Advertisement

அத்தியாயம் – 7
தமிழழகி திருமணத்திற்கு முன்தின இரவு யோசனை செய்த போதே சிலவற்றை தனக்குள்ளே தெளிவாக்கிக் கொண்டாள். இது தான் வாழ்க்கை என மூளை அறிவுறுத்தி மனமும் வேறு வழியில்லாமல் ஒத்துக் கொள்ள, அதை எப்படி எடுத்து செல்வது என அவளின் சிந்தனை ஓட்டம் கொண்டது!
செழியனை பற்றி எண்ணியவுடன் அவளுக்கு ஞாபகம் வந்த முதல் விஷயம் அவனின் அலட்சியம்! ஆம், எப்போதும் சிறிது தெனாவட்டாக திமிருடன் அவன் சுற்றுவது போல் தோன்றியதால் அதை களைத்தேரிய வேண்டும் என நெஞ்சத்தில் முடிவெடுத்தாள். அடுத்தது அவர்களுக்கு பிரச்சனை வர காரணமாய் இருந்த அவர்களின் தலைவர்கள்! அதை பற்றியும் ஒழுங்காக அவனிடம் பேசி விட முடிவெடுத்து தான் தூங்கவே செய்தாள்.
ஆனால், அவனிடம் பேசும் போது ஒரு உளறலாக பெரிதாக பேசிவிட்டாள். தனக்கு ஒழுங்காக பதில் சொல்ல வேண்டும் என்பதோடு முடித்துக் கொள்ளாமல், அபத்தமாக பிதற்றியது போல் இப்போது தோன்றியது!
ஆனால், மறுநாளிலிருந்து சற்றே ஒழுங்காக பேசினான் செழியன். தமிழும் தேவையற்று பேசுவதை தவிர்த்துவிட்டு, அதற்கு நேர்மாறாக அவன் குடும்பத்தாருடன் பேச்சை வளர்த்தாள்.
செழியனின் வீட்டாருக்கும், தமிழழகியின் வீட்டாருக்கும் எப்படியோ சண்டை சச்சரவு இல்லாமல் இருவரும் ஒன்றாக இருந்தாலே போதும் என்ற மனநிலையில் இருந்தனர். ஆகையால், மிகுந்த நெருங்கிய சொந்தங்களின் விருந்து விழாக்களை சிறப்பித்துவிட்டு மறுவாரமே சென்னைக்கு புறப்பட்டனர் புதுமண ஜோடி.
அவர்கள் கூடவே சுவாமிநாதனும் சசிகலாவும் கிளம்பினர்… ஞாயிறன்று காலையில் கிளம்பி, மதியமே நுங்கம்பாக்கதிலுள்ள செழியனின் அடுக்குமாடி குடியிருப்பில் கால் பதித்தனர். திருமணத்திற்கு முன்பே தன் ஹாஸ்டலை காலி செய்துவிட்டதால், இப்போது பல சூட்கேஸ்களை தூக்கிக் கொண்டு வந்தாள் தமிழ்.
அப்பெரிய பெட்டிகளை பார்த்து செழியனுக்கு சந்தேகமே வந்தது… “என்னமா வீட்டையே காலி பண்ணிட்டு வராளா? எதுக்கு இத்தனை பேக்?”
சந்தேகத்தை அன்னையிடம் கேட்டவனுக்கு, பதிலாய் ஒரு சிறு அதட்டலே வந்தது. “கொஞ்சம் சும்மா இருடா… இவன் வேற!”
அத்தனை பெட்டிகளையும் வீடு சேர்த்ததும், சசிகலா தன் மகனின் அறையை காட்டி அங்கே வைத்துக் கொள்ள சொல்ல, செழியன் திகைத்து போனான். தமிழும் மாமியார் சொன்னபடியே செய்ய, பின்னாலேயே வந்து நின்றான் அவள் கணவன். “எல்லாத்தையும் அடுக்க இந்த கப்போர்ட்ல இடமிருக்காது. நீ பக்கத்து ரூம்ல வைச்சுக்கோ….”
“சரி ஓகே” என கூறியபடி மீண்டும் பெட்டிகளை இழுத்துக் கொண்டு பக்கத்து அறைக்குச் சென்றவளை மாமனாரும் மாமியாரும் கேள்விக் குறியோடு பார்த்தனர். “இல்லமா அங்க இடம் இல்ல, அதான் இந்த ரூம்ல வைச்சுக்க சொன்னேன்…” பின்னோடு வந்த புதல்வன் விளக்கமளிக்க, பார்வை பரிமாற்றலோடு தலையசைத்தனர் சுவாமிநாதன் தம்பதியர்.
இந்த அவசர பதிலே சொல்லியது இவர்கள் எப்படி குடும்பம் நடத்தப் போகின்றனர் என்று! மாலையே பெரியவர்கள் இருவரும் திருச்சி கிளம்புவதாக சொல்லவும், செழியனை விட தமிழ் தான் திகைத்து போனாள். “ஏன் அத்தை இப்போவே கிளம்பறீங்க? நாளைக்கு தான போறதா இருந்தீங்க?”
“இல்லமா நாளைக்கு நீங்க ரெண்டு பேரும் பேங்க் போகனும்! நாங்க மட்டும் வீட்டுல இருந்து என்ன பண்ண போறோம். அதான் இன்னிக்கே கிளம்பறோம்…”
முடிவெடுத்தபடி மாலை சுவாமிநாதனின் காரிலேயே இருவரும் கிளம்ப, செழியனுக்கு ‘அப்பாடா’ என இருந்தது என்றால், தமிழுக்கு காட்டிலே தனியாக மாட்டிக் கொண்ட உணர்வு மட்டுமே! இரவு உணவுக்கு என்ன செய்யலாம் என சமையல் அறைக்குள் சென்று துழாவிய தமிழுக்கு காலியான டப்பாக்களே காட்சியளித்தன…
இவள் அடுப்படியில் உருட்டும் சத்தம் கேட்டு ஹாலில் இருந்து வந்த செழியன், “என்ன வேணும்?” என கேட்டான்.
“நைட் சமைக்க என்ன இருக்குன்னு பார்க்கறேன்…”
“ஒண்ணுமே இருக்காது. நான் ரொம்ப சமைக்க மாட்டேன். அம்மா இருந்தா தான் எல்லாம் வாங்கி வைப்பேன். இல்லனா, மாவு வாங்கி தோசை, இட்லி. இல்லனா நூடூல்ஸ் செஞ்சு முடிச்சுப்பேன். ஆமா உனக்கு சமைக்க தெரியுமா?”
கேள்வியை கேட்டு புருவத்தை அசட்டையாக உயர்த்தி, “ஹ்ம்ம் தெரியும்… காலேஜ் படிக்கறப்போ கத்துக்கிட்டேன்.” என்று தோரணையாக பதிலளித்தாள் தமிழ். மேலும் ஒன்றும் பேசாமல் செழியன் மீண்டும் ஹாலுக்கு செல்ல, அவன் பின் சென்று மீண்டும் இரவு உணவை பற்றி கேட்டாள்.
“கடைக்கு தான் போய் வாங்கனும், எல்லாத்தையும்…”
“பக்கத்துல இருக்கா? எந்த பக்கம் போகனும்??”
தான் இப்போதே வாங்க தயாராக இருப்பதை தமிழ் கோடிட்டு காட்ட, பதில் எதுவும் சொல்லாமல் தன் பைக் சாவி, பர்ஸ் எடுத்துக் கொண்டு, ‘போலாமா’ என்பது போல் பார்த்தான் அவன் மனைவியை.
அவளும் பேசாமல், அவளின் கைப்பேசி, பர்ஸ் முதலியவற்றை எடுத்துக் கொண்டு சென்றாள் அவனோடு. பைக்கில் அமரும் போது கவனமாகவே இருந்தாள் தமிழழகி. முதன் முதலில் பைக்கில் இருவருமாக செல்லும் கிளர்ச்சி இருவரையும் தொற்ற, முடிந்த அளவுக்கு அவனை பிடிக்காமல் அவள் அமர்ந்து கொள்ள, செழியன் வண்டியை ஓட்டிய பாங்கில் தானாக அவன் தோளை பிடித்துக் கொள்ளுமாரு ஆயிற்று! செழியனுக்கு உள்ளுக்குள் சிரிப்பிருந்தாலும் வெளியே எதையும் காட்டிக் கொள்ளவில்லை… 
அவர்கள் அப்பார்ட்மென்டின் அருகில் இருந்த சூப்பர் மார்க்கேட், மளிகை கடை, காய்கறி கடை எல்லாம் அவளுக்கு காட்டினான் செழியன். காய்கறி வாங்கிய இடத்தில் செழியன் காசுக் கொடுக்க, சூப்பர் மார்க்கெட்டில் விடாப்பிடியாக தமிழே காசை கொடுத்தாள்.
போகும் போது இருந்த இனிய நிலை தற்போது இல்லாமல் போனதால், ஒருமாதிரி வண்டியை விரட்டிக் ஓட்டினான் செழியன்! திரும்ப வீட்டிற்கு வந்ததும், “வீட்டுக்கு வாங்குற திங்க்ஸுக்கு நான் குடுத்துப்பேன். நீ ஏன் காசு குடுக்கற?” என்று எரிச்சலான குரலில் கணவன் கேட்டதற்கு, “ஏன்னா நானும் இந்த வீட்டுல தான் இருக்கப் போறேன். அதான்…” என்று பதிலளித்து விட்டு சமையல் அறையில் அனைத்தையும் அடுக்கி வைக்க சென்றாள் தமிழழகி.
இந்த எரிச்சலும் கோபமும் பின் வந்த நாட்களில் கூடுவதும் குறைவதுமாக கபடி விளையாடியது இருவரிடமும்!
வந்த முதல் நாள் இரவு உணவை முடித்துக் கொண்டு படுக்க செல்லலாம் என இருந்த தமிழ், ஒரு கணம் குழம்பிப் போனாள். செழியனின் அறையில் படுப்பதா அல்லது மற்றொரு அறையில் படுப்பதா என சிந்தனை செய்தவள் பின், ஒரு வாரமாக அவனுடன் ஒரே அறையில், கட்டிலில் படுத்துவிட்டு இப்போது வேறு அறை சென்றால் எப்படி எடுத்துக் கொள்வானோ என நினைத்து அவன் அறைக்குச் சென்றாள்.
ஏற்கனவே அங்கே படுத்திருந்தவன் இவளை கண்டதும், “நீ அந்த ரூம்லயே படுத்துக்கோ” என கூறவும், கோபத்தின் மறு வடிவமாக மாறினாள் தமிழ். நேரே மற்றொரு அறைக்கு வந்து படுத்தவள், ‘பைத்தியம், பைத்தியம்!! சரியான லூசுக்கு என்னை கட்டி வைச்சுருக்காங்க… கீழ படுக்கப் போகும் போது ஒரு வாரம் மேல படுன்னு சொல்லிட்டு, இப்போ இந்த ரூம்முக்கு அனுப்பிட்டான்…’ என திட்டிக் கொண்டே தூங்கினாள்.
செழியன் இப்படி செய்ததுக்கு பின் இருந்த உண்மையான காரணம் தெரிந்தால் எப்படி உணர்ந்துருப்பாளோ? கடவுளுக்கே வெளிச்சம்! தமிழழகியை ஒரே அறையில், தன் கட்டிலிலேயே படுக்க வைத்துக் கொண்டு நிம்மதியாக உறங்க முடியவில்லை செழியனுக்கு. அவளை பார்த்துக் கொண்டே பாதி நேரம் முழித்திருந்தவன், சென்னைக்கு வந்தும் அதை தொடர விரும்பவில்லை…
அதனால் தான் அவளை மற்றொரு அறைக்கு அனுப்பினான். இவ்விஷயத்தில் தமிழுக்கு கோபம் என்றால், மறுநாள் வங்கியில் இருந்து திரும்பியதும் செழியனுக்கு கோபம் பொங்கிற்று. ஹாலில் ரக்ஷனுடைய புகைப்படத்தை சுவற்றில் ஒட்டி வைத்திருந்ததின் பக்கத்தில், அபினவ்வுடைய புகைப்படமும் ஒட்டி வைக்கப்பட்டிருந்தது! அதை பார்த்து தமிழழகியின் முகத்தை அவன் கோப விழிகளால் விழிக்க, அதை அழகாக தாங்கிக் கொண்டு அடுத்த வேலையை பார்க்கப் போனாள் அவள்.
வந்தவுடன் சண்டை பிடிக்க வேண்டாமென செழியனும் விட்டுவிட்டான். மறுநாளிலிருந்து சிறு பிள்ளைகள் போல் யார் முதலில் குளிப்பது என்ற பிரச்சனை வந்தது. “உங்க ரூம்ல தான் அட்டாச்சுடு பாத்ரூம் இருக்குல? அங்க போங்க…. எனக்கு டைம் ஆகுது…”
“அது சின்ன பாத்ரூம்… நான் இங்க தான் குளிப்பேன்.”
நீ என்ன சொல்வது நான் என்ன கேட்பது என்ற நிலையில் இருவரும் முறுக்கிக் கொண்டு நின்றனர். மீண்டும் தமிழே ஆரம்பித்தாள். “நான் சமையல் எல்லாம் முடிச்சிட்டு  தான் குளிக்க முடியும், நீங்க சீக்கிரமா எழுந்து குளிக்கலாம்ல?”
“நான் எப்போவும் ஏழு மணிக்கு தான் எழுந்துப்பேன். ஏன் நீ எழுந்தவுடனே குளிக்கறது??”
இந்த பிரச்சனை ஒரு பக்கமென்றால், தான் பணிபுரியும் வங்கிக்கு காலையில் செல்வதற்கு தமிழழகிக்கு கடுப்பாக இருந்தது. வங்கியின் அருகிலேயே ஹாஸ்டலில் தங்கியிருந்தவள், தற்போது அடுத்த ஸ்டாப்பே என்றாலும் ஷேர் ஆட்டோ அல்லது கூட்டம் நிறம்பி வழியும் பஸ் பிடித்து போக வேண்டியிருந்தது. செழியன் நினைத்தால் அவளை காலையில் மட்டுமாவது டிராப் செய்யலாம். அவன் தான் நினைக்கவில்லையே! வீட்டு வேலைகளை செய்யும் ஆள் முன் போல் இப்போதும் தொடர, காலையில் சமையல் வேலை செய்து, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை துணி இருந்தால் வாஷிங் மிஷினில் போட்டு அலுவகத்திற்கு ஓடினாள் தினமும்.
இரண்டு வாரம் இப்படியே முட்டிக் கொள்வதிலேயே கழிய, ஒரு நாள் சிறிதே பிணைப்பு ஏற்பட்டது. அன்று தமிழழகி வங்கிக்கு சீக்கிரம் செல்ல வேண்டிய சூழ்நிலை. அலாரம் வைத்து எழுந்தும், நினைத்த நேரத்தில் எந்த வேலையும் நடக்கவில்லை. இவள் சுடிதாருடன் குளியல் அறைக்குள் நுழைய போன போது, செழியன் முந்திக் கொண்டான்!
‘சே, ஜஸ்ட் மிஸ்’ மனதில் கறுவிக் கொண்டே, அடுப்படிக்குள் நுழைந்து இருவருக்கும் மதிய உணவை கட்டிக் கொண்டாள். வேலை முடிந்து வெளியே வந்தும், செழியன் குளித்து வந்தபாடாக காணோம்! குளியல் அறை கதவை தட்டி, “எனக்கு லேட் ஆகுது, சீக்கிரம் வாங்க…” என கத்தினாள். அவன் தான் வரவில்லை என்று பார்த்தால், பதிலும் வரவில்லை…
கதவையே முறைத்துக் கொண்டு அழகி நின்ற நிமிடம், செழியன் குளியல் அறை கதவை திறந்துக் கொண்டு வெளி வந்தான். வெற்று மார்புடன் அவனை பார்த்தும் தமிழுக்கு எந்த உணர்வும் ஏற்படவில்லை. அவள் மூளை கிளம்ப நேரம் இல்லை என அறிவுறுத்த அதிலேயே சுழன்றாள். ஆனால், அவளை ஏற இறங்க நன்றாகவே பார்த்தான் அவளின் கணவன்.
எல்லாம் ஒரு பத்து நொடிகள் தான். பின், தலையை உலுக்கிக் கொண்டு செழியன் உடை மாற்றி தானும் அலுவகம் கிளம்பினான். குளித்து பத்தே நிமிடத்தில் ரெடியான தமிழழகி, சாப்பாடு பையை எடுத்துக் கொண்டு, தன் அலைபேசியை தேடினாள். அப்போது தான் டிபன் சாப்பிட்டுக் கொண்டிருந்த செழியன், ஏன் இவ்வளவு சீக்கிரமாக கிளம்புகிறாள் என அவளையே நோட்டமிட்டான்.
ஒரு வழியாக சார்ஜில் இருந்த செல்போனை கண்டேடுத்துக் கொண்டு, அவனை பார்த்து “வரேன்” என சொல்லி விடைப்பெற்றாள். அவள் சாப்பிடவில்லை என்பது அப்போது தான் நினைவு வர, “ஹே சாப்பிடல??” என வாசல் பக்கம் போனவளை பார்த்து கேள்வி எழுப்பினான்.
‘ஆமா ரொம்ப தான் பாசம் பொங்குது’ என இளப்பமாக நினைத்துக் கொண்டு, வெளியே “எனக்கு லேட் ஆச்சு, நான் கிளம்பறேன்.” என அவசர அவசரமாக அவன் பேசவும் இடம் தராமல் செருப்பை மாட்டிக் கொண்டு கிளம்பினாள்.
வீட்டில் இருந்து மெயின் ரோட்டிற்கு நடக்கும் போது நூறு முறையாவது செழியனை மனதிற்குள் திட்டி இருப்பாள் அவன் அருமை மனைவி. தன் அவசரத்தை பார்த்து இன்றைக்காவது அவன் வங்கியில் டிராப் செய்வான் என நப்பாசை கொண்டவளுக்கு, கோபத்திற்கு கேட்கவா வேண்டும்?
‘நல்லா முறைச்சு முறைச்சு சைட் அடிக்கத் தான் இருக்கான்… இனிமே பார்க்கட்டும் கண் ரெண்டையும் குத்திடறேன்! இனிமேல் இருக்கு அவனுக்கு.’ மிகவும் எரிச்சலான மனநிலையில் பேருந்து நிறுத்தம் வந்து நின்றால், ஷேர் ஆட்டோவும் வரவில்லை, பேருந்தும் வரவில்லை…. தன் தலைவிதியை நொந்தபடி ஆட்டோவுக்கு கை காட்டலாம் என இருந்தவளின் முன், திட்டு வாங்கிய மகராசன் தோன்றவும், எரிச்சல் என்ற எரிமலை வெடித்தது.
ஆனால், பொது இடம் என்பதால் எதையும் வெளிகாட்டிக் கொள்ளாமல் இரண்டடி தள்ளி நின்று தனக்கும் அவனுக்கும் ஒன்றுமில்லை என்பது போல அவள் நிற்க, அப்போதும் அவள் பக்கத்தில் கொண்டு சென்று நிறுத்தி, “ஏறு டிராப் பண்றேன்” என அசால்டாக கூறினான்!
கூலர்ஸ் எல்லாம் போட்டுக் கொண்டு வந்தவனை, முறைத்து பார்த்து நின்றுக் கொண்டிருந்தவளை பின்னால் ஒளியெழுப்பிய பேருந்தின் ஹார்ன் சத்தம் திசை திருப்பியது. “நீங்க போங்க…” என அழகி சொன்னதை செழியன் காதில் வாங்கியதாகவே காணோம். வேறு வழியில்லாமல், அவன் பின் அமர்ந்துக் கொண்டவள், மனதில் இருந்ததை வார்த்தையாக கொட்டத் தொடங்கினாள்.
“வீட்டுல இருந்தே என்னை கூட்டிட்டு வந்திருக்கலாம்ல? இப்போ மட்டும் எதுக்கு வந்தீங்க??”
“என்னை கூட்டிட்டு போய் விடுங்கன்னு நீ கேட்டியா? சும்மா என்னை சொல்லாத!”
“அட்லீஸ்ட் என்னை ஃபர்ஸ்ட் குளிக்க விட்டுருந்தா நானே கிளம்பி போயிருப்பேன்… அதுவும் பண்ணலை…”
“நீ இன்னிக்கு சீக்கிரமா போறேன்னு எனக்கு எப்படி தெரியும்? மைன்ட் ரீடிங் எல்லாம் எனக்கு தெரியாது… உனக்காக முழுசா டிபன் கூட சாப்பிடாம கிளம்பி வந்திருக்கேன், தெரிஞ்சுக்கோ.”
“நான் கூட தான் காலையில காபி குடிச்சதோட கிளம்பிட்டேன்…. டிபன் பக்கமே போகல!”
இருவரும் இப்படி வக்கீலை போல் வாக்குவாதம் செய்தபடி, தமிழ் வேலை செய்யும் வங்கியின் முன் வந்து நிற்க, இறங்கியதும் ஒன்றும் சொல்லாமல் வங்கியின் உள் சென்றவளை பார்த்து வாயை பிளந்தான் அவள் கணவன்.
‘அடிப்பாவி ஒண்ணுமே சொல்லாம போறா!!’ மனதில் இவன் நினைத்தது அவளுக்கு கேட்டதோ? ஓட்டமாக திரும்ப வந்தவள், அவன் முன் நின்றவள் கைக்கடிகாரத்தை பார்த்துவிட்டு பேசலானாள்.
“அஞ்சு நிமிஷம் முன்னாடியே வந்துட்டேன்… தாலி கட்டுனவரு தான? தாங்க்ஸ் எல்லாம் சொல்ல முடியாது! ஏன்னா இது பெருமை இல்ல கடமை!! வரேன் பை…”
கை காட்டிவிட்டு திரும்பியவள் அவன் எதிர்பாரா தருணத்தில், அவனுடைய கூலர்ஸை கழட்டி எடுத்துக் கொண்டு நடையை கட்டினாள். “ஹே அதை எதுக்கு எடுக்குற குடு!” ஒன்றும் புரியாமல் செழியன் கேட்க, சில அடிகள் எடுத்து வைத்த தமிழ், எதுவும் கூறாமல் அவனை பார்த்து புன்னகைத்து விட்டு செல்ல, கலவையான உணர்வுடன் செழியன் செல்லும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
நன்றி கூற முடியாது என உரிமையுடன் பேசி அவள் கூலர்ஸை எடுத்த விதம், நெஞ்ஜோரமாய் ஒரு மலரை மொட்டவிழ்த்து விட, மேலும் அவள் திரும்பி பார்த்து புன்னகைத்தது, அதை முழுதாக மலரச் செய்தது! ‘கொழுப்பு உடம்பு முழுக்க மொழுப்பு’ என செல்லமாக அவனே அறியாமல் கொஞ்சிக் கொண்டே தன் அலுவகத்திற்கு வண்டியை இயக்கினான்.
சில நாட்களில், அவளை முழு மனதாக திட்டப் போகிறோம் என அப்போது அவன் அறியவில்லை!!

Advertisement