Advertisement

அத்தியாயம் – 6
மேள சத்தம் காதை பிளக்க, சுற்றியிருந்த சுற்றத்தாரின் பேச்சில் தலை வலிக்க, தன் முன்னே மூட்டப்பட்ட ஹோம புகை மண்டலத்தில் எரியும் மரதுண்டுகளாய் தன் மனமும் எரிவதை போல் உணர்ந்தான் செழியன். உள்ளுக்குள் பிரளயமே நிகழ்ந்தாலும், உதடுகள் மட்டும் ஐயர் சொன்ன ஸ்லோகங்களை வழிமொழிந்தது! முகமும் ஒன்றும் அஷ்டக்கோணலாய் இருக்கவில்லை…
சாதாரணமாக மிகவும் கடினப்பட்டு வைத்திருந்தான். அவனுக்கு நேர்மாறாய் துக்கத்தில் நெஞ்சம் பொங்கவில்லை என்றாலும், பழக்கமற்ற மூக்குத்தியும், ஒட்டியானமும், நெற்றிசுட்டியும், மேலும் கை நிறைய அணிந்திருந்த வளையல்களும், கழுத்தில் அடுக்கடுக்காக தொங்கிய தங்க மாலைகளும் தமிழழகிக்கு எரிச்சலை வாரியிரைத்தன! இதில் ஹோம புகையால் கண்களில் இருந்து பெருகும் நீர் வேறு!
அதை துடைக்கவென அவள் மாமன் மகள் ஒத்தாசையாக இருந்தும், அழகிக்கு எப்போதடா இந்த முகூர்த்தம் முடியும் என்று எண்ணாமல் இருக்க முடியவில்லை…
ஒரு வழியாக ஐயர் தன் மந்திரங்களை முடித்துக் கொண்டு மேள வாத்தியர்களிடம் கைக் காட்ட, கெட்டிமேள சத்தம் ஒலிக்க, செழியனின் கையால் மங்களநாணை வாங்கிக் கொண்டாள் தமிழழகி. அதுவரை இருந்த எரிச்சல், கோபம் அனைத்தையும் மறந்து, அவள் அன்னை சொன்னது போல கைக்கூப்பி தீர்க்கசுமங்கலியாக இருக்க வேண்டினாள்.
அதை பார்த்த செழியனுக்கு இவள் இப்போது என்ன வேண்டுவாள் என்ற எண்ணமே ஓடியது! கூடவே நேற்றைய தினம் இருவருக்கும் நடந்த சம்பாஷனையும் தப்பாமல் நிழலாடியது.
இரு வீட்டாரும் மண்டபத்தில் கூடிய பின்னர், பெரியவர்கள் வேலை வேலை என பறக்க, மாலையில் நடக்கும் ரிசப்ஷனுக்கு இன்னும் நேரமிருந்ததால், செழியன் அவன் நண்பன் ராகுலுடன் பேசிக் கொண்டிருந்தான். அப்போது தான், தமிழழகி ஃபோன் பேசிக் கொண்டே தன் அறையில் இருந்து வெளிப்பட்டாள்.
அவள் பேசி முடித்ததும் இவர்களை கவனிக்க, செழியனை கண்டு ஒரு நிமிடம் தயங்கினாள், புன்னகைப்பதா வேண்டாமா என… செழியன் அலட்சியமாக நிற்க, ராகுல் தானாகவே முன் வந்து தமிழழகியிடம் தன்னை அறிமுகம் செய்துக் கொண்டான். அவனிடம் நல்ல முறையிலேயே பேசிய தமிழை கண்டு ஆச்சரியம் பொங்கிற்று செழியனுக்கு!
சிறிது நேரம் கழித்து, “சரி நீங்க ரெண்டு பேரும் பேசுங்க, நான் கொஞ்சம் வேலை இருக்கு. முடிச்சிட்டு வந்திடறேன்.” என கூறியபடியே கண்களால் செழியனுக்கு பேச சொல்லி செய்தி பிறப்பித்து அகன்றான் ராகுல். ஒரு நெடிய மூச்சை வெளியேற்றி, தன்னவளிடம் நெருங்கியவன் எடுத்தவுடனே மண் பானையை போட்டுடைத்தான்!
“நான் எங்க வீட்டுல எவ்வளவோ பேசி பார்த்தேன், கல்யாணத்த நிறுத்த சொல்லி. ஆனா, யாரும் ஒத்துக்கலை….” தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளரை போல பேசிய செழியனை கோபக் கண்களால் உறுத்து விழித்தாள் தமிழ். அவன் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் உண்டாக்கிய வலியை உள்ளே மறைத்துக் கொண்டு, வெளியே அசால்டாக கோல் அடித்தாள்.
“நீங்க சொன்னதைக்கு கீழயே ஒரு டிட்டோ போட்டுக்கோங்க, அதை தான் நானும் சொல்ல வந்தேன்!”
கூறிவிட்டு திரும்பிப் பாராமல் தன் அறைக்குள் சென்று மறைந்தாள் தமிழழகி. உள்ளே இருந்தவளின் நெஞ்சம் துக்கத்தில் முக்குளித்தது. என்ன தான் தனக்கு அவனை பிடிக்கவில்லை என்றாலும், தானும் இத்திருமணத்தை நிறுத்த முயன்றாலும், நாளை தாலிக்கட்ட போகிறவனின் திருவாயால், அச்சொற்களை கேட்டவளுக்கு மிகவும் கஷ்டமாக போயிற்று.
‘அதெப்படி எடுத்தவுடன் அவன் சொல்லலாம்?’ என எண்ணி எண்ணி மாய்ந்துப் போனாள். எல்லாம் சிறுது நேரம் தான் பின்பு, இதை தான் எதிர்பார்த்தது தானே? இதற்கு ஏன் வருத்தப்பட வேண்டும் என தன்னையே தேற்றிக் கொண்டாள்.
அதுமட்டுமின்றி, அவனுக்கு முகத்தில் அடித்தால் போல் தான் பதிலளித்து விட்டு திரும்பிப் பாராமல் வந்தது, அவள் மனதை கொஞ்சம் சந்தோஷப்பட வைத்தது உண்மை. ‘இப்படித் தான அவனும் முதல் முறை பார்த்தப்போ அவன் பாட்டுக்கு பேசிட்டு போனான். அவனுக்கு இதுவும் வேணும்! இன்னமும் வேணும்!’
தமிழ் நினைத்தது போலவே செழியன் எரிச்சலாய் நின்றது என்னவோ உண்மை. தனக்கு தான் இவளை பிடிக்கவில்லை என்று பார்த்தால், இவளும் என்னவோ சாதனை புரிந்தது போல திருமணத்தை நிறுத்த பார்த்தேன் என கூச்சமில்லாமல் கூறுகிறாள்? இவளை எப்படி சமாளிப்பது என யோசனையில் மூழ்கினான் அவன்.
ரொம்ப நேரம் யோசனையும் செய்ய இயலவில்லை…. தீச்சட்டியை மிதித்தது போல அவன் அன்னை சசிகலா, “சீக்கிரம்டா ரிசப்ஷனுக்கு டைம் ஆகுது, ரெடியாகு.” என இவனை விரட்டிக் கொண்டிருந்தார். ஆறு மணியளவில் மாறனும் நதியாவும் ஜோடியாக உள்ளே நுழைந்தனர். “ஹே சூப்பரா இருக்குடா! கோட் பட்டன் ஏன்டா போடாம இருக்க?” மாறன் வினவிக் கொண்டே பட்டன்களை போட்டுவிட, நதியா செழியனை புகைப்படம் பிடித்தாள். செயற்கை சிரிப்பு கூட இல்லாத புகைப்படத்தை பார்த்து மனம் நொந்து, மாறனிடம் அதை காட்டினாள். தமையனோ அறிவுரை மழையை கொட்டத் தொடங்கினான்.
“ஹே பிடிக்குதோ இல்லயோ ஒழுங்கா எல்லா ஃபோட்டோக்கும் சிரிச்சு வைக்குற சொல்லிட்டேன். சின்னதா ஸ்மைல் பண்ண ஒண்ணும் குறைஞ்சிட மாட்ட புரியுதா?”
மாறனை கண்களால் முறைத்த செழியனை தன் பேச்சினால் திசை திருப்பினாள். “அதை விட முக்கியம் நமக்கு தெரிஞ்சவங்க ஸ்டேஜ்ல வரப்போ அவங்கள தமிழுக்கு இன்டர்டியூஸ் பண்ணனும்! என்ன தான் இருந்தாலும் அவ நம்ம வீட்டு பொண்ணு செழியா. என்ன ஏன் ஒரு மாதிரி இருக்க?”
அவ்வளவு தான் எரிமலை பின்வருமாரு வெடித்தது. “ஆமா நம்ம வீட்டு பொண்ணு! நீங்க தான் சொல்லிக்கனும். அவளுக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமே இல்லையாம். தெரியுமா?”
இதை கேட்டு நதியாவும் மாறனும் திகைத்து நின்ற வேளையில், தமிழிடம் பேசியதை அவர்களிடம் பகிர்ந்தான் செழியன். நதியா முதலில் சுதாரித்து, “ஆமா, நீ காபி ஷாப்பில விட்டுட்டு வந்ததுக்கு வேற என்ன செய்யனும்னு எதிர்பார்க்குற?” என்று சாமர்த்தியமாக அவனை மடக்கினாள். செழியன் பேசாமல் இருக்க, மாப்பிள்ளை அழைப்புக்கு அவனை அழைத்தனர். பின், நதியாவும் மாறனுமே மேற்கொண்டு பேச இயலாமல் போனது.
ரிசப்ஷன் மேடை ஏறியவுடன் தன் அருகில் வந்து நின்ற தமிழை பார்த்து, செழியன் சிறிது அதிர்ந்தான் என்பது உண்மை! ரோஜா வண்ண பட்டில் மிளிர்ந்த தமிழழகியின் அழகை கண்டே அவன் அதிர்ந்தது… சில கணத்தில் தன்னை மீட்டேடுத்தவன், பின்பு மேடை ஏறி வந்தவர்களை நதியா கூறியது போலவே தமிழுக்கு அறிமுகம் செய்து வைத்தான். இதனால், ஆச்சரியம் தமிழுக்கே!
‘என்னடா இவன் இன்டர்டியூஸ் எல்லாம் பண்றான்??!’ என நினைத்தபடியே அவளும் அவள் பக்கத்தினருக்கு அறிமுகப் படலம் நிகழ்த்தினாள். எல்லோரையும் ஒன்றாக பார்த்ததன் விளைவா, இல்லை செழியனே அறிமுகம் செய்து வந்தவர்களிடம் ஒழுங்காக பேசியதாலா தெரியவில்லை தமிழ் சிறிது நேரத்திலேயே உற்சாகமடைந்தாள்.
சிரித்த முகமாக அவள் ஃபோட்டோவுக்கு போஸ் கொடுப்பதை பார்த்து, இவளுக்கு உண்மையிலேயே இத்திருமணத்தில் விருப்பமில்லையா என குழம்பிப் போனான். கல்யாண ஜோடி இப்படி கண்ணாமூச்சியாட அவர்களின் குடும்பத்தினர் அன்றிரவு தங்களுக்குள் ஆலோசனை நடத்தினர்.
நதியாவும் மாறனும் தங்களுக்கு வந்த புதிய தகவலை, அச்சு பிசகாமல் சுவாமிநாதனிடமும் சசிகலாவிடமும் சொல்ல, அவர்கள் ரிசப்ஷன் முடிந்து குடும்பமாக புகைப்படமும் எடுத்த பின்னர் சம்பந்தியை தனியாக சந்தித்தனர்!
கேசவனுடன் அவரின் மனைவி வள்ளியும் இருக்க, சுவாமிநாதன் நேரடியாக பேச்சை துவங்கினார். கல்யாணம் நிறுத்துவதை குறித்து தங்கள் வீட்டில் நிகழ்ந்தவற்றை கேசவனிடம் பகிர, கேசவனோ தன் வீட்டில் நடந்த கூத்தை எடுத்துரைத்தார். நால்வரும் சில நிமிடங்கள் அமைதியாக கழித்தவுடன்,  கேசவனே சமாதானப் படுத்தினார்.
“எல்லாம் இருக்கறது தான் சம்மந்தி… போக போக சரியாகிடும். ரெண்டு பேருமே சின்ன பசங்க அதான் இப்படி அவசரப்பட்டு முடிவு பண்றாங்க!”
“கரக்ட் தான். அதனால தான் நாங்க ரெண்டு பேரும் சென்னைக்கு கொஞ்ச மாசத்துக்கு போக வேணாம்னு முடிவு பண்ணிருக்கோம்.” சுவாமிநாதன் கூற, அவரின் மனைவி தொடர்ந்தார்.
“ஆமா நாங்க அங்க இருந்தா ரெண்டு பேரும் பேசிப்பாங்களோ மாட்டாங்களோ… தனியா இருந்தா பேசி, பழகத் தான வேணும். அதுவுமில்லாம, கொஞ்ச நாள்ல நதியாவும் குழந்தையோட வீட்டுக்கு வந்துருவா. அதையே காரணமா சொல்லிப்போம்….”
இருவரும் சொன்னதை கேட்டு கேசவன் தம்பதியினர் மனசை தேற்றிக் கொண்டனர். எல்லாம் நல்லபடியாக நடக்க வேண்டும் என்ற வேண்டுதலுடன் படுக்கச் சென்றனர்.
மணப்பெண் அறைக்குள் சென்ற வள்ளி அங்கே ஏதோ யோசனையில் மூழ்கியிருந்த தன் மகளை பார்த்து, அறிவுரை கூற வாய் திறந்தார். பின் விடியற்காலையில் எழ வேண்டும், இப்போது பேசினால் சரி வராது என எண்ணி இருந்த சோர்வில் பேசாமல் துயில் கொண்டார். தாய் உறங்குவதை பார்த்து, அவரை அணைத்துக் கொண்டு மனதில் எடுத்த உறுதிமொழியுடன் தமிழழகியும் தூங்கிப் போனாள்.
பெரும்பான்மையான வேண்டுதல்களின் படி கல்யாணமும் சிறப்பாகவே நடப்பெற்றது. காலையில் இருந்து கொஞ்சம் தெளிவாகவே காணப்பட்டாள் தமிழழகி. செழியன் தான் குழம்பிய குட்டையாக திரிந்தான். சில நேரம் தன்னை மறந்து மனைவியின் அழகை ரசிப்பவன், பின் அவளை தனக்கு பிடிக்காது என்று நினைவு கூர்ந்து சிந்தனையை வேறு பக்கம் திருப்புவான்.
தமிழோ வெவ்வேறு பட்டுகளில் தன் பெயருக்கேற்றார் போல் அழகுப் பதுமையாக ஒளிர, அவ்வொளியில் சிக்கிய சில்வண்டானான் செழியன்! இவனின் இந்த பார்வை மாற்றங்களை தமிழும் அறிந்தே இருந்தாள். ஆனால், அவனிடம் காட்டிக் கொள்ளவில்லை….
திருமணம் முடிந்து தமிழின் வீட்டிற்கு சென்று மாலை வரை அங்கியிருந்தனர் புதுமண ஜோடி. மதியமே தமிழை தனியாக அழைத்து, வள்ளியும் கேசவனும் பார்வதியுடன் பேசினர். அவர்கள் அறிவுரை பட்டிலை வாசிக்கும் முன்னரே தகுந்த பதிலுடன் காத்திருந்தாள் மகளானவள்.
“நீங்க என்ன அட்வைஸ் பண்ணப் போறீங்கனு தெரியும். நான் கண்டிப்பா நல்லபடியா தான் நடந்துப்பேன். அதைபத்தி நீங்க ரெண்டு பேரும் கவலைப்படாதீங்க. அங்க எல்லாருமே நல்ல தான் பேசறாங்க பழகாறாங்க, சோ ஒண்ணும் பிரச்சனை வராதுனு நினைக்கிறேன். மத்தது எல்லாம் உங்க மாண்புமிகு மாப்பிள்ளை கையில தான் இருக்கு!!!”
தங்களை பேசவே விடாமல் தமிழ் பேசியதை கேட்டு, அவளின் பெற்றோர்கள் மேலே எதுவும் சொல்ல முடியாமல் கலைந்து சென்றனர். தனித்து நின்ற பார்வதியை பார்த்து, “ஹே கிழவி இன்னிக்காவது என்னை திட்டாம இருப்பியா?” என அவரின் கன்னங்களை கிள்ளிக் கொண்டே கேட்ட பேத்தியை, உடனே திட்டினார் பார்வதி! “அடியே விடுடி… கன்னத்து எலும்பு எல்லாம் நோவுது. உன்கிட்ட அந்த பிள்ளையான்டான் என்ன பாடுப் படப் போறானோ??” கூறிக் கொண்டே சென்ற பாட்டியை புன்னகையுடன் பார்த்தாள் தமிழழகி.
மாலை செழியனின் வீட்டிற்கு கிளம்பும் போதும் அச்சிரிப்பு தொடர்ந்தது.
செழியனின் குடும்பத்தாருக்கு ஒரே ஆச்சரியம்…. பிடிக்காத திருமணத்தை ஏற்றுக் கொண்ட பெண் இப்படி சிரித்த முகமாக, நல்ல முறையில் தங்களிடம் பேசியது அவர்களை ஆச்சரியக் கடலில் தள்ளியது. தாங்களாகவே முன் வந்து தமிழழகியிடமும் நன்றாக பேச, அவளும் நன்கு உரையாடினாள் எல்லோரிடமும், செழியனை தவிர! இதை பார்த்தோ அல்லது செழியனுக்கே தோன்றியதோ? அவனும் கேசவனிடமும், வள்ளியிடமும் ஒழுங்காக உரையாடினான்.
இரவு உணவு முடிந்து பெற்றோர்கள் கிளம்பும் சமயம் தமிழின் மனம் சிறிது துனுக்குற, நதியா அவளிடம் பேசி சரிப்படுத்தினாள்! அன்றைய இரவில் பேச வேண்டியதை ஒரு முறை மனதில் ஒப்பித்து பார்த்தவளை, செழியனின் அலங்கரிக்கப்பட்ட அறைக்குள் அனுப்பினர்.
தமிழழகி உள் நுழைந்ததும் நிமிர்ந்து பார்த்த செழியன் ஒரு நொடி அவளை உற்று நோக்கி, பின் மீண்டும் தன் அலைபேசியில் பார்வையை ஓட்டினான்.
அவன் அருகில் வந்து தொண்டையை கனைத்தவளை செழியன் கண்டுக் கொண்டதாகவே தெரியவில்லை. “ஹலோ உங்கள தான்!”
அழுத்தமான குரலில் தமிழ் வினவ, அப்போது தான் கட்டிலின் மறுபுறத்தில் அவள் அமர்ந்திருந்தது அவனுக்கு தெரிந்தது. தலையில் ஓடிய ஆயிரம் ஆயிரம் எண்ணங்களை பூட்டிக் கொண்டு, “சொல்லு” என ஒற்றை வார்த்தையில் பதிலளித்தான்.
“கொஞ்சம் பேசனும், அந்த செல்போனை கீழ வைக்கறீங்களா?” நக்கலுடன் கூறிய புது மனைவியை பார்த்தவனுக்கு ஆசை பொங்காமல், சிறிது கோபம் பொங்கியது! ஆனாலும், அவளின் குரலின் தோனியில் ஏதோ முக்கியமாக பேசப் போகிறாள் போல என நினைத்து அலைப்பேசியை கீழே வைத்தான்.
அதை பார்த்து நிம்மதியுற்று பேச ஆரம்பித்தாள் தமிழ். “நமக்கு பிடிக்காம தான் கட்டி வைச்சாங்க நம்ம அப்பா, அம்மா. அதுக்காக என்னால எப்போவும் உங்கள மாதிரி முகத்த தூக்கி வைச்சுட்டு இருக்க முடியாது. கல்யாணம் முடிஞ்சாச்சு! வேற வழியில்லை… பிராக்டிக்கலா யோசிங்க, ஒருத்தர் கிட்ட ஒருத்தர் பேசி தான் ஆகனும். இங்க இல்லைனாலும், சென்னையில நம்ம ரெண்டு பேரு தான்.
அப்போவும் இந்த ரெண்டு நாள் இருந்த மாதிரி பேசாம இருக்க முடியாது. அட்லீஸ்ட், நான் அப்படி இருக்க விரும்பலை! நான் வீட்டுலயே எவ்ளோ கோபம்னாலும் பேசி தீர்த்துப்பேன், பேசாம ஒரே வீட்டுக்குள்ள என்னால முடியாது. சோ, நான் பேசுறப்போ நீங்களும் பேசித் தான் ஆகனும். தேவையில்லாம நானும் பேச்சு வைச்சுக்க மாட்டேன். நீங்க சண்டையே போட்டாலும் எனக்கு நோ பிராப்ளம்… ஆனா, இந்த முனுமுனுக்குற வேலை எல்லாம் ஆகாது.
இப்போ பேசற மாதிரி ஒன் வொர்ட் ஆன்ஸருக்கும் கண்டிப்பா நோ தான்! ஒழுங்கா பதில் வரனும்.”
இதையெல்லாம் கோர்வையாக தமிழழகி பேசிக் கொண்டே வந்து சிறிது இடைவெளி விட்டு, மீண்டும் தொடர்ந்தாள்.
“இது எல்லாத்தையும் விட ரொம்ப முக்கியமான விஷயம், அபினவ் பத்தி நீங்க எதுவும் என்கிட்ட பேசக் கூடாது. அதே மாதிரி நானும், ரக்ஷன் பத்தி உங்ககிட்ட எதுவும் பேச மாட்டேன். மத்தபடி உங்க வேலையை நீங்க பாருங்க என்னோட வேலையை நான் பார்த்துக்கறேன். என்ன ஓகே வா?”
தமிழழகி கட்டுரை போல பெரிதாக அதே சமயம் மிரட்டலான குரலில் பேசி முடித்து ஆவலாக செழியனின் முகத்தை பார்க்க, அவனோ அக்கட்டுரைக்கு முடிவுரை அளித்தான். “இங்க பாரு நீ சொல்றது எல்லாத்தையும் கேட்டுட்டு இருக்க முடியாது. நிறைய கன்டிஷன்ஸ் போடுற! லாஸ்ட் கன்டிஷன் மட்டும் ஓகே.… மத்தது எல்லாம் ட்ரை பண்றேன்!”
செழியன் சொன்னதை கேட்டு தலையாட்டிய தமிழ், பின் ‘குட் நைட்’ என கூறி அந்த பெரிய கட்டிலின் மறுகோடியில் இருந்த தலையனை போர்வையை எடுக்க முயல, செழியன் அவளை மேலேயே படுக்குமாறு கூறினான். அவனை விசித்திர பார்வை பார்த்துக் கொண்டே, படுத்தவள் சிறிது நேரத்தில் தூங்கிப் போனாள்.
அவளையே தூங்காமல் பார்த்துக் கொண்டிருந்த செழியனுக்கு தான் விடியா இரவாக நீண்டது அவ்விரவு!!

Advertisement