மாலையில் நந்தித்தாவின் பெற்றோர் வந்து சேர்ந்தனர்.

நந்தித்தாவிற்கு அதற்குமேல், தாங்கவில்லை அழுகை.. அன்னை தந்தையிடம் நடந்தவைகளை சொல்லி அழ தொடங்கிவிட்டாள்.

அமுதாவும் கெளரவ் என அவர்களும் அறையில்தான் இருந்தனர். பெரியவர்களுக்கு ஏதும் பேசமுடியவில்லை.

இரவு நந்தித்தாவிற்கு.. உறங்க மருந்துகள் கொடுக்கும் வரை.. நந்தித்தா இறுகிய முகமாகவே இருந்தாள். அன்னையிடம், அவர்கள் வந்ததும் பேசியதுதான். அதன்பின் ஏதும் பேசவில்லை.

அவள் உறங்கியதும், பெண்கள் இருவரும்.. வெளியே அமர்ந்திருந்த ஆண்களிடம் வந்தனர்.

நந்தித்தாவின் பெற்றோர் “காலையில் நாங்க ஊருக்கு கூட்டி போறோம்ங்க.. அவளின் உடலும் மனசும் தேறினதும் கொண்டு வந்து விடுகிறோம்” என்றனர்.

கெளரவ்விற்கு மனதேயில்லை.. மருமகளை இப்படி உடல்நலமில்லாமல் ஊருக்கு அனுப்ப. அதுவும் எந்த மாதிரியான சூழ்நிலை.. இதில் எப்படி என் மருமகளை அங்கே அனுப்புவது.. என எண்ணம்.

பதிலே சொல்லவில்லை, அவர். 

அமுதாவிற்கு, மகன் இன்னமும் மனையாளை சென்று பார்க்கவில்லை. அவர்கள் இருவரும் பேசிக் கொண்டால்.. பிரச்சனை தீருமோ என எண்ணம். அதனால் மகனிடம் பேச சென்றார்.

பசுபதி, அன்னையை பார்த்தும் திரும்பிக் கொண்டான்.

அமுதா “பசுபதி, நீ என்ன செய்யறன்னு உனக்கு தெரியுதா.” என்றார்.

பசுபதி அமைதியாக இருந்தான்.

அன்னை “டேய், போய் அவளை பார்க்கலையா நீ. நானும் ஏதும் சொல்ல கூடாதுன்னு இருக்கேன். உனக்கு சம்பந்தம் இல்லாத யாரோ மாதிரி இங்க வந்து நிக்கற..” என்றார்.

பசுபதி அமைதியாகவே இருந்தான்.

அன்னை கோவமாக “என்னவோ செய். அவங்க வீட்டில், அவளை ஊருக்கு கூட்டி போறாங்களாம்” என்றவர் கோவமாக நகர்ந்து சென்றுவிட்டார்.

பசுபதி கிளம்பி வீடு சென்றுவிட்டான்.

இரவில், ஆண்கள் இருவரும்.. கெளரவ்வும்.. வேதாந்தனும் வீடு வந்துவிட்டனர்.

பெண்கள் இருவரும் மற்றும் பிரசன்னா.. மருத்துவமனையில் இருந்துக் கொண்டனர்.

மறுநாள், நந்தித்தாவை மாலையில் வீடு கூட்டி செல்லலாம் என்றனர் மருத்துவர்கள்.

அமுதாவிற்கு, நந்தித்தாவை ஊருக்கு அனுப்ப விருப்பமேயில்லை. ஆனால், அம்மா வீட்டில் இருந்தால், அவளும் கொஞ்சம் மனது மாறுவாள் என எண்ணிக் கொண்டார்.

மாலையில்தான் வீடு வந்தாள். வீட்டில் பசுபதி இல்லை.. நந்தித்தா கணவனை பார்க்கவேயில்லை இப்போதுவரை. கண்ணீரோடு அவளின் பார்வை.. அவனைத்தான் தேடியது. தெரிகிறது, அவன் மருத்துவமனையிலேயே என்னை பார்க்கவில்லை, இப்போதும் கண்டிப்பாக என்னை பார்க்கமாட்டான் என புரிகிறது. ஆனாலும், உலகவழக்கம்தானே.. கணவன் என்றானபின்.. தொட்டதெற்கெல்லாம் கணவனை தேடுவதுதானே இயல்பு. அதிலும் இப்போது எங்களுக்கென உண்டான உயிரை.. இழந்து வந்திருக்கிறேன்.. தெரியுமா அவனுக்கு!.. அப்படி ஒன்றும் என்னோடு பொய்யாக இருக்கவில்லையே.. ம்.. எனக்கு மட்டுமே வலியும் மன வேதனையும். அவருக்கு ஏதுமில்லையா..’ என ஓடுகிறது. அதில் கண்ணீரும் முட்டுகிறது.

நந்தித்தாவை விருந்தினர் அறையில், கீழ் இருக்கும் அறையிலேயே தங்க வைத்தார் அமுதா. முறையான கவனிப்பு நடந்தது, இரவில் கிளம்ப வேண்டாம், நாளை காலையில் ஊர் செல்லலாம் என பேசிக் கொண்டனர் பெரியவர்கள்.

நந்தித்தாவிற்கு, கணவனை தவிர வேற ஞாபகம் வரவில்லை. எதைபற்றி யோசிக்கனும் நான்.. திவ்யா.. இழந்த என் பாப்பா.. இதோ வந்து என்னை பாராத கணவன்.. யாரை பற்றி நான் யோசிக்கணும், கண்மூடி இருந்தாள். உறக்கம் வரவில்லை. உடல்நிலையும் அதற்கு காரணம்.

நடுஇரவில், அவளுக்கு குறுஞ்செய்தி வந்தது.

நந்தித்தாவிற்கு, அதன் ஒலி.. ஒரு ஆவலை தூண்ட.. போனினை எடுத்து பார்த்தாள்.

கணவனிடமிருந்து செய்தி “சாரி..  உனக்கு நடந்த எல்லாவற்றுக்கும் நான்தான் காரணம். நீ இல்லை. அது எல்லாவற்றுக்கும் என்னை மன்னிச்சிடு.” என ஒரு குறுஞ்செய்தி.

வேறு எந்த விளக்கமும் இல்லை.. பேச்சும் இல்லை. மனையாளுக்கு பார்த்ததும் கண்ணீர்தான். எதோ கம்பெனிகளில் மெமோ வந்தது போன்ற.. ஒரு உணர்வு. ‘எப்படி இருக்கேன்னு’ கேட்க்க தோன்றவில்லை அவருக்கு.. என பெருமூச்சு.

உறக்கம் அதற்கு மேலும் வரவில்லை. அடிக்கடி சென்று.. பேட் மாற்றிக் கொண்டே இருந்தாள். மனதின் அழுத்தம்.. அதில் தெரிந்தது.

மறுநாள் அதிகாலையில்.. நந்தித்தா தன் பெற்றோரோடு ஊர் கிளம்பினாள். விரல்களில் நடுக்கம் அவளுக்கு, தன் அத்தையின் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டாள்.. வார்த்தைகள் இல்லை இருவருக்கும் நடுவில். 

பின் அமுதா சுதாரித்து “இது இப்படியே இருக்காது டா..உடம்பை தேற்றிக் கொண்டு.. வீடு வரணும். பசுபதி அப்படிதான் சைலென்ட்.. மற்றபடி நல்லவன் டா..” என்றார்.

மருமகள் சிரித்தாள் கண்ணீரோடு.

அமுதாவிற்கு.. அதிகமான புரிதலில்லை என்றாலும்.. இருவருக்கும் நடுவில் இந்த திவ்யா வந்தவிட்டது தெரியுமே. இப்போது மருமகளின் புன்னகையும் ஒருமாதிரி விரக்தியாக இருக்க.. அமுதா “சரியாகிடும் டா” என்றார்.. தனக்கும் சேர்த்து சொல்லிக் கொண்டு. விடை கொடுத்து அனுப்பினார்.

மீண்டும் ஒரு பயணம், இந்தமுறை வலியோடு.. உத்தரவாதமில்லா எதிர்காலத்தோடும் தொடங்கியது.

ஆகிற்று இரண்டு மாதங்கள்.

நந்தித்தா, அப்படி ஒன்றும் அழுது கரையவில்லை. தன்னை தேற்றிக் கொண்டாள். காரணம் அவளின் டியூஷன் பிள்ளைகளின் படிப்பு. அதில் அவளின் கவனம் சென்றது. அதனால், எதையும் அவள் யோசிக்க கூடாது என எண்ணிக் கொண்டு வேலையை தொடர்ந்தாள்.

மாறாக பசுபதி உடைந்து போனான். மீண்டும் அவனை தனிமை சூழ்ந்துக் கொண்டது.

அன்று மருத்துவமனையில் அவன் அமர்ந்திருந்த போதுகூட.. நான் வீடு வந்து சேர்ந்துவிட்டேன் என திவ்யா பசுபதியை அழைத்து பேசினாள். பசுபதியும் கேட்டுக் கொண்டு வைத்துவிட்டான்.

திவ்யா, தினமும் அழைப்பாள் பசுபதிக்கு. ஆனால், அவன் எடுப்பதேயில்லை அவளின் அழைப்பினை. ஒருகட்டத்தில் ஓய்ந்து போன திவ்யா.. அவனுக்கு வாய்ஸ் நோட் அனுப்பினாள்.

பசுபதிக்கு அந்த நேரத்தில்தான் பொறுமை பறந்தது. என் பெண்டாட்டியே என்னை இப்படி தொந்திரவு செய்வதில்லை என தோன்ற.. ஒரு வாய்ஸ் நோட் அனுப்பிவிட்டு, அவளின் எண்ணினை பிளாக் செய்துவிட்டான்.

பசுபதி, வேலைக்கு செல்லுகிறான். இப்போதெல்லாம் அதிக வெளியூர் பயணம். முயன்று ட்ரிங்க்ஸ் எடுப்பதில்லை. ஆனாலும், ஒருமாதிரி தளர்ந்துவிட்டான். 

உண்மையாக தன்னவளை தேடுகிறான்.. உடற்பயிற்சி செய்ய முடியவில்லை.. அந்த AC ரிமோர்ட்டினை பார்த்தால்.. ஒரு முறை அவளின் நினைவு.. அந்த காபி ப்ளாஸ்க்.. கீழே உண்ணும் காலை உணவு.. மதியம் அவள் வைக்கும் வெற்றிலை சாதம்.. பூண்டு ரசம்.. இதெல்லாம் அவனுக்கு இப்போது கிடைக்கவில்லை. இதெல்லாம் விட.. அவளின் தலைகோதுதல்.. இரவில் ஏதாவது பேசிக் கொண்டே.. அவன் தலைகோதிடுவாள். நான் பேச வேண்டும் என இல்லை அவளுக்கு.. அவள் பேசணும் என்னிடம் அதுதான்.. அவளுக்கு முக்கியம் என எண்ணி லேசாக புன்னகைப்பான். 

இப்போதுதான் பசுபதி, தான் எவ்வளவு அவளுக்கு அடிமையாகி இருக்கிறேன் என உணர்ந்தான். விரக்த்திதான் வந்தது. 

ஒருநாள், காலை உண்டுக் கொண்டிருந்தான். எதையும் காட்டிக் கொள்ளமாட்டானே எப்போதும். இப்போதும் அப்படிதான், எனக்கு ஒன்றுமில்லை என்ற பாவம்தான் எல்லா இடத்திலும். அத்தோடு  உடையில் நேர்த்தி.. எப்போதும் அவனின் தேர்வு பெர்பெக்ட்டாக இருக்கமே.. அதனால், அவனின் சலிப்பு, முகத்திலோ.. நடை உடையிலோ தெரியாத வண்ணம்தான் இருந்தான். 

இப்போது தன் அன்னையின் அலைபேசியில் அவளின் முகம் தெரிந்தது.. நந்தித்தா அழைத்திருந்தாள். 

அவளின் முகம் திரையில் மின்ன.. அப்படியே பார்த்திருந்தான் அவள் முகத்தினை. ஒருமாதிரி வதைத்தது அவளின் புகைப்படம்… ‘எல்லாம் மறந்திருப்பாளா.. நான் அவளோடு பேசினால்.. பேசுவாளா’ என எண்ணம் வந்தது பசுபதிக்கு.

அன்னை மகனை ஒருமுறை பார்த்தார். தன் போனினை, மகன் கண்ணெடுக்காமல் பார்ப்பதை உணர்ந்து.. சற்று தள்ளி சென்றுவிட்டார்.

அழைப்பு ஒய்ந்தது.. பசுபதி எழுந்து கைகழுவிக் கொண்டு.. கிளம்பிவிட்டான்.