Advertisement

அத்தியாயம் 7

 

தன் வீட்டிற்கு திரும்பிய இளவேந்தனிடம் ஒரு வார்த்தை கூட சுந்தரபாண்டியன் நடந்ததை பற்றி கேட்கவில்லை. அமைதியாக சோபாவில் அமர்ந்திருந்தவர் அசையாது அமர்ந்திருக்க இளவேந்தன் அவர் அருகில் சென்று அமரவும்,துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு எழுந்து சென்றுவிட்டார். ரங்கநாயகி இதுவரை அவர் அறையை விட்டு வெளியே வந்திருக்கவே இல்லை.

 

செவ்வி எப்போதும் போல் சமையலறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவள் மதிமாறன் வந்து அமரவும் அவனுக்கு உணவை எடுத்து வைத்தாள். ஆனால் அவனும் பெரிதாக இவனை கண்டுகொள்ளாமல் உண்டுமுடித்து கிளம்பிவிட, செவ்வி தன் மாமியாருக்கு உணவை எடுத்துகொண்டு அவர் அறைக்கு சென்று விட்டாள்.

 

ரங்கநாயகி நேற்று இரவு இவன் செய்த காரியத்தை மதிமாறன் மூலம் கேள்விப்பட்ட அதிர்ச்சியில் இருந்து வெளியே வரவே இல்லை. என்ன காரியம் செய்ய பார்த்திருக்கிறான்? இவனை இப்படியா வளர்த்தேன் நான் ? இவன் செய்த செயலுக்கு என் மகளின் வாழ்வும் கேள்விக்குறி ஆகி இருக்குமே? என்ன நினைத்துக் கொண்டிருக்கிறான் இவன் ? என்று கோபப்பட்டவருக்கு மனது ஆறவே இல்லை.

 

இனி அவனிடம் பேசுவதில்லை என்று முடிவெடுத்துக் கொண்டவர், அவன் முகத்தில் விழிக்க கூடாது என்பதற்காகவே அறையை விட்டு வெளியே வராமல் அமர்ந்திருந்தார். மதியழகி எங்கே என்று கூட தெரியவில்லை இப்போதுவரை. அவள் அறையில் இருக்கிறாளோ என்னவோ ஆனால் அவளும் இவன் வந்ததிலிருந்து இவன் கண்ணில் படவே இல்லை.

 

குட்டி இளாவும் இன்னும் உறக்கம் விழித்து இருக்காததால் அந்த வீட்டில் அந்த நேரம் இளாவை கண்டுகொள்பவர் யாருமில்லாமல் போக, அமைதியாக சோபாவில் அமர்ந்திருந்தவன் எழுந்து மீண்டும் வீட்டை விட்டு வெளியேறி விட்டான். அவனுடைய மில்லுக்கு சென்றதும் ஏதோ அவனின் ராஜ்ஜியத்திற்கு வந்துவிட்டது போல் ஒரு உணர்வு ஏற்பட, அனைத்து கவலைகளையும் மறக்க தன்னை வேளையில் ஈடுபடுத்திக் கொண்டான். மதியம் உணவு நேரமும் வீட்டுக்கு செல்லவில்லை. இரவு உணவு முடிந்து உறங்குவதற்கும் வீடு செல்லவில்லை.

 

அவனின் அன்பு உடன் இருந்ததால் போராடி எப்படியோ இரவு உணவை உண்ண வைத்திருந்தான்.  ஆனால் அவன் எவ்வளவோ எடுத்துக்கூறியும் வீட்டுக்கு செல்ல மறுத்துவிட்டவன் மில்லிலேயே உறங்குவதற்கு ஆயத்தமாகிவிட, அன்பு அவன் வீட்டிற்கு சென்று விட்டு திரும்பியவன் இரண்டு போர்வைகளை கொண்டு வந்திருந்தான். இருவரும் மில்லிலேயே உறங்கவும் செய்தனர்.

 

இவன் கதை இப்படி இருக்க தனஞ்செயனின் வீட்டிலோ அவன் வீட்டுக்குள் நுழைந்த நேரம் விசாலம் தான் முதலில் அவன் கண்ணில் பட்டார். தாமரை அறையில் இருந்திருப்பாள் போலும். இவன் அம்மா என்று நெருங்கிய நேரம் நொடியும் தயங்காமல் அவன் கன்னத்தில் தன் கையை இறக்கி இருந்தார் அவர்.

 

இதுவரை விளையாட்டாக கூட மகனை கடிந்து கொண்டவர் இல்லை விசாலம். அவர் அவனை அடித்து என்ன கடிந்து பேசி கூட நினைவு இல்லை தனாவுக்கு. அப்படிப்பட்ட தாய் இன்று கையை நீட்டி அடித்திருக்க தனாவால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. ஒரு வார்த்தை கூட பேசாமல் அவன் தலை குனிந்து நிற்க, அவன் தந்தை தான் பதறி ஓடி வந்தவர் ” என்ன பண்ற சாலா நீ. எதுக்கு இப்போ புள்ளைய அடிக்கிற.தோலுக்கு மேல வளர்ந்த பிள்ளையை கைநீட்டி அடிப்பியா ” என்று அவர் சத்தம் போடவும்

 

” ஏன் பேசமாட்டிங்க. நீங்களும் ஆம்பளைதானே அதான் உங்க மகன் பண்ணது தப்பா தெரியலையோ என்னவோ. ஆனா எனக்கு அப்படி இல்ல. என் மகன் தப்பு பண்ணா நான் அடிப்பேன். அவன் எத்தனை வளந்தாலும் என் புள்ள நான் அடிப்பேன் ” என்று அவர் கத்தவும்

” ஆத்தா உன் புள்ள தான் நானும் இல்லன்னு சொல்லல. ஆனா இப்படி வாடிப்போய் நிக்குறான். நீயும் கைநீட்டுறியே தாங்குவானா ” என்று உரைக்க

 

தனா வாயை திறந்தவன் ” விடுங்கப்பா. நீ அடிம்மா. நான் செஞ்சது தப்புதான். எனக்கு தெரியும். ஆனா தமரைய காணும்ன்ன உடனே என்ன பண்றது தெரியல.அந்த நேர கோவத்துல பண்ணிட்டேன் ” என்று அவன் தலை குனிந்தவாறே கூறவும்

 

தன் மகனை அறிந்தவராக ” தப்பு தனா. உன் தங்கையை காணும்ன்னு நான் பதறின மாதிரி தான ரங்குவும் பதறி இருப்பா. நம்ம வீட்லயும் ஒரு பொண்ணு இருக்காளே.அதையாவது யோசிச்சு இருக்கணும்ல நீ ” என்றவருக்கு அப்போதும் மனது ஆறவில்லை.

 

” தப்புதான் மா. இனி இப்படி கோபப்படமாட்டேன்மா. மன்னிச்சுடு ” எனவும்

” போ. போய் குளி. சாப்பாடு எடுத்து வைக்கிறேன் ” என்று உள்ளே செல்ல, மாணிக்கம் தன் மகனின் கன்னத்தை வருடியவாறு ” அவ ரொம்ப கோவமா இருந்தாப்பா. அதான் சட்டுன்னு கைய நீட்டிட்டா.  சங்கடப்படாதப்பா ” என்றதும்

 

“பா . அம்மா அடிக்காம இருந்தா தான் சங்கடமா இருந்து இருக்கும். நான் பண்ணதும் தப்புதானே. மன்னிச்சிடுங்கப்பா”

” அட என்ன தம்பி நீ. நீ செஞ்சது தப்புன்னு நினைக்கிறல்ல அதுவே போதும். விட்டுட்டு போய் அடுத்த வேலைய பாருப்பா. இதை எப்படி சரி செய்றதுன்னு ஐயா பார்த்துக்கறேன்.” என்றவர் அவனை குளிக்க அனுப்பினார்.

 

அதன்பிறகு அவன் வேலைகள் எப்போதும் போல் இயல்பாகவே நடக்க,  ஆனால் அத்தனை வேலைகளுக்கு நடுவிலும் அழுது வடிந்த கண்களோடு அவனை தொல்லை செய்து கொண்டிருந்தாள் மதியழகி.

இதற்கிடையில் சுந்தரபாண்டியன் மாணிக்கத்தை அவரது தோப்பில் வைத்து சந்தித்தவர் தன் மகனின் செயலுக்காக மன்னிப்பு வேண்ட மாணிக்கமோ அவரின் கைகளை பிடித்துக் கொண்டவர்

 

” நீ ஏன் பாண்டியா மன்னிப்பு கேட்கிற. அவன் பண்ணதுக்கு நீ என்ன செய்வ ” என்றவர் மேலும் ” அப்படியே பார்த்தாலும் நானும் உன்கிட்ட மன்னிப்பு கேக்கணும்ல ” என்றுவிட

 

” என்ன பண்றது மாணிக்கம் இந்த பயலுக இப்படி செய்வானுங்கன்னு நாம நெனைக்கலையே ” என்று கூற

 

” மதி என்ன சொல்லுது. புள்ள நல்லா இருக்காளா” என்று மாணிக்கம் கேட்கவும்

” எங்க நேத்து எல்லாம் அழுதே கரைஞ்சா மாப்பிள. அவ அண்ணிதான் கூடவே இருக்கா. சரியாகிடுவா ” என்றதும்

” பாண்டியா, நான் கேக்குறேன்னு தப்பா எடுத்துக்காத. நீ தாமரையை பொண்ணு கேட்டு நான் இல்லன்னு சொல்லி இருக்கேன். ஆனா இப்போ நானே கேட்க்கிறேன். மதியை என் வீட்டுக்கு மருமகளா அனுப்பி வைப்பியா. ”

 

” என் மகன் இதுவரைக்கும் எந்த பொண்ணையும் கண்ணால கூட பார்த்தவன் கிடையாது. அவன் உன் பொண்ணை தேடிப்போய் வம்புக்கு இழுத்துட்டான். கடவுள் பிராப்தம் இதுதான்னா நாம ஏன் அத மாத்தணும். என் மருமகளை என் வீட்டுக்கு அனுப்புவியா. தங்கமா என் மகன் பார்த்துக்குவான் ” என்று சுந்தரபாண்டியனின் கையை பிடித்துக் கொண்டு கேட்க

 

சுந்தரபாண்டியன் சிறிதுநேரம் யோசித்தவர் ” நீ கேட்டது சந்தோஷம்தான் மாணிக்கம். ஆனா என் புள்ள கலங்கி நிக்கிறானே. அவனை விட்டுட்டு நான் எப்படி மகளை மட்டும் பார்ப்பேன். அவன் உன் மகளை தூக்கிட்டு போற வரைக்கும் துணிஞ்சி இருக்கான்னா அதுலயே தெரியலையா அவன் வைராக்கியம் என்னனு. நிச்சயமாக அவன் உன் மகளை தவிர இன்னொருத்தியை நிமிர்ந்து கூட பார்க்கமாட்டான் ”

 

” அப்படி இருக்கும்போது நான் எப்படி என் பொண்ணு வாழ்க்கையை மட்டும் யோசிக்க முடியும். அவன் என் அண்ணனை மாதிரி தனி மரமா நின்னுட்டா சத்தியமா சொல்றேன் என் பொண்டாட்டி தாங்கமாட்டா மாணிக்கம். அதுவும் உன் மகனை கட்டிக்கிட்டு என் மக வந்து போக இருந்தா துடிச்சு போயிடமாட்டானா.”

 

” நான் எப்படி என் மகனை அப்படி விடமுடியும். உன் மக விஷயத்தை தவிர அவன் இதுவரைக்கும் வேற எதுலயும் தவறியது இல்ல. சுயம்பு மாதிரி அவனே வளர்ந்து நிற்கிறான். அவன் தடுமாறின ஒரே இடம் உன் மக தான். அம்புட்டு ஆசையா வச்சிருக்கான் மனசுல. அவனை எப்படி விட சொல்ற மாணிக்கம் ” என்று கேட்கவும்

 

மாணிக்கம் ” ஏலே என் மருமகன் ஏன்லே தனியா நிற்கணும். நீதான் ஏற்கனவே என் பொண்ணை கேட்டுட்டியே. நானும் ஒரு வார்த்தை கேட்டா தானே முறையா இருக்கும்.அதனால தான் கேட்டேன். எப்போ எதை பதியும் யோசிக்காம என் பொண்ணுதான் முக்கியம்ன்னு இந்த அளவுக்கு இறங்கிட்டானோ அப்போவே முடிவு பண்ணிட்டேன் அந்த பைய தான் என் மருமகன்னு. நீ சரின்னு சொல்லு.” என்று தடாலடியாக கேட்கவும்

 

சுந்தரம் நெகிழ்ந்தவர் ” சந்தோஷம் மாணிக்கம். என் கவலையெல்லாம் ஒண்ணுமில்லாம போச்சு. எல்லாம் நல்லபடியா நடக்கணும்பா ” என்று சந்தோஷத்தில் திக்குமுக்காடி போக

 

” எல்லாம் நடக்கும் பாண்டியா. இந்த முறை யார் என்ன செய்றாங்கன்னு நான் பார்க்கிறேன். என் மக தான் உன் வீடு மருமக. நீ ஆக வேண்டிய வேலைய பாரு.” என்றவர் மேலும்

 

” இன்னிக்கே நல்ல நாள் தான். நெறைஞ்ச முகூர்த்த நாள் இன்னிக்கு. நீ உன் அண்ணனுக்கு போன போட்டு பேசு. காதும் காதும் வச்ச மாதிரி இன்னிக்கே சுருக்கா முடிப்போம் ” என்றுவிட

 

சுந்தரபாண்டியன் வீரபாண்டியனுக்கு அழைத்தார். வீராவுக்கு இங்கு நடந்த அனைத்தும் ஏற்கனவே ஆதித்யன் அவருக்கு அழைத்து சொல்லி இருக்க, இப்போது சுந்தரபாண்டியன் அழைக்கவும், எடுத்து பேசியவர் மாணிக்கத்திடமும் பேசிமுடிக்க திருப்தியாக உணர்ந்தார் வீரபாண்டியன். உள்ளுக்குள் இளவேந்தன் மீது கோபம் கனன்றாலும் இது நேரமில்லை என்று முயன்று அதை ஒதுக்கி தந்தையாக அவன் வாழ்வுக்கு வேண்டியதை செய்துவிட நினைத்தவர் சுந்தரபாண்டியனிடம்

 

” நீ பேசி முடி சுந்தரம். கூட வேதா ஐயாவை வச்சுக்கோ.மாணிக்கம் சொல்றமாதிரி இன்னிக்கே முடிச்சிடு. தள்ளி போடா வேண்டாம். நான் ஐயாகிட்ட பேசிடறேன். நீயும் மாணிக்கமும் ஒருமுறை அவரை பார்த்து பேசிடுங்க. எல்லாம் பேசி முடிச்சிட்டு சொல்லு” எனவும்

 

” அண்ணே நீங்க இல்லாம எப்படிண்ணே ” என்று சுந்தரபாண்டியன் இழுக்க,

” அட என்னடா நீ. அதான் நான் பேசிட்டேனே. நிச்சயத்துக்கு வந்து சேர்ந்திருவேன். இப்போ ஐயாவ வச்சு பேசி முடி. ஆதியும் கூட இருக்கட்டும். அவன் பார்த்துக்குவான் எல்லாம்.” என்றுவிட

 

சம்பந்திகள் இருவரும் நிறைவாக ஒருவரை ஒருவர் கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டு வேதமாணிக்கத்தை சந்தித்து பேசி விவரம் தெரிவிக்க அவரும் மகிழ்ந்துபோனவராக ஆதித்யனை அழைத்து பேசிவைக்க காரியங்கள் வேகவேகமாக நடந்தது. அன்று மாலை தாம்பூலம் மாற்றிக்கொள்வதாக பேசிக் கொண்டு நேரம் குறித்தவர்கள் இருவருக்கும் பொதுவாக வேதமாணிக்கத்தின் வீட்டில் வைத்து பேசி முடிப்பது என்று முடிவெடுத்துக் கொண்டு பிரிந்து சென்றனர்.

இவர்கள் இப்படி காரியம் முடித்திருக்க, சம்பந்தப்பட்டவர்களோ இது எதையும் அறியாமல் அவரவர் கவலையில் மூழ்கி இருந்தனர். திருமணம் என்றதும் இதில் யார்யாரிடம் என்ன வகையான உணர்வுகள் வெளிப்படுமோ.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement