தலைகீழ் நேசம்!

27

அடுத்தடுத்த நாட்களும் இனிமையாகவே கடந்தது. பசுபதி கைகளுக்கு அதிக அழுத்தம் கொடுக்க கூடாது.. டிரைவ் இப்போது செய்ய வேண்டாம்.. என சிலபல அறிவுரைகள் மட்டுமே கொடுத்தனர், மருத்துவர்கள்.

பசுபதி பத்து நாட்களுக்காக முழுநேர வேலையை தொடங்கிவிட்டான். நிறைய அழைப்புகள்.. கோவையில் இருக்கும் கிளைன்ட்ஸ் ஆபீஸ் விஸ்ட்.. லாப்டாப் வேலைகள் என பசுபதிக்கும் நேரம் சரியாக இருந்தது.

கணவன் எப்போது வருவான் என சிலநேரம் நந்தித்தா காத்திருந்தாள். பசுபதி இரவு வருவதற்கு தாமதமானது.. வந்ததும் இருவரும் சேர்ந்து உணவு உண்டு உறங்கினார். இருவருக்கும் இதெல்லாம் தேவையாக  இருந்தது. பசுபதிக்கு, கை சரியாக தொடங்கிவிட்டது.. அதுவே இருவருக்கும் ஒரு பதட்டத்தை தந்தது.

பசுபதி நந்தித்தாவின் திருமணநாள் இன்று. ஊரிலிருந்து கெளவ்ரவ் அமுதா பிரகதீஷ் வந்திருந்தனர். இந்த திருமணநாள் அவர்களின் மூன்றாம்வருட தொடக்கம். அத்தோடு சேர்ந்து மீண்டும் புரிதலோடு தொடங்கும் முதல் திருமணவாழ்க்கை. ம்.. அப்படிதான் இருந்தது பசுபதி நந்தித்தா இருவருக்கும்.

குடும்பம் மொத்தமும் வர.. எல்லோருமாக மருதமலை கிளம்பினர். படபடப்பாக இருந்தது புது தம்பதிக்கு.. ‘எப்படி எங்களை நாங்கள் முன் கொண்டு செல்ல போகிறோம்.. இந்த புரிதல் போதுமா.. இப்போது மீண்டும் தொடங்குமா எங்களின் வாழ்க்கை..’ என நிறைய படபடப்போடுதான் கோவில் சென்றனர்.

முருகரை பார்த்ததும் சற்று அமைதியானது மனது. தம்பதி இருவருக்கும் ஒரே வேண்டுதல்.. எங்கள் வாழ்க்கை இனியாவது தடங்கலில்லாமல் இருக்க வேண்டும்.. சேர்ந்து வாழ வேண்டும்.. என வேண்டிக் கொண்டனர்.

வழிபாடு முடித்துக் கொண்டு வெளியே வந்தனர். அன்னை தந்தை முன்னே சென்றுவிட நந்தித்தாவின் கைபற்றிக் கொண்டான் கணவன். இருவரும் பார்வை பரிமாறிக் கொண்டனர்.. ஏதும் பேசிக் கொள்ளாமல் கார் வந்து சேர்ந்தனர். உணர்வுகளின் குவியல் இருவருக்கும்.. அதை வெளிபடுத்த கூடாது என அமைதியாகினர்.

காலை உணவு ஒரு உணவகத்தில் உண்டனர்.  பிரகதீஷ் படிப்பு முடித்துவிட்டான்.. அதனால், அலுவலகம் வா என தந்தை அவனை அழைத்துக் கொண்டிருந்தார்.. அப்படியே சின்ன சின்ன பேச்சுகள் நடந்தது. 

நந்தித்தா இயல்பாக மாமனாரிடம் இயல்பாக பேசினாள்.. “மாஸ்டர் டிகிரி பண்ணட்டும் மாமா.. இப்போ என்ன அவனுக்கு அவசரம்.. கொஞ்சம் படித்துவிட்டு வரட்டுமே” என சொல்லிக் கொண்டிருந்தாள். ஆளாளுக்கும் ஒவ்வொன்றும் பேசிக் கொண்டிருந்தனர்.

அமுதா மருமகளிடம்.. “எப்போது சென்னை வர போகிறாய்” என்றார்.

சட்டென அந்த டேபிள் அமைதியானது.

நந்தித்தாவிற்கு விடை தெரியவில்லை.. கடந்த ஒருவாரமாக.. அதாவது கணவன் சரியாகிக் கொண்டிருக்கிறான் என அவளும் உணர்ந்துக் கொண்டதிலிருந்து.. ஒரு பதட்டம்.. நாங்கள் திரும்பவும் பிரிய வேண்டுமே என பதட்டம் அவளுள் வந்துவிட்டிருந்தது. அத்தோடு, கணவனோடு இருக்க வேண்டும் என்றால்.. இந்த வேலையை விடவேண்டுமோ என ஒரு பதட்டம்.. இப்போது மாமியார் கேட்கவும் கொஞ்சம் மிரண்டாள் பெண். என்ன சொல்லுவது என தெரியவில்லை.

மாமனார் துணைக்கு வந்தார் “அமுதா விடும்மா, இதுக்கு முன்னாடி நாம் எப்படி இருந்தோமோ அப்படியே இரு இப்பவும். அவங்க பேசி முடிவு செய்துப்பாங்க” என்றார்.

அமுதாவிற்கு அது சரிதான் என்றாலும்.. இப்போதுதான் எல்லாம் சரியாகிவிட்டதே.. எதற்கு, இந்த வனவாசம் போல மருமகள் தனியே இருப்பது.. இனி சேர்ந்தே இருக்கலாமே.. மகனும் பாவம்தானே என எண்ணம், அதனால் கேட்டார். இருப்பதுதானே.. எல்லா அன்னைகளுக்கும். 

ஆனால், காலம் இப்போது மாறி இருக்கிறது. அவரவர்களின்  நாட்களாக அவர்களின் வாழ்க்கையாக நம்மை பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறது காலம். அதை பெரியவர்கள் சிலநேரம் ஒப்புக் கொண்டாலும்.. பலநேரம் அவர்களாலும் முடியவில்லை.. என் பிள்ளை.. என் குடும்பம்.. என பழக்கம் வந்துவிடுகிறது. அந்த சிலநேர இயலாமையால் வந்த கேள்விதான் மருமகளிடம் கேட்டார் அமுதா.

கணவன் இப்படி சொல்லவும் ஒரு பெருமூச்சோடு அமைதியானார்.. இன்னும் நாட்கள் எடுக்கும் போல இவர்கள் சேர்ந்து அங்கே வர.. என எண்ணிக் கொண்டு உண்ணத் தொடங்க.. பசுபதி “அம்மா, இந்த இயர் முடிந்ததும்.. நந்து அங்கே சென்னை வந்திடுவா.. அதுக்கு நான் கியாரண்டி. இந்த வேலை அவளுக்கு முக்கியம் தானே.. நான் அதுவரை வந்து பார்த்திட்டு போய்கிறேன்.. நான்.. நாங்க மேனேஜ் செய்துக்கிறோம். நீ டென்ஷன் இல்லாமல் இரு..” என மனையாளை பார்வையால் பார்த்து தன் திட்டங்களை சொல்லி சம்மதம் வாங்கிக் கொண்டு.. அன்னைக்கு சமாதானம் சொன்னான், பசுபதி.

நந்தித்தாவிற்கு, இந்த திட்டம் புதிதாக இருந்தது. ‘சொல்லவேயில்ல’ என தோன்றினாலும்.. ‘சரியாகத்தானே இருக்கு’ என எண்ணமும் எழுந்தது. அந்த பார்வையோடு கணவனை ஏறிட்டாள் பெண்.. அவளை சமாதானமாக பார்த்துவிட்டு.. புருவம் உயர்த்தி.. லேசாக மூக்கினை சுருக்கி சத்தம் வராமல் உதடுகளால் ‘ஓகே’ என கேட்டான், கணவன்.

மனையாள் ‘சரிதான்’ என்றிருந்தாள் இந்த நேரம் வரை.. ஆனால், கணவனின் செய்கையில்.. பெண்ணவள் இமைக்க மறந்தாள்.. கனவில் கூட கண்டிறாத கணவனின் செய்கை.. இந்த நேரம் உண்மையாக இருந்தது அவளின் மனதிற்கு. ‘என்னை கேட்க்காமல் முடிவெடுத்தான் தான்.. ஆனால், எனக்கு சாதகமாகத்தான் இருக்கிறது.. என்மேல் இருக்கும் அக்கறையும் தெரிகிறது’ என உணர்ந்தவள் கனிந்த முகத்தோடு கணவனுக்கு பதில் சொல்லாமல் உண்பதில் கவனமானாள். 

ஆனால், அவளின் பார்வை அவளை அறியாமலேயே எதிரில் அமர்ந்திருந்த கணவனையே மொய்த்தது.. இத்தனைநாள் கூடவே இருந்ததில் கணவன் அடிக்கடி தன்னை பார்ப்பது உணர்ந்திருக்கிறாள்.. ஆனால், அதிகம் நெருங்கி இம்சை செய்யவில்லை.. இந்த ஷணம்.. தள்ளி இருந்தாலும் இம்சிக்கிறாரோ என ஒரு ஆராய்ச்சி அவளுள்.. தன்னவனை பற்றி.

‘ம்.. முன்போல பாராமுகமில்லை..’ என என்னும் போதே.. கணவன் தன்னை பார்ப்பதை உணர்ந்து தலையை குனிந்து கொண்டாள்  பருவப்பெண் போல. 

மீண்டும் நொடிகளில் நிமிர்ந்தவள்.. தன்னவனை ஆசை தீர ரசித்தாள்.. முறுக்கிய மீசை.. இறுகிய வழுவழு தாடை.. கனிவான காதலான கண்கள்.. நொடிக்கு ஒருதரம் தன்னை பார்ப்பது.. என எல்லாம் ஈர்க்க.. தொலைய தொடங்கினாள், அவனிடம்.

பசுபதி, மனையாளை கண்டுக் கொண்டான். தன்னை பார்ப்பதை உணர்ந்தவன்.. தன்னவள் தன்னை ரசிக்க வேண்டி.. அவளை கீழ் கண்களால் பார்த்துக் கொண்டு.. நிமிர்ந்து பார்த்து சங்கடம் தராமல்.. அவளை ரசித்தான். அஹ.. இருவருக்கும் ஒரே நிலை.

இந்த புரிதலும் நேசத்தின் கவிதைதான். கொஞ்சம் தாமதமாகத்தான் இருவரும் உணர்ந்தனர்.. என்ன செய்ய.. எல்லோருக்கும் ஒன்றுபோல இல்லை காலம்.

அமுதா “ம்.. பிரசன்னா கலயாணம் முடிந்துதான் வருவீங்க போல..” என்றார். அவர் பேசிக் கொண்டுதான் இருந்தார், மங்கையவள் காதில் இப்போதுதான் அது கேட்க்க.. நந்து சுதாரித்து அமர்ந்தாள்.

பசுபதி “ஆமாம் ம்மா, கொஞ்சம் என்ஜாய் பண்ணிட்டு வரோம்” என சொல்லி கண்ணடித்தான், மனையாளை பார்த்தான் ரகசியமாக.

அமுதா “அங்கே என்ன குறைச்சல்” என தொடங்க.. கணவன் முறைப்பில் அடங்கினார், மாமியார்.

இரவில் கணவனும் மனைவியும் தனிமையில் இருக்கும் போது ஒரு குறுகுறுப்போடு.. தங்கள் துணையை ஏறிட்டுக் கொண்டனர். என்ன என்னமோ ஆசைகள்.. அதனாலோ என்னமோ தயக்கங்களும் நிறைய இருந்தது. பேசிபேசி.. ‘இது தவறு..’ என இருவரும் உறுதிபடுத்திக் கொண்டு.. இனி அப்படி இருக்க கூடாது.. என்ற உறுதிமொழியை எடுத்துக் கொண்டு.. அடுத்த கட்ட வாழ்க்கையை வாழ துவங்க வேண்டும் என எண்ணவில்லை இவர்கள்.. ‘என்ன செய்ய, நடந்துவிட்டது’ என்ற பார்வைதான் பசுபதிக்கு. அதை மனையாளுக்கு பேச்சினால் புரியவைக்கவில்லை, கணவன். பெண்ணவளுக்கு அத்தனை எதிர்பார்ப்புகள் கோவங்கள் இருந்தாலும்.. எதையும் சொல்லி காட்டி காயப்படுத்தவில்லை.

அவனாக, அவளை தேடி வந்தான்.. அப்போதும், ‘நீதான் முக்கியம் வந்துவிட்டேன் பார்’ என வசனமெல்லாம் இல்லை..  தன் தவறை ஒப்புக்கொண்டு.. தன்னவளை வேண்டி நின்றான் மன்னிப்பிற்காக. அது இன்னமும் கிடைத்ததா என தெரியவில்லை.. ஆனாலும், அவளை புரிந்துக் கொண்டு.. ரசித்துக் கொண்டிருக்கிறான். அதில் தான் மன்னிக்கபட்டுவிட்டேன் என எண்ணிக் கொண்டான். வார்த்தைகள் எல்லோருக்கும் தேவையில்லை.. ஒரு பார்வையில்.. ஒரு தொடுதலில்.. சிலநேர  கோவத்தில்.. சிலநேர விலகலில்.. கூட நேசங்கள் கண்டுகொள்ளபடும்.. பரிசீலிக்கப்படும்.. ஏற்கப்படும்.

இப்போது அந்த ரசனைகளையும்.. முந்தைய விந்தைகளையும் மீண்டும் நிகழ்த்தும் ஆர்வம் அவனுள்.. ஆனால், மனையாள் காலையிலிருந்து தன் அருகிலேயே வரவில்லை. இப்போதெல்லாம் அவளின் அருகாமை உறங்கும் போது மட்டும்தான், அதிலும் ‘கையில் இடித்துவிட போகிறேன்’ என கீழே உறங்குவதுதான். ஒரே அறை என்ற அருகாமைதான் இருவருக்கும்.