Advertisement

அத்தியாயம் – 8
தமிழழகி உள்ளுக்குள் சிரித்துக் கொண்டே தன் பணியை வங்கியில் தொடங்கினாள். என்ன தான் வேலையில் ஈடுப்பட்டாலும், மனதின் ஓரத்தில் தன்னவனின் நினைவை தவிர்க முடியவில்லை! அந்த கூலர்ஸுடன் அவன் அழகாக இருப்பது போல் தோன்றியது. அதனாலேயே அதை எடுத்துக் கொண்டு வந்தாள்….
‘இவன் கூலர்ஸ் மாட்டிட்டு ஜம்முனு போவான். பொண்ணுங்க இவன பார்ப்பாங்க. இதெல்லாம் தேவையா?!’ இப்படி யோசித்து கொண்டே வந்தவள் ஒரு கணம் சடன் பிரேக் போட்ட பைக் போல் நிறுத்தினாள் சிந்தனை ஓட்டத்தை! அவனை வேறு பெண்கள் பார்க்கக் கூடாது என்று எண்ணுவது தான் தானா?
அவனை ஏற்றுக் கொள்ள துவங்கி விட்டோமோ?? ஆம், என்று தலையில் சுத்தியால் அடித்தது போல் விளங்கிற்று சிறிது நேரத்தில். ஆனால், அதை உணர்ந்த நிமிடம் அழையா விருந்தாளியாய் சோகமும் குடிக்கொண்டது மனதில்! எப்படியும் செழியனுக்கு தன்னை பிடிக்காது…
கட்டாயத்தின் விளைவில் கல்யாணம் செய்து கொண்டவன். இன்னமும் தன் மேல் எவ்வித அன்பும் ஏற்படவில்லை என்பது அவள் கருத்து. அவ்வப்போது மோக பார்வை வீசுவதும் மனைவி என்று ஒருத்தி இருப்பதால் தான்… இன்று தான் அவனை பார்த்து சிரிக்கும் போது கூட, பதிலுக்கு முறைத்துக் கொண்டு தானே நின்றிருந்தான்?!
ஒரு பெருமூச்சுடன் அடுத்த வேலையை கவனிக்க சென்றாள், மேலும் உள்ளத்தை போட்டு குழப்பாமல். இவளின் எண்ண அலைகளில் நாயகனும் இவளை பற்றி தான் சிந்தித்துக் கொண்டிருந்தான்…
தன்னை பிடிக்கவில்லை என்று முகத்தில் அடித்தது போல் கூறியவள், தற்போது செய்யும் செய்கைகள் எல்லாம் சரியில்லையே?! அவளுக்கு தன்னை பிடித்திருக்கிறதா இல்லையா??
முதலில் தனக்கு அவளை பிடிக்கத் தொடங்கிவிட்டதா? ஒருப்புறம் ‘ஆம்’ என்றே தோன்றியது. பாதியில் காலை உணவை தியாகம் செய்து, அவளின் பேச்சுக்களையும் வாங்கிக் கட்டி, தன்னுடைய கூலர்ஸையும் பறிகொடுத்தது எல்லாம் ‘ஆம்’ என்ற விடைக்கு வலு சேர்த்தன!
இப்படியே இரண்டு பேரும் சிந்தனை செய்து தங்களின் மனதை குழப்பிக் கொள்ள, மறுநாள் அலுவகத்தில் இருந்து வந்ததும் தன்னுடைய மடிகணிணியில் ஆழ்ந்து விட்டான். எப்போதும் அவன் தான் முதலில் வருவான் வீட்டுக்கு. அன்றும் அப்படியே நடக்க, தமிழ் வந்ததும் உடை மாற்றிக் கொண்டு இருவருக்கும் டீ போட்டு, அவனிடம் நீட்டினாள்.
எதேச்சையாக மடிகணிணியை பார்க்க, அதில் ‘பிரேமம்’ படம் ஓடியது. கல்லூரியில் நிவின் பாலி அவன் நண்பர்களுடன் அடிக்கும் லூட்டியில், வசனம் கேட்கவில்லை என்றாலும் தமிழின் முகத்தில் அவள் அறியாமல் புன்னகை தவழ்ந்தது.
செழியன் அதை பார்த்தும் பார்க்காதது போல தன் டீயை அருந்தினான். நடுவில் சுவாமிநாதன் ஃபோனில் அழைத்தும், படத்தை நிறுத்திவிட்டு அவரிடம் இருவரும் பேசிய பின் செழியன் மீண்டும் படம் பார்க்க அமர, தமிழின் கேள்வி அவனை திசை திருப்பியது.
“அப்படி அந்த படத்துல என்ன தான் இருக்கு? நிறைய பசங்களுக்கு ‘பிரேமம்’னா பிடிக்குது??”
“என்ன இருக்கா!? மலர் டீச்சர், செலின், மேரின்னு முக்கனிங்க இருக்காங்க… அது மட்டுமில்லாம மூக்காவாசி பசங்களுக்கு இதே மாதிரி ரெண்டு, மூணு லவ் இருந்துருக்கும்… அதான் பிடிக்குது!”
இதை கேட்டதும் செழியனையே குறுகுறுவென நோக்கினாள் தமிழழகி. அதை கவனித்து, “ஹலோ எனக்கு அந்த மாதிரி மலர் டீச்சர், செலின் எல்லாம் இல்ல… ரொம்ப யோசிக்காத!” என்று விளக்கமளித்தவனுக்கு தலையசைத்து எழுந்து சென்றாள் தமிழ்.
அவன் யாரையும் இதுவரை மனதில் நினைக்கவில்லை என்ற நினைப்பே மனதில் சந்தோஷ நீரூற்றை கொட்டியது….
எல்லாம் சில தினங்கள் தான்… பின் நீரூற்றும் இல்லை, மழைச்சாரலும் இல்லை…. ஒரே பாலைவனமயமாக தான் காட்சி யளித்தது! காரணமாக அவளே இருப்பாள் என அவள் அறியாள்… சிறிது நாட்களாக அவர்களுக்குள் வராமல் இருந்த அவர்களின் தலைவர்கள் மீண்டும் இருவருக்கும் நடுவில் மதில் சுவரை கட்டினர்….
அபினவ்வின் புதிய படம் ஒரு வாரத்தில் வெளியாக இருந்தது. அது போதாதா?? ரக்ஷனின் ரசிகர்கள் அபினவ்வையும் அவன் படத்தில் முன்னோட்டமாக வந்த டிரெய்லரையும் முகநூலில் மீம்ஸ்களாக கலாய்த்து தள்ள, செழியன் அதில் சிலவற்றை பகிர்ந்து ஏற்கனவே தமிழின் மனதில் எரிகின்ற தீயில் மண்ணெண்ணெய் வாரி இறைத்தான்!
இதனால் சில முறை தமிழ் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு வீட்டில் உலாவ, செழியன் அதை எல்லாம் கண்டுக் கொள்வானா என? அப்புறம் அவன் ரக்ஷனின் விசிறி என்பதில் இழுக்கு ஏற்பட்டு விடாது??
படம் வெளியாக நான்கு நாட்கள் இருந்த நிலையில் ஒரு நாள் மாலை வங்கி வேலை முடிந்து வீடு திரும்பிய செழியன் ஆச்சரியம் அடைந்தான். வீட்டில் தமிழ் இருந்தது முதல் ஆச்சரியம்… இரண்டாவது அவளுடன் அவளின் ஹாஸ்டல் தோழி ஸ்வேதா இருந்தது! மூன்றாவது அவன் மனைவி சோகத்தில் முக்குளித்து வயலின் வாசித்தது…. கல்யாணத்தில் ஸ்வேதாவே செழியனிடம் சென்று நன்றாக பேச, அவளை ஞாபகம் இருந்தது அவனுக்கு.
இவனை கண்டதும் ஒன்றும் செய்யாமல் மீண்டும் தலையை தொங்க போட்டு அமர்ந்திருந்தாள் தமிழ். ஸ்வேதா தான் முகம் மலர, “வாங்கணா…. எப்படி இருக்கீங்க?” என்று வினவினாள்.
மனாயாளின் மேல் ஒரு கண்ணை பதித்தபடி, புன்னகை புரிந்து பதிலளித்தான் செழியன். “ஹ்ம்ம் நான் நல்லா இருக்கேன்மா. நீ எப்படி இருக்க??”
“எனக்கு என்ன நல்லா இருக்கேன்.”
சிரித்து தலையசைத்து அவன் அறைக்குள் புகுந்தவன், முகம் கழுவி உடை மாற்றிக் கொண்டு வர, அப்போதும் தமிழ் சோபாவை விட்டு நகரவில்லை… என்னடா இது என மனதுக்குள் மட்டும் கேள்வி கேட்காமல், வெளியே ஸ்வேதாவிடமும் கேட்டான்.
“அது ஒரு பெரிய கதைண்ணா…. உட்காருங்க, சொல்லிட்டு கிளம்பறேன்.”
ஸ்வேதா சொன்னதை கேட்டு திடுக்கிட்ட தமிழ், “ஹே ஸ்வே சும்மா இரு…” என அதட்ட, முன்பை விட அழுத்தமாக காரணம் கேட்டான் செழியன். வேறு வழியில்லாமல் ஸ்வேதாவும் விளக்கத் தொடங்கினாள்.
****************************************************************************************************
ரசிக பெருமக்களின் போர்களமான சமூக வளைதளங்களில் முக்கிய பங்கு வகிக்கும் முகநூலில், ரக்ஷனை கலாய்பதற்கும் அபினவ்வை கழுவி ஊற்றுவதற்கும் சில பக்கங்கள் இயங்கி வந்தன… அப்படி ரக்ஷனை கிண்டல் செய்ய இருக்கும் பக்கத்தில் தினமும் சென்று அதில் வரும் மீம்ஸ்களை கண்டு மகிழ்வது தமிழழகியின் ஒரு பொழுது போக்கு.
அப்படி சென்று பார்க்கும் போது, அந்த பக்கத்தின் நிர்வாங்கிகளுடன் ஒரு முறை உரையாட நேர்ந்தது. சிறிது பழக்கமும் ஏற்பட்டது. இப்போது அபினவ்வுடைய புதிய படத்திற்கு முதல் மூன்று நாட்களுக்கான டிக்கேட்டுகள் தங்களிடம் இருப்பதாக அவர்கள் கூற, அதை பெறுவதற்கு தமிழும் நின்றாள்! இப்போது எல்லாம் ஆன்லைனில் பெரிய நடிகருக்கு டிக்கேட் கிடைப்பது, தட்கல் டிக்கேட் நிலைமை தான்!
கண் மூடி திறப்பதற்குள் பஞ்சாய் பறந்து விடும்! அதனால், இவர்களிடமே பெற்றுக் கொள்ளலாம் என முடிவெடுத்தாள் தமிழழகி. அந்த பக்கத்தின் அட்மின் இது ஆன்லைன் டிக்கேட் இல்லை, திரையரங்குக்கு நேரில் சென்று வாங்கியது, அதனால் நேரில் தான் தர முடியும் என கூற, சரி டீ.நகரில் இருக்கும் திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் அதை பெற்றுக் கொள்வதாக தமிழும் கூறினாள்.
அன்று மாலை வங்கியில் இருந்து சீக்கிரம் கிளம்பி, கோவிலை அடைந்து பெருமாளை மனதார வணிங்கிக் கொண்டு, தான் வந்து விட்டதாக அட்மினிடம் குறுஞ்செய்தி அனுப்பினாள். அவனும் தான் வந்து விட்டதாக கூறி, அடையாளங்களை பகிர, இருவரும் சந்தித்துக் கொண்டனர். அவனை கண்டு புன்னகைத்து “ஹலோ” என தமிழ் சொல்ல, அவளை நெற்றி வகிடில் குங்குமமுடன் கண்ட அந்த அட்மினுக்கு அதிர்ச்சி அப்பட்டமாக தெரிந்தது முகத்தில்… “ஹலோ” என சம்பிரதாயமாக சொன்னவன், உடனே அடுத்த கேள்வியை கேட்டான்.
“உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சா??” அவனின் அதிர்ச்சி அப்போது தான் தமிழழகிக்கும் இறங்கியது! ஒரு சாதாரண பாவனையுடன், “ஹ்ம்ம்ம் ஆமா… ஏன் கேக்கறீங்க?” என கேட்டாள்.
உள்ளுக்குள் எதுவோ எச்சரிக்கை மணியை மட்டும் அழுத்தமாக அடித்தது. சிறிது தரையை நோக்கியவன் பின் நிமிர்ந்து, “இல்லை… என் கிட்ட இருந்த டிக்கேட்ஸ் எல்லாம் என்னோட பிரண்ட்ஸ் வாங்கிட்டாங்க. அதை நேர்ல சொல்ல தான் இப்போ வந்தேன்… சாரி பை.” என சொல்லிவிட்டு ஒரு தலையசைப்புடன் சென்றேவிட்டான்.
திகைத்து நிற்பது தமிழழகியின் முறையாகிற்று! ஒரு கணம் ஒன்றும் புரியாமல் நின்றாள் சிலை போல!! பின், ‘அடப்பாவி’ என மனதுக்குள் திட்டிக் கொண்டு, அவன் தன்னுடன் பேசியதன் நோக்கம் என்ன புரிந்துக் கொள்ள தொடங்கினாள். என்ன தான் ஆன்லைனில் பேசினாலும், பெண்களுக்கே உரிய எச்சரிக்கை உணர்வினால் தான் கோவிலில் சந்திக்கலாம் என கூறினாள். அவன் ஒத்துக் கொண்டதும் அவனையும் நல்லவன் என நம்பியது எவ்வளவு சிறுபிள்ளை தனமாக போயிற்று!
தான் இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டுமோ? மனதால் நொந்து நூடூல்ஸ் ஆகியே வீடு திரும்பினாள் தமிழழகி. வீட்டிற்கு வந்ததும் தான் ஸ்வேதாவிடம் இருந்து ஃபோன் வந்தது. தங்களின் அடுக்குமாடி குடியிருப்பிற்கு வழி சொல்லிவிட்டு, அவள் வந்ததும் எதையும் மறைக்காமல்  அவளிடம் அனைத்தையும் ஒப்பித்தாள் தமிழ்.
ஸ்வேதா நன்றாக திட்டி முடித்ததும் தான் செழியன் வந்து சேர்ந்தான். இப்போது அவனுக்கும் எல்லாவற்றையும் சொன்னவுடன் அவன் வேறு திட்டுவானே என சிறிது பயம் கொண்டு கணவனின் முகம் பார்த்தாள் தமிழ். ஏற்கனவே தன்னுடைய செய்கையை எண்ணி வருந்திக் கொண்டிருப்பவளால், அவனுடைய ஏச்சு பேச்சுகளை தாங்க இயலும் என்ற நம்பிக்கையில்லை… அழுது விடுவோமோ அவன் முன்?
செழியன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை என்ற போதும், அவனுக்கும் கோபம் இருக்கிறது என்பது அவன் இறுகிய முகத்திலேயே தெரிந்தது. சட்டென்று பார்வையை தாழ்த்திக் கொண்டாள் தமிழ். ‘ஐய்யோ ரொம்ப முறைக்குறானே!’ என மனதிற்குள் இவள் அச்சத்தில தவிக்க, செழியன் சில நிமிடங்களில் ஸ்வேதாவிடம் நார்மலாக பேசத் தொடங்கினான்.
ஒன்றும் சொல்லாமல் இருவருக்கும் காபி போட்டுக் கொடுத்தாள் தமிழ். ஸ்வேதா அதை குடித்ததும் விடைப் பெற்றுக் கொண்டு கிளம்ப, அவளை வழியனுப்பி விட்டு அவளின் அறைக்குள் காலடி எடுத்து வைத்த தமிழின் பாதங்கள் மேலே நடக்க முடியாமல் நின்றன. செழியனின் கோபமான குரலே அதற்கு காரணம்.
“மேடம் கொஞ்சம் இருங்க….” நேராக அவளின் முன் நின்று, ருத்ரவ மூர்த்தியாக மாறி கர்ஜித்தான் அவள் கணவன்.
“என்ன தான் நினைச்சுட்டு இருக்க நீ? யார் என்னென்னே தெரியாம ஒருத்தன பார்க்க போவியா? உனக்கு டிக்கேட்ஸ் வேணும்னா என் கிட்ட கேக்க வேண்டியது தானே?? இல்லை உன்னோட பிரண்ட்ஸ் கிட்ட கேக்கலாம்ல? அதை விட்டுட்டு யாரோ குடுக்கறேன்னு சொன்னா உடனே போய் வாங்குறது!
இப்போ பாரு உனக்கு கல்யாணம் ஆச்சுனு தெரிஞ்ச உடனே என்ன பண்ணான்?? விட்டுட்டு போகலை?? அவனோட இன்டென்ஷன் இப்போவாச்சும் புரிஞ்சுக்கோ! பேஸ்புக்ல இருக்குற இந்த மாதிரி பசங்க என்ன எல்லாம் செய்யறாங்கனு நீ படிச்சதே இல்லையா? எப்படி தனியா போன…
அட்லீஸ்ட் இந்த மாதிரி டிக்கேட்ஸ் வாங்க போறேன்னு என்கிட்டயாவது சொன்னியா? எப்போ டிசைட் பண்ண கோவில் போய் டிக்கேட் வாங்கலாம்னு?”
கோபாவேசமாக கத்திக் கொண்டே வந்தவன் திடீரென நிறுத்தியவுடன், செழியனுக்கே மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. பத்து வயது மாணவி தவறு செய்து திட்டு வாங்குவது போல் அமைதியாக இருந்த தமிழ், அவன் கேட்டதற்கு உடனே பதில் சொல்லும் நிலையில் இல்லை…. நிறைய அதிர்ச்சி அவளுக்கு மாலை முதல். ‘நம்ம தலைவன் படத்துக்கு இவன்கிட்ட டிக்கேட் கேக்குறதா? என்ன லோஜிக் இது?’ மனதுக்குள் பேசிக் கொண்டிருந்தவளை மீண்டும் கேள்விக் கனைகளை ஏவினான் அவளின் கணவன்.
“உன்னை தான் கேக்கறேன் பதில் சொல்லு!” அழுத்தமாக செழியன் கத்தியவுடன், பாதி வார்த்தை மீதி அழுகை என்ற குரலில், பதில் சொன்னாள் அவன் மனைவி. “நேத்து நைட் தான் டிசைட் பண்ணேன்…”
“அப்போவே என்கிட்ட சொல்ல வேண்டியது தான?” மேலும் கோபத்தில் செழியன் பலவற்றை கேட்டு, திட்டி, புத்திமதி கூறி, அதட்டினான் தமிழை… ஆனால், கன்னங்களில் கண்ணீர் ஓட நின்றவளை பார்த்ததும், அவனுக்கு இன்னமும் கோபம் அதிகம் தான் ஆகியது. தப்பு செய்தமைக்கு திட்டினால், அழுவாளா?? ஒன்றும் கூறாமல், அவன் அறைக்குச் சென்று கதவை அறைந்து சாத்தினான்.
திகைத்து போய் நின்றாள் தமிழ். தான் செய்த தவறை நினைத்து ஏற்கனவே அழுகை பொங்கி இருக்க, எதற்கு இப்படி திட்டினான் பாதிலேயே அதையும் நிறுத்தி அறைக்குள் புகுந்து கொண்டான்? ஒன்றும் விளங்கவில்லை!
முகத்தை கழுவிக் கொண்டு இரவு உணவாக, இட்லியும் சட்னியும் செய்து அறைக்குள் சென்று படுத்துக் கொண்டாள். இருவருக்கும் மனம் பௌர்ணமி இரவில் கொந்தளிக்கும் கடல் அலை போல் தான் இருந்தது!!
ஒன்பது மணியளவில், பசி வயிற்றில் கபடியாட சமையல் அறை சென்று அவனுக்கு மட்டும் இட்லி எடுத்துக் கொண்டு சாப்பிட்டான் செழியன். அவன் சாப்பிட்டதும், வீங்கிய முகத்துடன் வெளியே வந்த தமிழை கண்டதும், ஒருப்புறம் சோகமாக இருந்தாலும், மறுப்புறம் கோபம் பொத்துக் கொண்டு வந்தது!
பேசாமல் தூங்க சென்றுவிட்டான். தமிழழகிக்கு சாப்பிடவே பிடிக்கவில்லை… இரவில் சாப்பிடாமல் படுக்கும் பழக்கம் இல்லை என்பதால், பேருக்கு இரண்டு இட்லியை உள்ளே அனுப்பிவிட்டு தானும் படுத்தாள். தமிழழகிக்கு செழியன் மேல் எவ்வித கோபமோ வருத்தமோ இல்லை…
அவன் தன்னை திட்டியதில் இருந்த அக்கரையை சிறிது நேரத்திலேயே உணர்ந்துக் கொண்டது அவள் மனம். அவன் தன்னிடம் பேசினால் போதும் என்றே இருந்தது அவளின் நிலை. ஆனால், செழியனுக்கு கோபம் சிறிதும் இறங்கவில்லை! அதனுடனே மறுநாளும் விழித்தவன், தமிழ் பேசாமல் தன் வேலைகளை பார்ப்பதை உணர்ந்து தானும் தன் அலுவகம் கிளம்பினான்.
காலை உணவுக்காக டைனிங் டேபிளில் செழியன் அமர்ந்திருக்க, தமிழ் இன்னமும் எதையோ உருட்டிக் கொண்டிருந்தாள் கிச்சனில். எப்போதும் அவன் அமரும் முன் டேபிளில் காலை டிபன் ரெடியாக இருக்கும்! இன்றைக்கு என்ன ஆகிற்று என்ற எரிச்சலில், “டிபன் ஆச்சா இல்லையா? எவ்வளவு நேரம் வெயிட் பண்றது?” என்று உள்ளே குரல் கொடுத்தான்.
கரன்டியுடன் காட்சியளித்த தமிழோ, “இன்னிக்கு டிபன் பண்ண டைமில்ல. இன்னிக்கு மட்டும் உப்புமா சாப்பிடறீங்களா? ப்ளீஸ்…” என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு எதிர் கேள்வி கேட்டவளை முடிந்த மட்டும் முறைத்தான் செழியன்.
கோபத் தக்காளியாக உரிமாறியவனை திருதிருவென்று முழித்து பார்த்தவள் எதையோ கூறத் தொடங்கும் முன், செழியனே கத்தினான். “தேவையில்ல! எனக்கு டிபனே வேணாம்…”
வார்த்தைகளை துப்பியவன், விறுவிறுவென்று ஹூ மாட்டிக் கொண்டு வங்கிக்கு கிளம்பினான். நேற்று தான் திட்டியதால் தான் இன்று தனக்கு பிடிக்காத ஒன்றை செய்து தருகிறாள் என எண்ணமிட்டவன், சொல்லிக் கொள்ளாமல் சென்றும் விட்டான் அலுவகத்திற்கு.
தமிழழகிக்கு அவன் கோபம் இன்னமும் துளியும் குறையவில்லை என்பது மட்டும் விளங்கிற்று. அது அவளை அறியாமல், அவளின் கண்களில் நீரையும் பொழிந்தது. அமைதியாக அவளும் வங்கிக்கு கிளம்பினாள்.
***************************************************************************
காலை பதினொரு மணிக்கு வந்த வங்கியில் வேலையாக இருந்த செழியனை அவன் கைப்பேசி ஒலியெழுப்பி திசை திருப்பியது.
யாரென்று பார்த்தால் தமிழ் தான்! வேண்டா வெறுப்பாக அதை காதிற்குயிட்டுச் சென்றவனின் முகம் சில நொடிகளில் முற்றிலுமாக மாறியது! நெஞ்சம் படபடவென அடித்துக் கொள்ள, கடகடவென்று கிளம்பினான் அவன் வங்கியிலிருந்து!!!!

Advertisement