Advertisement

அத்தியாயம் – 10
தலைதீபாவளிக்கு ஒரு நாள் முன்னதாகவே பேருந்தில் கிளம்பினர் செழியனும் தமிழும். பேருந்தில் ஏறி அமர்ந்தவுடன் தன் அலைபேசியை உயிர்பித்து தாங்கள் பேருந்தில் ஏறிவிட்டதாக தன் தாயிடம் தகவல் பகிர்ந்தான் செழியன்.
பேசி முடித்ததும் மனைவிடம் திரும்பி ஒரு தீவிரமான குரலில் பின்வருபவற்றை கூற ஆரம்பித்தான். “நீ டிக்கேட் வாங்க போனது, நான் திட்டுனது எல்லாம் யார்கிட்டயும் சொல்ல வேணாம். நம்ம ரெண்டு பேர் விஷயம் நம்மக்குள்ளயே இருக்கனும். அப்பா, அம்மாவா இருந்தாலும் அவங்ககிட்ட சொல்றது எனக்கு பிடிக்காது. ஓகே வா?”
“ஹ்ம்ம்ம் பார்க்கலாம்….”
“என்னது பார்க்கலாமா? உனக்கும் சேர்த்து தான் திட்டு விழும், புரியுதுல?”
“பரவாயில்ல, நான் திட்டு வாங்கிக்கறேன்….”
குறும்பான பார்வையுடன் ஆவலாக அவனை வம்பிழுத்தவளை, ஒன்றும் கூறயியலாமல் பார்த்தான் செழியன். “சரி சொல்லிக்கோ!” அவனும் அவளுக்கு ஒற்றவாரு பேச, “மகிழ்ச்சி…. தூங்கலாமா?” என்று கேட்டு தன் இருக்கையில் நன்றாக சாய்ந்து துயில் கொள்ள துவங்கினாள் தமிழழகி….
அவளை சில நொடிகள் ஆழ்ந்து நோக்கிவிட்டு பின் தன் இருப்பிடமான முகநூலில் வாழ ஆரம்பித்தான் செழியன். விடியற்காலையில், திருச்சியில் இறங்கி ஆட்டோ பிடித்து செழியனின் வீட்டிற்கு சென்றனர் இருவரும்.
பேருந்திலும் சரி, ஆட்டோவிலும் சரி தமிழுக்கு செமையான தூக்கம் தான்! செழியனின் தோளில் வழிந்தோடிய உறக்கம் சிறிது நேரத்தில் அவன் கைகளை இருக்கிப் பிடித்துக் கொண்டு தொடரவும் செய்தது. செழியன் இதை அரை தூக்கத்தில் கவனித்தான்.
பின் இறங்கும் நேரம் நெருங்கியவுடன் தமிழை எழுப்பி, ஆட்டோவில் ஏறும் வரை அவளின் கைகளை விடவில்லை. விட்டால் நான் விழுவேன் போல் நடந்தவளை எங்கணம் விட முடியும்?
ஆட்டோவில் இருந்து இறங்கி வீட்டின் அழைப்பு மணியை அழுத்தும் போதும், தமிழ் பாதி தூக்கத்தில் இருந்தாள். கதவை திறந்த நதியா, “ஹே வாங்க… தமிழ் நல்லா இருக்கியா?” என வரவேற்க, ஒரு மாதிரி தலையாட்டி, “நல்லா இருக்கேன் அக்கா. எனக்கு ரொம்ப தூக்கமா வருது. நான் நாளைக்கு பேசறேன்…” என கூறி செழியனின் அறை நோக்கி செல்ல, நதியா சிரிப்புடன் எதிரில் இருந்தவனை நேரிட்டாள்.
“கொஞ்ச நேரம் போனா விடிஞ்சுரும், நாளைக்கு பேசறேன்னு சொல்லிட்டு போறா?”
“ஆமா, சரியான கும்பகர்ணிய கல்யாணம் பண்னி வைச்சுட்டீங்க. தூக்கத்துல நடக்கற வியாதி மாதிரி நடந்தா தெரியுமா? இதுல அவளுக்கு டைம் எல்லாம் எங்க தெரிய போகுது!”
தன் பங்கிற்கு அவனும் சலித்துக் கொண்டு, அறையில் தஞ்சம் புகுந்தான். கட்டிலில் நேராக சென்று விழுந்தவள் போல் இருந்தாள் தமிழழகி. நிறைய நாட்கள் கழித்து மனைவியின் அருகில் படுத்தவனும் நிம்மதியாக உறங்கினான், களைப்பில். விடிந்த சிறிது நேரம் கழித்து எழுந்தவள் சீக்கிரமாக உடை மாற்றி வெளியே வந்தால், அவளை ஆர்ப்பாட்டமாக கிண்டலடித்தாள் நதியா.
சுவாமிநாதனும் சசிகலாவும் சிரித்த முகமாக இருக்க, சில நேரம் கிண்டலை சமாளித்தும் பல நேரம் குழந்தை தனிஷ்காவிடம் மனதை பறிகொடுத்தும் இருந்தாள் தமிழ். அவளுக்கு எப்போதடா உடைகளை எல்லாம் இவர்களுக்கு பரிசளிப்போம் என தவிப்பு மிஞ்சியது இதயத்தில்.
எட்டு மணியளவில் குளித்து அறையில் ரெடியாக கொண்டிருந்த கணவனின் முன் சென்று நின்றவள் அவனையும் கூப்பிட்டாள் உடைகளை கொடுப்பதற்கு. “நான் எதுக்கு நீயே குடு… எனக்கு டைம் ஆச்சு ராகுல் வீட்டுக்கு போகனும்.”
உடனடியாக வந்த பதிலில் திகைத்து பின் எதிர் கேள்வி எழுப்பினாள் தமிழ். “அங்க அப்பா வீட்டுக்கு போகனும்ல, ஈவ்னிங்? இப்போ வெளிய போறேன்னு சொல்றீங்க?”
“ஈவ்னிங் தான போறோம்? நான் மதியமே வந்துருவேன் வீட்டுக்கு. போதுமா? பை.”
வேலை முடிந்தது என்பது போல அறையில் இருந்து வெளியேறியவனை கூம்பிய மனதுடன் பார்த்தாள் அவன் மனைவி. எல்லோரும் ஒன்றாக இருக்கலாம் என நினைத்தால், இவன் வந்தவுடனே ஓடிவிட்டான். சரி நமக்கு கிடைத்தது அவ்வளவு தான் என எண்ணமிட்டபடி, உடைகள் அடங்கிய பையை வெளியே எடுத்துச் சென்று ஹாலில் வைத்தாள்.
அனைவரையும் கூப்பிட்டு அவரவருக்கு எடுத்த உடைகளை காட்டவும், எல்லோரின் முகமும் பூரித்தது. “உங்களுக்கு தான் தலை தீபாவளி. எங்களுக்கு எதுக்குமா எடுத்த?”
சசிகலா கேட்டதற்கு, “கல்யாணம் முடிஞ்சு எங்களோட ஃபர்ஸ்ட் கிப்ட் உங்க எல்லாருக்கும்” என விடை கூறி, தனிஷ்காவுக்கு உடை சரியாக இருக்கிறதா என நதியாவுடன் சேர்ந்து ஆலோசனை செய்ய துவங்கினாள் தமிழழகி.
ஆனால், அவள் கூறியது அங்கேயிருந்தவர்களின் மனதை எவ்வளவு ஆனந்தமடைய வைத்தது என தமிழ் அறிய வாய்ப்பில்லை. இருவரும் ஒன்றாக சேர்ந்து விட்டது போல் மற்றவர்களுக்கு தோற்றமளிக்க, இளையுதிர் காலத்தில் உதிரும் இலை போல் தங்களின் மனக்கவலையும் உதிர்வது போல் உணர்ந்தனர் செழியனின் குடும்பத்தினர்!
அதே மகிழ்ச்சியுடன் தாங்கள் செழியனுக்கும் தமிழுக்கும் எடுத்து வைத்த புத்தாடைகளை காட்டினார் சசிகலா. இதில் மாறனும் நதியாவும் தங்கள் பங்கென சிலவற்றை வேறு எடுத்து வைத்திருந்தனர்! எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, “எல்லாமே சூப்பரா இருக்கு. அவரு வந்ததும் ஆசிர்வாதம் பண்ணி குடுங்க…” என சொன்ன தமிழை, வாயில் அடைத்த கையுடன் ஆச்சரியமாக பார்த்தாள் நதியா.
“ஹோ சார் இல்லாம மேடம் வாங்கிக்க மாட்டீங்களோ?”
“அக்கா உங்களுக்கு பெரிய கும்புடு. என்னை விட்டுடுங்க….” தமிழழகி இப்படியெல்லாம் அழகாக நேரம் செலவழித்தாலும், கூட அதை கொண்டாட தன்னவன் இல்லையே என்ற மிகப்பெரிய வருத்தம் இருந்தது.
அதை போக்கவோ இல்லை மேலும் கூட்டவோ செழியன் மதியம் இரண்டு மணிக்கு வீட்டிற்கு வந்தான். சசிகலா தான் அவனை பற்றி விசாரித்தார். செழியன் ராகுலை பார்க்க சென்றுருப்பதாக அவள் கூற, எதையோ முனங்கிக் கொண்டே சென்றுவிட்டார்.
நேரம் செல்ல செல்ல தமிழின் காத்திருப்பு கூட, அவளின் எரிச்சலும் கூடியது. இவள் அலைபேசியில் அழைத்தால், இரண்டு முறை கட் செய்து மூன்றாம் முறை எடுத்து சிறிது நேரத்தில் வீட்டில் இருப்பதாக வாக்களித்தான். ஆனால், அந்த சிறிது நேரம் ஒன்றரை மணி நேரமாக நீண்டது தமிழுக்கு கோபத்தீயை மூட்டியது.
 வந்ததும் அவனுக்கு சாப்பிட கொடுத்து, அறைக்கு வந்தவுடன் பேசாமல் அவனை முறைத்த மனைவியை தானும் முடிந்த மட்டும் முறைத்தான் செழியன். “எதுக்கு வெளிய இருக்கும் போது கால் பண்ணிட்டே இருந்த? நான் எங்க போய்ட போறேன். எனக்கு வர வழி தெரியாதா என்ன?”
“வந்ததே லேட்டு. இதுல நான் கேட்க வேண்டியத நீங்க கேக்கறீங்களா??”
“என்ன லேட்டு? பிரண்ட்ஸ பார்க்க, இன்னிக்கு ஒரு நாள் கூட போக கூடாதா?”
“உங்கள போகாதீங்கன்னு சொன்னனா? ஏன் லேட்டா ரெண்டு மணிக்கு வரீங்கன்னு தான் கேட்டேன்.”
“லேட் ஆகிடுச்சு அவ்வளவு தான்…”
இதற்கு மேல் பேச ஒன்றுமில்லை என்பது போல செழியன் மீண்டும் அவனின் அலைப்பேசியில் மூழ்க, தமிழுக்கு வந்த கோபத்தை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாக இருந்தது.
இருந்தாலும் வேறு வழியிருக்கவில்லை…. இங்கே எல்லோரின் முன் சண்டையிட்டு முகத்தை தூக்கி வைத்து நடமாட அவளுக்கு மனம் ஒப்பவில்லை. சரியென, சென்னைக்கு திரும்பியதும் எல்லாவற்றிற்கும் சேர்த்து வைத்து பேசிவிடுவது என முடிவெடுத்து தன் தாய் வீட்டிற்கு செல்ல கிளம்பினாள்.
மாலை தமிழின் பெற்றோர்கள் முறையாக தீபாவளி சீர் வரிசை செய்து தமிழையும் செழியனையும் அழைத்துச் சென்றனர். கிளம்பும் நேரம் இருவரும் ஜோடியாக சுவாமிநாதன் சசிகலா தம்பதியரிடம் ஆசீர்வாதம் பெற்று அவர்கள் வாங்கி வைத்திருந்த புத்தாடைகளையும் வாங்கிக் கொண்டனர்.
தமிழழகியும் ஒழுங்காக பேசுவதை கண்ட செழியன் அவனும் இயல்பானான். மாலை நான்கு மணியளவில் கிளம்பி கேசவனின் வீட்டிற்கு சென்றனர். அங்கே சென்றதும் ஒரே தடாபுடல் தான்… கேட்டால் தலை தீபாவளியாம். செழியன் சில நிமிடங்கள் தன் மாமனார், மாமியாரிடம் பேசி சிரித்துக் கொண்டிருந்த வேளையில் தான் மீண்டும் அவனுக்கு தொலைப்பேசியில் அழைப்பு வந்தது.
எடுத்து பேசியவன் மெதுவாக தனியாக கழன்றான். அவன் ரொம்ப நேரம் யாரிடமோ வாக்குவாதம் செய்வதை தூரத்தில் இருந்து பார்த்து தமிழ். என்னவாக இருக்கும் என யோசித்தபடி இருந்தவளிடம் வந்தவன், தான் வெளியே சென்று வருவதாக கூறினான்.
வந்ததே கோபம் தமிழுக்கு! “என்ன விளையாடுறீங்களா? வந்து ஒரு மணி நேரம் தான் ஆச்சு. திரும்பவும் எங்க போகனும்?”
“அது நாளைக்கு ஃபிரஸ்ட் டே டிக்கேட்டு கிடைக்குறதுல கொஞ்சம் பிராப்ளம். நான் போகனும் பிரண்ட்ஸ் கிட்ட. ப்ளீஸ், போயிட்டு கொஞ்ச நேரத்துல வந்திடறேன்.”
சொல்லிவிட்டு நிற்காமல் கேசவனிடம் மட்டும் கூறிவிட்டு, கிளம்பினான் செழியன். போகும் அவனையே வெறித்து பார்த்திருந்த தமிழுக்கு மனம் வேப்பங்காய்யாக கசந்தது. என்ன தான் இவனை செய்வது என ஒரு நிமிடம் ஓய்ந்து போய் உட்கார்ந்தவள், பின் மனதை திடப்படுத்திக் கொண்டு தன் பெற்றோர்களிடம் சென்றாள்.
அவர்கள் மருமகன் சென்றதை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. வந்து விடுவான் என்றே நினைத்தனர்.
நிறைய நாள் கழித்து தன் அன்னையிடம் தந்தையிடம் பேசிக் கொண்டே பாட்டியை வம்புக்கு இழுத்தாள் தமிழழகி. பேச்சு பாதி செழியனை பற்றியதாக தான் இருந்தது. மகள் சந்தோஷமாக தான் இருக்கிறாள் என்று அவள் முகம் மலர பேசுவதை வைத்தே முடிவு செய்தனர் கேசவன் தம்பதியர்!
நேரம் அது பாட்டிற்கு ஹரி படத்தில் வரும் சுமோ கார் போல சீரிப்பாய, செழியன் வீடு வந்து சேரவில்லை!!! தமிழே கூப்பிட்டு கேட்கலாம் என முடிவு செய்து கைப்பேசியை கையில் எடுத்த நொடி நல்ல பிள்ளையென்ற பாவனையோடு வந்து நின்றான் அவள் கணவன்.

Advertisement