Advertisement

அத்தியாயம் – 3
செழியனின் சந்தோஷத்திற்கும் மகிழ்ச்சிக்கும் ஈடாய் இருந்தது தமிழழகியின் பூரிப்பு! முறையாக ஒரு முறை கேசவனும் அவரின் சுற்றத்தாரும் சுவாமிநாதனின் வீட்டிற்கு சென்று, பூ வைக்கும் நிகழ்விற்கான தேதியை உறுதி செய்தனர்… அந்நிகழ்வில் தமிழழகி வரவில்லை என்பதால், செழியனை பொருத்தமட்டில் அது சாதாரண நிகழ்வாகவே பார்க்கப்பட்டது. நிச்சயதார்த்தை திருமணத்தின் முன் தின நாள் வைத்துக் கொள்ளலாம் என எல்லோராலும் முடிவு செய்யப்பட்டது.
அதுவே செழியனுக்கு மிகுந்த குறைபாடாய் இருந்தது. “அம்மா இப்போ எல்லாம் நிச்சயதார்த்தம் முன்னாடியே வைச்சுடறாங்கமா… கல்யாணம் மாதிரி அதையே பிரெண்ட்ஸ் எல்லோரும் வந்து எவ்வளோ சூப்பரா கொண்டாடுராங்க தெரியுமா? நீ என்னடானா கல்யாணத்துக்கு முன்னாள் தான் வைக்கனும்னு சொல்ற. கொஞ்சம் யோசிமா…” போனில் தன் இளமகன் குறைப்பட்டுக் கொண்டாலும், சசிகலாவின் மனம் மாறவில்லை. “உனக்காக எல்லாம் வழக்கத்தை மாத்த முடியாது செழியா. கல்யாணம் மூணு மாசம் இல்ல நாலு மாசத்துல முடிய போகுது. அப்புறம் என்ன?”
தாயின் பதிலை கேட்டு உதட்டை பிதுக்கிக் கொண்டு, “ஓல்ட் லேடி, உனக்கு இதேல்லாம் புரியாது…. சரி நிச்சயதார்த்தம் தான் ரிஜெக்ட்டட், அட்லீஸ்ட் அந்த பொண்ணு போன் நம்பராவது வாங்கி தரியா? உனக்கு புன்னியமா போகும்!” என்று வேண்டுக்கோள் விடுத்தான். சசிகலாவிற்கு வந்ததே கோபம்!! “டேய் இன்னும் பூ கூட வைக்கலை, அதுக்குள்ள என்ன போன்ல பேசனும் உனக்கு? அதான் பேசறதா இருந்தா அன்னிக்கே பேசிக்கோன்னு சொன்னோம்ல?”
“கடவுளே!! தெரிஞ்சிருந்தா அன்னிக்கே பூ வைச்சு முடிச்சிருக்கலாம். அதையே சொல்லிட்டு இருக்கமா நீ…. பேசுங்கன்னு சொல்லிட்டு நீங்க எல்லாருமே இருந்தீங்க, அப்புறம் நான் என்ன பேச??”
“ஹோ துரைக்கு தனியா பேசனுமா… அதேல்லாம் இங்க நடக்காது. நீ பூ வைச்சுட்ட அப்புறம் என்ன வேணும்னா பேசிக்கோப்பா எனக்கு தெரியாது.”
இவ்வளவு கராறாக பேசும் அன்னையிடம் மேலும் எதையும் வாங்க இயலவில்லை… அடுத்த டார்கெட் அவன் அண்ணி நதியா! அவனுக்கு ஏற்றார் போலவே, அவ்வீட்டின் முதல் வாரிசு பிறந்து அதற்கு வழிவகுத்தது. குறித்த தேதிக்கு ஒரு வாரத்துக்கு முன்னே பிறந்த தனிஷ்காவை வீட்டில் இருந்த அனைவரும் கொண்டாடினர். நதியாவை ஹாஸ்பெட்டலில் அட்மிட் செய்தவுடன் மாறன் செழியனை கூப்பிட்டு விட்டான். சென்னையில் இருந்து உடனே கிளம்பி செழியன் திருச்சி மருத்துவமனையை அடைவதற்க்கும் தனிஷ்கா பிறப்பதற்கும் சரியாக இருந்தது.
சிறிது நேரம் பேசியிருந்து விட்டு, அனைவருக்கும் இந்த நற்செய்தியை சுவாமிநாதன் அறிவித்தார். கேசவனை அழைத்து சொல்லவும் மறக்கவில்லை. மறுநாளே கேசவனும் வள்ளியும் மருத்துவமனைக்கு படையெடுத்தனர். அது வார நாள் என்பதால், தமிழழகி சென்னையில் இருந்தாள். செழியனுக்கு அவளை காண முடியவில்லை என்பது வருத்தம் தான் என்றாலும், வந்த மாமனார் மாமியாரை கவனிக்க தவறவில்லை!
அத்தோடு நிறுத்தி இருந்தால் பரவாயில்லையே… ஆனால், நதியா அவளின் அன்னை வீட்டில் விடும் போது தனியாக இருந்த நேரமாக பார்த்து, “அண்ணி உங்களுக்கு எப்போ எந்த ஹெல்ப் வேணும்னாலும் ஒரு கால் பண்ணுங்க, நான் வந்து ஹெல்ப் பண்றேன்.” என்று வாக்குறுதிகளை வாரி இறைத்தான். “எப்படி சென்னையிலந்து ஹெல்ப பண்ணுவியா?”
நமிட்டு சிரிப்புடன் நதியா வினவ, தலையை ஒரு மாதிரி ஆட்டி வைத்தான் செழியன். “ஹே எதுக்கு இந்த ஸ்டேட்மென்ட் இப்போ வந்துச்சு? ஏதாவது காரியம் நடக்கனுமா?”
“சூப்பர் அண்ணி… கரெக்டா கெஸ் பண்ணுறீங்க…”
“சரி என்ன விஷயம் சொல்லு… முடியுமா முடியாதா பார்க்கறேன்.”
“கண்டிப்பா முடியும்! நீங்க மனசு வைச்சா… பெருசா ஒண்ணுமில்ல, எனக்கு அழகியோட நம்பர் வேணும். நீங்க தான் வாங்கி தரனும்.”
“ஹே நானா?? என்னால முடியாதுபா… என்கிட்ட இருந்தா தரவேன். பட் அவ அப்பா நம்பர் கூட என்கிட்ட இல்ல. சோ, நீ அம்மா கிட்ட கேட்டு பாரு…”
“அதேல்லாம் கேட்டு பல்பு பிரகாஸமா வாங்கியாச்சு… அதனால தான் உங்க கிட்ட கேக்கறேன். அண்ணினா இன்னோரு அம்மா இல்லையா??”
“இந்த சிவாஜி காலத்து டையலாக் எல்லாம் இங்க வேண்டாம். எனக்கு கிடைச்சா குடுக்கறேன். பட், எனக்கு கிடைக்குறது ரொம்ப கஷ்டம் தான். பார்க்கலாம்…”
“பார்க்கலாம் இல்ல, பாப்பாக்கு தொட்டில் போடும் போது அவ வருவா. நீங்க வாங்கி தாங்க.”
“ஹே நீ வீடு, பேங்க் எல்லாத்தையும் விட நீ குடியிருக்குற இடம் இருக்குல… அங்க போய் தேடுறது!?”
“அங்க தான நான் லிவிங்ஸ்டன்! முழுசா தேடியாச்சு… ஒண்ணும் கிடைச்ச மாதிரி இல்ல….” இவர்கள் குறிப்பிட்டது இளைஞர்களின் இருப்பிடமான பேஸ்புக் என்னும் முகநூல்! கோவிலில் இருந்து வந்த நாளே அதில் வலை வீசி தேடிவிட்டான் செழியன். ‘தமிழழகி கேசவன்’ என்ற பெயரை பல விதமாய் தேடிய பின்னும் அவன் மனதிற்கினிய மீனை காணவில்லை.
“ஒருவேள அவ பேஸ்புக் யூஸ் பண்ணலியோ?”
நதியா எதார்த்தமாக சொல்ல, செழியனின் மனது திக்கென்றது. தான் அதிலேயே குடியிருக்க அதை தன்னவள் உபயோகிக்க கூட இல்லையா?? நமக்கு நேர் எதிராக இருப்பாளோ? தனக்கு பிடித்ததெல்லாம் அவளுக்கும் பிடிக்குமல்லவா?? அல்லது அவளுக்கு என்ன பிடிக்கும் என்றாவது தனக்கு தெரிய வேண்டாமா?? அவளை எப்படி புரிந்துக் கொள்வது? பல பல கேள்விகளுடன் இன்னும் ஒரு வாரத்தில் நடக்கவிருக்கும் தனிஷ்காவின் தொட்டில் போடும் நிகழ்விருக்காக காத்திருக்கலானான். குழந்தை பிறந்த தீட்டு இருந்ததால், பூ வைக்கும் நிகழ்வை சில நாட்கள் தள்ளி வைத்திருந்தனர்.
இடையில் அவன் அண்ணன் அழைத்து, “டேய் பூ வைக்குற பங்க்ஷன் டேட் பிக்ஸ் பண்ணிட்டாங்கடா.” என அவன் நெஞ்சில் பால், மோர் எல்லாம் வார்த்து, தொட்டில் போட்ட இரண்டு நாட்களிலேயே அதை வைத்திருப்பதாக கூறினான். செழியனுக்கு மிகவும் சந்தோஷம்…. அதே நேரத்தில், சென்னையில் தன் ஹாஸ்டல் ரூம்மில் தோழி ஸ்வேதாவிடம் கதை அளந்துக் கொண்டிருந்தாள் தமிழழகி. “அப்பா தொட்டில் போடுறப்போ நானும் கண்டிப்பா வரனும்னு சொல்லிட்டாரு. சோ, இரண்டு நாள் லீவ் போட்டுட்டு போகனும்.”
“போ போ ஒரே ரோமான்ஸ் தான். சைட் தான்… கலக்கற தமிழு!”
“நீ வேற சும்மா இருடி, நான் அவரு கிட்ட பேசினது கூடயில்லை தெரியுமா?”
“ஆமா உன்னை பேச சொன்னா நீ தான் பேசாம வந்துட்ட… லூசு.”
“ஹலோ பையன் அவரே சும்மா இருக்குறப்போ நான் மட்டும் எப்படி பேச முடியும்? இதோ இப்போ கூட அவரு போன் பண்ணாருனா நான் பேசுவேன், ஆனா நானா பேச மாட்டேன்.”
“அதான் ஏன்னு கேக்கறேன்?? நீ பேசுனா குறைஞ்சு போயிடுவியா என்ன?”
“அதேல்லாம் இல்ல… எனக்கு முதல்ல அவரு தான் பேசனும்னு தோனுது. அன்னிக்கே அவரு குறுகுறுனு பார்த்துட்டு இருந்தாரு! ஷப்பா…. என்னால பேச்சை ஆரம்பிக்க முடியாது…”
“இப்படியே சொல்லிட்டு இரு…. நீயும் பேசுற மாதிரி தெரியலை. அவரும் பேசுற மாதிரி தெரியலை… எப்படியோ போங்க.”
ஒரு வாரம் இத்தகையான மனக்குமுறறிலும் காத்திருப்பிலும் கழிய, வெள்ளியன்று காலை தன் குடும்பத்தினருடன் நதியாவின் தாய் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தாள் அழகி. அன்றும் பெயருக்கு ஏற்றார் போல், அழகியாகவே தோன்றினாள் அனைவருக்கும்.
அதுவும் செழியனுக்கு கேட்கவே தேவையில்லை…. அவளையே கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவனை மாறன் தான் வந்து தட்டி நிஜவுலகிற்கு அழைத்து வர வேண்டியிருந்தது. தமிழழகி அவனை பார்த்து சிரிக்கவா வேண்டாமா என யோசித்து, பின் அவன் உதட்டை இளித்ததும் இவளும் சில அடிகள் உதட்டை இழுத்து வைத்தாள்.
பெரியவர்கள் இதையெல்லாம் கண்டும் காணாமல் இருந்தனர். சசிகலா தமிழழகியை எல்லோரிடமும் முக்கியமாக நதியாவின் சொந்தங்களிடம் அறிமுகம் செய்வதில் மும்முரமாக இருந்தார். பின், தொட்டில் போடும் நிகழ்வும் பெயரிடும் நிகழ்வும் இனிதே நடந்து முடிய, எல்லோரும் சாப்பிட சென்றனர்.
தமிழழகி சாப்பிடும் போது அவள் அருகில் அமர்ந்து, அவளிடம் செல்போன் நம்பரை வாங்கினார் சசிகலா. “ஏதாவதுனா பேசலாம்ல… அதான்மா…” தன்னுடைய வருங்கால மாமியார் விளக்கம் அளிக்கவும், “எப்போனாலும் பேசலாமா…. உங்களோட நம்பரும் குடுங்க. நானும் பேசறேன்.” என்று அவரின் எண்ணையும் வாங்கிக் கொண்டாள், சாமர்த்தியமாக. தான் சொல்லாமலே தன்னை ‘அம்மா’ என அழைக்கும் இளைய மருமகளை, மிகவும் பிடித்துப் போனது சசிகலாவிற்கு.
அவர்கள் வீட்டின் வழமைப்படி நதியா அவரை ‘அம்மா’ எனவே விழிப்பாள். அதையே கவனித்து தமிழும் கூப்பிட, இவள் நம் குடும்பத்தில் இளகுவாக ஒட்டிக் கொள்வாள் என உளமார மகிழ்ந்தார் அந்த முதியவர்! எல்லாம் முடிந்து கிளம்பும் போது, ‘நாளனைக்கு பார்க்கலாம்.’ என ஒருவரிடம் ஒருவர் கூறி விடைப்பெற்றனர்.
நதியாவும் செழியன் கூறியது போல் தமிழழகியின் கைப்பேசி எண்ணை வாங்கி வைத்திருந்தாள். அதையே செழியனிடம் கூற, அவனோ ரிவர்ஸ் கோல் அடித்தான். “ஆமா, இன்னும் ஒரு நாள் தான் இருக்கு… நாளனைக்கு நானே லீகலா வாங்கிக்கறேன். எனக்கு ஷோர்ட்கட் பிடிக்காது அண்ணி!!”
“உனக்கு போய் வாங்குனேன்ல என்னை சொல்லனும். இனிமே செங்கன்ட் மதர், மம்மி டூ, மாதாஜீன்னு வருவல அப்போ பார்த்துக்கறேன்….”
நதியாவின் கோபத்தை தூண்டி விட்ட பாவமோ என்னவோ, அவன் அன்னை அப்போதே உள்ளே நுழைந்து அவனை வெறுப்பேற்றினார். “டேய் தமிழோட நம்பரை வாங்கிட்டேன். ஆனா, உனக்கு இப்போ தர மாட்டேன். சன்டே தான் தருவேன்.”
செல்போனை ஆட்டியபடி கண்களில் நக்கல் கொப்பளிக்க சசிகலா கூறவும், நதியாவுக்கு சிரிப்பு பொத்துக் கொண்டது. அதை பார்த்து மேலும் கடுப்பாகி, செழியன் அவன் அன்னையை முறைத்துக் கொண்டே பதிலுக்கு பதில் கொடுத்தான். “நம்பர் தானமா வாங்குன… அதுக்கு ஏன் உடுக்கயை ஆட்டுற மாதிரி போனை ஆட்டிட்டு இருக்க. சன்டே நீ என்ன கொடுக்கறது? நானே என்னோட மாமனார் கிட்ட கேட்டு வாங்கிட்டறேன்.”
சொல்லிவிட்டு அவன் பாட்டிற்கு சென்றுவிட்டான். சசிகலா நதியாவிடம் புலம்ப மட்டுமே முடிந்தது. இப்படி பேசிப் பேசியே ஞாயிறு வரை ஓட்டினர். மாலை ஆனதும், அனைவரும் கேசவனின் வீட்டில் ஆஜர், சில நெருங்கிய வட்டத்துடன். ஆசிர்வாதம் செய்தவுடன், புடவையை மாற்ற தமிழழகி உள்ளே செல்ல, அந்த சமயத்தில் கேசவனிடம் பேச்சுக் கொடுத்தான் செழியன். “என்னை செழியானே கூப்பிடுங்க மாமா. உங்க நம்பர் குடுங்க. என்கிட்ட இல்லவே இல்லை.”
புன்னகையுடன் கேசவன் அவரின் எண், அவர் மனைவி வள்ளி, வீட்டு எண், கூடவே தமிழின் எண்ணையும் குடுக்க செழியன் தித்திக்கும் தேனில் ஊரிய வண்டாடிக் போனான். ‘நான் கேக்காமலே எல்லாத்தையும் குடுத்துட்டாரே…. நீ நடத்துரா செழியா….’ தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டு எதிரே பார்த்தால் அவன் குடும்பத்தினர் அவனையே பார்த்துக் கொண்டனர். யாரும் அறியாமல் அவன் அன்னையிடம் பழிப்புக் காட்ட, அவர் மறுப்புறம் முகத்தை திருப்பிக் கொண்டார். ஒருவழியாக பூ வைத்து ஜோடியாக இருவரையும் ஆசிர்வாதம் செய்து, சில புகைப்படங்களும் எடுத்தனர் இருவரையும் நிற்க வைத்து.
செழியன் மெய்மறந்து நிற்க, தமிழோ கூச்சத்தில் சில நிமிடங்கள் நெளிந்தாள். பின், சாப்பிட்டு கிளம்பும் போது இம்முறை, “வரேன்” என சொல்லிவிட்டே நகர்ந்தான் செழியன். “ஹ்ம்ம்ம் சரி…” என கூறி விடை கொடுத்தாள் தமிழழகி புன்னகையோடு. வீட்டிற்கு வந்ததும் யாரையும் கிண்டலடிக்க இடம் கொடுக்காமல், செழியன் தன் இரு சக்கர வாகனத்தில் சென்னையை நோக்கி புறப்பட்டான். மனதில் மறுநாள் முதல் வேலையாக அவளிடம் பேச வேண்டும் என நிலை நிறுத்துக் கொள்ளவும் மறக்கவில்லை…
இங்கே தமிழின் வீட்டிலோ அவளின் பாட்டி அறிவுறையின் போர்வையில் திட்டுகளையும் வசவுகளையும் அள்ளி வீசிக் கொண்டிருந்தார். பொறுத்தும் மட்டும் பொறுத்தது போதும் என பொங்கிவிட்ட தமிழை சமாதானப்படுத்தி அவளின் தந்தையே பள் ஏற்றிவிட்டார் சென்னைக்கு. அவளிடம் பேருந்து நிலையத்தில், செழியனின் செல்போன் எண்ணையும் கொடுத்தார்.
“அவர்கிட்ட உன்னோட நம்பரும் குடுத்துருக்கேன்டா. நீயும் அவரோடது சேவ் பண்ணிக்கோ. இந்த ஷார்ட் டெம்பரா இருக்குறதை குறைச்சுட்டு ஒழுங்கா பேசனும் அவர்கிட்ட மட்டுமில்ல, அவங்க வீட்டுல எல்லார்கிட்டயும் புரியுதா?”
“ஹ்ம்ம்ம் அதேல்லாம் முடியாது…. ஃபர்ஸ்ட் டைமே அவர்கிட்ட சண்டை போட்டுட்டு தான் மறுவேலை பார்ப்பேன்.”
மகளின் இவ்வார்த்தைகளை அவள் குறும்பாக சொல்கிறாள் என எண்ணி லேசாக காதை திருகியதோடு முடித்துக் கொண்டார். ஆனால், எந்த நேரத்தில் தமிழழகி அப்படிக் கூறினாளோ அதுவே உண்மையாகியது!!!
மறுநாள் காலையில் இருந்தே நிமிடத்திற்கு ஒரு முறை போனை பார்த்து, அதில் செழியன் எந்த குறுஞ்செய்தியும் அனுப்பாதலால் கோபம் அடைந்து அவனை மனதிற்குள்ளேயே திட்டிக் கொண்டிருந்தாள். செழியனோ இரவு சரியாக உறங்காதலால், காலையில் அடித்து பிடித்துக் கொண்டு தான் வங்கிக்கு கிளம்பினான். அதனால், அவளை கூப்பிடவில்லை.
மதிய உணவு நேரம் வந்ததும் தான் தமிழின் நினைவு நெஞ்சில் நிழலாடியது. உடனே அவளை அழைத்தும் விட்டான். செழியனின் எண்ணை பார்த்தவுடன் உள்ளுக்குள் பூரிப்பு பொங்க, கைப்பேசியை காதிற்கு கொடுத்து பேசினாள் தமிழ்.
“ஹலோ செழியன் பேசறேன்.” ஆழ்ந்த குரலில் அவன் பேசியதை உள்வாங்கிக் கொண்டு, பதிலுரைத்தாள் தமிழ்.
“ஹ்ம்ம்ம் சொல்லுங்க.”
“இப்போ ஃபீரி தான? பேசலாம்ல??”
“ஹ்ம்ம்ம் லன்ச் டைம் தான். இப்போ தான் சாப்பிட்டு முடிச்சேன். நீங்க…”
“நான் இனிமே தான்… நாளைக்கு ஈவ்னிங் நீ ஃபீரியா? மீட் பண்ணலாமா??”
தமிழுக்கு ஒன்றுமே புரியவில்லை. என்னடா இவன் பேசக் கூடயில்லை ஒழுங்காக அதற்குள் பார்க்க வேண்டும் என்கிறான்! உள்ளுக்குள் குழம்பியபடி, “ஹ்ம்ம் ஃபீரி தான். ஆனா, பார்க்குறதுக்கு அப்பா கிட்ட ஒரு வார்த்தை கேக்கனும்.” என்று இழுத்தபடி கூறினாள்.
“கண்டிப்பா கேக்கலாம். நானே கேக்கறேன்… மாமா ஓகே சொன்னா, எங்க மீட் பண்ணலாம்?”
“நீங்களே சொல்லுங்க…”
“நான் உன்கிட்ட கேட்டேன். நீ தான் சொல்லனும்….”
ஒரு நிமிட யோசிப்பிற்கு பின், “காபி டே ஓகே வா?” என தன் முடிவை தெரிவித்தாள் தமிழ். “ஹ்ம்ம் ஓகே, நான் மாமாகிட்ட பேசிட்டு உனக்கு கூப்பிடறேன்.” சொன்னவாரே மாமனாரிடம் விஷயத்தை கூறி சம்மதம் வாங்கி, தன் அண்ணனிடமும் கூறிவிட்டே தமிழிடம் மறுநாள் ஆறு மணியளவில் கபே காபி டேவில் பார்க்கலாம் என அறிவித்தான்.
இருவரும் மேற்கொண்டு பெரிதாக எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அடுத்த நாள் பார்க்கப்போகிறோம் என்ற குதூகல உணர்வில் மிதந்து இரவை கடந்தனர். அதே போல், மறுநாள் வங்கி முடிந்ததும், என்றும் இல்லாமல் அன்று தன்னை அலங்கரித்துக் கொண்டே காபி டே ஷாப்பில் அடியெடுத்து வைத்தாள் மங்கையவள்.
செழியனோ முதல் முறை பார்க்கும் போது ஏதாவது பரிசு அளிக்க வேண்டும் என முடிவெடுத்து ஒரு கிப்ட் கடையை அலசி ஆராய்ந்து, இறுதியாக ஒரு செராமிக் பொம்மையை வாங்கினான்.
டிராப்பிக்கில் மாட்டி சில நிமிடங்கள் தாமதமாக வந்ததற்காக மன்னிப்பு வேண்டியே காபி ஷாப்பில் தமிழழகியின் முன் அமர்ந்தான் அவளின் வருங்காலக் கணவன்! “பரவாயில்ல…” தமிழின் புன்னகை பூசிய முகத்தை கண்களில் நிறப்பி, வெயிட்டரிடம் அவளுக்கு தேவையானவற்றை கேட்டறிந்து ஆடரும் கொடுத்து நிமிரும் போது சொல்போன் கினுகினுத்தது! பார்த்தால், முகநூலில் நண்பன் ஒருவன் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தான். அதை கண்டவுடன் தன்னவளை நண்பியாக்கிக் கொள்ள பிரியப்பட்டு, அவளின் முகநூல் பெயரை கேட்டான்.
“பேஸ்புக்ல உன்னோட ஐடி தேடி பார்த்தேன், கிடைக்கலை. என்ன பேருல இருக்க?”
“தமிழழகி கேசவன் தான் என்னோட ஐடி.” ஆங்கிலத்தில் ஒவ்வொரு எழுத்தாக அவள் உச்சரிக்க, செழியனின் விரல்கள் அதை பேசியில் தட்டின… முழு பெயரையும் தட்டியதும், செழியனின் முகம் தானாக மாற்றம் கொள்ள, அதை கவனிக்காத தமிழோ அவனிடம் என்னவாகிற்று என கேட்டாள்.
எதுவும் பேசாமல்,செல்போனை அவளுக்கு காட்ட, அதை பார்த்தவள், “ஹா இது தான் என்னோட ஐடி.” என கூறி செழியனின் தலையில் பெரிய பாராங்கல்லை போட்டு அவனின் இதயத்தை சுக்கு நூறாக உடைய செய்தாள். அச்சந்திப்பு முதல் கோணல் முற்றும் கோணலாக முடிய, செழியன் தமிழுக்காக வாங்கிய பரிசு அவனிடமே தங்கியது!!!

Advertisement