Advertisement

அத்தியாயம் – 16
ஒரு நிமிடமோ இல்லை சில நிமிடங்களோ இருவரும் அதிர்ச்சியுடன் ஒருவரை ஒருவர் பார்த்திருந்தனர். பின், சட்டென்று திரும்பிக் கொண்ட தமிழ், மெதுவான குரலில் தன் மாமியாரை அனுப்பி வைக்க சொன்னாள்.
“நீங்க போயிட்டு அத்தைய வரச் சொல்லுங்க ப்ளீஸ்….”
அவள் சொன்னது காதிலேயே விழாதது போல, அவளின் பக்கமாக அவன் கால்களை வைக்கவும் இம்முறை சற்று அழுத்தமாகவே கூறினாள்.
“நீங்க ஏன் வறீங்க? அத்தைய கூப்பிடுங்கன்னு சொன்னேல?”
தமிழ் கேட்டதற்கு பதிலாக அவளின் காதுகளில் ரகசியம் பேசினான் செழியன். “உங்க அத்தை கோவிலுக்கு போயிருக்காங்க. வீட்டுல இல்ல… போதுமா?”
அவன் பின்னோடு நின்று பேசியதே உடம்பை சிலிர்க்க வைக்க, மாமியாரும் இல்லை என்றவுடன் பேந்த பேந்த விழித்தாள். தமிழின் முழிப்பை பார்த்து சிரித்து, அவள் நெஞ்சோடு அணைத்திருந்த நைட்டியை வாங்க முயன்றான் செழியன்.
“இதை ஏன் எடுக்கறீங்க விடுங்க…”
“பின்ன அம்மா வர வரைக்கும் இப்படியே தான் இருக்கப் போறீயா? நான் இங்க தான் இருப்பேன் பரவாலய்யா?”
வேறு வழியின்றி அவனிடம் நைட்டியை கொடுத்து அவன் முகத்தை கழுத்தை திருப்பி பார்க்கவும், “உனக்கு கை உடைஞ்சுருக்கு. இப்போ என்ன பண்ண முடியும்னு நினைக்குற? ஒழுங்கா திரும்பு, ஒண்ணும் பண்ணிட மாட்டேன்.” என்று நக்கலாக பதில் வந்தது.
வாய் வார்த்தையாக அவன் அப்படி சொன்னாலும், அவள் தேகத்தில் உடையை மாற்றும் சாக்கில் அவன் கைகள் விளையாடவே செய்தன…. அவன் கைகளை இடது கையால் தட்டி விட்டும், “ஹே என்ன?” என அதட்டியும் அவனை முறைத்துக் கொண்டு நின்றாள் அவன் மனைவி!
அவளின் முறைப்பை எல்லாம் கிடைப்பில் போட்டு, ஒரு வழியாக அவளுக்கு நைட்டியை அணிவித்து, இடுப்பை வளைத்துக் கொண்டு நின்று கேள்வி கேட்டான்.
“ஆமா இந்த ஃபிரன்ட் ஓபன் பட்டன் வைச்ச நைட்டி எல்லாம் வாங்கறது தான? இதை யாரு வாங்குனா?”
“அப்பா தான் தெரியாம வாங்கிட்டு வந்தாரு. வேற நைட்டியும் என்கிட்ட இல்ல, அதான் இதையே… நீங்க நாளைக்கு வாங்கிட்டு வாங்க ஞாபகமா!”
அவள் கூறியதை கேட்டு குறும்பாக புன்னகை பூத்து, “நேத்து கேட்டு இருந்தினா வாங்கிட்டு வந்திருப்பேன். இப்போ…..” என சொல்லி, மறுப்பாக தலையசைக்கவும் தமிழின் முகம் பாதி கோபத்திலும், மீதி வெட்கத்திலும் சிவந்தது, அழகாக.
“சரி கொஞ்ச நேரம் இரு. உன்கிட்ட நிறைய பேசனும்.”
செழியன் சிரித்துக் கொண்டே சொன்னாலும், தமிழின் முகம் சிறிது வாடியது. பேசாமல், படுக்கையில் அமர்ந்தவளை பார்த்து, “டூ மினிட்ஸ்” என விடைப்பெற்று குளியல் அறைக்குள் சென்று முகம் கழுவி, உடை மாற்றி வந்தான் அவள் கணவன்.
தன் வேலைகளை முடித்து தமிழின் அருகில் நெருக்கமாக அமர்ந்து, அவளின் கைகளை தனக்குள் எடுத்துக் கொண்டவனை கேள்வியாக பார்த்தாள் தமிழ்.
“ரொம்ப வலிக்குதா?” அவளின் நெற்றிக் காயத்தை வருடிக் கொண்டே கேட்டவனை கண்களால் முடிந்த மட்டும் முறைத்தவள், தன் கைகளையும் உருவிக் கொண்டாள் அவனிடமிருந்து.
“இதை கேக்க இவ்வளவு நாளா??”
“ஹே எனக்கு உன்கிட்ட பேசறதுக்கு தைரியம் சுத்தமா இல்ல. ரொம்ப கில்டியா…”
“போதும் உங்க கில்டி கான்ஷியஸ் பத்தி அக்கா என்கிட்ட சொல்லிட்டாங்க.”
இதை கேட்டு ஒரு கணம் திகைத்த செழியன் பின் மீண்டும் தொடர்ந்தான். “யாரு அண்ணியா??”
“ஹ்ம்ம்ம் ஆமா…”
“என்ன சொன்னாங்க?”
“நீங்க அவங்க கிட்ட புலம்புனதை பத்தி சொன்னாங்க. அவ்வளோ தான்.”
“நான் என்ன நினைச்சேனோ அதை தான் சொன்னேன் அவங்க கிட்ட. என்னால எப்போவும் இதை மறக்க முடியாது. ஒரு வாரமா யார் கிட்டயும் பேசக் கூட முடியலை இதால… மே பி நான் அப்படி கமன்ட் பண்ணலனா, இந்த சண்டையே வந்திருக்காது. உனக்கும் ஆக்சிடன்ட் ஆகிருக்காது. என்னால தான் உனக்கு இவ்வளோ வலி, ஓபரேஷன் எல்லாம்!”
“நீங்க சொல்றது ஓகே ஆனா எப்படி உங்களால தான் ஆக்சிடன்ட்னு சொல்ல முடியும். நான் தான் அந்த டிரைவர ஸ்பீடா போக சொன்னேன். நீங்க விரட்டிட்டு வரது புடிக்காம. என் மேலயும் தான் தப்புயிருக்கு. நீங்க போகாதன்னு கெஞ்சும் போதாவது கேட்டு இருக்கனும். ப்ச்ச், எல்லாமே லேட்டா தான் புரியுது.”
தமிழ் பேசுவதை கேட்க கேட்க செழியனுக்கு காதில் தேன் வந்து பாயாத குறை தான். ‘இவ எப்போ இப்படி மாறுனா?’ மனதில் தோன்றிய கேள்வி முகத்தில் பிரதிபலித்தது போல, தமிழே அக்கேள்விக்கான பதிலை கூறினாள்.
“என்னடா இவ எப்போ பெல்டி அடிச்சான்னு பார்க்குறீங்களா? எப்போ உங்க தலைவனை மறந்துட்டு என்னை மட்டுமே யோசிச்சிங்களோ அப்போவே என்னோட பாதி கோபம் ஓடிச் போச்சு….”
இமைகளை அகல விரித்து அதிசயத்தை கேட்பது போல கேட்டவனை, பார்த்து மென்னகை பூத்தாள் தமிழழகி. பின், விபத்தின் போதிலிருந்து மருத்துமனையில் அவனை நோட்டமிட்டது வரை பகிர்ந்தவள், “எப்படி உங்க தலைவன் ஞாபகமே வரலியா இந்த ஒரு வாரத்துல?” என்று கேட்டவும் தயங்கவில்லை.
“வந்துச்சு, அது எப்படி வராம இருக்கும்! ஆக்சிடன்ட் பத்தி யோசிக்கும் போதே அதுவும் ஞாபகம் வரும். ஆனா, அதுக்கடுத்து நீ என் மடியில ரத்தமா படுத்ததும் பின்னாலயே வரும். அது எல்லாம் கொடுமை. இப்போ எதுக்கு…”
இறுகிய முகத்துடன் கூறியவனை பார்க்க, தமிழுக்கே கஷ்டமாக இருந்தது. ஆனாலும், இன்றே எல்லாவற்றையும் பேசித் தீர்ப்பது நல்லது என தோன்றவே அவன் கைகளை அழுத்தம் கொண்டு பிடித்து, அவனை தைரியப்படுத்தினாள்.
அவள் கொடுத்த தைரியத்திலோ இல்லை அவன் மன ஊளைச்சலிலோ, தமிழை வேகமாக அணைத்து, தன் மனதை கொட்டினான் தன்னவளிடம்.
“நான் செஞ்ச தப்பால தான் உன்னை அந்த மாதிரி ஆக்கிட்டு, நான் ரக்ஷனை பார்க்கனும்னு கடவுள் நினைச்சாரு போல! எனக்கு என் தலைவன் முக்கியம் தான். ஆனா, உன்னை விட எதுவுமே இல்ல பெருசில்லை அகி. உனக்கு ஏதாவது நடந்து தான் ரக்ஷனை பார்க்கனும்னா, எனக்கு பார்க்கவே வேணாம்!! நீ இல்லாம கண்டிப்பா என்னால முடியாது…. ஐ லவ் யூ டி! லவ் யூ சோ மச்….”
ஒவ்வொரு வார்த்தையும் உணர்ச்சியில் முக்குளித்து, காதலை அவன் மனாயாளிடம் எடுத்துரைக்க, தமிழும் தன் இடது கையால் அவனை அணைக்க முற்பட்ட போது செழியனின் கண்ணீர் அவளின் தோள்களை நனைத்தது.
“ஹே ஏன் அழறீங்க? ஒண்ணுமில்ல, அதான் எல்லாம் சரியாகிடுச்சுல. நாம இனிமே இதை பத்தி பேச வேணாம். ப்ளீஸ், அழாதீங்க. எனக்கும் அழுகையா வருது.”
தமிழை மீண்டும் நெருக்கமாக அணைத்து செழியன் குலுங்க, அவனை இச்சம்பவம் எவ்வளவு தூரம் பாதித்திருக்கிறது என்பதை எண்ணி தமிழும் தன்னை அறியாமல் கண்ணீரில் பொங்கினாள். சில நிமிடங்கள் கழித்து, முகத்தை அழுந்த துடைத்தபடி தன்னவளை கண்டவன் அவளின் கண்களையும் துடைக்க, தமிழோ தன் துயரத்தை துடைத்த உள்ளங்கையை தன் உதட்டில் ஒற்றினாள் ஆசையாக. அவளின் மதி முகத்தை தன் கைகளில் கொண்டு அவனும் முத்தத்தை அவளின் முகமேல்லாம் இட்டுக் கொண்டு வந்து இதழில் நிறுத்தினான்.
அச்செயலில் தமிழும் மூழ்க, சில நிமிடங்களில் அவளை விடுவித்து, மனைவியின் கழுத்தில் உதட்டை ஒற்றி விளையாடினான் செழியன். “ஹே என்ன பண்றீங்க? ப்ச்ச் சும்மா இருங்க.”
“நான் சும்மா தான் இருந்தேன் நீ தான் ஸ்டார்ட் செஞ்ச!”
“ஐய்யோ தெரியாம பண்ணிட்டேன். அத்தை வரப் போறாங்க…. ப்ளீஸ்….”
“வரட்டும்! ஆமா, நீயும் தான என்ன லவ் பண்ற? நீயும் லவ் யூ சொல்லு…”
அவளை அணைத்துக் கொண்டு செழியன் வினவ, “சொல்ல மாட்டேன்…” என சட்டமாக பதிலளித்தாள் தமிழ்.
அவன் கேட்டுக் கொண்டே இருக்க, அவள் முடியாது என கூறிய, ஒவ்வொரு மறுப்புக்கும் அவனிடம் இருந்து வந்த சில்மிஷத்தை தான் தமிழ் சமாளிக்க பெரும் பாடு பட்டாள். “எங்கம்மா போகும் போது உன் கூட சண்டை போட கூடாதுனு சொன்னாங்க. இரு வந்தவுடனே சொல்றேன். உன் மருமக ஐலவ் யூ சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டா. சண்டை போட்டேன்னு!”
அப்போது சரியாக காலிங் பெல் அடிக்க, “அம்மா தான் இரு சொல்றேன்.” என்றபடி சென்ற செழியனின் பின்னேயே பயத்தோடு தொடர்ந்தாள் தமிழ். உள்ளே வந்த சசிகலாவை முதலில் கதவை திறந்து வரவேற்ற செழியன், “எந்த கோவிலுக்குமா போன?” என உற்சாகமாக கேட்டு, தான் மகிழ்ச்சியாக இருப்பதை சொல்லாமல் சொல்லினான் அன்னையிடம்.
“மூகாம்பிகை கோவில்டா.” இருவரையும் மாறி மாறி ஆராய்ச்சி பார்வை பார்த்து, விபூதியையும் குங்குமத்தையும் பூசினார் மகனின் நெற்றியில்.
மகனிடமிருந்து மருமகளிடம் நேராக சென்றவர் அப்போது தான் அவள் குளித்து நைட்டி மாற்றி இருப்பதை கவனித்தார். மேலும், தமிழின் சிவந்த முகம் அவருக்கு பல கதைகளை சொல்ல, மகிழ்வுடன் அவளுக்கு குங்குமம் வைத்தார்.
அவர் கோவிலில் வேண்டியதும் இது தானே? எப்படியோ இருவரும் ஒன்றாக மனம் ஒத்திருந்தால் அதுவே அவருக்கு போதும். அதனால், அன்று முதல் தேவையில்லாமல் அவர்களின் அறைக்குள் நுழைவதை எல்லாம் நிப்பாட்டி, இருவருக்கும் முடிந்த வரையில் தனிமை கொடுத்தார்.
அன்றிரவு தூங்கும் போதும் தமிழ் அதையே கூறினாள் செழியனிடம். “அத்தை என்னமோ கெஸ் பண்ணிருக்காங்க. அவங்க ரூம்முக்குள்ளயே இருக்காங்க.”
“நமக்கு பிரைவஸி தேவைன்னு அம்மாக்கு புரிஞ்சுடுச்சு. நமக்கு வேலை மிச்சம்.” சொல்லிவிட்டு, தமிழின் மேல் கை போட்டவனை திட்டினாள் அவன் மனைவி. “ஆமா இப்போ சொல்லுங்க. இத்தனை நாள் என்னை இந்த ரூம்ல தூங்க கூட விடலை. இப்போ வந்து பேசுங்க எல்லாம்.”
“அடிப்பாவி! என் கஷ்டம் எனக்கு தான் தெரியும். கல்யாணம் முடிஞ்சு திருச்சியில இருந்த வரைக்கும் டெய்லி தூங்க முடியாம எவ்வளோ பாடுப்பட்டேன் தெரியுமா? இங்கயும்னா தினமும் சிவராத்திரி தான் எனக்கு. உனக்கு என்ன நீ நல்லா தூங்குவ!”
“ஆமா தூங்காம உங்களையேவா பார்த்துட்டு இருக்க முடியும்.”
“ஏன் பார்த்தா என்ன?”
“அப்புறம் எனக்கு தூக்கம் வராது….”
கண் சிமிட்டி புன்னகைத்து தமிழ் கூற, அவளின் கையை பற்றி கொண்டு, “குட் நைட் அகி” என கூறி தூங்க ஆரம்பித்தவனை, தன் கேள்வியால் நிறுத்தினாள். “ஆமா அது என்ன அகி? புதுசா!”
“அது தமிழழகி, அழகி, அகி! ஷார்ட் ஃபார்ம்… கண்டுக்காத….”
“முழுசா கூப்பிட சொம்பேறித்தனம். அதுக்கு இப்படி ஒரு பிட்டா?”
“ஹே சொம்பேறி எல்லாம் இல்ல. வேணும்னா இப்படி வைச்சுக்கோ. ஸ்பெஷல் நேம் உனக்காக நான் வைச்சது. ஓகே வா?” தலையசைத்து, இனிய மன நிலையில் தானும் தூக்கத்தில் ஆழ்ந்தாள் தமிழழகி.
அடுத்து வந்த நாட்கள் அவ்வீட்டில் எல்லோருக்கும் இதமாக செல்ல, தன் அறைக்குள் அடிக்கடி முடங்கிய சசிகலாவை வெளியே அழைத்து வந்தாள் தமிழ்.
“ஏன் அத்தை சும்மா சும்மா உள்ள போய் உட்காந்துக்கறீங்க. இங்கயே இருங்க.”
தங்களின் பேச்சு வழக்குகளில் அவரையும் இணைத்துக் கொள்ள, சசிகலாவிற்கு மிகுந்த சந்தோஷம். இதை எல்லாம் திருச்சியில் உள்ளவர்களுக்கு சொன்னாலும், சுவாமிநாதன் தன் பிடிலேயே நின்றார்.
மகனிடம் ஒரு வார்த்தை பேசுவதில்லை! கேசவனோ வேறு வழியின்றி இரண்டொரு வார்த்தைகளோடு நிறுத்திக் கொண்டார் செழியனிடம். இதை குறித்து மனைவியிடம் செழியன் ஒரு முறை வருத்தப்பட்டான்.
“உன் அப்பாவும் சரி, என் அப்பாவும் சரி ரொம்ப கோபமா இருக்காங்க அகி. என்ன சொல்லி சமாளிக்க போறேன்னு தெரியலை!”
தமிழழகி இதை கேட்டு மனதில் தன் தந்தையுடன் பேச வேண்டும் என குறித்துக் கொண்டாள். அதற்கு நேரமும் வந்தது மறுவாரத்திலேயே!!!

Advertisement