Advertisement
அத்தியாயம் இருபத்திமூன்று:
இன்றைய நினைவுகள்
ரமணன் வராவிடம் சொல்லி கொண்டு இறங்கிய பிறகு, சிறிது நேரம் அங்கேயே நின்று கொண்டிருந்தான்.
கண்கள் மட்டும் சுற்று புறத்தை அளவெடுக்க, அவன் அருகில் ஒரு கார் வந்து நின்றது.
காரை பார்த்தவன் ஏறி அமர்ந்தான்.
உள்ளே இருந்தவன், “என்ன அண்ணா நேத்து சென்னை வந்து இருக்கீங்க! எனக்கு சொல்லவேயில்லை?”.
“நானா தெரிஞ்சிட்டு போன் பண்ணற வரைக்கும், நீங்க என்னை கூப்பிடவேயில்லை”, என்று குறைபட………..
“என்னடா பண்ணட்டும், நேத்து வீட்டுக்கு போறவரைக்கும் எனக்கு வராவை பார்க்கிற டென்ஷன். அங்கே போய் ஒரு ரெண்டு மணிநேரத்துளயே ஜெயில் கலவரம்”.
“நான் என்ன பண்ணட்டும். காலையில எழுந்ததுல இருந்து உன்னை கூப்பிடனும்னு நினைச்சிட்டு தான் இருந்தேன். உனக்கு கொஞ்சம் வேலை வெச்சிருக்கேன். செய்யரியா”, என்றான்.
“என்ன கேள்வி அண்ணா இது? நீங்க சொல்லி நான் செய்யாம இருக்கிறதா! சொல்லுங்க”, என்றான்.
சொன்னவன் அறிவழகன். ஒரு ஆதரவில்லாத அன்னைக்கு பிறந்து, அவளையும் சிறு வயதிலேயே இழந்து, வழி தடுமாறி கொண்டிருந்த நேரத்தில், ரமணனிடம் புனாவில் சிக்கினான்.
அப்பொழுது அறிவழகன் இருபது வயது இளைஞன், போதையின் பிடியில் சிக்கி சின்னா பின்னமாகி கொண்டிருந்தான்.
போதைக்கு பணம் வேண்டி, புனாவில் சுற்றுலா வந்த ஒரு தம்பதியை அடித்து, அவர்கள் வைத்திருந்ததை இவனும் இவன் நண்பர்களும் எடுத்து கொண்டு ஓட…………,
அந்த தம்பதிகளின் வலியின் ஓலம் அவனை அசைக்க, நண்பர்களை விட்டு அந்த தம்பதிகளை காப்பாற்றி ஹாஸ்பிடலில் சேர்க்க போய் போலீசிடம் மாட்டிக் கொண்டான்.
அந்த பையனிடம் இருந்த ஏதோ ஒன்று அவனை காப்பாற்ற ரமணனை தூண்ட, அவன் தமிழ் என்பதும் ரமணனுக்கு கூடுதல் ஈடுபாட்டை தர, அவனை கேசில் மாட்ட வைக்காமல் விடுவித்து, சென்னைக்கு ஒரு வேலை தேடிக் கொடுத்து அனுப்பினான்.
அறிவும் அந்த உதவிக்கு தகுதியானவனே, தன்னுடைய பழக்கத்தில் இருந்து முயன்று மருத்துவர் மற்றும், ரமணன் உதவியுடன் வெளிவந்தான்.
ஆனால் வேலை தனக்கு ஒத்துவரவில்லை என்றான்.
ரமணன் தன் சொந்த செலவில் ஒரு மெக்கானிக் செட் வைத்து கொடுக்க, அதை நன்கு பற்றி கொண்டவன், வாழ்கையில் முன்னேறி கொண்டிருந்தான்.
அவர்களுடைய பழக்கம் யாருக்கும் தெரியாது, அது ரமணன் பணியில் சேர்ந்த புதிதில் ஆரம்பித்த பழக்கம். ராமநாதனுக்கு மட்டும் தெரியும். . அவருக்கு தெரியாமல் ரமணன் எதுவும் செய்வதில்லை.
தனக்கு ரகசியமாக, அலுவலகம் மூலம் அல்லாமல் செய்ய வேண்டிய அத்துணை வேலைகளையும் அறிவழகன் மூலமாக தான் வெங்கட ரமணன் செய்வான்.
அவனிடம் தான் நேற்று கைது செய்தவர்கள் பற்றிய விவரங்களை கூறி உண்மையா, பொய்யா என்று கண்டறிய சொன்னான்.
“எத்தனை நாள் வேணும் அறிவு”, என………..
“போலிஸ் வேற ஒரு பக்கம் விசாரிச்சட்டு இருக்கும். அவங்களுக்கு தெரியாம செய்யனும். உங்களுக்கு எப்போண்ணா வேணும்?”,
“எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம்”, என்றான்.
“இன்னைக்கு நான் வேலையை ஆரம்பிச்சுடரேன். நம்ம பசங்க செஞ்சிடுவாங்க. அதெல்லாம் உஷாரு”. அவனுக்கு நிறைய தொடர்புகள். தானாக வளர்த்துக்கொண்டிருந்தான்.
வெங்கட ரமணன் அவனிடம் சிறிது பேசிக்கொண்டிருந்து, பின்பு ஆபிஸ் சென்றான்.
கிளம்பும் முன் பாக்கெட்டில் கை விட்டு, இருந்த பணத்தை அப்படியே ரமணன் எடுத்து கொடுக்க……… “வேண்டாம் அண்ணா என்கிட்ட இருக்கு”.
“உன்கிட்ட எவ்வளவு இருக்குன்னு எனக்கு தெரியும். இதுக்கு தேவை இருக்காதுன்னு தெரியும்”.
“நான் உன்னை பார்த்தேன். பணம் கொடுக்காம வந்தேன்னு, எங்கப்பாவுக்கு தெரிஞ்சது, அவ்வளவு தான். உனக்கு வேண்டாம்னா நீ அவர் கிட்ட சொல்லு”,
“குடுங்கண்ணா, இது பத்தல்லைன்னா இன்னும் கேட்கிறேன்”, என்று சிரிப்போடு விடை கொடுத்தான்.
அங்கே ஆபீசில் சிட்டி லிமிட்டில் இருக்கும், எல்லா ஸ்டேஷன் இன்சார்ஜெஸ், இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர், மற்றும் மற்ற அதிகாரிகளையும் கூப்பிட்டிருந்தான், மீடிங்கிர்க்காக…………
அவர்களோடு மீட்டிங்…………,
அவன் கொடுத்த இன்ஸ்ட்றக்ஷன்ஸ் கேட்டு அனைவரும் மண்டையை உடைத்து கொண்டிருக்க……….
எதுவும் அவன் செயல்பாடுகளை கட்டு படுத்த போவதில்லை என்று உணர்ந்தவர்களில் சில பேர், “எப்போடா இவனோட ட்ரான்ஸ்பர்”, என்று நினைக்க துவங்கினர்.
அன்றைய நாளின் வேலை முடிந்து, வீட்டிற்கு வந்த போது…….. வீட்டையே ரோஹித் பிரசாத்தும், ஸ்ருதியும் அமர்களபடுத்தி கொண்டிருந்தனர் அவர்கள் ரகளையால்.
சமாளிக்க முடியாமல் கல்பனா திணறிக் கொண்டிருக்க…… அதை பார்த்து ரசித்து கொண்டிருந்தாள் வரா.
இவனை பார்த்தவுடனே, “பார்த்தியா உன் பொண்டாட்டியோட அழகை”, என்றாள் எரிச்சல் மறையாத குரலில் கல்பனா.
“என் பொண்டாட்டி எப்பவுமே ஆழகு தான்!”, என்று மனதிற்குள் சொல்லிகொண்டவன்,
வெளியில், “என்ன பண்ணினா”, என்றான்.
“என்ன பண்ணினாளா? ஒரு வார்த்தை அவ சொன்னா இவங்க ரெண்டு பேரும் அமைதியா உட்கார்ந்துடுவாங்க. சொல்ல மாட்டேங்கறா”, என்றாள் சலிப்பாக.
அவன் வராவை பார்க்க, “அண்ணி எப்போவும் அப்படிதான்”, என்றாள் அவனுக்கு மட்டும் புரியும்படியாக………..
“கல்பனாவை டென்ஷன் செய்யாதே”, என்று கண்களாலேயே வரமஹாலக்ஷ்மிக்கு ரமணன் கட்டளையிட,
“குட்டிம்மா உட்காருங்க” என்ற ஒரு அதட்டல் வேலை செய்ய, சோபாவில் கால் தூக்கி வைத்து அமர்ந்தாள் ஸ்ருதி.
“ரோஹித் இங்க வாங்க”, என்று அவனை அழைக்க, அத்தையினிடத்தில் வந்து அவள் அருகில் அமர்ந்தான்.
ஸ்ருதி, ரோஹித் முகத்தை பார்க்க……. ரோஹித் அத்தை முகத்தை பார்க்க……….. அவள் ரமணன் முகத்தை பார்த்தாள்.
அவள் எதிரில் வந்து அமர்ந்தவனிடம், “எவ்வளவு நேரம் குழந்தைங்க இப்படி உட்காருவாங்க, விளையாட தான் செய்வாங்க. ரகளை தான் வரும். நம்மளும் இப்படி தானே இருந்திருப்போம்”.
“அண்ணிக்கு எல்லாமே கரக்டா டைம்க்கு நடக்கணும். டைம்க்கு சாப்பிடனும், டைம்க்கு தூங்கணும், டைம்க்கு எந்திரிக்கணும். இதெல்லாம் குழந்தைங்க தினமும் ஒரே மாதிரி செய்ய முடியுமா”, என்றாள்.
“தினமும் இப்படி தான் இருப்பீங்களா”, என்றான்.
“ம்கும், என்னை திட்ட மாட்டாங்க. இன்னைக்கு நீங்க இருக்கீங்க இல்லையா, அதனால கம்ப்ளைன்ட்”, என்றாள்.
“என்ன சொல்லறா உன் பொண்டாட்டி”, என்றபடி கல்பனா கேட்டு கொண்டே அருகில் வர………..
ரோஹித் அத்தையை பார்த்து கண் சிமிட்டினான். அதை ரமணனும் கவனித்தான், கல்பனாவும் கவனித்தாள், “தோ பாரு, என்னவோ சொல்றாங்க”, என்று மறுபடியும் கல்பனா குற்றபத்திரிக்கை வாசிக்க……..
“என்ன ரோஹித்”, என்று ரமணன் கேட்க……
“ஷ்”, என்று ஸ்ருதியும் வராவும் ஒரே மாதிரி சொல்ல, “சொன்னால் நம்ம இப்போ வெளில போலாம்” என்று ரமணன் ரோஹிதிர்க்கு ஆசை காட்ட………….
“நீங்க ரொம்ப நல்லவங்கன்னு சொன்னாங்க மம்மி”, என்று அவர்களின் உச்சரிக்கும் டயலாக் சொல்ல………
“பாரு, பாரு, எப்போ பார்த்தாலும், இந்த பில்ம் டைலாக். எட்டு வயசு பையன் பேசறதா இது”, என்று கோபப்பட……..
“கல்பனா இதெல்லாம் தவிர்க்க முடியாதது. எல்லா குழந்தைங்களும் இப்போ பேசறாங்க, நீ இதுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காத. காலபோக்குல மறந்துடுவாங்க. நம்ம செய்ய வேண்டாம்னு சொன்னா, அப்போ தான் அதிகமா செய்ய தோன்றும்”, என்றான்.
“எப்படிப்பா இப்படி புருசனும் பொண்டாட்டியும் ஒரே மாதிரி பேசறீங்க”, என்றாள்.
“ஏன் வரா நம்ம ஒரே மாதிரி பேசறோம்”, என்று கேட்டு வராவை சீண்டினான்.
“அதுவா………… நம்ம புருசன் பொண்டாட்டி ஆனதுக்கு அப்புறம் தான் நம்மை தெரியாது. அதுக்கு முன்னாடியே ரொம்ப தெரியும் இல்லையா?”, என்று பதிலுக்கு குரலில் கோபம் ஒலிக்க……….
திடீரென்று எதற்கு இவ்வளவு கோபம் என்று கல்பனாவுக்கு புரியவில்லை.
எழுந்து போய்விட்டாள் வரமஹாலக்ஷ்மி.
“என்ன பண்ணினேன், தப்பா ஏதாவது சொல்லிட்டேனா”, என்றாள் கல்பனா.
“இது உன்கிட்ட இல்லை கல்பனா. என்கிட்ட. ஆனா உடனே மறந்துடுவா, உனக்கு தெரியாததா”, என்று இவர்கள் பேசிக்கொண்டு இருக்கும் போதே, அத்தையை தேடி ரோஹித்தும் ஸ்ருதியும் ஓடினர்.
“அவளோட நேரம் புல்லா இவங்களோட தான்”.
“சண்டை போடணுமா இங்கயே போட்டுக்கங்க. இல்லையா நீ எங்க போகிறாயோ அங்க கூட்டிட்டு போ! விட்டுட்டு போகாத. உங்களுக்கு எப்படியோ, என்னோட வீட்டுக்காரர்…….. அவருக்காக ப்ளீஸ். அவருக்கு அவரோட பெரிய குழந்தையே வரா தான்” என்றாள் உணர்ச்சி மயமான குரலில்.
பேசும்போதே ராஜேஸ்வரி வர, பேச்சை மாற்றி வேறு பேசத்துவங்கினர்.
அத்தியாயம் இருபத்தி நான்கு
அன்றைய நினைவுகள்:
ஸ்ரீதர்………. வரா காரில் ஏறி அமர்ந்ததும், வேகமாக காரை எடுத்தான்.
“என்ன ஸ்ரீதர் செய்யற நீ”, என்று பதட்டமாக வரா வினவ………..
“நம்ம ஒரு இடத்துக்கு அவசரமா போகணும்”, என்றான்.
“அவசரமா எங்கே போகணும், எதுவா இருந்தாலும் காரை நிறுத்து! நான் வரணும்னா ராம் அண்ணா கிட்ட சொல்றேன். கூட்டிட்டு வருவாங்க! நான் உன்னோட தனியா வர்றது தெரிஞ்சா அப்பா கோபிப்பாங்க. உங்க வீட்லயும் ப்ரோப்ளேம் ஆகும்”, என்றாள்.
“ப்ளீஸ் வரா அமைதியா வா”, என்றான் கெஞ்சலாக.
“நாம எங்கே போகிறோம். அதையாவது சொல்லு!”, என்றாள் எரிச்சல் மறையாத குரலில்.
சிறிது யோசித்தவன், உண்மையை மறையாமல், “நாம கல்யாணம் பண்ணிக்க போறோம்”, என்றான்.
“என்ன?”, என்றவள் சிறிது நேரம் பேசவில்லை. அவன் கூறுவது உண்மை தானா என்று அவன் முகத்தை ஆராய முகத்தின் தீவிரம் உண்மை என்று காட்டியது.
இத்தனை நாள் அவள் பார்த்த ஸ்ரீதருக்கும், இன்று பார்க்கும் ஸ்ரீதருக்கும் வித்தியாசமாக அவளுக்கு தோன்றியது.
“என்ன ஸ்ரீதர் உளறல் இது? முட்டாளா நீ! என்னை கல்யாணம் பண்ணிக்க உங்க அப்பா சம்மதம், எங்க அப்பா சம்மதம், தேவையில்லைன்னு நீ நினைத்தாலும், என் சம்மதம் தேவைன்னு தோணலையா உனக்கு?”,
“முதல்ல நீ காரை நிறுத்து! எதுவா இருந்தாலும் பேசலாம், நிறுத்து!”, என்று கோபத்தில் கத்தினாள்.
“எப்படி என்னிடம் கேட்காமல், இவன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்வான். நேற்று தானே காதல் சொல்லி, திருமணம் பேச வா என்று சொன்னேன், எல்லாம் என்னால் தான் என்று தன்னையே மனதிற்குள் திட்ட துவங்கினாள்”.
“அதற்குள் இப்படியா”
கார் எதற்கும் நிற்காமல் சென்றது.
“இன்னைக்கு நம்ம கல்யாணம் நடக்கணும் வரா, இல்லைனா எனக்கு என் அத்தை பொண்ணோட நிச்சயம் பண்ணிடுவாங்க”, என்றான்.
“அது உன் ப்ராப்ளம், நீ அங்க சண்டை போடறதை விட்டுட்டு, என்னை வந்து இப்படி எங்க அப்பாக்கு தெரியாம கூட்டிட்டு போவியா…….. நிறுத்து ஸ்ரீதர்”.
“என் ப்ரோப்ளம் வேற, உன் ப்ரோப்ளம் வேறயா”, என்ற அவனின் கேள்விக்கு அவளுக்கு பதில் சொல்ல தெரியவில்லை.
அவனே மறுபடியும், “எதுவா இருந்தாலும் கல்யாணம் முடியட்டும் பேசிக்கலாம் வரா”,
“நான் கல்யாணமே முடியாதுன்னு சொல்றேன். நீ முடியட்டும் பேசலாம்னா…………?”
வெறி பிடித்தவள் போல், “நிறுத்து!!!!!!!!!!!!”, என்று கத்தினாள்.
“எங்க அப்பாக்கு தெரியாமா, நான் எதுவும் பண்ணமாட்டேன். நான் நேத்து கூட எங்க அப்பாக்கிட்ட வந்து பேசுங்கன்னு தான் சொன்னேன்.”
நீ என்னவோ பேசிக்கொள். நான் நிறுத்த மாட்டேன், என்பது போல் கார் இன்னும் வேகமெடுக்க துவங்க………….
வராவிர்க்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.
வெளியில் ஐந்து நிமிஷம் நின்று பேச என்று வந்ததால், செல் போனும் எடுத்து வரவில்லை. காரை சென்ட்ரல் லாக் செய்திருந்தான். கதவை திறக்க முடியவில்லை.
கார் போய் கொண்டே இருந்தது. கார் கண்ணாடியை இறக்க முடியவில்லை. கத்தினாலும் வெளியே கேட்காது.
வராவிர்க்கு தைரியம் போய் அழுகை வர ஆரம்பித்தது.
“நிறுத்து ஸ்ரீதர்……… அப்பா தேடுவாங்க. அண்ணா பொறுமையா இருக்க சொன்னான். நிறுத்து ஸ்ரீதர்………”, என்று அவள் தேம்ப துவங்கினாள்.
ஸ்ரீதருக்கு அவனுடைய வீட்டிலிருந்து யாராவது போன் மாற்றி மாற்றி செய்து கொண்டு தான் இருந்தனர். அவன் அதை எடுக்கவில்லை அதே சமயம் போன் ஸ்விட்ச் ஆப் செய்யவில்லை.
மெசேஜ் டோன் இரண்டு மூன்று முறை தொடர்ந்து வந்து கொண்டே இருக்க…………….
எடுத்து பார்த்தால் “varamahaalakshmi’s brother in our custody. Come home immediately” என்று அப்பாவுடன் எப்பொழுது இருக்கும் நபரிடம் இருந்து மெசேஜ் வந்திருக்க………… வரா வேறு அழுது கொண்டிருக்க, செய்வதறியாது வேகமெடுத்தான்.
என்ன செய்வது என்று புரியாமல் கால்கள் ஆக்க்லேட்டர் மிதிக்க, கார் பறந்தது.
“வேகமா போகாத ஸ்ரீதர். எனக்கு பயமா இருக்கு”, என்று வரா கத்த, கத்த, காரின் வேகம் அதிகரித்தது.
போய் கொண்டே இருந்தவன். என்ன நினைத்தானோ காரை திருப்பி வந்த வழியே வந்தான். ஆனாலும் வேகம்.
பேசி, கத்தி, கெஞ்சி, ஓய்ந்த வரா, நடப்பது நடக்கட்டும் என்று அமர்ந்திருந்தாள்.
வேகம்………
வேகம்……..
தான் யாரையோ துரத்துவது போல்……….
தன்னை யாரோ துரத்துவது போல்……….
வேகம் வேகம் வேகம்………….
அவ்வளவு வேகத்திலும் ஸ்ரீதர் சரியாக தான் போனான்.
நாம் சரியாக போனாலும் எதிரில் வருபவன் சரியாக வரவேண்டுமே.
எதிரில் எவனோ ஒருவன் தன் முன் சென்ற லாரியை ஓவர்டேக் செய்ய ரைட் எடுக்க…………
நேருக்கு நேர் மோதுவது என்பது தவிர்க்க முடியாது என்றாகி போன போது………..,
நேருக்கு நேர் மோதினால் வராவிற்கு?,
ஸ்ரீதர் தன்னை பற்றி யோசிக்கவில்லை, வராவிற்கு எதுவும் ஆகக்கூடாது என்று நினைத்தவன்,
சட்டென்று ஸ்ரீதர் வண்டியை லேப்டில் ஒடிக்க…………….
அவன் இருந்த புறம் மட்டும் மிக மோசமாக மோதியது.
மிக மிக மோசமாக மோதியது.
அது மோதிய வேகத்தில் வராவின் புறம் இருந்த கதவு திறந்து, வரா வெளியே தூக்கி எறியப்பட்டாள்.
ஸ்ரீதர் மரணத்தின் பக்கத்தில் சென்று கொண்டிருந்தான்.
உலகமே இருண்டு கொண்டு வந்தது அவனுக்கு,
முதலில் ஆழ்ந்த அமைதி.
பின்பு சுற்றி பல குரல்கள் கேட்டன. கண்ணை திறந்து கொண்டு தான் இருப்பது போல் அவனுக்கு தோன்றியது. ஆனால் கண்முன் எதுவும் தெரியவில்லை.
யாரோ அவன் பாக்கெட்டில் கை விட்டு அட்ரெஸ் தேடினர்.
யாரோ அம்புலன்சிர்க்கு போன் செய்தனர்,
யாரோ போலீசிற்கு போன் செய்தனர்,
ஆனால் இவன் வாய் மட்டும் ஓயாமல் வராவை கூப்பிட்டது.
அவளை யாரும் கவனிக்கிறார்களா தெரியவில்லையே மனது ஓலமிட்டது.
நேரம் ஓடிக்கொண்டே இருந்தது. காரின் உள்ளே சிலர் தேட……….
அவன் போனை எடுத்த யாரோ, அதை ஆராய………….
நேற்றிலிருந்து பல கால்கள், வரா என்ற நம்பருக்கு முயற்சி செய்திருந்ததால் அந்த நம்பருக்கு அழைக்க………….
அப்பொழுது தான் சிவசங்கரன் விவரம் சொல்லியிருக்க, தனக்கு இங்கே டிபார்ட்மெண்டில் யாராவது தெரிந்தவர்கள் இருக்கிறார்களா என்று அவன் யோசிக்கும் பொழுது வராவின் போன் அடித்தது.
“கால்லிங் ஸ்ரீதர்”, என்று வர, ரமணன் அவசரமாக எடுத்தான்.
எடுத்தால்……….. “இங்க ஆக்சிடென்ட் அடிபட்டு மயக்கமாகியிருக்கிறவர் போனில் இருந்து தகவல் சொல்ல கூப்பிட்டேன்”
“எங்கே………….?”, என்று வினவியவன், சிவசங்கரனிடம் வருமாறு கூறி……… இவன் அங்கே இருந்த டூவீலர் எடுத்துகொண்டு சென்றவன், சிவசங்கரனிடம் தகவல் கூறிய பின் அவர் வருவதற்காக கூட நிற்கவில்லை.
அரைமணி நேரம் ஆகும் தூரத்தை பாதி நேரத்தில் வந்தடைந்தான்.
அம்புலன்ஸ் வந்து சிறிது நேரம் ஆகியிருந்தது, போலீசும் வந்து டிராபிக் கிளியர் செய்ய ஆரம்பித்தது.
ஆனால் விபத்தில் சிக்கியவர்களை வண்டியில் இருந்து வெளியே எடுக்க முடியவில்லை.
இரண்டு வண்டிகளும் மிக வேகமாக மோதியதால் ஒன்றோடு ஒன்று ஜாம் ஆகியிருந்தது. எதிர் காரில் டிரைவிங் சீட்டில் இருந்தவனை அப்பொழுதான் மிகுந்த சிரமதிற்கிடையில் வெளியே எடுத்தனர்.
இவனை வெளியில் எடுக்க முயற்சிக்க இரண்டு கால்களும் உள்ளே மாட்டியிருந்தது.
எடுக்கும் போது ஏதாவது ஆகிவிட்டால் என்ற டென்ஷன் அங்கே இருந்த போலீசிற்கும், ஆம்புலன்ஸ் மக்களுக்கும் இருக்க போராடிக்கொண்டிருந்தனர்.
ஸ்ரீதர் நினைவை சிறிது சிறிதாக இழந்து கொண்டிருந்தான். உதடுகள், “வரா, வரா”, என்று சொல்ல, அருகில் வந்து கேட்டவர், “யாரையோ வர சொல்லறார் போல இருக்கே”, என்றார்.
அவர் அதை சொல்லும் போதே ரமணன் வந்திருக்க…………..
அவன் ஐ.டீ கார்டு அவனை நிமிடத்தில் அந்த இடத்தின் அருகில் அனுமதிக்க, உள்ளே பார்த்தால் ஒரு இளைஞன் மட்டுமே இருந்தான்.
வரா எங்கே?
“வரா எங்கே?”, என்று அவனின் அருகே சென்று கேட்க……..
கைகளால் துளாவினான் ஸ்ரீதர்………..
“வரா எங்கே?”, என்று ரமணன் கத்த……….
கைகளை எதிர்புறம் நீட்ட……… அந்த பக்கத்து கதவு திறந்திருப்பதை பார்த்தவன், அங்கே செல்ல………… ஏற்கனவே எல்லாரும் பார்த்திருந்தனர் யாரும் இல்லை.
ஆனால் அவர்களுக்கு அவனோடு ஒரு பெண் இருந்தாள் என்று தெரியாததால், தேடவில்லை.
ஆனால் ரமணனுக்கு தெரியும் என்பதால், அவளை வேறு எங்காவது விட்டுவிட்டானா, இல்லையா………. என்று திரும்பி நின்று யோசிக்க………
எதிரே வீடு கட்டடத்திற்கு கடகால் போடுவதற்காக குழிகள் இருக்க, வேகமாக சென்று அங்கே பார்த்தான். முதல் இரண்டு குழியில் இல்லை.
மூன்றாவது குழியில், நெற்றியில் இருந்து ரத்தம் வடிந்து, முகம் முழுவதும் படிந்த நிலையில் வரா மயங்கி கிடந்தாள்.
பார்த்து…….. அதிர்ந்து……….. ரமணன் ………. “வரா!!!!!!!!!!!!!!!!!” என்று அவனையறியாமல் கத்திய கத்தல், அங்கே இருந்த அத்தனை பேரின் கவனத்தையும் இந்த இடத்தை நோக்கி திருப்பியது.
அந்த சத்தம் ஸ்ரீதரின் உயிர் வரை சென்று ஒலித்தது.