தலைகீழ் நேசம்!

29

இருவரும் தாங்கள் திட்டமிட்டது போல மறுநாள் காலை உணவு முடித்துக் கொண்டுதான் சென்னை கிளம்பினர்.

மதியமாக வீடு வந்து சேர்ந்தனர். மருமகளையும் மகனையும் புதிதாக வருவது போல ஆரத்தி எடுத்து வரவேற்றார் அமுதா. கெளவ்ரவ் இருவரையும் இன்முகமாக வரவேற்றார். 

பெரியம்மா பெரியப்பா.. பசுபதியின் அத்தை உறவுகள் என நெருங்கிய சொந்தங்கள் எல்லாம் பொங்கல் விழாவிற்கு என வந்திருந்தனர்.. வீடு விழாகோலம் கொண்டிருந்தது.

பெரியம்மா ஆசையாக நந்தித்தாவை வரவேற்றார். இந்தமுறை.. தமிழிலில். நம் மொழி தெரியனும் என்ற எண்ணம் இப்போது அவரிடம் இல்லை போல.. அன்பினை மட்டும் கொடுக்க நினைத்தார் போல. பெண்ணவள் முதலில் அவரிடம்தான் ஆசி வாங்கினாள். அடுத்து தன் மாமனார் மாமியார் என முறையாக எல்லோரிடமும் ஆசி வாங்கிக் கொண்டாள். அன்று.. முதல்முறை வந்தபோது.. வெட்கம் பயம் என ஏதுமில்லை ஒரு அழுத்தமான முடிவோடு வாழ வந்தவள் போலிருந்தாள். இப்போது வெட்கமாகவும் பயமாகவும் இருந்தது நந்துவிற்கு, ம்.. இந்தமுறை மனம் எதையும் யோசிக்கவில்லை.. எதிர்பார்ப்பில்லாமல் வந்தாள் பெண்.

அமுதா “உன் வீடுதான்.. என்ன இப்படி டென்ஷன்” என கேட்டு மருமகளுக்கு குடிக்க கொடுத்து.. டைனிங் டேபிளில் தன்னோடு அமர்ந்திக் கொண்டு பேச தொடங்கினார். சுற்றிலும் பெண்கள் அமர்ந்துக் கொண்டு கதை கேட்டுக் கொண்டிருந்தனர்.  நந்தித்தாவும் மெல்ல மெல்ல இயல்பாக தொடங்கினாள். ஹிந்தி தமிழ் ஆங்கிலம் என எல்லா மொழியிலும் கதை பேசினால் மருமகள்.

பசுபதி எல்லோருடனும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தான். சற்று நேரத்தில் மனையாளின் அருகில் வந்தான் “நீ ட்ரெஸ் வேறமாத்திக்கோ” என்றான்.

நந்தித்தா “இல்ல.. இதுவே போதும்ங்க” என்றாள்.

அமுதா மெதுவாக எழுந்து ஹாலுக்கு சென்றுவிட்டார். அவனின் அக்கா.. பெரியம்மா பெண் கிண்டல் செய்ய தொடங்கினாள். பசுபதி அசராமல் மனையாள் அருகிலேயே அமர்ந்துக் கொண்டான். அவனின் அத்தை மகன்.. அக்கா என எல்லோரும் புதுவிதமாக பசுபதியை பார்த்தனர்.. ‘இப்படி எல்லாம் பேசுபவன் இல்லையே இவன்’ என. ஆனால், இந்த மாற்றம்தானே எல்லோரும் எதிர்பார்த்தது. அது நிகழும் போது.. ஒரு அதிர்ந்த ஆனந்த பார்வை.. அவர்களுக்குள் அவ்வளவுதான்.

பசுபதி “சரி.. சரி.. மேல போலாமா.. உன் இடத்தை பார்க்கனும்ன்னு தோணலையா” என்றான் எழுந்து நின்றுக் கொண்டு.

மனையாள் கணவனை புன்னகையோடு பார்த்தாள் பதில் சொல்லவில்லை. 

கூட்டம் எல்லாம் “தேக்கோ..” என சலசலக்க தொடங்கி “நோ நோ.. எல்லோரும் ரொம்ப்ப நாள் கழிச்சி பார்க்கும்.. நாங்கதான் பேசும்” என நந்தித்தாவின் கையை பிடித்துக் கொண்டனர்.

வேலையாட்கள் உணவுகளை டேபிளில் எடுத்து வைக்க தொடங்கினர், அதில் கவனம் சிதறியது எல்லோருக்கும்.

அமுதா “எல்லோரும் சாப்பிடலாம்..” என அழைத்தார்.

நந்தித்தா.. மாமியார் முகம் பார்த்து புன்னகைத்தாள்.

அமுதா “பேட்டா.. முதலில் சாப்பிடலாம்..” என்றார் மகனை கிண்டலாக பார்த்து.

பசுபதி “ம்.. இனி அதைதானே செய்யணும் நான்.. அவ உங்க பின்னாடியே சுத்த போறா” என முனகிக் கொண்டே எழுந்து கை கழுவி வந்தான்.

அமுதா மகனின் பேச்சில் ஆச்சர்யம்தான் கொண்டார்.. ‘என்ன காமெட்.. என் பையனா இது..’ என புன்னகையோடு எண்ணிக் கொண்டே வேலையை கவனித்தார். 

நந்தித்தா, உதவி செய்ய தொடங்கினாள். பெரியவர்கள் முதலில் உண்டனர். பின், விருந்தினர்கள் உண்டனர். அதன்பின்தான்   அமுதாவும் நந்தித்தாவும் உண்ணத் தொடங்கினர்.  பேசிக் கொண்டே உண்டனர். கோவையில் இருந்தவரை அமுதாவும் நந்தித்தாவும் போனில் பேசிக் கொண்டாலும்.. முன்போல ஒட்டுதல் இல்லை. இப்போதுதான் நிம்மதி அமுதாவிற்கு. மருமகள் மகனோடு சேர்ந்துவிட்டால் என்றாலும்.. எப்படி இங்கே வருவாள்.. எந்தநிலையில் உறவுகள் தொடரும்.. தனியாக இருக்கிறேன் என்றிடுவாளோ.. என நிறைய கேள்விகள் அவருள் இருந்தது. இப்போது அதெல்லாம் மட்டுபட்டுவிட்டது.. இன்னும் முழுதாக தொலைந்து போகவில்லை.. மருமகள் முழுதாக இங்கே வந்து சேர்ந்து குடும்பம் பண்ணும் வரை மாமியாரிடம் இந்த கேள்வி இருந்துக் கொண்டேதானே இருக்கும். ஓரளவு நிம்மதியோடு கலகலப்பாக மருமகளிடம் பேசிக் கொண்டிருந்தார்.

உண்டு முடிக்கவும் ப்ரகதீஷ் வந்தான் “அண்ணி, தியேட்டர் போலாம்ன்னு கசின்ஸ் எல்லாம் பேசினோம்.. நைட் ஷோவ் புக் செய்யவா.. அண்ணாகிட்ட கேட்டு சொல்றீங்களா” என வந்து கேட்டான்.

அமுதா “டேய்.. வண்டி ஓட்டி டயர்டா இருப்பான் டா அவன்..” என சொல்லி மருமகளின் முகம் பார்க்க..

நந்தித்தா “இல்ல அத்தை, நான் அவர்கிட்ட கேட்டுட்டு சொல்றேனே” என்றாள்.

அமுதா இளையவனை முறைத்தார்.. “இன்னிக்கே போகனுமா” என்றார்.

பிரகதீஷ் “மா.. நாளைக்கு ம்ரு திதி டெல்லி போறாங்க..” என்றான். பெரியப்பா பிள்ளைகள்.. அத்தை பிள்ளைகள் எல்லோரும் வந்திருந்தனர் இன்று. அவர்கள் இருப்பர்.. இவன்தான் அடுத்த இரண்டு நாட்களும் ஊர் சுற்ற கிளம்பிடுவான், பிரகதீஷ். அதான், இன்றே படம் பார்க்கலாம் என கேட்கிறான்.

நந்தித்தா புன்னகையோடு பேச்சினை கேட்டுக் கொண்டால். பின் மேலே வந்தாள்.

பசுபதி உடைமாற்றி கட்டிலில் அமர்ந்திருந்தான்.. நந்தித்தா முதல் வேலையாக இரவு படம் பார்ப்பது பற்றிதான் கணவனிடம் கேட்டாள். பசுபதி “போகலாம்.. எல்லோரும் வந்திருக்காங்க..” என்றான்.

நந்தித்தா பிரகதீஷ்க்கு அலைபேசியில் அழைத்து டிக்கெட் புக் செய்ய சொன்னாள்.

பசுபதி மனையாள் எப்போதடா அழைப்பினை துண்டிப்பாள் என காத்திருந்தவன். அவள் அழைப்பினை துண்டித்த மறுநொடி.. கட்டிலில் சாய்ந்தவாறே இருகரமும் விரித்து மனையாளை அழைத்தான்.

நந்தித்தாவிற்கு மறுக்க தோன்றவில்லை.. கணவனின் கைகளில் சரன்புகுந்தாள். இருவருக்கும் பேச்சே வரவில்லை.. மனதில் நிறைய நினைவுகள்.. அதை உடைத்த நொடிகள் என பல நிகழ்வுகள்.. அமைதியாக ஒருவரோடு ஒருவர் ஒன்றிக் கொண்டனர், அதனை அசைபோட்டுக் கொண்டு.

நல்ல உறக்கம் போல மாலையில் அமுதா அழைக்கும் வரை எழவில்லை தம்பதி.

அதை தொடர்ந்து மாலை நேரம் இனிமையாக சென்றது.. இரவு உண்டு முடித்து தியேட்டர் கிளம்பினர் எல்லோருமாக. பசுபதி, எல்லோருக்கும் பாப்கான் வாங்கினான். இருவரும் தனித்தனியே தங்கள் சொந்தங்களோடு அமர்ந்து படம் பார்த்தனர். பேசும் சிரிப்புமாக வீடு வந்தனர் நடு இரவில்.

மீண்டும் சற்று நேரம் அரட்டை அடித்து விடியும் நேரத்தில்தான் உறங்கே சென்றனர்.

காலையில் பசுபதி சற்றுநேரம் அலுவலகம் சென்று வருகிறேன் என கிளம்பிவிட்டான் நேரமாக. 

மதியமாக வீடு வந்தான் பசுபதி.

மாலையில் உறவுகள் எல்லாம் கிளம்பினர். 

வீட்டு நபர்கள் மட்டும்தான். எதோ கொறிக்க கொண்டு வந்து கொடுத்துவிட்டு நந்தித்தா அமர்ந்தாள்.

பசுபதி சிட்அவுட் விட்டு உள்ளே வந்தான்.. நந்தித்தா “வேலை இருக்காங்க..” என்றாள்.

பசுபதி இல்லை என தலையசைத்துவிட்டு நிற்க.. மனையாள் “உட்காருங்க” என இடம் காட்டினாள்.

அமர்ந்தான்.. மெதுவாக நந்தித்தா தன் மாமனாரிடம் “மாமா, இந்த ஜூன் மாதத்தோடு எனது வேலை முடிந்துவிடும்..” என தொடங்கி பேச தொடங்கினாள்.

அப்படியே எப்போது இங்கே வருவது.. நந்தித்தா மீண்டும் வேலைக்கு செல்வது.. பிரகதீஷ் ஷோவ்ரூம் போவது.. என பேச்சுகள் தொடர்ந்தது. இலகுவாக பசுபதி கருத்துகள் சொன்னான்.. தந்தையோடு பேசியபடியே. தன்னுடைய முடிவாக.. ‘நந்து வேலைக்கு போகட்டும் ப்பா.. இல்ல, எதோ எக்ஸாம் எழுதணும்ன்னு சொன்னால் எது வேணுமோ அவள் இஷ்ட்டம் செய்யட்டும் ப்பா..’ என சொல்லிக் கொண்டிருந்தான்.

நந்தித்தா கொஞ்சம் அதிர்ந்துதான் பார்த்துக் கொண்டிருந்தாள். நிறைய மாற்றம் கணவனிடம்.. தன்னிடம் மட்டும் இல்லை அவனின் மாற்றம் என புரிந்தது. 

இப்போது கணவன், தம்பிக்கு எதோ சொல்லிக் கொண்டிருக்க.. இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் பெண்.. ‘நான்தான் என் கணவனை திருத்தி வழிக்கு கொண்டுவந்தேன்’ என்ற  ஆதிபுராணம் இல்லை இது. அதுவாக நிகழ்வது.. வாழ்க்கை நழுவும் வேளையில்.. இறுக்கி பிடிக்கும் ஒரு சராசரி மனிதன்தான் பசுபதி இப்போது. அதை உணரும் உறவுகள்தான் இவர்கள் எல்லோரும், மனையாள் உற்பட.

விடுமுறைகள் முடிந்தது வழக்கமான நாட்கள் தொடங்கியது. முடிந்தவரை நேரில் சந்தித்துக் கொண்டனர்.. கணவன் மனைவி இருவரும்.

பிரசன்னாவின் திருமணநாட்கள் நெருங்கியது. நந்தித்தாவின் பெற்றோர் கோவை வந்தனர். இருவீட்டாரும் துணி எடுக்க.. பத்திரிகை குறித்து பார்க்க.. என எல்லாம் எளிதாக நடக்க.. கோவை வந்தனர். அப்படியே நாட்கள் நகர்ந்தது.

நந்தித்தா நிறைய வேலையில் நேரம் செலவு செய்தாள். பசுபதி மனையாளை முடிந்தளவு வந்து பார்த்து சென்றான்.. அத்தோடு, தன் மாமனார் மாமியார் அங்கே இருப்பதால் இந்த இரு மாதங்களும் கொஞ்சம் தயங்கிக் கொண்டே கோவை வந்தான் மனையாளை பார்க்க.

பிரசன்னா வாரம் தோறும் தன் வருங்கால மனையாளை பார்க்க.. திருமண வேலைகள் என வந்தான் கோவைக்கு.

ஆக இரு ஜோடிகளும் சந்தோஷத்தில் இருந்தனர்.

!@!@!@!@!@!@!@!@!@!@!@!

நந்தித்தா கையில் மெகந்தி வைத்துக் கொண்டு.. கணவன் வரவிற்காக காத்திருந்தாள். மாலை மெல்ல மறைந்து இருள் சூழ்ந்துக் கொண்டிருந்தது.

நாளை மறுநாள் தன் அண்ணன் பிரசன்னாவின் திருமணம். 

சொந்தங்கள் கணக்கிடும் அளவிற்கு இருந்தனர் வீட்டில். ம்.. தன் அத்தை அமுதா வந்துவிட்டார் இரண்டுநாள் முன்னதாக, இங்கே. தன் கணவன் மாமனார் பிரகதீஷ் என எல்லோரும் இப்போது வந்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை எதிர்பார்த்துதான் அமர்ந்திருந்தாள்.

பிரசன்னா வெளியே சென்றிருந்தான்.

தந்தை பெரியவர்களோடு பேசிக் கொண்டிருந்தார்.

சின்ன பிள்ளைகளோடு சிட்டவுட்டில் அமர்ந்திருந்தாள் நந்து. மாலையில், இவளுக்கு வந்து மெகந்தி வைத்து சென்றனர்.. பார்லர் பெண்மணிகள்.. கைகால்களில் பாதி அளவில் மெகந்தி.. தன் வலது உள்ளங்கையில் பதிதேவ் என எழுதியிருக்கிறாள் பெண். நேரம் ஆக ஆக.. என்னமோ அதிலேயே கண்கள் நிலைக்க தொடங்கியது.

சின்ன பிள்ளைகளால் ஓரளவுக்கு மேல் பொறுமை காக்க முடியாமல்.. அழ தொடங்கி.. மெகந்தியை அழித்துவிட்டு.. விளையாடத் தொடங்கியாகிற்று.

நந்தித்தா கணவனுக்காக காத்திருந்தாள். அவளின் அன்னை வந்து “நந்து.. சாப்பிடுறீயா, நான் டிபன் எடுத்துட்டு வரவா.. காலையில் சீக்கிரம் எழுந்துக்கணும்.. உன் அத்தைதான் கேட்க்க சொன்னாங்க” என கேட்டார்.

மகள், மருமகனை எதிர்பார்த்திருகிறாள் என தெரியும்.. நேரம் எட்டுக்கு மேல்.. அமர்ந்துக் கொண்டே இருக்கிறாள்.. அவர்கள் வருவதற்கு இன்னும் ஒருமணி நேரத்திற்கு மேலாகும்.. அதனால், அன்னைகள் இருவரும் பேசி.. நந்தித்தாவை உறங்க சொல்லினர்.

நந்தித்தா தன் அன்னையை பார்த்தாள் பதில் சொல்லாமல். அத்தையும் சொல்லுகிறார்.. இல்லை கணவன் வரவேண்டும் என அமர்ந்திருப்பது ஒருமாதிரி இருக்க.. என்ன செய்வது என தெரியாமல் “சரி ம்மா.. நான் ஒருமணி நேரம் சென்று வந்து சாப்பிடுறேன்.. தூக்கம் வருது..” என சொல்லியவள் மேலே தனதறைக்கு வந்துவிட்டாள் நிற்காமல்.

அமுதாவும் அவளின் அன்னையும் சிரித்துக் கொண்டனர். சரி கணவன் வந்த பிறகே உண்ணட்டும் என விட்டுவிட்டனர்.

நந்தித்தா ஒரு சேரில் அமர்ந்துக் கொண்டாள். போன்.. பாட்டு.. டிவி.. என எந்த தொந்திரவும் இல்லாமல் வெறுமனே அமர்ந்திருந்தாள். அவன் நினைவுகள்தான் அவளை ஆக்கிரமித்திருந்தது.  அசதியில் உறக்கம் அவளை தழுவ.. அப்படியே சாய்ந்தவண்ணம் உறங்கி போனாள் பெண்.

பசுபதி மனையாளை காண ஆவலாகவே வந்தான். பிரக்தீஷ்தான் டிரைவ் செய்திருந்தான். அதனாலோ என்னமோ கொஞ்சம் ப்ரெஷ்ஷாக மனையாளை தேடியது அவனின் கண்கள்.

அவளை காணோம்.. ம்.. கீழே அன்னைகள் இருவரும் சிரித்துக் கொண்டே நந்து உண்ணாமல் மேலே வந்த கதையை சொல்லி.. ஹாட்பாக்ஸ் கொடுத்து அனுப்பினர் மேலே, அவனை.

ஒரு கையில் லாப்டாப் பாக்.. மற்றொரு கையில் ஹாட்பாக்ஸ் என வந்த நின்றான் மனையாள் முன், கணவன். மனையாள் நல்ல உறக்கத்தில் இருந்தாள். தொல தொலவென ஒரு டி-ஷர்ட் அதே போல ஒரு த்ரீ பௌர்த் பேன்ட்.. கைகால்களில் மருதாணியோடு.. தளர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள். என்னமோ முகம் வாடியிருப்பதாக தோன்றியது கணவனுக்கு.

பசுபதி, பூனை நடையில் தான் கொண்டு வந்தவைகளை கீழே வைத்துவிட்டு.. உடைமாற்றி வந்தான்.

மனையாள் கணவன் வந்த சத்தத்தில் எழுந்துக் கொண்டாள்.. “அஹ.. எப்போ வந்தீங்க” என்றாள் எழுந்து நின்று. 

கணவன் “ம்.. அதுகூட தெரியாமல் தூக்கம்.. ம்..” என அவளியன் கைகளை உற்று பார்க்க.. அதை உணர்ந்து இரு கைகளையும் அவன்முன் நீட்டினாள் பெண்.. இப்படி சிறுபிள்ளை போல நிற்பதில் இருவருக்கும் சின்ன வெட்கம்.. ஆனால், அவளையறியாமல் செய்துவிட்டாள் பெண்.

கணவன் “நல்லாயிருக்கு” என்றான்.. தன்னவளை நிரம்ப ரசித்து.

மனையாள் “உங்க பெயர் எழுதியிருக்கேன்.. தெரியுதா” என்றாள்.. புதுப்பெண் வெட்க்கமாக கேட்டாள்.

கணவன் இரு கைகளையும் பட்டும் படாமல் பிடித்து பார்க்க.. மனையாள் “எல்லாம் காய்ந்துவிட்டது” என்றாள். கணவன் “ஓ..” என சொல்லி அவளின் முழங்கையிலிருந்து தனது விரல்களால் வருடிக் கொண்டே வந்து அவனின் பெயரை கண்டுபிடித்து, குனிந்து உள்ளங்கையில் முத்தமிட்டான்.

மனையாள் கன்னம் சிவந்து ரசித்து நிற்க.. கணவன் “எனக்கும் திரும்ப கல்யாணம் செய்துக்கணும் போலிருக்கு” என்றான் அவளின் கன்னத்தை வருடிவிட்டு. 

இருவருக்கும் தங்களின் திருமணநாள் நினைவு வந்தது.. இந்த நிறைந்த சந்தோஷம் அப்போது இல்லை என நினைவு வந்தது.. கடந்தவைகளை மாற்றமுடியாதே.. என அமைதியாக நின்றனர் கைபார்த்துக்  கொண்டு.

பசுபதி இயல்பாகி “வா சாப்பிடலாம் பசிக்குது” என்றவன் உணவுகளை எடுத்து வைக்க தொடங்கினான்.

மனையாள் கணவனுக்கு பசி எனவும் வேகமாக எழுந்தவள் “நீங்க சாப்பிடுங்க” என சொல்லிக் கொண்டே மருதாணியை கழுவ சென்றாள்.

கணவன் “எங்க போற” என்றான்.

“இதோ.. கையெல்லாம் கழுவிட்டு வரேன்.. நீங்க சாப்பிடுங்க” என்றாள்.

கணவன் “ஹே நந்து.. எதுக்கு, வா.. நான் ஊட்டி விடலாம்ன்னு வந்தேன்.. வா வா.. நீ எனக்காக வெயிட் பண்றேன்னு அம்மா அத்தை சொன்னாங்க.. நீ என்னடான்னா” என சொல்லிக் கொண்டே பிளேட்டோடு அருகில் வந்து அவளுக்கு சப்பாத்தி ஒரு வாய் ஊட்டினான். 

மனையாள் ‘சொல்லிட்டாங்களா’ என வந்து அமர்ந்துக் கொண்டாள். கணவன் உணவில் கவனமாக இருந்தான்.

இருவரும் இந்த வாரம் நடந்ததை பேசிக் கொண்டே உண்ணத் தொடங்கினர்.