தலைகீழ் நேசம்!

28

வாரம் தப்பாமல் பசுபதி மனையாளை பார்க்க வந்தான். மாதங்கள் கடந்தது.. இருவருக்குள்ளும் ஒரு நிதானமான நேசம் நிலை பெற தொடங்கியது. கணவன் மனைவி இருவரும் இந்த நாட்களில் நிறைய பேசினார்.. மற்றவரின் விருப்பு வெறுப்புகளை.. மெதுவாக கண்டுக் கொள்ள தொடங்கினர்.. வார விடுமுறை நாட்களில் பார்த்துக் கொண்டாலும்.. அதிகம் பேசிக் கொண்டாலும்.. உணர்தல் ஒரு நிறைவு. அப்படி  நிறைய உணர்ந்துக் கொள்ள முடிந்தது ஒருவரையொருவர். இது  அவளின் வாசம்.. இந்த பார்வை.. செய்கை.. அவனின் நேசம் என இருவருக்கும் மெல்ல மெல்ல புரிய தொடங்கியது. தங்களின் நேசங்களை தக்க வைத்துக் கொள்ளும் நிதானமும் வந்தது.

இந்த உறவிற்கு அழகு சேர்க்கவே விடுமுறைகள். பொங்கள் என தொடர் விடுமுறை.  பசுபதி மனையாளை சென்னை அழைத்து செல்ல வந்து சேர்ந்தான் கோவைக்கு.

பெரியவர்களும்.. நந்தித்தா அங்கு செல்வதை (or) வருவதை  விரும்பினர்.

பசுபதி காரெடுத்துக் கொண்டு.. தானே டிரைவ் செய்துக் கொண்டு வந்தான், கோவைக்கு. மனையாளோடு திரும்ப வர வேண்டும்.. அதுவும் முன்போல அவள் விருப்பும் விதமாக இருவரும் சென்னையில் இருக்க வேண்டும் என கனவுகளோடு வந்தான் கணவன்.

மனையாள் கல்லூரி சென்றிருந்தாள். வேலை செய்பவர் உணவுகளை எடுத்து வைத்திருக்க.. மனையாளுக்கு ஒரு வாய்ஸ் நோட் செய்துவிட்டு உணவு உண்டான், பசுபதி.

உற்சாகமாக இருந்ததாலோ என்னமோ அசதி தெரியவில்லை அவனுக்கு.. சற்று நேரம் டிவி நியூஸ் பார்த்துக் கொண்டிருந்தான். அதை தொடர்ந்து அழைப்புகள் வர.. பேசிக் கொண்டிருந்தான் நேரம் கடந்தது.. மனையாளை விழிகள் தேட தொடங்கியது. அவனையே திட்டிக் கொண்டான் ‘ரொம்ப அலையுற டா..’ என எழுந்துக் கொண்டவன்.. வாசல் நோக்கிய தவமிருக்கும் தன் மனதை மிரட்டி.. மேலே அழைத்து சென்றான். மனையாள் தன்னை தேடி வருகிறாளா என எண்ணிக் கொண்டு.

லாப்டாப்பில் அமர்ந்திருந்தவன் முன் வந்து நின்றாள் மனையாள். பசுபதி மனையாளின் வரவு உணர்ந்து நிமிர்ந்தான்.. “வந்துட்டியா.. வா” என சொல்லி கைநீட்டினான்.

நந்தித்தா கணவன் கை பற்றிக் கொண்டு.. கட்டிலில் அமர்ந்தாள் “சாப்பீட்டிங்களா.. தூங்கலையா” என்றாள், பாந்தமான காட்டன் சரீ.. தூக்கி கிளிப் செய்யப்பட்ட தலைமுடி.. சின்ன பொட்டு.. உச்சி வகிட்டின்  தொடக்கத்தில்.. அவன் பெயர் சொல்லும் செந்தூரம்.

பசுபதி மனையாளை பார்த்துக் கொண்டே தலையை மட்டும் இல்லை என அசைத்தான். தன்னவளை வாரம் தவறாமல் பார்த்தாலும்.. சில நிமிடங்கள் இப்படி ஸ்தம்பித்து விடுவான்.. அதேதான் இன்றும்.

மனையாள் “போதும் பார்த்தது..” என்றாள்.

பசுபதி ஒன்றும்  சொல்லவில்லை “என்ன நெற்றியில் எதோ சிவந்து இருக்கு.. பிம்பிள் மாதிரி இருக்கு.. என்ன ஆச்சு” என்றான் ஆராய்ச்சியாய்.

மனையாள் தன் விரலால் அதை தடவி “ஹீட்’டாக இருக்கும்” என்றாள் ஒரு அசால்ட்டான புன்னகையோடு.

கணவன் “இளநீர் குடிக்கனும்..” என்றான்.

மனையாள் புன்னகைத்தாள்.. கணவனை பார்த்துதான் பேசினாள் ஆனால் அவனை இப்படி உற்று கவனிக்கவில்லை போல பெண்.

கணவன் அதை உணர்ந்தவன் போல.. “என்னை நீ கவனிக்கவேயில்ல” என்றான் குறைபடும் குரலில்.

மனையாள் கண்கள் லேசாக விரிந்தது.. புருவம் மேலேற “என்ன கவனிக்கலை..” என்றாள்.

கணவன் அமைதியான குரலில் “நீ முன்போல இல்ல.. எனக்கான அக்கறை முன்பு உன்னிடம் இருக்கும், இப்போவெல்லாம் எதோ பயம் உன்கிட்ட இருக்கு போல.. நீ நல்லா பேசுற.. என்கூடவே இருக்க.. ஆனால், அந்த நந்து மிஸ்ஸிங்.. என்னை கவனிக்கிறதில்ல ” என்றான்.

மனையாள் தலை குனிந்துக் கொண்டாள்.. எதோ தடுக்கிறது அவளை.. அது ஒருவகை பயம். அந்த பயம் வேண்டுமா வேண்டாமா என அவளுக்குள்ளேயே போராட்டம்தான். அதற்காக கணவனை தள்ளி வைக்கவும் முடியாது. ஆனால், முன்போல.. சட்டென எல்லாவற்றையும் ஏற்க முடியவில்லை.. ஒரு சின்ன ஒதுக்கம்.. பயம்.. இருக்கவே செய்கிறது அவளுக்குள். சட்டென ஏதும் நடந்திடாதே.

மனையாளின் அமைதி கணவனிடம் ஒரு புன்னகையை கொடுத்தது, அவனே தொடர்ந்தான்  “ஒரு சின்ன பயம் என்மேல.. எங்க முன்போல மாறிடுவானோன்னு.. ம்” என்றான் ஒருமாதிரி குரலில்.

மனையாள் இன்னமும் நிமிரவில்லை.

கணவன் “சரி.. விடு.. எனக்கு புரியுது.. சரியாகிடும்” என்றான்.

மனையாள் கணவனின் கைகளை இறுக்கி பிடித்துக் கொண்டாள்.. “அப்படி ஏதுமில்ல.. சின்னதாக ஒரு பயம்.. ஒரு தயக்கம் அவ்வளவுதான். இது நீங்க சொல்லுவீங்களே.. டிராமா அப்படின்னு.. அது.. அப்படிதான் முன்னாடி நான் இருந்திட்டனோ.. உங்கள் மனதை புரிந்துக் கொள்ளாமல்.. எல்லாம் சரியாக நேரம் கொடுக்காமல் உங்களை நெருக்கடியில்.. என்னோடு வாழ வைச்சிட்டனோன்னு..” என பேச பேச..

கணவன் “ஹேய் நந்து” என அவளை தனக்குள் இழுத்து சமாதானம் செய்ய நினைத்து.. மனையாளை இழுக்க.. மனையாள் புன்னகையோடு “இருங்க.. அதனால் தயக்கமாக இருக்கு.. பயமா இருக்கு.. மத்தபடி உங்கள் மேல்.. எந்த சந்தேகமும்.. கேள்வியும் இல்ல.. நம்மால் முன்பைவிட சிறப்பாக வாழ முடியுமா என ஒரு பயம் இருக்கே தவிர.. உங்கள் மேல் ஏதுமில்லை” என சொல்லி எழுந்து கணவனின் நெற்றி வருடி முத்தமிட்டாள்.

கணவன் இடையோடு அவளை வளைத்து.. தன்னவளை மடியமர்த்திக் கொண்டு “ம்.. யோசி, முன்னாடி நீ மட்டுமே நம்ம வாழ்க்கை நல்லா இருக்கனும்ன்னு ஒரு முயற்சி எடுத்த.. இப்போ நாம ரெண்டுபேரும் எடுக்கிறோம்.. அதனால், சீக்கிரம் எல்லாம் சரியாகிடும்.. ம்..” என்றான் மனையாளின் நெற்றியில் முத்தமிட்டு.

இருவருக்குள்ளும் அமைதி. அப்படியே இருவரும் அமர்ந்திருந்தனர்.

இருவரும் பின்மாலை பொழுதில் வெளியே சென்றனர்.. சேர்ந்தே சுற்றினர்.. கொஞ்சம் உடைகள் எடுத்துக் கொண்டாள் மனையாள்.. ஏனோ அதில் ஆசை இருப்பது போல தெரியவில்லை.. எடுக்க வேண்டும் என உடைகள் எடுத்துக் கொண்டாள். சென்னை வீட்டில் எல்லோருக்கும் உடை வாங்கினாள் பெண். கணவனுக்கும் எடுத்தாள். ஆனால், தனக்கு என ஏதும் பெரிதாக எடுக்கவில்லை.. ஒரு புடவையோடு நிறுத்திக் கொண்டாள்.

பசுபதிக்கு, முதல்முறை இதெல்லாம் கண்ணில் பட்டது.. அவள் முன்பு உடுத்தும் உடைகள் பற்றி நினைவு வந்தது இப்போது.. பெரிதாக அதுவேண்டும் இது வேண்டும் என ஏதும் கேட்கவில்லை மனையாள்.. முன்பெல்லாம் தான் அவளுக்கு வாங்கி கொடுக்கவில்லைதான், ஆனால், நிறைய புது உடைகளை அணிமணிகள் என நிறைய இருக்கும். இப்போது வேலைக்கு செல்லுகிறாள்.. ஆனால் ‘ஏனோ.. புதிது புதிதானது ஏதும் காணோமே’ என எண்ணிக் கொண்டான்.

இப்போது தானாக.. டசன் சல்வார்.. குர்த்தி என எடுத்தான். அவள் வேண்டாம் என மறுத்தாலும் கேட்கவில்லை.. “இது என்னோட டெர்ன்.. நீ அமைதியா இரு..” என தனக்கு பிடித்ததெல்லாம் எடுத்தான்.

மனையாள் வேண்டாம் என்றாலும்.. கண்ணில் ரசனையோடு அவன் பின்னால் சென்று.. கணவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். பேசவில்லை.. தடுக்கவில்லை.

“பிடிக்குதே..

திரும்ப திரும்ப உன்னை..

பிடிக்குதே..

எதற்கு உன்னை பிடித்ததென்று

தெரியவில்லையே..

தெரிந்துக் கொள்ள துணிந்த உள்ளம்..

தொலைந்ததுண்மையே..

பிடிக்குதே..”

இரவு உண்டு வீடு வந்தனர்.

மறுநாள்,

நந்தித்தா காலையிலிருந்து தன் அன்னையிடம் பேனில் பேசுவது.. அத்தையிடம் போனில் பேசுவது என பிசிதான். என்னமோ தடுமாற்றம் அவளிடம்.. அவர்கள் பேச பேச “ம்..” கொட்டி எல்லாம் கேட்டுக் கொண்டு இருந்தாள். சரியாக உண்ணவில்லை.

கணவன் கவனித்து “என்ன நந்து” என்க.

மனையாள் “என்னமோ டென்ஷன்.. நம்ம வீடுதான்.. ஆனாலும், எதோ ஒரு பயம். ஒண்ணுமில்ல” என்றாள் அவளாகவே எல்லாம் பேசி.

பசுபதி “அடி ஏய்.. இப்படி எல்லாம் எப்போதிலிருந்து யோசிக்க ஆரம்பித்த.. போதும்.. என்கூட வர.. நம்ம வீட்டுக்கு.. உன் மாமனார் அப்படியே உருகிக் கொண்டு இருக்கிறார்.. நீ வர.. இது இப்படி வை.. இதை வாங்கு.. என. உன் அத்தை அதற்கு மேல்.. எந்த டென்ஷனும் அவளுக்கு கூடாது.. ஏதும் கேட்க்க கூடாதுன்னு இருக்காங்க.. பிரகதீஷ் நம்ம கூட சேர்ந்து  ottல படம் பார்க்கணும் சீக்கரம் வான்னு ஆர்டர். நீ என்னமோ எங்கோ போற மாதிரி பயப்படுற” என்றான் நீண்ட விளக்கத்தோடு அதட்டலாக.

மனையாள் கணவன் சொன்னதை மனதில் நிறைத்துக் கொண்டு “ம்.. சரிங்க, போலாம்” என கிளம்பினாள்.

நீண்டநாள் சென்று பசுபதி காரெடுக்கிறான் மனையாளோடு. இருவருக்கும் தங்களின் முதல் பயணம்தான் நினைவில் வந்தது. படபடவென உடனே தன் வாழ்வை சரி செய்துக் கொள்ள வேண்டும் என்ற நந்தித்தா இன்று இல்லை. இன்று அமைதியில் அமர்ந்திருந்தாள்.. அன்றைய நினைவின் தாக்கத்தில்.

பசுபதி காலையில் கிளம்பியது முதல் மனையாளிடம் பேசிக் கொண்டே இருந்தான்.. என்னென்னமோ உணர்வுகள்.. எல்லாம் சரியாகிடுச்சி.. என்ற நிலையும்.. அவளை எப்படியேனும் முன்போல.. தன் மேல் பித்தாக்கிட வேண்டும்.. என்ற படபடப்பும் சேர்ந்துக் கொள்ள.. ஹைபர் மூடில் இருந்தான் பசுபதி.

மனையாள் அடிக்கடி அமைதியாவதை பார்த்து, சற்று பொறுமையாகவே வண்டியை செலுத்தினான். அவன் பேச்சும் அவள் அமைதியில் கொஞ்சம் நின்று போனது. கணவனுக்கு அவளின் நிலை புரிகிறது ஆனாலும் என்ன இப்போ அவள் இருந்த வீடுதானே.. எதற்கு இத்தனை தயக்கம் பயம் என யோசனை. ஆனாலும் வெடுக்கென ஏதும் பேசாமல் மனையாளின் மனதை இலகுவாக்க வழிகளை யோசித்துக் கொண்டே வந்தான்.

 வண்டியில் இதமான ஒலியில் பாடல் தவழ்ந்துக் கொண்டிருந்தது..

நந்தித்தா கணவன் பேசாததால் பக்கவாட்டில் திரும்பி கணவனை பார்த்தாள்.

பசுபதி வண்டியை செலுத்திக் கொண்டே மனையாளின் பார்வையை எதிர்கொண்டான்.. லேசாக புருவம் உயர்த்தினான்.. மனையாள் “ம்ஹூம்..” என சொல்லி நேராக பார்த்து அமர்ந்துக் கொண்டாள்.

அவளின் இந்த மௌனம் அவனுக்கு இப்போதும் உறுத்தியது. முன்பு இவள் இப்படி அமைதியாக இருந்ததில்லையே என பலநேரங்கள் தோன்றியதுண்டு.. அந்த அமைதி கொஞ்சம் நெருடும். பழைய நந்துவை.. அந்த துடுக்குத்தனமான நந்துவை தொலைத்துவிட்டேனோ.. என தோன்றியதுண்டு.. ஆனால், அதை மனையாளிடம் சொல்லவோ.. கேட்க்கவோ பயம் கணவனுக்கு, அவளை முன்போல.. கலகலப்பாக முடியவில்லை அவனால்.. அந்தவகையில் அவன் கொஞ்சம் தோற்றுவிட்டேன்.. என எண்ணிக் கொண்டான், இப்போதும்.

இப்போதும் அவளின் அமைதி அவனை எதோ செய்ய.. அடுத்த பத்து நிமிடம்.. பாட்டு சத்தம் மட்டும்தான்.

பசுபதிதான் “நந்து.. போதும் யோசிச்சது” என்றான்.

நந்தித்தா புன்னகையோடு நிமிர்ந்தாள்..

கணவன் “என்னோ நீ மிஸ் ஆகுற.. போதும்..” என்றான்.

மனையாள் பேசவில்லை.

கணவன் “ரொம்ப யோசிக்கிற..” என்றான்.

நந்தித்தா “என்னங்க.. நான் எதையும் யோசிக்கலையே” என்றாள்.

கணவன் “ம்.. முன்னாடி எதோ பேசிட்டே வருவ.. உன்னை என்னால் ஈசிய புரிந்துக் கொள்ள முடிந்தது. இப்போ, உன்னையே பார்த்துகிட்டு இருக்கேன்.. ஆனாலும் புரியலை. நீ முன்போல இல்லை” என்றான்.

மனையாள் “அப்படி எல்லாம் ஒண்ணுமில்ல.. நீங்க அவ்வளவு யோசிக்காதீங்க” என்றாள், கணவனை தேற்றும் விதமாக.

பசுபதி வண்டி ஒட்டிக் கொண்டே,  திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருந்தான்.. மனையாளை முறைத்தான்.

மனையாள் “என்னங்க” என்றாள்.

கணவன் என்ன நினைத்தானோ தன் இடகையினை அவள்புரம் நீட்டினான்.. மனையாள் முகம் சட்டென மாறியது.. புருவம் சுருக்கினாள்.. நேராக கணவன் முகத்தைத்தான் பார்த்தாள்.

கணவன் அவளின் தயக்கத்தினை பார்த்து.. அவளின் கையினை எடுத்து அந்த கீயர்ரில் வைத்துக் கொண்டான்.. அந்த கார் ஆட்டோமேட்டிக், ஆனாலும் இப்போது மோட் மாற்றிக் கொண்டு மனையாள் அன்று தன்னிடம் கேட்டத்தை செய்தான் காதலோடு இன்று.. கணவன்.

நந்தித்தாவிற்கு ஆச்சர்யம் ‘ஞாபகம் இருக்கா..’ என எண்ணிக் கொண்டு அமர்ந்திருந்தாள்.. கணவனை பார்க்க கொஞ்சம் வெட்கம்.. லேசான வெட்க புன்னகையோடு சாலையில் கவனம் வைத்தாள். இருவரும் பார்த்துக் கொள்ளவில்லை..

 கண்ணில் ஆச்சர்யம் கலந்த காதல்.. கணவனை இமைக்காமல் பார்த்தாள். கணவன், சாலையில் பாதி கவனம்.. மனையாளிடம் கவனம் என வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான்.

நந்தித்தா “போதும்.. நீங்க டென்ஷன் இல்லாமல் டிரைவ் பண்ணுங்க.. நான் ஓகேதான்..” என சொல்லி கை எடுத்துக் கொண்டாள்.

பசுபதி “நந்து..”  என சொல்லி அவளின் கையினை இழுத்து.. தன் கையில் பிடித்துக் கொண்டு “இப்படியே இரு.. நாம வீட்டுக்கே போக வேண்டாம்.. எங்காவது போய்டலாம்.. நீ டென்ஷன் ஆகாத.. ஏர்போர்ட் போலாம்.. எங்க டிக்கெட் இருக்கோ அந்த ஊருக்கு போய்டலாம்.. இல்லன்னா.. ரயில்வே ஸ்டேஷன் போலாம்.. எங்க டிக்கெட் இருக்கோ அங்க போய்டலாம்.. என்ன சொல்ற.. இல்ல, நம்ம கார்தான் இருக்கே.. ச்ச.. எப்படி யோசிக்கிறேன் பாரு.. இதிலேயே போய்டலாம்.. எங்க.. சித்தூர் போய் அப்படியே ஆந்த்ரா.. ஒகே வா.. சொல்லு நந்து..” என கண்ணடித்து காதலாக சவால்விடுவது போல கேட்டான்.

நந்தித்தா வாய்விட்டு சிரித்தாள்.. “அப்படியா தப்பிச்சு போய்டலாமா.. ம்.. சரி போலாம்.. எங்க கூட்டிட்டு போவீங்க.. போலாம்..” என்றாள், திமிராக பார்த்து.

பசுபதி “ஓ.. கூட்டிட்டு போக மாட்டேனா..  எங்க இருக்கோம் இப்போ..” என பார்க்க” சேலம் என தூரம் போட்டிருந்தது.. கணவன் “சொல்லு, சேலம் கிட்ட இருக்கோம்.. எங்க போலாம் ஏற்காடு போலாமா..” என்றான்.

நந்தித்தாவிற்கு விளையாட்டாக இருந்தது.. புனகைத்தாள்.

என்னமோ அந்த புன்னகை அவனை உசிப்பிவிட்டது போல.. “எதுக்கு சிரிக்கிற” என்றான் அதட்டலாக.

பெண் சுதாரித்து “இல்ல, சும்மா சொன்னேன்.. நாம சென்னைதான் போறோம்.. எல்லோரும் வெயிட் பண்ணுவாங்க..” என்றாள், சமாதனமான குரலில்.

கணவன் விடவில்லை.. ஏதும் பேசவில்லை.

நந்தித்தா இயல்பானாள்.. கணவனிடம் எதோ பேசிக் கொண்டே வந்தாள்.. தன் கல்லூரி கதைகளை.

வண்டி ஏற்காடு சென்றது.

மனையாள் சற்று ஊர் பக்கம் வந்ததும் தான் கவனித்தாள்.. “அய்யோ.. என்ன இது..” என்றாள்.

இப்போதும் புருவம் உயர்த்தி புன்னகைத்தான் கணவன்.

மனையாள் வாயில் கைவைத்துக் கொண்டு அந்த மலைப்பாதையை பார்த்து விழி விரிக்க.. கணவன் அதை நிரம்ப ரசித்தான்.

பசுபதி காரினை நிறுத்தினான் வீவ்பாயிண்ட் பக்கம். நந்தித்தா காரிலிருந்து இறங்கி “அய்யோ, நான் எதோ விளையாட்டுக்கு பேசினேன். ஆனாலும் தேங்க்ஸ். நம்ம வீட்டுக்கு போய்டலாம்.. ம்” என சமாதானமான குரலில்  சொல்லி கணவனின் கைபற்றிக் கொண்டாள்.

பனி இன்னும் முழுதாக விலகாத ஜனவரி மாதம்.. காதலும் விலகமாட்டேன் என்ற காலம் போல இவர்களுக்குள்.. கணவன் அவளை தோளோடு சேர்த்துக் கொண்டு “அஹ.. அதெப்படி, அதெல்லாம் முடியாது.. என் நந்து எதையோ நினைச்சிருக்கா.. அதை முதல்முதலில் இப்போதான் கண்டு பிடிச்சிருக்கேன்.. அதை செய்யலைன்னா எப்படி.. இன்னிக்கு ஸ்டே இங்கதான்.. அம்மாகிட்ட சொல்லிக்கலாம்..” என சொல்லி.. அவளின் அணைப்பில் ஒரு அழுத்தம் கொடுத்தான்.

நந்தித்தாவிற்கு இந்த நேசமும்.. இந்த அணைப்பும்.. வேண்டுமாக இருந்தது.. மறுத்து பேசவில்லை.. என்னை அவன் உணர்வான்.. அதில் அவனின் காதலையும் உணர்த்துவான் என கனவில் கூட கண்டதில்லை பெண்.. என்னமோ இந்த நொடிகளை அப்படியே நிறுத்திவிட வேண்டும் என எண்ணிக் கொண்டு தன்னவனோடு உரசி நின்றுக் கொண்டாள். கண்களில் லேசாக நீர் கோர்த்துக் கொண்டது.

கணவன் எதோ கைகாட்டி சொல்லிக் கொண்டிருந்தான். மனையாள் அவனின் அன்பு ஆளுகைக்குள் அசையாமல் நின்றாள்.

“காலமென்னும் தேரே ஆடிடாமல் நில்லு..

இக்கணத்தை போலே

இன்பம் ஏது சொல்லு..

காண்பவை யாவும் சொர்க்கமேதான்..”