Advertisement

அத்தியாயம் – 4
கைப்பேசியையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்த செழியனுக்கு உள்ளுக்குள் எதோ ஒரு மாயை உடைவது போல் இருந்தான். புகைப்படத்துலேயே பார்த்தவுடன் மயங்கி நின்ற நொடிகள் கண் முன் வந்து செல்லவில்லை, இப்போது!? இவன் வெறிப்பதை பார்த்துக் கொண்டிருந்த தமிழோ சில நிமிடங்கள் பொறுத்துப் பார்த்து, பின் அவன் முன் கைகளை ஆட்டி கூப்பிடவும், பிரம்மையிலிருந்து செழியன் விழித்துக் கொள்ளவும் சரியாக இருக்க, அவனை அறியாமல் அவன் விரல் கைப்பேசியில் எக்குத் தப்பாக பட்டுத் தெரிக்க, விளைவு அவன் முகநூலில் தமிழழகியை நண்பியாக ஏற்றுக் கொள்ளும்படி விண்ணப்பத்தை அனுப்பி இருந்தான்!
அவளின் அலைப்பேசியையும் கைகளிலேயே வைத்துக் கொண்டிருந்த தமிழுக்கு, அது சத்தம் கொடுத்தவுடன் எடுத்து பார்த்து உடனே ஒரே விரல் அசைவில் அவனை அவளின் நண்பர்கள் வட்டத்தில் சேர்த்துக் கொண்டாள்.
“நான் அக்ஸப்ட் பண்ணிட்டேன்….” என உற்சாகமாக கூறிக் கொண்டே போனவள், அது எதிரில் இருந்தவனிடம் இல்லை என்பதை அறிந்து என்னவென்று வினவினாள். குரலே முற்றுலுமாக மாறிப்போய் செழியன் கேட்ட அக்கேள்வி எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை தமிழ் அறியவில்லை! “நீ அபினவ் ஃபேனா??”
தமிழ் ஒரு நிமிடம் முழித்து பின் தன் முகநூல் ஐடியில் உள்ள புகைப்படத்தை பார்த்துக் கேட்கிறான் என புரிந்துக் கொண்டு, கண்கள் மின்ன பேசலானாள். “ரொம்ப ரொம்பபபபபபபப பெரிய ஃபேன். லைப்ல ஒரே எயிம் அவரை ஒரு தடவையாவது பார்க்கனும்னு தான். சின்ன வயசுலந்து அவரோட படத்தை மட்டும் எப்போவும் முதல் மூணு நாள்குள்ள தியேட்டர்ல போய் தான் பார்த்துடுவேன்!
உங்களுக்கு இன்னொரு சீக்ரெட் சொல்லட்டுமா? அவர் நடிச்ச ‘செழியன்’ படம் எனக்கு ரொம்ப பிடிக்கும்! அதனாலயே அப்பா உங்க பேர் சொன்னதும் நான் இம்ப்ரெஸ் ஆயிட்டேன்…. உங்களுக்கும் அவரை பிடிக்குமா??”
ஆவலே உருவாக தமிழழகி பேசப் பேச செழியனால் தாங்க முடியவில்லை! கண்களை மூடிக் கொண்டு அவன் அமைதிக் காக்க, தமிழ் குழம்பிப் போனாள். “என்னாச்சு? ஏன் சைலன்ட் ஆகிட்டீங்க?”
கண்களை பட்டென திறந்தவன், பட்டாசு போல் பொறிய ஆரம்பித்தான். “எனக்கு உலகத்துலயே பிடிக்காத ஆள் இவன் தான்! அதான் சைலன்ட் ஆயிட்டேன் போதுமா??”
“ஏன் பிடிக்காது??”
கோபக் குரலில் ஆவேசமாக பொங்கிய தமிழை, எகத்தாளமாக நோக்கிய செழியன், ஒரு நொடியில் அவளின் மனதை உடைத்தான். “ஏன்னா எனக்கு என்னோட தலைவன் ரக்ஷன்னா உயிரு! அதான், இவன பிடிக்கலை!”
செழியன் கோபத்துடனும், எரிச்சலுடனும் பேசியதில் தமிழுக்கும் கோபம் ஏறியது. “இப்போ என்ன தான் பண்ணனும்னு சொல்றீங்க?”
“நீ இந்த அளவுக்கு டை ஹார்ட் ஃபேன்னா இருக்கக் கூடாது. முதல்ல உன்னோட பிரொபைல் பிக்சரை மாத்து. மத்தது எல்லாம் அப்புறமா பேசிக்கலாம்.”
“முடியாது….!”
ஒரே வார்த்தை என்றாலும் அழுத்தமாக அது தெறித்ததில், செழியன் ஒரு நிமிடம் ஆடிப் போனான் என்றே சொல்ல வேண்டும். எப்படி எளிதாக முடியாது என ஒரே வார்த்தையில் மறுக்க முடிகிறது இவளால்??! சினம் மிகவுற வாக்குவாதத்தை கண்களில் ஒளிரும் கோப ஒளியில் குத்து விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தான்!
“ஏன் முடியாது?”
“உங்களுக்கு உங்களோட தலைவன் முக்கியம்னா எனக்கு என்னோட தலைவன் அதை விட முக்கியம்…”
 “அப்போ நீ மாத்திக்கறதா இல்ல அப்படி தான??”
“ஆமா… எனக்கா தோணுச்சுனா தான் மாத்துவேன். அப்போ கூட அபினவ் போட்டோ தான் போடுவேன்.”
இதன் மேல் எதையும் பேசுவதில் அர்த்தமில்லை என புரிந்துக் கொண்ட செழியன், ஒரு கையில் தன் பைக்கின் ஹெல்மெட், மறுகையில் அவன் பேக்கை எடுத்துக் கொண்டு புறப்பட ஆரம்பித்தான்!
“அப்போ இதுக்கு மேல பேச ஒண்ணுமில்ல! பை…”
விறுவிறுவென்று செல்லும் செழியனின் முதுகை கோபத்தின் உச்சாணி கொம்பில் நின்று தமிழழகி வெறிக்க, அவர்கள் ஆர்டர் செய்த பானங்கள் அப்போது தான் வந்து சேர, அப்போதே காசை கொடுத்து அவ்விடத்தை விட்டு அகன்றாள். இருவரின் மனமும் குழப்பத்திலும் கோபத்திலும் தத்தளிக்கின்ற வேளையில், இவர்கள் முட்டிக் கொள்ளும் நபர்களை பற்றிய சிறு அறிமுகம் இதோ.
அபினவ் முகுந்த், ரக்ஷன் – தமிழ்நாட்டின் மாஸ் ஹீரோக்களில் பெயர் போனவர்கள்! தங்கள் வெற்றி தோல்விகளின் மூலம் தங்களுக்கேன கோடான கோடி ரசிகர்களை தங்களின் வசம் வைத்திருப்பவர்கள்! இருவரும் ஒருவரை ஒருவர் ஆரம்ப காலத்தில் தாக்கினாலும், பின்னர் வெளி சந்திப்புகளில் நண்பர்களாகவே நடந்துக் கொண்டனர்.
ஆனால், அவர்களின் விசிரிகளும், வெறியர்களும் அப்படி எடுத்துக் கொள்ளவில்லை! சில வருடங்கள் முன்பு ரசிகர் மன்றத்தினால் படம் வெளியாகும் போது மட்டும் எழுந்த பிரச்சனைகள், தற்போது சமூக வளைதளங்களில் தினமுமே தலைவிரித்து பேயாட்டம் போடுகின்றது இவர்களால்…. ஒருவரை ஒருவர் கலாய்த்து, கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொள்வதும், ‘உன் தலைவன் பெரியவனா, என் தலைவன் பெரியவனா’ என சண்டையில் முட்டிக் கொள்வதும், தயாரிப்பாளருக்கே சவால் விடும் அளவுக்கு படத்தின் வசூல் பற்றி விரல் நுனியில் வைத்துக் கொள்வதும் வாடிக்கை ஆகியது!
இவற்றில் செழியன் ஒன்றும் விதிவிளக்கல்ல! ஒருவரை கேலி செய்து போடும், ‘மீம்ஸ்’களை இவன் செய்வது இல்லை என்றாலும், அவற்றை பகிர்வது, இல்லை முகநூலில் எதாவது ஒரு இடத்தில் அவனுடைய தலைவன் ரக்ஷனை யாராவது குறை கூறினால், அவர்களுடன் சண்டை போடுவது என செய்யும் அட்டகாசங்கள் ஏறாளம்! இதனால் அவனுக்கும் அவன் தந்தை சுவாமிநாதனுக்கும் வாக்குவாதம் முட்டி, இருவருக்கும் சரியாக பேச்சு வார்த்தை இன்றி போனது!
தமிழழகிக்கும் அவளின் அபினவ் முகுந்த் முக்கியமே! சிறு வயதிலிருந்து அவளின் விருப்பப்படி வளர்ந்ததாலும், அவளின் பெற்றோர்களுக்கும் அபினவை பிடிக்கும் என்பதால் வீட்டில் பிரச்சனை இன்றி போனது! சமூக வளைதளங்களின் யாரிடமும் வம்பு வளர்த்துக் கொள்வதில்லை அவள்… அதுவும் அவளின் தந்தை கண்டிப்பாக கூறியதால்!
ஆனால், நேரடியாக பேசும் போது யாரேனும் அவளிடம் அபினவ் பற்றி தவறாக கூறிவிட்டாள் பொல்லாதவள் ஆகிவிடுவாள்!! இப்படி இவர்கள் இரண்டு பேரும் நேருக்கு நேராக முட்டிக் கொண்டு நிற்க, இவர்களின் வீட்டிலோ கல்யாண தேதியை முடிவு செய்து, ஏற்பாடுகளை தடபுடலாக செய்ய ஆரம்பித்திருந்தனர்.
அதுவும் கல்யாணத்திற்கு சரியாக இரண்டு மாதமே இருந்தது! ‘ஐய்யகோ இமயம் சரிந்தது’ என்ற நிலைமையில் இருந்தது கல்யாண ஜோடி! செழியனுக்கு என்ன செய்து, யாரிடம் பேசி இதிலிருந்து தப்பிப்பது என்று புரியவில்லை… ஏனோ அவனுக்கு எப்போதும் ரக்ஷனை பிடிக்கும் பெண் தான் தனக்கு மனைவி ஆக வேண்டும் என்ற எண்ணம்.
அது நிறைவேறாமல் போனது தாங்க இயலாத ஒன்று என்றால், தமிழழகிக்கு அபினவை பிடித்திருந்தது பேரிடியை கொடுத்தது! பார்த்தவுடன் அவளை பிடித்திருந்தது தான்… ஏன் இன்னமும் அவளை பிடித்திருக்கின்றது, இவ்விஷயத்தை நீக்கி பார்த்தால்!! நீக்கத் தான் முடியவில்லை. புகைப்படத்தை பார்த்தே திருமணம் வரைக்கும் யோசித்தவன், கண்டிப்பாக அவள் தனக்கு ஏற்றவளாக இருப்பாள் என மாயவலையில் விழுந்தான். அப்படி இல்லையடா மடையா என விதி தலையில் நங்கென ஒன்று வைத்ததும், அவ்வலையில் இருந்து வெளி வந்தவன், இத்திருமணம் நடக்க வேண்டுமா என யோசிக்கலானான்….
அதே யோசனையுடனே வீட்டிற்கு திரும்பியவனுக்கு அவன் அன்னை கல்யாண தேதி உறுதியான விஷயத்தை கூறி, எரிகிற தீயில் பெட்ரோலை ஊற்றினார். ஃபோனிலும் அவரிடம் எதையும் விளக்க இயலாமல், அவ்வார விடுமுறைக்காக செவ்வாய் முதலே காத்திருந்தான் செழியன். சில வாரங்களாக அவ்வப்போது விடுமுறை எடுத்திருந்ததால், இப்போது ஊருக்கும் செல்ல முடியவில்லை, என மன வருத்தம் மட்டுமே மிஞ்சியது.
தலைவனும் தலைவியும் ஒரு படகில் தான் பயணித்தனர்! ஆம், தமிழழகியும் இவனுக்கு இம்மியும் குறையாமல் இத்திருமணத்தை நொந்தாள். அபினவ்வை பிடித்திருப்பவரை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமெல்லாம் அவளுக்கு சுத்தமாக இல்லை. ஆனால், காபி ஷாப்பில் கோபத்துடன் கிளம்பிச் சென்ற செழியனை இவள் முற்றிலுமாக வெறுத்தாள். அவன் சென்றது தன்னையே வேண்டாம் என உதறிச் சென்றது போல் தோன்றியது!
இதே யோசனையுடன் அவ்வார விடுமுறைக்கு ஊருக்கு கிளம்பியவள், எந்நேரமும் எதையோ பரிகொடுத்ததை போல தோன்றினாள் அவளின் குடும்பத்தினரின் கண்களின் முன்னால். “என்னடி அடுத்தடுத்த வாரம் வந்து இருக்க வீட்டுக்கு? எப்போவும் வர மாட்ட…” பார்வதி பாட்டி  குடைந்த கேள்வியில் இருந்து தப்பித்து, அவளின் தந்தையிடம் சிறிது பேச வேண்டும் என்றாள்.
கேசவனும், “சொல்லுடா, கல்யாண விஷயமா பேசனுமா?” என எடுத்துக் கொடுக்க, அழகியும் பேச்சை தொடர்ந்தாள். இவர்கள் அருகிலேயே நின்றுக் கொண்டனர், வள்ளியும் பார்வதியும்… பின்னே தமிழழகி பேச்சை தாங்களும் கேட்க வேண்டாமோ??
தொண்டையை கனைத்துக் கொண்டு செவ்வாய்யன்று செழியனை பார்த்ததில் இருந்து நடந்ததை ஒப்பித்தாள் எதையும் மறைக்காமல்! முடிக்கும் தருவாயில் செவ்விதழ்கள் துடிதுடிக்க, “எனக்கு இந்த கல்யாணம் வேண்டாம்பா… அவன் அப்படி கிளம்பி போனதே எனக்கு நிக்குது மனசுக்குள்ள…” என அழுகையின் விளிம்பில் அழகி சொல்ல, கேசவன் பேசுவதற்குள் பார்வதி ரியாக்ட் செய்தார், நன்றாகவே!
“அடியே புரிஞ்சு தான் பேசறியா, இல்லை தூக்க கலக்கதுல இருக்கியா இன்னும்? சொந்த பந்தம் எல்லாத்துக்கும் தேதியை சொல்லியாச்சு. நாளைக்கு பத்திரிகை முடிவு பண்ண கடைக்கு போலாம்னு இருந்தா இப்போ வந்து கல்யாணமே வேணாம்னு சொல்லுற!?”
“ஆமா அத்தை இவளுக்கு எதோ ஆகிடுச்சு, எதோ லூசு மாதிரி உளறுறா இன்னிக்கு. அந்த தம்பி எழுந்து போச்சாம், அதனால கல்யாணம் வேண்டாமாம்! இதுக்கு எல்லாமா கல்யாணம் நிறுத்துவாங்க??”
வள்ளியும் சேர்ந்து தமிழழகியை திட்டி தீர்க்க, சில நிமிடங்கள் அமைதியாக இருந்த கேசவன் பேசத் துவங்கினார். “ரெண்டு பேரும் சும்மா இருங்க. அழகி இங்க அப்பாவ பாரு. உனக்கு அந்த பையனை பிடிச்சு இருந்துச்சு தான முதல்ல?”
“ஆமாபா… அதனால தான் ஓகே சொன்னேன்.”
“இப்போ போய் உனக்கு பிடிச்ச ஹீரோ வேற, அவருக்கு பிடிச்ச ஹீரோ வேறன்னு கல்யாணம் வேணாம்னு சொன்னா எப்படிடா??”
“ஐய்யோ எனக்கு அது பிரச்சனை இல்லபா. ஆனா அவனால அதை தாங்க முடியலை. நீ அபினவ்வோட ஃபேனா இருக்கக் கூடாதுனு சொன்னான். என்னால முடியாதுனு சொன்ன உடனே கிளம்பி போயிட்டான். அவனுக்கு தான் என்னை பிடிக்கலை!! கண்டிப்பா வீட்டுல சொல்லி கல்யாணம் நிறுத்திடுவான். அதுக்கு முன்னாடி நம்மளே நிறுத்திடலாம்.”
“அழகி முதல்ல ‘அவன், இவன்’னு பேசுறதை நிறுத்து! அந்த பையன் உன்னை பிடிக்கலைன்னு இதே ரீஸன் சொல்லி கல்யாணம் நிறுத்தட்டும் அப்போ பார்த்துக்கலாம். இப்போ நம்மள பொருத்த வரைக்கும் இந்த கல்யாணம் நடக்கும், அதுக்கான வேலையை பார்க்கலாம். புரியுதா??”
“அப்பா அவனுக்கு என்னை விட அவன் தலைவன் ரக்ஷன் தான் முக்கியம்!”
“அப்படி அந்த தம்பி சொன்னானா உன்கிட்ட. நீயும் தான் முன் கோவப்பட்டு, பேசிட்டு வந்திருக்க. அதுக்கு என்ன பண்ண? இப்போ கோபம் கூட குறைஞ்சு போயிருக்கும் செழியனுக்கு. நீ தான் அதையே பிடிச்சிட்டு இருக்க.”
“இப்போ முடிவா என்ன தான்பா சொல்றீங்க?”
அழகியின் வார்த்தைகளில் கோபமும் எரிச்சலும் மிதமிஞ்சியது! “அவசரப்பட்டு எதுவும் செய்ய வேண்டாம்னு சொல்றேன். அவங்களா எதாவது பேச்சை ஆரம்பிப்பாங்களா பார்ப்போம். இல்லையா, நம்ம நம்மளோட வேலையை பார்ப்போம்!”
கேசவன் கூறிவிட்டு செல்ல, வள்ளியும் பார்வதியும் சமையல் வேலை கவனிக்க சென்றனர்! தமிழழகி மட்டும் செழியனின் குடும்பத்தில் இருந்து, ஃபோன் வரும் என காத்திருந்தாள்…. ஆனால், திருமணம் வரை எவ்வித தடங்கலும் சுவாமிநாதனின் வீட்டில் இருந்து வரவேயில்லை!!!

Advertisement