தலைகீழ் நேசம்!

18

நந்தித்தா, கொஞ்சம் நம்பிக்கையோடு இருந்தாள் எனலாம். கணவன், ஏதும் பேசவில்லை பார்க்கவில்லை என குறைகள் இருந்தாலும்.. என்னுடைய நினைவிருக்கிறது. அதிலும்.. நான் எதிர்பார்த்தது போல அவன் மெசேஜ் அனுப்பியதில்.. எதோ செய்தி இருக்கிறது என.. மனையாளுக்கு புரிகிறது. ஆனால், எதுவாகினும் என்னிடம் பேசியிருக்கனுமே.. பிரச்சனையோ பிரச்சனையில்லையோ.. அவருடைய எல்லாம் எனக்கு தெரிந்துக்கனுமே.. எனக்கு இன்னமும் ஏதும் தெரியவில்லையே.. அவரும் சொல்லவில்லையே என.. மீண்டும் மனது மதில்மேல் பூனையானது. நேசம் கொண்ட மனம்.. தனக்கு சாதகமான வெளிச்சம்.. எங்காவது தென்படாதா என.. தேடிக் கொண்டே இருக்கிறது.

மனையாளுக்கு, அந்த நாள் தொட்டு.. கணவனின் ஞாபகம் அதிகமாகியது. காலையில் எழுவதே அசதியாக இருந்தது.. இரவில் ஒருபாடு கணவன் ஏன் பேசவில்லை இன்னமும்.. என யோசனை. அதிகமாக, தன்னவனின் புகைப்படத்தினை எடுத்து பார்த்துக் கொண்டாள். தானே அழைத்து பேசிவிடலாமா எனகூட எண்ணிக் கொண்டாள். ஆனால், எந்த யோசனையும் அவளை மீறவில்லை. அதாவது, என்னைவிட என்னவன் முக்கியம் என எண்ணவில்லை. அப்படி எண்ணும் அளவுக்கு.. பசுபதி அவளை காதல் செய்யவில்லை போல. உண்மைதானே.

இப்படியே நாட்கள் கடக்க.. பிரசன்னா, வார விடுமுறையில் ஊர் வந்தான்.  பிரசன்னா ஊர் வருவது அரிது. வேலை.. மீட்டிங் என அதிகம் வரமாட்டான். ஏதாவது விசேஷம் என்றால் வருவான்.. மற்றபடி அவன் வீட்டு விஷயங்களில் அதிகமாக ஈடுபடமாட்டான்.

ஊர் வந்திருந்தான். பிரசன்னா வந்ததிலிருந்து.. அம்மா அவனிடம் எதோ பேசிக் கொண்டே இருந்தனர்.

நந்தித்தா பார்த்துக் கொண்டுதான் இருந்தாள். என்னவென இவளுக்கு தெரியவில்லை. இவளிடம் ஏதும் சொல்லவில்லை. 

பிரசன்னா “அம்மா, நான் இன்னும் செட்டில் ஆகலை. இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்” என.. ஹால் வந்துக் கொண்டே பேசினான், அப்போதுதான் நந்தித்தாவிற்கு விஷயம் தெரிந்தது.. அண்ணனுக்கு பெண் பார்க்கிறார்கள் என.

அண்ணன் தங்கையின் அருகில் வந்து அமர்ந்தான்.. அக்கறையாக விசாரித்தான், உடல்நலம் பற்றி.. வேலை பற்றி. மேலும் “நந்து, நான் பசுபதிகிட்ட பேசவா.. அப்பா அம்மா எல்லோரும் கூட போய் பேசுறோம். இன்னும் எத்தனைநாள் இப்படியே இருப்ப நந்து” என்றான்.

நந்தித்தாவிற்கு, அன்னியமானது தன் வீடு. இதுவரை, அவனுக்கு பெண் பார்க்கிறார்கள் என தன்னிடம் சொல்லவில்லை.. இப்போது வந்து அண்ணனும்.. இப்படி கேட்க்க.. இது என் வீடும்தானே.. என எண்ணம் சட்டென எழுந்துவிட்டது. அண்ணன்தான் கேட்க்கிறான்.. தன் நல்லதிற்குதான் கேட்க்கிறான் என்றாலும்.. ஒரு அந்நிய தன்மைபோல இருந்தது அவளுக்கு. ஏதும் பேச முடியாமல்.. ‘என்னிலை உனக்கு புரியலையா’ என பார்வை பார்த்தாள் அண்ணனை.

பிரசன்னாவிற்கு, தெரியும் பசுபதியின் கடந்தகாலம் அப்றி எல்லாம் தெரியும் இப்போது. ஆனாலும் அண்ணன் ஏன் இப்படி 

நந்தித்தா, அமைதியாகவே இருந்தாள். கணவன் மேல் கோவம் வரவில்லை. தன்மேல்தான் கோவம் வந்தது. இங்கே இருந்திருக்க கூடாதோ.. வேறு எங்காவது போயிருக்க வேண்டுமோ.. என சிந்தனை வந்துவிட்டது.

பிரசன்னா “நீ அப்செட் ஆகணும்ன்னு கேட்க்கலை டா.. இப்போவே எனக்கு பெண் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். அதுவேறு உனக்கு, கஷ்ட்டமாக இருக்குமில்ல.. அதான், பிரச்சனை சின்னதாக இருக்கும் போதே நாம் பேசிடலாம்.. என்ன சொல்ற” என்றான்.

நந்தித்தா “பிரசன்னா, எனக்கு புரியுது. நான் யோசிக்கிறேன்” என சொல்லிவிட்டு, ஏதும் காட்டிக் கொள்ளாமல்.. மேலே தனதறைக்கு வந்துவிட்டாள்.

யாருமில்லாதவளாக உணர்ந்தாள் பெண். அவளின் அண்ணன் உனக்கு உதவுகிறேன் என்கிறான்.. ஆனால், அதை ஏற்க முடியவில்லை. மனது வாடி போகிறது. என்னவென பகுத்து சொல்ல முடியவில்லை. கணவன் நீதான் வேண்டும் என வந்து நிற்கவில்லை.. இப்போது அண்ணனுக்கு வரன் பார்க்கிறார்களாம்.. அதற்காகவும் அண்ணன் போய் பேசுகிறானாம்.. அப்படி எனக்கென.. மரியாதையே இல்லாமல் நான் போய் வாழனும்மா.. என கோவமாகதான் வந்தது. ஏதும் பேச முடியவில்லை.. யாரிடமும் கோவம் கொள்ள முடியவில்லை.. ஏன் சண்டையிட கூட முடியவில்லை. இது எதோ உன் வீடு இல்லை என மனது உறுத்த தொடங்கியது.

அண்ணன் ஊருக்கு கிளம்பினான்.

அன்னை அவன் கிளம்பும் போது “பிரசன்னா, ஜாதகம் வாங்கி பார்க்கலாம் டா.. நம்ம நிலை தெரிந்து, அனுசரிச்சு.. அவர்களாக கேட்க்கிறாங்க பிரசன்னா.. நேரம் வரும் போது எல்லாம் நடக்கனும்மில்ல..” என்றார்.

பிரசன்னாவும் “அம்மா.. முதலில் நந்து வாழ்க்கையை சரி பண்ணுங்க” என்றான்.

அன்னை “டேய், உனக்கு நிச்சயம் என்றால்.. நாங்க போய் பேசி சரி பண்ணிடுவோம். உன் மூலமாக கூட ஏதாவது நல்லது நடக்கலாமில்ல” என்றார்.

பிரசன்னா “என்னமோ செய்ங்க..” என சொல்லி கிளம்பிவிட்டான்.

நந்தித்தாவிற்கு தலை சுற்றியது. திருமணமே இப்படிதான் கட்டாயத்தில் நடந்தது.. அடுத்து மீண்டும் ஒரு கட்டாயம். இப்படியே போனால், எனக்கென வேல்யூ இருக்கவே இருக்காதா என மேலும் மேலும் கோவமாக வந்தது.

அண்ணன் கிளம்பியதும் நேராக அறைக்கு வந்தாள். எங்காவது சென்றுவிட வேண்டும் இங்கிருந்து.. எனதான் முதலில் அவளின் யோசனை சென்றது. அன்னை, ‘தன்னிடம் அண்ணனுக்கு பெண் பார்ப்பதை பற்றி சொல்லவில்லை.. ஏன் என கேள்வி எழுந்தது. அண்ணன் இப்படி கேட்க்கிறான்.. அம்மா, அவன் மூலமாக திரும்பவும் என்னை அங்கே அனுப்புவார்களா.. ஆக, பசுபதிக்காக மனது வராது..’ என கோவம் கோவம் கோவம் மட்டுமே. 

முதலில் இங்கிருந்து சென்றிட வேண்டும்.. யாருக்கும் பாரமாக இருக்க வேண்டாம்.. என் வாழ்க்கையை நான் பார்த்துக் கொள்ளுகிறேன். அதான் படிப்பிருக்கு.. டியூஷன் எடுக்கிறேன்.. வேலைக்கு எங்காவது போகிறேன்.. இங்கே இருக்க கூடாது என.. அன்று இரவு முழுவதும் யோசனை ஓடியது அவளுள்.

முதலில் அதற்கான சோர்ஸ்களை ஆராய்ந்தாள். முன்பு வேலை செய்த பள்ளியிலேயே வேலை கேட்க்கலாம் என எண்ணினாள். ஆனால், இந்த ஊரே வேண்டாம் என மனது சொன்னது. 

அடுத்து தன் தோழிகளை தேடினாள். சென்னையில் நிறைய மூன்று தோழிகள் இருந்தனர். இரவு முழுவதும் இங்கிருந்து சென்றிட வேண்டும் என யோசனைதான். விடியலில்தான் உறங்கினாள்.

காலையிலிருந்து பெண் உணவு உண்ண கீழே வந்தாள். அப்போது அன்னை “நந்து, நீ சமையல் பார்த்துக்கோ, நான் ஜோசியரை பார்த்துட்டு வரேன்” என சொல்லி கிளம்பினார். அன்னை எதார்த்தமாக சொல்லி சென்றார், நந்தித்தாவிற்கு.. எல்லாம் தனக்கு எதிராகவே நடப்பதாக எண்ணம்.

மாலையில் டியூஷன் முடித்து வரும் போதுதான் கோவையில் தோழி ஒருத்தி வேலை செய்கிறாள் என தெரிந்தது. 

தனக்கு தெரிந்த, ஆசிரியர்கள் மூலமாக தேடினாள்.

விடுமுறை என்பதால் அந்த ஒருமாதத்தில் எதோ வேக்கன்சி இருப்பது தெரிந்து அப்ளே செய்தாள்.

தன் தந்தையிடம் நந்தித்தா நேரடியாக கோவையில் வேலைக்கு போகிறேன். “இங்கே..” என சொல்லி ஊரின் பெயர் சொல்லி.. “இண்டர்வியூ.. நாளை போக வேண்டும்.. மூன்று இன்டர்வியூ இருக்கு, பஸ் டிக்கெட் புக் பண்ணிட்டேன்..” என இன்று காலையில் அவர் அலுவலகம் செல்லும் போது சொன்னாள்.

அன்னை தந்தை இருவருக்கும்.. அதிர்ச்சி.

தந்தை “என்ன நந்தும்மா.. சொல்லவேயில்லை. இதென்ன திடீர்ன்னு. என்னாச்சு” என்றார்.

நந்தித்தா என்னமோ உறுதியோடு பேசினாள்.. யார் மீதோ கோவம் கழன்றுக் கொண்டிருந்தது உள்ளே.. தந்தையின் அதிர்ந்த பேச்சு அவளின் காதுகளில் சரியாக விழவில்லை போல.. “ஒன்னும் ஆகலை ப்பா. எத்தனைநாள் இங்கேயே இருக்க முடியும்” என்றாள் ஒட்டாத அழுத்தமான குரலில்.

அன்னை “என்ன டி, பேச்சு” என்றார் அதட்டலாக.

நந்தித்தாவிற்கு, துடுக்குத்தனம் உண்டு.. அதிலும் இந்த நாட்களில் ஒரு வீம்பில் இருப்பவளுக்கு இயல்பாகவே அந்த துடுக்குத்தனம் வந்தது.. “எதுக்கு சொல்லணும். நான்தான் யாருக்கும் வேண்டாமே. என்கிட்டே யார் என்ன சொல்றீங்க. எனக்கு வேலை இப்போ முக்கியம், நான் போறேன்” என்று சொல்லிவிட்டு, மேலே சென்றுவிட்டாள்.

தந்தைக்கு, சங்கடமாக போனது. பெண் என்ன சொல்லுகிறாள் என புரியாமல் போகுமா என்ன.. அமைதியாக மனையாளை முறைத்தார் வேதாந்தன்..

அவரின் மனையாளோ “என்னங்க, இன்னும் ஏதும் முடிவாகலையே.. எதோ, பிரசன்னாவின் மூலமாக அவளுக்கும் நல்லது நடக்கும்ன்னு நினைச்சேன். அதுக்குதானே இவ்வளவு சீக்கிரம் அவனுக்கு பார்க்கனும்ன்னு நினைக்கிறேன். நீங்க என்னை முறைக்கிறீங்க” என்றார்.

வேதாந்தனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கிளம்பினார் வேலைக்கு.

பெண்ணினை தடுக்கவில்லை. அதே நேரம், மனையாள்.. சொல்லிய  “அமுதா அண்ணிக்கிட்ட பேசி.. இவகிட்ட பேச சொல்றேன்..” என்பதையும் ஏற்கவில்லை வேதாந்தன். வேதாந்தனோ “நீ எதுவும் இப்போ பேசாத..” என்றுவிட்டார் மனையாளிடம். 

வீட்டில் குழப்பம் தொடங்கியது.

முக்கியமாக வேதாந்தன் மனதிலும். பெண்ணிற்காக நாம் ஏதும் யோசிக்கவில்லையோ என உள்ளுக்குள் மருக தொடங்கினார். திருமணமும் அவசரமாக நடந்தது.. அவள் வீட்டில் சந்தோஷமாக இருக்கிறாள் என நினைக்கும் நேரத்தில்.. அபாஷன். அதனை தொட்டு மாப்பிள்ளையின் நடவடிக்கை மாற்றம்..  இது எதையும் தந்தையாக நான் கவனம் எடுத்து பார்க்கவில்லையோ.. ஒரு வார்த்தை என் பெண்ணிற்காக நான் போய் கேட்கவில்லையோ.. இப்போது எங்களிடமிருந்து அவளாக ஒதுங்கும் அளவு எங்கள் நடவடிக்கை இருக்கிறதோ.. என வருத்தம் வந்தது.

பெண் இண்டர்யூ செல்லும் போது.. தந்தையே அவளை பஸ் ஸ்டாப்பில் விட்டார்.. “பார்த்து போடா.. எங்க எங்க இண்டர்வ்யூ போற” என கேள்வி கேட்டார்.

நந்தித்தா பதில் சொன்னாள்.

தந்தை “சரி டா, யார் உன் பிரென்ட்..” என விசாரித்தார்.

கல்லூரி தோழி என சொல்லவும் விவரம் கேட்டுக் கொண்டார். எந்த தடையும் சொல்லவில்லை.. “நல்லது. நீ போய்ட்டு வா, தைரியமா இண்டர்வ்யூ அட்டென் பண்ணு, ஆல் தி பெஸ்ட்” என பஸ் ஏற்றிவிட்டார்.

நந்தித்தாவின் முகத்தில் அத்தனை தன்னம்பிக்கை புன்னகை. தந்தையிடம் நம்பிக்கையாக விடைபெற்று சென்றாள்.

அப்பாக்கள் என்றும் மாறுவதேயில்லை. பிள்ளைகளின் சந்தோஷம் நிம்மதி.. மட்டுமே அவர்களின் கொள்கைகள் எனும் போது.

காலையில் இன்டெர்வ்யூ செல்லும் போது, நந்தித்தா தன் தந்தைக்கு அழைத்து பேசிவிட்டே சென்றாள்.

தந்தையும் வாழ்த்தி அனுப்பினார்.

மறுநாள் காலையில் ஊர் வந்தவளை.. தந்தைதான் அழைத்து வந்தார். காரில் வரும் போதே.. எப்படி பேசின.. சாப்பிட்டியா.. உனக்கு ஈசியாக இருந்ததா.. என கேட்டு தெரிந்துக் கொண்டார்.

நந்தித்தா வீடு வந்ததும், அவளின் அன்னை முகத்தை தூக்கி வைத்திருந்தார். ஏதும் பேசவில்லை.. காபி கொடுக்கவில்லை. 

பெண்ணவள் ப்ரெஷ் செய்து வந்தாள்.

தந்தையே மகளுக்கு காபி தயாரித்துக் கொண்டுத்தார் “அவளுக்கு கோவம் உன்மேல.. நீ வேலைக்கு வெளியூர் போகனுமான்னு கேட்க்கிறா” என சொல்லி மகளின் அருகே அமர்ந்துக் கொண்டார்.

நந்தித்தா காபி குடித்து முடித்து அமைதியாகவே இருந்தாள். தந்தையோடு பேசி வெகுநாட்கள் ஆகியது. திருமணம் முடிந்து.. தந்தைக்கும் தனக்கும் உள்ள நெருக்கம் குறைந்திருந்ததை உணர்ந்திருந்தாள் பெண். இப்போது அப்பா பேசுவது என இல்லை.. அருகில் அவர் இருப்பதே.. மனதிற்கு ஆறுதலாகவே இருந்தது. அதில், அம்மாவின் கருத்தைபற்றி கண்டுக் கொள்ளவில்லை அவள்.

மேலே எழுந்து சென்றுவிட்டாள்.

இரண்டுநாட்கள் சென்று.. தந்தை நந்தித்தாவின் அறைக்கு வந்தார்.

நந்தித்தா எதோ நோட்ஸ் எடுத்துக் கொண்டிருந்தாள்.. பாடல் எதோ ஓடிக் கொண்டிருந்தது டிவியில்.

தந்தையை பார்த்ததும் “வாங்க ப்பா” என்றவள்.. தன்னிடம் எதோ பேசுவதற்கு வந்திருக்கிறார் என புரிய கொஞ்சம் பதட்டம் வந்து சேர்ந்தது அவளுள். 

தந்தை “என்ன ம்மா, வேலையா” என்றார்.

எல்லாவற்றையும் மூடி வைத்ததாள்.. தந்தையின் முகம் பார்த்து “சொல்லுங்க பா” என்றாள்.

தந்தையின் முகத்தில் ஒரு அழுத்தம்.. பெண்ணின், குழப்பமான முகத்தை பார்த்தவர் “எப்படி டா போகுது டியூஷன் வேலை எல்லாம்” என்றார்.

நந்தித்தா “ம்.. ஒன்னும் பிரச்சினையில்லை அப்பா.. நீங்க சொல்லுங்க, என்ன பேசணும் என்கிட்ட” என தொடங்கினாள்.

தந்தை “ம்.. பேசணும். எப்படி ஆரம்பிக்கறது..” என அமைதியானவர்.. பெண்ணின் பார்வையை உணர்ந்து “சொல்லுடா, நீ உன் வாழ்க்கையை பற்றி என்ன முடிவெடுத்திருக்கன்னு.. சொல்லு..” என்றார்.

நந்தித்தாவிற்கு என்ன பதில் சொல்வது என தெரியவில்லை. ஆனாலும் “என்ன ப்பா, என் வாழ்க்கைன்னு எதோ இருப்பது மாதிரி சொல்றீங்க.. எனக்கு என்ன நடக்குதுன்னு தெரியலை ப்பா, யாரவது இது சரின்னு சொன்னால்.. அதில் போகிறேன். அப்புறம்தான் அது தப்புன்னு தெரியுது, உடனே.. அழுகை வருது.. என்ன செய்றதுன்னு தெரியலை. சரி அதையும் சரி செய்யலாம்ன்னு ஒரு வாழ்கையை வாழ தொடங்கும் போது. திரும்பவும், ஒரு பள்ளம்.. நான் வாழ்ந்தது என்னோட வாழ்க்கை இல்லையோன்னு ஒரு குழப்பம்.. அதற்குள்.. அந்த இழப்பு. இதில் என் வாழ்க்கை எங்க இருக்குன்னு என்னால தேடவே முடியலை.. எனக்கு இப்போவெல்லாம் சந்தேகம் வருது எல்லாத்திலும்.. என்கிட்டே எல்லோரும் நல்லாத்தான் பேசுறீங்க.. ஆனாலும் என்னை ஒதுகுறீங்கலோன்னு பீல் ஆகுது. அண்ணன் கேட்க்கிறான்.. நான் வேணும்ன்னா.. உன் வீட்டுக்காரர்கிட்ட பேசவான்னு.. ஏன் அவன் இப்படி கேட்க்கிறான்னு தோணுது. இது என் வீடும்தானே அப்பா.. நான் இங்க இருக்க கூடாதா.” என்றாள் பாவமான குரலில்.

தந்தை “அப்படி எல்லாம் இல்லை டா. இது உன் வீடுதான். நீ அதற்கெல்லாம் யோசிக்க கூடாது. நான் மாப்பிள்ளையை பற்றி கேட்க்கிறேன். அப்பா லேட்டாக கேட்க்கிறேன்னு நினைக்காத. சின்ன பிள்ளைகள் எதோ சரியாகிடும்ன்னு நினைச்சேன். ஆனால், நீ வெளியூர் போகிற அளவு.. எதோ நடக்குது. எனக்கு சரி தவறெல்லாம் தெரியலை. நீ சொல்லு.. உனக்கு அவர் கூட வாழ விருப்பம் இருக்கா இல்லையா, அதை மட்டும் சொல்லு” என்றார்.

பெண்ணவள் உடைந்து போனாள். தெரியவில்லை அவளுக்கு. கணவனை பிடிக்கும் என வாய்விட்டு சொல்ல கூட முடியவில்லை அவளால். கணவனின் ஒதுக்கம்.. அப்படி இருக்கையில், எப்படி கணவனை தன்னவன் என சொந்தம் கொண்டாடுவது என யோசனை. இப்படி ஒதுங்கியே இருப்பவனை.. என்ன சொல்லுவது என தெரியவில்லை.

தந்தை கேட்க்கும் போது பதில் சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை. அண்ணனின் திருமணம்.. தந்தைக்கும் ஒரு முடிவு வேண்டுமே என எண்ணியவள் “அப்பா, எனக்கு பதியை ரொம்ப பிடிக்கும். எனக்கு அந்த வீடும் ரொம்ப பிடிக்கும். எல்லோரும் ரொம்ப அருமையான மனிதர்கள். ஆனால், எனக்கு.. நான்தான் முக்கியம்ன்னு இப்போவெல்லாம் தோணுது. என்னை தேடாதவரை.. நான் அவருக்கு வேண்டாம் அப்பா. நான் அங்க போகமாட்டேன்.” என்றாள் தெளிவாக.

தந்தை “நாங்களும், நீங்களாக பேசி தெளிவாகிக் கொள்வீர்கள் எனத்தான் அமைதியாக இத்தனைநாள் நாங்க இருந்தோம். அப்படி நீங்கள் பேசிக் கொண்டதாக தெரியவேயில்லை. இனி பெரியவர்கள் நாங்கள் பேசிக் கொள்ளுகிறோம்.. சரியா டா.. அப்பாவின் முடிவை நீ ஏற்ப்பியா” என்றார்.

நந்து புன்னகைத்து “இல்ல பா, முடியாது. பெரியவங்க.. என்னை திரும்வும் அங்க போய் வாழ வைக்கத்தான் பார்ப்பீங்க.” என சொல்லி விரக்தியாக புன்னகைத்தவள் “என் அத்தை போன் பேசும் போதெல்லாம் கூப்பிடுறாங்க. அதெல்லாம் முடியாது அப்பா. இது எங்க ரெண்டுபேர்  விஷயமாகவே விட்டுடுங்க” என்றாள்.

தந்தையோ “இல்ல டா.. நான் என் பெண்ணுக்காக பேச போறேன். உன்னை அங்க போக சொல்லமாட்டேன்.. உன் பதி இங்கே வராமல்.” என்றார் புன்னகை முகத்தோடு.

மகளோ “நீங்க சொல்லி அவர் வரவேண்டாம் அப்பா” என்றாள் சலித்த குரலில்.

தந்தை “அஹ.. நான் ஏன் அவர்கிட்ட சொல்றேன். அவங்க அப்பா அம்மாகிட்ட பேசுறேன். அதெல்லாம் கொண்டு வரேன் பாரு, அந்த பசுபதியை. அதான் என் மாப்பிள்ளையை” என்றார்.

நந்தித்தா “அப்பா, நான் கோயம்புத்தூர் போறேன். அது உறுதி.” என்றாள்.

தந்தை “நீ உன் வேலையை பாரு, நானும் என் வேலையை பார்க்கிறேன்” என்றார், தெளிவான குரலில்.