விஜயனின் கேள்விக்கு “மாமா பதினஞ்சு நாள் லீவு போட்டேன். இன்னும் எட்டு நாள்ல ஜாயின் பண்ணனும். அங்க காலையில ஒரு எட்டு அம்பதுக்கு இருக்குறது போல தினமும் போனா போதுமுங்க மாமா” என சுஜா பதில் சொல்ல, வெளியே சென்ற கீதா மறுபடியும் வேறொரு பெண்ணுடன் சுஜாவை அழைக்க வர,
“சரிம்மா நீ கீதாகூட வெளிய போ. நான் ஒரு போன் பேசிட்டு வர்றேன்” என காயு தலை தெரிந்த திரைச்சீலை பக்கத்துல போனை காதில் வைத்த படி நகர சுஜாவை இருவரும் வெளியே அழைத்து சென்றனர்.
போனில் ரெகார்ட் செய்ததை காயு விஜயனுக்கு போட்டுக் காட்ட அதிர்ந்தான் அவன்.
ஜெய்யின் கல்யாண வாழ்க்கையை பாழாக்க கீதா செய்யும் குழப்பங்களை புஸ்வானமாக்க விஜயன் முடிவெடுத்தான்.
“ஆமாம் மாமா. விஜி மாமா எப்பவும் வீட்டிலேயே இருப்பாங்களா? இனிமேல ஜெய் மாமாவும் எங்கள விட்டு போகமாட்டாங்க. அதனால இன்னைக்கே எல்லாத்தையும் பழக ஆரம்பிக்கட்டும்” என கீதா பொடி வைத்து பேச, எதுவும் பேசாமல் தன் தம்பியின் கையை பிடித்து இழுத்து சென்ற விஜயன், கோவிலில் மரநிழலில் கீதா சுஜாவிடம் சொன்னதை சொல்லி முதலில் பேசி பழகி, பின் வாழ ஆரம்பிக்கும் படி அறிவுரை சொல்லி கூட்டி வந்தான்.
சிறிது நேரத்தில் சுஜா, ஜெய் கிளம்ப ஆரம்பிக்கும் போதுதான் கீதா
“ நானும் ஜெய் மாமாகூட போறேன். நானு இல்லாம எங்க மாமா இருக்க மாட்டாங்க” என குதித்தது.
அதை இப்போது நினைத்த கீதா விஜயன் மேல கொலைவெறியில் இருந்தாள். “இந்தாளு மட்டும் கொஞ்ச நேரம் சும்மா இருந்திருந்தா இந்நேரம் அங்க பரமபதம் ஆடியிருப்பேன்.”
“என்னைய புடவை மாத்த அனுப்பி விட்டுட்டு தம்பி குடும்பத்த அப்போதைக்கு காப்பாத்தி விட்டுட்டான் இந்த பஞ்ச பரதேசி. இங்க வந்த பின்னாடி இவனால காவல் காக்க முடியுமா?”
அங்கேயோ, ஜெய் சுஜாவை நெருங்க நினைக்க, சுஜா மௌனமாகினாள். தேவைக்கு மேல ஒரு வார்த்தைக்கூட யாராலும் பெற முடியவில்லை. சுகனை ஈஸ்வர் லெப்ட் ரைட் வாங்க ஜெய்யிடம் புலம்பினான் அவன்.
“டேய் மச்சான்! என்னடா நடக்குது? பேசினியா? இல்லையா? சொல்லித் தொலைடா” என்று சுகன் ஆத்திரத்தில் பல்லைக்கடிக்க அவ்வழியே ஏதோ வேலையாக வந்த தேன்மொழி இதை கேட்டாள். கேட்டவள் தன் மாமியார்களிடமும், ஈஸ்வரிடமும் பதட்டத்துடன், இருவரும் சண்டையிட்டுக் கொள்வதாகவும், சுகன் சுஜா வீட்டுக்காரரை மரியாதை இல்லாமல் பேசுவதாகவும் சொல்ல, எல்லோரும் பதறியடித்துக் கொண்டு ஓடிவந்தனர்.
“சுகா என்ன இது? இப்போ எதுக்கு மாப்பிள்ளைக்கிட்ட மரியாதை இல்லாம சண்டை போட்டுட்டு இருக்க? உன்னோட ப்ரெண்டு கூட படிச்சாலும், நம்ம பாப்பா வீட்டுக்காரர் அவர். இனிமேல் மரியாதையா பேசு.”
“தனியா இருந்தாலும் வாங்க போங்கன்னே பேசு. அப்போதான் நாலு பேர் முன்னாடியும் அப்படியே வரும்” என ஈஸ்வர் அறிவுரை சொன்னான்.
அந்த நேரத்தில் , “சுகா ஜெய்யிக்கு செர்டிபிக்கேட் வெரிஃபிகேஷனுக்கு லெட்டர் வந்திருக்கு. நாளை மறுநாளா சென்னையில இருக்கனும்” என்றபடி விஜயன் அங்கு பைலுடன் வர எல்லோரும் வரவேற்றனர்.
“மாம்ஸ் உங்க தர்மபத்தினிக்கு இது தெரியுமா? சென்னை போய் வர பர்மிசன் வாங்கிக்கிட்டு வந்துட்டிங்களா? எப்போ போலாம் சொல்லுங்க?” என சுகன் விஜயனை கலாய்க்க,
“பேங்க் போறேன்னு சொல்லி அவன் செர்டிபிக்கேட் எல்லாத்தையும் எடுத்துட்டு வந்துட்டேன். இதுக்கு மேல உன் மச்சான் சமத்து..” என விஜயனும் நக்கல் பேச
“அண்ணா அப்பா, அம்மாக்கிட்ட சொல்லாம எப்படி போறது? வந்து சொல்லிட்டு, சுஜியோட சென்னை போறேன்” என ஜெய் சொல்ல
“டேய் மக்கு, மண்ணாந்தையாட்டம் பேசாத. நீ அங்க வந்தா உன்னைய சென்னை போக விடக்கூடாதுன்னு ஒரு குருப் ப்ளான் போட ஆரம்பிச்சாச்சி.”
“நீயும், சுஜாவும் போயிட்டு வந்துடுங்க. இடம் கேட்டா சுஜா ஸ்கூல் பக்கத்துல இருக்கிறது போல பாத்து ச்சூஸ் பண்ணு.”
“நீயா யாருக்கும் போன் போடாத. நம்ம வீட்டிலிருந்து யாரு போன் போட்டாலும் உனக்கு வராது. புது நம்பர்ல இருந்து வந்தா எடுக்காத.”
“நீ சுஜாவை இங்க விட்டுட்டு உன் ப்ரெண்ட்ஸ் கூட திருப்பதி போயிட்டன்னு செல்வன் சொன்னதா நான் கீதாக்கிட்ட பொலம்பிடறேன்.”
“நீ திரும்பி வந்ததும் அங்கத்தைய நெலவரத்த பாத்து என்ன சொல்லலாம்ன்னு முடிவு பண்ணிக்கலாம்” என ஆலோசனை சொல்லி அன்றே அவர்களை சென்னைக்கு காரில் அனுப்பினர்.
ஜெய்க்கு இந்த சுஜா புதிதாக தெரிந்தாள். சண்டையிட்டால் சமாதானம் செய்யலாம்.
கேள்வி கேட்டால் விளக்கம் கொடுக்கலாம்.
பேசாமல் கண்ணை மூடியபடி வந்தால் அவனும் என்ன செய்வான்?
“சுஜி ஸாரி.. நான் என்னோட வீட்டுல இவ்வளவு மோசமா பிகேவ் பண்ணுவாங்கன்னு நினைக்கல. அம்மாவுக்கு உன்னைய பாத்தா பிடிக்கும். அண்ணிய சமாளிச்சிடுவாங்கன்னு நினைச்சேன்.”
“உன்னோட அழகு, மேனர்ஸ், வேலை, நீ கொண்டு வர்ற சீர், இதெல்லாம் அம்மா வாயடைக்க போதுமானதுன்னு தப்புக் கணக்கு போட்டுட்டேன்”
“எங்கண்ணிய வச்சி, எங்க குடும்பத்தை எடை போட்டுடாத ப்ளீஸ். விஜியண்ணனை உனக்கு ஏற்கனவே தெரியும். எங்கப்பா ஒரு வாயில்லா பூச்சி. அவங்கள வெறுத்திடாத.” என மெதுவாக சுஜாவிடம் சொல்லியபடி வந்தான்.
ஜெய் நினைப்பது போல விஜயனைத் தவிர அவன் வீட்டு மனிதர்கள் யாரும் இல்லை என்பது புரிந்தது. அதை வெளிப்படையாக பேச சரியான நேரம் இதுவல்ல என தோன்றியது. தங்களுக்குள் இன்னும் புரிதல் வராத போது தன் புகுந்த வீட்டைப் பற்றிய தன்னுடைய அனுமானங்களை சொல்வது தவறென நினைத்தாள் சுஜா.
தன் நிம்மதி மட்டுமல்லாமல், சுதந்திரம், உழைப்பு, ஊதியம் அனைத்தும் தன்னிடமிருந்து பறிபோவது போல தோன்றியது.
சுஜா தன்னுடைய ஆசைகள், கனவுகள், எதிர்கால திட்டங்கள், காயு செய்த கலாட்டாக்கள், கீதாவின் தொந்தரவு, கல்யாணத்தை நிறுத்த தனக்கு வந்த தொலைபேசி அழைப்புகள், தன்னுடைய தனிப்பட்ட சேமிப்பு, பகுதி நேர வேலைகள், அதனால் வரும் ஊதியம், தனக்கென சகோதரர்கள் கொடுத்த பரிசு என தன் கணவனிடம் சொல்ல ஒரு பட்டியலே வைத்திருந்தாள்.
அதையெல்லாம் இனி எப்போதாவது சொல்ல வாய்ப்பு கிடைக்குமா என யோசித்தாள். இயல்பாகவே ஜெய் குடும்ப பற்று உள்ளவனாக தோன்றினான்.
தகுதியற்ற இடத்தில் வைக்கும் நம்பிக்கையும், அன்பும் பொய்த்து போகும் என இவளுக்கு யார் புரிய வைப்பார்களோ தெரியல.
ஜெய்க்கு சுஜாவிடம் ஈர்ப்பு வந்தது போல சுஜாவிற்கும் ஜெய் மீது ஈர்ப்பு வந்ததென்னவே உண்மை. அவன் அவளை பார்த்தால் விலகிச் செல்லச் செல்ல அவளும் திரும்பி பார்க்கத் துவங்கினாள்.
கண்ணன், மகேஷ் இவர்களை கண்காணிக்க தொடங்கியது புரிய இதன் அபத்தத்தை உணர்ந்து விலகத் தொடங்கினாள்.
செலிப்ரிட்டி மேல ஏற்படும் ஈர்ப்பு போலத்தான் இதுவும். இதை தாண்டி வந்தால் மட்டுமே தன் கனவுகள் நிறைவேறும் என முடிவெடுத்து, கவிதை, கதைகளில் புது உத்வேகத்துடன் தன் கவனத்தை திசை திருப்பினாள். வெற்றியும் கண்டாள். இதுவரை ஏழு கவிதை தொகுப்பும், பத்துக்கு மேல நாவல்களும் கவிதாயினி என்ற புனை பெயரில் எழுதினாள்.
இவள் எழுதுவதை அறிந்தவர்கள் சிலரே. இவள் சகோதரர்கள், உயிர் தோழி காயு மட்டுமே அறிந்த ரகசியம் இது.
ஜெய் ஜாதகம் தங்களுக்கு வந்ததும், ஈஸ்வரும், சுகன் சுஜாவிடம் காட்டி விருப்பம் கேட்க, அவள் மனம் சந்தோசத்தில் குதுகலிக்க, அறிவோ இது தவறென அறிவுறுத்தியது. “இத்தனை நாள் பேச விருப்பமில்லாமல் இருந்தவன், இனிமட்டும் உருக போறானா? எதற்கிந்த குதுகலம்?” என அவளுள் வாத பிரதிவாதங்கள் நடக்க என்ன சொல்வதென தெரியாமல் முதல்முறையாக தடுமாறினாள்.
வீட்டில் அனைவருக்கும் பிடித்துப்போக, சுகனின் நண்பன், எவ்வித கெட்டப் பழக்கங்களும் இல்லாதவன் என்ற தகுதி அவனை தேர்ந்தெடுக்க காரணமாயிற்று.
இதில் சுஜாவின் மௌனம், குழப்பம் வெளியே தெரியாமலேயே போயிற்று.
இதோ கல்யாணம் முடிந்தும் இன்னும் அதே குழப்பத்தில் செய்வதறியாமல் மௌனத்தில், எதிர்காலத்தை எண்ணி பயத்தில் சுஜா சென்னைக்கு செல்கிறாள்.
சுஜாவையே பார்த்துக் கொண்டிருந்தால் சென்னையில் நடப்பதை யார் பார்ப்பது?
ஜெய்க்கு சுஜா பள்ளியில் இருந்து ஒரு பத்து கிமீ தூரத்தில் இருக்கும் சிறு நகரத்தில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் முதுகலை வேதியியல் ஆசிரியராக பணி நியமன ஆணை கிடைத்தது.
ஆணை பெற்றதும் விஜயனுக்கு கூப்பிட, வாழ்த்தியவன் யாரிடமும் இதை பகிர வேண்டாம் என சொன்னான்.
சுஜா வீட்டுக்கு இருவரும் வரும்போதே, புதுமண தம்பதியரை அழைத்துச் செல்ல வந்த விஜயன், வேலை கிடைத்த விசயத்தை வெளியே யாருக்கும் சொல்ல வேண்டாம் என கேட்டுக் கொண்டு அவர்களை அழைத்துச் சென்றான்.
வீட்டுக்குள் நுழையும் முன்னரே சுசிலா ஆரத்தியை கையில் வைத்தபடி, “ஏன்டா சின்னவனே! மாமன், மச்சினமுட்டுல ஒரு வாரம் இருந்துட்டு வந்திருக்கியே, உனக்கு வெக்கமா இல்ல? அவளூட்டுல உனக்கென்ன வேலை? அவ இன்னைக்கு வரமாட்டேன், இன்னும் நாலுநாள் கழிச்சி போலாமுன்னு சொன்னாளா? வந்தா வாடி, வராட்டி போடின்னு விட்டுத்தள்ளிட்டு வரவேண்டியது தான?”
“இவ வந்த நேரம் வேலைக்கு கடுதாசி வந்துச்சின்னு எல்லாரும் சொன்னாங்க. இப்போ இவளால வந்த வேலையும் கிடைக்கல. இந்த தரித்திரத்துக்கு ஆரத்தி ஒன்னுதான் குறைச்சல்” என திட்டியபடி ஆரத்தி எடுக்க வர, சுஜா சட்டென பின்பக்கம் நகர்ந்தாள்.
சுசிலா அதிர்ச்சியில் வாயடைத்து நிற்க, ஜெய் திரும்பி பார்த்தான். சுஜா அவனை விட்டு நாலடி தள்ளி நின்று ஜெய்யை பார்த்தாள்.
ஜெய்யும், விஜயனும் அவளிடம் பேச வர , வேண்டாம் என்பது போல தலையாட்டினாள் சுஜா. ஆத்திரத்தில் விஜயன் ஆரத்தி தட்டை தள்ளிவிட கீழே விழுந்து உருண்டோடி குப்பைக்குழியுள் விழுந்தது அந்த தட்டு, அதை கொண்டு வந்தவர் இருக்க வேண்டிய இடமும் அதுதான் என்பது போல.
“அண்ணா நாளையில இருந்து சுஜி ஸ்கூல் போகனும். நானும் லீவ கேன்சல் பண்ணிட்டு ஜாயின் பண்ணிட்டா இந்த நாலு நாளுக்கு ஆயிரம் ரூபாய் சேரர்த்து கிடைக்கும். அம்மாவுக்கு மாத்திரை செலவுக்கு ஆகும். நானும் போகவா சொல்லுங்கண்ணா?” என ஜெய் கேக்க,
“அதெல்லாம் ஒன்னும் வேணாம். அம்மா வைத்தியத்திற்கு கீதாக்கிட்ட காசு குடுத்து வச்சிருக்கேன். நீ இந்த மாசம் முழுசும் லீவ போடு. காசா முக்கியம்? அம்மா கூடவே இரு. ஒரு வாரமா உன்னைய பாக்காம அம்மா ப்ரஷர் கூடி நாலாயிரம் செலவு பண்ணியிருக்கேன். அதனால நீ இங்கியே இரு.” என்றவன்