சுஜாவுடன் ராகினி பேச முயற்சிக்க, காயு பேசி மூக்குடைத்தாள்.
சுஜாவின் வீடு நோக்கி சென்ற சுபாஷின் அம்மா வளர்மதி, அவரின் கணவருடன் வாக்குவாதம் செய்து கொண்டே சென்றார்.
“கொஞ்சமாச்சும் பையன் மேல பாசமிருந்தா அந்த கழுதைகிட்ட வந்து பேசி சம்மதிக்க வச்சிருப்பிங்க. எவ்வளவு நகை சேத்து வச்சிருக்காங்கன்னு உங்களுக்கு தெரியுமா?”
“எங்கம்மா நகையும் எனக்கே வந்திருக்கும். அவ சம்மதிக்கலன்னா போவுது. எங்கப்பா, அம்மாகிட்ட கல்யாணம் செஞ்சிகுடுத்துதான் ஆகனுமுன்னு சொல்லி நான் பேசுறேன். பொண்ணு குடுக்கலன்னு சொல்லிட்டா இனிமே சொந்தமில்ல, செத்தா கூட இந்த வாசற்படிய நீ ஏறக்கூடாதுன்னு சொல்லி நீங்க என்கிட்ட சண்டை போடுங்க. மத்ததை நான் பாத்துக்கிறேன்” என வளர்மதி கணவனுக்கு பாடமெடுக்க, அவரோ
“நீ ஒரு பொண்ண பெத்திருந்தா இப்படி ஒருத்தி வீட்டுக்கு கட்டி குடுப்பியா? உங்க அண்ணன், தம்பிய மொட்டையடிச்சது போதும்டி.. வளரு… எங்கண்ணன் மருமகளோட சித்தப்பா வீட்டுல ஒரே பொண்ணு, பல கோடி சொத்து. அதை கேக்கலாமுன்னு நான் ஆசப்பட்டா நீ இவங்க போடற நகைக்கு நாக்கை தொங்க போட்டுகிட்டு அலையற.” என்க
“எங்கம்மா இருநூறு பவுனு பேத்திக்குன்னு சொல்லி எடுத்து வச்சிருக்கு. எங்க அண்ணிகாரிங்க ஒவ்வொருத்தியும் நூறு பவுனுக்கு மேல எடுத்து வச்சிருக்காளுங்க. எங்கண்ணனுங்க அவளுக்கு வயல், மனை, வீடுன்னு வாங்கி வச்சிருக்காங்க.”
“எங்கத்தைய போன மாசம் ஒரு கல்யாணத்துல பாத்தேன். அது பேரனுக்கு பொண்ணு கேக்க போச்சாம். ஜாதகம் ஒத்து வரலையாம். அப்பதான் என்னென்ன போட போறாங்கன்னு சொன்னாங்களாம். டவுனுல இருக்க வீட்டு வாடகைமட்டும் மாசம் ஐம்பதாயிரம் வருதாம்.”
“பவுனு நாலாயிரம் ரூபாய்தான் இப்போ. மாசம் பத்து பவுனு வாங்குனாகூட போதும். நாலு வருசத்துல எங்கியோ போயிடலாம். ராஜாபோல உட்கார்ந்து காலாட்டிக்கிட்டு வேலை செய்யாமல் சுகமா இருக்கலாம்.”
“இதெல்லாம் உங்களுக்கும் புரியல. உங்க புள்ளைக்கும் புரியல. அந்த கடங்காரன் அவள சமாதானம் பண்ண அங்கேயே இருக்கான். பொழைக்க தெரியாதவன். அவ ஒரு ஆளுன்னு, அவள மதிச்சி, அவகிட்ட பேசினா, அவ இன்னும் தலையிலேறி உக்காந்துக்குவா.. இதெங்கே இந்த துரைக்கு தெரியுது?” என கோபமாக பேச
“சின்ன சம்பந்தி பொண்ணு நல்லா கிளி மாதிரி இருக்கு. சுஜாவுக்கு அழகில உட்டதில்லை அந்த பொண்ணும். படிச்சிமுடிச்சிட்டு வீட்டு வேலை பழகிக்கிட்டு இருக்கு. சூப்பரா சமைக்குது. அதுக்கு வரப்போற நிலமே இருபத்தஞ்சி ஏக்கர்.. தென்னந்தோப்பு, பாக்குத்தோப்பு…எல்லாமே காசா கொட்டிக்கிட்டு இருக்கிற நிலம். அப்பாம்மா நல்ல தெம்பா இருக்காங்க. பத்திருபது வருஷத்துக்கு காடு ஓட்டுவாங்க. சம்பாரிச்சி பணமா குடுப்பாங்க.”
“இவ்வளவு குடுக்கிறவங்க இப்ப பவுனு, பணம் போடாமயா கட்டி வைப்பாங்க. நீ யோசி.” என்றவர் கண்மூடி தன் ராஜ வாழ்க்கையை கனவுகாண ஆரம்பித்தார். வீட்டினர் சொன்னாலும் சுஜாதா சம்மதிக்க போவதில்லை என நம்பினார்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஈஸ்வர் சுஜா சொன்னதை யோசித்தான். சுகனிடம் பேச
“அண்ணா நான் இன்னும் அந்த பேக்கரில ப்ரெண்ட்ஸ்ஸோட இருக்கேன். வாங்க” என்றான்.
“மாலினி வீட்டுல வசதியில்லை, அதன் அத்தை இந்த மாலினிய கண்டுக்கல. ஓகே. இது டேலி ஆகுது. பட் நான் ஏன் இந்த பிச்சர்ல வரனும்? ஏதுக்கு என்னை இழுக்குறாங்க?”
“அண்ணா யோசிச்சி கண்டுபிடிச்சி சொல்லுங்க. டைம் ஆயிடுச்சு. நான் சாப்பிட போறேன். பசி உயிர் போகுது. சாயங்காலம் ரெண்டு அண்ணனுங்க நீங்க எங்கூட இருந்தும் எனக்கு ஒரு டீயாவது வாங்கித்தர தோணுச்சா?” என குத்திவிட்டு போனை வைத்தாள் சுஜா.
“அந்த நியூஸ் ‘அதான் ராகினியை சுபாஷுக்கு பார்க்கிற ஐடியா’ தெரிந்துதான் ஏதோ ப்ளான் பண்ணுதோ இந்த பொண்ணு” என சத்தமாக ஈஸ்வர் யோசிக்க
“அண்ணா கரெக்ட். அவரு வேலைக்கு போன பின்னாடிதான் கட்டிகுடுக்குற பேச்சி ஆரம்பிச்சதுன்னும் பேசிக்கிறாங்க ஊருக்குள்ள. பணம், பணத்தோடதான் சேரும்ன்னு வேற சொல்றாங்க.” என்றான் சதீஷ்.
“ ரெண்டு வீட்டுக்கும் ரிலேஷன்ஷிப் எப்படி சதீஷ்?” ஈஸ்வர் விசாரணைய ஆரம்பிக்க
“இதெல்லாம் சரி அண்ணா. இதுல சுஜாவை ஏன் இழுத்துவிடனும்?” சுகன் கேட்க
“என் தங்கச்சி சொல்லுவா, அவங்க மாமா வீட்டுல பொண்ணிருக்கு. ரெண்டு வீட்டுலயும் விருப்பமிருக்கிற மாதிரிதான் தெரியுது. அந்த பொண்ண கட்டலன்னா ராகினிக்கு பேசுவாங்கன்னு மாலினி பொறாமையில பொசுங்கிறா. அந்த பொண்ணு உங்க காலேஜ் பக்கத்துல இருக்கிற காலேஜ்ல சேந்திருக்காம். அந்த பொண்ணுகிட்ட கேட்டுத்தான் இந்த புரபோசல ஆரம்பிப்பாங்க போலன்னு சொன்னா”
“எனக்கு பேசாம நீங்க எப்படி நல்ல மாப்பிளைய அவளுக்கு பேச சொல்றீங்கன்னு நம்ம தேர்டு செம் லீவின்போது ஒரே சண்டையாம் மாலினி வீட்டுல.” என சதீஷு சொல்ல
“அண்ணா விடுங்க. துரோகத்துக்கு துரோகமே பதில இருக்கட்டும். நாம பாட்டுக்கு பார்வையாளரா நின்னு வேடிக்கை பார்க்கலாம்.” செல்வம் சொல்ல
மகேஷ் “பாவம்டா அந்த ராகினி. கல்யாணம் உறுதி செய்றவரை அவங்களுக்கு இத இந்த மாலினி நடக்க விடமாட்டான்னு தெரியாது. சுபாஷை மனசுல நினைச்சுட்டாங்கன்னா….. பொண்ணு பாவம் பொல்லாததுன்னு சொல்லுவாங்க. நாளைக்கு அவங்க நம்ம கண்ணுமுன்னாடி கஷ்டப்பட்டாங்கன்னா நம்ம மனசாட்சிக்கு நம்மால பதில் சொல்லமுடியாது. நமக்கு விசயம் தெரிஞ்சும் மறைக்கிறது தப்புன்னு தோணுது. நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன். அப்புறம் உங்க இஷ்டம்போல செய்ங்க.” என்றவன் விடுவிடென வெளியேறினான்.
“அவன் காந்தி பேரன். அப்படிதான் நீதி, நேர்மை, மனசாட்சின்னு அப்பப்ப பேசுவான்” என சதீஷ் கலாய்க்க
“சுஜாவும் இதைதான் சொல்லும். அந்த ராகினி இடத்துல நம்ம அக்கா, தங்கச்சி இருந்தா என்ன செய்வோம் சதீஷ்? சொல்லு” என சுகன் கேட்க
“முள்ளை முள்ளால் எடு. இது பழமொழியா இருந்தாலும் இப்போ இவ துரோகத்தை இதே போல எண்ணம்கொண்ட உங்கத்தைகிட்ட சொல்லுவோமா?” என கண்ணன் கேக்க
“அவங்க இதுக்காகதான் நான் சுஜாவ கேட்டேன். கொடுங்கன்னு யு டேர்ன் போட்டு முதலில் இருந்து ஆரம்பிப்பாங்க” ஜெயன் வாயிலிருந்து முத்துதிர, ஆவென பார்த்தனர் நண்பர்கள்.
“அப்பா பேரு தெரியுது. முதல் முறையா பேரையும் சொல்லியாச்சி. ஆனா சந்தோசபட முடியலயே….. ம்ம்ம் அப்படி மட்டும் நடந்தா இவன் லைப் வேஸ்ட். இப்பதான் லைட்டா வலிக்குற பீல். ஸோ சார் இப்ப ஆஜர்” கண்ணன் முணுமுணுக்க, அவனுக்கு இருபுறமும் அமர்ந்திருந்த மகேஷும், சுகனும் டக்குனு திரும்பி கண்ணனை பார்த்தனர். மகேஷ் ஆராயும் பார்வையோட பார்த்து வைக்க, சுகன் ‘இங்க என்ன நடக்குது? நீயென்ன பேசற?’ என பாசமா பார்க்க????
“இல்லப்பா ஜெயன் பேசவும் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன். சாரி நீங்க பேசுங்க” என்றான் கண்ணன்.
ஈஸ்வரும் ஜெயனின் கருத்தை ஆதரித்தான். “சுஜா சொல்லுச்சி. சுபாஷ் எந்த பொண்ணை கட்டுனாலும் அந்த பொண்ணு நம்ம தங்கச்சின்னு. இந்த பொண்ணு வாலண்டியரா தலைய குடுக்க நினைக்குது. பாவம் சுகா. யோசி எல்லாத்தையும் பாத்துப்பாத்து செய்யற நம்ம அம்மாக்களே வளரத்தைகிட்ட மாட்டிக்கிட்டு முழிக்கும்போது, இந்தப் பொண்ணு கதி என்ன? சுபாஷு மண்குதிரை. அத நம்பி இந்த பொண்ணு இறங்குது. ராகினி வீட்டுல அப்பப்ப பணமோ, நகையோ குடுத்து அத்தை வாய அடைச்சிடுவாங்க. பெரிய இடம். வசதியானவங்க. ஆள் பலம் இருக்கும். ஸோ அடக்கி வாசிப்பாங்க.” என்றவன்
“அம்மாகோண்டுவா இருந்தாலும் அவனும் நம்ம ப்ரெண்டு தானடா? கல்யாணம் பண்ணிக்கவே அவன ஏமாத்திற பொண்ணு அமைஞ்சா…. அக்காவ போட்டியா நெனச்சி அவளுக்கு பாத்த வரன வளைக்க பாக்கிறது…..அது நாளைக்கு அவன் வேலையிலயும்….. இதுபோல இந்த பொண்ணு தப்பானவங்களுக்கு துணை போனா… யோசிங்கப்பா” என்றான்.
ஒரு மனதாக சுபாஷின் அப்பாவிற்கு போன் செய்வதென முடிவானது. மகேஷ் நல்லா தடுமாறாம கலாய்த்து பேசுபவன், அவனே பேசுவதெனவும் முடிவு செய்தனர். பக்கத்திலிருக்கும் டெலிபோன் பூத் சென்று அவரின் நம்பரை டயல் செய்து, மகேஷிடம் கொடுத்தான் சுகன்.
காரில் ஊரை நெருங்கும் சமயம். போன் அடிக்க புது நம்பர், அதுவும் லேன்ட் லைன் நம்பர். யாராயிருக்கும்? யோசித்தபடி சுபாஷின் அப்பா சக்திவேல் காரை நிறுத்தி, போனை எடுத்து காதில் வைக்க
“சுஜாவை பார்த்து ராகினியை கோட்டை விட்டுட்டு அந்த காலி பெருங்காய டப்பா ராசப்பன் பொண்ணு ராகமாலினியிடம் மாட்டிக்காதிங்க. அவ தன்னை ராகினின்னு சொல்லி இப்ப உங்க பிள்ளைக்கிட்ட போன் பேச ஆரம்பிச்சாச்சி. அவங்கிட்ட பேசி கரெக்ட் பண்ணும் முன்னால தப்பிச்சிக்கிங்க. நீங்க பொண்ணு பேர மட்டும் சொல்லியிருக்கிங்க. பொண்ண காட்டி பிரச்சனையை சரி பண்ணுங்க. இல்ல பணக்கார கனவு, கனவாவே போயிடும்” என ஒரு ஆண் குரல் நிறுத்தி நிதானமாக பேச,
தான் ஹலோ சொல்லும் முன்னரே தன் திட்டத்தில் உள்ள ஓட்டைகளை சொல்லும் அந்த குரலுக்குரியவன் சக்திவேலுக்கு தெய்வமாய் தோன்றினான்.
“நீ யாருப்பா? எனக்கு ஏன் உதவி செய்ய நினைக்கிற?” என விவரமாக அவர் கேக்க
“இனி பாத்துக்கிறேன் அவளா? நானா?ன்னு. என்கிட்டயே ஏமாத்து வேலையா? வளரு இங்க நீ வாயே திறக்க கூடாது. நான் சொல்லறது எல்லாத்துக்கும் ஆமாஞ்சாமின்னு தலையாட்டற. வேற ஏதாவது கிறுக்குத்தனம் பண்ண மொத பொணம் நீதான் பாத்துக்க.” என மிரட்டி வண்டி எடுத்தார்.
வாசலில் வந்து இறங்கியவர்களுக்கு வழக்கம் போல தடபுடல் வரவேற்பு நடந்தது. ஆனாலும் ஏதோ குறைவதுபோல தோன்றியது இருவருக்கும். அனைவரும்
“வாங்க! வாங்க!” என வரவேற்று “சுபாஷ கூட்டிட்டு வர போனிங்க. சுபாஷு வரலயா? லீவு கிடைக்கலியா? “ என எல்லோரும் கேக்க
“அவன புடவை, நகை வாங்கிட்டு வர அனுப்பிட்டு, உங்ககிட்ட மொறையா சொல்ல வந்திருக்கோம்” என்ற சக்திவேலை ஐயோவென பார்த்தனர் அனைவரும்.
“திடீர்னு முடிவு பண்ணினேன் கோவிச்சிக்காம நீங்கதான் முன்னாடி நின்னு செஞ்சி குடுக்கணும்” என பணிவாக சொல்ல
“அப்பா, இது வளரு புருசன்தானா? ஆவிகீவி உடம்புல பூந்துகிச்சா?” என்ற மௌனகேள்வி அனைவர் மனதிலும்.
“நம்ம கார்த்தி சின்ன மாமனார் பொண்ணு ராகினிய நாளைக்கு பொண்ணு பாக்க போலாம்முன்னு நானும் வளரும் முடிவு பண்ணிணோம். அதான் பொண்ணு வீட்டுக்கு சொல்றதுக்கு முன்னாடி வளரு பொறந்த வீட்டுக்கு சொல்றதுதான் முறை. நீங்க சம்மதிச்சா…. நாளைக்கு போய் பாத்துட்டு வரலாம்னு….” சக்திவேல் மாமனார், மச்சினர்களின் முகம் பாக்க
சுஜாவின் பாட்டி, “பொண்ணு நம்ம சுஜாவை விட கலரு. சுபாஷுக்கு பொருத்தமா இருக்கும். ஜாதகம் பாத்தாச்சா? எத்தனை பொருத்தம் வருது வளரு?” கேட்க திருதிருவென முழித்த வளர் கணவனை பார்க்க,
“அது வளரு பாம்பு ஒன்ன பக்கத்துல பாத்துட்டா. அந்த பயமின்னும் போகல.” என அடிச்சிவிட
“ஐயோ! பாம்பா? காருலதான வந்திங்க?” பாட்டி பதற
கவனத்தை தன் பக்கம் திருப்பிய சக்திவேல், “வழியில ஒரு போன் வந்துச்சின்னு நிறுத்தி இறங்கி நின்னு நான் பேசினேன் அத்தை. இவ காரவிட்டு இறங்கி அந்த பக்கம் ஒதுங்கினா. திரும்பி வாரப்போ பாம்பு போயிருக்கு. அதபாத்து பயந்துட்டா” கதையளந்து முடித்து தன் காரியத்தில் கண்ணாக
“ஜாதகம் அவங்க கேட்டாங்கன்னு அண்ணன் முன்னாடியே கேட்டார். ஜெராக்ஸ் குடுத்தேன். பத்து பொருத்தமும் பொருந்திவருது எப்ப வர்றிங்கன்னு அண்ணன் வீட்ல கேட்டாங்களாம். சுபாஷுக்கு குருதிசை இப்ப ஆரம்பிக்க போகுது. நாமளும் ஆரம்பிக்கலாமுன்னு… இங்க வந்தோம்.” என்றார்.
யாருக்கு யார்? முடிவு செய்யப்போவது யார்? காத்திருப்போம்.