Advertisement

முறைத்துக் கொண்டே தான் அவனுக்கு இரவு உணவை பரிமாறினாள் தமிழ். அவன் அதை கண்டும் காணாமலும் மாமனாரிடம் பேசினான். இரவு உணவு முடிந்து தாங்கள் வாங்கி வந்த ஆடைகளை பரிசளிக்கவும் மற்ற மூவருக்கும் பூரித்து போயினர்.
“நாளைக்கு எப்போ சாமி கும்பிடுவோம்?” என்று செழியன் வினவ, அதற்கு பதிலாக “நாங்க காலையிலேயே ஒன்பது மணி போல கும்பிடுவோம். இவங்க காலையிலேயே எழுந்து பலகாரம் எல்லாம் செய்ய ஆரம்பிச்சுவாங்க.” என்று தன் மனைவியும் தாயையும் காண்பித்து கூறினார் கேசவன்.
அவன் எதற்கு இதை எல்லாம் கேட்கிறான் என ஓரளவிற்கு புரிந்தது தமிழுக்கு. இரவு தூங்கவென அறைக்கு வந்ததும், நேரடியாக கேள்வியை அவன் முன் வைத்தாள்.
“நாளைக்கு எந்த ஷோவுக்கு கிளம்பறீங்க?”
“நாலு மணி பிரஸ்ட் டே பிரஸ்ட் ஷோ!!”
பெருமை மிக மிஞ்சிய குரலில் செழியன் தன் தலைவனுக்கான அன்பை பரைசாற்ற, தமிழுக்கு கோபம் ரயில் வண்டியின் பெட்டிகளை அடுக்கடுக்காக தொடர்ந்தது. “தலை தீபாவளி நமக்கு. கொஞ்சமாவது ஞாபகம் இருக்கா?”
“ஹே நாலு மணி ஷோ, ஆறரை ஏமு மணிக்கே முடிஞ்சுரும் உடனே வீட்டுக்கு வந்திருவேன். கண்டிப்பா சீக்கிரமா வந்திருவேன். நோ வொரிஸ்….”
“என்ன நோ வொரிஸ்? அம்மா, அப்பா காலையில எழுந்து நீங்க எங்கனு கேட்டா என்ன பதில் சொல்றது??”
“படத்துக்கு போயிருக்காரு, ஏழு மணிக்கு வந்திருவாருன்னு சொல்லு.”
“நாளைக்கு மேட்னி ஷோவோ, இல்லைனா ஈவ்னிங் ஷோ போங்களேன்… காலையில தான் போகனுமா?”
“ஆமா, எனக்கு ஃபிரஸ்ட் ஷோ பார்க்கனும்!”
அழுத்தம் திருத்தமாக வந்த குரலில் தன் அன்பு பின் தள்ளி, ரக்ஷனின் வெறி மேலோங்கி இருப்பதாக தோன்றியது தமிழுக்கு.
“அப்போ நான் சொல்றது உங்களுக்கு முக்கியமில்ல அப்படி தான? தலை தீபாவளியை விட உங்க தலைவன் படம் தான் முக்கியமா போச்சு அப்படி தான?”
“இந்த விஷயத்துல மட்டும் நீ தலையிடாத தமிழ். எனக்கு படத்துக்கு போகனும் நான் போறேன்! இதுக்கு மேல ஆர்க்யூ பண்ணாத.”
தமிழழகி பதில் அளிக்க எடுத்துக் கொண்ட நேரத்தில் என்னென்வோ பிதற்றி, சீக்கிரமாக படுத்தும் கொண்டான். அவன் தான் மூன்று மணிக்கே துயில் கலைய வேண்டுமே?
படுக்கையின் மறுப்பக்கம் படுத்துக் கொண்டிருந்தவனை என்ன சொல்லி, செய்து திருத்தலாம் என யோசித்தபடியே உறங்கிப் போனாள் தமிழ். நடுயிரவில் மூன்றரை இருக்கும், அறையில் வெளிச்சம் பரவ எதையோ உருட்டிக் கொண்டிருந்தான் செழியன்.
அவனை பார்த்ததும் கோபம் மீண்டும் சூறாவளியாய் எழும்ப, திரும்பி படுத்துக் கொண்டு கண் மூடி இருந்தாள் தமிழ். “ஹே கதவை சாத்திக்கோ வா… நான் கிளம்பனும்.” செழியன் கூப்பிட்டும் பதில் இல்லை….
அவளின் அருகில் சென்று பார்த்தால், கண் மூடி உறங்குவது போல் நடிப்பில் ஆழ்ந்திருந்தாள் மனைவி. அப்போதும் அவளின் மனக் கவலை செழியனுக்கு புரியவில்லை.
அவள் விளையாடுகிறாள் என எண்ணி தனக்குள் சிரித்து அவளை உலுக்கி எழுப்பினான்.
“ஹே தமிழ் வா, எனக்கு லேட் ஆகுது…” வேறு வழியில்லாமல், தன் மனக்கவலை தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டு, ஹாலுக்கு சென்று கதவை திறந்தாள். “வரேன்” என ஒற்றை சொல்லுடன், கேசவன் சீராக உடையை அணிந்துக் கொண்டு சென்றவனை தன்னவன் என்று முழு மனதாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை தமிழழகியால்.
‘இவன் எனக்கு மட்டும் சொந்தமில்ல… என்னிக்கு இந்த ரக்ஷனக்கு முன்னாடி என்னை வைக்குறானோ அன்னிக்கு தான் இவன் முழுசா எனக்கு சொந்தம்….’ தன் மனதுக்கு பெரு மூச்சு விட்டு, திரும்பினால் கேசவன் குழப்பமான முகத்துடன் தன்னை பார்த்திருப்பதை அவள் கண்டாள்.
“அவரு ரக்ஷன் படம் ரிலீஸ் ஆகுதுல? ஃபிரஸ்ட் டே ஃபிரஸ்ட் ஷோ கேங் கூட போயிருக்காரு. நாலு மணிக்கு ஷோ போல…” தன் வருத்தம் தந்தையிடம் தாவக் கூடாது என்பதில் கவனமாக முகத்தையும் குரலையும் சாதாரணமாக வைத்துக் கொண்டு கூறினாள் தமிழ்.
“தீபாவளிக்கு சாமி கும்பிடுறதுக்குள்ள வந்திருவாருலடா?”
அவரின் கவலையும் வருத்தமும் குரலை சிறிது உள்ளடக்கி இருந்தது. அதை கண்டு மேலும் கஷ்டப்பட்டு, உடனே சமாளித்தாள் தமிழ். “கண்டிப்பா வந்திருவாருபா. ஏழு மணிக்கே வந்திடுறேன்னு சொன்னாரு.”
தலையாட்டி சென்றார் கேசவன். மனதுக்குள் மிகவும் சோர்வாக உணர்ந்தாள் தமிழழகி. தலை தீபாவளிக்கான குதூகலமும், உற்சாகமும் துளியும் இல்லை! திடீரென அவன் நல்லெண்ணெய். சீயர்க்காய் தேய்த்து தலைக்கு குளித்தானா என்ற கேள்வி தோன்ற, அவளின் அறையின் உள்ளிருந்த குளியல் அறைக்கு சென்று பார்த்தாள் தமிழ்.
நல்லெண்ணெய் பாக்கெட் அப்படி இருந்தது, பிரிக்காமல். சீயர்க்காய் மட்டும் போட்டு குளித்திருந்ததின் அடையாளம் கீழே கண்டு, பாதி மனது திருப்தி அடைந்தாள் தமிழ்.
மீண்டும் படுக்கையில் விழுந்தவளுக்கு தூக்கம் எட்ட நின்று கைக்கொட்டி சிரித்தது. நாலரை வரை பொறுத்தவள், பின் மீண்டும் எழுந்து தலைக்கு குளித்து புது பட்டு புடவை அணிந்து கொண்டாள்.
புடவையை பார்த்ததும் அதை எடுக்க தான் செய்த அலப்பரைகள் ஞாபகம் வர, ஜோடியாக தன்னால் செழியனுடன் நிற்கக் கூட முடியவில்லையே என்ற எண்ணம் கண்களில் நீரை கசிய விட்டது!
சில நொடிகளிலேயே முயற்சி செய்து அதை கட்டுப்படுத்தி வெளியே சென்று அன்னைக்கும் பாட்டிக்கும் சமையலில் உதவ முயன்றாள். அவளை பார்த்ததும், “ஹே சூப்பரா இருக்குடா புடவை. நான் ஒருத்தன் விஷ் பண்ண கூட இல்லை பாரேன். இனிய தலை தீபாவளி வாழ்த்துக்கள்டா அழகி!” என கேசவன் கூப்பிட, ஒரு கணம் திகைத்து அவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் கூறி அன்னையிடம் சென்றாள் உடனே.
என்ன தான் எல்லோரிடமும் தன் மனதை மறைத்தாலும், மனசாட்சி உள்ளுக்குள்ளே உண்மையை உதைக்க தான் செய்தது! கணவனுக்கு ஒரு வாழ்த்து கூட கூறாமல் என்னவென்று கொண்டாடுவது? விதியை நொந்து தன் வேலைகளை செவ்வனே செய்திருந்தாள்.
வள்ளியும் கேசவனும் மனதளவில் செழியனை பற்றி கஷ்டப்பட்டாலும் ஒரு வார்த்தை கூட மகளிடம் அதை பகிரவில்லை. அதே போல் தான் தமிழழகியும்! ‘நீங்க பார்த்து கட்டி வைச்ச பையன் தான? எப்படி பண்றான் பாருங்க.’ என சொல்ல ஒரு நிமிடம் ஆகாது.
ஆனால், அவள் அபப்டி யோசிக்க கூடயில்லை…. இப்படி நேரம் பறந்து செல்ல, எட்டு மணியாக பத்து நிமிடங்கள் இருந்த போது வந்து சேர்ந்தான் செழியன். வந்தவுடன் வீட்டில் எல்லோரும் வாழ்த்துக்களை பகிர்ந்து அவனை உபசரிக்க தமிழ் அவன் அருகில் கூட செல்லவில்லை…. ‘இதான் இவன் படம் முடிஞ்சு டக்குன்னு வரர்தா? இவன் டக்குல தீய வைக்க!’ மனதுக்குள் புலம்பியவாரு சமையல் அறையிலேயே சுழன்றாள்.
செழியனுக்கோ நேரம் இனிமையாக பறந்தது. ரக்ஷனின் படத்தை ரசிகர்கள், விமர்சகர்கள், பொது ஜனம் என எல்லோருமாக புகழ, அவனுக்கு கேட்கவா வேண்டும். கால் தரையில் படாத குறை தான். அதனுடனே மனைவியை புது புடவையில் பார்க்க ஆவலாக சமையல் அறை போவதும், வெளியில் இருந்து எட்டி பார்ப்பது என இருந்தான்.
தமிழழகி கண்டுக் கொள்ளவே இல்லை…. அப்படி இப்படியென மணி துளிகள் கழிய, ஒன்பது மணியளவில் படையல் இட்டு சாமி கும்பிட்டனர். சாமி அறையில் தான் தமிழை முழுதாக பார்த்தான் செழியன். பின், இறையவன் வசிக்கும் இடத்தில் தான் செய்வது தவறு என உணர்ந்து தலையை உலுக்கிக் கொண்டான்.
சாமி கும்பிட்டதும், விபூதி ஆர்த்தி எடுத்து அனைவரும் சாப்பிட அமர்ந்தனர். செழியன் சமையலை பாராட்டிக் கொண்டே சாப்பிட, தமிழ் அப்போதும் அவனின் புறம் பார்வையை திருப்பவில்லை. இதை எல்லாம் பெரியவர்கள் அறியாமல் செய்ய தான் இருவரும் பிரயத்தனப்பட்டனர்!
என்ன செய்தும் தமிழழகி பேசவில்லை என்ற நிலையில் செழியனுக்கு கோபம் பொங்கி எழ, பத்தரை மணியளவில் கேசவனிடமும் வள்ளிடமும் தனக்கு வீட்டில் போர் அடிப்பதால், தியட்டரில் இருக்கும் தன் நண்பர்களை பார்க்க போவதாக சொல்லிக் கொண்டு கிளம்பினான்.
மருமகனிடம் விவாதம் செய்ய இயலாமல், பேசாமல் அதை அனுமதித்தனர் தமிழின் பெற்றோர். அவன் வண்டி கிளம்பும் சத்தம் கேட்டு, உள்ளறையில் இருந்து ஓடி வந்து வெளியே விசாரித்த தமிழுக்கு கோபத்தில் உள்ளம் உளைக்கலமாக கொதித்தது.
இம்முறை பெற்றவர்களை சமாதானம் செய்யக் கூட தமிழுக்கு தோன்றவில்லை. அப்படியே அமர்ந்துவிட்டாள் கட்டிலில்…. எல்லாம் ஒரு மணி நேரம் தான். பின் வீட்டின் வெளி கேட்டை திறந்துக் கொண்டு பக்கத்து வீட்டு நண்பர் தீபாவளி பலகாரம் கொண்டு வந்ததும் அனைவரும் முகத்தை மாற்றிக் கொண்டனர்.
அவரிடம் சிரித்து பேசிய தமிழை பார்த்தவுடன் ஞாபகம் வந்தவராக, “எங்கமா உன்னோட ஹஸ்பன்ட்?” என்று கேட்டார். கேட்டவர் எதார்த்தமாக வினவ, தமிழுக்கு தான் நாக்கு ‘நான் இந்த விளையாட்டு வரவில்லை’ என உள் நோக்கி சென்றது!
கடினபப்ட்டு அவன் தியேட்டருக்கு சென்று இருப்பதாக கூற, மறுகணம் ஒரு குண்டை அங்கே தூக்கிப் போட்டார். “அந்த தியேட்டர கிராஸ் பண்ணி தான்மா கொஞ்ச நேரம் முன்ன வந்தேன். எதோ ஒரு பையன் பால் அபிஷேகம் பண்ணும் போது கால் சிலிப்பாகி விழுந்துட்டானாம். அங்க ஒரே களபரமா இருக்கு…”
சொல்லிவிட்டு அவர் விடைப்பெற்று கிளம்ப, தமிழழகியின் கைகள் அவள் அறியாமல் செழியனின் எண்ணை அழைத்தன! நெஞ்சம் படபடவென்று அடித்துக் கொண்டது. கேசவனும், “மாப்பிள்ளைக்கு தான ஃபோன போடுற” என கேட்டு தானும் பயப்படுவதை தெரியப்படுத்தினார்.
“ஆமாம்பா…” எத்தனை முறை அழைத்தும் செழியனின் ஃபோன் எடுக்கப்படவேயில்லை!! தமிழழகியின் இதய துடிப்பு நூறுக்கும் மேல் ஏற, “அப்பா தியேட்டருக்கு போய் பார்த்துட்டு வந்திடலாம்பா…” என தந்தையிடம் முறையிட்டாள்.
எதிர்த்து பேசாமல், வண்டியை விரட்டி உடனே கிளம்பியவர்களை கண்டு வள்ளியும் பார்வதியும் அச்சத்துடன் பார்த்தனர். வழியெங்கும் தன்னவனுக்கு ஒன்றும் ஆகக் கூடாது என வேண்டுதல்களை அள்ளித் தெறித்தபடி பயணப்பட்டாள் தமிழ்!!

Advertisement