Advertisement

அத்தியாயம் இரண்டு

அன்றைய நினைவுகள்

“அம்மா இன்னைக்கு அப்பா வந்துடுவாங்களா”, என்ற கேள்விக்கு, “வந்துடுவாங்க கண்ணு”, என்று பதிலளித்தாள் ராஜேஸ்வரி.

கேள்வி கேட்டவள் ராஜேஸ்வரியின் பத்து வயது மகள், வரமஹாலக்ஷ்மி. பெயருக்கேற்றார் போலவே………. ஐஸ்வர்யம்! சௌந்தர்யம்! கலைவாணியின் பரிபூரண அனுக்கரகம் என அனைத்தும் அமைய பெற்றவள். 

ராஜேஸ்வரியின் இளைய புதல்வி. மூத்தவன் ராம் பிரசாத். பிறந்து பன்னிரெண்டு வருடங்களுக்கு பிறகு பெண் வேண்டும் என்று ராஜேஸ்வரி தவமாய் தவமிருந்து பெற்ற மகள். அதனால் அதீத செல்லம், மகள் ஒன்று வேண்டும் என்று கேட்பதற்கு முன்னாள்………………… அவள் அதை பார்க்கும் பொழுதே கண் முன் நிற்கும்.

ராஜேஸ்வரியின் கணவர், சிவசங்கரன் படிப்பில்……… தொழிலில்………….. சட்டத்தை கொண்டவர். இன்று மத்திய அமைச்சர், மகள் பிறக்கும் வரை அரசியலுக்கு வரலாமா……..? வேண்டாமா……….? என்று மனக் குழப்பத்தில் இருந்தார்.

நண்பர் ஒருவரின் ஆலோசனையின் பேரில்……….. உதவியின் பேரில்…………….. துணிந்து செயலில் இறங்க…………….. இன்று மத்திய இணை அமைச்சர். அதனால் வரமஹாலக்ஷ்மிக்கு தந்தையும் அளவற்ற செல்லம்.   

உடன் பிறந்தவனை பற்றி சொல்லவே வேண்டாம். இவ்வளவு நாள் அவன் அனுபவித்த பெற்றோரின் ஏக போக செல்லத்தை பங்கு போட பிறந்தவள் என்ற sibling rivalry  சிறிதும் இல்லாமல் பெற்றோருக்கும் மேல் தங்கையை தாங்குபவன். அவன் தன் தந்தையை போலவே பெங்களூரில் உள்ள நேஷனல் லா ஸ்கூலில் சட்டம் கடைசி வருடம் பயில்பவன்.     

இப்படி அனைவரின் செல்லத்திற்கும் உரிய வரமஹாலக்ஷ்மி இயல்பிலேயே பிடிவாதமான குழந்தை. அவளுடைய அப்பா மத்திய அமைச்சர் ஆன பிறகும் தங்களது இருப்பிடமான சென்னையை மாற்றவில்லை.

அதனால் அவர் வடநாட்டிற்க்கும் தென் நாட்டிற்கும் இடையே பயணத்தை அவ்வப்போது மேற் கொள்வார். அப்போதெல்லாம் அவருடைய செல்ல மகள் தந்தை எப்போது வருவார் என்று நச்சரித்து விடுவாள். தன்னுடைய தாயை தேடும் அளவிற்கு தந்தையையும் தேடுவாள். 

இன்று காலையில் எழுந்ததில் இருந்து தன்னுடைய தந்தை எப்போது வருவார் என்று நச்சரித்து கொண்டிருந்தாள். மற்ற நாட்கள் என்றாள் பள்ளிக்கு சென்று விடுவாள். இன்று ஞாயிறு ஆதலால் தன்னுடைய தந்தையை அதிகம் தேடினாள் அவருடைய செல்லப் புதல்வி.

வீட்டிற்கு முன் இருந்த லானில் விளையாடிக்கொண்டிருந்தாள். அவர்களுடையது அடையாறு பகுதியில் காண்போரை மறுபடியும் காணத்தூண்டும் அழகுற அமைந்த பங்களா. மத்திய அமைச்சர் வீடல்லவா………………….. எப்போதும் அவரை காண நிறைய பேர் காத்திருப்பார்கள்.

அவர் ஊரில் இல்லாததால் இன்று முன்பக்கம் பார்வையாளர்கள் யாரும் இல்லாததால் சிறிது காலியாக இருக்க………… அங்கே அவள் விளையாடிக்கொண்டு இருந்தாள். வேலையாட்கள் ஐந்தாறு பேர் சுற்றி நிற்க பந்தை வீசி அவர்களை ஓடவிட்டு அதை அவர்கள் எடுத்து வருவதை பார்த்து கை கொட்டி சிரித்து கொண்டிருந்தாள்.

வயதானவர்…………….. தோட்டக்காரர். அவரையும் அதே வேலை வாங்கிக்கொண்டு இருந்தாள். தன்னுடைய அன்னை சொல்லியும் கேட்டாளில்லை. “அவரால ரொம்ப ஓட முடியாது கண்ணு, விட்டுடு!”, என்று ராஜேஸ்வரி ஒரு பக்கம் சொல்லிக்கொண்டே இருக்க……………… வேண்டும் என்றே இவள் அவரையே ஓட வைத்துக்கொண்டு இருந்தாள்.

தனது தந்தையின் கார் வர……………….. விளையாட்டு மும்முரத்தில் அவரிடம் கூட சென்றாளில்லை…………………., அம்மா அழைத்தும், “தோ வரேன்மா”, என்றவள்,

மறுபடியும், மறுபடியும், அந்த வயதானவறிடமே பந்தை எறிந்து அவர் முடியாமல் ஓடுவதை பார்த்து சிரித்து கொண்டிருந்தாள். அவருடைய சிரமம் அவளுக்கு ஒரு விளையாட்டாக இருந்தது.  

காரை விட்டு இறங்கிய சிவசங்கரன் தன்னோடு ஒரு புதியவனை அழைத்து வந்திருந்தார். சிறுவனும் அல்ல இளைஞனும் அல்ல பதினாறில் இருந்தான் அவன்.

அவன் யார் என்று தன் மனைவியிடம் அவர் கூறும் முன்னரே, அந்த  புதியவன் வரமஹாலக்ஷ்மியின் விளையாட்டை பார்த்திருந்தவன், அவனுக்கு அந்த சிறுமி கண்களுக்கு தெரியவில்லை அவள் போடும் பந்தால் அந்த பெரியவர் தடுமாறியபடி ஓடிக்கொண்டிருந்தது தெரிய, “அவர் விழுந்துடுவார் ஐயா” என்று உரைத்தவன்…………..,

அவர் பதிலுக்கு காத்திராமல் நிமிடத்திற்கு விளையாடும் இடத்திற்கு சென்றவன், அவளிடம் ஒன்றும் சொல்லாமல் அந்த பெரியவரிடம், “நீங்க போங்க நான் விளையாடுறேன்”, என்றவன், “எனக்கு போடு!”, என்றான் அவளை பார்த்து,     

தன்னுடைய விளையாட்டில் தன்னுடைய அனுமதி இல்லாமல் நுழைந்த அந்த புதியவனை வரமஹாலக்ஷ்மிக்கு முதல் பார்வையிலேயே பிடிக்கவில்லை. “நீ யாரு?”, என்றாள்.

“நான் வெங்கி”, என்றான்.

“என்ன மங்க்கியா!……….”, என்றாள் வேண்டுமென்றே அந்த சிறுமி, சற்றே கோபம் எட்டி பார்க்க தொடங்கிய போதும், “நான் வெங்கட ரமணன்” என்றான் மறுமுறை. “மை ஃபிரண்ட்ஸ் கால் மீ வெங்கி”, என்றான்.

“ஐ அம் நாட் யுவர் ஃபிரின்ட்”, என்றாள் வரமஹாலக்ஷ்மி.

“ஒஹ்! தட்ஸ் பைன்!”, என்றான் ரமணன் பதிலுக்கு அலட்சியமாக தோளை குலுக்கியபடி, யாரும் அவளிடம் இதுபோல் அலட்சியம் காட்டி பேசியதில்லை. அந்த சிறுமிக்கு ஆத்திரத்தில் அழுகை வர பார்த்தது.    

சட்டென்று பந்தை தூக்கி எறிந்த அவள் தன் தந்தையிடம் ஓடினாள். “யார் அப்பா அது எனக்கு பிடிக்கவேயில்லை. ஹி இஸ் இன்டரப்டிங் இன் மை கேம்”, என்றாள்.

“அப்படி எல்லாம் சொல்ல கூடாது பாப்பா, அவங்க நமக்கு ரொம்ப வேண்டியவங்க. இனிமே இங்க தான் இருப்பாங்க”, என்றார்.

“என்ன நம்ம வீட்லயா”,…………….. “ஆமாம் பாப்பா!”, என்றவரை அந்த பதில் தனக்கு பிடிக்கவில்லை என்று பிடிக்காத பார்வை பார்த்தாள்.

“அவன் இங்க வேண்டாம்!”, என்றாள் பிடிவாதமான குரலில்,

“பாப்பா இப்படி எல்லாம் மரியாதையில்லாம பேசுவீங்களா, என் பாப்பா இப்படியெல்லாம் பேசமாட்டாங்கலே”, என்று அவர் பொறுமையாக கூற………….. முகத்தை தூக்கி வைத்து திரும்பி நின்று கொண்டாள்.  

பெரியவரின் சிரமத்தை பார்த்து அவசரத்தில் அவளிடம் அதட்டல் போட்ட ரமணன், இப்போது அவள் அவனிடம் வழக்காடி விட்டு, தன் தந்தையிடம் வார்த்தையாடிக் கொண்டிருந்த போது தான் அவளை கவனித்தான்.

அழகான சிறுமி, அந்த வட்டமான முகம்………. கண்ணீர் வர துடிக்கும் பெரிய கண்கள்………… உதடு அழுகை அடக்கி பிதுங்கி நிற்க……………, அவனை அறியாமலேயே அவளை சமாதானப்படுத்த உந்துதல் வர……………… அவள் அருகில் சென்றவன், “சாரி!”, என்றான்.

“உங்கிட்ட கேட்காம உன் விளையாட்டுல வந்துட்டேன்”, என்றவன் “ஆனா எனக்கு தெரியாதே, உனக்கு வலிக்காதா கீழ விழுந்தா, எனக்கு வலிக்குமே!”, என்றான்.

“எனக்கும் வலிக்கும்”. என்றாள்.

இது ஒரு சாதாரண குழந்தைகள் சைக்காலாஜி. உனக்கு இது கூட தெரியாதா என்றால், உடனே எனக்கு தெரியும் என்பார்கள். இதை அவன் உபயோகிப்பதை பார்த்த ராஜேஸ்வரிக்கு அவன் இயல்பிலேயே புத்திசாலி என்பது புரிந்தது.   

“அப்போ அந்த தாத்தா கீழ விழுந்தாலும் வலிக்கும் தானே, அதனால தான் அனுப்பிட்டேன்…………. சாரி!”, என்றான் மறுபடியும்.

அவன் இருமுறை சாரி கேட்டு விட்டதால் அவள் முகம் சற்று தெளிந்தது. ஆனாலும் சிரிப்பு எட்டி பார்க்கவில்லை.

இப்போது சிவசங்கரனை பார்த்து ரமணன், “என்ன ஐயா நீங்க? இவ்வளவு நேரமா கார்ல என்கிட்ட என் பொண்ணு அழகா சிரிப்பான்னு சொன்னீங்க…………. சும்மா சொன்னீங்களா……………….”, என்றான்.

“இல்லை!…………… நான் அழகா சிரிப்பேன்”, என்றவள் சிரிப்பதை போல் வாயை இழுத்து பிடிக்க, தங்களுடைய செல்ல மகளின் செய்கையில் பெற்றோர் இருவருக்கும் வாய் கொள்ளா சிரிப்பு மலர்ந்தது.

இது ஒரு சிறு புன்னகையை  ரமணனிடதிலும் வரவழைத்தது. அசட்டு தனங்கள் இல்லாமல் புன்னகை கூட அளவாய் புரியும் அவனை ராஜேஸ்வரிக்கு மிகவும் பிடித்து விட்டது.     

சிவசங்கரனுக்கு புரிந்தது…………… ரமணன் அவளை சமாதனபடுத்துவதற்க்காக கூறுகிறான் என்று புன்னகையோடு பார்த்திருந்தார். அந்த புன்னகை ராஜேஸ்வரியையும் தொற்றி கொண்டது.

அவன் யார் என்பதை பற்றி எல்லாம் அவர் கவலைப்படவில்லை. தன்னுடைய செல்ல மகள் முகம் வாடுவது பொறுக்காமல், அவளை சமாதானம் செய்கிறான். அதுவும் அவளுடைய மனம் நோகாமல் அவளுடைய தவறையும் சுட்டி காட்டுகின்றான், என்றவுடன் அவருக்கு ரமணனை மிகவும் பிடித்து விட்டது.

ஓரளவு அவனுடைய காரணங்கள் இயற்கையிலேயே நியாயவாதியான வரமஹாலக்ஷ்மிக்கு புரிந்தாலும்………………. அதை ஒத்து கொள்ள மனமில்லாமல் அவனை விடுத்து தன் தந்தையிடம் ஒன்றினாள்.

“அப்பா பாப்பாக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கீங்க?”, என்றாள் மெல்லிய குரலில்.

“கார்ல இருக்கு எடுத்துக்கலாம்”, என்றவாரே, ரமணனை ராஜேஸ்வரியிடம் அறிமுகபடுத்தினார். “நம்ம ராமநாதன் அண்ணன் பையன். இனிமே இங்க தான் இருப்பாங்க”, என்றார். அதற்கு மேல் ஒரு கேள்வி கூட ராஜேஸ்வரி கேட்கவில்லை. “உள்ள வாப்பா…………..”, என்றார்.

ராமநாதன் என்பவர் தன்னுடைய கணவருக்கு சிறுவயது முதலே நிறைய உதவிகள் செய்திருக்கிறார் என்று ராஜேஸ்வரிக்கு தெரியும். தந்தையில்லாத சிவசங்கரனுக்கு, படிப்பதற்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார். திருமணம் கூட ராமநாதனும் அவர் மனைவியும் தான் முன்னின்று நடத்தினர்.

ஆனால் அவர்களுக்கு வெகு நாட்களாக குழந்தை பேறு இல்லாமல் இருந்து நிறைய வருடங்களுக்கு பிறகு பிறந்தவன் வெங்கட ரமணன். ராமநாதனை கேட்காமல் சிவசங்கரன் எந்த வேலையும் செய்ய மாட்டார்.

அவர் அரசியலில் இறங்கியது கூட அவரின் ஆலோசனையின் பேரில் தான். அந்த சமயத்தில் அரசியலில் ஈடுபடுவதற்கு நிறைய பணம் தேவைப்பட்ட போது உதவியரும் ராமனாதனே. பையன்கள் சீக்கிரம் வளர்ந்து விடுவதால் அவருக்கு சட்டென்று அடையாளம் தெரியவில்லை.

அவர் பார்த்து வளர்ந்தவன் தான், ஆனால் ஒரு நான்கைந்து வருடங்களாக பார்க்கவில்லை. அதனால் சரியாக தெரியவில்லை.

இப்போது அவருடைய மகன் என்று தெரிந்ததுமே, அவரும் உற்சாகமாக………….. “ரொம்ப வருஷங்களுக்கு பிறகு பார்க்கிறேன் இல்லையா……….. சரியா தெரியலை, உள்ள வாப்பா”, என்றாள் மறுபடியும்.                

ஆனால் அவன் வெகுவாக தயங்கினான்.

அவனுடைய தயக்கத்தை பார்த்தவள், “வாப்பா”, என்றாள்.

இதை பார்த்து கொண்டிருந்த வரமஹாலக்ஷ்மி, “அம்மா கூப்பிடுறாங்கள்ள உள்ள போங்க……….”,  என்றாள் அதட்டலாக,

ரமணன் சிவசங்கரனின் முகத்தை பார்த்து, “இல்லைங்க ஐயா, நான் ஹாஸ்டல்ல தங்கிக்கறேன்”, என்றான்.

“அம்மாவும் அப்பாவும் சொல்லறாங்க இல்லை, கேட்க மாட்டீங்க……… நீங்க வாங்க!”, என்றவள்………….. அவனுடைய கையை பிடித்து இழுத்து வீட்டுக்குள் கூட்டி போக முயற்சித்தாள்.

சிறுமி அல்லவா சிறிது நேரத்திற்கு முன்னாள் தான் தான் அவனை இங்கே வேண்டாம் என்று கூறினோம் என்பதே அவளுக்கு மறந்து விட்டது.

சிரித்தபடியே அன்னையும் தந்தையும் பார்த்திருக்க…………………. அவனை இழுக்க முடியாமல் இழுத்து கொண்டு உள்ளே போனாள்.  

 

 

 

 

Advertisement