தலைகீழ் நேசம்!

19

நந்தித்தா, இன்று கோவை கிளம்பினாள், தன்  அன்னை தந்தை இருவரோடும். வாடகை அப்பார்மென்ட், கல்லூரியின் அருகிலேயே இருக்க, அங்கேயே வீடு பார்த்திருந்தனர்.

எல்லா ஏற்பாடுகளும் கெளவ்ரவ் வேதாந்தன் இருவரும் பேசி எடுத்த முடிவாகவே இருந்தது. ஆனால் பெண்களிடம் இரு ஆண்களும் சொல்லிக் கொள்ளவில்லை.

!@!@!@!@!@!@!@!@!

அமுதாவிற்கு, நந்தித்தா வெளியூரில் வேலைக்கு செல்வதில் விருப்பமேயில்லை. 

வேதாந்தன் தன் கணவருக்கு அழைத்து விஷயங்கள் சொன்ன போதே அமுதா கோவம் கொண்டார் எனலாம்.

ம்.. வேதாந்தன், மகளிடம் பேசி இரண்டு நாட்கள் சென்று, தன் சம்பந்தி கெளரவிற்கு அழைத்து பேசினார்.

இருவருக்கும் முதலில் எப்படி தொடங்குவது என தயக்கம்தான். வேதாந்தன்.. பெண்ணை அழைத்து செல்லுங்கள் என சொல்ல நினைக்கவில்லை.. மாப்பிள்ளையின் நிலையை முறையாக விசாரித்து தெரிந்துக் கொள்ள எண்ணினர். ஆனால், இப்போது எப்படி மாப்பிள்ளையின் நடவடிக்கை பற்றி நாம் கேட்பது என யோசனைதான். ஆனாலும், மகளுக்காக பேச வேண்டுமே.. என எண்ணிக் கொண்டே அழைத்தார்.

கெளரவ் அழைப்பினை ஏற்றதும் தயங்கிய குரலில்தான் “எப்படி இருக்கீங்க சம்பந்தி” என்றார்.

கெளரவ் அப்போதுதான் காலை காபி பருகிக் கொண்டிருந்தார்.. போனில் அழைப்பு வரவும் அமுதாவிடம் சொல்லிக் கொண்டே.. அழைப்பினை ஏற்றார். ஆக அமுதாவும் அருகேதான் அமர்ந்திருந்தார்.

இப்போது கெளரவ் பதில் சொன்னார் “இருக்கோம் சம்பந்தி.. அங்கே எல்லோரும் எப்படி இருக்கீங்க. எங்க மருமக எப்படி இருக்கா” என்றார், கூடுதல் உரிமையோடு.

அதில் வேதாந்தன் கொஞ்சம் மகிழ்ந்தது உண்மைதான்.. “அவளை பற்றி பேசத்தான் கூப்பிட்டேங்க” என்றார் கனமான குரலில்.

கெளரவ் போனோடு சற்று தள்ளி வந்தார்.. கார்டன் ஏரியாவில் “சொல்லுங்க சம்பந்தி, நந்துக்கு என்னாச்சு..” என்றார் அவர்களாக

வேதாந்தன் “இப்போது இந்த பசங்க வாழ்க்கையை சரி செய்யனும்ன்னு நினைக்கிறேன். ஆனால், மாதங்கள் கடந்து போகிறது. முடிவே தெரியலையே சம்பந்தி.” என சொல்லி நிறுத்தினர்.

பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இப்போது கெளரவ். ஆனால், பதில் மட்டும் இல்லை அவரிடம். அதை சமாளிக்க எண்ணாமல்,  “ சரிதான், நாம்தான்.. பசங்க பேசி தீர்த்துக் கொள்ளட்டும்னு இருந்தோம்” என நினைவுபடுத்தினார்.

வேதாந்தன் “ஆனால், பேசவேயில்லையே. என்ன பண்ணலாம் சொல்லுங்க. எனக்கு.. என் பொண்ணோடு நிலையை யோசிக்கவே பயமா இருக்கு. எப்படி சொல்றது.. அவ இப்போ, வேலைக்கு என கோயம்புத்தூர் போகிறாள்.” என்றார் கொஞ்சம் நிதானமிழந்த குரலில்.

கெளரவ் “என்ன சம்பந்தி, தெளிவாக சொல்லுங்க” என்றார் கொஞ்சம் பரபரப்பாக.

வேதாந்தன் நடந்தை சொல்லினார். 

கெளரவ்  அமைதியானார் .

வேதாந்தன் “எனக்கு எப்படி சொல்றதுன்னு தெரியலை.. என் பெண்ணை பார்க்கவே கஷ்ட்டமா இருக்கு. எனக்கு மாப்பிள்ளையோட முடிவு தெரிந்தால் கொஞ்சம் என் பெண்ணை பற்றி நான் யோசிப்பேன்.. வைக்கிறேங்க சம்பந்தி, யோசிச்சு சொல்லுங்க” என்றவர் அழைப்பினை துண்டித்துவிட்டார்.

கெளரவ் யோசிக்க தொடங்கினார்.

அமுதாவிடம் இதை பகிர்ந்துக் கொண்டார்.

அமுதா, நந்துவின் அன்னையிடம் பேசினார். இரு அன்னைகளும் நந்துவை பற்றி கவலை கொண்டனர்.

!@!@!@!@!@!@!@!@!@!@!

கெளரவிற்கு, அமுதா நந்துவை பற்றியும் சொல்ல.. தன் மகன் மேல் கோவமாகியது.

இரவில் தன் மகனின் வரவிற்காக காத்திருந்தார்.

தன் கணவரிடம் ‘என்னது நந்து கோயம்புத்தூர் போறாளா..’ என தொடங்கி நிறைய புலம்பல் கணவனிடம் ‘எதுக்கு அங்கே போகனும்.. போக வேண்டாம் சொல்லுங்க.. அவளை இங்கே கூப்பிட்டுக்கலாம்.. நம்ம ஷோவ்ரூமில் வேலை இருக்கு.. மேனேஜ்மென்டில் வேலை இருக்கு.. அதை பார்க்கலாமே.. எதுக்கு கஷ்ட்டபடனும். அத்தோட, அவளுக்கு என்ன கஷ்ட்டம். நான் பசுபதிகிட்ட பேசுறேன், நந்துவை கூட்டி வந்திடலாம்.” என்றார் பரபரப்பாக.

கெளரவ் மனைவியிடம் எந்த சமாதானமும் சொல்லவில்லை. மகன் வரவிற்காக காத்திருந்தார்.

பசுபதி வந்து சேர்ந்தான்.. வரும்போதே போன் பேசிக் கொண்டுதான் வந்தான்.

தந்தை மகனை நேரடியாக அழைத்து நிறுத்தினார் “பசுபதி நில்லு” என்றார். 

பசுபதி போனினை ஹோல்டில் வைத்து நிமிர்ந்து பார்த்தான்.

தந்தை “வா, கொஞ்சம் பேசணும்” என்றார்.

பசுபதி போனில் பேசிவிட்டு வந்து, ஹால் சோபாவில் அமர்ந்தான்.. தளர்ந்து போயிருந்தான். முகத்தில் அத்தனை களைப்பு.. ஒளியில்லை. உடைகளில் கவனமில்லை.. ஹேர் நன்றாக வளர்ந்திருந்தது.. கட் செய்து பராமரித்ததாக தெரியவில்லை.. கண்களின் ஓரங்களில் நீங்கா சிவப்பு.. அவனின் முறுக்கிய மீசை இப்போது பொழிவிழந்திருந்தது.. அவனின் நிலையை சொல்லுவது போல.

சலிப்பாக ஏறிட்டான் தந்தையை. அவன் தந்தையோடு நினைவு தெரிந்த நாளிலிருந்து பேசுவதில்லை. படிக்கும் போது கூட பீஸ்.. செலவு.. என தேவைக்கு எல்லாம் தாத்தாதான். அதனால், எப்போதும் ஒரு அலட்சியம் இருக்கும் அவனிடம் தந்தையை எதிர்கொள்ள. இன்றும் அப்படியே.

தந்தை “உனக்கு கல்யாண ஆகிடுச்சி ஞாபகம் இருக்கா.. என்ன பண்ணலாம்ன்னு முடிவில் இருக்க. பொண்ணோட அப்பா எனக்கு போன் செய்து கேட்க்கிறார்.” என அமைதியாகத்தான் தொடங்கினார்.

பசுபதியின் முகம் எரிச்சலானது. தலையை கோதிக் கொண்டான், கண்மூடி தலையை பின் சாய்த்துக் கொண்டான் ‘எனக்கும் அவளை பார்க்கணும் பேசணும் போலதான் இருக்கு.. ஆனால், எந்த முகத்தோடு இதெல்லாம் செய்வேன்..’ என யோசித்தான்.

அன்னை, மகன் பேசாமல் இருப்பதை பார்த்து “என்ன டா, நந்தித்தா.. கோயம்புத்தூர் வேலைக்கு போறாளாம். அண்ணன் போன் செய்தார் பேட்டா, அப்பாக்கு. அவர் பெண்ணை நினைத்து கவலை படுகிறார் போல..  அண்ணியும் சொன்னாங்க. நந்து ரொம்ப வாடி போயிட்டாளாம். அவளை நிறுத்த முடியலையாம்.. பெரியவர்கள் நாங்கதான் நீங்களாக பேசி சரி செய்துப்பீங்கன்னு இருந்தோம். ஏன் பசுபதி இன்னமும்  அவகிட்ட நீ பேசலையா.. ” என்றார்.

பசுபதி “என்ன ம்மா பேச சொல்ற, எல்லாம் என் தப்புதானே.. எப்படி அவளை பேஸ் பண்றது. அவளாவது கொஞ்சநாள் நிம்மதியா இருக்கட்டுமேன்னு இருந்தேன்.” என்றான்.

தந்தை “என்ன டா பேச்சு இது. இது காரணமா.. ஏண்டா! எத்தனைநாள் காரணம் சொல்லிட்டே இருப்ப.. அவள் பாரு இப்போ, வேலைக்கு போறா.. பாவம் டா அந்த பொண்ணு, கட்டிக்கிட்டு வந்தா.. காப்பாத்த தெரியனும்” என்றார் கோவமாக.

பசுபதி எழுந்து நின்றான் “என்ன, இப்போது ரோட்டிலா விட்டேன், அவங்க அப்பா வீட்டில்தானே இருக்கா. நீங்க தயவு செய்து பேசாதீங்க, நான் பார்த்துக்கிறேன்.. சும்மா என்னை டொவ்ன் பண்ணிக்கிட்டு” என்றான் எரிச்சலாக.

தந்தையையால் ஆதங்கத்தை கண்ட்ரோல் பண்ண முடியவில்லை “ஏன் டா, மனசாட்சியே இல்லாதவன் டா நீ, உன்னை பற்றி மட்டுமே யோசிக்கிற செல்ப்பிஷ் நீ. அந்த பெண் உடம்பு முடியாமல் இருக்கா.. என்ன நடந்திருந்தால் என்ன.. போய் பார்த்திருக்க வேண்டாமா?.. அதன்பின்னாவாது அந்த பெண்ணோடு பேசியிருக்க வேண்டாம்.. என்ன டா, மனசு உன்னோடது. இதில் நீயே என்னத்தை பார்ப்ப.. வெட்கமாக இல்லை.. உனக்கு இப்படி என்கிட்டே சொல்ல” என்றார்.

பசுபதி “இது என் குழந்தை, என் பொண்டாட்டி. நீங்க யோசிச்சீங்களா அப்போது என்னை பற்றி. இல்லையில்ல.. நீங்க பேசாதீங்க. எனக்கும் அவளுக்குமானது.. நீங்க தலையிடாதீங்க. அப்போதிலிருந்து அதைதான் சொல்றேன்.. என் குழந்தை அது. எனக்கு தெரியும்.  நான் பேசிக்கிறேன்.. வாழ்ந்துக்கிறேன்..” என்றான் தலை கோதிக்கொண்டே.

தந்தைக்கு கோவமாக வந்தது மகனை நாலு அடி அடிக்கும் எண்ணத்தோடு.. “என்னத்த வாழ்வ.. தெரியலை. அவங்க அப்பா கேட்க்கிறார்.. எங்க பெண்ணோடு வாழுங்க, இல்லை.. அவளை விட்டுடுங்க, அவள் வாழ்க்கையை அவள் பார்த்துக்கட்டும்ன்னு சொல்றார்.  இதுக்கு நீ என்ன பண்றன்னு பார்க்கிறேன். எனக்கு ஒரு பெண் இருந்திருந்தால்.. இப்படி நடந்திருந்தால்.. நான் பொறுமையாக இருப்பேனா தெரியாது. அந்த வீட்டு மனிதார்களாக இருக்க கண்டு பொறுமையாக இருக்கிறாங்க. என்னத்த பார்த்துப்ப..” என்றார் அத்தனை கோவமாக.

மகனுக்கு அழுத்தம்தான் அதிகமாகியது. மனையாள் மேல் கோவம் வந்தது ‘என்கிட்டே பேச வேண்டியது தானே.. என்கிட்டே சண்டை போட வேண்டியது தானே.. அதென்ன, வெளியில் போவது. இன்னமும் என் தாலி இருக்கில்ல.. என்கிட்டே கேட்க வேண்டாமா’ என கோவம் வந்தது, ஆதாரமில்லாமல். கண்மூடித்தனமான கோவம்தான்.

தந்தையிடம் பேசாமல் போனோடு மேலே சென்றான். மனையாளுக்கு அழைத்தான் சட்டென.. அவனுக்கு கோவம்தான்.. மணி பதினொன்று.

நந்தித்தா,  அப்போதுதான் கண்ணசந்திருந்தாள்.. அன்னை பால் குடிக்க மறந்ததால்.. அழைக்கிறார் என எண்ணினாள்.

ஆனால், அழைத்தது கணவன்.. உறக்கம் கலைந்துவிட்டது. அதென்னமோ காதல் கொண்டு கணவனை மணந்தவள் போல.. ‘பதிதேவ்’ என திரையில் ஒளிர்ந்ததும்.. கரகரவென கண்ணீர் வழிந்தது.

சட்டென போனினை எடுத்துவிட்டால்.. ஆனால், அழைப்பினை ஏற்க பயம். நடுங்குகிறது கைகள். எடுத்துவிட வேண்டும்.. என எண்ணுகிறாள்.. ஆனாலும், நடுங்குகுறது. ஓய்ந்தது அழைப்பு.

மீண்டும் அதே கோவத்தோடு அழைத்தான் கணவன்.

மனையாள், இந்தமுறை எடுத்துவிட்டாள் அழைப்பினை.

பசுபதி மனையாள் ஹலோ சொல்லும் முன்பே “ஹலோ, என்ன.. செய்துட்டு இருக்க நீ. என்கிட்டே ஏதும் சொல்லமாட்டியா” என கோவமான குரலில்தான் பேசினான்.

பசுபதிக்கு, அவள் என்னுடைமை என பொருள்பற்று வந்துவிட்டது. அத்தோடு, அவனால் குற்றவுணர்வில்லாமல்.. இயல்பாக இருக்கவே முடியவில்லை, அதில், தன்னவளிடம் பேச முடியும் என தோன்றவில்லை. அதனாலோ என்னோ தள்ளி நின்றான்.

இதுவரை, தந்தை தன்னை கேள்வி கேட்டதேயில்லை. திவ்யாவின் விஷயத்தில் கூட.. அன்னை பேசினார்.. எழுதி கொடுக்க சொல்லி, சூழலை விளக்கினார்.. அவர்கள் வீட்டு மனிதர்கள் வந்திருக்கிறார்கள் என. அப்போது கூட தந்தை இப்படி என்னை பேசியதில்லை என ஒரு வெறி. ஆக எல்லாம் சேர்ந்த கோவம்.

ஆனால், நந்தித்தாவிற்கு ஒன்றும் புரியவில்லை.

நந்தித்தாவிற்கு ஏதும் புரியவில்லை. பேசவேயில்லை, அமைதியாக இருந்தாள்.

கணவனோ இன்னமும் கோவமானான் “என்ன நந்து பதில் சொல்லு” என்றான்.

நந்தித்தாவிற்கு ஏதும் புரியாமல் எல்லா உணர்வுகளையும் துடைத்துக் கொண்டு “என்ன கேட்க்குறீங்க எனக்கு புரியலை. மாற்றி போன் செய்துட்டீங்களா” என்றாள். கணவனுக்கு குறையாத கோவத்தோடு. அவனுக்கு மட்டும்தான் கோவம் வருமா.. எத்தனை நாட்கள் ஆகிற்று.. எப்படி இருக்கேன்னு கூட கேட்க மாட்டான், நான் மட்டும் பதறனுமா.. என எண்ணம் வந்தது பெண்ணுக்கு.

பசுபதி “என்ன புரியலை.. நீ கோயம்புத்தூர் போறீயாம்” என்றான் காட்டமான குரலில்.

நந்தித்தா “ஆமாம், வேலைக்காக போறேன்.” என்றாள்.

கணவன் “எதுக்கு இப்போ வேலை.. எங்கிட்ட ஏன் சொல்லலை” என்றான்.

மனையாள் “என்ன சொல்லணும், எனக்கு புரியலை..” என்றாள்.

பசுபதி “ஏய், என்னை டென்ஷன் ஆக்காத. நான் உன் ஹஸ்பன்ட் ஞபாகம் இருக்கா” என்றான்.

நந்தித்தா அமைதியாக இருந்தாள்..

பசுபதி “இப்போது எதுக்கு வேலை.. நீ ரெஸ்ட் எடுக்கத்தான் அங்க போயிருக்க, புரியுதா” என்றான்.

நந்தித்தா மிக நிதானமான குரலில் “யார் ஹஸ்பன்ட்.. யார் பொண்டாட்டி எனக்கு புரியலை. என்ன குடிச்சிருக்கீங்களா.. அர்த்த ராத்திரியில் போன் செய்து உளறிட்டு இருக்கீங்க.. வைங்க, காலையில் வந்து பேசுங்க..” என்றவள் அழைப்பினை துண்டித்துவிட்டாள்.

அவ்வளவு கோவம் வந்தது பெண்ணுக்கும். ‘இப்படி எல்லாம் பேச எப்படி வருகிறது அவனுக்கு.. ரெஸ்ட் எடுக்க இவர் அனுப்பினாராம்’ என கோவமாக முனகிக் கொண்டாள்.

போனில் அழைப்பு மணி விடாமல் ஒலித்துக் கொண்டிருந்தது.

நந்தித்தாவிற்கு எடுக்க தோன்றவில்லை.

நீண்டநேரம் அழைப்பு மணி கேட்டுக் கொண்டிருந்தது.

மறுநாள் மதியம்.. பசுபதி வந்து நின்றான் நந்தித்தாவின் வீட்டில்.

நந்தித்தா வீட்டில்தான் இருந்தால்.. மதியம் தந்தை உண்பதற்கு வருவார். தந்தை மகள் இருவரும் உண்டு முடித்து.. அன்னைக்கு தேவையான உதவிகளை செய்துவிட்டு மேலே செல்லுவாள்.

அந்த நேரத்தில்தான் பசுபதி வந்து நின்றான்.. வீட்டு வாசலில். 

வேதாந்தன் யார் வந்திருப்பதென பார்க்க.. மாப்பிள்ளை. அந்திர்ந்த ஆனந்த புன்னகையோடு வரவேற்றார் “வாங்க வாங்க மாப்பிள்ளை” என முன்னே சென்று வரவேற்றார்.

பசுபதி ஹால் வந்தான்.

நந்தித்தாவும், அவளின் அன்னையும் வந்து பார்க்க.. பசுபதி. நந்தித்தா இரண்டடி பின் சென்றாள், கண்கள் விரிய.

வேதாந்தன் அருகில் வந்து நின்றார்.. அவரின் மனையாள் “வாங்க மாப்பிள்ளை” என வரவேற்றார்.

நந்தித்தாவிற்கு.. தன் இதயம் நழுவி அவனின் அடி பணிய துடிப்பது.. கேட்கிறது அவ்வளவு சத்தமாக காதுகளில். உடலெல்லாம் அவன் தொடாமலே சிலிர்க்கிறது.. கண்கள் அவனை கண்டதும் நிரம்பி வழிகிறது. ஆனாலும் எதோ ஒன்று.. அவனை நெருங்க தடுக்கிறது.

நந்தித்தா ஓடவும் ஒழியவும் முடியாமல் அப்படியே நின்றாள்.

பசுபதிக்கு, தண்ணீர் கொடுத்து “எப்படி இருக்கீங்க.. அண்ணி சொல்லவேயில்லை நீங்க வரீங்கன்னு.. சாப்பிடுங்க” என உபசாரம் நடந்துக் கொண்டிருந்தது.

நந்தித்தா அப்படியே மேலே செல்ல எத்தனிக்க.. அவளின் தந்தை “நந்தும்மா” என அழைத்தார்.

நந்தித்தா அப்படியே நின்று திரு திருவென விழித்தாள்.

அன்னை “வா நந்து, அவருக்கு சாதம் போடு” என்றார்.

நந்தித்தா “இரு ம்மா.. வரேன்” என சொல்லி மேலே சென்றுவிட்டாள். சொல்ல போனால் ஓடி ஒழிந்துக் கொண்டாள். படபடப்பு குறையவில்லை. மனது தவித்துக் கொண்டிருந்தது. ஆனாலும், கோவமும் தகிக்க தொடங்கியது.

கீழே, வேதாந்தன் என்ன செய்வதென தெரியாமல் பசுபதியிடம் “நீங்க, இந்த ரூமில் ரெப்ரெஷ் ஆகுங்க மாப்பிள்ளை.. நான் பார்க்கிறேன்” என சொல்லி, மாபிள்ளைக்கு அறையை காட்டினார்.

பசுபதிக்கு ஆச்சர்யமாக இருந்தது. நந்தித்தா இரவு பேசிய பேச்சுக்கு.. நம்மை வீட்டில் விடமாட்டார்கள் என எண்ணித்தான் வந்தான். நல்லவேளை என எண்ணிக் கொண்டே.. அறைக்கு சென்றான்.

வேதாந்தன் மகளை அழைக்க மேலே சென்றார்.

மகளின் கதவை தட்டினார். தந்தை என தெரிந்ததும் திறந்தாள். தந்தை பரபரப்பாக “என்ன டா, பயந்துட்டியா” என்றார்.

பெண்ணவள் அழ தொடங்கினாள்.

தந்தை “நீ பேசு.. உன்னை தேடி வந்திருக்கார்.” என சொல்லும் போது.. மகள் குறுக்கிட்டாள் “நீங்க பேசினீங்க.. அப்படிதானே. நான் சொன்னேனே.. என்ன பா, இது. அவராக வரலை.. நீங்க வர வைச்சிருக்கீங்க” என பொங்கினாள்.

தந்தை “எதுவாக இருந்தால் என்ன டா.. என் பொண்ணுக்காக நான்தானே பேசணும். அதை இத்தனைநாள் நானாக செய்திருக்கணும். நீ இப்படி யோசித்தால் வாழ்வே முடியாது” என்றார்.

மகளோ “அப்பா.. இது.. இதில்.. எனக்கு எங்க ப்பா.. மரியாதை இருக்கு..” என்றாள்.

தந்தை “அஹ.. மரியாதையோட கணவன் மனைவி இருவரும் குடும்பம் நடத்த முடியாது டா.. அன்பினை மட்டும் நம்பு” என்றார்.

மகளோ “அதை மட்டும் நம்பிதான் அப்பா, நான் இப்படி இருக்கேன்” என்றாள், தலையில் கை வைத்துக் கொண்டு.

தந்தை “நந்து, யோசிக்காத டா..” என்றார், மகள் பேசவேயில்லை.

தந்தை கீழே வந்தார். மாப்பிள்ளைக்கு உணவு பரிமாறினார். பொதுவாக வேலை எப்படி இருக்கிறது.. அன்னை தந்தை எப்படி இருக்கிறார்கள் என விசாரணை மட்டுமே இருந்தது. ஏன் இத்தனை நாள் வரவில்லை என எந்த கேள்வியும் வைக்கவில்லை மாமனார்.

பசுபதி உண்டு முடித்ததும்.. “நீங்க மேலே ரெஸ்ட் எடுங்க மாப்பிள்ளை” என சொல்லி மகள் இருக்கும் அறையை காட்டினார்.

பசுபதி மேலே வந்தான்.. கதவு சற்றியிருக்கவில்லை.. பசுபதிக்கு, மனது என்னமோ செய்கிறது.. ஏதேதோ ஞாபகங்கள்.. சண்டை, நேற்று அவள் பதில் சரியாக சொல்லவில்லை என ஏதும் நினைவில்லை.. நந்து என மனது ஏக்கமாக எண்ணிக் கொண்டு அறைக்கு வந்து சேர்ந்தான்.