Advertisement

அத்தியாயம் 13

செவ்வி தன் அறைக்கு வந்தவள் அழுதுகொண்டே அமர்ந்திருக்க, மதிமாறன் உள்ளே வரவும் கண்களை துடைத்துக் கொண்டு அமைதியாக அமர்ந்துவிட்டாள் அவள். அவள் கண்ணை துடைத்துக் கொள்ளவும் பிள்ளையை அவளிடம் கொடுக்க, கையில் வாங்கி கொண்டவள் இளாவை தன் தோளில் கிடத்தி சமாதானம் செய்ய, அவன் பசியில் இருந்ததால் இன்னும் சத்தமாகவே அழுது கொண்டிருந்தான்.

அவன் அழுகையை நிறுத்துவதுபோல் தெரியாததால், அவனை கட்டிலில் விட்டு அவள் எழுந்துகொள்ள இன்னும் சத்தமாக வீறிட்டான் அவன். அவன் அழுகை அதிகமாகவும் அவள் நிற்க

” அவனை ஏன் இப்படி அழவிடற.கையில தூக்கு ” என்று அதற்கும் அவன் அதட்ட

” அவன் பசிக்கு அழறான் மாமா. பால் எடுத்திட்டு வர்றேன்.” என்று மெல்லிய குரலில் கூறியவள் வெளியேற, அவளையே பார்த்திருந்தான் அவன். பிள்ளை அழுது நான் இருக்கிறேன் என்று காட்டவும் அவனை கைகளில் தூக்கிக்கொண்டவனுக்கு மனைவி பின்னால் போக, குழந்தையை சமாதானம் செய்து கொண்டிருந்தான் மதிமாறன்.

அதே நேரம் செவ்வியும் பால் கலந்து எடுத்து வரவும், குழந்தையை அவளிடம் கொடுத்தவன் அமைதியாக அறையில் இருந்த சேரில் அமர்ந்துகொள்ள, செவ்வி குழந்தைக்கு பாலை புகட்டி உறங்க வைக்க, இளமாறன் அமைதியாக உறங்கி போனான்.

அவனை கட்டிலின் நடுவில் கிடத்தியவள் தானும் ஒருபுறம் படுத்துக் கொள்ள, அவர்களையே பார்த்துக் கொண்டிருந்த மதிமாறனுக்கு கோபம் பெருகியது. அதே கோபத்தோடு எழுந்து அவள் அருகில் சென்றவன் அவள் கையை முழங்கைக்கு மேலாக பற்றி அவளை எழுப்ப, அதில் அதிர்ந்து அவன் இழுத்த இழுப்புக்கு எழுந்து அமர்ந்தாள் அவள்.

“ஏண்டி அத்தனை பேர் முன்ன கைநீட்டி அடிச்சிருக்கேன். திட்டி இருக்கேன். ஒருவார்த்தை ஏன்னு கேக்கமாட்டியா. நீ பாட்டுக்கு போய் படுத்துட்ட. உனக்கு சொரணையே இல்லையா டி” என்று கத்த

கண்ணீரோடு அவனை நிமிர்ந்து பார்த்தவள் ” எனக்கு புரியும் மாமா. நீங்க எனக்காக தானே என்னை அடிச்சீங்க. உங்ககிட்ட எப்படி கோபப்படுவேன்.”

அவளின் புரிதல் இதமாக இருந்தாலும் ” நீ நெஜமாவே எருமைதான்டி. உனக்காக ன்னு சொன்னாலும் நான் எப்படி உன்னை அடிக்கலாம். அதை கேட்கமாட்டியா. சண்டை போட மாட்டியா ” என்று கேட்க

அவனின் வயிற்றில் முகம் புதைத்துக் கொண்டவள் ” நான் இன்னொரு ஜென்மம் எடுக்கணும் மாமா.உங்ககிட்ட சண்டை போட.இந்த ஜென்மத்துல எனக்கு வராது ” என்று கூற அவளை நிமிர்த்தியவன்

“எங்கிட்ட சண்டை போட வேண்டாம். ஆனா வேந்தனை கேக்கலாம் இல்ல. நான் உன் அண்ணிடா ன்னு அவனையாவது அடக்கி வைக்கலாம் ல. நீ முன்னாடியே அவனை கேட்டு இருந்தா இன்னிக்கு இப்படி பேசி இருப்பானா அவன்.” என்று கேட்க

” அவரே ஒரு நாள் புரிஞ்சிப்பாரு மாமா. நீங்க விடுங்க. கோபப்படாதிங்க.சரி ஆகிடும் ” என்று அவள் அவனை சமாதானம் செய்து அணைத்துக் கொள்ள, மதிமாறனால் அதை அப்படியே விடமுடியவில்லை. அவள்  அவளின் அன்னையின் செயல்களால் குறுகி போய் பேச மறுக்கிறாள் என்பதை யார் அறியாவிட்டாலும் அவன் அறிவானே.

“இதற்கு ஏதாவது செய்தே ஆகவேண்டும்” என்று முடிவெடுத்துக் கொண்டவன், பிள்ளையை நகர்த்தி படுக்கவைத்துவிட்டு மனைவியின் அருகில் படுத்துக் கொண்டான்.இருவரும் அருகருகே படுத்து இருந்தாலும் வெகுநேரம் உறங்கவே இல்லை. பின்னிரவில் ஒருவழியாக உறங்கி இருக்க, காலை மதிமாறன் முதலில் எழுந்துகொண்டவன் தான் குளித்து கிளம்பிவிட்டு அதன்பிறகே செவ்வியை எழுப்பினான்.

அப்போதும் அவளிடம் “கெளம்பு. போய் சக்தியை பார்த்துட்டு வருவோம்” என்று அழைக்க

” இப்போதான அங்கே போய்ட்டு வந்தோம். இங்க கல்யாண வேலை ஏகப்பட்டது இருக்கு மாமா. அதையெல்லாம் பார்க்க வேண்டாமா. நீங்க கிளம்புங்க” என்று அவனை அனுப்பிவிட்டாள் அவள்.

அவன் கிளம்பவும் வேகமாக அன்றைய வேலைகளை தொடங்கியவன் கடமை தவறாத மருமகளாக வேலைகளை முடித்துவிட்டு மாமனார் மாமியாரை உண்ண வைத்து மதியையும் கல்லூரிக்கு அனுப்பிவிட்டு மகனை கவனித்துக் கொண்டிருந்தாள் அவள். வேந்தன் அப்போதுதான் இறங்கிவர எப்போதும் அவனுக்கு உணவு எடுத்து வைத்துவிட்டு செல்பவள் இன்று அவன் தலையை கண்டதும் பிள்ளையை தூக்கிக் கொண்டு வீட்டின் பின்னால் இருந்த தோட்டத்தில் சென்று அமர்ந்து கொண்டு அவனை அங்கேயே விளையாட விட்டாள்.

தன் அண்ணியின் முதல் புறக்கணிப்பில் வேந்தன் அடிவாங்கியவனாக உணவை உண்ணாமல் மில்லுக்கு கிளம்பிவிட்டான்.

இங்கு தனஞ்செயன் நந்தினி பற்றிய யோசனையில் மூழ்கி இருக்க, நேற்று அவள் பேசியதே இன்னும் அவனை கொதிக்க வைத்துக் கொண்டிருந்தது. நேற்று அவளை பார்த்தபிறகு மதியை அழைத்துவந்து விட்டாலும் அவள் நந்தினியை பற்றி ஒருவார்த்தை கூட தவறாக பேசவில்லை. அதிலும் இவனோடு பேசுவதை கூட தவிர்த்தவள் “நான் வீட்டுக்கு போகணும் ப்ளீஸ் ” என்று கண்ணீரோடு கூற

அதற்குமேல் என்ன செய்ய முடியும் அவனால். ஊரின் எல்லையில் அவளை இறக்கிவிட்டவன் ஒரு ஆட்டோவை பிடித்து அவளை அதில் ஏற்றி அனுப்பி இருந்தான். இப்போதும் அவள் நினைவில் இருந்தவனுக்கு நந்தினி ஏனோ உள்ளுக்குள் உறுத்திக் கொண்டே இருந்தாள்.அவள் இதோடு விடமாட்டாள் என்று அவள் பார்வையே அவனுக்கு சொல்ல, என்ன செய்வது என்று யோசித்தவன் “இவளாவது ஏதாவது சொல்லலாம்ல” என்று மதியையும் அர்ச்சித்துக் கொண்டிருக்க மதியே அவனுக்கு அழைத்துவிட்டாள்.

ஏதோ புது எண்ணாக இருக்கவும், யாரென்று யோசித்துக் கொண்டே அவன் அழைப்பை ஏற்க மறுமுனையில் மதியழகி தயங்கி தயங்கி ” நான் மதி ” என்று கூறவும் எண்ணை பார்த்தவன்

” மதி ” என்று சந்தேகமாக இழுக்க

“ம்ம் . மதியழகி. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் ” என்று மெல்லிய குரலில் உரைக்க

அவள் குரல் ஏதோ போல் இருக்கவும் ” என்ன பேசணும் சொல்லு. எங்க இருக்க இப்போ ” என்று கேட்க

” காலேஜ்ல இருக்கேன். நீங்க வரமுடியுமா ” என்று கேட்க

” இன்னும் பத்து நிமிஷத்துல அங்க இருப்பேன். வை ” என்றவன் மொபைலை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு அவள் கல்லூரிக்கு கிளம்பினான். கல்லூரி மைதானத்தில் காத்திருந்தவள் இவன் வெளியே நின்று அழைக்கவும் வெளியில் வர அவளை தன் வண்டியில் ஏற்றிக்கொண்டு, அருகிலிருந்த அவன் நண்பனின் நர்சரிக்கு அவளை அழைத்து சென்றவன் அவன் நண்பனிடம் கூறி விட்டு அவளை தனியே அழைத்துச் சென்று என்ன விஷயம் என்று கேட்க

சற்று நேரம் அமைதியாக இருந்தவள் நேற்று வீட்டில் நடந்த அனைத்தையும் அவனிடம் கூறிவிட்டு அழ ஆரம்பித்தாள். அவன் “அழாத ” என்று கூறவும்

“என்ன பண்றது தெரியல. அண்ணனை பார்க்கவே முடியல. நந்தினியும் அவ அம்மாவும் கண்டிப்பா கல்யாணத்துல ஏதும் பிரச்சனை பண்ணுவாங்க.யார்கிட்ட சொல்றதுன்னு கூட தெரியல.

அப்பாவை பாசம் தடுக்குது. அவங்ககிட்ட அவரால பேச முடியல. அண்ணனை கோபப்படுத்திஅவங்க நெனச்சதை சாதிக்க நினைக்கிறாங்க. அண்ணன் நேத்து அண்ணியை வேற ரொம்ப பேசிட்டாங்க.

வீட்ல ரொம்ப பெரிய பிரச்சனை. என்னால ஆதி அத்தான் கிட்ட பேச முடியாது. நான் அவர்கிட்ட எந்த முகத்தை வச்சுட்டு பேசுவேன். நான் நெறைய தப்பு பண்ணி இருக்கேன். நந்தினியோட சேர்ந்து, ஆமா நான் ஆதி அத்தானை கட்டிக்கணும்ன்னு நெனச்சேன். அதுவும் அவருக்கு கல்யாணம் நடந்து முடிஞ்ச பிறகு. என் அத்தை என்னை அவருக்கு எப்படியும் கட்டி வைக்கிறேன்னு சொன்னாங்க. அவருக்கு சக்தியை பிடிக்காது அப்படி இப்படி ன்னு இன்னும் என்னென்னவோ.

எனக்கும் என் அத்தானை பிடிக்கும். அவங்க சொல்லவும் அப்படியே நம்பினேன். நந்தினி என் அண்ணனை விரும்பவும் ஈஸியா நடந்திரும் ன்னு கனவு கண்டோம். ஆனா ஆதி மாமா சக்தியை உண்மையாவே விரும்பி இருக்காங்க.அவங்க கண்ல அத்தனை காதலை பார்த்த பிறகு நான் செய்றது தப்புன்னு தோன்றவும் என் அப்பாகிட்ட அவர் பார்க்கிற மாப்பிள்ளையை கட்டிக்கிறேன்னு சொல்லி சம்மதம் சொல்லிட்டேன்.

இது எல்லாம் நீங்க என்னை பார்க்கிறதுக்கு முன்னாடி நடந்தது. சத்தியமா உங்களை ஏமாத்தணும்ன்னு நான் நினைக்கல. யாரோ என்னவோ தப்பா சொல்றதுக்கு நானே என்னைப்பத்தி சொல்லிடலாம் ன்னு தோணிச்சு. நேத்தே பேசணும்ன்னு நெனச்சேன். ஆனா என்னால பேசவே முடியல நேத்து,அவ்ளோ அழுத்தமா இருந்தது. இப்போவும் ஏதோ தப்பு பண்றமாதிரி இருக்கு. என்னால இதை தாங்கிக்க முடியல.அதான் எல்லாத்தையும் உங்ககிட்ட சொல்லிட்டேன்.

உங்களுக்கு என்னை பிடிக்காம கல்யாணத்தை நிறுத்தினாலும் நான் வருத்தப்படமாட்டேன்.ஆனா என் அண்ணன் பாவம். தாமரையை அவருக்கு கட்டி வச்சிடுங்க. இதுபத்தி யாரவது பேசி பிரச்சனை பண்ண நெனைச்சா என்ன செய்றதுன்னு பயமா இருக்கு எனக்கு. ப்ளீஸ் என் அண்ணன் கல்யாணத்தை நிறுத்திடாதீங்க ” என்று அவள் அழ ஆரம்பிக்க

தனஞ்செயன் என்ன மாதிரி உணர்ந்தான் என்று அவனுக்கே தெரியவில்லை. அவன் ஏதோ நினைத்து வந்திருக்க சத்தியமாக அவளின் இந்த வார்த்தைகளை அவன் எதிர்பார்க்கவே இல்லை. அதுவும் கல்யாணத்தை நிறுத்தினால் ஒன்றும் இல்லையாமே. ஆதித்யன் விஷயம் இவன் ஏற்கனவே கேள்விப்பட்டது தான். ஆனால் அவன் இதுவரை அதை ஒரு பொருட்டாக கூட மதிக்கவில்லை. அப்படி இருக்க நேற்று நந்தினி பேசியதிலிருந்து ஏதோ ஒரு விஷயத்திற்காக அவளுக்கு மதி பயப்படுகிறாளோ என்று தோன்றி இருக்க

அதை அவளிடம் எப்படி கேட்பது என்று யோசித்தானே தவிர நிச்சயம் நந்தினி நினைத்தது போல் அவளை அவன் சந்தேகமெல்லாம் படவில்லை. இப்போதும் இவள் கூறி முடிந்ததில் இவ்வளவுதானே என்று அவன் நினைக்க அவள் அடுத்து சொன்ன கல்யாணத்தை நிறுத்தினால் ஒன்றுமில்லை என்ற வார்த்தைகள் அவன் கோபத்தை தூண்டியது. பேசி முடித்த கல்யாணம் நின்று போவது அவ்வளவு சாதாரணமாக இருக்கா இவளுக்கு ? என்று கொதித்தவன் அவளை முறைத்துக் கொண்டு நிற்க

அவளோ எதைப்பற்றியும் கவலை இல்லாமல் கூற வேண்டியது அனைத்தையும் அவன் முகத்தை பார்க்காமல் குனிந்து தரையை நோக்கியே சொல்லி முடித்துவிட்டு அழுது கொண்டிருந்தாள். கோபம் வந்தாலும் அவள் அழுவதும் தாங்க முடியாமல் போக அவளை அழைக்க அவளோ அதைக்கூட உணராமல் அழுது கொண்டிருந்தாள்.

ஒரு கட்டத்தில் ” இப்போ அழறதை நிறுத்த போறியா இல்லையா ” என்று அவன் கத்திவிட அழுகையை நிறுத்தியவள் பயத்துடன் அவனை பார்க்க ” பேசவேண்டியதெல்லாம் பேசி முடிச்சிட்டல. கெளம்பு, உன்னை காலேஜ்ல விட்டுட்டு போறேன்” என்று சொல்லவும்

இவன் என்ன சொல்கிறான் ? என்பதுபோல் அவள் பார்க்க, அவள் பார்வையை உணர்ந்தவன் ” என்ன ? அதான் பேசிட்டே ல. வா ” என்று அழைத்து முன்னே நடந்தான் அவன். அவள் வரவும் அழைத்துக் கொண்டு சென்று கல்லூரியில் விட்டவன் அவளை திரும்பியும் பார்க்காது சென்றுவிட, நிச்சயம் இவன் தன்னை ஏற்கமாட்டான் என்று நினைத்தவளுக்கு அழுகை பொங்கியது.

இருந்தும் தன்னை தேற்றிக் கொண்டவள் அமைதியாக வகுப்பறையை நோக்கி நடந்தாள். இங்கு அவளை இறக்கி விட்டவனோ நேராக சென்று நின்றது கந்தகுருவின் முன்பு.

Advertisement