தேன் சாரல் நீ 20.2

     கீதாவின் நடவடிக்கைகளை பார்க்கையில் வளரின் சிறுவயது நடவடிக்கை போலவே இருக்க, சுஜா சமாளித்து விடுவாள் என சுஜா குடும்பத்தினர் நினைத்தனர்.

   சுஜாவை போல ஜெய்க்கும் வேலை கிடைத்துவிட்டால் போதுமென நினைத்தனர்.

   கீதா குணம் மோசமாக இருந்தாலும் சுசிலா பார்த்துக் கொள்வார். சுஜா வேலைக்கு போவதால் பகல் முழுவதும் பிரச்சனை இல்லை. இரவில் ஜெய், விஜயன், மாமனார், மாமியார் இருப்பர். அவளால் தனியே பிரச்சனை செய்ய முடியாது என தப்புக்கணக்கு போட்டனர்.

    மாப்பிள்ளைக்கு பிடித்தால் மட்டும் போதாது மாமியாருக்கும் பிடிக்க வேண்டுமென அந்த பாசமிகு குடும்பத்திற்கு பட்டும் புத்தி வரவில்லை. உள்ள நிலைமையும் புரியவில்லை. தங்கள் அருமை மாப்பிள்ளையும் தாயின் முன் ஊமை, நிராயுதபானி என தெரியவில்லை. சுஜாவால முடியாதது யாராலும் முடியாது என நினைத்தனர்.

    ஈஸ்வரும், சுகனும் சுஜாவை கவனித்தபடியே இருந்தனர். தங்கள் கல்யாணம் முடிவானபின் வந்த அந்த சுகமான காலத்தை நினைத்துப் பார்த்து, அத்துடன் சுஜாவின் செயல்பாடுகளை ஒப்பிட்டு பார்க்கத் துவங்கினர்.

    போன் பில் ஏறல. கிப்ட் இல்ல. அமைதியாவே இருந்தாள். ஜெய் வந்தாலும் முகம் பிரகாசமடையவில்லை.  அவள் வேலைகளை பார்த்தபடி இயல்பாய் இருந்தாள். கல்யாண கலை, வெட்கம், மினுமினுப்பு ஏதும் முகத்தில் இல்லை.

    காயுவிடம் சுஜாவின் மனநிலையை கேக்க, அவளோ அதைவிட குழப்பத்தில் இருந்தாள்.

    “அண்ணா எல்லாத்தையும் பெர்பெக்ட்டா செய்யறா. ஆனா இன்ட்ரெஸ்டோட செய்யற மாதிரி தெரியல.”

    “ஜெய் அண்ணாவ பாக்க ஆசபடற மாதிரி தெரியல. ஜெய்யோட சேர்த்து கிண்டல் செஞ்சாலும் ‘காந்தி செத்துட்டாரா’ ரேஞ்சுக்கு பாக்குறா . ஒரு வெட்கம், சின்ன சிரிப்பு, ஒரு பூரிப்பு இதுக்கெல்லாம் உங்க ஊருல பஞ்சம் வந்துடுச்சா என்ன?” என கடுப்புடன் பேசியவள்

     “ஜெய்கூட பேசறது போலவும் தெரியல. போன் எப்பவும் ரீச்சாகுது. போன் நாம போட்டா பிஸின்னு டோன் வர்றதில்லை. ஜெய் ஆர்வமா பார்க்கறார். ஆனா இவ கல்லையும், மண்ணையும் போல பார்க்கறா.”

    “அந்த கீதா வேற சும்மாவே ஆடுவா. இது தெரிஞ்சா  இன்னும் சலங்கை கட்டிட்டு ஆடுவா. பிடிக்குதா? இல்லையான்னு கேட்டிங்க தானே?” என புலம்ப, மூவரும் சுஜாவையே கேட்பதென முடிவு செய்தனர்.

    அவளோ பட்டென, “உங்க எல்லாருக்கும் பிடிச்சிருந்தா சரின்னு ஆரம்பத்திலேயே நான் சொல்லிட்டேனே. அப்புறம் ஏன் இந்த சந்தேகம்?”

    “கல்யாணம் முடியறதுக்குள்ள இந்த ரெண்டு புக்கையும் எழுதி முடிக்கனும். அங்க எழுத வாய்ப்பு கிடைக்காதுன்னு தோணுது. எழுதறது என்ன? படிக்ககூட முடியாதுன்னு தோணுது”

    “லீலா கசின்ஸ் ப்ராஜெக்ட் குடுத்தாங்க. அதை முடிக்கனும். என்னோட  பார்ட் டைம் வொர்க் எப்படி போகுமுன்னு தெரியல. ஒரு சில நேரம் தப்பான முடிவ எடுத்துட்டோமோன்னு தோணுது.” என்றவள்,

    “அண்ணா அவங்க அம்மா, அண்ணி ரெண்டு பேரும் என்னிடம் தனியாக இருக்கும்போது ஒரு மாதிரியும், மத்தவங்க முன்னாடி ஒரு மாதிரியும் பேசறாங்க. உங்களுக்கு பிடிச்சா சரின்னு சொல்லியிருக்க கூடாதோன்னும்  அடிக்கடி தோணுது.” எனவும் சொல்ல, அதிர்ந்த காயு “உனக்கு ஜெய்ய பிடிக்கலயா?” என கேட்க

    “காயு ஒன்ன புரிஞ்சிக்கோ. இத்தனை வருடங்களில் நான் அவருடன் பேசியதே இல்லை. எதேச்சையா  பேசறது போல சந்தர்ப்பம் அமையும் போதும் அவர் பேசாம விலகி போறதை நான் பார்த்திருக்கிறேன். இப்போ வரை அவரும் என்னுடன் பேச முயற்சிக்கவில்லை.” என்றவள் சிறு இடைவெளிக்கு பிறகு

   “ஐ திங்க் ஹீ டஸின்ட் ஈவன் வான்ட் டு பி மை ப்ரெண்ட். ஸோ ஹீ இஸ் பேசிவ் ஆல்வேஸ். இதுல இது தேவையான்னு எனக்கு ஒரு குழப்பம் இருக்கு. இத்தனையும் தாண்டி நானெங்கே பூரிப்போட இருக்க?” என பரிதாபமாக சொல்லி தன் வேலையை பார்க்க செல்ல, காயுவுடன் அவள் அண்ணன்களும் மௌனமாயினர்.

    ஈஸ்வர் சுகனை பார்க்க, சுகன் ஜெய்க்கு அழைப்பு விடுத்தான். சட்டென போனை எடுத்த ஜெய், “சொல்லு மச்சான்! கல்யாண வேலைக்கு நடுவுல எனக்கு போனெல்லாம் பண்ற?” என்க

    “ஜெய் சுஜாகிட்ட பேசினியா?” என சுகன் கேக்க

   “இல்லையே, ஏன் கேக்கற?” என ஜெய் கேக்க

  “நீ பேசியிருந்தா நான் எதுக்கு கேக்க போறேன்?” என சுகன் சத்தம் போட

    “பேச நிறைய இருக்கு. ஆனா பேச முடியல. பயமா இருக்கு. கல்யாணம் முடியட்டும் இந்த எட்டு வருசத்து  காதல் கதைய சுஜிகிட்ட பேசிடறேன் நீ கவலைபடாதே” என்றான்.

    “டேய் வெண்ண! அப்புறம் மணிக்கணக்கா பேசு யாரு வேணாங்க போறாங்க? இப்போ புடிச்சிதான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு ஒரு வார்த்தையாவது பேசலாமில்ல?”

   “எங்க பாப்பா எங்களுக்காக சம்மதிச்சது போல நீயும் உங்குடும்பத்துக்காக சம்மதிச்சதா நினைக்குது. உனக்கு சுஜாவ புடிக்காது. வழியில்லாம மௌனமா இருக்கிறதா நெனச்சிக்கிட்டு இருக்குடா வெண்ண” என கத்தினான்.

    “பேசிதான் ஆகனுமா? தாலிகட்டின அப்புறம் பேசறேனே சுகா ப்ளீஸ்” ஜெய்  தன் இயல்புக்கு மீறி கெஞ்ச,

  சட்டென போனை கட் செய்த சுகன் திரும்பி தன் அண்ணனை பார்த்தான். அவனோ சுஜா செல்வதை பார்த்தபடி “பாப்பா சொல்றது போல இது சரிவராது சுகா. கல்யாணம் முடிவு பண்ணி மூனு மாசம் முடிஞ்சிடுச்சி. இன்னமும் பேச ஆரம்பிக்காத ஜெய், கல்யாணத்துக்கு அப்புறம் பட்டிமன்ற பேச்சாளர் ஆயிடுவாரா? நம்பற மாறியா இருக்கு?” என புலம்பியபடி விடுபட்ட ஆட்களுக்கு அழைப்பு வைக்க சென்றான்.

   கல்யாணம் நாளும் வந்தது. சுசிலாவும், கீதாவும் ஏதோ மகாராணிகளை போல சுஜாவின் முகுர்த்தப்பட்டு போலவே இருந்த வேறு நிற புடவை கட்டி, அதுல குறை, இது சரியில்லை என குற்றம் சொல்ல, வந்த சொந்த பந்தங்கள் சுஜாவை பரிதாபமாக பார்த்தனர்.

    தாத்தா ஈஸ்வர், சுகனை முறைக்க, சுஜா தாத்தாவை சமாதானம் பண்ண “தாத்தா எப்பவும் இனிப்பாவே சாப்பிட்டா சலிப்பு வந்துடாதா? அதனாலதான அறுசுவையும் ஒன்னா சாப்பிடறோம். அது போல எல்லாரும் நல்லவங்களா இருந்தா வாழ்க்கை சலிச்சி போயிடும். ஒரு சிலர் கொஞ்ச நாள் கழிச்சி ஆரம்பிப்பாங்க. இவங்க இப்பவே ஆரம்பிச்சிட்டாங்க. தட்ஸ் ஆல். பாத்துக்கலாம் விடுங்க.” என சொல்ல அதை கேட்ட ஜெய் தான் செய்ய வேண்டிய “நான் பாத்துக்கிறேன் தாத்தா. நீங்க தைரியமா இருங்க.” என்ற சமாதானத்தை சுஜா சொல்ல தன் வாழ்க்கை பாதுகாப்பான கைகளில் இருப்பதாய் நம்பி, தன் கனவு நனவானதில் சந்தோசம் அடைந்தான். ஆனால் சுஜாவுக்கு  இது தண்டனை என யார் அவனுக்கு புரிய வைப்பது?

   பலரும் தங்கள் ஆசை, விருப்பம் என முன்னிருத்தி தன்னுடன் இருப்பவர்களை  ஜெய் போலவே அக்னி பிரவேஷம் செய்ய வைக்கின்றனர்.

    கல்யாண கலாட்டாக்கள் முடிந்து, மண்டபத்திலிருந்து பெண்வீடு செல்ல கிளம்ப, கீதா, “ஜெய் மாமாக்கு நான் கூட இருந்தாதான் பிடிக்கும். நானும் வர்றேன்” என்று கிளம்ப மீண்டும் புயல் ஆரம்பிக்க, சட்டென பரமசிவம், “ விஜி அந்த பணத்தை எங்க வச்ச? வேலை செஞ்சவங்களுக்கு பணத்தை பட்டுவாடா செய்யனுமில்ல” என்க

  “சுகா நாம குடுத்து முடிச்சிட்டமே, ஜெய் அப்பா யாருக்கு குடுக்க போறார்னு தெரியலயே வா பார்க்கலாம்” என ஈஸ்வர் அங்கு வர முயற்சிக்க, சுகன் அவன் கைகளை பற்றி அழுத்தினான்.

  பணம் என்றதும் கீதா “எவ்வளவு மாமா? நீங்க எதுக்கு குடுக்கனும்? பொண்ணு வீட்ட குடுக்க சொல்லுங்க. அவங்க பொண்ணு கல்யாணத்துக்கு நாம எதுக்கு பணம் குடுக்கனும்? அவங்களையே குடுக்கச் சொல்லுங்க.” என்று மாமனாரிடம் கேட்டவள்,

    “பணத்தை எங்க வச்சிங்க மாமா? என்னிடம் குடுங்க.” என பதறிக் கொண்டு விஜயனிடம் வர நீலா, தேன், ஈஸ்வர் என சுஜா, ஜெய்யை அழைத்துக் கொண்டு சப்தமில்லாமல் பெண் வீடு நோக்கி கிளம்பினர்.

    “அவங்க பொண்ணு கல்யாணம் மட்டுமில்லை இது. எம்பையன் கல்யாணமும் கூடதான். உன் புருஷனிடம்தான் பணமிருக்கு. சம்பந்தி நேத்தே குடுத்தாரு. அவங்க பணம் அது. அதனால பணம், பணமுன்னு நாயா பேயா அலையாம கொண்டு வந்த துணி மணிய பத்திரமா எடுத்து வை போ” என பரமசிவம் சுசிலா, கீதாவை விரட்ட  ஜெய், சுஜா இருக்குமிடம் செல்ல பார்த்தாள் கீதா.

    “கீதா  எங்க அந்த பச்சை புடவை? அது உனக்கு ரொம்ப அழகா???? இருந்துச்சி. யாருகிட்ட குடுத்து கரெக்டா பிளவுஸ் தைச்ச?” என விஜயன் சம்பந்தமே இல்லாமல் கேட்க, கீதா பம்மியபடி, “மாமா அது….  கூரை புடவை எடுக்க போனப்போ அத்தை எனக்கு  பிடிச்சிருக்குன்னு நான் சொன்னதும், எனக்கு எடுப்பா இருக்குமுன்னு சொல்லி எடுத்து குடுத்தாங்க. நல்லா இருந்துதா?” என கேக்க

    “புடவை சூப்பரா இருந்துச்சி. உன்னோட செலக்சன் எப்பவுமே பெஸ்ட்தான். ஆனா எங்கம்மா செலக்சன் எப்பவுமே குப்பைதான். என்ன பண்ண எனக்கு வாச்சது அவ்வளவு தான்னு மனச தேத்திக்குறேன்” என்றான் விஜயன் கூலா.

 பேசியபடி இருவரும் தங்களுக்கென் ஒதுக்கி இருந்த அறைக்கு வர, “அப்புறம் ஜெய் மாமாக்கு என்ன புடிக்கும்? சொல்லு பாக்கலாம்” என உறுமிய விஜயன், “இத யாரு எடுத்து குடுத்தாங்க சொல்லுடி?” என்க

   “அங்கியே சொன்னனே மாமா, அத்தை எடுத்து குடுத்ததுன்னு” என கீதா பதுங்க, தன் கையிலிருந்த சிறுகத்தி கொண்டு அந்த புடவையை தாறுமாறாக கிழித்த விஜயன், “ஜெய் குடும்பத்துல கும்மியடிக்க நினைச்ச இந்த புடவை நிலமைதான் உனக்கு. பாத்து பாத்து ஆசையா வாங்குனத நானே கிழிச்சி குப்பையா ஆக்கிட்டேன். புடிக்காத உன்ன…. பாத்து சூதானமா நடந்துக்க.”

   “கல்யாணம் வாழ்க்கையில ஒரு முறைதான்னு விதிய நெனச்சி கம்முன்னு இருக்கேன். கோர்ட் வாசலை மிதிக்க வச்சிடாத புரியுதா?”

     “ஏன்டி கல்யாணப் பொண்ணுக்கு கூரை புடவை எடுக்கிறது முறை. நெல்லு மூட்டையாட்டம் உருண்ட உனக்கு, எந்தம்பி கல்யாணத்துக்கு எதுக்கு இத்தனை கூரை புடவை? நானும் பொறுத்து பொறுத்து பாத்துட்டேன். உன்னோட அராஜகம் அளவில்லாம போகுது.”

    “அவங்க நாளைக்கி வேலைக்கு போவாங்க, நீ எங்க போவ? சுடுகாட்டுக்கு போறயா? அவங்களோட போட்டி போட உனக்கு என்ன திறமை இருக்கு? எல்லாரும் ச்சீ அல்பமேன்னு உன்னை பார்க்குறது எனக்கு கேவலமா இருக்கு.”

    “சுஜா வீட்டுக்கு ஜெய் போறான் புது மாப்பிள்ளையா. உனக்கு அங்க என்ன வேலை? ஜெய்ய என்னைக்கு நீ மனுசனா மதிச்ச? இப்போ எதுக்கு ஜெய் மாமா, ஜெய் மாமான்னு ஏலம் போடற? அவன் உங்கூட இருக்கறான்னு நீ மீன் பண்ணா உன்னை வேசி மாதிரி பாப்பாங்க. நீ நல்லவ இல்லைன்னு எனக்கு தெரியும். ஆனா ஊர் முன்னாடி பஜாரின்னு காட்டாத.” என  கத்த ஒரு நிமிடம் ‘வேசி’ என்ற சொல் குறுக வைத்தது. ஆனாலும், “அவங்க என்னைய விட நல்லா வாழ்ந்தா எப்படி விடறது?” என்ற எண்ணம் கீதாவை  மறுபடியும் பழையபடி நடிக்கச் செய்தது.

    “மாமா நாம நம்ம கல்யாணத்துக்கு முன்னமே சொந்தக்காரங்க. அடிக்கடி பாத்து வளந்தவங்க. என்னையவிட ஜெய் மாமா ரெண்டு மூனு வருசம் பெரியவங்க. இதுநாள் வரைக்கும் பேரு சொல்லி கூப்பிட்டு இருந்தாலும், கொழுந்தன், இப்போ கல்யாணம் வேற ஆயிடுச்சி. இனிமே மரியாதையா கூப்பிட சொல்லி அத்தை சொன்னாங்க. அதான் முறை சொல்லி கூப்பிடலாமுன்னு…” என உருக்கமாக நடிக்க

    “ஒழுங்கா இருந்தா உசுரோட இருப்ப. இல்ல உன்னை கொல பண்ணிட்டு ஜெயிலுக்கு போக கூட தயங்க மாட்டேன்” என மிரட்டி வெளியே அழைத்துவர, சுசிலாவை பார்த்த கீதா, “எங்கத்தை உங்க மகனும், புது மருமகளும்? எனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்களா? சரி நான் போய் புடவை மாத்திட்டு வர்றேன். அவங்கள இருக்க சொல்லுங்க”  என மறுபடியும் உள்ளை போக, “அட மடசாம்பிராணி! நல்ல நேரம் பாத்து கிளம்பாம இத்துபோன உனக்காக காத்துக்கிட்டு இருப்பாங்களா?” என அங்கிருந்த எல்லோரும் பார்த்தனர்.

    கீதா பொறுமையாக கிளம்பி வர விஜயன் ஒரு காருடன் நிற்க, “ நான் அவங்களோடவே  போயிட்டு, அவங்களோடவே வந்துடுறேன் மாமா.” என்க

     “அவங்க வர்ற வரைக்கும் நீ வெய்யில்லுல நின்னா அந்த அரை இஞ்ச் பவுடர் கரைஞ்சி போயிடும். வா நாம முன்னாடி போயி அவங்கள அங்க ரிசீவ் பண்ணலாம்” என்க  மகன்கள், சொந்தபந்தத்தை பற்றி எதுவும் கேட்காமல் பட்டென ஏறி உட்கார விஜயனும் உட்கார்ந்து கிளம்ப சொன்னான்.

    வண்டி சுஜாவின் ஊருக்கு செல்லாமல் கீதாவின் தாய் வீட்டுக்கு வந்திருக்க, அவளின் அம்மாவிடம், “உங்க மக கொஞ்ச நாளா அடிக்கடி சோர்ந்து படுத்துக்கிறா. ஏதாவது பண்ணுதான்னு கேட்டு சொல்லுங்க. நான் ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போறேன்” என சொல்லி அங்கிருந்த கட்டிலில் படுத்தான்.

    கீதாவுக்கும் தான் குளித்து நிறைய நாள் ஆனது புரிய, ஓரிரு மாதங்களுக்கு ஒரு முறையே குளிப்பவள் ஆகையாலும், ஜெய் படித்த வேலைக்கு போகும், வசதியான வீட்டு பெண்ணை கட்டிக்க இருப்பதை ஏற்க முடியாமலும் இருந்த குழப்ப மனநிலையாலும் இதை கவனிக்க மறந்திருந்தாள்.

  தங்கள் வீட்டில் முதலில் தெரிந்தால், தன் தாயும் கீதாவும் சேர்ந்து இந்த குழந்தையை கலைத்து விடுவர்  என அறிந்த விஜயன், இங்கே கூட்டி வந்து அடுத்த வெடியை போட்டான்.

  கீதாவின் தங்கை, தாத்தா பாட்டி, சித்தப்பாகள் குடும்பம் என எல்லாரும் இருக்க ஒன்றும் பேசாமல் மருத்துவமனைக்கு கிளம்பினாள். போகும் வழியெல்லாம், “மாமா இப்ப போயி இந்த குழந்தை…. தேவையா? ஜெய் சுஜா வாழ்றதை???? பாக்க ஆசையா காத்துக்கிட்டு இருந்தா இந்த சனியன் வேற ஊடால வந்து என்னைய படுக்க வைக்குது..”

    “மாமா இது வேணாம் நமக்கு. கவின் போதும்னு சொன்னேன். நீங்க இல்ல அடுத்து ஒன்னு வேணுமுன்னு மிரட்டி பவன பெத்துக்கிட்டேன். ஆனா இன்னும் ஒன்னு பெத்துக்க என்னால முடியாது” என்று பொறுமியபடியே வந்தாள் கீதா.

   ஆறேழு மாத கருவை கலைப்பது முடியாது , தாயின் உடல்நலமும் பாதிக்கப்படும் என மிரட்டி வீட்டுக்கு அழைத்து வருவதற்குள் விஜயன் களைத்தே போனான்.

  குழந்தையை பெற்றெடுப்பாளா கீதா?