தேன் சாரல் நீ  3

       தன் அத்தையை வழியனுப்ப கடையில் இருந்து வெளியே வந்தாள் சுஜா. அத்தையம்மாவும்

    “சுஜா கண்ணு இப்ப நிறைய பேரு கல்யாணம் பண்ணிக்கிட்டு படிக்கிறாங்களாம் உங்க மாமா நேத்து சொன்னாரு. நீயும் சுபாஷை கல்யாணம் பண்ணிக்கிட்டு படியேன். யாரு வேணாங்க போறா?”

     “அப்படி யாராவது வேணாம்னு சொல்லட்டும் பாத்துக்கிறேன் அவங்கள ஆஞ்சிபுடறேன்  ஆஞ்சி. சரின்னு சொல்லுமா யேந்தங்கமில்ல. நானு நல்லா இருக்கும்போதே யேன் பேரப்புள்ளைகள பாத்து, வளத்துவிட்டுருவேன். சரின்னு தலைய மட்டும் ஆட்டு போதும். மீதியெல்லாம் அத்தை நான் பாத்துக்கிறேன்” என அவர் கெஞ்ச

    “அத்தை நீங்க இவ்வளவு கெஞ்சி கேக்கறதுனால சொல்றேன். ஆனா நீங்கதான் பாத்துக்கனும்” என சுஜா நீட்டி முழக்க

      “அப்பாடா, நாம வந்த காரியம் ஜெயம். நம்ம சொந்தத்துல வசதியான பொண்ணை நம்ம பையனுக்கு கட்டப போறோம்”னு  மனசுக்குள்ள குத்தாட்டம் போட்டுக்கிட்டு அந்தம்மா,

     “சொல்லு கண்ணு எப்ப வச்சிக்கலாம் கல்யாணத்தை?”னு கேக்க

    “இந்தம்மா லூசா? இல்ல நாமதான் லூசா? இப்படி பேசுது” என குழம்பிய சுஜா

    “அத்தை நான் சுபாஷ், ஈஸ்வர், சுகன் மூணு பேரையும் ஒரே மாதிரிதான் பாக்கறேன். அதனால அடிக்கடி சுபாஷண்ணான்னு கூப்பிட்டிடுறேன். உங்களுக்கு புரியுதா இல்ல புரியாத மாதிரி நடிக்கிறிங்கிளா? எனக்கு தெரியல. ஆனா என்னை பொறுத்தவரை சுபாஷ் எனக்கு இன்னொரு அண்ணன். இனி நீங்க இந்த பேச்சை எடுக்காதிங்க” என்றாள் தெளிவாக.

     “ஆனா அவன் உன்னைய உயிரா நினைக்கிறான் கண்ணு. உன்னைய தவிர வேற யாரையும் கட்டமாட்டேன்னு ஒத்த கால்ல நிக்கிறான். நீ வேணுமுன்னா இப்ப என் முன்னாடியே கேட்டுப்பாரு. அவன் என்ன பதில் சொல்லறான்னு” அத்தை தன் மகன் தன்மேல வச்சிருக்கும் பாசத்தை பகடையாய் வைத்து வியுகம் வகுக்க

    “நாங்கெல்லாம் அபிமன்யுக்கே வியுகத்தை உடைக்க லெக்சர் குடுக்கறவங்க, எங்ககிட்டயேவா” என நினைத்த

  சுஜா, “அத்தை எனக்கு பிடிச்ச படிப்பை முடிச்சிட்டு, வேலைக்கு போயி ரெண்டு வருசமாவது எஞ்சம்பளத்தை தாத்தா கையில கொடுத்துட்டுதான் காபி தட்டையே கையில வாங்குவேன்னு தாத்தா தலையிலடிச்சி சத்தியம் பண்ணியிருக்கேன்.”

    “அதுக்கு எப்படியும் ஏழெட்டு வருஷமாயிடும். அதுக்கு பின்னாடியும் உங்க மகன என்னால புருசனா பாக்கமுடியுமான்னு தெரியல” என்றவள், முகத்தை சுழித்தபடி

    “ அதுக்குள்ள அத்தானுக்கு முப்பது தாண்டிடும். அரை கிழவன யாரு கட்டுவா? நான் மாட்டேன்பா.  என்னை விட்டுட்டு வேற நல்ல பொண்ணா பாருங்க.” என்றாள்

    “கண்ணு நீ இருக்கும்போது எப்படி வெளிய பாக்குறது? அவன் வேற நீதான் வேணுமுன்னு ஒத்த காலுல…” சுஜாவை சம்மதிக்க வைக்க பேசிக்கிட்டே போக, சுஜா

      “உங்க மகன் ஒத்த காலுல நின்னா அடுத்த காலுக்கு என்னாச்சின்னு பாக்காம இங்க காவடி எடுக்காதிங்க சரியா. உங்க ஆசை எப்பவும் நிறைவேறாது. என் அண்ணன்களை மிரட்டி காரியம் சாதிக்க நெனச்சிங்க, தொலைச்சி கட்டிடுவேன்.” என படபடவென பேசியவள், அத்தையம்மா

     “உன் மேல உள்ள பாசத்துல இவ்வளவு தூரம் வந்து உன்ன கெஞ்சிகிட்டிருக்கேன். உனக்கு புரியமாட்டேங்குது” என குரலை உயர்த்தி பேச

     “இங்க இப்ப எதுக்கு வந்தீங்க?  வேலைவெட்டி இல்லன்னா இப்படி தான் ஆகாத போகாத வேலை செய்யச்சொல்லும். உங்க ஜமீன் வம்சத்துக்கு ஏத்த ஜமீன்தாரினிய போய் தேடுங்க.”

     “அதெப்படி பேசினதெல்லாம் மறந்துட்டு இப்படி வெக்கமே இல்லாம ஒத்த காலுல நிக்கிறான், ஒன்ற காலுல நொண்டி அடிக்கறான்னு முன்னாடி வர முடியுது. இதப்பத்தி பேசறது இதுதான் கடைசியா இருக்கனும்.. புரியுதா? எங்க வீட்ல போயி இத பத்தி மறுபடியும் பேசினன்னு தெரிஞ்சிது, அத்தை சொத்தைன்னு பாக்கமாட்டேன். வகுந்துடுவேன்.” என்று எகிறியவள், சுபாஷிடம் திரும்பி

     “ஏன் ஒத்த காலுல நிக்கிற? ரெண்டு காலும் நல்லாதான இருக்கு?  உங்கம்மா சொல்லுறதுக்கு எல்லாம் தலையாட்டுற நீ? இந்தம்மா பண்றத தட்டிக்கேக்க முடியாத நீ என்ன ஊமையா? இதையே உன்னால சமாளிக்க முடியல நீ ஐபிஎஸ்ஸாக என்னத்த கிழிக்க போற? போயி கூஜா தூக்கு உங்கம்மாவுக்கு. ஒத்த காலு,  ரெண்டு காலுன்னு அடுத்த தடவை பேசட்டும் ரெண்டு பேரோட காலையும் ஒடச்சி அடுப்புல வைக்கிறேன்.” பொங்கினாள் கோபத்தில்.

     “என்ன சொன்னாலும் செஞ்சிடுவியா? உனக்குன்னு ஒரு சுய புத்தி இல்லயா?” என சகட்டு மேனிக்கு பேச ஆரம்பிக்க

     “ஏய் என்னடி ஓவரா பேசற? எங்கூட்டுக்கு மருமவளா வர உனக்கு குடுத்து வைக்கல. எங்கப்பாகிட்ட பேசிட்டு அப்புறம் உன்னைய கவனிச்சிக்கிறேன்” எனச் சொல்லி அந்தம்மா காரிலேறி திரும்பிப் பார்க்காமல் சென்றார்.

     “அண்ணா சோடா எங்க? வாங்கிகிட்டு வந்தீங்களா, இல்லையா? சுபாஷு இன்னையிலிருந்து உனக்கு சுக்கிர திசைமாறி, சனிதிசை ஆரம்பம். என்னைய வச்சி அம்மாவும், புள்ளையும் கேமா ஆடறீங்க கேமு” என்றவள்

    “போன் போடுங்கப்பா நம்ம தாத்தாவுக்கு” என்க, ஈஸ்வர் போன் போட்டு சுஜாவிடம் நீட்ட,

    “மூணு பேரும் இதுவரைக்கும் டம்மியா நின்னு வேடிக்கைதான பாத்திங்க? தாத்தாகிட்ட கூடவா உங்களால பேச முடியாது? இதுல கல்யாணம், கால்கட்டு வேற தேவையா? பேசாம மூணுபேரும் சன்யாசம் வாங்கிட்டு போங்க” என நக்கலடிக்க

     “பாப்பா, என்னாச்சி  பாப்பா? ஏன் இவ்வளவு கோவம்? அண்ணனுங்களையா திட்ற? எங்கிட்ட பேசுடா?” தாத்தா பொறுமையாக கேக்க

    “தாத்தா உங்க பெண்ணரசி இங்க  புயலா  என்ன சுருட்டிக்கிட்டு போக வந்துச்சி. நான் எதிர்த்து பேசுனதால புஸ்வானமா போயிடுச்சி. இப்போ சூறாவளி அந்தப்பக்கம் வருது. என்பக்கம் மறுபடி திருப்பி விட்டிங்க உங்க தலைக்குதான் ஆபத்து. உங்க தலையிலடிச்சி சத்தியம் செஞ்சிருக்கேன் பாத்துக்குங்க” என காரியத்தில் கண்ணாக ஒப்பிக்க

     “ஏம்மா இப்படி செஞ்ச? தாத்தா தல தப்புமா? தப்பாதா? நம்மூட்டு எஜமானி காலையிலேயே சொன்னா. கேட்டேனா நானு? வெள்ளையும் சொள்ளையுமா கிளம்பி வந்தேன்.தேவையா இது எனக்கு?”

     “எங்க அந்த கூட்டு களவாணிங்க மூணு பேரும்? அங்கதான் பம்மிகிட்டு இருக்கானுங்களா? மூணு பேரையும் இந்த வாரம் இங்க வந்து சேர சொல்லு பாப்போம்.” என இந்த பிரச்சனைக்கு இப்போதைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

     “பாப்பா வாணலிக்கு தப்பி அடுப்புல விழுந்த மாறி எங்கம்மாகிட்ட இருந்து காப்பாத்தி இப்ப தாத்தாகிட்ட மாட்டி விட்டுட்ட. தாத்தாகிட்ட மாட்டாம இருக்க நீதான் வழிசொல்லனும். நாங்க உனக்கு நெறய புக்ஸ் வாங்கி குடுக்கிறோம். ஐடியா குடுமா தங்கம்.” என சுபாஷ் நல்லப்பிள்ளையாக கேக்க

     “நாங்கன்னு இவங்கள ஏன் கூட்டு சேக்கறிங்க? போங்க போயி புக்ஸ் வாங்கிட்டு வாங்க. குறைந்தபட்சம் பத்து புத்தகங்கள் இருக்கனும். என்னோட போன் சுவிச் ஆப். ஸோ உங்க போன் குடுத்துட்டு போங்க. கடைக்கு போய் போன் பண்ணுங்க. நான் தலைப்பு சொல்றேன்” என சுஜி விளையாட்டுப் போல அவனின் தனிப்பட்ட போன்-ஐ வாங்கிக்கொண்டு அனுப்பி வைக்க முறைத்தனர் அவளின் உடன்பிறப்புகள்.

     “பாப்பா எப்படி அத்தான் போன் குடுத்தாங்க? யார்கிட்டயும் இத குடுக்கமாட்டாங்க. என்னடா நடக்குது இங்க?” சுகன் வாய்ப்பிளக்க,

    “தம்பி பெரிய வில்லங்கத்துல மாட்டியிருக்கோம். விசாரணை கமிஷன்ல மாட்டப்போறோம்” ஈஸ்வர் பதற

     “அப்பா ஈஸ்வரா எப்போதும் போலீஸாவே இருக்காதப்பா. விசாரணை கமிஷனாம். கொஞ்சம் நடப்புக்கு வாப்பா” சுகன் கிண்டலில் இறங்க

    “அண்ணாஸ் விளையாட்டு பேச்சு போதும். அத்தான் கல்யாணத்திற்கு ரெடியாயிட்டார். சீர் செய்ய நீங்களும் ரெடியாகுங்க.” என சுஜா சுபாஷ் சென்ற திசையை பார்த்துக்கொண்டே கூற

     “சுஜா… என்னடா சொல்ற? அத்தைகிட்ட சண்டை போட்ட. இப்ப சீர் ரெடி பண்ண சொல்ற? எனக்கு ஒன்னும் புரியல.” சுகன் பதற

     “வேலைக்கு போகனும், விளக்கேத்தனுமுன்னு சொன்னதெல்லாம் விளையாட்டுக்கா பாப்பா? உங்கிட்ட இத நான் எதிர்பார்க்கல. வளர் அத்தையை உன்னால சமாளிக்க முடியுமா குட்டிமா?” என ஈஸ்வர் கவலையுடன் தங்கையின் முகம் பார்த்து பேச

     “அண்ணாஸ் ஸாக்கை குறைங்க. அத்தானுக்கு கல்யாணமுன்னு சொன்னா இந்த ஊரு உலகத்துல என்னைத் தவிர பொண்ணே இல்லையா? அத்தானை கட்டிக்குற பொண்ணும் உங்க தங்கச்சி தான?” என்றவள்

   ஈஸ்வரிடம் “அண்ணா இப்ப எங்க ஹாஸ்டல் போயிட்டா இங்க வந்திங்க? “ கேள்வி கேக்க

     “இல்லடா குட்டிமா. நேரா இங்கதான் வண்டிய விட்டாங்க… நீ இங்க இருக்கிறது எப்படி தெரியும்? சுகா நீ சொன்னியா?” சுகனிடம் திரும்பி ஈஸ்வர் கேட்க

      “இல்லண்ணா. நான் அவரிடம் பேசி ஒரு வாரத்துக்குமேல இருக்கும். அப்புறம் எப்படி இங்கு வந்தாங்க?” அவனும் குழப்பத்தில் சொல்ல

      “உங்க தங்கச்சிய பாத்துக்கிறதவிட வேற என்ன முக்கிய வேலை?ன்னு கேட்டாங்க இல்ல,” என்ற சுஜா

   “அண்ணா, மகேஷ் அண்ணா, உங்க யாரிடமாவது ராகினி அக்கா நம்பர் இருக்கா? இருந்தா சொல்லுங்க”  என பஞ்சபாண்டவர்களிடம் சுஜா கேக்க

     “அண்ணா நீங்க குட்டிமா, குட்டிமான்னு கொஞ்சி இப்ப சுஜா குட்டி பாப்பா மாதிரி சம்பந்தமில்லாம பேசுது. அந்த பொண்ணு நம்பர் எதுக்கு?” என சுகன் நக்கலடிக்க

     கண்ணன், “என்கிட்டயே இருக்கு சுஜா” என நம்பர் சொல்லவர

    “அண்ணா எனக்கு அந்த நம்பர் வேணாம். ஆனா நீங்க அந்த நம்பருக்கு கால் பண்ணி நான் சொல்ற மாதிரி பேசுங்க.” என்றவள் கண்ணனிடம் பேச வேண்டிய வாசகங்களைச் சொல்ல, அவன் சுகனிடம் திரும்பி அனுமதி கேக்க, அவனும்

     “நண்பா, என் தங்கையோட பார்முலா தெரியுமா உனக்கு? ‘செய் அல்லது செத்து மடி’. பேசு உனக்கு அதை தவிர வேறு வழியில்லை “ சுகனும் சுஜா என்ன சொன்னாள் என்பது தெரியாமலே அனுமதி கொடுக்க

     கண்ணன் கால் செய்ய ராகினி எடுத்து பேசினாள். “ஹலோ யாருங்க வேணும்?” ராகினி கேக்க

    “ராகினி நான் உங்க கிளாஸ் கண்ணன் பேசறேன். ராஜன் உங்கள தூக்க ஆள் ரெடி பண்றான்னு நியூஸ் கிடைச்சிருக்கு. இந்த சுஜா அவங்க அத்தான் கல்யாணம்னு அவங்க அத்தை கூட அண்ணனுங்கள கூட்டிட்டு போயிடுச்சி. அந்த போலீஸ்காரர் இருந்தாலாவது ஏதாவது செய்யலாம். அவரும் ஒரு வாரம் லீவு போட்டுட்டு கொஞ்ச நேரம் முன்னாடிதான் சுஜாவோட கிளம்பி போறாரு. எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க.”

     “நாங்களும் கல்யாணத்துல கலந்துக்க நாளைக்கு காலையிலயே கிளம்புறோம்.” என  பதட்டமாக பேசுவது போல பேச

     அழுகுரலில்  “கல்யாணம் எங்க? எப்போ?ன்னு சொன்னாங்களா கண்ணன்” ராகினி கேக்க

    “அதபத்தி சொல்லல ராகினி. எங்களுக்கு வண்டி அனுப்பறேன்னு சுகன் சொன்னான். அதனால நான் எதையும் கேக்கல. ஓகே. இது எதுக்கு நமக்கு? நீங்க கொஞ்சம் கேர்புல்லா இருங்க. சரி ராகினி நாலு நாள் கழிச்சு காலேஜ்ல பாப்போம் பை.” போன்காலை கட் பண்ணிட்டு

    “ ப்பா… ஏன் சுஜா நானு? இத்தனைபேரு இருக்கும்போது ஏன் கண்ணன் மட்டும் மாட்றான்?” என்று சுஜாவிடம் வம்பிழுக்க

     “அண்ணா” ஈஸ்வர், சுகனை காட்டி “ இவங்க அதுக்கு செட் ஆக மாட்டாங்க. மகேஷ் அண்ணன், சதீஷ் அண்ணன் ரெண்டு பேருல ஒருத்தர் நம்பர் குடுப்பாங்கன்னு நினைச்சேன். பட் உங்க லக் நீங்க மாட்டிகிட்டிங்க” என அவள் கலாய்க்கும்போதே அவள் கையிலிருந்த போன் ஒலித்தது.

     “சக்ஸஸ். அண்ணா நீங்க இப்போ பேசின நம்பர்********** இதுவா சொல்லுங்க “ என சுஜா கேக்க

     “இதே நம்பர்தான். இது ராகினி நம்பர் உனக்கெப்படி தெரியும்?” கண்ணன் அதிர தன்னிடமிருந்த சுபாஷின் போனை காட்டினாள்.

    சுபாஷின் போனில் அந்த நம்பர்  “மை லைப்” என சேமிக்கப்பட்டிருந்தது.

   பல கேள்விகளுக்கு விடை தெரிந்தது. ஒருவரை ஒருவர் பார்த்தபடி மௌனமாய் நின்றனர், சுபாஷ் வரும்வரை. அவன் வருவது  தெரிந்தவுடன் சுஜா ஈஸ்வரை பார்க்க, “ ஓகே” என கையை குவித்து காட்டினான்.

     “அத்தான் பாட்டி போன் போட்டாங்க. அத்தை அவங்கிட்ட ஒரே சண்டையாம். அதனால பாட்டி எங்க தங்கச்சியையே உங்களுக்கு உடனே கல்யாணம் பேச…..” பேசிக்கொண்டே வந்தவன் சுஜாவிடம் திரும்பி உதடுபிதுக்கி “முடியல” எனும் விதமாய் தலையாட்ட, சுகன் தொடர்ந்தான்

    “எங்க தங்கச்சிகிட்ட கால்ல விழாத கெறைய கெஞ்சறப்ப அவ மட்டும் என்ன செய்ய முடியும்? பாவம் அத்தான் அவ… நீங்களும் உங்க அம்மாகிட்ட எங்கதங்கச்சி சம்மதிச்சா போதுமுன்னு சொன்னிங்களாம்…அதான் எல்லாரும் சேந்து எங்க தங்கச்சியை கெஞ்சி கூத்தாடி சம்மதிக்க வச்சிட்டாங்க.” சுகன் கண்ணில் கண்ணீருடன் பேச

    “பாப்பா இல்லடா. இது நடக்காது. நானும் உனக்கு ஒரு அண்ணந்தான்டா. ஏன்டா இப்படி செஞ்ச? முடியாதுன்னு சொல்ல வேண்டியதுதான.  ஐய்யோ இப்ப நான் என்ன பண்ண?” தலையிலடித்து சுபாஷ் புலம்ப

    “அத்தான் அது நீங்க யாரையாவது பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டா தாத்தா எனக்காக பேசுவாரு. ஆனா உங்களுக்குதான் என்னைத்தவிர யாரையுமே பிடிக்கலயே….”சுஜா வராத கண்ணீரை நாசுக்காக துடைத்தபடி

     “அத்தான் நீங்க ஏன் இவ்ளோ நேரமா போன் பண்ணல? உங்க போன் அடிச்சிது. நான் தாத்தாகிட்டயும் பாட்டிகிட்டயும் பேசுனதுல அத கவனிக்கவே இல்ல. சீக்கிரம் முடிவு செய்யிங்க. லீவுல வைக்கிறது போல…என்னால லீவு ரொம்ப நாளைக்கு போட முடியாது. டீச்சிங் பிராக்டிஸ் போகனும்” என்க

     “அத்தை கல்யாணம் முடிஞ்சி உங்களோட எங்க தங்கச்சிய அனுப்பிட்டா அவ எப்படி படிப்ப தொடர முடியும்?” சுகன் கதற

    “டேய் நிறுத்துங்கடா உங்க ஒப்பேரியை. எனக்கு இவங்க கிளாஸ்மேட் ராகினிய ரொம்ப பிடிச்சிருக்கு. அவங்கள பத்தி தாத்தாகிட்ட சொல்லி…” என சுபாஷ் இழுக்க

      “இவங்களோட தினமும் சுத்தற எனக்கே அவங்கள பத்தி ஒன்னும் தெரியாது. நீங்க எப்ப பாத்திங்க? பேரு தெரியுமுன்னு அடிச்சி விடக்கூடாது அத்தான். பாப்பா மாதிரிதான் அவங்களும் நமக்கு” சுகன் போட்டு வாங்க

     “ராகினிய எனக்கு நாலு வருசமா தெரியும். ஸாரிடா செல்லம். இதை எப்படி உங்கிட்ட சொல்றதுன்னு கூச்சப்பட்டுகிட்டு சொல்லாம விட்டுட்டேன். தாத்தாகிட்ட சொல்லிட்டியா பாப்பா? நீ கண்டுபிடிச்சிடுவன்னு தெரியும். ஆனா இன்னும் நாளாகுமுன்னு நினைச்சேன். ஒரு ஹின்ட் கூட நா குடுக்கலியே நீ எப்படிடா என்னோட மனச புரிஞ்சிக்கிட்ட?” தடுமாற்றத்துடன் சுபாஷ் சுஜாவை பார்க்க

    “அத்தான், அத்தை வீட்டுக்கு போயிட்டாங்களா? கன்பார்ம் செஞ்சிக்கிங்க. திரும்பி கிரும்பி வந்திருந்தா போச்சி. நீதான் யேன் மகன் கண்ணசைவிலேயே அவன் நெனச்சதை கண்டுபிடிக்கிற ஸோ நீயே அவன கட்டிக்கன்னு காலுல விழுந்தாலும் விழுந்துடுவாங்க உங்கம்மா” என ஈஸ்வர் அவனை வார

     “தங்கங்களா உங்கள நம்பி நானிருக்கிறேன். என்னை கைதூக்கி விட்டுடுங்க ப்ளீஸ்டா… “ முகத்தை பாவமாக வைத்து கெஞ்ச

    “அத்தான் ராகினி அக்காவ உங்கம்மா ஏத்துக்க சான்ஸ் இருக்கா? இதெல்லாம் அப்புறம் பேசலாம். உங்க உயிர்கிட்ட பேசுங்க. நாங்க அவங்கள குழப்பி இருக்கோம், இப்ப இருந்தே தோப்புக்கரணம் போட ஆரம்பிங்க, போங்க” என்றாள் சுஜா.

   ராகினியிடம் சுபாஷ் பேச, ஈஸ்வரும், சுகனும் வெட்டவா? குத்தவா?ன்னு சுஜாவை முறைத்தனர்.