Advertisement

அத்தியாயம் – 15
எல்லோருக்கும் ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியை கொடுத்த தமிழ் மிகவும் தெளிவாக நிறைய யோசித்தே இம்முடிவை எடுத்தாள். அடிப்பட்டு, அறைக்குள்ளேயே அடைப்பட்டு இருந்த இந்த காலத்தில் அவள் மனம் ரொம்பவே ஓவர்டைம் வேலை பார்த்தது.
முதலாக அவளின் உள்ளத்தில் தோன்றியது, அவ்வளவு அவசரப்பட்டு வீட்டை விட்டு கிளம்பியிருக்க வேண்டாமோ? ஒரு ஆவேசத்தில் வாக்குவாதம் முற்றி, செழியனையும் வெறுப்பேற்றி, ஊந்துதலில் கிளம்ப வேண்டும் என்ற எண்ணம் நெஞ்சில் வேரூன்றியது!
காலம் தாழ்ந்த பின் இப்போது சிறிது நேரம் அமைதியாக காத்திருந்திருக்கலாமோ என கேள்வி எழுந்தது! கடைசி முயற்சியாக செழியன் தன்னிடம் கெஞ்சியது, விபத்து நடக்கும் முன் ஓட்டுனரை வேகமாக செல்ல தான் விரட்டியது, விபத்து நடந்தது, அதன்பின் வலியில், அரை மயக்க நிலையில் தான் எழ முடியாமல் காருக்குள் வசித்தது, செழியன் வந்து காப்பாற்றியது, தனக்காக அவன் சிந்திய கண்ணீர் துளிகள், ‘தமிழு’ என்று தன்னை சுய உணர்வில் மீட்டு வைக்க அவன் கூப்பிட்டது, ரக்ஷன் வந்து சேர்ந்தது என எல்லாம் மனதுக்குள் காட்சிகளாக மனதில் வந்த வண்ணம் இருந்த வேளையில், ரக்ஷனின் இடத்தில் நங்கூரமாய் நின்றது!
‘தலைவா’ என கூப்பாடு போடுபவன், தன்னை விட அவன் தலைவன் தான் முக்கியம் என கருதுபவன் எப்படி ரக்ஷனிடம் எதுவும் பேசாமல் தன்னையே தாங்கினான். தீவிர விசிறிகள் யாராக இருந்தாலும், யாருக்கு விசிறியாக இருக்கிறார்களோ அவர்களை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என நினைப்பர். செழியனும் அப்படியே என தமிழ் நன்றாகவே அறிவாள்.
அப்போதும் எப்படி அவன் தன்னை முன் நிறுத்தினான்? ஒரு வேளை செழியனுக்கு தன் தலைவன் தன்னைவிட முக்கியமில்லையோ??! இல்லை ரத்த வெள்ளத்தில் மிதந்திருந்த மனைவியை விட தலைவன் ஒன்றும் பெரிதாக தெரியவில்லையா?
இந்த விபத்து நடக்காமல் இருந்து ரக்ஷனை பார்த்திருந்தால், செழியன் இப்படி நடந்திருக்க மாட்டானோ??
பற்பல கேள்விகள் தமிழுக்குள்ளே!!! இப்படி யோசித்த ஒரு வார காலத்தில், பேசவில்லை என்றாலும் கூட நன்றாக செழியனை நோக்கினாள் தமிழ். விபத்து பற்றி விரிவாக மாறனிடம் சொல்லும் போது ரக்ஷன் காரில் தான் மருத்துவமனை வந்தோம் என்றதோடு அவன் நிறுத்த, மாறன் தான் கண்களை விரித்தான்.
“ஹே யாருடா உன்னோட தலைவன் ரக்ஷனா??” குரலே அதிசயத்தில் முக்குளித்தது.
“ஆமா அதே ரக்ஷன் தான்.”
சாதாரணமாக கூறிவிட்டு, மீண்டும் தன் வேலையில் கவனத்தை திருப்பினான் செழியன். கண்களை மூடி படுத்திருந்த தமிழின் காதுகளில் இது நன்றாகவே விழுந்தது. பின்னொரு சமயம், நதியா இவளை பார்க்க வந்த போது, வேறு தகவல்களை பகிர்ந்தாள்.
“அவனுக்கு ரொம்ப கில்டி ஃபீல்ங்மா…. அவனால தான் இப்படி ஆகிடுச்சுன்னு. அதான் யார்கிட்டயும் பேசாம, இப்படி தேவதாஸ் மாதிரி சுத்திட்டு இருக்கான். நேத்து நைட் இவருக்கு ஃபோன் போட்டு ஒரே புலம்பல் தான்! ரெண்டு பேரும் ஏதோ சொல்லி சமாளிச்சோம்.”
“என்ன பிரச்சனைன்னு சொன்னாரா அக்கா??”
“அதேல்லாம் சொல்லலை, நாங்களும் கேட்டுக்கல. ஆனா, அவனால தான் இப்படி ஆச்சுன்னு குறைஞ்சது நூறு வாட்டியாவது சொல்லிருப்பான்.”
“ஹோ”
நதியா சொன்னதை கேட்டு இவளுக்கு மனம் நிறைய சமன்படவே செய்தது! இல்லை இவன் நம்மை மதிக்கிறான், சிறிதளவேணும் தன்னை ரக்ஷனை விட உயர்வாகவே மதிக்கிறான்!
இப்படி எல்லாம் யோசித்தே தமிழ் தான் சென்னையிலேயே தங்குவதாக கூறினாள், செழியனை பார்த்துக் கொண்டே!! அவன் வார்த்தையில்லாமல் நின்ற வேளையில், கேசவன் தமிழை வற்புறுத்தினார்.
“இங்க இருந்தா யாருமா உன்னை பார்த்துப்பா? இது சரியா வராது. நீ நம்ம வீட்டுல கொஞ்ச நாள் இருடா.”
“இல்லப்பா ப்ளீஸ்… என்னை கம்பெல் பண்ணாதீங்க!”
கேசவன் மீண்டும் பேசத் துவங்குவதற்குள் அவரின் சம்மந்தி சசிகலா முந்தினார். “அவ தான் இங்க இருக்கேன்னு சொல்றாளே… நான் கூட இருந்து பார்த்துக்கறேன். இவரு திருச்சிக்கும் சென்னைக்கும் மாறி மாறி இருந்துப்பாரு. ஏற்கனவே நதியா கிட்ட பேசிட்டேன். அவ அங்க சமாளிச்சுப்பேன்னு சொல்லிட்டா. தமிழு இங்கயே இருக்கட்டும்.”
பெரிதாக சசிகலா பேசி முடித்ததும், வள்ளியும் தன் கணவரின் பக்கம் திரும்பி பார்வை பறிமாறிக் கொண்டார். சுவாமிநாதனும் தன் மனைவி கூறியதையே வற்புறுத்த, அதுவரை பேசாமல் இருந்த பார்வதியோ, “அதான் எல்லாரும் சொல்றாங்கல? அவ இங்கயே இருக்கட்டும். வேணும்னா நாம வந்து பார்த்துக்கலாம்.” என்று குழப்பத்திற்கு முற்று புள்ளி வைத்தார்.
“சரி அவ இஷ்டம்.” கேசவன் கூறியவாரு, வெளியே நடந்து செல்ல அவருடன் சுவாமிநாதனும் சென்றார், சமாதானப்படுத்த. “இந்த காலத்து பசங்கன்னு சும்மாவா சொன்னாங்க? எதையும் புரிஞ்சிக்க முடியலை! வீட்டை விட்டு போறேன்னு கிளம்பிட்டு, இப்போ அங்க தான் இருப்பேன்னு அடம் வேற!” கேசவன் புலம்பலுக்கு சுவாமிநாதனிடம் பதிளில்லை! மாறனோ சிறிதும் தாமதிக்காமல், செழியனை யாருமற்ற தனிமைக்கு இட்டுச் சென்று, தன் சந்தேகத்தை கேட்டான்.
“டேய் நேத்து நைட் நீ தான தமிழ் கூட இருந்த?”
ஒன்றும் புரியாத பாவனையில் தம்பியும் பதிலளித்தான்.
“ஆமாடா எதுக்கு கேக்கற??”
“ஹோ, அப்போ நைட் டிரைக்டா கால்ல விழுந்திட்ட கரக்டா? என் கிட்ட புலம்புன மாதிரி, நைட்டேல்லாம் மன்னிப்பு படலம் ஓட்டிருக்க??”
“இத கேக்க தான் கூப்பிட்டியா? போடா…”
மாறனை குதூகலத்துடன் ஒதுக்கிவிட்டு, அறையில் இருந்த சாமான்களை காரில் ஏற்றும் பணியை மேற்கொண்டான் செழியன். இங்கே இவனுக்கு இந்த  மொக்கையான கேள்வி என்றால், உள்ளே வள்ளி தமிழழகியை தன் விசித்திரமான கேள்வியால் திகைக்க வைத்தார்.
“ஏன்டி தலையில அடிப்பட்டதால எதாவது மண்டை குழம்பிடுச்சா? இல்ல, மாப்பிள்ளையை பழி வாங்க ஏதாவது பிளான் பண்ணிருக்கியா?? எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லிடுடி!”
“அம்மா, ஹீரோயின் மாதிரி என்னை இமாஜின் பண்ணிட்டு இருக்கேன்! நீ என்னை லூசு இல்லனா வில்லின்னு முடிவே பண்ணிட்டியா?? உன் பொண்ணுமா நானு!!! சீரியல் பார்க்காத சீரியல் பார்க்காதன்னு சொன்னா கேட்டா தான?!”
ஒரு பெருமூச்சுடன் தமிழிடம் மேலும் சில அறிவுரைகளை வீசிவிட்டு, தன் ஊருக்கு நடையை எட்டிப் போட்டார் வள்ளி அவர் கணவருடனும் மாமியாருடனும். ஒரு மணி நேரத்தில், ஜோடியாக வீட்டு வாசலில் நின்ற மகன், மருமகளுக்கு ஆர்த்தி கரைத்து வீட்டுக்கு உள்ளே நுழைய விட்டு சசிகலா வெளியேறினார், ஆர்த்தியை ரோட்டில் ஊற்ற.
ஒரு வாரம் கழித்து வீட்டுக்குள் நுழைவது புதிய ஒரு தடுமாற்றத்தை கொடுத்தாலும், தமிழ் மனதை அலைபாய விடாமல், தன் அறைக்கு செல்ல முற்பட்டாள். சட்டென்று அவளின் கைகளை பற்றி, அவனின் அறைக்கு செல்ல சுவாமிநாதன் அறியாமல் கூட்டிச் சென்றான் அவள் கணவன்.
ஒன்றும் புரியாமல் அவன் பின் சென்றவள், அறைக்குள் வந்ததும் கேள்வியாக அவனை பார்க்க, வேறு வழியின்றி பதில் வந்தது.
“அம்மா, அப்பா அந்த ரூம்ல இருந்துப்பாங்க, அதான் உன்னோட திங்க்ஸ் எல்லாம் இங்க ஷிப்ட் பண்ணிட்டேன். இந்த கப்போர்ட்ல இருக்கு…”
அலைமாரியை சுட்டிக் காட்டி செழியன் கூறியதை வேடிக்கை பார்த்தபடி, அமைதியாக நின்றாள் தமிழ். “என்ன உனக்கு ஓகே தான?”
சந்தேகம் துளிர் விட கணவன் கேட்டதற்கு, அதே கேள்வியை பதிலாக திருப்பினாள் மனைவி. “நான் இங்க இருக்கறது உங்களுக்கு ஓகே தான?”
“எனக்கு எந்த பிராப்ளமும் இல்ல…. ஏன் கேக்குற?”
“ஹ்ம்ம்ம், நீங்க தான் என்னை அந்த ரூம்முக்கு போக சொன்னீங்க!”
தமிழின் கூரிய விழிகளின் பார்வை வீச்சை தாங்க முடியாமல், அறையில் இருந்து வெளியேற முயன்றான் செழியன். “ஏன் இப்படி என்கிட்ட இருந்து ஓடிட்டே இருக்கீங்க?”
வந்த நேரடித் தாக்குதலில் மேலும் பாதங்களை எடுத்து வைக்க இயலாமல், அப்படியே நின்றான். நல்ல வேளை சசிகலாவின் நடமாட்டம் அறையின் பக்கம் தெரியவும், பேச்சை முடிந்த்துக் கொண்டனர் இருவரும்.
தமிழ் அத்துடன் இவர்களின் பரிபாஷயை பற்றி சிந்திக்கவில்லை! ஆனால், செழியன் நிறையவே சிந்தித்தான். அன்றிரவு தன்னிலை விளக்கம் கொடுத்தே ஆக வேண்டும், என முடிவுடன் அறையில் காலடி எடுத்து வைத்தவனை, ஆழ்ந்த உறக்கத்தில் மிதந்த எழில் கொஞ்சும் தமிழின் முகமே வரவேற்றது.
‘எல்லாமே நான்-சிங்கா போகுது!’ மனதுக்குள் சலித்தபடி, கட்டிலின் மறுகோடியில் ஜாக்கிரதையாக படுத்தான். எலும்பு முறிவு ஏற்பட்ட கை இவன் பக்கம் இருந்ததே அந்த கவனத்திற்கு காரணம்.
மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. சோம்பலாக பொழுது விடிந்தாலும், காலை உணவு உண்டவுடன் சுவாமிநாதன் கிளம்பிவிட்டார், திருச்சிக்கு. ஹாலில் இடது கைய் மூலமாக ஃபோன் நோன்டிக் கொண்டிருந்த தமிழுக்கு, வாட்ஸாப்பில் ஒரு புதிய தகவல் வந்தது!
யாரென்று பார்த்தால் அவள் கணவன் தான்…. அது ஒரு ஆச்சரியம் என்றால், அவன் அனுப்பி இருந்த புகைப்படத் தகவல் மேலும் அதிர்ச்சியை அள்ளி ஊற்றியது. அவர்களின் சண்டைக்கு காரண வித்தாக அமைந்த முகநூல் கணக்கை, முழுதாக அழித்திருந்தான் செழியன். அதற்கு சான்றான அலைப்பேசியின் புகைப்படத்தை தான் இவளுக்கு அனுப்பியிருந்தான்.
அதை கண்ட நொடி, முகநூல் சண்டை, இவர்களின் சண்டை எல்லாம் மனக் கண்ணில் மின்னி மறைந்தாலும், ‘எப்படியோ வெளியே வந்தானே’ என மகிழ்ச்சி சிறிய நீரூற்றாக பொழிந்தது இதயத்தில்! வாட்சாப்பில் தகவலை அனுப்பி வைத்தவனோ எதுவுமே நடக்காதது போல நடமாட, தமிழும் அதை பற்றி கேள்வி எழுப்பவில்லை….
அன்று இரவு மாமியாரும் மருமகளும் பல கதைகள் பேச, செழியன் தமிழுக்காக காத்திருந்து காத்திருந்து இறுதியில் நித்திரை அவனை தழுவியது. அதற்கு அடுத்த நாள், வங்கிக்கு சீக்கிரமாகவே கிளம்ப வேண்டும் பரபரப்பாக சுழன்றான் செழியன். சசிகலா தான் எல்லாம் செய்தார்!
தன் வேலைகளுக்கே பிறரின் உதவி தேவைப்பட தமிழுக்கு உட்காருவது,படுப்பது, சாப்பிடுவது தவிர வேறு வேலை இல்லை. உடன் சசிகலா இருந்ததால், பொழுது சிறிதளவேணும் நகர்ந்தது.
அன்று மாலை வீட்டிற்கு திரும்பிய செழியனை, வாசலிலேயே மறித்தார் அவன் அன்னை. “பக்கத்து வீட்டம்மா கோவிலுக்கு போறாங்களாம். நானும் போயிட்டு வரேன்டா. தமிழை பார்த்துக்கோ! சண்டை போடாதடா அவளோட….”
சிறு வயதில், மாறனோடு தனியாக வீட்டில் விட்டு போகும் போது அடிக்கடி அவன் அன்னை இதை கூறுவார். ‘சண்டை போடாதடா’ இப்போது அதை கேட்டதும், சிரிப்பு உதட்டில் தவழ, வீட்டை உட்புறமாக பூட்டிவிட்டு தன் மனைவியை தேடினான்.
அவர்களின் அறையிலிருந்து சத்தம் வர, அதன் அருகில் சென்றவனை, மனைவியின் “அத்தை! அத்தை…. இங்க கொஞ்சம் வாங்களேன்.” என்ற குரலே கேட்டது.
என்ன செய்கிறாள் என யோசனையுடன் மூடியிருந்த கதவை திறந்தவன் மின்சாரம் பாய்ந்தது போல் நின்றான். கண்கள் விரிய, உடம்பே படபடக்க, கையில் வைத்திருந்த நைட்டியை நெஞ்சோடு அணைத்துக் கொண்ட தமிழும் அதிர்ச்சியில் முக்குளித்து, நாணத்தில் நீந்தி கரை சேர முடியாமல் தத்தளித்தாள்!!!

Advertisement