Advertisement

அத்தியாயம் – 5
செழியன் முடிந்த மட்டும் பொறுத்தவன், பின் தாங்க மாட்டாமல் வெள்ளியன்றே கிளம்பி ஊருக்கு சென்று விட்டான். சனிக்கிழமை பொழுது புலர்ந்ததே உச்சி பிள்ளையார் ஊராக இருக்க, காலையிலேயே பிரச்சனையை குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தான்!
காலையில் அவன் அன்னை சமையல் வேலையில் மூழ்கிவிட, சுவாமிநாதன் அப்போது தான் நடைபயிற்சி முடித்துவிட்டு வந்திருந்தார். நதியாவுடனும் குழந்தையுடன் வீடியோ சாட்டிங்கில் பேசிக் கொண்டிருந்த மாறனை, “அம்மாமாமா” என உரக்க கத்திய செழியனின் குரல் திசை திருப்பியது…. எதுக்கு இந்த காட்டு கத்தல், என பேசுவதை நிறுத்திவிட்டு, ஹாலிற்கு சென்று பார்த்தால் செழியன் பெரிய கதையை படமாக ஓட்டினான்!
அவன் தந்தையிடம் பெரிதாக பேச்சுவார்த்தை இல்லை என்பதால் தான் அன்னையை உரக்க அழைத்தான் செழியன். சசிகலா வந்ததும், தமிழழகியை காணச் சென்றது அங்கு நடந்தது என அனைத்தையும் ஒன்று விடாமல் ஒப்பித்தான். இளைய மகன் வார்த்தைகளால் கூறிய விஷயத்தை ஜீரணிக்க முடியாமல், முதலில் பொங்கியவர் சுவாமிநாதனே!
“இப்போ என்ன தான் சொல்ல வர? அத மட்டும் சொல்லு!”
வெகு நாள் கழித்து தந்தை பேசியது எல்லாம் செழியனின் மனதில் பதியவில்லை… அவன் தன் முடிவை முன் வைப்பதில் கவனமாக இருந்தான். சசிகலாவும் அமைதியாக இராமல், “ஏன்டா அந்த பொண்ணுகிட்ட போய் பிரச்சனை பண்ணிட்டு வந்து இருக்க?” என கோபம் கொள்ள, செழியனின் கடுப்புகள் அணை உடைத்து பெரு வெள்ளம் கொண்டது.
“நான் ஒண்ணும் பிரச்சனை பண்ணலை… எனக்கும் அவளுக்கும் செட் ஆகாது. இந்த கல்யாணத்தை நிறுத்திக்கலாம்.”
கத்தியின்றி ரத்தமின்றி யுத்தத்தை வார்த்தைகள் கொண்டு போர் புரிந்த மகனை அதிர்ச்சியோடும் கோபத்தோடும் பார்த்தனர் செழியனின் குடும்பத்தினர்.
மாறன் அவன் அருகே சென்று, “டேய் கொஞ்சம் சும்மா இரு. எல்லாம் மெதுவா பேசிக்கலாம்.” என முணுமுணுக்க செழியன் கேட்டால் தானே! அவன் தமையனின் பேச்சை தூசியாக மதித்து, தந்தையின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான் செழியன்.
அவரோ ஒரு நிமிட அமைதிக்கு பின், அழுத்தமான குரலில் அவரின் வேறுபாட்டான முடிவை கூறினார். “அப்படியெல்லாம் இந்த கல்யாணத்தை நிறுத்த முடியாது! கண்டிப்பா நடக்கும்.”
எரிந்துக் கொண்டிருந்த செழியனின் கோபத் தீ காட்டுத் தீயாக உருவெடுக்க, அவனும் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டான். “கல்யாணம் செஞ்சுக்கப் போறது நான் தான? எனக்கு இந்த கல்யாணம் பிடிக்கலை. நிறுத்திடுங்க…. அவ்ளோ தான்!”
“அதெப்படி முதல்ல பிடிச்சுது, அப்புறம் பிடிக்கலை??”
“அது எல்லாம் எனக்கு தெரியாது. இப்போ வேணாம்னு சொல்றேன்ல…. விட்டுடுங்க.”
“முடியாது, ஏற்கனவே கொஞ்சம் விட்டதுக்கு தான் இப்படி லூசு மாதிரி பேசிட்டு நிக்கற. இதுக்கு மேலையும் விட முடியாது. நீ தமிழழகியை தான் கல்யாணம் செஞ்சுக்கனும்.”
செழியன் இதை எதிர்த்து பேசுவதற்குள் அவன் அன்னை பேசினார். “டேய் உனக்கு பிடிச்ச ஹீரோ அந்த பொண்ணுக்கு பிடிக்கலைனு கல்யாணம் நிறுத்தப் போறியா? ஏன்டா இப்படி அந்த ரக்ஷன் வெறி பிடிச்சு அலையற!! இது உன்னோட லைப் மட்டுமில்லைடா, ஒரு பொண்ணோட வாழ்க்கையும் இதுல இருக்கு செழியா. அவசரப்படாம ஒழுங்கா யோசி!”
அவர் பேசி முடித்ததும் காதுகள் இரண்டையும் மூடிக் கொண்டு, “ஐய்யோ இதுல என்னை கம்பெல் பண்ணாதீங்கமா…. என்னால முடியாதுனா முடியாது தான்!” என்று பெருங்குரல் எடுத்து செழியன் கத்தவும், சுவாமிநாதனுக்குள் எரிமலையே வெடித்தது!
“உன்னை யாரும் இங்க கம்பெல் பண்ணலை. இந்த கல்யாணம் நடக்கப் போதுனு இன்பர்மேஷன் தான் குடுக்கறோம். இந்த ஹீரோவொர்ஷிப்பால நீ நல்லா பட்டா தான்டா திருந்துவ! உனக்கு பிடிக்காத அபினவ்வ அந்த பொண்ணுக்கு பிடிச்சிருக்கு…. எத்தனை த்டவ இதால பிரச்சனை பண்ணிருப்ப? இதுக்காகவே இந்த கல்யாணம் நடத்திக் காட்டுவேன்! நீயா எதாவது புதுசா குழப்பம் செஞ்ச, அப்புறம் உன்னை ஒரேயடியா தலை மூழ்கிட்டு தான் மறுவேலை பார்ப்பேன் சொல்லிட்டேன்!!!”
சுவாமிநாதன் சிங்கமாக கர்ஜித்து உள்ளறைக்கு செல்ல, அவரின் மனைவியும் இரண்டடி எடுத்து வைத்து, “அப்பா சொன்னது தான் என்னோட முடிவும்” என கூறிச் சென்றார். அவ்வேளையிலும் வசூல் ராஜா படத்தில் கமல் தன் தாயிடம் கெஞ்சுவதும், அவர் இதே வசனத்தை கூறி செல்வதும் தான் செழியனுக்கு நினைவு வந்தது. அந்த அளவிற்கு சினிமா அவன் நாடி நரம்புகளில் குருதியாக ஓடியது….
மாறனுக்கு இவன் தமிழழகியிடம் பழகிய முறை பிடிக்கவில்லை என்றாலும், இப்போது தான் தந்தை மிரட்டிச் சென்றதால், தானும் எதுவும் சொல்ல வேண்டாம் என எண்ணி அமைதியாக அவன் அறைக்குச் சென்றான். பின்னே நதியாவிடம் அனைத்தும் கூற வேண்டாமோ?!
வீட்டில் நடந்ததால் மிகுந்த கோபம் கொண்ட செழியன், அவன் பைக்கை எடுத்துக் கொண்டு அவன் பல ஆண்டு நண்பன் ராகுலின் வீட்டிற்கு சென்றான். இவனை கண்டதும், “வாடா கல்யாண மாப்பிள்ளை…. டேட் பிக்ஸ் பண்ணியாச்சா?” என ஆவலாக கேட்க, செழியனுக்கு ‘கடவுளே’ என்று இருந்தது. பூ வைத்த நிகழ்வு நடந்த அன்றே, வாட்ஸ் ஆப் குரூப்பில் கல்யாணம் முடிவானதாக செழியன் கூறியிருந்தான். அது இப்போது பின் விளைவுகளை கொடுத்தது!
கொடுமைக்கே கொடுமையாக இருப்பான் போலவே, என திட்டிக் கொண்டு அவனிடம் நடந்தவற்றை ஒவ்வொன்றாக கூறிக் கொண்டிருந்தான் செழியன். அவன் பேசப் பேச ராகுலின் நக்கல் கருத்துகளும் குறைவின்றி வெளி வந்தது.
“ஹோஹோ ஃபோட்டோ பார்த்தே விழுந்திட்டியா… நைஷ் நைஷ்!”
“கோவில்ல பேச சொன்னப்போ பேசியிருக்கலாம் மச்சி, தப்பு பண்ணிட்ட….”
“மாமனாரே நம்பர் குடுத்தாரா! வாரே வா… அதான் இந்த ஒரு வாரமா குரூப் பக்கம் ஆளே காணோமா?”
“அடப்பாவி அந்த பொண்ணுக்கு அபினவ் பிடிக்கும்றதுக்காக கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டியா!?? டேய் புரிஞ்சு தான் பேசறீயா??”
அதுவரை ராகுல் கூறியதற்கு எல்லாம் பதில் சொல்லாமல் இருந்த செழியன், தற்போது பதில் கொடுத்தான். “பின்ன வேற என்ன பண்ண சொல்ற??”
“ஹே எனக்கு கூடத்தான் நம்ம ரக்ஷன்னா உசுரு! ஆனா, அதுக்காக கல்யாணம் நிறுத்துறது எல்லாம் ரொம்ப ஓவரா இருக்குடா!! நமக்கு பிடிச்ச விஷயம் எல்லாருக்கும் பிடிக்கனும்னு அவசியமில்ல…. புரியுதா?”
“அவளுக்கு ரக்ஷனை பிடிக்காதது மேட்டர் இல்ல. அந்த லூசு அபினவ்வ பிடிச்சுருக்கு! அதான் எனக்கு பிடிக்கலை….”
“சரி விடு அப்பா முடிவா என்ன தான் சொன்னாரு??”
சுவாமிநாதனின் முடிவை விளக்கிய நண்பனை ஆறுதல் படுத்தினான் ராகுல். “விடுடா ஆல் ஓவர் தி வொர்ல்ட், அப்பன்ஸ் அப்படி தான் இருப்பாங்க! நாம தான் வெப்பன்ஸ் வைச்சு ஹேன்டில் பண்ணனும், புரியலை? அம்மா தான் நம்ம வெப்பன்! அம்மா என்ன சொன்னாங்க??”
“அப்பா முடிவு தான் என்னோடதும்னு டயலாக் பேசிட்டு போயிட்டாங்க….”
“வாட் அ புயூட்டிபுல் பேமிலி!!”
செழியன் இருந்த எரிச்சலில் ராகுலின் முதுகில் தர்ம அடியை வைத்து நிமிர்ந்து, “கவுன்டர் அடிக்காம ஒழுங்கா ஐடியா குடு.” என்று மிரட்டினான். முதுகை ஒரு கையால் தேய்த்துக் கொண்டு, “பேசாம பொண்ணு வீட்டுல இதை பத்தி பேசிடேன்டா….?” என்று எக்குத்தப்பான வழியை காட்டினான் ராகுல்.
“இல்லடா, அப்பாக்கும் அம்மாக்கும் ஏற்கனவே என் மேல கோபம் இதால. இப்போ பேசினா தப்பாகிடும். யாரையும் அசிங்கப்படுத்தாம, அவங்க மனச மாத்த மட்டும் வழி சொல்லு!”
யோசிப்பது போல் சிறிது நேரம் நடித்த ராகுலை கண்டு, திடீரென செழியன் சொன்னான். “ஹே எனக்கு ஒரு ஐடியாடா. நீ வீட்டுக்கு வந்து கொஞ்சம் சப்போர்ட் பண்ணி பேசுனா நல்லா இருக்கும்னு தோனுது. என்ன ஓகே வா??”
“அடேய் நீயே உங்க அப்பாகிட்ட பேச மாட்ட ஒழுங்கா…. இதுல நான் வந்து என்ன பேச?”
“கரக்ட் தான். அண்ணி இதை கேட்டாங்கனா ரொம்ப திட்டுவாங்க. இல்லனா எப்போவுமே எனக்கு அவங்க தான் ரொம்ப சப்போர்ட் செய்வாங்க. மாறனும் இன்னிக்கு டென்ஷன் ஆயிட்டான்! இந்நேரம் மேட்டர் அவங்க காதுக்கு போயிருக்கும்….”
ராகுலிடம் புலம்பித் தள்ளிவிட்டு, எந்த வழியும் தெரியாமல் வீட்டிற்கு புறப்பட்டான் செழியன். ராகுலுக்கு புயல் அடித்து ஓய்ந்தது போல தோன்றியது. செழியன் எடுத்த முடிவில் துளியும் விருப்பமில்லை என்பதால் தான் எந்த வழியையும் அவன் நண்பனுக்கு கூறவில்லை….
இரண்டு நாட்கள் யாரிடமும் பேசாமல் தான் கோபமாக இருப்பதாக காட்டிக் கொண்ட செழியனை வீட்டில் ஒருவரும் கண்டுக் கொள்ளவில்லை! பெற்றோர்களோ எப்போதும் போல இருக்க, மாறனோ ‘என்ன நடந்தா என்ன? மாமா நீ ரசத்த ஊத்து’ என்ற வகையில் உலாவினான் வீட்டில்! விடுமுறை முடிந்து ஞாயிறு மாலை பஸ் ஏறியவனுக்கு எதிர்காலம் குறித்து பயமும், விடையறியா கேள்விகளும் மனதில் அச்சத்தை உண்டு பண்ணியது!
அதே பயத்துடனும், எரிச்சலுடனும் தமிழழகி தன் ஹாஸ்டல் அறையில் இருந்தாள். தந்தை தன் வார்த்தைக்கு மதிப்புக் கொடுக்கவில்லை என்றவுடன் உண்டான கோபம், அவளை எப்போதும் போல ஞாயிறு இரவு சென்னைக்கு திரும்ப விடாமல், ஞாயிறு மதியமே கிளம்ப வைத்தது.
அறையில் அவளுடன் இருக்கும் ஸ்வேதாவும் ஒரு மாதம் ஃபீல்ட் வொர்க்கென ஊர் ஊராக சுற்றியபடி இருக்க, அறையில் யாருமற்ற தனிமை அவளை கொன்றது! ஏன் தான் அவனை சென்று பார்த்தோமோ என வருந்தாமல் இருக்க முடியவில்லை! அலைபேசியில் மட்டும் பேசிக் கொண்டிருந்தால் இந்த வேறுபாடுகள் தெரிந்திருக்காதோ?
சில நாட்கள் ஒருவரை ஒருவர் புரிந்துக் கொண்டு, பழகிய பின் இவ்வேறுபாடுகள் பெரிதாக விஸ்வரூபம் எடுத்திருக்காதோ என்னவோ? ஆனால், இன்னமும் செழியன் தன்னை தூசியாக எண்ணி விட்டுச் சென்றதை அவளால் எள்ளளவும் மறக்க இயலவில்லை…. திருமணத்தை நிறுத்த அவன் எவ்வித முயற்சியும் எடுப்பதாக தெரியவில்லை!
கண்டிப்பாக வீட்டில் உள்ளவர்களிடம் பேசியிருப்பான் என்றே தமிழழகி நம்பினாள். பின்னும் ஏன் தன் தந்தையிடம் பேசவில்லை?! குழப்பம் அவள் மூளைக்குள் கும்மாளம் போட்டது… ஒருவித நிலையற்ற சூழ்நிலையில் இருப்பதை அறவே வெறுத்தவள், சரி அவனிடம் குறுஞ்செய்தியாவது அனுப்பிப் என்ன செய்ய இருக்கிறான் என கேட்போம் என்று வாட்ஸ் ஆப்பை திறந்து அவனின் எண்ணை எடுத்தாள்.
அவன் வைத்திருக்கும் ஃபோட்டோ கண்டிப்பாக ரக்ஷன் உடையதாக தான் இருக்கும் என்ற நினைப்புடன் பார்த்தவளுக்கு ஏமாற்றமே! பூ வைக்கும் நிகழ்வன்று அவனை தனியாக எடுத்த புகைப்படமே அங்கு காட்சி தந்தது. சரி ஸ்டேட்டஸ் என்னவென்று பார்த்தால், இரண்டு ரத்த நிறம் கொண்ட கோப ஸ்மைலீகளை கொண்டிருந்தது அது….
அதுவும் அதை தாங்கள் சந்தித்த அன்று மாற்றிருந்தான் என்று தெரிந்தவுடன் தமிழுக்கும் கோபம் முறுக்கேறிக் கொள்ள, இவனிடம் போய் நாம் பேசுவதா என அந்த எண்ணத்தை குழி தோண்டி புதைத்தாள்!
சென்னையில் இருவரும் பல சஞ்சலங்களில் சிக்கித் தவிக்க, இருவரின் குடும்பங்களோ கல்யாண வேலைகளை ஜீருராக பார்த்தது! தமிழழகியின் வீட்டில் திருமண பத்திரிகை முடிவு செய்யப்பட்டு அச்சடிக்க கொடுத்திருந்தனர். செழியனின் வீட்டிலோ பத்திரிகையே வந்துவிட்டது அச்சில் இருந்து! முதல் பத்திரிகை பெண் வீட்டாருக்கு கொடுக்க வருவதாக சுவாமிநாதன் கூறவும், அதுவரை மனதில் இருந்த அச்சங்கள் யாவும் பறந்தோடியது கேசவனுக்கு…. என்ன தான் வெளியே சொல்லவில்லை என்றாலும், செழியன் திருமணத்தை நிறுத்தி விடுவானோ என பயந்துக் கொண்டிருந்தார் அவர்!
முதலிலேயே முடிவு செய்தார் போல இரண்டு மாதங்களில் திருமணம் என்ற நிலையில் செழியனுக்கும் தமிழுக்கும் என்ன செய்வது என்றும் விளங்கவில்லை…. இவர்கள் யோசனையிலேயே இருக்க மாதங்கள் இரண்டு உருண்டோடி கல்யாணத் தேதி வந்தே விட்டது!

Advertisement