Advertisement

அத்தியாயம் – 11
திரையரங்கிற்க்கு அவசரமாக வண்டியை விரட்டினாலும் கேசவன் தன் நிதானத்தை இழக்கவில்லை. பதவிசாகவே ஓட்டினார். அவருக்கு நேர்மாறாக அவரின் மகள் பதட்டத்தில் தன் கணவனுக்கு கைப்பேசியில் அழைத்துக் கொண்டே தான் இருந்தாள். ஆனால், அவளின் அழைப்பை அவன் எடுத்தபாடாக காணோம்!
பதினைந்தே நிமிடத்தில் திரையரங்கின் வாசலுக்கு சென்றவர்கள், அங்கே இருந்த கூட்டத்தில் மிரண்டு, செழியனை எப்படி தேடுவது என்று குழம்பினர். “அழகி என் கூடவே வாமா, ரெண்டு பேரும் ஒண்ணாவே தேடுவோம்.” கேசவன் கூறிவிட்டு முன் செல்ல, அவருடனே கண்களில் அலைபுறுதலுடன் செழியனை தேடினாள் தமிழ்.
மேலும் ஒரு பதினைந்து நிமிடம் செலவழித்தும் அவனை காணவில்லை என்றவுடன், நெஞ்சம் நூறு மில்லி வேகத்தில் ஓட, தமிழழகியின் உடம்பு அச்சத்தில் நடுங்க ஆரம்பித்தது. அவளின் கைகளில் அழுத்தம் கொடுத்து, “பயப்படாதமா….” என சமாதானம் கூறி, பக்கத்தில் இருந்தவர்களிடம் அங்கே நடந்த சம்பவத்தை பற்றி கேட்டறிந்தார்.
பால் அபிஷெகம் செய்யும் போது மேலே கட்டவுட்டில் இருந்து ஒருவன் விழுந்ததால், கீழே இருந்தவர்கள் சிலருக்கும் காயம் ஏற்பட்டதாக சொல்லி, காயமடைந்தவர்களை கூட்டிச் சென்றுருக்கும் மருத்துவமனையின் பெயரையும் கூறினார்.
அவருக்கு நன்றி கூறி கண்களாலேயே மகளிடம் பேசிக் கொண்டு அம்மருத்துவமனை நோக்கி வண்டியை செலுத்தினார் கேசவன். மருத்துவமனை சிறிது கூட்டமாக தான் இருந்தது! பட்டாசு வெடித்ததில் சிறிய தீக்காயங்கள் பரிசாக பெற்று, வந்திருந்தவர்களே பெரும்பான்மையினர்.
ஹாஸ்பெட்டலின் முகப்பில் விவரம் கூறி விசாரித்தவர்களுக்கு வழி சொல்லப்பட்டது. நடையா அல்லது ஓட்டமா என தெரியாத அளவு கால்களை எட்டிப் போட்டாள் தமிழ். கண்களில் வழிந்த நீரை கைகளால் துடைத்தபடி அந்த நீளமான காரிடாரில் திரும்பியவள் தூரத்தில் சுவரை வெறித்தபடி ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்த செழியனை கண்டதும் பார்வை வேகமாக அவனை நோட்டமிட்டது! இவர்களை கண்டு செழியன் நடந்து வரவும், அவனுக்கு ஒன்றுமில்லை என புரிந்த நொடி, அங்கேயே இருந்த சேரில் மடிந்து அழத் துவங்கினாள். நல்ல வேளை அவள் அமர்ந்த இடத்தில் பொது மக்கள் யாருமில்லை. கேசவன் மருமகனை கண்டு சந்தோஷப்படுவதா? இல்லை அழுகும் மகளை கண்டு துக்கப்படுவதா என அறியாமல் எல்லாம் கலந்த மனநிலையோடு நின்றார்.
தமிழழகியையும் கேசவனையும் அங்கே கண்ட செழியனுக்கு மிகவும் அதிர்ச்சி தான். அதுவும் குலுங்கி அழும் தமிழை கண்டதும், என்னவென்று புரியாமல் தன் மாமனாரிடம் விவரம் கேட்டான். ஒரு மெதுவான குரலில் நடந்ததை கேசவன் கூறவும், அப்போது தான் அவன் அலைப்பேசியின் நினைவு வந்தது அவனுக்கு!
பாக்கெட்டில் இருந்து எடுத்துப் பார்த்தால், சுமார் நாற்பத்தைந்து தவர விட்ட அழைப்புகள் பளிச்சிட்டது! அனைத்தும் அருமை மனைவியிடமிருந்து. ஃபோனை ஸைலென்ட் மோட்டில் போட்ட தன்னை தானே திட்டிக் கொண்டு, மாமனாரை பார்த்தான்.
“சாரி மாமா, ரொம்ப சாரி…. என்னோட பிரண்ட பார்க்கத் தான் போனேன். பட், அப்போ தான் இந்த பையன் மேல இருந்து விழுந்துட்டான். தெரிஞ்ச பையன்… எல்லாரும் இங்க தூக்கிட்டு வந்துட்டோம். என்னோட ஃபோன் லைலென்ட் மோட்ல இருந்துச்சு… சோ தெரியலை, கால் பண்ணது.”
என்ன தான் சமாதானம் கூறினாலும் அது தான் செய்த தவறுக்கு ஈடாகாது என அறிந்ததால், அவன் குரலின் ஸ்ருதி தானாக இறங்கியது. அவன் கூறியதற்கு தலையாட்டிவிட்டு மகளை  கேசவன் பார்க்க, அவள் அப்போது தான் தன் கண்களையும் முகத்தையும் துடைத்து தெளிவாக நிமிர்ந்தாள்.
“நீங்க பைக் கிட்ட போங்கப்பா நான் வரேன்.”
நாசுக்காக தனிமையை வேண்டிய தமிழை பார்த்து பெருமூச்சு விட்டெறிந்து அவ்விடத்தை விட்டு அகன்றார் கேசவன்.
தன் கோபத்தை முழுவதுமாக உள்ளிருத்திக் கொண்டு, வேண்டா வெறுப்பாக வார்த்தைகளை துப்பினாள் தமிழழகி கணவனை நோக்கி. “இத்தனை நாள் நீங்க மாறிடுவீங்கன்னு நினைச்சு லூசு மாதிரி ஏமாந்துட்டேன். காலையிலந்து ஒழுங்கா வீட்டுலயாவது இருந்தீங்களா? அந்த அங்கிள் சொன்னதுலந்து எப்படி தவிச்சேன்னு உங்களுக்கு தெரியாது! போதும்… ரொம்ப ஹாப்பியா இருக்கேன்!! இன்னிக்கு தலதீபாவளி ரொம்ப நல்லா, சந்தோஷமா போச்சுல… அதான்…”
மிகவும் வேதனைவுடன் கூறிவிட்டு பொங்கி வந்த கண்ணீரை வெளியே விழாமல் தாங்கியபடி, நடந்து சென்ற மனைவியை குற்ற உணர்வுடன் முதன் முதலாக பார்த்தான் செழியன். தங்களின் தலை தீபாவளி புடவையுடன் கண்ணீருடன் அவள் பேசியதே மனதில் நிழலாட, அப்படியே சிறிது நேரம் அமர்ந்துவிட்டான். தமிழ் திட்டியதிலும் அவளின் அழுகையிலும் அவளின் காதலையும் அன்பையும் மட்டுமே கண்டவன், மேலே தன் அன்பை எப்படி புரிய வைப்பது என்ற குழப்பத்தில் தவித்தான்.
காலையில் படத்துக்கு போனதோடு நிறுத்தியிருக்க வேண்டுமோ? மீண்டும் கிளம்பியது தவறோ என்று தோன்ற தொடங்கிவிட்டது அவனுக்கு…. எல்லாம் காலம் கடந்த ஞானோதயம்! அப்படியே அமர்ந்திருக்கவும் முடியாமல் வீட்டிற்கு கிளம்பினான்.
செழியன் வீடு வந்து சேரும் போது மணி ஒன்றை தொட்டிருந்தது. வீட்டில் பெயருக்கு தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருந்தாலும், யாரும் அதில் கவனம் செலுத்தவில்லை என்பது தெரிந்தது!
ஹாலில் தன் மனைவியை காணாமல் கண்களை சுழற்றி, பின் அவள் அறையில் இருப்பாள் என எண்ணமிட்டவனை சாப்பிட அழைத்தார் வள்ளி. “எல்லாரும் சாப்பிடலாம் அத்தை… வாங்க.” செழியன் கூறியதை கேட்டு வள்ளி கேசவனின் முகம் பார்க்க, அவர் தலையாட்டி சம்மதத்தை தெரிவித்தார்.
“தமிழ்….”
செழியன் இழுத்து நிறுத்த, அவன் மாமியார் அதை நிறைவு படுத்தினார்.
“அவ உள்ள படுத்துருக்கா, அப்புறமா சாப்பிடுவா. நீங்க வாங்க தம்பி…”
வள்ளி, பார்வதி, கேசவன் மூவரும் எப்போதும் போல பேசினாலும், அழுகையுடன் கொந்தளித்தவளையே தேடியது செழியனின் மனது. சாப்பிடும் போது காலையில் ஜோடியாக தமிழுடன் உணவுண்டது நினைவு வந்த நிமிடம், சத்தமாக டைனிங் சேரை இழுத்தபடி உட்கார்ந்தாள் தமிழ்.
அவளை ஆச்சரியமாக பார்த்தவர்களை கண்டுக் கொள்ளாமல், தானாக உணவு பரிமாறி சாப்பிட தொடங்கினாள். மருத்துவமனையில் இருந்து வந்ததும், என்னவென்று வள்ளியும் பார்வதியும் அவளை விசாரிக்க, “எனக்கு தலைவலிக்குதுமா…. என்ன எதுவும் கேக்காதீங்க!” என நேராக அறையில் சென்று முடங்கியவள் தான்.
நினைவுகள் எங்கெங்கோ போக, வலியுடன் படுத்துக் கொண்டவளுக்கு, பசி வேறு ஒரு புறம் கொல்லாமல் கொன்றது! செழியன் சாப்பிட்டு போனதும் தானும் போகலாம் என ஒரு நொடி நினைத்தவள், பின் அவன் சாப்பிட தான் மட்டும் பசியில் வெந்து சாவதா என குமைந்து தான் சாப்பிட உட்கார்ந்தாள்.
அனைவரும் அமைதியாக சாப்பிட்டு முடிக்க, ஆர்ப்பாட்டமாக காரில் செழியனின் குடும்பத்தினர் வந்திரங்கினர். இதை கேசவனின் வீட்டில் யாருமே எதிர்பார்க்கவில்லை… செழியனுக்கு கூட தெரியாது! வந்தவர்களை உள்ளே வரவேற்க, சசிகலா தான் புன்னகையுடன் கூறினார்.
“தமிழு சொல்லிட்டே இருந்தா எல்லாரும் ஒண்ணா தீபாவளி கொண்டாடினா நல்ல இருக்கும்னு. அதான் அவளுக்கே சர்பிரைஸ்ஸா கிளம்பி வந்துட்டொம்.”
தமிழழகி அதை கேட்டு அழகாக சிரிக்க, அப்போதும் அச்சிரிப்பு அவளின் அழுது வீங்கிய இமைகளையும் வாடிய முகத்தையும் மறைக்காதது அவள் துரதிஷ்டம் தான்…. இல்லை செழியனின் துரதிஷ்டம்!! அதுவே சரி…. ஏன்னென்றால், அதை எல்லாம் கவனித்து முதலில் சசிகலாவிடம் ஆரம்பித்து பின் நதியா வரை அனைவரும் என்ன ஆயிற்று என வினவ, விஷயம் அறிந்தவர்கள் ஒருவரும் தங்களின் திருவாயை திறக்கவில்லை.
பின், செழியனே நடந்ததை கூறினான்…. அவன் முடித்தவுடன் ஒரு கணத்த மௌனம் நிலவியது. செழியனின் வீட்டார் குற்றயுணர்வுடன் அமர்ந்திருக்க, கேசவன் அவர்களை சகஜமாக்க முயன்றார்.
“அதேல்லாம் முடிஞ்சு போச்சு சம்மந்தி. நீங்க எல்லாம் எப்படி இருக்கீங்க? குழந்தை என்கிட்ட வருவாளாமா?” சுவாமிநாதனிடம் ஆரம்பித்து, நதியாவிடம் முடித்தவரிடம் எழுந்து சென்று நேரடியாக மன்னிப்பு கேட்டார் அவரின் சம்மந்தி.
“அவன் பண்ணதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். ரொம்ப சாரி சம்மந்தி…. சாரிமா தமிழ்…”
சுவாமிநாதனின் மன்னிப்பில் திகைத்து அதை அறவே மறுத்தனர் மூவர்… ஒன்று கேசவன், இரண்டாவது தமிழ், மூன்றாவது செழியன்! “நீங்க ஏன்பா சாரி எல்லாம்… நான் தான் தப்பு பண்ணிட்டேன். சாரி… இனிமே இப்படி நடக்காத மாதிரி பார்த்துக்கறேன்.”
செழியன் கூறியதற்கு பயங்கரமான முறைப்பே பதிலாக வந்தது அவன் தந்தையிடமிருந்து.
“ஐய்யோ இது என்ன ஒருத்தர் மாத்தி ஒருத்தர் சின்ன பிள்ளைங்க மாதிரி! விடுங்க எல்லாம் நல்லதுக்கு தான். என் பேரனை என் பேத்திக்கு எவ்வளவு பிடிக்கும்னு, இன்னிக்கு அது அழுததுல தான் நானே தெரிஞ்சுக்கிட்டேன்… அம்புட்டு அழுக இவ…”
சமாதான புறாவை பறக்கவிட்ட பார்வதியை அனைவரும் புன்னகை பூத்த முகமாக பார்க்க, தமிழ் மட்டும் முறைத்தாள் நன்றாகவே…. ‘இந்த கிழவிக்கு என் மானத்தை வாங்குறதே பொழப்பா போச்சு!’ மனசுக்குள் கறுவிக் கொண்ட தமிழை பின் யாரும் கவலைக் கொள்ள விடவில்லை.
அதன் பின், எல்லோரும் குஷி படத்தில் வருவது போல, “சமாதானம் சமாதானம்” என கூறிக் கொள்ளாத குறையாய் நன்றாகவே இழைந்து பிழைந்தனர். செழியனிடம் இரண்டு பேர் தவிர, மற்றவர்கள் ஒழுங்காகவே பேசினர்.
ஒன்று சொல்லவே தேவையில்லை…. அவன் மனைவியே. இன்னொருவர் அவன் தந்தை சுவாமிநாதன். ஏற்கனவே அவன் செயல்களால் மிகவும் நொந்து போனவர், இப்போது அறவே வெறுத்துப் போனார்.
யாரும் அறியாமல் தன் மனைவி சசிகலாவிடம் முடிவாக கூறினார். “தமிழு ரொம்ப பாவம்டி. இவன் ஏன் இப்படி பண்றான்னு ஒண்ணும் விளங்க மாட்டேங்குது. ஆனா, இன்னிக்கு டிசைட் பண்ணிட்டேன். எப்போ அந்த பொண்ண சந்தோஷமா, நிம்மதியா இவன் வைச்சிக்கறானோ அப்போ தான் அவன்கிட்ட பேசுவேன்.”
மாலை மயங்கியது அனைவரும் மொட்டை மாடிக்கு சென்று பட்டாசுகளை வெடிக்கத் துவங்க, தமிழ் தன் மனக் கவலைகளை சற்றே ஒதுக்கி வைத்தாள். செழியன் அவள் முகத்தை அடிக்கடி பார்ப்பது தெரிந்தும் அவன் புறம் திரும்பவில்லை. நதியாவுடனும் தனிஷ்காவுடன் நேரத்தை செலவிட்டவள், இரவு உணவு முடிந்து தன் புகுந்த வீட்டினர் கிளம்பிய உடன் மீண்டும் சோர்வு வந்து தொற்றிக் கொண்டது.
நாளை திரும்பவும் இவனுடன் சென்னைக்கு செல்ல வேண்டுமா என யோசித்தது இதயம். மேலே இரண்டு நாட்கள் லீவ் எடுத்தால், வார விடுமுறை நாட்களுக்கு வந்து விடும். நாலு நாட்கள் பெற்றோர்களுடன் இருக்கலாம், இல்லை புகுந்த வீட்டிலாவது இருக்கலாம், ஆனால், செழியனோடு இருக்க வேண்டாம் என எண்ணமிட்டவள் அப்படியே உறங்கிப் போனாள்.
செழியன் அறைக்குள் வரும் போது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மனைவியை கண்டு சோக பெருமூச்சை எறிந்து விட்டு படுத்தான். தமிழுடன் பேசலாம் என சிந்தித்து வந்தவனின் மனம், அவள் உறங்குவதை கண்டு ஒன்றும் செய்ய இயலாமல் தூங்கினான்.
மறுநாள் இரவு சென்னைக்கு செல்லவதாக ஏற்பாடு. அதனால், காலையிலேயே தன் தந்தையின் முன் சிறு சிறுமியாய் மாறி கெஞ்சலான கண்களுடன் தன் விருப்பத்தை தெரிவித்தாள் தமிழ்.
“அப்பா இன்னும் ஒரு ரெண்டு நாள் லீவ் போட்டா இங்கயே வீக் என்டும் இருந்துட்டு போயிடுவேன்பா…. என்னப்பா சொல்றீங்க?”
“நான் வேணாம்னா சொல்ல போறேன். ஆனா, உங்க ரெண்டு பேருக்கும் லீவ் கிடைக்குமா?”
இதனை கேட்டு ஒரு நொடி அமைதி காத்தவள், பின் அம்பில் இருந்து ஏய்த வில்லாக பாய்ந்தாள்.
“அவரு வேணும்னா போட்டும்பா. எனக்கு இங்க இருக்கனும் போலிருக்கு. ப்ளீஸ்பா, முடியாதுனு சொல்லாதீங்க.”
நேற்று நடந்த நிகழ்வுகளின் தாக்கத்தில் பேசுகிற பெண், அவருக்கு இன்னமும் சிறு பிள்ளையாகவே தோன்றினாள். “அழகி இது எல்லாம் என்ன சின்ன பிள்ளைதனமா, ஹ்ம்ம்?? நீ சொல்றது எப்படி தெரியுமா இருக்கு… மிஸ், இவன் என்னோட பென்சில் ஒடச்சுட்டான் அவன் கூட நான் உக்கார மாட்டேன்னு சொல்ற எல்.கே.ஜி. பிள்ளை மாதிரி இருக்குமா….”
இதை கேட்டதும் துணுக்கென்று தமிழழகியின் கண்களில் இருந்து கண்ணீர்கள் சொட்டின. அதை பார்த்து கேசவன் பதறுவதற்குள், தமிழே பேசத் துவங்கினாள்.
“ஏன்பா என்னை விட அந்த பாழா போன ரக்ஷன் தான் முக்கியம்னு அவரு போறாரு! அது உங்களுக்கு சின்ன விஷயமா? எனக்கு கூட தான் அபினவ்னா பிடிக்கும்…. ஆனா, அவரா அபினவ்வானு யாராவது கேட்டா யோசிக்காம சொல்வேன், அவரு தான்னு. ஆனா, அவருக்கு அப்படி இல்லபா…. இது சின்ன பிள்ளைதனமான விஷயமா??”
“எப்போடா செழியன் அப்படி சொன்னாரு? அவருக்கும் உன்னை தான் பிடிச்சுருக்குடா… புரிஞ்சுக்கோ…”
“இல்லபா வாய் வார்த்தையா வேணும்னா அவரு சொல்லலாம். ஆனா, உண்மையில அப்படி இல்ல….”
“சரிடா அதை கூடவே இருந்து தான் சரி பண்ண முடியும். தனியா இங்க இருந்தா சரியா போயிடும்மா? மேல பிரச்சனை தான் ஜாஸ்தியாகும். சம்மந்தி, சசி தங்கச்சிக்கு இந்த விஷயம் தெரிஞ்சா எவ்வளவு கஷ்டப்படுவாங்க தெரியுமா?”
எல்லாவற்றையும் விட அவளின் மாமனார், மாமியார் என்றவுடன் தமிழ் சற்றே யோசிக்க ஆரம்பித்தாள். திருமணம் ஆனது முதல் தெளிந்த நீரோடையாய் ஓடும் அவர்களின் தூய அன்பை நினைத்து, அவர்களுக்காக வேணும் தான் இங்கே தங்கக் கூடாது என முடிவெடுத்து செழியனுடன் பயணிப்பதற்கான முன்னேற்பாடுகளை செய்தாள்.
அன்று முழுக்க செழியன் வீட்டிலேயே இருந்தான். தமிழ், “சாப்பிட அம்மா கூப்பிட்டாங்க”, “கொஞ்சம் தள்ளுங்க”, “பேக்ல எல்லாத்தையும் எடுத்து வைச்சாச்சா?” என்பது போன்று ஒன்றிரண்டு வார்த்தைகள் அவனிடம் பேசினாள்.
அதையே எட்டாம் அதிசயமாக பாவித்து, உடனுக்குடன் பதில் அளித்தான் செழியன். அப்படி இப்படியென கிளம்பி, சென்னை செல்லும் பேருந்தில் இருவரும் பயணித்தனர். வரும்போது இருந்த நெருக்கத்தில் இப்போது பத்து சதவீதம் கூடயில்லை என்பதை வலியுடன் உணர்ந்து கண்களை மூடி தூங்க முயன்றான் செழியன்.
அவன் தான் முயன்றான், தமிழ் தூங்கியே விட்டாள். அவள் கொஞ்சமேனும் பேசுகிறாளே என மனதை தேற்றிக் கொண்டு உறக்கத்தில் ஆழ்ந்தவன், சென்னை சென்ற பிறகும் அதுவே மேகா சீரியலாக தொடரும் என நினைக்கவில்லை. சில நாட்கள் இப்படி முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு நடமாடுவாள் பின் சரியாகி விடுவாள் என்றே யூகித்தான்.
ஆனால், தமிழின் மனதில் இருந்த வைராக்கியத்தை அவன் அறியவில்லை…. அவனாக தன்னை கூப்பிட்டு பேசாமல், தானும் முழு மனதாக பேசக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தாள் அவன் தர்ம பத்தினி! இப்படி விதியே என்று ஒன்றிரண்டு வார்த்தைகளுடன் அவள் பேச்சு குறைவதை அவன் பொறுக்காமல் ஒரு வாரம் கழித்து தமிழை நிறுத்தி கேள்விக் கேட்டான்.
“இன்னும் எத்தனை நாள் இப்படி சரியா பேசாம இருக்கப் போற? நீ தான ஒரே வீட்டுக்குள்ள இருந்துட்டு பேசாம இருக்க மாட்டேன்னு சொன்ன? இப்போ இப்படி பண்ற?”
சமையல் அறைக்குள் செல்ல இருந்தவளை கைகளை பிடித்து நிப்பாட்டி செழியன் கேட்க, அவன் கேள்விக்கு பதில் சொல்லாமல் அவன் பிடித்திருந்த அவளின் கைகளையே முறைத்து பார்த்தாள்.
அவளின் முறைப்பின் பின் இருக்கும் காரணம் தெரிந்தும் செழியன் அவளின் கைகளை விடவில்லை….!! இருவரின் பிடிவாதமும் ஒன்றோடு ஒன்று முட்டிக் கொண்டு நின்றது நேர் கோட்டில்…

Advertisement