Advertisement

அத்தியாயம் – 2
எல்லா வகையான ஆட்டமும் முடிந்து தன் கட்டிலில் இருந்து குதித்துக் கொண்டு இறங்கினான் செழியன். காலை கடன்களை முடித்துக் கொண்டு, நேராக சமையல் அறைக்குச் சென்றான். அவனின் அண்ணியும் அன்னையும் மதிய சமையலை மேற்பார்வை செய்துக் கொண்டிருந்தனர்.
“அம்மா காபி…” அவன் சொல்லி முடிக்கும் முன் கைகளில் காபி வந்து சேர்ந்தது அவன் அன்னையிடமிருந்து அல்ல, அண்ணியிடமிருந்து! முகமெல்லாம் பல்லாக அதை வாங்கிக் கொண்டவன், தன் அம்மாவிடம் பொறியத் தொடங்கினான். “ஏன்மா உனக்கு எத்தன வாட்டி தான் சொல்றது? அண்ணியே எல்லா வேலையும் செய்யறாங்க…”
“அடப்பாவி அப்போ நான் செய்யறது எல்லாம் வேலையா தெரியலையா??”
“நீ வெறும் ஹெல்ப் தான்மா பண்ணுற… அடுத்த வாரம் சீமந்தம் கொண்டாடப் போறவங்கலாம் வேலை செய்யறாங்க… அத நினைச்சா தான்….” இந்த அக்கப்போறை எல்லாம் தாங்க முடியாமல் நதியாவே நடுவே புகுந்தாள். “ஐய்யோ நான் தான் வேலை செய்யறேன்னு வந்தேன் செழியா… அம்மா ஒண்ணும் சொல்லலை…. எனக்கும் போர் அடிக்குது.”
“இப்படியே எல்லா வேலையும் செய்யுங்க… யம்மோவ் அடுத்த வாரம் அண்ணி போனப்புறம் தான் உனக்கு தெரியும்! ஆமா, எங்க உங்க ரெண்டு பேரோட பாவப்பட்ட புருஷன்ஸ்?” அவன் கேள்வியெழுப்பிய போதே பின்னால் இருந்து முதுகில் தன் பரிசாக ஒரு மொத்தை கொடுத்தே உள்ளே நுழைந்தான் இளமாறன்.
“ஆமா இவ்வளவு காலையில நீ எழுந்துக்க மாட்டியே? என்னடா விஷயம்?”
“ஹலோ பாஸ், மணி ஒன்பதரை ஆகப்போகுது. அது மட்டுமில்லாம ரொம்ப முக்கியமான விஷயம் எல்லாம் காலையிலேயே பேசியிருக்கீங்க. எழுந்துக்கலனா எப்படி?”
“என்ன முக்கியமான விஷயம்?” நதியா மேடிட்ட வயிற்றை தடவிக் கொண்டே குறுகுறு பார்வை கொண்டு கேட்க, “ஆமா என்னடா விஷயம்?” என்று அவளின் கணவனும் ஒத்து ஊதினான்.
“சும்மா தெரியாத மாதிரி நடிக்காதீங்க ரெண்டு பேரும். நான் ரூம்ல இருந்து எல்லாம் கேட்டுட்டு தான் இருந்தேன்!”
“நான் சொல்லலை… இவன் கள்ளுளி மங்கன். உள்ளயிருந்தே எல்லாத்தையும் கேட்டுட்டு இருந்துருக்கான் பாரு.” அவன் அன்னை சசிகலா முகத்தை நொடித்துக் கொண்டு சொல்லவும், அவ்வீட்டின் தலைவர் சுவாமிநாதன் டிபன் சாப்பிட்ட தட்டை தூக்கிக் கொண்டு வரவும், சரியாக இருந்தது! எல்லோரும் கூடி இருப்பதை பார்த்து, “என்ன பேசிட்டு இருக்கீங்க?” என சாதாரணமாக தான் கேட்டார்.
ஆனால் செழியனுக்கு அதுவே பொறுக்கமாட்டாமல், “ஒண்ணுமில்லயே…” என பதவிசாக கூறி இடத்தை காலி செய்தான். அவன் எப்போதும் இப்படி தான் என அறிந்த சுவாமிநாதனும் மேலும் மற்றவர்களிடம் துருவாமல் சென்றுவிட்டார். தந்தைக்கும் மகனுக்கும் பெரிதாக எப்போதும் பேச்சுவாக்கு கிடையாது. அதற்காக பேசிக் கொள்ளவே மாட்டார்கள் என்றில்லை. ஆனால், செழியன் எதுவாகினும் முதலில் சென்று நிற்பது அவன் அண்ணனிடமோ அல்லது அன்னையிடமோ தான்! காரணம் தமிழ்செழியன் செய்யும் சில வேலைகள், அவன் மனப்போக்கில் சுவாமிநாதனுக்கு உடன்பாடில்லை!!
வீட்டில் மற்றவர்கள் செழியனுக்கு ஆதரவு கரம் நீட்டாமல் இருந்தாலும், அவனை எப்போதும் தடுத்ததில்லை. இதெல்லாம் ஒருப்புறம் இருக்க, ஒரு விசித்திரமான யோசனையை அவன் தாயிடம் டிபன் சாப்பிடும் போது முன் வைத்தான் செழியன். அவன் அன்னை தலையில் கை வைத்து உட்காரவும், இளமாறன் என்ன விஷயம் என்று வந்து நின்றான்.
“சீமந்தத்துக்கு அந்த பொண்ணு வீட்டை கூப்பிடலாம், அங்கயே பொண்ணு பார்த்துடலாம்னு சொல்றான்டா. வர வர இவன் கூட முடியலை…!”
“டேய் என்னடா ஆச்சு உனக்கு? சீமந்தம் அப்போ எதுக்கு அவங்கள கூப்பிடனும்?”
மாறன் சலித்துக் கொள்ள செழியன் எவ்வித சலிப்புமின்றி விளக்கினான். “பின்ன கல்யாணம் ஆகிட்டு நம்ம வீட்டிக்கு வரப் போற பொண்ணு. நம்ம வீட்டுக்கு முதல் வாரிசு வர போற பங்க்ஷனுக்கு கூப்பிட வேணாமா? அப்புறம் திரும்ப பொண்ணு பார்க்குறதுக்கு வேற அண்ணி வரனும். அதுக்கு தனியா அலையனும்… அதுக்கு தான் ஈஸியான சொல்யூஷன் சொல்றேன். என்ன சரிதான?”
“கோழி நனையுதேன்னு கெ.எப்.ஸி.காரன் அழுத கதையா இருக்குடா செழியா. உனக்கு அந்த பொண்ண பிடிச்சிருக்கு. சீக்கிரமா பொண்ணு பார்க்கனும். அவ்வளவு தான??”
“அப்பாடியோ சொல்ல வந்ததை புரிஞ்சுக்கிட்டியா சந்தோஷம்…”
ஆனால், செழியன் எவ்வளவோ சொல்லியும் அவன் அன்னை செவி சாய்ப்பதாக இல்லை. “அதெல்லாம் சரி வராதுடா. இதுக்கும் மேல நீ உங்கப்பா கிட்டயே பேசிக்கோ! என்னால முடியாது…”
ஒரு நாள் முழுக்க முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு சுற்றியவன், பின் அதை மறந்து சகஜ நிலைக்கு திரும்பினான். அந்த வெள்ளியன்றே நதியாக்கும் சுற்றமும் புடையும் சூழ வளையல் சூட்டி சீமந்தம் அழகாக நடந்தது. ஏற்கனவே முடிவு செய்தபடி ஒரு நாள் இளைப்பாறிவிட்டு ஞாயிறு அன்றே மலைக்கோட்டை கோவிலில் பெண் பார்க்கும் படலத்தை வைத்திருந்தனர்.
தமிழழகி மறுவாரமே வீட்டிற்கு திரும்ப வந்தாள் என்றால், செழியன் நான்கு நாட்கள் மட்டும் சென்னையில் வேலைக்கு சென்றுவிட்டு, மீண்டும் வெள்ளியன்று சீமந்ததிற்கு வீடு திரும்பினான்.
ஞாயிறன்று காலையில் இருந்தே ஒருவித பரபரப்பிலேயே இருந்தான் செழியன். “டேய் ஈவ்னிங் தானடா போறோம், ஏன்டா இப்போவே எல்லா சேர்ட்டும் இப்படி போட்டு வைச்சுட்டு இருக்க?” இளமாறன் கூறியதை கண்டுக்காமல், செழியன் சட்டையை உடுத்துவதும், வேறொன்றை மாற்றுவதுமாக இருந்தான்.
“டேய் அவ்வளவு பிடிச்சிருக்கா அந்த பொண்ண?” தமையன் கேட்டதிற்கு ஒரு நிமிடம் தன்னையே கூர்ந்து நோக்கி பதில் கூறினான் நம் நாயகன். “ஹ்ம்ம்ம் ஆமாடா… எனக்கு என்னமோ இந்த பொண்ணு தான்னு தோணிட்டே இருக்கு. கண்டிப்பா மேரேஜ்ல தான் முடியும்னு முடிவோட இருக்கேன்…”
 “எப்படிடா போட்டோ பார்த்தே இவ்வளவு பேசற??”
“அதெல்லாம் ஒரு தனி கலைடா ஐய்யாசாமி! உனக்கு இது எல்லாம் புரியாது…. போ போய் புள்ள குட்டிய படிக்க வைக்குற வேலைய பாரு!”
மாறனுக்கு தலையில் அடித்துக் கொள்வதை தவிர வேறு வழி தெரியவில்லை… ஒரு வழியாக மாலை நான்கு மணிக்கு வீட்டை விட்டு கிளம்பி, வழியில் நதியாவை அவளின் அன்னை வீட்டில் இருந்து கூட்டிக் கொண்டு கோவிலை அடைந்தனர். இங்கே இப்படி இருக்க, தமிழழகியின் வீட்டிலோ எந்த புடவையை உடுத்துவது என்று பெரிய போரே நடந்தது.
வள்ளியும் பார்வதியும் பட்டு தான் உடுத்த வேண்டும் என்று போர் கொடி தூக்க, இறுதியில் தமிழின் முடிவான சில்க் காட்டனே வெற்றி வாகை சூடியது. ரொம்பவும் அலங்காரம் செய்யாமல், மெலிதான ஒரு நெக்லஸ் கைகளில் இரண்டு வளையல்கள் மட்டும் அணிந்து கொண்டு நேர்த்தியாக தோற்றமளித்த தமிழழகியை பார்த்த அவளின் குடும்பத்தினருக்கு மிகவும் திருப்தியாகியது.
அவர்கள் சரி என்றாலும், தமிழுக்கு உள்ளுக்குள் மனசு அடித்துக் கொண்டது, அந்த செழியனுக்கு தன்னை பிடிக்குமோ இல்லையோ என்று! பிடிக்கவில்லை என்று கூறிவிட்டால் என்ன செய்வது? இல்லை அப்படியெல்லாம் நடக்காது, நல்லதையே நினைப்போம் என்று மனதை திடப்படுத்திக் கொண்டே மலைக்கோட்டையின் படிகளில் கால்களை வைத்தாள் தமிழ்.
இவர்கள் மேலே செல்லுவதற்குள் செழியனின் குடும்பம் மேலே சென்று இவர்களுக்காக காத்திருந்தனர். அதனால், தமிழும் அவளின் குடும்பத்தாரும் உச்சியை எட்டும் முன் செழியன் அவர்களை கண்டுக் கொண்டான்.
“ஹே அவங்க வந்துட்டாங்க…” செழியன் சுட்டிக் காட்டினதும் அனைவரும் அப்பக்கம் நோக்க இளமாறன் மட்டும் நக்கலடித்தான். “அப்போ இவ்வளவு நேரம் நீ போற வர எல்லாம் பொண்ணுங்களையும் பார்த்துட்டே இருந்துருக்க?”
“சே தப்பா பேசாதடா மாறா, வாய்ல போட்டுக்கோ!” செழியனின் பதிலை கேட்டு, “பாருடி நான் தப்பா பேசுறேனாம்.” என்று மனைவியிடம் குறை பட்டுக் கொள்ள மட்டுமே முடிந்தது அவனால்!
செழியன் இதை எல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை… ஒரே ஒரு முறை மட்டும் தமிழழகியின் உடன் வந்தவர்களை பார்த்தவன், பின் அவளின் மேலிருந்து கண்ணை எடுக்கவில்லையே…!
அதற்குள் இவர்கள் பெண் பார்க்க காரணமாக இருந்த ரேவதி பாட்டியும் வந்து சேர, ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்துக் கொண்டனர். தமிழழகி ஓரிரு முறை செழியனை பார்த்தாள். அவன் தன்னையே பார்த்துக் கொண்டிருந்ததை அறிந்தவள் பின் அவளின் கண்களை அவனின் புறம் திருப்பவில்லை. அதற்கே அவளுக்கு சில பல அதிர்வலைகள் அடித்தன மனதில்! சுவாமிநாதனும் கேசவனும் பேசிக் கொண்டே இருக்க, இறுதியில் பார்வதி தான் மாப்பிள்ளையின் சம்மதத்தை கேட்டார்.
“எனக்கு இருக்கட்டும் முதல்ல அவங்ககிட்ட கேளுங்க…” செழியன் கூறிய பதிலை யாரும் எதிர்பார்க்கவில்லை என்றாலும், அனைவரும் ஒருசேர தமிழழகியை பார்த்தனர். “சொல்லுமா உனக்கு ஓகே தான?”
சசிகலா கேட்க தலையாட்டி, “ஹ்ம்ம் ஓகே தான்.” என கூறினாள் தமிழழகி. செழியனின் முகத்தில் ஒரு நிறைவான புன்னகை பூத்த அதே நேரத்தில், அவன் உதடும் சும்மாயிராமல், “எனக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு…” என்று உச்சரித்தது. சுவாமிநாதனும் கேசவனும் கைகளை குலுக்கிக் கொண்டு மகிழ்வை பறிமாறிய உடன், “அழகி கிட்ட ஏதாவது பேசனும்னா பேசிக்கோங்க. நாங்க ஒண்ணும் தப்பா நினைச்சுக்க மாட்டோம்…” என்று அறிவித்தார் கேசவன்.
“நீயும் பேசனும்னா பேசிக்கோமா…” என சுவாமிநாதனும் கூற, தமிழழகி ஒரு முறை செழியனை ஓரக் கண்ணால் நோக்கிவிட்டு, “பரவாயில்லை… அதெல்லாம் ஒண்ணுமில்லை…” என உளறிக் கொட்டி சமாளித்தாள். செழியனுக்கு தனியாக அழகியிடம் பேச வேண்டும் போல் இருந்தது. எல்லோரின் முன்னாலும் என்ன பேச என்று தனக்குள்ளேயே நொந்தபடி பேசாமல் இருந்தான். ஆனால், அவன் பேசுவான் என எதிர்பார்த்த மாறனும் நதியாவும் அவனையே பார்க்க, மறுப்பாக தலையசைத்தான்.
எல்லாம் பேசி முடித்ததும், தமிழழகி வீட்டிலேயே பூ வைக்கும் நிகழ்வை வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்து விடைப் பெற்றது இரு குடும்பமும். கண்களாலேயே தன்னவளிடமிருந்து விடைப் பெற்று வீடு சேர்ந்தான் தமிழ்செழியன்!
எப்போதடா கல்யாணம் முடியும் என்று நிலைக் கொள்ளாமல் தவித்தவனுக்கு, இன்னும் சில நாட்களில் தானே இத்திருமணத்தை நிறுத்த கூற வேண்டிய நிர்பந்தம் வரும் என்று சற்றும் நினைக்கவில்லை!!!

Advertisement