயிர்பித்தான்.

அவன் உயிர் கொடுக்க காத்திருந்த அது…………… அதனுடைய தொல்லை கொடுக்கும் வேலையை செய்ய……………… அதில் வரிசையாக மிஸ்டு கால் அலெர்ட் வர ஆரம்பித்தது.

அவசரப்படாமல் மெதுவாக உண்டு முடித்தான். உண்டு முடித்து கால்களை பார்க்க…………… அன்னௌன் நம்பரில் இருந்து சில கால்கள் வந்திருக்க, பல கால்கள் அவனுடைய அன்னையிடமிருந்து வந்திருந்தது. இன்னும் பல ராம் பிரசாத்திடம் இருந்து வந்திருந்தது.

பெயரிடப்படாமல் வந்திருந்த கால்களை இவனாக அழைத்து பேச ஆரம்பிக்க, அனேக அழைப்புகள் அவன் மும்பையிலிருந்து சென்னை மாற்றல் விஜயம் குறித்தே இருக்க எல்லாவற்றையும் பேசி முடித்தான்.

அதில் ஒன்று கமிஷனர் அழைப்பு, தான் சில சொந்த வேலைகளின் காரணமாக மருத்துவ விடுப்பில் செல்வதால் அவனை சார்ஜ் எடுக்குமாறு கூறி……………. எல்லா விவரங்களும் தான் எஸ்.பி யிடம் தெரிவித்து இருப்பதாகவும் கூறினார்.

தற்போது அவரை தானும் இல்லாத…….., ரமணனும் இன்னும் பொருப்பெடுக்காத காரணத்தால், அமைச்சகத்தில் ஒரு மீட்டிங்கிற்கு செல்ல பணித்துள்ளதாக கூறினார்.

அவருடைய ஷேம லாபங்களை விசாரித்து முடித்து, போனை அனைக்க, அது உடனே மறுபடியும், “என்னை எடு” என்று அழைக்க துவங்கியது. பார்த்தால் அது “ராம் பிரசாத் காலிங்”, என்றது, இன்னும் அதனை எடுக்காமல் விட்டால் நேரில் வந்து நிற்பான் என உணர்ந்து, எடுத்து “ஹலோ”, என்றான்,

இவன் குரல் கேட்ட அடுத்த நிமிடம், “ஹாப்பி டு ஸீ யூ பாக் இன் சென்னை”, என்றான் ராம். கேட்ட ரமணன் அமைதியாகவே இருந்தான். “ரமணன் இருக்கியா”, என்று ராம் கேட்க…………. 

“நினைச்சத சாதிச்சிட்டீங்க!……………, எப்படியோ ஏதேதோ செஞ்சு என்னை வரவெச்சிடீங்க. எனக்கு தெரியும்! கமிஷனர் சொன்ன சொந்த வேலையின் காரணமாக மெடிகல் லீவ் நீங்க உருவாக்குனதுதானே ராம் அண்ணா?“, என்றான்.

அதற்கு பதிலளிக்காத ராம், “நீ இன்னும் இந்த அண்ணாவ விட மாட்டியா”, என அவன் கேட்க…………………….,

இந்த முனையில் அவனுக்கு மௌனமே பதிலாக கிடைத்தது, ராமிற்கு தெரியும் இதற்கு பதில் வராது என்று. தெரிந்தாலுமே ஒவ்வொருமுறையும் இந்த கேள்வியை ராம் பிரசாத் கேட்காமல் விட்டதில்லை.

“சரி சொல்லு, எப்போ வீட்டுக்கு வற்ர”, என்றான் ராம்.

“வரணுமா என்ன?”,

“ப்ளீஸ் ரமணன்! ஒரு வாய்ப்பு குடு! எங்களுக்காக வேண்டாம் உனக்காக” என்றவன் குரலில் எதிர்பார்ப்பு மேலோங்கி நிற்க, இன்னுமே எதையும் தள்ள முடியாது என்றுனர்ந்தவனாக,

எனக்கு இப்போதைக்கு இங்க வேற வீடு கிடையாது அண்ணா, வீடு அலாட் ஆகவும் நாளாகும்னு எனக்கு தெரியும், நீங்க அலாட் ஆக விடமாட்டீங்கன்னு தெரியும், இங்க என்னோட இன்னைய வேலை எப்போ முடியும்னு தெரியாது! முடிஞ்சதும் வர்றேன் என்றவன் மேலே ராம் எதுவும் பேசும்முன்னே போனை கட் செய்தான்.

தன்னுடையது சிறிதும் மரியாதையில்லாத நடத்தை என்று தெரிந்தவனாக, சிறிது வருடங்களாக தான் இப்படி மரியாதையில்லாதவனாக மாறிவிட்டதை உணர்ந்தவனாக…………. வைத்தவன், கடமை அழைப்பதை உணர்ந்தவன், இன்னும் அம்மாவிடம் பேசாததை நினைவில் வைத்து அவர்களை அழைக்க…………….

“அம்மா!”, என்று இவன் அழைக்கும்முன்னரே,

“ஏன் ரமணா நீ இப்படி போனை ஆப் பண்ணி வைக்கிற? பேச இஷ்டமில்லைன்னா கட் பண்ணு! அம்மா எதுவும் நினைச்சுக்க மாட்டேன். ஆனா இப்படி ஆப் பண்ணாத! நீ மறுபடியும் என்னை கூப்பிடறவரைக்கும் என் உயிர் என்கிட்ட இருக்கறதில்லை”, என்று அவர் பொரிந்தார்.

அதில் கோபத்தை விட வருத்தமே மேலோங்கி இருக்க, “சாரி அம்மா! இனிமே இப்படி பண்ணாம இருக்க முயற்சி பண்றேன்”, என்றான்.

“இன்னைக்கு ஏன் திடீர்ன்னு இந்த ச்விச் ஆப் ரியாக்ஷன்! என்ன ஆச்சு?”, என்றார் .

“ஐ அம் இன் சென்னை மா”,

“ஒஹ்!!”, என்று அவர் நிறுத்த, அவர் மேலே எதுவும் பேசும் முன், அம்மா! சாப்பிடறதுக்கே நிறைய நேரம் எடுத்துட்டேன். இன்னைக்கு காலைல தான் வந்தேன். இன்னும் சார்ஜ் எடுக்கலை. மேலதிகாரி யார் கிட்டயும் இன்னும் ரிப்போர்ட் பண்ணலை. அப்புறம் கூப்பிடட்டுமா”, என்றான். 

“சரி!!”, என்று ஒற்றை வார்த்தையில் முடித்து அவர் போனை வைத்துவிட்டார்.

இவன் எதையும் யோசிக்க விரும்பாதவனாக, விசாரணை கைதிய அழைத்து வர சொன்னான்.

விசாரணைக் கைதியை அழைத்துக்கொண்டு அவனோடு இரண்டு சப் இன்ஸ்பெக்டர்கள், இரண்டு கான்ஸ்டபள்கள் என்று ஒரு கும்பலே வர,

நான் பார்த்துக்கறேன், நீங்க போங்க”, என்றான் அவர்களை பார்த்து, சார் தனியா இவனோடயா”, என்று ஒரு கான்ஸ்டபள் இழுத்தார்.

ஏற்கனவே இங்க எப்.ஐ.ஆர் போடறதுக்கு முன்னாடி ஒரு தடைவை இங்கயே அடிதடில இறங்கியிருக்கான் சார். நாங்களும் இருக்கோம்”, என்றார்.

“நான் பார்த்துக்கறேன்! நீங்க இவனை என்கிட்ட விட்டுட்டு, வேற வேலை பாருங்க”, என்றான் மறுபடியும்.

“சொன்ன கேட்ககறாங்களா, எதுக்கு தேவையில்லாம ரிஸ்க் எடுக்கணும்”, என்று ஆளுக்கொன்றாக அவரவர்களுடைய வாய்க்குள்ளேயே இவன் காதில் விலாதவாறு, முனுமுனுத்துகொண்டு போனர்.

அவர்கள் செல்லும் வரை அமைதியாக இருந்தவன், எழுந்து போய் சுற்றி ஒரு முறை யாரும் இருக்கிறார்களா என்று பார்த்து வந்தான், வாயிலில் இரு கான்ஸ்டபள் நிற்க, “நீங்க அந்த பக்கமா போய் நில்லுங்க”, என்றவன்,

அவர்கள் அந்த இடத்தை விட்டு அகலும் வரை பார்த்துக்கொண்டு இருந்து, பிறகே உள்ளே வந்தான். இந்த முஸ்தீபுகளை பார்த்த கைதிக்கு பயம் அதிகரித்தாலும் வெளியே காட்டாமல் இருக்க பெரு முயற்சி செய்து கொண்டிருந்தான்.

வந்தவன், கைதியிடம், “உன் பேர் என்ன?”, என்றான்,

“சுப்ரமணி”, என்றவனிடம், “சுப்ரமணி போய் நம்ம பேசறத யாராவது கேக்கராங்களா பார்த்துட்டு வா!”, என்று அவனையே அனுப்பினான்.

அவன் எழுந்து போய் பார்த்து வந்ததும்,

“யாரும் நம்ம பேசறதை கேக்கலை, நீயே பார்த்துட்ட, இப்போ சொல்லு என்ன? எதுக்கு? உன்னை இங்க கூட்டிட்டு வந்திருக்காங்க?, உன் மேல என்ன அலிகேஷன்?, அதாவது என்ன குற்றச்சாட்டு? என்று அவனை யோசிக்க விடாதவாறு கேள்விகளாக அடுக்கினான்.

அவன் என்ன இவன் கேட்கிறான்? என்ன சொல்வது? என்பது போல் முழிக்க,

“உன்னை எதுக்கு இங்க விசாரணைக்கு கூட்டிட்டு வந்திருக்காங்க”, என்றான் மறுபடியும்.

அந்த கைதியின் கேஸ் விவரங்களை படித்துக் கொண்டே தான் கேள்விகளை  அடுக்கினான்.

உண்மையை சொல்பவன் எத்தனை முறை எப்படி மாற்றி மாற்றி கேட்டாலும் ஒரே பதிலை தான் சொல்வான். சிறிது தடுமாறினாலும் மாற்றி உரைத்தாலும் அவன் உண்மையை உரைப்பதை கண்டு கொள்ள முடியும். ஏனென்றால் அவன் உண்மையை, நடந்ததை கூறுவான்.

ஆனால் பொய் சொல்பவன் எப்படி தான் தேர்ந்தவனாக இருந்தாலும், மறுபடியும் மறுபடியும் கேள்விகளை மாற்றி மாற்றி கேட்கும் போது தடுமாறி விடுவான்.

இதனை கருத்தில் கொண்டே கேள்விகளை அடுக்க ஆரம்பித்தான் ரமணன். 

“ஒரு பஞ்சாயத்து பண்ண போனேன்! அங்க கொஞ்சம் அடிதடியாகி, ரெண்டொரு வெட்டு குத்து ஆகிடிச்சி, அதுல முதல் குற்றவாளியா என்னை சேர்த்து இங்க கொண்டு வந்துட்டாங்க”, என்றான்.

“யாராவது இறந்துட்டாங்களா”, என ரமணன் கேட்க,

“அதெல்லாம் இல்லைங்க”, என்றான்,

“அப்போ யாராவது சீரியஸா இருக்காங்களா”,

“இல்லைங்க”, என்றான்.

“கைகால் போய்டிச்சா”, அதற்கும் “இல்லை” என்றான்.

“அப்புறம் என்ன ஆச்சு!”

“கொஞ்சம் காயம் ஹாஸ்பிடல்ல இருக்காங்க”, என்றான்,

“இதெல்லாம் உனக்கு எப்படி தெரியும்”,

இப்போது கைதி தடுமாற ஆரம்பித்தான்.

“கேட்டு தெரிஞ்சிகிட்டேனுங்க”, என்றான்.

“யாரை கேட்டு தெரிஞ்சிக்கிட்ட?”,

இதற்கு சுப்ரமணி என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் தடுமாறினான்.

“ நேத்தைக்கு முதல் நாள் நீ அடிதடி பண்ணிட்டு…….. எங்கயும் போகலை, போலீஸ் வரவரைக்கும் அங்கயே தான் இருந்திருக்க, தகவல் தெரிஞ்சு போலீஸ் வந்தவுடனே உன்னை அரஸ்ட் பண்ணிடாங்க, உடனே இங்க கூட்டிட்டு வந்திருக்காங்க”.

“நீ இங்கயும் கலாட்டா பண்ணி உன்னை விசாரிக்க விடாம வேணும்னே உடனே எப்.ஐ.ஆர் போட வச்சிருக்க, நேத்தே கோர்ட்ல ஆஜர் பண்ணி ரிமாண்ட் பண்ணி, மறுபடியும் இன்னைக்கு விசாரணைக்கு பெர்மிஷன் வாங்கி கொண்டு வந்திருக்காங்க. அதுக்குள்ள உனக்கு அந்த அடிபட்டவங்களோட நிலைமை எப்படி தெரியும்”.

“உன்னை யாரும் வந்து பார்த்த மாதிரி தெரியலையே. நீயே பிளான் பண்ணி வேணும்னே அரெஸ்ட் ஆகியிருக்கியா?”, என்றான் அவனையே கூர்மையாக பார்த்தபடி, சாதாரணமாக ஆரம்பித்து இப்படி இங்கு அவன் வருவான் என அந்த கைதி எதிர்பார்க்கவில்லை.

அதுதான் நடந்தது. சுப்பிரமணி வேறு ஒரு கேசில் மாட்டாமல் இருக்க வேண்டுமென்றே செய்தது தான் இது. இது ஒன்றுமில்லை. நிரூபனமானாலும் ஒன்றிரண்டு வருடத்தில் வெளியே வந்து விடலாம். ஆனால் அதில் மாட்டினால் சிரமம்.

ரமணன் அவனுடைய முகத்தையே பார்த்தவாறு அவனுடைய எண்ணங்களை படிக்க முயன்று கொண்டிருந்தான்.

“இல்லை! இல்லை! நான் வேணும்னு எதுவும் பண்ணலை. அது தானா தான் நடந்தது!”, என்றான் சுப்பிரமணி. “என்ன நடந்தது?”, என்று மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்தான் ரமணன்.

கைதி அமைதியாக இருக்க முயற்சிததெல்லாம் வீணாக ஆரம்பித்தது. சிறிது சிறிதாக பதட்டப்பட ஆரம்பித்தான்.

ரமணன் விடாமல் கேள்விகளை கேட்க, முன்பு என்ன சொன்னோம் என்று நினைவில்லாமல் மாற்றி மாற்றி பதில் சொல்ல ஆரம்பித்தான்.

மூன்று மணி நேரம் விடாமல் ரமணன் கேள்விகளால் அவனை துளைத்தெடுக்க, கைதிக்கு என்ன சொல்கிறோம் என்பதே ஞாபகமில்லை.

சப்-இன்ஸ்பெக்டர் என்னவோ ஏதோவென்று வந்து, வந்து அரை மணிக்கொருமுறை எட்டி, எட்டி பார்த்து போய் கொண்டிருந்தனர்.                    

ஆனால் இருந்த இடத்தை விட்டு ரமணன் அசைய வில்லை, கைதியையும் அசைய விடவில்லை.

எல்லாரும்………. “என்னடா இது? ஒரு சாதாரண கேசிற்கு எதற்கு இப்படி?”, என்று புரியாமல் தலையை உடைத்து கொண்டிருந்தார்கள்.

எஸ்.பி வந்தவர் உள்ளே நுழைய போக, ரமணனுடைய பார்வையே “வராதே” என……….., 

அவருமே வெளியே நின்றார். கேள்விகளாலேயே அந்த கைதியை ஏறக்குறைய அரை மயக்க நிலைக்கு போக வைத்திருந்தான்.

பார்த்த போலீசார்கள் அசந்து போனார்கள். கைதியின் மேல் கையை வைக்காமலேயே இந்த பாடு படுத்தி கொண்டு இருக்கிறானே, இவன் கையை வைத்தால்?………….. 

வந்த முதல்நாள், இன்னும் பதவி கூட ஏற்காத நிலையிலேயே இப்படி என்றால், இன்னும் நாளையிலிருந்து என்னென்ன வருமோ என்று கைதிகளை விட அவன் சக ஊழியர்களே ஆளுக்கு ஆள் கதைக்க ஆரம்பித்தார்கள்.

 

Advertisement