மறுநாள் காலையில் பசுபதிக்கு எப்போதும் எழும் நேரத்திற்கு விழிப்பு வந்துவிட்டது. எப்போதும் காலையில் எழுந்ததும்.. தனது இன்றைய வேலைகளை மனதில் நினைவூட்டிக் கொள்ளுவான்.. இன்று, அப்படி செய்யும் போது.. அலுவலகத்திற்கு இன்று நான் செல்ல முடியாது.. யாருக்கு போன் செய்ய வேண்டும் என மனதில் அசை போட்டுக் கொண்டே எழுந்து வாஷ்ரூம் சென்றான்.
பின் பால்கனி வந்து.. தனது உடற்பயிற்சி உபகரணங்களை எடுத்துக் கொண்டு.. அங்கேயே உடற்பயிற்சி செய்ய தொடங்கினான். அதன்பின் எந்த யோசனையும் அவனுக்கு இல்லை போல.. எண்ணிக்கைகளில் கவனம் வைத்து.. பயிற்சி செய்ய தொடங்கினான்.
சற்று நேரம் சென்று, இரவு உடையில்.. தனது அறையிலிருந்து போனில் பேசிக் கொண்டே வெளியே வந்தாள்.. நந்தித்தா. அப்படியே சோபாவில் அமர்ந்துக் கொண்டாள். பேசி முடித்ததும்.. தூக்கம் கலையாமல்.. அப்படியே சாய்ந்துக் கொண்டாள்.
அவளின் அன்னைதான் அழைத்திருந்தார். பெண் எழுந்துக் கொண்டிருக்கமாட்டாள் என சரியாக கணித்து அழைத்தார். பேசி முடித்தவள்.. இங்கே வந்து சாய்ந்து உறங்கினாள்.
பசுபதி பேச்சு சத்தத்தில் திரும்பி பார்த்தான்.. இவள் அமர்ந்திருப்பது தெரிந்தது. தன் வேலையை பார்த்தான்.
இப்போது மீண்டும் நந்தித்தாவிற்கு அழைப்பு வந்தது. நந்தித்தா அன்னையோ என எண்ணி.. சலிப்பாக போனினை பார்க்க.. அதில் அமுதா அத்தை என இருந்தது. தடதடவென நிமிர்ந்து அமர்ந்தாள்.. அழைப்பை ஏற்று “ஹலோ அத்தை” என்றாள் தூக்கம் கலைந்த குரலில்.
பசுபதி அமைதியாக இதையும் பார்த்தான். சின்ன சலிப்புதான், அவளின் இந்த பதட்டத்தில்.
அமுதா எதோ கேட்டார் போல..
நந்தித்தா “இல்ல அத்தை” என்றாள் சலிப்பாக.
அமுதா என்ன சொன்னாரோ.. நந்தித்தா “தெரியலை அத்தை, நான் பார்க்கலை” என்றாள்.
அமுதா எதோ சொன்னார் போல.. நந்தித்தா “சரிங்க அத்தை.. சரி” என சொல்லி போனை வைத்தாள்.
நந்தித்தா எழுந்து வாசல் கதவை திறந்தாள்.. வலது பக்கம் ஒரு டேபிளில் பளாஸ்க் இருந்தது.. கப்ஸ்.. சின்ன பாக்ஸ் இருந்தது. நந்தித்தா எடுத்துக் கொண்டு உள்ளே வந்து.. டீபாய் மேல் வைத்துவிட்டு, மீண்டு தன்னறைக்கு சென்று காலைகடன்களை முடித்து வந்தாள்.
இப்போது பசுபதி, சோபாவில் அமர்ந்து காபி எடுத்துக் கொண்டிருந்தான்.
நந்தித்தாவும் சென்று அமர்ந்தாள்.. பசுபதி எழுந்து பால்கனி சென்றுவிட்டான். நந்தித்தாவும் நிமிர்ந்து பார்க்கவில்லை.. ஏதும் தவறாக அவளுக்கு தெரியவில்லை. தனக்கான காபியை கப்புகளில் எடுத்துக் கொண்டாள்.. பொறுமையாக பருகினாள்.. சின்ன பாக்ஸ்சில் குக்கீஸ் இருந்தது போல.. அதில் இரண்டினை எடுத்து உண்டு விட்டு.. கிட்சென் போல இருந்த இடத்தில்.. எல்லாவற்றையும் கழுவி கமர்த்திவிட்டு, தனதறைக்கு வந்துவிட்டாள்.
அடுத்த அரைமணி நேரத்தில் குளித்து, யூடியுப் பார்த்து அவர்கள் வழக்கப்படி புடவை அணிந்துக் கொண்டு.. கீழே இறங்கி வந்தாள்.
எதோ சடங்குகள் என அவளை கிட்சென் கூட்டி சென்றனர். எல்லா பொருட்களையும் ஸ்பரிசிக்க செய்தனர். பின் அமுதாவும், அவளின் கணவரும்.. அவளின் கையில் ஒரு கொத்து சாவியை கொடுத்தனர்.
கெளவ்ரவ் “இதை சாமிகிட்ட வைச்சி பூஜை செய்து கொடும்மா” என்றனர்.
நந்தித்தா “என்ன மாமா இது” என்றாள்.
கெளரவ் “இது நம்ம ஷோவ்ரூம் கீய்.. இப்போது எல்லாம் டிஜிட்டல் என்றாலும்.. இது பழக்கத்திற்காக. இது நம்ம லக்கர்ஸ் கீஸ்.. மேலும் மேலும் வளரனும்ன்னு சொல்லி பூஜை செய்து கொடு” என்றார்.
நந்தித்தா அந்த சாவிகளை பார்த்தே கொஞ்சம் பிரமித்து இருந்தாள்.. இப்போது இவரின் செய்கையில் பிரமித்து போனாள்.
கெளவ்ரவ், சென்று அமர்ந்துக் கொண்டார்.
அமுதா புன்னகையோடு பூஜைக்கான ஏற்பாடுகளை.. செய்ய சொன்னார் மருமகளை. மாமியார் சொல்ல சொல்ல.. நந்தித்தா எல்லாவற்றையும் செய்து.. ஹார்த்தி எடுத்து.. அமுதா சொல்லிய படி வேண்டிக் கொண்டு.. தன் மாமனாரின் கையில் அந்த சாவிகளை கொடுத்தாள்.
இப்போதுதான் பெரியம்மாவும் அவர்களின் மருமகளும் வந்து சேர்ந்தனர். பக்கத்தில் ஒரு நாலுவீடு தள்ளிதான் அவர்கள் வீடு.. நேற்று சென்றுவிட்டு இதோ இப்போது பெண்கள் வந்து சேர்ந்தனர்.
அமுதா கண்காட்ட.. நந்தித்தா தலையில் ஹோனி போட்டுக் கொண்டு.. பெரிய அத்தையிடம் ஆசி வாங்கினாள்.
பெரியம்மாவிற்கு சந்தோஷமாகி போனது.. நந்திதாவின் செய்கையில்.. நேற்று போலில்லாமல்.. தங்களின் முறைப்படி புடவை உடுத்தியிருந்தாள்.. அத்தோடு, தங்கள் வழக்கப்படி சட்டென தன்னை பார்த்ததும் பாதம் பணிந்ததும் சந்தோஷம் “இப்படியே பொறுப்பா இருடா” என்றவர் “இது போதும்.. இவ்வளவுதான் நாங்கள் எதிர்பார்ப்பது. காலையில் இப்படி எழுந்திடனும்.. அடுத்து பெரியவங்களுக்கு மரியாதை.. அது போதும் டா..” என்றவர் “எங்க பையன்” என்றார்.
அமுதா பாதி விளக்கம் சொன்னார் மருமகளுக்கு.
நந்தித்தா அப்போதே “அத்தை.. இன்னிக்கு ப்ஸ்ர்ட்டே எழுந்திட்டேன்.. தினமும் இப்படி நடக்குமா தெரியாது, நான் கொஞ்சம் லேசி. மற்றபடி மரியாதை எப்போதும் கொடுப்பேன்” என்றாள் புன்னகையோடு.. உண்மையை சொன்னாள்.
அமுதா சிரித்துக் கொண்டே தன் ஓரகத்தியிடம் இதை அப்படியே சொல்ல.. அவரின் முகம் ஒருமாதிரி ஆகியது. அமுதா, நந்தித்தாவின் காதினை லேசாக திருகுவது போல பாவனை செய்து.. “பெரியவங்ககிட்ட மரியாதையாகவும் பேசனும்” என்றார்.
நந்தித்தா “அத்தை.. நீங்க ரூல் போட வேண்டிய நேரம் கல்யாணத்திற்கு முன்.. அதுதான் முடிந்து போச்சே.. அதனால், நோ ரரூல்ஸ்.. அத்தை” என்றாள் புன்னகியோடு.
அமுதா கண்களை உருட்டி சிரித்தார் “நேரம் முடிந்து போச்சா.. பாருங்க அக்கா” என தன் ஓரகத்தியிடம் அவள் சொல்லியதை மொழி பெயர்த்தார்.
பசுபதியின் பெரியம்மா “பாரேன் பேச்சை.. இவளாவது சொல்லிட்டா.. மத்ததுங்க அதுக்கு கூட நம்மை மதிப்பதில்லை” என்றவர், நந்தித்தா குடிக்க கொடுக்கவும் எடுத்துக் கொண்டார். பேச்சு அப்படியே மாற்றி போகிற்று.
பின் காலை உணவு தயாராகிக் கொண்டிருக்க.. ம்.. வேலையாட்கள் இருந்தனர்.. இவர்கள் இனிப்பு செய்தனர்.
காலை உணவு நேரத்திற்குதான் பசுபதி கீழே வந்தான். பசுபதிக்கு உணவு பரிமாற சொல்லினர் பெரியவர்கள். நந்தித்தாவிற்கு இதுவரை வந்திராத பயம் இப்போது வந்தது ஏனென்றே தெரியவில்லை. காலை உணவாக பூரி, இட்லி.. அதற்கு தோதாக சாம்பார் சட்னி கிழங்கு மசால்.. அடுத்து இனிப்பு இருந்தது. பொறுமையாக அவனுக்கு எல்லாம் எடுத்து பரிமாறினாள். பசுபதி, உண்டான்.. அவளை உண்ண சொல்லவில்லை.. முகம் கூட பார்க்கவில்லை. உண்டு எழுந்துக் கொண்டான். அஹ்ப்பா என பெருமூச்சு வந்தது பெண்ணுக்கு.
பின் ஆண்கள் எல்லோரும் வந்து அமர்ந்தனர் நந்தித்தா தானே பரிமாறினாள்.. பொறுமையாக அவளிடம் பேசிக் கொண்டே உண்டனர்.
பசுபதி தன் பெரியம்மா பாட்டி என பேசிக் கொண்டிருந்தான். அவன் பேசவில்லை, அவர்கள் பேசினர் இவன் தலையசைத்தான் இல்லை.. ம் என்றான்.. இல்லை போனினை பார்ப்பது போல தலையை குனிந்துக் கொண்டான்.
வேலை இருக்கு என மேலே செல்லும் நேரம்.. கந்தசாமி பொம்மு இருவரும் வந்தனர்.
நந்தித்தா “வாங்க தாத்தா” என்றாள் நிறைந்த புன்னகையோடு.
என்னமோ அப்படி பசுபதியால் வரவேற்க முடியவில்லை.. “வாங்க தாத்தா” என்றான்.
கந்தசாமி “முடியலை ம்மா.. மூச்சு வாங்குது. இதுவே தூரமா இருக்குதான் ஆனால், உன்னை பார்க்க வரணுமில்ல” என்றார் சிரித்துக் கொண்டே.
நந்தித்தா “நாங்க வரும் போது பார்த்துக்கொள்ளலாமில்ல தாத்தா” என்றாள்.
இப்போது, வேலையாட்கள் தண்ணீர் கொண்டு வர.. அதை எடுத்து நந்தித்தா கொடுத்தாள்.
கெளவ்ரவ்.. அமுதா மற்றும் குடும்பத்தார் எல்லோரும் வந்து கந்தசாமியை அன்போடு வரவேற்றனர்.
அமுதா “சாப்பிடலாம் அப்பா” என்றார்.
கந்தசாமி சரி என்பதாக சொல்லவும்.
கந்தசாமி பொம்மு இருவருக்கும் அமுதா பரிமாறினார்.
நந்தித்தா நின்று பேசிக் கொண்டிருந்தாள்.
பசுபதி அவர்களின் அருகே அமர்ந்து.. அவரின் உடல்நிலை குறித்துக் கேட்டுக் கொண்டிருந்தான்.
கந்தசாமி “ஆனந்தன் உனக்கு போன் செய்கிறேன்னு சொன்னான் ப்பா.” என சொல்லி நிறுத்தினார். அவர் நினைத்தது போல.. மணமக்கள் இருவரின் முகமும் இறுகியது. பின் “நீங்க பேசிக்கோங்க” என்றவர். மற்ற விஷயங்களை பேச தொடங்கினார்.
இருவரும் சற்று இயல்பாக தொடங்கினர்.
கந்தசாமி உண்டு முடித்தார். மணமக்களுக்கு மோதிரம் பரிசு வழங்கினார். இருவரும் அதை அவரின் எதிரிலேயே மாற்றிக் கொண்டனர்.
கெளவ்ரவ் “மாலை இருக்க வேண்டும் நீங்க, தங்குவதற்கு அறைகள் ஏற்பாடு செய்கிறேன்” என்றார்.
கந்தசாமி “கூட்டம் எனக்கு சேருவதில்லை மாப்பிள்ளை. இப்போது கிளம்பினால் இரவில் ஊர் சேர்ந்திடுவேன். பிள்ளைகளை அனுப்பி வைங்க..” என கூறி விடைபெற்றார்.
நந்தித்தாவிற்கு அவர் கிளம்பும் போது அழுகை வந்தது.. “தாத்தா உடம்பை பார்த்துக்கோங்க. உடம்பு முடியலைன்னா எனக்கு கூப்பிடனும். மாத்திரைகள் எல்லாம் சரியாக சாப்பிடுங்க, கவலை படாதீங்க.” என்றாள் அழுகையோடு.. மனதில் இருந்த எதோ ஒன்று மேலெலும்பி அவளை பேச வைத்தது.
கந்தசாமி தாத்தாவிற்கும் ஒருமாதிரி ஆகிவிட.. சின்னவளின் கைகளை பிடித்துக் கொண்டார்.. என்ன சொல்லுவதென தெரியவில்லை.. ஒருமாதிரி பேச முடியாத வருத்தம் இருவருக்கும்.
பசுபதி அருகில் வந்தான்.. தாத்தா சின்ன குரலில் “விகல்பமில்லா பிள்ளை. இப்போதான் கண்ணில் பயம் தெரியுது. நல்லா பார்த்துக்கப்பா” என்றார்.
பசுபதி ‘நான் எப்படி’ என மனதில் நினைத்துக் கொண்டு அவரிடம் ஏதும் சொல்ல முடியாமல் தலையசைத்தான்.
நந்தித்தாவின் மனம் எதோ போலாக.. இயல்பாக இருந்தவளின் முகம் இப்போது இறுகி போனது. அதன்பின், அவளுக்கு யாரோடும் பேசும் எண்ணமில்லை.
மதியம் விருந்து.. நந்தித்தாவின் வீட்டில். அதனால், பசுபதி நந்தித்தா பசுபதயின் அக்கா, அவரின் வீட்டுக்காரர், பிரகதீஷ்.. இன்னும் இரண்டு வாண்டுகளோடு கிளம்பினர், விருந்துக்கு.
பசுபதி, மாமியார் வீட்டில்.. அமர்ந்தது அமர்ந்த இடத்தில் அப்படியே இருந்தான். பிரசன்னா வந்து தன்மையாக பேசினான்.. பசுபதியின், படிப்பு பற்றி கேட்டான்.. எல்லாவற்றுக்கும் பதில் மட்டுமே. பேச்சுக்களை வளர்க்கவில்லை.
பிரசன்னாவிற்கு, சந்தேகம்.. தங்கையோடாவது பேசினாரா என. தங்கையின் முகத்தை பார்த்தான். தங்கை, தன் அறையில் இருந்தாள்.. அவளோடு, அவளின் நாத்தனார் இருந்தார், அதனால் பிரசன்னா ஏதும் கேட்க்க முடியவில்லை.
பிரசன்னா சென்றதும்.. வேதாந்தன் வந்து அமர்ந்தார் மாப்பிள்ளையிடம். பசுபதி ஏனோ நிமிந்துக் கூட பார்க்கவில்லை. வேதாந்தனுக்கு, பேசமுடியவில்லை.. பசுபதியின் அக்கா வீட்டுகாரரோடு.. உரையாடினார். அவர் நன்றாக பேசினார்.
உண்டு முடித்து பசுபதி, சோபாவில் அமர்ந்திருந்தான். அவனுக்கு வீடு செல்ல வேண்டும் யாரிடம் சொல்லி செல்லுவது என தெரியவில்லை. மனையாளை முதல்முறையாக தேடியது அவனின் கண்கள்.
நந்தித்தாவின் அன்னை.. மாப்பிள்ளை தனியே அமர்ந்திருப்பதை பார்த்து.. பெண்ணை அழைத்து “மாப்பிள்ளைக்கு எதோ வேணும் போல என்னான்னு கேளு டா” என்றார்.
நந்தித்தா அங்கிருந்தே.. கணவனை பார்த்தாள்.
இப்போது நிமிர்ந்து பார்த்த பசுபதி.. லேசாக வா என்பது போல.. பார்வை பரிமாற்றம் செய்தான்.
நந்தித்தா வந்து அவன் அருகே நின்றாள்.
பசுபதி “நான் போறேன்.. நீ என்ன செய்கிறாய்” என்றான்.
நந்தித்தாவிற்கு ‘என்ன கேள்வி இது’ எனத்தான் தோன்றியது. பதில் என்ன சொல்லுவது என தெரியவில்லை. அப்படியே நின்றாள்.
பசுபதி “என்ன, நான் பேசுவது புரிகிறதா” என்றான் சத்தமாக.
நந்தித்தா “இருங்க.. கேட்டு சொல்றேன்..” என்றாள்.
பிரசன்னா இதை பார்த்தான்.. அவனுக்கு விடை தெரிந்த நிம்மதி. பசுபதி நம்மிடம்தான் கோவம் கொள்ளுகிறார் போல.. தங்கையிடம் பேசுகிறார்.. என எண்ணிக் கொண்டான்.
நந்தித்தா வந்து அன்னையிடம் கேட்டாள்.
அவரோ உன் அத்தையை கேள்.. என்றார். நந்தித்தா அத்தைக்கு அழைத்து கேட்டாள்.
அமுதா, விவரம் சொன்னார். அதன்படி பசுபதி நந்தித்தா இருவரும் ஹோட்டல் அறைக்கு செல்லவேண்டும்.. ரெஸ்ட் எடுத்த பிறகு.. அவர்களுக்கு மேக்கப் செய்ய ஆட்கள் வருவார்கள்.. என்றார்.
பசுபதியிடம் நந்தித்தா விவரம் சொன்னாள்.
பசுபதி “எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவியா” என்றான்.
நந்தித்தா திருதிருவென விழித்து.. அவனை ஏறிட்டாள்.
பசுபதி, அவளின் பார்வையில் லேசாக ஈர்க்கப்பட்டான்.. கையில் என்ன இருக்கிறது என பார்க்கும் ஒரு குழந்தையின் முகம்தான் நினைவு வந்தது கணவனுக்கு.. ஒரு கேள்வி எழுந்தது.. ‘வருத்தத்தின் சாயல் ஏன் இவளிடம் இல்லை.. இவள் அவனை மறந்துவிட்டாளா’ என ஷன நேரத்தில் அந்த வினா எழுந்து விட்டது, அவனுக்கு.
நந்தித்தா அவனின் பார்வையில் என்ன என்பதாக தன் பார்வையை மாற்றி பார்த்தாள்.
பசுபதி சுதாரித்து “ம், நான் வீட்டுக்கு போறேன்.. நீ அக்கா கூட ஹோட்டல் போய் ரெடியாகு. ம்..” என்றான்.
நந்தித்தா என்ன சொல்ல முடியும்.. “அத்தை” என்றாள்.
பசுபதி “சொல்லிடு.. அங்க போய்ட்டு சொல்லு.. எத்தனை மணிக்கு வரணும்ன்னு.. சொல்லு. பைய். வீட்டில் சொல்லிடுறீயா” என்றான்.
பசுபதி, தான் கேட்டதில் அவள் ‘நானே சொல்லிக்கிறேன்’ என சொல்லுவாள் என எதிர்பார்த்தான்.. ஆனால், நந்தித்தா ‘சொல்லிட்டு போங்க..’ என்றதும்.. ஒன்றும் செய்ய முடியாமல் அவளோடு நடந்தான்.
நந்தித்தா “அப்பா, அவர் கிளம்புகிறாராம்.” என்றாள்.
வேதாந்தன் “ஏன் மாப்பிள்ளை ரெஸ்ட் எடுத்துட்டு போலாமே” என்றார்.
பசுபதி, மனைவியை பார்த்தான்.. பின் “இல்ல, கொஞ்சம்..” என தடுமாறினான்.
நந்தித்தா “இல்ல ப்பா, லாப்டாப்பில் எதோ வேலை இருக்காம்.. அதை முடித்துவிட்டுதான்.. ஹோட்டலுக்கு சீக்கிரம் வரணும்மில்ல.. அதான் கிளம்புகிறார்” என்றாள், நல்ல சமாளிப்பாக.
வேதாந்தன் சற்று நிம்மதியானார்.. ‘தவறாகிவிடவில்லை’ என. மாப்பிள்ளையிடம் “நீங்க இன்னும் கோவமா இருக்கீங்கன்னு நினைச்சேன் மாப்பிள்ளை. அது.. எதோ நடந்திடுச்சி.. அதெல்லாம் மனசில் வைச்சிகிட்டு.. க்கும்.. உங்கள் வாழ்க்கையை வீணாக்கிடுவீங்கலோன்னு நினைச்சேன்.. இப்போது அந்த எண்ண மாறிவிட்டது. என் பொண்ணு துடுக்காக இருப்பாள், ஆனால், எதார்த்தத்தை ஏற்றுக் கொள்வாள். உங்களை இனி நல்லா பார்த்துக்குவா” என்றார்.
பசுபதிக்கு, அவரின் பேச்சில் இருந்த கவனத்தை விட.. அவரின் வயதில், இப்படி நம்மிடம் பேசுகிறாரே எனத்தான் எண்ணம், உடனே “நீங்க பெரியவங்க.. இப்படி எல்லாம் பேசாதீங்க. அதான், சரியாகிடுச்சே” என்றவன் விடைபெறுவது போல கை கூப்பி தலையசைத்து.. விடைபெற்று கிளம்பினான்.
நந்தித்தாவிற்கு போதுமே என்றானது. எல்லோரும் இப்படிதான் இந்த திருமணத்தை எதிர்கொண்டனர்.. ‘சரியாக இருக்கு..’ ‘சரியாதான் இருக்கு..’ என சொல்லிக் கொண்டே நகர்த்தினர்.. இந்த திருமணத்தை.
மாலையில், வரவேற்ப்பு தொடங்கியது. கெளவ்ரவ் எல்லோரையும் அழைத்திருந்தார்.. நண்பர்கள் வேலை செய்பவர்கள்.. தெரிந்தவர்கள் என எல்லோரும் வந்திருந்தனர்.
மணமக்கள்.. ஐவெரிநிற ஷெர்வானியில் பசுபதியும், பிங்க் வண்ண.. லெஹங்காவில் நந்தித்தாவும் சபையில் சூரியசந்திரனாக மின்னினர். நந்தித்தா முன்பே அழகி, அதிலும் இப்போது அவர்கள் முறைப்படி, பெரியவளையமாக மூக்குத்தியும்.. இருகைகளிலும் மெகந்தி.. சிவப்பும் வெள்ளையும் சேர்ந்த வளையல்கள்.. நெற்றியில் ரத்தநிற செந்தூரமும்.. என ஒப்பனையில்.. பெண்ணவள் பொருந்தி பாந்தமாக நின்றாள்.
பசுபதியின் எல்லோரும் அவர்களாகவே வந்து அறிமுகம் செய்துக் கொண்டு இவளோடு பேசினர். வேலை செய்பவர்களோடு கெளவ்ரவ் வந்தார் அறிமுகம் செய்ய.. தெரிந்தவர்கள்.. குடும்ப நண்பர்களோடு அமுதா.. பிரகதீஷ் என வந்தனர் அறிமுகம் செய்ய.. அதனால், தனியாக கணவன்தான் அறிமுகம் செய்ய வேண்டும் என்ற வேலை இல்லை. பசுபதி அடிக்கடி மூட் ஆஃப்பில் இருந்தான்.. நந்தித்தா எல்லோரையும் இன்முகமாக எதிர்கொண்டாள். விழா நன்றாக நடந்தது.
போட்டோ ஷூட் நடந்தது.
பசுபதி இருகிதான் நின்றான்.. நந்தித்தாவின் கைபிடிக்கவே தயங்கினான். பாவம் புகைப்பட கலைஞர்கள்.. எப்படி எப்படி சொல்லியும் பசுபதி, பெண்டாட்டியின் தோளில் கைபோட மறுத்துவிட்டான்.
நந்தித்தாவின் முகம்தான் கொஞ்சம் கொஞ்சமாக இறுகிக் கொண்டே வந்தது அவனின் செய்கையில். வெளியிலிருந்து பார்ப்பதற்கு.. இது நாகரிகமாக தெரியலாம்.. ஆனால், மனையாளுக்கு இது அவமானமாக இருந்தது.
அங்கு நின்று.. இங்கு நின்று.. என தனித்தனியே இருவரையும் எடுத்தவர்கள்.. மீண்டும் ஒன்றாக சேர்ந்து எடுத்தனர். நந்தித்தாவை சேரில் அமரவைத்து.. பசுபதியை வாள்ளோடு நிற்க வைத்து எடுத்தனர். அதற்கெல்லாம் பசுபதி சுணங்காமல் நின்றான். முகம் லேசாக இளகி இருப்பதாக தோன்றியது பெண்ணக்கு. அடுத்து என.. புகைபடம் எடுப்பவர்.. “பின்னிலிருந்து கட்டிக்கோங்க சர்” என்றார்.
பசுபதி “அ.. அதெல்லாம் வேண்டாம்.. வேற ட்ரை பண்ணுங்க” என்றான் மீண்டும் நாசூக்காக.
நந்தித்தாவிற்கு, கண்ணில் நீர் திரண்டது.. “எக்ஸ்கியூஸ் மீ” என்றவள் கிடுகிடுவென மேலே மேக்கப் செய்துக் கொண்ட அறைக்கு சென்றுவிட்டாள்.
பசுபதிக்கு, அவளின் வேகம் புரிந்தது.. ‘என்ன வேண்டுமாம் இப்போது.. நானென்ன டிராமா ஆர்ட்டிஸ்டா.. நீ வேண்டுமானால் அப்படி இருக்கலாம்.. எனக்கு, அது முடியாது.’ என எண்ணிக் கொண்டு அவள் சென்ற வழியையே பார்த்திருந்தான்.