Advertisement

அத்தியாயம் 6

தாமரையை அன்பு அழைத்து வந்திருக்க, மதியழகியை குமார் அழைத்து வந்திருந்தான். இருவரும் சொல்லி வைத்தாற்போல் வாசலில் இவர்களை இறக்கிவிட்டுவிட்டு பின்னங்கால் பிடரியில் பட ஓடிவிட, தாமரை முதலில் வந்தவள் தன் அண்ணனை கட்டிக் கொண்டு அழ ஆரம்பித்திருந்தாள். சரியாக அந்த நேரம் தான் மதியழகி உள்ளே நுழைந்தவள் அங்கு தன் மதி அண்ணனை காணவும் அவனிடம் சென்று ஒண்டிக் கொண்டாள்.

இருவரின் அழுகையும் நிற்காமல் போக ஆதித்யன் இருவரையும் அதட்டி உணவு உண்ணுமாறு அனுப்பி வைக்க, தாமரை வேந்தனை முறைத்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தாள் என்றால் மதியழகி தனாவின் புறம் திரும்பக்கூட இல்லை. குனிந்த தலை நிமிராமல் அவள் சென்று சிவகாமியிடம் நின்றுகொள்ள  அவர்களை உள்ளே அழைத்து சென்று முகம் கழுவ வைத்த சிவகாமி இருவரையும் அந்த அறையிலேயே சாப்பிட வைத்தார்.

தாமரையை பார்க்க பாவமாகி போனது சக்திக்கு. எப்படி பேசுபவள் எவ்வளவு தைரியமான பெண் இன்று ஒரே நாளில் அழுதழுது முகம் சிவந்து போய் இருக்க, பயந்துபோய் காணப்பட்டாள் அவள். மதியழகியும் சற்றும் குறையாதவகையில் பேய் அறைந்தது போல் இருக்க, சிவகாமி இருவரையும் தேற்றியவர் இருவரையும் சாப்பிட வைத்திருக்க இருவரும் சிறிது நேரம் கழித்தே பெண்கள் நால்வரும் அந்த அறையை விட்டு வெளியே வந்தனர்.

மதிமாறன் தங்கையை கண்டதும் ” நான் மதியை கூட்டிட்டு கிளம்புறேன் ஆதி. வீட்ல அம்மா பயந்து போய் இருக்காங்க.” என்று கூற

ஆதித்யன் யோசித்தவன் பாட்டியிடம் ” பாட்டி நீங்க மதியை கொண்டு போய் விட்டுட்டு வாங்க. அவன் பின்னாடி வண்டில வரட்டும். இந்த நேரத்துல ஊருக்குள்ள போய் நின்னா தேவையில்லாத பேச்செல்லாம் வரும். இந்த விஷயம் இந்த வீட்டை தாண்டி வெளில போக கூடாது.” என்று அழுத்தமாக கூற சிவகாமி ஆமோதிப்பாக தலையசைத்தவர் மதியுடன் புறப்பட, மதிமாறனும் தலையசைத்து கிளம்பினான்.

அடுத்து தாமரையை சக்தியுடன் இன்னொரு காரில் ஏற்றி அனுப்பியவன் ” ஊர்ல யார் கேட்டாலும் சக்தி வீட்ல படிச்சிட்டு இருந்தேன். நேரமாகவும் பாட்டி டிரைவரோட அனுப்பி வச்சாங்கன்னே சொல்லு தாமரை” என்று சொல்லி வேறு அனுப்பி இருந்தான். பெண்கள் கிளம்பிவிட அங்கேயே நின்றிருந்த தனாவும் வேந்தனும் நாங்களும் கிளம்புறோம் என்பது போல வாசல் பக்கம் அடியெடுத்து வைக்க ” இருங்க மாப்பிள்ளைங்களா. ரெண்டு பேரையும் நான் போகவே சொல்லலையே.” என்றவன் உள்ளே சென்று தன் அலமாரியில் இருந்த கைவிலங்கை கொண்டு வந்து இருவரின் வலது கையையும் ஒரே சேர சோபாவின் கைப்பிடியொடு சேர்த்து பிணைத்துவிட்டான்.

வேந்தன் ” ஆதி என்ன பண்ற. விடுடா என்னை.” என்று கத்த கத்த அவன் கைகளில் மாட்டி விட்டவன், தனாவின் கையிலும் பிணைத்து விட்டான் அந்த விலங்கை. வேந்தன் ஆதியை பார்த்து ” இதெல்லாம் சரியே இல்ல ஆதி. மரியாதையா என்னை கழட்டி விடுடா ” என்று கத்தவும்

” அத்தனை கொழுப்பாடா ரெண்டு பேருக்கும். வீட்டு பொம்பளைங்க மேல கைவைக்க சொல்லுதா.இதே தப்பை வெளிய எவனாவது பண்ணி இருந்தா பொட்டுன்னு போட்டுட்டு போயிட்டே இருந்துருப்பேன். உங்க ரெண்டு பேரையும் பெத்தாங்களே அவங்க மூஞ்சிக்காக இத்தோட விடறேன். உனக்கு வாய் வேற ஏண்டா” என்று வேந்தனின் கன்னத்தில் லேசாக ஒரு அறை அறைந்தவன் ” விடியுற வரைக்கும் இப்படியே இருங்கடா. அந்த புள்ளைங்கள எப்படியும் கட்டி போட்டு தான வச்சிருப்பீங்க. ரெண்டு பேரும் இப்படியே இருங்க.அப்போதான் புரியும் ” என்றவன் தன் அறைக்கு சென்றுவிட்டான்.

வேந்தன் கோபத்தில் கத்திக் கொண்டே இருக்க, தனாவிற்கு இப்போதுதான் தான் செய்த தவறே புரிய ஆரம்பித்திருந்தது. அதுவும் ஆதித்யன் தன் உடன்பிறந்தவளை தன் வீட்டுக்கு அனுப்பவே இத்தனை பாதுகாப்போடு அனுப்பி வைத்திருக்க தான் ஒரு பெண்ணை என்ன செய்ய பார்த்துவிட்டோம் கடவுளே” என்று நொந்தவன் ” தான் செய்த தப்புக்கு இந்த தண்டனை தேவைதான்.” என்று எண்ணிக் கொண்டவனுக்கு மதியழகியின் அழுதமுகம் நினைவுக்கு வர ஆதித்யன் தண்டனையில் தவறே இல்லை என்று தோன்றிவிட்டது.

வேந்தனோ ஆதித்யன் போன திசையை பார்த்துக் கத்திக் கொண்டிருந்தவன் அவனின் உறுதி தெரிந்தது என்பதால் எப்படியும் விடமாட்டான் என்பது புரிந்துபோக நொந்துபோனவனாக சோபாவின் கைப்பிடியில் தலையை சாய்த்து அமர்நதுவிட்டான்.அவனின் கண்ணில் முறைத்து கொண்டே தன்னை கடந்து சென்ற தாமரையின் முகம் மின்னி மறைய “ஏற்கனவே மதிக்கமாட்டா, இதுல நானா போய் மொக்கை வாங்கிட்டேன்.இனி திரும்பிக் கூட பார்க்கமாட்டா போலவே” என்று புலம்பிக் கொண்டிருந்தான்.

தாமரையை விட்டுவிட்டு வீடு திரும்பிய சக்திக்கு இருவரையும் பார்த்து சிரிப்பு பீறிட்டது. இருவரும் ஆளுக்கு ஒரு புறம் திரும்பிக் கொண்டு அமர்ந்திருக்க, லேசாக பாவமாகவும் இருந்தது இருவரையும் பார்த்து. இவள் அருகில் செல்லவும் வேந்தன் வேகமாக ” சக்தி என்னை கழட்டிவிட சொல்லு அவன்கிட்ட. மதியத்துல இருந்து சாப்பிடக்கூட இல்ல சக்தி. வீட்ல அம்மாவை போய் பார்க்கணும் ” என்று அவன் வரிசையாக கூற

சக்திக்கு ஒருநொடி தாமரையின் முகம் மின்னி மறைந்தது. எப்படி அழுது இருந்தாள். இப்போது விசாலமும் எப்படி அழுதார் அவளை பார்த்ததும் என்று யோசித்தவள் இப்படியே இரு என்று மனதில் நினைத்துக் கொண்டவள் அவன் பசி என்றதால் உணவை எடுக்க சமையல் அறைக்கு சென்றாள்.

அந்த நேரம் ஆதி கீழே இறங்கி வந்தவன் ” என்ன பண்ற ” என்று கேட்க

” இல்லங்க. இளா பசிக்குதுன்னு சொன்னான். தனா அண்ணாவும் இன்னும் சாப்பிட்டு இருக்கமாட்டாங்க ல்ல” என்றதும்

” ஒரு வேளை பட்டினி கெடந்தா உன் அண்ணனும், நண்பனும் செத்து போக மாட்டானுங்க. போய் படுடி” என்றான்.

சக்தி ” பாவங்க. சாப்பாடு மட்டும் கொடுத்து போய்டறேன் ” எனவும் அவளை முறைத்தவன்

“உன்னை மேல போன்னு சொன்னேன் சக்தி ” என்று அழுத்தமாக கூற, எப்போதாவது வெளிவரும் அந்த குரலை எப்போதும்போல் தட்டாதவள் அமைதியாக மாடியேறி சென்றுவிட்டாள்.

வேந்தனோ “அட கொலைகாரப்பாவி” என்று மனதில் அவனை திட்டிக் கொண்டவன் ” தாத்தா எங்கே ” என்று யோசித்தவன் “தாத்தா, தாத்தா” என்று கத்த

“டேய்.அவருக்கு மாத்திரை கொடுத்து படுக்க வச்சிட்டுதான் உனக்கு ஹாண்ட்கப் போட்டேன். மரியாதையா வாய மூடிட்டு கெட எரும” என்று அசட்டையாக கூறிவிட்டு அவனும் மேலே ஏறி சென்றுவிட்டான்.

வேந்தன் இப்படி ஏதாவது செய்துகொண்டே இருக்க, முதலில் தனா அவனை முறைத்து கொண்டிருந்தவன் ஒரு கட்டத்தில் “எப்படியோ போய் தொலைடா” என்று கண்களை மூடி விட்டான். சிவகாமி வெகுநேரம் கழித்தே வீட்டுக்கு வர வந்தவர் கண்ணில் பட்டனர் இருவரும். பேரனின் செயலில் அவர்கள் பார்க்கும்படியாகவே நகைத்துக் கொண்டவர் வேந்தனை ஒரு பார்வை பார்க்க அவனோ “இந்த கிழவிக்கு கொழுப்பை பாரேன்” என்பதுபோல் முறைத்தவன் எதுவும் பேசவில்லை. சிவகாமி இருவரையும் பார்த்தவருக்கு மனம் கேட்காமல் போக சமையலறைக்கு சென்றவர் உணவை ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொண்டு வந்து அவர்கள் அருகில் அமர்ந்தவர் தனாவின் வாய் அருகில் கொண்டு செல்ல ஒரு நொடி கண்கள் கலங்கி போனது அவனுக்கு.

“வேண்டாம் பாட்டி. பசிக்கல” என்று அவன் மறுக்கவும்

“ஏன்ய்யா பசி இல்ல. செஞ்ச தப்பை நெனச்சி கண்ணுல தண்ணி வருது பாரு. அப்போவே நீ செஞ்ச தப்பு நீர்த்து போச்சுய்யா. சாப்பிடு. உன் ஆத்தாக்காரி எப்படியும் உன்னை நெனச்சு சாப்பிடமதான் இருப்பா. நீ சாப்பிடன்னு நான் அவளுக்கு சேதி சொல்லணும்ல சாப்பிடு” என்றவர் அவன் மறுக்க முடியாதவாறு அவன் வாயில் உணவை திணித்திருந்தார்.

வேந்தனுக்கு உணவை ஊட்ட அவர் முற்படவும் “கிழவி நான் இங்க இருக்கேன். அவனுக்கு மொதல்ல ஊட்டி விட்டல்ல” என்பது போல முறைக்க

“ஏலேய். பசி கண்ணுல தெரியுதேன்ன்னு சோறு ஊட்டுறேன். இல்ல நீ பண்ண காரியதுத்துக்கு விஷத்தை வச்சிருப்பேன். மரியாதையா உண்ணு” என்றவர் அவனுக்கு ஊட்டி கொண்டே

“இதென்னடா பழக்கம் பொட்டச்சிய தூக்கிட்டு போறது. வெக்கமா இல்லையாடா உனக்கு. உன் அப்பன் வளர்ப்பு தப்புன்னு ஊருக்கு சொல்ல போறியா”

“ஆம்பளையா லட்சணமா அவ அப்பன்கிட்டேபோய் பொண்ணு கேட்டு இருந்தா என் பேரன் தங்கமுன்னு நானே முடிச்சி வச்சிருப்பேன்.ஆனா நீ கூறுகெட்ட தனமா காரியம் முடிச்சிருக்க” என்று அவனை வரிசையாக திட்டி கொண்டே இருவருக்கும் உணவை ஊட்டி முடித்தவர்

“இங்க பாரு தனா. அவனை திட்டுன கெழவி என்னை திட்டலன்னு நினைக்காத. அவன் பண்ணது ஒருவகையில் தப்புன்னா நீ செஞ்சது அதுக்கும் மேல. அவன் பண்ணதுக்கு நீ அவனை வெட்டி போட்டு இருந்தா கூட தப்பு இல்ல.ஆனா வீட்டு பொம்பளைங்கள உங்க பகைக்கு இழுக்க கூடாது. இனியாவது புரிஞ்சி நடங்க ரெண்டு பெரும்” என்றவர் அவரும் உறங்க சென்று விட்டார்.

தனாவிற்கு தான் செய்த தவறு மண்டையில் அடித்தது போல் புரிய, காலையில் தன் தந்தையின் முகத்தில் எப்படி முழிப்பேன் என்பதே அவன் கவலையாக இருந்தது. மேலும் ஒருவேளை பஞ்சாயத்து கூடி இருந்தால் எத்தனை பெரிய அவமானமாக போய் இருக்கும். இரண்டு குடும்பத்திற்கும்” என்று நினைத்தவனுக்கு நெஞ்சம் கலங்கியது.அதோடு மதியழகியின் அழுத முகம் வேறு தொல்லை செய்ய உறக்கமே இல்லை அவனுக்கு.

வேந்தனோ கிட்டத்தட்ட பீதியில் இருந்தான். ஆதித்யன் எப்படியும் நடந்ததை வீரபாண்டியிடம் சொல்லிவிடுவான். ஏன் இந்நேரம் சொல்லிக்கூட இருக்கலாம். அவர் வேறு என்ன செய்ய போகிறாரோ என்று நினைத்தவனுக்கு தாய் தந்தை என்று வீட்டு உறுப்பினர்கள் முகம் வரிசையாக தோன்றி மறைய ” கடவுளே என்ன சொல்வேன் நான்” என்று அவனுக்கும் கவலையாகத்தான் இருந்தது.

என்ன ஆனாலும் பார்க்கத்தானே வேண்டும் என்று நினைத்தவன் கண்களை மூடி சோபாவில் தலையை சாய்த்துவிட்டான். தனா கிட்டத்தட்ட நடு இரவுக்கு மேல் ஒருவழியாக உறங்கி இருக்க, தூக்கத்தில் இருவரின் முகமும் அருகருகில் வந்திருக்க கிட்டத்தட்ட இருவரும் அணைத்தபடி படுத்திருக்க வேந்தன் தன் காலை தூக்கி தனாவின் மீது போட்டுக் கொண்டு படுத்திருந்தான்.

காலையில் எழுந்து வந்த ஆதித்யன் முதலில் பார்த்தது இந்த காட்சியைத்தான். சிரித்துக் கொண்டே தன் செல்போனில் படம் பிடித்துக் கொண்டவன் வேந்தனின் காலை ஓங்கி மிதிக்க அது கொடுத்த வலியில் “அம்மா” என்று கத்திக் கொண்டே எழுந்தான் அவன். அந்த சத்தத்தில் தனாவும் விழித்துவிட விலங்கை கழட்டியவன் இருவரையும் விடுவித்தான்.

தனா மீண்டும் ஒருமுறை ஆதித்யனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு வீட்டுக்கு கிளம்ப, வேந்தனோ எதுவும் பேசாமல் ஆதித்யனை முறைத்துக் கொண்டே கிளம்பி சென்றான்.

இவர்கள் இருவரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்ட ஆதித்யன் சுந்தரபாண்டியனையும், மாணிக்கத்தையும் தொலைபேசியில் அழைத்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருக்க, அதன் விளைவு அடுத்து வந்த நாட்களில் தெரிந்தது தனாவுக்கும், வேந்தனுக்கும்.

Advertisement