நந்தித்தா “எப்படி விடுவது.. இவருக்கு(பசுபதி) எல்லாம் போன் பண்றான்.. எனக்கு ஒருதரம் பேச முடியலை அவனால். என் அப்பா, எப்போ மாப்பிள்ளை பார்க்கன்னு நிக்கறாரு. ஆனந்த் அசால்ட்டாக இருக்கான். என் போனுக்கு அழைத்து மூணு மாசம் ஆகுது. நான், இங்க வரும் போதுதான் பேசறேன் அவன்கிட்ட. அப்பகிட்ட எப்படி இன்னமும் தள்ளி போட சொல்றது. அவன் என்ன நினைக்கிறான்னு தெரியலை.” என்றாள்.. குரல் கரகரக்க.
பொம்மு “ஆனந்துக்கு ஏதாவது வேலை இருக்கும்.. அதான் நம்மகிட்ட பேசாமல் இருக்கான். எங்ககிட்டவும் ஒருவாரம் ஆச்சு பேசி, அதான் கந்தசாமிக்கு இப்படி ஆச்சு தெரியுமில்ல உனக்கு. இந்தமுறை பேசட்டும்.. தாத்தாவும் நானும் பேசி.. உனக்கும் அவனுக்கும் நிச்சயத்திற்கு நாள் குறிச்சிடுறோம். முகத்தை தூக்காத பாப்பா” என்றார்.
நந்தித்தா “எனக்கு நம்பிக்கையில்லை. அவன் மாறிட்டான் பொம்மு” என்றாள்.. கரகரப்பான குரலில்.
பொம்மு சட்டினியை அரைத்து முடித்தவர் “பாப்பா, இப்படி எல்லாம் பேச கூடாது. பாரு, எங்க பையன்.. சீரோடு வந்து உங்க அப்பா முன்னாடி நின்னு.. இப்போ உன் பெண்ணை கொடுன்னு கேட்க்க போறான். பாரு.. அப்போ இந்த பாப்பா என்னை கண்டுக்குமா பார்க்கிறேன்” என்றார் அவளை சந்தோஷப்படுத்தும் விதமாக.
கன்னியவள் கண்களில் கனவுகள் விரிந்தது.
பொம்மு உணவுகளை டேபிளில் வைத்தார். கந்தசாமி பசுபதியை அழைத்தார் உண்பதற்கு.
நந்தித்தா “தாத்தா நான் கிளம்புகிறேன், மாத்திரை எல்லாம் சாப்பிடுங்க” என்றவள் விடைபெற போக..
தாத்தா “நந்திம்மா.. வா சாப்பிட்டு போ.. வா..” என்றார்.
நந்தி “வேண்டாம்.. அப்பா தேடுவார்.” என்றாள்.
தாத்தா “வா டா.. அதெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டான் வேதா” என்றார்.
நந்தி லேசாக புன்னகையோடு வந்து அமர்ந்து உண்ண தொடங்கினாள்.
எல்லோரும் கவனமாக ஆனந்த் பற்றி பேசுவதை தவிர்த்து உண்டு முடித்தனர்.
நந்தித்தா கிளம்பிவிட்டாள்.
மறுநாள் பசுபதி சென்னை கிளம்பினான். தாத்தாவிடம் “உடம்பை கவனிங்க தாத்தா. நீங்க கவலைபடும் அளவுக்கு உங்க பேரன் இல்லை. அவன் நல்லா இருக்கான். நீங்க கவலைபடாதீங்க.” என்றான்.
தாத்தா “எங்க பசுபதி, அவன் ஒருவார்த்தை பேசலை இன்னமும்.. அப்படி என்ன வேலையோ..” என்றார் தளர்ந்த குரலில்.
பசுபதிக்கு மனம் வாடி போனது இன்னமும் அவன் செய்த காரியம் தெரிந்தால் என்னவாகுமோ என தோன்ற.. ஆனந்த் மேல் கோவம்தான் வந்தது.
பசுபதி “இந்தாங்க” என சொல்லி கணிசமான தொகையை கொடுத்தான்.
தாத்தா “இருக்கு ப்பா, என்கிட்டே.. அவன் அனுப்பியிருக்கான். தேவைன்னா, நந்தித்தாவை எடுத்து வர சொல்லுவேன். பணமெல்லாம் வேண்டாம் பசுபதி. நீ வந்து பார்த்தே போதும்” என்றார்.
பசுபதி “நானும் பேரன்தான். அவன் கொடுத்தால் மட்டும்தான் வாங்குவீங்களா.. “ என சொல்லி அவர் மறுக்க மறுக்க.. பணம் கொடுத்து வந்தான்.
தாத்தாவை பத்திரமாக இருக்க சொல்லி ஆயிரம் முறை சொன்னான். ஒரு கணிசமான தொகையை தாத்தாவிடம் கொடுத்து விட்டு, வந்தான்.
தனக்கு மட்டுமே தெரிந்த உண்மையை சுமப்பது பெரிய வலி, அந்த வலி இப்போது பசுபதிக்கு. இந்த இரண்டுநாளும் அந்த பெரியவரின் முகம் பார்க்க.. கலங்கி போனான்.
இன்னமும் ஆனந்த் ஆழைத்து பேசவில்லை.
பசுபதி, காலையில் அலுவலகம் கிளம்பிவிட்டான். பசுபதி, ஆடிட்டர். தனியாக அலுவலகம் வைக்க வேண்டும் என ஆசை. சீனியரின் பதிலுக்காக காத்துக் கொண்டிருக்கிறான். மற்றபடி தன் குருவின் சிறந்த சிஷ்யன் இவன்.
பசுபதி, ஆனந்தனுக்கு அழைத்து அழைத்து பார்த்து விட்டுவிட்டான். ஆனால், ஊரிலிருந்து தினமும் கந்தசாமி, இவனிடம் பேசுவார்.. பேரன் பேசினானா என கேட்பார். இப்படியே நாட்கள் நகர்ந்தது.
ஒருநாள், ஆனந்தன் பசுபதிக்கு அழைத்தான்.
பசுபதி திட்டி தீர்த்தான்.. எல்லாவற்றையும் வாங்கிக் கொண்டவன் “எனக்கும் புரியாதா.. ஆனாலும், என்னால் இப்படி நடந்துக் கொள்ள முடியுதுன்னா.. நீங்க, யோசிக்க மாட்டீங்களா..” என நண்பனிடமே கேட்டான்.
பசுபதிக்கு கோவத்தினை கட்டுபடுத்தவே முடியவில்லை.
ஆனந்தன் “அண்ணா.. உண்மையாக சொல்றேன் எனக்கு இக்கட்டான சூழ்நிலை. இங்கே வேலைக்கு அனுப்பின கம்பெனி.. என்னை வேலையிவிட்டு தூக்கிட்டாங்க.. ஒருவாரத்தில் என்னை இந்தியா கிளம்ப சொல்லிட்டாங்க. அதான், புது வேலை தேடினேன்.. அதுக்கு, டெபாசிட் அமௌன்ட் கேட்டாங்க.. எங்க போறது நான்.. திரும்பவும் இந்தியா வந்து.. ஆயிரத்தில் சம்பாதித்து.. என்ன செய்வது சொல்லுங்க ண்ணா” என்றான்.
பசுபதி “அதுக்கு” என்றான்.
ஆனந்தன் “அதான், எனக்கு சீனியர்.. கதிரழகி எனக்கு ஹெல்ப் செய்யறேன்னு சொன்னா.. அவ ஒரு ஸ்ரீலங்கன் பெண். அவங்க பாமிலிக்கு.. தமிழ்நாட்டில் பெண்ணை கொடுக்கணும்ன்னு எண்ணமாம். பெண்ணை கல்யாணம் செய்துக்க.. இங்கேயே எல்லாம் ஏற்பாடு செய்கிறோம்ன்னு சொன்னாங்க.. தாத்தாவையும் நாங்க இங்க கூட்டிட்டு வந்திடுவோம் அண்ணா… புல் சப்போர்ட்” என்றான்.
பசுபதிக்கு என்ன சொல்லுவதென்றே தெரியவில்லை..
ஆனந்தன் “இப்போது, அந்த நல்ல ஜாப் கிடைச்சிடுச்சி.. ஒன் இயரில் பெர்மென்ட்.” என்றான்.
இரவு கிளம்பியிருந்தான்.. அதிகாலை வந்து சேர்ந்தான். காலையில், உணவு முடித்து.. பொறுமையாக தாத்தாவிடம் விஷயத்தை சொல்ல அமர்ந்தான்.
அந்தநேரம் சரியாக நந்தித்தா வந்து சேர்ந்தாள்.
தாத்தா “வா டா ம்மா, ஆனந்தன் வர போறானாம்.. வா வா.. பசுபதி அதை சொல்லத்தான் வந்திருக்கான். பாரு நம்மகிட்ட பேசலை” என்றார்.
நந்தித்தா புன்னகையோடு.. “நீங்க, இருந்தீங்கதானே.. பொம்மு அண்ணா சொன்னார். எனக்கு சரியா ஞாபகம் இல்லை. நீங்க அவன் பிரென்ட். ஓகே ஓகே.. சொல்லுங்க” என்றாள் மலர்ந்த முகமாக. ஆனந்தனின் நண்பன் எனவும் தணிந்து பேசினாள் பெண்.
பசுபதிக்கு, அந்த முக மலர்ச்சி என்னமோ செய்ததது.. சங்கடமாக தலையசைத்தான் அவளை பார்த்து.
பின் பொம்முவை பார்த்தான்.. அவர் ஆவலாக இருந்தார்.. எதோ கேட்க்க நினைத்தவன்.. அமைதியாகிவிட்டான்.
ஒருவழியாக “அவனுக்கு, அங்க வேலை போகிடுச்சி..” என ஆரம்பித்து எல்லாம் சொல்லிகே கொண்டே வந்தான். திருமணம் ஆகிவிட்டது.. என.. சொன்னதும்.
நந்தித்தா எழுந்துக் கொண்டாள். கண்கள் சிவந்து மூக்கு விடைத்துவிட்டது. என்ன செய்வதென்றே தெரியவில்லை அவளுக்கு. பெரியவர்கள் இருவருக்கும் அதேதான் நிலை.
நந்தித்தா பொறுமையாக நடந்து வெளியே சென்றுவிட்டாள்.
உண்மை தெரிந்த பெரியவர்கள் இருவரும் பார்த்துக் கொண்டே நின்றனர்.. சாட்சிபூதமாக, ஏதும் செய்ய முடியாமல்.
பசுபதிக்கு எதோ புரிகிறது.. தெரியாததை பேச கூடாது என அமைதியாகிவிட்டான்.
கந்தசாமியின் முகம் சட்டென ஒளிரவும் இல்லை.. வாடவும் இல்லை. வயதான மனிதர் சற்று நேரம் பேசவேயில்லை.
பசுபதி “வருகிற வாரம் இங்க வரான் தாத்தா அவர்கள் குடும்பத்தோடு” என்றான்.
மாலையில், வீடியோ அழைப்பின் மூலமாக.. ஆனந்தனின் புது மனைவியும்.. அவர்களின் குடும்பமும்.. ஆனந்தனின் குடும்பத்தோடு பேசினர். மரியாதையாகவே பெண்ணின் பெற்றோர் பேசினார். மன்னிப்பை வேண்டினர். நிறைய சமாதானங்கள் செய்தனர்.
தாத்தா கோவமாக ஏதும் பேசவில்லை.. அமைதியாக எல்லாம் கேட்டுக் கொண்டார்.
பசுபதி, அதன்பிறகு நந்தித்தாவை பார்க்கவேயில்லை. ஆனால், மனது என்னமோ அவளை ஒருமுறை பார்க்க வேண்டும் என எண்ணிக் கொண்டே இருந்தது. ஞாயிறு மாலை வரை அவளை கண்ணில் காணோம். பொம்முவிடம் ஏதாவது கேட்க்கலாமா என எண்ணினான்.. ஆனால், ஏதும் கேட்டுக் கொள்ளாமல் ஊர் வந்து சேர்ந்தான்.
மறுவாரம்.. அவர்கள் வருவதற்கான முதல்நாள் பசுபதி குளித்தலை வந்துவிட்டான்.
கந்தசாமி தாத்தா, என்ன செய்வதென தெரியாமல் அமர்ந்திருந்தார்.
பசுபதி வந்துதான்.. ஆட்களை வரவைத்து வீட்டினை சுத்தமா செய்தான். சமையலுக்கு ஆட்கள் வேண்டும் என பொம்முவிடம் பேசி ஏற்பாடு செய்தான். இப்படி சின்ன சின்ன வேலைகள் நடந்துக் கொண்டிருந்தாலும்.. எதிர்வீட்டினை எட்டி பார்க்கவும் தவறவில்லை அவனின் கண்கள். பொம்மு சொல்லியிருந்தார்.. நந்தித்தாவிற்கு இன்று நிச்சயம் என.
அவசரமாக “அப்படியா, அந்த பொண்ணுக்கு.. சம்மதமா” என அவரை பார்த்தான்.
பொம்மு புரிந்துக் கொண்டு “ஆனந்தோட அந்த பிள்ளை.. நல்லா பழகிச்சி. அவன் வெளிநாடு போகும் போது.. செலவுக்கு என தன் நகையை வித்து பணம் கொடுத்தது. வீட்டில் தொலைச்சிட்டேன்னு பொய் சொல்லிடுச்சி.. அவங்க அப்பன் அடியோ அடி.. அவளை. எல்லாம் இப்போதான் நடந்தது போல இருக்கு தம்பி.
நீங்க சென்ற பிறகு.. அவளின் அப்பன் வேதாந்தன் வந்து சண்டை. என் பெண்ணை ஆசை காட்டி மோசம் செய்துட்டீங்கன்னு.. என்ன சொல்ல முடியும் கல்லு மாதிரி நின்னார் கந்தசாமி.
எதோ இரண்டாம் தாரம் போல.. அவசர மாப்பிள்ளை. இன்னைக்கு நிச்சயம்.. நாளை கல்யாணம். வேதாந்தன், கோவக்காரன் ஆனால், பொண்ணு மேல பாசமா இருப்பான். அவளுக்கு, ஆனந்தன் மேல் பிரியம் என தெரிந்தும்.. பொண்ணு பேச்சுக்கு மதிப்பு கொடுத்து.. அமைதியா இருந்தான்.
நம்ம தெருவில் எல்லோருக்கும் ஆனந்தன் நந்தித்தா பழக்கம் பற்றி அரசல்புரசலாக தெரியும்.
எல்லோரும் நந்தி பாப்பாவை கிண்டலும் கேலியுமா பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க.
அதான், மனோகரனுக்கு அவசரம், என்ன நினைச்சானோ.. என்னமோ.. கல்யாணத்தை வைச்சிட்டான்.
அந்த மாப்பிளைக்கு குழந்தை ஏதும் இல்லை.. வயசும் கம்மி.. அதுவரை சந்தோஷப்பட்டுக்கணும்.
தாத்தா, அவகிட்ட மன்னிப்பு கேட்க்கனும்ன்னு நினைக்கிறார். அந்த பொண்ணுக்காக வேண்டிகிட்டு இருக்கார். அன்னிக்கு பார்த்ததுதான், அதன்பிறகு பாப்பாவை நாங்க பார்க்கவேயில்லை. மனோகர், பாப்பாவை அடிச்சான்னு.. அவன் பையன் வந்து சொன்னான்.. என்ன செய்ய முடியும் நம்மால்..” என்றார்.
பசுபதிக்கு வருத்தமாகி போனது.
தாத்தா உணவு உண்ணும் போது கேட்டார்.. “பாப்பா போன் எடுத்தாளா பொம்மு” என..
ம்.. போன் சுவிட்ச் ஆப்’பில் இருந்தது இந்த நாட்களில். பொம்மு இல்லை என தலையசைத்தார்.
தாத்தா “ஒருமுறை பார்க்க வேண்டும் போல இருக்கு பிள்ளையை.. அவன் அப்பன் கல்யாணத்திற்காவாது நம்மை உள்ள விடுவானா தெரியலை..” என்றார் சோர்ந்த குரலில்.
பசுபதிக்கும் என்னமோ அவளை பார்க்க வேண்டும் என வந்த பொழுதிலிருந்து எண்ணம்தான். அவளுக்கு நிச்சயம் திருமணம் அதிலெல்லாம் ஒன்றும் பிரச்சனையில்லை.. அவளிடம் ஒரு வார்த்தை சொல்ல வேண்டும்.. “உன் அன்பை வாங்கும் அளவு அவனுக்கு.. பாக்கியம் இல்லை.. அந்த அளவு அவன் வொர்த்தில்லை” என அவளிடம் ஒரு வார்த்தை சொல்லிட வேண்டும் என உந்துதல் இவனுக்கு. ஏன்னென அவன் ஆராயவில்லை.
இப்போது தாத்தா இப்படி சொல்லவும்.. பசுபதி “என்ன உங்களுக்கு அவளை பார்க்கணும்.. அவ்வளவுதானே, நான் பேசி கூட்டி வரேன் தாத்தா.. நீங்க பீல் பண்ணாதீங்க. எல்லாம் பார்த்துக்கலாம்.” என்றான்.
மாலையில் நிச்சயம் முடிந்திருந்தது.
பசுபதி எட்டிப்பார்த்தான் எதிர்வீட்டை. சொற்பமான உறவுகள். மேலையும் கீழையுமாக எல்லோரும் பரபரப்பாக இருந்தனர்.
பசுபதிக்கு, எப்படி அவளை பார்ப்பது என தோன்ற.. மொட்டமாடி சென்று ஆராய்ந்தான். பின்பக்கம் ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருக்க.. சற்று நேரம் சென்று.. வேட்டி சட்டையில் வெளியே வந்தான், ஊர் மகன் போல.
இவன் நினைத்ததை போல கடினமாகவெல்லாம் இல்லை. ஈசியாக வேலி தாண்டி.. அவர்கள் வீட்டின் பின்பக்கம் சென்று.. உள்ளே சென்றுவிட்டான்.
பழைய வீடு.. அறைகள் நிறைய இருந்தாலும் ஒரு அறையில் மட்டுமே பொருட்கள் இல்லாமல் இருக்க.. பசுபதிக்கு கஷ்ட்டமே இல்லாமல், அவளின் அறைக்கு வந்து சேர்ந்துவிட்டான்.
நந்தித்தா.. ஒரு காட்டன் புடவையில்.. ஒப்பணைகளோடு எங்கோ வெறித்து பார்த்துக் கொண்டு.. அப்படியே அமர்ந்திருந்தாள். இவன் வந்த சத்தம் கூட அவளில் பதியவில்லை.
பசுபதி கதவிற்கு பின் நின்றுக் கொண்டான்.. இவள் பார்க்கும் வழியை காணோம்.. கதவினை சாற்றினான்.
அந்த சத்தத்தில்.. நந்தித்தா லேசாக திரும்பி பார்த்தாள்.
நந்தித்தா உணர்வு வந்தவள் போல.. கண்ணில் நீர் வார்த்தாள்.
பசுபதி “நந்தித்தா போலாமா” என்றான்.
அவளுக்கு சுரணையே இல்லை போல.. “ம்.. என்ன?.. “ என்றாள்.
பசுபதி “உன்னை தாத்தா பார்க்கனும்ன்னு சொல்றார்.. ஒருமுறை வந்திட்டு போ.. உங்க அப்பாகிட்ட சொல்லிட்டே வா.. உங்க அப்பாகூட கூட வா..” என்றான்.
நந்தித்தா முகத்தை திருப்பி கொண்டாள்.
பசுபதிக்கு, என்னடா இவ.. என தோன்ற.. நந்தித்தாவின் அருகே வந்து, நின்றிருந்தவளின் கை பற்றி.. “ஹேய்.. பாப்பா… புரியுதா” என்றான் சீரியஸ்சாக.
அந்த நேரம் சரியாக கதவு திறந்தது.. பசுபதி.. சாற்றியிருந்தானே தவிர தாழ்போடவில்லை.
கதவை திறந்தது.. அவளின் அன்னை.. பின்னே மாப்பிள்ளையின் உறவு பெண்கள் இருவர்.. ஆண்கள் இருவர். இப்போதுதான் ஊரிலிருந்து வந்தனராம்.. அதனால், பெண்ணை பார்க்க வந்திருந்தனர்.
எல்லோரும் அதிர்ந்து நின்றனர்.
சட்டென பசுபதி பிடித்திருந்த அவளின் கையை எடுத்துக் கொண்டான்..
நந்தித்தாவிற்கு, உணர்வும் வந்தது. பயத்தில், அவன் விட்ட பிடியை பெண்ணவள் பிடித்துக் கொண்டாள்.. மற்றவன் இட்ட மோதிரத்தோடு.
வீடே.. அதகளம் கொண்டது.
பசுபதியை பிடித்துக் கொண்டனர்.
நந்தித்தாவின் அண்ணன்.. தங்கையை கிட்சேன் அழைத்து சென்றுவிட்டான்.
என்ன செய்வதென தெரியவில்லை ஆளாளுக்கும் மீசையை முறுக்கிக் கொண்டு.. கையை ஓங்கினார். ஆனால், அடிக்க முடியவில்லை. அவனின் கண்ணியமான தோற்றமும் பார்வையும் ஓங்கிய கையை இறக்க வைத்தது.
“பிரென்ட்ன்னா, எதுக்கு ரூமில் நின்னு பேசணும்..” என ஒரு பெரியவர் சத்தம் போட்டார்.
பசுபதி தலை குனிந்தான்.
மாப்பிள்ளை வீட்டாரின் முகம் தெளியவில்லை. முன்பே ஒரு அவமானம். இப்போதும் இப்படி என அவர்களுக்குள் பேச்சு எழுந்தது. வாசல் வந்துவிட்டனர்.
பிரசன்னா தங்கையை கன்னம் கன்னமாக அடி “யாரு டி அது.. எப்படி தெரியும்..” என அடி.
தந்தை வேதாந்தன், மாப்பிள்ளை வீட்டாரை ஏதேதோ சமாதானம் செய்துக் கொண்டிருந்தார்.
மணி இரவு பதினொன்று.
மாப்பிள்ளை வீட்டார் “முன்னமே ஏதும் விசாரிக்காமல்தான் ஒரு தவறு நடந்தது. இப்போதும் இப்படி. நீங்க முன்னமே சொல்லியிருக்கலாம்.. என்னதான் நண்பன் என்றாலும்.. இப்படி ராத்திரியில்.. இந்த சூழலில் வந்து பார்ப்பவன்.. நண்பன் மட்டும்தான்னு எப்படி நம்புவது.. நீங்க பாருங்க, நாங்க கிளம்புகிறோம்” என கிளம்பினர்.
தெருவே கூடி நின்றது.
பெரியவர்கள்.. பசுபதியை யாரென பார்க்க.. கந்தசாமி தாத்தாவும் வந்து நின்றார். பேச்சுவார்த்தைகள் நடந்தது.
பசுபதி தோற்றமும் பார்வையும் அந்த நிமிர்ந்த முகமும் எல்லோரையும் ஒருநிமிடம் அமைதி கொள்ள செய்தது. பொறுமையாக யாரென விவரம் கேட்டனர் ‘ஆடிட்டர்’ எனவும். பெருசுகள் சத்தம் போட்டு.. பசுபதிக்கு தண்ணீர் கொடுத்து அமர வைத்தனர், அவனை.
அப்படியே ஒரு இடியையும் இறக்கினர்.. பெண் வாழ்க்கை.. பசுபதிதான் கட்டிக்கணும் என்றனர்.
வேதா, அதுதான் சரி.. என்றார். பசுபதி பார்க்க நன்றாக இருந்தான். நல்ல வேலை.. இங்கே இருந்த குடும்பம்தான் எனவும்.. பெண்ணை பெற்றவர் சரி என்றார்.
பசுபதியின் பெற்றோருக்கு கந்தசாமி அழைத்து விவரம் சொல்லி.. உடனே கிளம்பி வர சொன்னார்.
அதிகாலை ஐந்து மணிக்கு வந்தவர்களை பார்த்தும் வேதாந்தன் அதிர்ந்து போனார். வாலு போயி கத்தி வந்தது டும் டும் டும்.. என்ற நிலையானது