Advertisement

அத்தியாயம் – 12
தமிழ் முறைத்துப் பார்த்திருந்ததை கண்டுக் கொள்ளாமல் செழியன் கைகளை பிடித்துக் கொண்டு அவன் கேள்விக்கான பதிலை எதிர்நோக்கிக் கொண்டிருந்தான். “முதல்ல கைய விடுங்க.”
தமிழ் சொல்வது காதிலேயே விழாதது போல பாவித்து, தன் கேள்வியை மீண்டும் முன் வைத்தான் அவளின் கணவன். “ஏன் என்கிட்ட பேச மாட்டுறன்னு கேட்டேன்…. முதல்ல அதுக்கு பதில் சொல்லு!!”
அவன் இக்கேள்வியை கேட்க வேண்டும் என்பது தான் தமிழின் எதிர்ப்பார்ப்பும். அவனாக பேசும் வரை தாமரையிலை தண்ணீராக மட்டுமே பேசுவது என ஒரு வாரமாக முகத்தை தூக்கி வைத்து சுற்றினாள். ஆனால், தற்போது அவன் கேட்கவும் சட்டென்று பேசவோ, ஏன் திட்டவோ கூட இயலவில்லை அவளுக்கு. செழியனிடம் எப்படி பேசுவது என சிந்தித்தவள், உடனே அவளின் கைகளை அவனிடம் இருந்து உருவிக் கொண்டவள், “ஸ்டவ்வுல சப்பாத்தி தீயுது….” என அவசரமாக உளறிச் சென்றாள்.
சமையல் அறைக்குள் ஓடிய மனைவியின் பின்னே தானும் சென்றவன், அவள் கூறியது உண்மையே என கண்டவன், பின் பேசாமல் அவளின் அருகில் சென்று நின்றுக் கொண்டு முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். சப்பாத்தியை திருப்பி போட்டுக் கொண்டிருந்தவள், அவனிடம் திரும்பி “இப்போ என்ன வேணும்? எதுவா இருந்தாலும் அப்புறமா பேசிக்கலாம். நீங்க வெளிய இருங்க.” என படபட பட்டாசாக பொறிந்தாள்.
தமிழின் இந்த பேச்சு செழியனை நன்றாகவே தாக்கியது. தன்னை விட சப்பாத்தி சுடுவது தான் முக்கியமோ? அடுப்பை பட்டென்று அணைத்து, “சப்பாத்தி அப்புறமா சுட்டுக்கலாம். முதல்ல நான் கேட்டதுக்கு பதில் சொல்லு….”
“எனக்கு உங்க மேல கோவம். அதான் பேசலை போதுமா?”
முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டவள் வார்த்தைகளை தூக்கிப் போட்டாள், மனதின் அழுத்தம் தாங்க முடியாமல். “நான் சாரி கேட்டுட்டேன், அப்போவே. இதுக்கு மேல என்ன செய்யனும்?”
“நீங்களா?? எப்போ என்கிட்ட சாரி கேட்டீங்க? எனக்கே தெரியாம??”
“ஹே மாமா என்கிட்ட எதுக்கு ஹாஸ்பெட்டல் வந்தீங்கன்னு சொன்னப்போ நான் எக்ஸ்பிளேன் பண்ணும் போதே கேட்டேன்ல?”
“அது எங்க அப்பா கிட்ட கேட்டீங்க! என்கிட்ட அதுக்கப்புறம் எப்போ கேட்டீங்க?”
சுற்றி வளைத்து தமிழ் எதற்கு கோபிக்கிறாள் என உணர்ந்தவன், பெருமூச்சு விட்டு மன்னிப்பும் கேட்டான். ஒரு வார தவிப்பும், மனைவியின் பாரா முகமும், மனதின் மூலையில் இருந்த குற்றயுணர்ச்சியும் அதை கேட்க வைத்தது.
“தாயே சாரி, சாரி, சாரி! இனிமேல் அப்படி ஆகாம பார்த்துக்கறேன் போதுமா?”
கை எடுத்து கும்பிட்டு கேட்கவில்லை என்றாலும், தன்னிடம் ஈகோ பார்க்காமல் செழியன் கேட்ட மன்னிப்பு தமிழுக்கு நெஞ்சில் தேனாக இனித்தது. அது கொடுத்த சுகத்தின் ஊடே, இளப்பமாக கேள்வி எழுப்பினாள் கணவனை பார்த்து.
“எதுக்கு மூணு தடவை சாரி?? இதுக்கப்புறம் ஏதாவது தப்பு பண்றதுக்கு அட்வான்ஸ் புக்கிங்கா??”
உதட்டை சுழித்துக் கொண்டு, முகத்தில் அசாதாரண கேலி பொங்க கையில் தோசை கரண்டியை ஆட்டிக் கொண்டே கேட்ட தமிழை அருகில், மிக அருகில் கண்டவனுக்கு எண்ணங்கள் எங்கெங்கோ சென்றன….
அவளையே குறுகுறுவென பார்த்தவன், பின் அவளிடம் இருந்த கரண்டியை வாங்கி மேடை மேல் வைத்துவிட்டு கூறினான். “ஹ்ம்ம்ம் ஆமா, இனிமே பண்ணப் போறதுக்கும் சேர்த்து தான்.” அவன் செய்வதையே ஆச்சரியமாக தமிழ் வியந்தபடி இருக்க, கண நேரத்தில் அவளை இடுப்பை கொண்டு வளைத்து, இதழ்களை தன்னுடையது கொண்டு சிறை செய்தான்.
ஒரு நொடி தமிழ் ஸ்தம்பித்து போனாள். அவளிடம் இருந்து எழுந்தும் எழாமலும் வந்த எதிர்ப்பை எளிதாக முறியடித்தவன், அவனாகவே அம்முத்ததையும் முடித்தான்.
அப்போதும் மனைவியை விட மனமில்லாமல் கைகளில் வளைத்துக் கொண்டு, அவளின் காதோடு ரகசியம் பேசினான். “ஆனா அந்த சாரி இப்போ நடந்ததுக்கில்ல….”
அவனின் குரலில் தான் தமிழ் முழுவதுமாக தெளிந்தாள் அவளின் மோன நிலையில் இருந்து. அவனின் முகத்தை தயக்கத்துடனும், கூச்சத்துடனும் ஏறிட்டவளை கண்டு குறும்பாக புன்னகைத்து, “ஏன்னா இது என்னோட பொண்டாட்டிக்கு நான் குடுத்த ஃபிரஸ்ட் கிஸ்…. சோ, இது எல்லாம் தப்பு கணக்குல வராது…” என்று கூறினான் செழியன்.
“ஐய்யோ விடுங்க…” என அவனிடம் இருந்து முழுவதுமாக விலகி, வெளியே சென்றவளை காப்பாற்றவென அவளின் அலைபேசி அழைத்தது. சசிகலா தான் அழைத்தார். அவரிடமும் புகுந்த வீட்டாரிடமும் மகிழ்ச்சியுடன் பேசியவளிடம் இருந்து கைப்பேசியை புடுங்கி தானும் பேசினான் செழியன்.
இவர்கள் இங்கே செய்யும் அலப்பரை அவர்கள் பேசிய அலைவரிசைகளுடன், காற்றோடு காற்றாக திருச்சி மாநகரத்தை சென்று அங்கேயும் ஜீவன்களை மகிழ்ச்சி கடலில் தள்ளியது.
ஒருவழியாக பேசி முடித்ததும், மீண்டும் அடுப்பை பற்ற வைத்து கர்மசரித்தையாக சப்பாத்தி சுட ஆரம்பித்தாள் தமிழ். “ஹே பேசிட்டு தான இருந்தோம்? இந்த சப்பாத்திய இப்போ சுடலைன்னு யாரு கேட்டா? நான் முக்கியமா சப்பாத்தி சுடுறது முக்கியமா?”
செழியன் இருந்த உற்சாக மனநிலையில் பொரிந்து தள்ள, தமிழின் வார்த்தைகள் அவளையும் அறியாமல் வந்து விழுந்தன அதற்கு அணையாக. “எனக்கு நீங்க தான் முக்கியம். ஆனா, உங்களுக்கு தான் என்னை விட உங்க தலைவன் முக்கியம்….”
தமிழே இப்படி பதில் கூறுவோம் என நினைக்கவில்லை. அவன் ஒப்பிட்டதும் தனக்குள் இருந்த ஆற்றாமையை சொற்களாக அவனிடம் சேர்த்துவிட்டாள் அவன் மனைவி. தமிழ் கேட்டதும் தான் அதில் இருந்த உண்மை செழியனின் மனதை சென்றடைந்தது.
அவள் தனக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றதும் தனக்கு வரும் அதே கோபம் தானோ அவளுக்கும்?! ஆனால், உடனே தலைகீழாக மாற அவனாலும் முடியும் என்று தோன்றவில்லை.
“நீ சொல்றது கரக்ட் தான். ஆனா, என்னால முழுசா மாற முடியுமான்னு தெரியலை… ஐ வில் ட்ரை மை லெவல் பெஸ்ட்! ஓகே வா?”
என்ன சொல்ல முடியும் தமிழால்? ‘சரி’யென மண்டையை உருட்டிவிட்டு இருவரும் சாப்பிட சாப்பாடு மேசைக்கு உணவுகளை எடுத்துச் செல்ல துவங்கினாள். மறுநாளில் இருந்து செழியனின் குறும்புகளுக்கும், தமிழின் தவிப்புகளுக்கும் குறைவே இல்லாமல் போனது.
அவனின் சிறு சிறு சில்மிஷங்களை ரசிப்பவள், சில நிமிடங்களிலேயே எல்லாம் முழுதாக சரியானால் எவ்வளவு நன்றாக இருக்கும் என சிந்தனை கொள்வாள். ஏதோ ஒருவித நெருடல் மனதில் குடிக்கொண்டது என்னவோ உண்மை…. செழியனுக்கும் தமிழ் இன்றி தன்னால் முடியாது என்ற நிலைக்கு தான் நெருங்கிக் கொண்டிருப்பதாக ஓர் எண்ணம்.
அது அவனுக்கு பிடிக்கவே செய்தாலும், அதை மனைவியிடம் கொண்டு எப்படி சரியான விதத்தில் சேர்ப்பது என்று குழம்பிப் போனான். அதில் முதல்படியாக தன் அன்பை அவளிடம் வெளிப்படையாக காட்டத் துவங்கினான். அவர்கள் சமாதானமான மூன்றாம் நாள் காலை உணவை சாப்பிட்டதும், “இனிமே நானே உன்னை காலையில டிராப் பண்றேன்.” என செழியன் மொட்டையாக கூறவும், தமிழுக்கு ஒன்றும் விளங்கவில்லை….
“ஏன் இப்போ என்ன திடீர்ன்னு?”
“ஒண்ணுமில்ல சும்மா தான்.”
“இத்தனை நாளா இல்லாம இப்போ என்ன புதுசா டிராப் எல்லாம் பண்றீங்க?”
“பொண்டாட்டிய டிராப் பண்ணனும்னு நினைச்சது ஒரு குத்தமா? களிகாலம்!”
“இப்போ தான் பொண்டாட்டின்னு தெரியுதா??” கொஞ்சம் காரமாகவே வந்து வார்த்தைகளை புன்னகையுடனே பதில் கூறினான் செழியன்.
“என்ன பண்றது? நான் முக்கியமா இல்லையான்னு கேட்டு இப்போ தான் என் பொண்டாட்டி என்னை புருஷனா ஃபீல் பண்ண வைச்சா…. அவ மேல தான் மிஸ்டேக்.”
சொன்னதுடன் கை கழுவ எழுந்துச் சென்றவனை, ‘கொழுப்பு உடம்பு புல்லா கொழுப்பு’ என மனதுக்குள் கறுவியபடி திட்டினாள் தமிழழகி. அத்தோடு விட்டு விட்டால் அவள் தமிழழகி இல்லையே! அவளும் கை கழுவ சென்று, “பரவாயில்லை, சம்பளமே இல்லாம மெயினா டூ வீலரே இல்லாம எனக்கு டூ வீலருக்கு டிரைவர் கிடைச்சாச்சு!! ரொம்ப லக்கி நானு…” என்று கலாய்த்து தான் விட்டாள்.
அன்று முதல் அவர்களின் பைக் பயணம் தொடர்ந்தது காலையில். ஒரு சில நாள் மாலையிலும்…!
வீட்டில் இருக்கும் நேரம் தமிழுடனே செலவழித்தாலும், அவர்களின் உறவை பூரனமாக செப்பனிட்டு அழகு பார்க்க, அவனுக்குள் என்னவோ தடுத்தது. தமிழிடம் சிறிது நேரம் மனம் விட்டு பேசினால், அனைத்தும் சரியாகிவிடும் என ஒரு சமயம் எண்ணம் தோன்றும்.
பின், அப்படி பேசி இருக்கும் நிலை போய் மீண்டும் சண்டை முற்றினால் என்ன செய்வது என யோசித்து அமைதி காத்தான் தமிழின் கணவன்.
தமிழுக்கும் அவன் சிறிது மாறியது போல் இருந்தாலும், வாழ்க்கையின் முக்கிய அத்தியாத்தை அவனே பிள்ளையார் சுழி போட வேண்டும் என எண்ணினாள். எப்போதும் இப்படி அவனை நம்பி தான் ஏக்கம் கொள்வது அவளுக்கே சில நேரம் கடுப்பாக தான் இருந்தது. இருந்தும் அவளால் தன்னை இந்த விஷயத்தில் மட்டும் மாற்றிக் கொள்ள முடியவில்லை!
இருவரும் ஒருவரை ஒருவர் எண்ணமிட்டபடியே தான் உறக்கத்தை தழுவுவர் இரவுப் பொழுதுகளில். நாட்கள் இப்படியே செல்லவும் இல்லை…. ஒரு நாள் பூகம்பத்தில் அவர்களின் உறவு நடுங்கி, எரிமலையாக வெடித்தது!!! சேதாரம் இருவருக்கும் தான்.
அன்று தமிழின் மடிகணிணி எவ்வளவு முயன்றும் ஒளி வீசவே இல்லை… ‘என்னடா இது’ என நொந்தபடி செழியனை கூப்பிட்டாள் தமிழ். அவனும் பார்த்தான், ஆனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
“சரி நாளைக்கு சர்விஸ் சென்டர்ல குடுக்கலாம். இப்போ என்னோட லேப்டாப் வேணும்னா யூஸ் பண்ணிக்கோ.”
செழியன் கூறியதை அடுத்து அவனின் மடிகணிணியை இயக்கி தன் வேலைகளை தொடர்ந்தாள் தமிழ். இவளிடம் கூறிவிட்டு, மீண்டும் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக சென்ற கிரிக்கேட் மேட்சை தொடர்ந்தான் செழியன். தன் வலை தேடும் பணி முடிவடைந்ததும், தமிழழகி அப்படியே செல்லாமல் முகப்புத்தகத்தை திறந்தாள்.
அது இவளிடம் மின்னஞ்சல் முகவரி, திறவுக்கோல் எதுவும் கேட்காமல் தானாகவே உள்ளே நுழைந்தது. எந்த பெயரில் என்பதை தான் குறிப்பிட வேண்டும். ‘ரக்ஷன் வெறியன்’ என இருந்தது அப்பெயர்! ஒரு நிமிடம் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானாள் தமிழ்.
செழியனின் முகநூல் பெயர் – ‘தமிழ் செழியன்’ தானே? இது என்ன புது கதையாக இருக்கிறது என ஒரு நிமிடம் குழம்பிப் போனாள். பின், இது தன் கணவனின் முகம் அறியா முகநூல் கணக்கு என்பதை உணர்ந்துக் கொண்டு அதில் மேலும் கவனம் செலுத்தினாள். ‘நோட்டிஃபிகேஷன்ஸ்’ ஏழு வதிருக்க, அதை ஒரு ஊந்துதலில் திறந்து பார்த்தவள், பின் ஏன் தான் பார்த்தோமோ என வருந்திக் கொண்டாள்.
அந்த நோட்டிஃபிகேஷனில் ஒன்று செழியன் கருத்து தெரிவித்ததில் இன்னொருவரும் கருத்தை பதிவேற்றியதிற்காக வந்தது. அந்த பதிவு ஒரு மிகப் பிரபலமான முகநூல் பக்கத்தில் ரக்ஷனை பற்றி புகழ்ந்து போட்டிருந்த ஒன்று. அதில் எங்கிருந்து தான் இந்த அபினவ்வின் வெறியன்களும், தீவிர விசிரிகளும் வந்தார்களோ? அவர்கள் வந்து திட்ட செழியன் போன்றோர் அமைதியாகவா இருப்பார்கள்? வாக்கு போர் முற்றியது, கருத்துக்களில்!!!
விஷக்கிருமகளாக இருப்பரோ! இல்லையென்றால், இப்படி கெட்ட கெட்ட வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டும், தூற்றிக் கொண்டு பேசயிலலுமா?
அதில் ஒரே நல்ல விஷயம் என்னவென்றால், செழியன் எந்த கேடுகெட்ட வார்த்தைகளையும் பதிவிடவில்லை…. ஆனால், அதற்காக சண்டையை விட்டான் என்றால் அதுவும் இல்லை! கருத்து மோதல் போட்டிருக்கிறான் சில மணி நேரங்கள் முன்பு வரை.
இவனுடன் திட்டிப் பேசியவன் இட்ட கருத்துக்களை மனதிற்குள் படிக்கவே குமட்டிக் கொண்டு வந்தது தமிழுக்கு. இதை எல்லாம் எப்படி இவர்கள் அனைவரும் படிக்கின்ற இடத்திலே பதிகின்றனர்??
இதில் வேடிக்கை என்னவென்றால், இதில் துளியும் சம்மந்தமே இல்லாத செழியனின் தாயாரையும், அவன் அருமை மனைவியையும் இழுத்து பேசியிருந்தனர் கேடுகெட்டதனமாக!!! அதை எல்லாம் படித்ததும் குருதி கொதிக்க, மடிகணிணியை தூக்கிக் கொண்டு நேராக ஹாலில் அமர்ந்திருந்த செழியனின் முன்பு நீட்டினாள் தமிழ்.
“என்னது இது எல்லாம்??”
அவளின் அகங்காரமான கேள்வியில் தூக்கிவாரி போட்டு, மடிகணிணியில் பார்வையை ஓட்டியவனின் முகம் இருண்டு போய், பொலிவிழந்தது சில நொடிகளிலேயே!! என்ன செய்து, அல்லது சொல்லி எதிரில் காளியாக உறுத்து விழித்தவளை சமாளிக்கலாம் என சிந்தித்தவனின் எண்ணங்கள் யாவும் அவனுக்கு கை கொடுக்கவில்லை.
பின் நடந்த நிகழ்வுகளுக்கு இருவருமே சம பொறுப்பு வகித்தனர்!!!

Advertisement