Advertisement

அத்தியாயம் – 1
அந்த காலை வேளையில், அலுவகத்திற்கு மும்முரமாக கிளம்பிக் கொண்டிருந்த தமிழழகியின் அலைபேசி வாயிலாக அன்புத் தொல்லை இம்சித்தது. பார்த்தவுடன் ஒரு நெடிய மூச்சை எடுத்துவிட்டு, கைப்பேசியின் திரையை தட்டி அதை காதுகளுக்கு இட்டுச் சென்றாள்.
“ஹலோ சொல்லுமா… நான் இப்போ தான் கிளம்பிட்டு இருக்கேன்…” தன் குரலில் அவசரத்தை முன்னிறுத்தி தான் கிளம்ப வேண்டும் என்பதை வாக்கியத்தில் மறைமுகமாக அடக்கினாள். ஆனால், அவளின் அன்னைக்கோ அது புரிந்தபாடாக காணோம். அல்லது புரிந்து அதை கண்டுக் கொள்ளாமல் பேச்சை வளர்த்தாரோ?
“ஹலோ தமிழு… உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயத்தை பேசனும்….”
“முக்கியமான விஷயமா அப்போ நிறைய பேசுவோம், டைம் ஆகும். சாயந்திரம் பேசிக்கலாம். நான் இப்போ பேங்குக்கு கிளம்பறேன்…”
“ஹேய் இருடி… நல்ல விஷயம் காலையில பேசலாம்னு தான் நேத்து நைட் கூட கூப்பிடாம இப்போ கூப்பிட்டேன். உனக்கு தெரிஞ்ச இடத்துலந்தே நல்ல சம்மந்தம் வந்துருக்கு தமிழு. எனக்கும் அப்பாக்கும் ரொம்ப சந்தோஷம்…”
மேலே என்ன பேசிருப்பாரோ… யார் அறிவார்? அதன்மேல் தாங்க இயலாமல், தமிழழகி பொங்கிவிட்டாள். “ஐய்யோ போதும்மா!!! போன தடவ ஊருக்கு வரும்போது என்ன சொன்னீங்க? அடுத்த வருஷம் தை பொறந்த அப்புறம் தான் மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிப்பேன்னு சொன்னீங்களா இல்லையா?? இப்போ என்னடான்னா சம்மந்தம், மாப்பிள்ளை அது இதுன்னு…”
“ஏன்டி இப்படி கத்துற?? எல்லாம் தெரியாம பேசாத… இந்த மாதிரி அமையறது ரொம்ப கஷ்டம்னு பாட்டி கூட சொல்றாங்க….”
“தெரியும், இது எல்லாம் அந்த கிழவியால தான்!! வரேன் ஊருக்கு சனிக்கிழமை வரேன்ல… அப்போ பேசிக்கறேன்… இப்போ எனக்கு ரொம்ப லேட் ஆகுது. நான் ஃபோனை வைக்கறேன்மா பை…”
அலைபேசியை வைத்த இருபக்கமும் கோபமும் எரிச்சலும் சமயளவில் குடியேறியது. தமிழழகிக்கு பெற்றோர்கள் ஒன்று சொல்லி மற்றொன்று செய்வது கோபத்தை கூட்டியது என்றால், அவளின் அன்னை வள்ளிக்கோ தன்னை பேசவும் விடாமல் தம் பெண் பேசியை அணைத்தது, அவரை உச்சானி கொம்பில் ஏற்றியது! அலைபேசியை வைத்து தன் கணவர் கேசவன் பக்கம் திரும்பி கோபத்தை துளியும் சிந்தாமல், அவரிடம் மாற்றினார்.
“என்னை பேச கூட விடாம அப்படியே வைச்சுட்டா… ஒரே பொண்ணு ஒரே கண்ணுன்னு நீங்க வளர்த்தது எப்படி பண்ணுது பார்த்தீங்களா??”
“அவ ரொம்ப தான் பண்றா இப்போலாம். வரட்டும், பார்த்துக்கறேன்! ஏதோ குழந்தை கல்யாணம் பேசற மாதிரியில்ல பண்ணுறா… ஏழு கழுதை வயசாச்சு!”
மேற்கூறியவற்றை கேசவன் சொல்லவில்லை, அவரை பெற்றெடுத்த பார்வதி தான் கூறியது! இந்த கண்டிப்பு கலந்த நக்கலே தமிழழகிக்கும் அவளின் பாட்டிக்கும் இருக்கும் உறவை எட்டாம் பொருத்தமாக்கியது… தன் மனைவியும் தாயும் கொடுக்கும் கண்டிப்பை பல மடங்கு ஈடுகட்டும் வண்ணம் இருக்கும் கேசவனின் செல்லமும் பிரியமும்! ஆனால், இப்போது தன் மகள் இந்த திருமணத்திற்கு சம்மதிக்க வேண்டுமே என்றே அவர் மனமும் சிந்தித்தது.
இங்கே இப்படி நிலைமை இருக்க, தமிழழகி வேகவேகமாக தன் ஹாஸ்டல் சாப்பாட்டை விழுங்கியபடி தான் பணிபுரியும் வங்கிக்கு சென்றாள். கோடம்பாக்கத்திலுள்ள அந்த புகழ்பெற்ற தேசிய வங்கியின் கிளைக்குள் இவள் நுழைந்ததும், வெளியே இருந்த அனலிற்கு நேர்மாறாக சில்லென்ற காற்று அவளை தழுவியது.
தன் இடத்திற்கு சென்று அமர்ந்தவள், வழக்கம் போல் சாமி கும்பிட்டு தன் முன்னிருந்த கணிணியை இயக்கினாள். சில நாட்களாக கேஷியராக அமர்த்தப்பட்டிருந்தாள். அன்றும் காலையிலேயே தன்னிடம் அழையா விருந்தாளியாக குடிபுகுந்த கோபத்தையும் எரிச்சலையும் வங்கியில் பணம் செலுத்த வந்தவர்களிடம் காட்டாமல் இருக்க பெரும்பாடு பட வேண்டியிருந்தது!
மதியம் கவுன்டரை மூடிவிட்டு சிறிது இளைபாறிய போது தான், கோபம் சமன்பட்டது போல் தோன்றியது. சரி எதுவாகினும் வார விடுமுறையில் வீடு செல்லும் போது பார்த்துக் கொள்ளலாம் என மனதை தேற்றினாள். வேலை நிமித்தமாக தான் தமிழழகி சென்னையில் இருப்பது! ஆனால், சொந்த ஊரோ உச்சி பிள்ளையார் வசிக்கும் மலைக்கோட்டை திருச்சி மாநகரமே!
கேசவன் அங்கே உள்ள கல்லூரியில் பேராசிரியர். வள்ளியும் பார்வதியும் வீட்டை கவனித்துக் கொள்ளவர். திருச்சியிலேயே பிறந்து வளர்ந்ததால், தன் இளங்கலை பட்டத்தை அங்கேயே பெற்று, அது முடிந்ததும் வங்கிக்கான ஐ.பி.பி.ஸ். தேர்வெழுதி ஒரு தேசிய வங்கியில் தேர்வாகி, சென்னை கோடம்பாக்கத்தில் வேலையில் அமர்த்தப்பட்டாள்.
வேலையில் சேர்ந்தவுடன் மெட்ராஸ் பல்கலைகழகத்தில் எம்.பி.ஏ. தொலைதூரக் கல்வியில் சேர்ந்தும் விட்டாள்.
அது முடிய இன்னமும் ஆறு மாசமும் இருக்க, அதற்குள் திருமணமா என்றிருந்தது அவளுக்கு! போன முறை சென்ற போது தான் பொங்கல் கழித்து மாப்பிள்ளை பார்க்கலாம் என தன் குடும்பத்தினரின் மூளையை சலவை செய்து விட்டு வந்தாள். இப்போது என்னவென்றால் அச்சலவை எல்லாம் வீணாக போயிற்று போலவே! திரும்பவும் முதலில் இருந்தா என ஆயாசமாக இருந்தது.
இக்கால பெண்களுக்கு திருமணம் என்றாலே தேவையில்லாமல் புகுந்துக் கொள்ளும் சலிப்புத்தன்மை தமிழழகிக்குள்ளும் புக தவறவில்லை. தன் விதியை நொந்தபடி தன் ஹாஸ்டல் அறைக்குள் முடங்கியவள் தன் அறை தோழி ஸ்வேதா வந்தும் கூட உம்மென்று முகத்தை வைத்துக் கொண்டாள்.
“என்னடி தலைவர் படத்துக்கு பரஸ்ட் டே பரஸ்ட் ஷோ டிக்கேட் கிடைச்சும் போக முடியாம போன மாதிரி உட்காதிருக்க?! என்ன விஷயம்…”
“வீட்டுல திரும்ப கல்யாணம் பேச ஆரம்பிக்கறாங்க ஸ்வே. ஏதோ சம்மந்தம் வந்திருக்காம்! என்ன பண்றதுனே தெரியலை…”
“கல்யாணம் நல்ல விஷயம் தானடி? உனக்கு என்ன பதினெழு பதினெட்டுன்னு நினைப்போ? இருவத்தி மூணு வயசாகப்போகுது. இப்போ பண்ணிக்காம வேற பண்ணிக்க போற??”
“இல்லடி கொஞ்ச நாள் கழிச்சு பார்க்க ஆரம்பிச்சா நல்லா இருக்கும்னு நினைச்சேன்.”
“அதெல்லாம் இப்போ பார்த்தாலும் நல்லா தான் இருக்கும். எனக்கு தான் அக்கா இருக்கா. இன்னும் அவளுக்கே முடியலை. உனக்கு தான் எந்த பிரச்சனையும் இல்லைல… அப்புறம் என்ன?? இந்த வீக் என்ட் வீட்டுக்கு போறல, பையனை பத்தி தெரிஞ்சுக்கோ… பிடிச்சிருந்தா மேல பார்க்கலாம். இல்லையா ஏன் பிடிக்கலைன்னு வீட்டுல சொல்லிடு தெளிவா…. அதை விட்டுட்டு இப்படி மூஞ்சிய தூக்கிட்டு இருக்காத….”
“ஹ்ம்ம்ம் சரிடி ஊருக்கு போனதும் பார்க்கலாம்.” ஸ்வேதாவிடம் பேசியதும் மனதில் தெளிவுற இன்னும் இரண்டு நாட்களில் கிளம்பி ஊருக்கு செல்வதற்காக காத்திருந்தாள் நம் நாயகி. இரண்டு நாட்களும் இரண்டே நொடிகள் எனவும் இல்லாமல், இரண்டு மாதங்களாகவும் இழுத்தடிக்காமல், இரண்டு நாட்களாகவே கடந்துப் போக, சனிக்கிழமை விடிகாலை நான்கு மணியளவில் திருச்சி பேருந்து நிலையத்தில் இறங்கி, தனக்காக காத்திருந்த தன் தந்தையுடன் வீடு சென்றாள்.
வீடு சென்றதும் விட்ட தூக்கத்தை தன் அறையில் மீண்டும் தொடர்ந்தவள், பின் விழித்தது காற்றில்லாமல் பிசுபிசுப்பாக ஊற்றிய வியர்வையில் தான். பார்த்தால் மின்விசிறி ஓடாமல், யாரோ அணைத்து வைத்திருந்தனர்! யாரோ என்ன யாரோ? இவ்வேலைகளை அவளின் அப்பத்தாவை தவிர வேறு யார் செய்வார்! இதில் வெளியே கூடத்தில் அவளை பற்றி தாறுமாறாக பேச்சு வேறு….
‘வரேன் இதோ வரேன்’…. உள்ளுக்குள் கறுவியபடி பல் துளக்கி விட்டு, வெளியே கூடத்திற்கு சென்றவள், “இப்போ உங்களுக்கு என்ன தான் பிரச்சனை மிஸ்ஸஸ். பார்வதி? கொஞ்சம் இப்படி காலையிலேயே கத்துற நிறுத்திறீங்களா??” என கிண்டலுடன் கோவத்தை உள்ளடக்கி கேட்க, அவளின் தந்தை அருகே வருமாறு செய்கை செய்தார்.
அவரின் செய்கையில் கட்டுப்பட்டவளாக அவரிடம் ஓடிச் சென்றவளை பார்த்து சிரித்து, தன் அன்னையை அடக்கினார் கேசவன். “அம்மா நான் பேசிக்கறேன். கொஞ்சம் சும்மா இருங்க!”
“ஆமா இதை சொல்லியே அடக்கு…” நொடித்துக்கு கொண்டு நேராக சமையல் அறைக்கு சென்ற பார்வதி, அங்கே வள்ளி செய்துக் கொண்டிருந்த வேலையை நிப்பாட்ட சொல்லி அவரையும் அழைத்துக் கொண்டு, ஹாலுக்கு சென்று அங்கே நடப்பதை வேடிக்கை பார்க்கத் தொடங்கினார்.
கேசவனும் தன் பெண்ணிற்கு வந்த வரனை பற்றிய விவரங்களை அடுக்கினார். “நம்ம ரேவதி பாட்டிய போன வாரம் தான் கோவில்ல பார்த்தோம்டா. அவங்க இருக்க நகர்லயே தான் மாப்பிள்ளையோட வீடும் இருக்கு. அவங்க தான் தெரிஞ்ச பொண்ணு இருந்தா பார்க்கச் சொல்லிருக்காங்க.
எங்களுக்கும் பையன ரொம்ப பிடிச்சிருக்குமா. பையன் பேரு தமிழ்செழியன். எம்.பி.யே. முடிச்சிட்டு உன்னை மாதிரியே பேங்க்ல தான் வேலை பார்க்குறான்.”
செழியன் என்றதும் மனதில் வெட்டிய மின்னலை கண்களில் பரவ விட்டு, உடனே அதை மறைத்தும் கொண்டு சீறினாள் தமிழழகி!
“என்னது பையனும் பேங்க் வேலையா?? என்னப்பா டாக்டருக்கு தான் டாக்டரா பார்த்து கல்யாணம் பண்ணி வைப்பாங்க. இப்போ பேங்க் வேலையும் இப்படி ஆகிடுச்சா?”
தமிழழகியின் ஆச்சரியத்துக்கும், குழப்பத்திற்கும் அங்கே மதிப்பே இல்லாமல் ஆனது. “ஏன் இந்த பேங்க் உத்தியோகம் கிடைக்க நீ எவ்வளவு கஷ்டப்பட்ட? பையன் இப்போவே அஸிஸ்டென்ட் மேனேஜரா இருக்காரு. இப்படி மாப்பிள்ளை கிடைக்குறது ரொம்ப கஷ்டம், தெரிஞ்சிக்கோ….” வள்ளியின் பெருமை பீற்றல் பற்றா குறையாக போக, பார்வதி மேலே அடுக்கினார்.
“ஆமா பேரு பொருத்தம் கூட எவ்வளவு நல்லா இருக்கு பாரு. தமிழழகி, தமிழ்செழியன்… உனக்கு ஏத்த பையன்டி. கட்டிக்க நோவுதோ உனக்கு?”
இதை கேட்டதும் தமிழுக்கு எங்கிருந்து தான் கோபம் பொத்துக் கொண்டு வந்ததோ? தன் மனக்குமுறலை ஆயிரத்து மூன்னூற்றி ஐம்பத்தி ஆறாவது தடவையாக கத்தினாள். “ஏய் கிழவி இதை சொல்லியே என்னை வெறுப்பேத்துற நீ? நீ தான் ரொம்ப நல்லா இருக்கும்னு தமிழழகினு பேரு வைச்ச… ஆனா, ஒரு தடவையாவது ‘அழகி’னு கூப்பிட்டு இருப்பியா?
எப்போ பார்த்தாலும் தமிழு தமிழுன்னு கத்த வேண்டியது!! என்னை பேச வைக்காத ஆமா!”
“அழகி போதும்….” ஆம், அவளை அழகி என கூப்பிடும் ஒரே ஜீவன் அவளின் தந்தை மட்டுமே! இப்போதும் அதை கூறி அவளை அமைதி படுத்தினார். பார்வதியோ, “எனக்கா கூப்பிடனும்னு தோணும் போது கூப்பிடுவேன்.” என தமிழழகியின் மூக்கை உடைத்தார் அசால்டாக.
“அழகி இங்க சொல்றதை கேளு….” கேசவனின் பேச்சிற்கு வேறு வழியில்லாமல், கவனத்தை அவரின் பக்கம் திருப்பினாள். “பையனுக்கு ஒரே ஒரு அண்ணன் தான். கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆகுது. இப்போ குழந்தையும் பொறக்கப் போகுது போல. அவங்க இங்க தான் இருக்காங்க. பையனோட வேலை சென்னையில தான்! அங்க வீடெடுத்து தங்கியிருக்காப்ல… அதனால, அப்பாவும் அம்மாவும் ரெண்டு பசங்க கிட்டயும் மாறி மாறி இருந்துப்பாங்க. பையன் வேலை பார்க்குறது…” என தமிழ்செழியன் வேலை செய்யும் புகழ்பெற்ற வங்கியின் பெயரை கூறினார்.
“எல்லாம் சரிப்பா…. சென்னையிலேயே வேலை, திருச்சி சொந்த ஊரு…. பையனை பத்தி விசாரிச்சீங்களா??” என சம்மதத்தின் விளிம்பில் தொங்கிய குரலில் கேள்வியெழுப்பினாள் தமிழழகி. “அதெல்லாம் பண்ணாம இருப்போமோமாடா? நம்ம முருகேசனை விட்டு பையன் வேலை செய்யற இடத்துலயும் விசாரிச்சுட்டேன். இங்கயும் பண்ணியாச்சு. எந்த கெட்ட பழக்கமும் இல்லை பையனுக்கு. ஃபேமிலியை பத்தியும் நல்ல விதமாதான் சொல்றாங்க. பிடிச்சு இருந்ததால தான் உன்கிட்ட எடுத்துட்டு வந்திருக்கோம். இந்தா பையனோட போட்டோ… உனக்கு பிடிச்சிருந்தா ஜாதகம் பார்க்கலாம்.”
பேசியபடியே தன் கைப்பேசியில் போட்டோவை எடுத்து, தன் மகளிடம் காட்டி அவளின் முகத்தை ஆராய்ந்தார். மற்ற இரு பெண்களும் அதையே வேலையாக்கி கொள்ள, தமிழழகி இதையெல்லாம் அறியாமல், அலைபேசியை கூர்ந்துக் கொண்டிருந்தாள். சிரித்த முகமாக கண்களின் வழியே கவர்ந்திழுத்த செழியனை வேண்டாம் என சொல்ல தமிழழகிக்கு எவ்வித காரணுமும் தோன்றவில்லை.
சிறிது நேரம் கழித்து தன் தந்தை ஜாதகம் பார்க்கவா என கேட்ட போது, “ஹ்ம்ம்ம் சரிப்பா” என சம்மதம் தெரிவித்தாள் தமிழழகி. “உன் பொண்ணுக்கு இந்த பையன் தான் முடியும் பாரு. அவளுக்கும் பிடிச்சிருக்கு…” பார்வதி வள்ளியிடம் கிசுகிசுக்க, வள்ளியும் அப்படியே நடக்க வேண்டும் என பிராத்தித்தார். ஏனோ அவளையும் மீறி தமிழுக்கும் ஜாதகம் பொருந்த வேண்டுமே என ஆவல் கொண்டது மனது. அந்தளவிற்கு தனக்கு அவனை பிடித்திருக்கிறதா? தெரியவில்லை அவளுக்கே!
உதட்டோரம் உதித்த கள்ள புன்னகையில், ஆனந்தம் அடைந்தாள். மனதில் சில நாட்களாக தோன்றிய சஞ்சலங்கள் எல்லாம் துணி கொண்டு துடைத்தது போல் மறைந்தது அவளுக்கும் ஆச்சரியமே! ஒரு வழியாக, மாலையில் கேசவனும் வள்ளியும் ஜோசியரிடம் சென்று திரும்பி, “பத்துக்கு பத்து பொருத்தமும் இருக்காம். ஜாம் ஜாம்னு கல்யாணம் பண்ணலாம்னு சொல்றாரு….” என கூறி எல்லோரிடமும் மகிழ்ச்சியை பகிர்ந்தனர். தமிழுக்கு மிகவும் சந்தோஷம்….
அவள் எப்போதும் ஆசைப்பட்டது போல், தன் சொந்த ஊரிலேயே மாப்பிள்ளை அமைந்தது அவளுக்கு தித்தித்தது! ஒற்றை பெண்ணாக இருக்கும் அவளுக்கு பெற்றோரை நினைத்தால் பார்க்கும் தூரத்தில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் உண்டு. கஷ்டப்பட்டும் டிரான்ஸ்பரும் வாங்க வேண்டாம்… இப்படி எண்ணியே நிம்மதி கொண்டாள் தமிழழகி. மறுநாள் காலையிலேயே மாப்பிள்ளை வீட்டில் ஜாதகம் பொருந்தியதை தெரிவிக்கலாம் என கூறினார் கேசவன்.
அன்று தன்னையும் செழியனுக்கு பிடிக்குமா, இச்சம்மந்தம் நன்றாக சேர்ந்து திருமணம் வரை செல்லுமா என எண்ணங்களில் மூழ்கியபடி இரவை கழித்தாள் தமிழ். விடிந்த பொழுதில் ஒன்பது அடித்தவுடன், கேசவன் தொலைபேசி வாயிலாக தன் வருங்கால சம்மந்திக்காரர்களை அழைத்தார்.
தொலைப்பேசியில் அவருடன் உரையாடிய செழியனின் தந்தை சுவாமிநாதன், பேசிவிட்டு சந்தோஷமாக வீட்டில் அனைவரிடமும் நற்செய்தியை பகிர்ந்தார். அவரின் மனைவி சசிகலா, பெரிய மகன் இளமாறன், மருமகள் நதியா என எல்லோரின் முகமும் அகமும் மலர்ந்தது.
இது எல்லாம் தன் அறையின் படுக்கையில் இருந்து இன்னமும் எழாமல் புரண்டுக் கொண்டிருந்த தமிழ்செழியனின் காதுகளிலும் இன்பத் தேனாக பாய, போர்வைக்குள்ளேயே குத்தாட்டம், தப்பாட்டம் எல்லாம் போட்டு, “எஸ், எஸ், எஸ்” என குதித்தான் சந்தோஷ மிகுதில்!!!

Advertisement