Advertisement

அத்தியாயம் – 13
செழியன் முழித்துக் கொண்டே அமர்ந்திருக்க, அதற்கு நேர்மாறாக தமிழழகி கோபத்துடன் நின்றிருந்தாள். அவளின் முகத்தை பார்க்காமல் மடிகணிணியை நோக்கியவன், அதில் முகநூல் பக்கத்தை மூடியபடி, “நான் ஒண்ணும் ஸ்டார்ட் பண்ணலை. அவங்க தான் தேவையே இல்லாம, ரக்ஷனை பத்தி கலாய்ச்சு, திட்டி பேசினாங்க.” என்று உள்ளடங்கிய குரலில் கூறினான்.
என்ன தான் பேசினாலும், இன்றைக்கு பெரிய வாக்குவாதம் இருக்கிறது இதனால் என உணர்ந்தே இருந்தான் செழியன். அவன் நினைத்தது சரியே என்னும் அளவுக்கு, தமிழ் அவன் கூறியதை ஏற்றுக் கொள்ளாமல், மேலும் கத்தத் துவங்கினாள்.
“யாரு என்ன கலாய்ச்சா உங்களுக்கு என்ன? முதல்ல ஏன் இன்னொரு ஐடி வைச்சிருக்கீங்க? உங்களோட ஒர்ஜினல் ஐடில இந்த மாதிரி கருமத்தை எல்லாம் பண்ண முடியாதுனா???”
கோப பித்து தலைக்கு ஏற வார்த்தைகள் கொதிக்கும் எண்ணையில் இட்ட கடுகாக பொரிந்தன. அந்த ‘கருமம்’ என்ற வார்த்தையும் செழியனை உலுக்கியது! “ஹே என்ன ஓவரா பேசுற? எல்லா ஃபேன்னும் பண்றது தான் இது. தேவையில்லாம கருமம் அது,இதுனு பேசாத….”
“பின்ன உங்க கேவலமான சண்டையில என்னையும், அத்தையையும் நீங்க இழுப்பீங்க…  நான் எல்லாம் தெரிஞ்சும் பேசாம இருக்கனுமா??”
“நான் ஒண்ணும் அந்த மாதிரி பேசல…. அவன் தான் தப்பா பேசினான். அதனால தான் நானும் விடாம சண்டை போட்டேன்!”
“நீங்க சண்டை போட்டதால தான, அவன் அப்படி பேசினான். உங்களுக்கு என்னன்னு சும்மா இருக்க வேண்டியது தான??”
“என்னால அப்படி இருக்க முடியாது!”
நறுக்கென்று வார்த்தைகள் வந்து விழ, தமிழழகிக்கு தான் கேட்டதை நம்ப சில பல நொடிகள் பிடித்தது! இவன் மாறிவிடுவான் என எத்தனை முறை தான் நம்பி நம்பி ஏமாறுவது? ஒவ்வொரு முறையும் வெற்றிகரமாக தோல்வியை மட்டுமே தான் தழுவிகிறோம் என உணர்ந்தாள் மனதில் மின்னிய வலியுடன்.
“அப்போ நீங்க மாற ட்ரை பண்றேன்னு சொன்னது எல்லாம், பொய் தான் இல்லயா?”
இப்போது தமிழின் குரலில் கோபம் கொப்பளிக்கவில்லை. மாறாக வலியும், வேதனையுமே ஊசலாடியது….
“நான் மாற ட்ரை பண்றேன் தான். ஆனா, நீ இப்படி எல்லாத்துக்கும் பிரச்சனை பண்ணா ரொம்ப கஷ்டம்.”
“கஷ்டமா…. உங்களுக்கா? அப்படி என்ன கஷ்டம்? உங்களால எனக்கு தான் கஷ்டம்!”
“தமிழ் ப்ளீஸ்… இதுக்கு மேல பேசினா பிரச்சனை இன்னும் பெருசா தான் ஆகும். இத்தோட விட்டுடு.”
செழியனின் எரிச்சலான குரலில், மட்டுப் பட்டிருந்த அவன் மனைவியின் கோபம் மீண்டும் சிறு பிள்ளையாய் துள்ளி எழுந்தது! “பரவாயில்ல பிரச்சனை பெருசானாலும் பரவாயில்ல…. ஆனா, இனிமேலும் என்னால கொஞ்ச நாள்ல எல்லாத்தையும் மறந்துட்டு, பழைய மாதிரி சிரிச்சு பேசிட்டு இருக்க முடியாது!”
அழுத்தமான முகத்துடன், எந்த எல்லைக்கும் போவது என்ற முடிவுடன் தமிழ் நிற்பதை கண்டு பேசாமல், தன் அறைக்குள் புக பார்த்தான் செழியன். அவன் மனைவி அப்படியே விடுவாளா என்ன?? அவனை வழிமறித்தவள் மீண்டும் தன் மனதில் உள்ளவற்றை கேள்விக் கனைகளாக அவன் முன் வைத்தாள்.
“இனிமேலும் நீங்க மாறுவீங்கன்னு நான் எப்படி நம்புறது?”
“நம்பிக்கை எல்லாம் தானா வரனும். சொல்லி வர கூடாது!”
“தானா நம்பிக்கை வரதுக்கு நீங்க ஏதாவது செய்யனும்! இதே மாதிரி நீங்க நடந்துட்டு இருந்தா நான் என்ன தான் பண்றது?”
“ஒண்ணும் பண்ண வேணாம். என்ன நிம்மதியா இருக்கவிடு போதும்…. இப்படி டார்சர் பண்ணாத….”
அந்த நிமிடம் உணர்ந்த மன உளைச்சலில் செழியன் வார்த்தைகளை கொட்ட, அள்ள முடியாமல் அவை நேராக தமிழின் மனதிற்குள் சென்று அமர்ந்தன. தான் திட்டி பேச வேண்டியதை கணவன் தன்னை நோக்கி வாள் வீசவும், கண்களில் இருந்து நீர் இப்போவா, அப்போவா என எட்டிப் பார்த்தது தமிழுக்கு.
“நான் உங்கள டார்சர் பண்றேன்ல? ஏன் சொல்ல மாட்டீங்க! இதுலயே தெரியலை? உங்களுக்கு உங்க ரக்ஷன் தான் முக்கியம் என்னைவிட, எல்லாத்தையும் விட…. சே நான் தான் லூசு மாதிரி நம்பி ஏமாந்துட்டேன்!”
“ஹே திரும்ப முதல்ல இருந்து ஸ்டார்ட் பண்ணாத. எதுக்கு இப்போ தேவையே இல்லாம பேசிட்டு இருக்க???”
“நான் ஒண்ணும் தேவையில்லாம பேசலை. நான் சொன்னது தான் உண்மை. உங்களுக்கு அவன் தான் முக்கியம். என்னை எல்லாம் உங்களுக்கு சுத்தமா பிடிக்காது!!!”
அழுகை பீரிட்டுக் கொண்டு எழ, விம்மியபடி பேசிய தமிழை காண செழியனுக்கும் என்னவோ போல் இருந்தது. புரியாமல் அழுகிறாளே என வேதனைக் கொண்டான் அவன். கடந்து சென்ற சில நாட்களில் கூடவா தெரியவில்லை அவளுக்கு? தனக்கு அவள் தான் முக்கியம் என?!
தமிழின் அருகில் சென்று அவளின் தோளில் கை வைத்து சமாதானம் செய்ய சென்றவனின் கைகளை தட்டிவிட்டு ஆவேசமாக கத்தினாள் அவன் மனைவி. “என்னை தொடாதீங்க! நீங்க என்ன சொன்னாலும் நான் நம்ப மாட்டேன். உங்களுக்கு நான் ஒண்ணுமே இல்ல. ரக்ஷன் தான் எல்லாம்….”
“இப்போ எதுக்குடி இப்படி கத்துற? மெதுவா பேசு… முதல்ல அழறதை நிறுத்து….”
செழியன் சற்றே பொறுமையின் விளிம்பில் நின்று கூறினான். அதற்கு காட்டுக் கத்தலே பதிலாக வந்தது. ஒரு பாதி பத்திரகாளியாக உறுமாறி இருந்தாள் தமிழ். “நான் அப்படி தான் அழுவேன், பேசுவேன். நீங்க நான் சொன்னதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க.”
அவ்வளவு தான் செழியனும் கோபத்தின் உச்சானிக் கொம்பில் ஏறிவிட்டான். “ஆமா எனக்கு என்னோட தலைவன் தான் முக்கியம். ரக்ஷன் தான் எல்லாம் போதுமா?? சும்மா கத்திட்டே இருக்க!!! சே, இதுக்கு தான் கல்யாணமே வேணாம்னு சொன்னேன். கேட்டாரா எங்கப்பா!”
இதை கேட்டதும் தமிழும் கோபத்துடன் அவனை முடிந்த மட்டும் முறைத்து, “சந்தோஷம் ரொம்ப சந்தோஷம்…. இதுக்கு மேல என்னால இந்த வீட்டுல இருக்க முடியாது! நான் எங்க வீட்டுக்கு கிளம்பறேன்!” என கூறி அவளின் அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டாள்.
அவள் சென்ற பிறகே அவள் கூறிய வார்த்தைகளின் அர்த்தம் விளங்கியது செழியனுக்கு. நெற்றியில் பலமாக அடித்துக் கொண்டு, கோபத்தில் தான் செய்த தவறை எண்ணி வருந்திக் கொண்டிருந்தான். ஆனால், நிறைய நேரம் அங்கே நிற்க முடியாதே… வேகமாக மனைவியின் கதவை தட்டவும், அவள் திறந்தபாடாக காணோம்.
“தமிழ் இப்போ கதவை திறக்கப் போறியா இல்லையா??” என ஓங்கி அடித்த போது கதவை பாதி திறந்தவள், எதிர் கேள்வி எழுப்பினாள். “என்ன வேணும்?”
“இப்போ எதுக்கு வீட்ட விட்டு கிளம்புற? எதுவா இருந்தாலும் இங்க இருந்தே சண்டை போடு….”
“சண்டை போடுற ஸ்டேஜ் எல்லாத்தையும் தாண்டியாச்சு. என்னால இதுக்கு மேல முடியாது! ஏன் திடீர்னு ஃபீல் பண்ணறீங்க? ஹோ நம்ம விஷயம் எல்லாம் வெளிய தெரிஞ்சா உங்களுக்கு பிடிக்காதுல… கவலைப்படாதீங்க நான் சொல்ல மாட்டேன்.”
அத்தோடு பேசியது முடிந்தது என்பது போல, கதவை மீண்டும் அடைத்துக் கொண்டாள் தமிழ். கண்களை மூடி சிறிது நேரம் நின்றவன், ஏப்பாடு பட்டேன்னும் மனைவியை வீட்டை விட்டு செல்ல விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். அது கணவனாக தான் தோற்றுவிட்டதாக ஆகும். கண்டிப்பாக தமிழ் தன்னோடு தான் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தான்.
ஒரு பத்து நிமிடங்கள் கழித்து மீண்டும் கதவு திறந்தது. உடை மாற்றி, பொருட்களை அடக்கிய ஒரு பெரிய பேக்கும், மற்றொரு கையில் கைப்பையும் எடுத்துக் கொண்டு வாசல் நோக்கி சென்ற தமிழை, நிறுத்தி சமாதானம் செய்ய ஆரம்பித்தான் அவளின் கணவன்.
“தமிழ் இப்போ எப்படி போவ? டைம் நைட் ஏழு ஆகிடுச்சு! ட்ரையின், பஸ் எதுலையும் சீட் கிடைக்காது.”
“நான் கார் புக் பண்ணிட்டேன். டூ மினிட்ஸ்ல வந்துரும்….”
கட்டையான குரலில், கலவரத்தை உள்ளடக்கிய முகத்துடன் தமிழழகி கூறவும், கடைசி வழியும் அடைப்பட்டதில் வெளிப்படையாகவே கெஞ்ச துவங்கினான் செழியன்.
“ஹே எதுவா இருந்தாலும் பேசி தீர்த்துக்கலாம். ப்ளீஸ், இப்போ போவாத…”
“ப்ளீஸ்ங்க, என்னை கொஞ்ச நாள் தனியா விடுங்க. நானே திரும்ப வரேன். அதுவரைக்கும் என்னை டிஸ்டெர்ப் செய்யாதீங்க…”
எதிர்பாராத விதமாக கணவன் கெஞ்சவும், அதை ஏற்க இயலாதவளுக்கு தானாக கண்களில் குளம் கட்டியது. அப்போது அவளின் அலைப்பேசி அழைக்க, கார் டிரைவரிடம் பேசியபடியே வீட்டை விட்டு வெளியேறினாள் தமிழ். சற்றும் தாமதிக்காமல் சிறிதும் யோசிக்காமல், தன் வண்டி சாவியை எடுத்துக் கொண்டு வீட்டை பூட்டி தானும் கீழே இறங்கினான் செழியன்.
கீழே அவள் காரில் ஏறும்போதும் அவளின் பேக்கை அவன் கொடுக்காமல் கண்களில் இறைஞ்சலுடன் நிற்க, டிரைவர் தான் பையை பின் பக்கம் வைக்க சொன்னான். வேறு வழியில்லாமல், தானும் பைக்கை எடுத்துக் கொண்டு காரை பின்பற்றி சென்றான் செழியன்.
தமிழழகிக்கு இவன் ஏன் தான் வருகிறானோ என எரிச்சலாக இருந்தது. இருட்டிய வேளையில் காரை தொடர்வது சிரமமாக தான் இருந்தது செழியனுக்கு. ஆனாலும், தான் வருவதை காட்ட அடிக்கடி காரின் பின் கதவை ஒட்டி அமர்ந்திருக்கும் மனைவியின் அருகில் வண்டியை செலுத்தினான்.
செங்கல்பட்டு வரை இது தொடர, அதன் மேல் அதை தாங்க முடியாமல், டிரைவரிடம் விரைவாக செல்லச் சொன்னாள் தமிழழகி. “யார்மா அது பின்னாடியே வராங்க? போலீஸ் கிட்ட சொல்லுவோமா?”
“என்னோட புருஷன் தான் சார். நீங்க சீக்கிரமா போங்க ப்ளீஸ்.”
இதை கேட்டு வாய்யடைத்து போனான் அந்த டிரைவர். ஆனால், விரைவாக காரை ஓட்டினான். அதை பின் பற்ற, செழியன் தான் தவித்து போனான். ‘எதுக்கு இப்போ இவ்வளோ ஸ்பீடா போறான் இந்த டிரைவர். ஒரு வேள தமிழ் சொல்லிருப்பாளோ?’
மனதிற்குள் புலம்பியபடி காரை முடிந்தவரை பின்பற்றினான். ஆனால், விதி ஒரு டாட்டா சுமோ கார் ரூபத்தில் வந்து சேர்ந்தது. அரசுரை தாண்டி இவர்கள் கார் சென்று கொண்டிருந்த போது, இடப்புறம் சாலையில் வந்து சேர்ந்த வேகமான சுமோவை காரின் டிரைவர் முன்பே காணத் தவறினான்.
வேகத்தில் இருந்த கவனம், விவேகத்திற்கு வேட்டு வைத்தது! கடைசி நொடியில் சுமோவை பார்த்து அவன் சுதாரிப்பதற்குள் காரை பக்க வாட்டில் நன்றாகவே தாக்கியது சுமோ. அடித்த வேகத்தில் அதுவும் பொசுங்கி நிற்க, தமிழ் சென்ற காரும் நல்ல அடி வாங்கியதில் உள்ளே இருப்பவர்களுக்கும் பரிசை வாரி இறைத்தது! நல்ல வேளை செழியன் சிறிது தூரம் இடைவெளி விட்டு வந்ததால் தப்பித்தான்!
தூரத்தில் இருந்த செழியன் இந்த கோர காட்சியை கண்டதும், ஒரு நிமிடம் கைகள் நடுங்கி ஸ்லிப்பாக பார்த்தான். ‘தமிழ்’ என மனம் கூப்பாடு போட, ஒருவாரு சமாளித்து வண்டியை வேகமாக விரட்டி, விபத்து நடந்த இடத்தின் அருகில் சென்று நிறுத்தி காரை நோக்கி துடிக்கும் இதயத்துடன் சென்றான். தமிழ் அமர்ந்திருந்த பக்கம் சுமோ மோதியதால், மறுப்புறம் சென்று கதவை திறக்க முற்பட்டான். உள்ளே லாக்காகி இருந்தது, முடியவில்லை!
ரத்த வெள்ளத்தில் கிடக்கும் மனைவியை பார்த்ததும், டிரைவரின் பக்கம் உடைந்திருந்த கண்ணாடியின் வழியே கதவின் லாக்கை எடுத்துவிட்டு, தமிழை வெளியே இழுக்க முற்பட்டான்.
கண்கள் குளம் கட்ட, ரத்தத்தில் குளித்திருந்த மனைவியை கண்டதும் உயிரே போனது செழியனுக்கு. தமிழோ பாதி மயக்கத்தில் இருந்தாள். அவளின் கண்கள் அசைவை வைத்து அவளை கன்னங்களில் தட்டியவன், பின் முழுவதுமாக அவளை வெளியே இழுத்து தன் கைளில் ஏந்திக் கொண்டான்.நேரம் இரவு ஒன்பது மணியை கடந்திருந்தது!
சாலையில் ஒரு சில இரு சக்கர வாகனங்கள் மட்டும் இவர்களை தாண்டி சென்றது. அதில் நல்ல உள்ளம் கொண்ட ஒருவன் மட்டும், தன் பைக்கை நிறுத்தி நூற்றி எட்டுக்கு அழைத்து விஷயத்தை கூறி, டிரைவரையும் காரில் இருந்து வெளியே இழுத்து வைத்தான்.
செழியனுக்கு மற்றவர்கள் எல்லாம் கண்ணில் படவேயில்லை…. கைகளில் ஏந்தியபடி, “தமிழு… தமிழு” என்று மனைவியை கூப்பிட்டுக் கொண்டு அவளின் நினைவு தப்பாமல் இருக்க வேண்டினான் கடவுளிடம். எல்லாமே சில நிமிடங்கள் தான்…. பின், இவர்கள் அருகில் ஓர் ஃபார்சுனர் கார் வந்து நிற்க, அதிலிருந்து இறங்கி வந்த நபர் நேராக செழியனிடம் விரைந்து வந்தார்.
மனைவியை மட்டுமே கண்ணும் கருத்துமாக பார்த்த செழியன், இறங்கி வந்த நபரை பார்த்து மயக்கம் போடாத குறை தான். மறுநொடியே, “சார் ப்ளீஸ், ஹாஸ்பெட்டல் கூட்டிட்டு போகனும்! என்னோட வைப் சார். ஹெல்ப் பண்ணுங்க சார்….” என்று கெஞ்சலில் செழியன் இறங்க, அந்த நபரோ உடனே அவருடைய டிரைவரை கூட்டி இவர்களை வண்டியில் ஏற்றி மருத்துவமனைக்கு விரையச் சொன்னார். அந்த நபர் வேறு யாருமில்லை…. செழியனின் தலைவன் ரக்ஷன் தான்….
ஒரு படப்பிடிப்பை முடித்துக் கொண்டு சென்றிருந்த வேளையில் தான் இவ்விபத்தை ரக்ஷன் கண்டான். தமிழழகியும், டிரைவரும் இருந்த நிலைக் கண்டு தன் வாகனத்தை மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டான். ரக்ஷனின் டிரைவர் தான் பதட்டத்துடன் கேட்டார்.
“சார் நீங்க எப்படி போவீங்க?”
“நான் பிரோடக்ஷன் வண்டியை கூப்பிட்டுப்பேன். நீங்க முதல்ல கிளம்புங்க.”
இதையேல்லாம் பாதி மயக்கத்தில் தமிழழகி கவனித்தாள். ரத்தம் நிறைய சென்றிருந்ததால், சிறிது சிறிதாக அவளுக்கு நினைவு தப்பியது. எப்போது வேண்டுமென்றாலும் சுயநினைவை இழக்க நேரிடலாம். இதை செழியனும் அறிந்தே இருந்தான், காரில் மனைவியை மடியில் இருந்த்திக் கொண்டவன், அடிப்பட்ட கால் டாக்ஸி டிரைவரையும் அவர்களுக்கு உதவி பைக்காரன் ஏற்ற, அவனுக்கு அவசரமாக நன்றி கூறிவிட்டு தமிழின் பைகளையும் அவனிடமிருந்து வாங்கிக் கொண்டு மருத்துவமனை நோக்கி பயணித்தான்.
“தம்பி முடிஞ்ச அளவுக்கு சீக்கிரமா செங்கல்பட்டு ஹாஸ்பெட்டல் போயிடலாம். கண்டிப்பா சரியாகிடும் கவலைப்படாதீங்க.”
கண்ணீர் வழிந்துக் கொண்டே இருந்த செழியனை கண்டு ஓட்டுனர் கூறவும், கன்னங்களை துடைத்து தமிழை பார்த்தால், அவள் முழு மயக்கத்தில் ஆழ்ந்திருந்தாள். தான் பார்க்க வேண்டுமென தவமாய் தவமிருந்த ரக்ஷனை கண்ட உணர்வு கூட இல்லை அவனுக்கு.
ஒரே எண்ணம்…. ஒரே நினைவு… அதை ஒட்டியே அவனின் கண்ணீரும் கவலைகளும்!
செங்கல்பட்டு மருத்துமனை செல்வதற்குள் அவன் மனம் அவனிடம் இல்லை….. மனைவியை டாக்டர்களிடம் சேர்த்த பின்பு தான் புத்தி வேலை செய்யத் துவங்கியது! அப்போது தான் அலைப்பேசியை எடுத்து, தன் அண்ணனை அழைத்து சுருக்கமாக நடந்ததை கூறி அவனை மட்டும் வரச் சொன்னான்.
மாறனிடம் பேசி முடித்து, டாக்டர் எப்போது வெளியே வந்து மனைவியின் நிலை பற்றி கூறுவார், தான் எப்போது அவளை பார்க்கலாம் என யோசிக்கலானான் செழியன். சிறு பிள்ளையாய் மாறி வேண்டுதல்கள் பல விடுத்தான் பல்வேறு கடவுள்களிடம்!!!
ஆனால், அவன் வேண்டுதல்கள் பாதி தான் தெய்வத்தை எட்டியது, என்பது அவனுக்கு தெரியவில்லை….

Advertisement