தேன் சாரல் நீ 20 . 1

   சுஜாவின் போட்டோ பார்த்த ஜெய், “கட்டினா இந்த பெண்ணைதான் கட்டுவேன். நான் காதலிச்ச பொண்ணு வேண்டாமுன்னு சொன்னிங்க. அம்மாவுக்கு பிடிக்கலன்னு நானும் விட்டுட்டேன். ஆனா இந்த பொண்ணை ரொம்ப புடிச்சிருக்கு. இந்த பொண்ணயாவது கட்டலாமுன்னு நினைக்கிறேன்.”

  “ இந்த பொண்ணும் வேண்டாமுன்னு  சொன்னா நான்  கோயம்புத்தூர்ல இருக்கிற அந்த பெரிய ஸ்கூலுக்கே போறேன். அங்க கெமிஸ்ட்ரி ஸ்டாப் கிடைக்கலன்னு எங்க ஸ்கூல்ல பேசிக்கிட்டாங்க. போனா அங்கேயே கடைசி வரை வேலை செய்யனுமுன்னு எழுதி வாங்கிப்பாங்க. விட மாட்டாங்க. திரும்ப இங்க வரமுடியாது. அதனால நான் யோசிச்சேன். ஆனா இந்த பொண்ணு வேண்டாமுன்னு சொன்னா நான் அங்கே போயாச்சும் நிம்மதியா இருக்கேன்”.  என ஜெய் வேகமா சொல்ல

   “இங்க சம்பளத்தை வாங்கி குடுத்தா மட்டும் நமக்கு புடிச்சது  போலவா நடக்குது?  நீ அங்கேயே போயிடு ஜெய். சம்பளம் நாற்பத்து எட்டாயிரம் தான? உனக்கு பிடித்தம் போக மாசம் நாற்பதாயிரம் சேர்க்கலாம். ஒரு பத்து வருஷத்துல நானே உன்ன அண்ணாந்து பார்ப்பேன். காதலிச்ச பொண்ண கல்யாணம் பண்ணிட்டு நீ அங்க போயிடு. இவங்க இங்க பொலம்பிகிட்டு கிடக்கட்டும்”  என சொல்லி தரகரை வழியனுப்ப  சென்றான் விஜயன்.

  ஜெய் தன்னறைக்கு சென்று கதவடைத்து, சுஜா போட்டோவை அணைத்து படுத்தான். பாதி கிணறு தாண்டியாயிற்று. மீதமும் அண்ணன் துணையிருக்க ஏறிடலாம் என்ற நிம்மதியில் ஆழ்ந்த தூக்கலானான்.

வெளியே கவினும், பவனும் கீதாவிடம் தர்ம அடி வாங்கினர். “ஏன்டா குரங்குங்களா இப்படி பண்ணிங்க? அடுத்தவங்க பையை எடுக்கலாமா?” என கீதா சத்தம் போட

   பவன் கூலா, “நீங்ககூடதான் சித்தப்பா வந்தா, அவருக்கு தெரியாம பையை எடுத்து செக் பண்றிங்க. காசு இருந்தா எடுத்துக்கிறிங்க. இது சரியா?  நீங்க பண்ணினா சரி, இதையே நாங்க மத்தவங்க முன்னாடி பண்ணினா தப்பா?” என கேக்க கோவத்துல இன்னும் ரெண்டு அடி சேர்த்து போட்டாள் கீதா.

  விஜயன் வந்து உட்கார்ந்தான். உடனே சுசிலா, “ விஜி அந்த பொண்ணு படிச்சிருக்கா?” என கேக்க, “ உனக்கு பிடிக்காத பொண்ணு படிச்சிருந்தா என்ன? படிக்காட்டி என்ன?”

    “போங்க போயி அவன உயிரோடு எரிக்க உங்க ஆச மருமவளோட சேர்ந்து ஏற்பாடு பண்ணுங்க. அவன் வாழ்க்கை எப்படி போனா என்ன? போயி வயிராற கொட்டிக்கிட்டு அடுத்த குடும்பத்த கெடுக்க ப்ளான் போடுங்க”

     “அவன் பொண்டாட்டிய அவனுக்கு  புடிச்சா போதும். இதுங்க ரெண்டுமா அந்த பொண்ணுகூட குடும்பம் நடத்தப் போகுதுங்க? வெட்கங்கெட்ட ஜென்மங்க!”  என திட்டிக்கொண்டே விஜயன் செல்ல, அவன் கடைசியாக பேசியதை கேட்டப்படி வந்த பரமசிவம்

   “சுசிலா மறுபடியும் என்ன பிரச்சனை? விஜி சொல்லறது கரெக்ட் தான? ஜெயனுக்கு அமையற பொண்ண அவனுக்கு பிடிச்சா பத்தாதா?” என கேக்க

    “யோவ் வாய மூடிக்கிட்டு போய்யா! வந்துட்டான் நியாயம் பேச! அவன் ராத்திரி மட்டும்தான் அவ கூட இருப்பான். பொழுதன்னிக்கும் நான்தான் இருப்பேன். எனக்கு புடிக்காதவ கூட நானெப்படி இருக்கிறது?” என கீதா வரிந்துகட்டிக்கொண்டு சண்டைக்கு வர, விஜயன் உள்ளிருந்து வர கீதா  ‘ஆ’வென பார்க்க

    “இதுதான் உங்க லட்சணம். வர்ற பொண்ணாவது மரியாதை தெரிஞ்ச பொண்ணா வரட்டும். ஜெயனுக்கு அந்த பொண்ணுதான்னு நான் முடிவு பண்ணிட்டேன். அவனாவது நல்லா வாழட்டும்.”

     “யேந்தம்பி வாழ்க்கைக்காக என் வாழ்க்கைய இழக்கவும் தயாராயிட்டேன். என்ன புரியலயா? உங்க ரெண்டு பேரையும் கொன்னுட்டு கல்யாணத்தை நடத்திடுவேன்.”

   “கல்யாணம் முடிஞ்சதும் போலீஸ்ல சரண்டர் ஆயிடுவேன். உசுரோட இருக்கனுமுன்னு ஆச இருந்தா, மரியாதை தெரிஞ்ச உன் ஆச மருமவ கீதாவை வாயடக்கி இருக்க பழக்கு சரியா?”

     “ இல்லன்னா போட்டுத்தள்ளிட்டு போயிக்கிட்டே இருப்பேன்” என்றான்.

    “சரிப்பா! நீயே உந்தம்பிக்கு கல்யாணம் பண்ணு. பொண்ணப்பத்தி ஒன்னும் சொல்லலியே? எந்த ஊரு? எவ்ளோ போடுவாங்க?  இதெல்லாம் பாக்காம எப்படி சம்மதம் சொல்றது? விசாரிப்பா விஜி” என சுசிலா விவரங்களை கறக்க பம்ம

    “ பொண்ணு ஸ்கூலுல வேலைக்கு போகுது. நம்மல விட வசதியான வீடு. நல்லா சீரு செய்வாங்க. வேற என்ன தெரியனும்? நான் ஜாதகத்துல இருந்த போன் நம்பருல விசாரிச்சிட்டேன். நீங்க அமைதியா இருந்தா நல்லது. பொண்ணோட பாசக்கார அண்ணன் போலீஸ் இன்ஸ்பெக்டர்.” என்க திருடனுக்கு தேள் கொட்டியது போல விழித்தனர் இருவரும்.

   ஊரு பேரு கேட்டுட்டு நேருல போயாவது இத நிறுத்திடனும் என கணக்கு போட்டுக்கொண்டு அவர்கள் இருக்க, விஜயனின் பேச்சை கேட்டு நிர்மலா கல்யாணம் போல இதுவும் ஆயிடுமோ என பயம் வந்தது அவர்கள் ஆழ்மனதில.

     பையனுக்கு காதலிருந்ததை அந்த போலீஸிடம் சொன்னாலே போதுமே இந்த ஏற்பாடு இத்தோடு நின்றுவிடும் என மனப்பால் குடித்தனர் கூனிகள் இருவரும்.

    ஏதேதோ தகிடுதத்தம் செய்ய முயற்சிக்க, விஜயனோ மகேஷுடன் சேர்ந்து அவற்றை எல்லாம் முறியடித்து பெண் பார்க்கும் வைபவத்தில் கொண்டு வந்து நிறுத்தினர்.

   வளர்மதியும், அவர் அம்மாவும் ஏதும் செய்யமுடியாத நிலையில் அமைதியாகி இருந்தனர்.      சுபாஷ் – ராகினி தம்பதியருக்கு குழந்தைப்பேரு தள்ளிப்போனது. மருத்துவர்கள் உடல் ரீதியான பிரச்சனை எதுவுமில்லை. காத்திருங்கள் குழந்தை கிடைக்கும் என அறிவுரை வழங்கி இருந்தனர்.

   வாக்கு கேட்க, குடும்ப உறுப்பினர்கள் செய்த பாவம்தான் குழந்தை வரத்தை கிடைக்க விடாமல் செய்வதாய் சாமியாடி சொல்ல, வளரின் அம்மாவும், வளரும் கூனி குறுகி போனார்கள்.. முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும் மூத்தோர் வாக்கு பலித்தது என வருவோர், போவோரெல்லம் சொல்ல மனம் வருந்தினர்.

   திருந்திவிட்டார்களா? தெரியவில்லை…. அவர்களுக்கே வெளிச்சம். ஜெயன் வீட்டு கூனிகள் போல் இல்லாமல் அமைதியாக ஒதுங்கி நின்றனர். சுஜா வாழ்க்கையாவது பூக்கட்டும் என்று நினைத்தனரோ???? வாய்ப்பில்லை ஆனாலும் நம்புவோம்.

    வரதட்சணை, சொத்து கேட்டால் வேண்டாம் என சொல்லி விடுவர் என நூறு பவுன், பத்து லட்சம், வீடு, வீட்டுக்கு தேவையான சாமான் என சுசிலா அடுக்க, உடனே விஜயன், “இதெல்லாம் தர்றேன்னு கீதா அப்பா சொன்னாரு. ஆனா நான் கட்டுன புடவையோட வந்தா போதுமுன்னு யேம் பொண்டாட்டிய கட்டிட்டு வந்தேன்.”

   “குள்ளையா, கருப்பா, குண்டா, வேலை வெட்டிக்கு போகாத ஞானசூன்யத்தையே நான்  வரதட்சணை வாங்காம கட்டிட்டு வந்தப்போ, கண்ணுக்கு லட்சணமா, படிச்சி கை நிறைய சம்பாரிக்கிற உங்க பொண்ணுக்கு நீங்க எதுவும் போட வேண்டாம்.”

     “எங்க ஜெயனுக்கு வாழ்க்கை துணையதான் தேடி வந்தோம். ஜெயன விக்க வரல. அதனால நாளைக்கு யாராவது கேட்டா, என்கிட்ட பேச சொல்லுங்க.” என்று பொதுவில் சொன்ன விஜயன்,

     “என்னம்மா இதைதானே சொல்ல வந்திங்க? நானே சொல்லிட்டேன். நீங்க பெரியவங்க இப்படியான சில்லரைங்ககூட சேர்ந்து சில்லரைத்தனமா பேசலாமா?” என மெதுவாக கீதாவை முறைத்தபடி கேட்டான்.

  கருப்பா, குண்டா, குட்டையான தன்னை வரதட்சணை வாங்காமல் கட்டியதாக சொல்லவும், தன்னையும், சுஜாவையும் ஒப்பிட்ட கீதா தன் மாமியாரை முறைத்தாள்.

    அனைவரின் முன்னும் தான் அவமானபட்டதிற்கு ஜெயனும், சுஜாவுமே காரணம் என புழுங்கினாள். தங்கள் செயல்களே இந்த அவமானத்திற்கு காரணம் என்பதை யோசிக்க மறந்தனர் கீதாவும், சுசிலாவும்.

   தினம் ஒரு பிரச்சனை என கடந்து கொண்டிருந்தன சுஜா- ஜெய்யின் திருமணத்திற்கு முன்னிருந்த நாட்கள்.

   இங்கு விஜயனும், அங்கே ஈஸ்வரும், சுகனும் நின்று எல்லா குழப்பங்களையும் அடித்து நொறுக்கினர்.

   கீதா போன் செய்து சுஜாவிடம் தாறுமாறாக பேச, உடனிருந்த விஜயனும், ஜெயனும் சுஜாவிடம் மன்னிப்புக் கேட்டனர். கீதா தான் தன் கணவர், மாமனார், கொழுந்தனுடன் குடும்பம் நடத்துவதாக கூச்சமில்லாம சொன்னதை கேட்ட விஜயனும், ஜெயனும் கீதாவை கொல்லும் வெறியுடன் கிளம்ப, “கல்யாணத்தை நிறுத்த  நேரடியாக இப்படி பேசறாங்க. இத கேட்டதும் நான் ஏற்பாடுகளை நிறுத்துவேன்னு எதிர்பார்ப்பாங்க போல. இப்ப இத நான் வெளிய சொன்னா நான் தப்பானவளா தெரிவேன். அவங்க தப்பிச்சிப்பாங்க. என்னால, என்னோட சந்தேகத்தால நின்னதா கதை கட்டுவாங்க. என்ன செய்யப் போறிங்க?” என விஜயனிடம் கேட்டுக்கொண்டே ஜெயனை பார்க்க, ஜெயன் பேயறைந்ததை போல நின்றிருந்தான்.

    “அண்ணா பத்திரிகை செலக்ட் செய்யலாமா வேணாமா?” என சுஜா கேட்க,

     “”பத்திரிகைய நீ செலக்ட் பண்ணு. இந்த கல்யாணம் நடக்கும். எலிக்கு பயந்து வீட்டுக்கு நெருப்பு வைக்க முடியாது. அவங்கள நான் நிமிர்ந்து பார்த்தே பல வருசம் ஆச்சி. என்னைய சந்தேகப்படாத சுஜா” என ஜெயன் பொரிய

    விஜயனோ, “அவளுக்கு தாழ்வு மனப்பான்மை. நீ ஜெயனுக்கு ஏத்தது போல ஹைட்டா, படிச்சி, வேலைக்கு போய் எக்ஸ்ட்ரா குவாலிஃபிகேஷனோட இருக்குற, அதை பொறுக்க முடியல. தன்னைய போல பொண்ண ஜெயனுக்கு கட்டி வச்சா  அவ ஈகோ சால்வ் ஆகும். அத பாத்தா முடியுமா?”

     “நீ கவலைப்படாத. நீங்க ரெண்டு பேரும் சந்தோசமா வாழ நான் கேரண்டி. நீ எனக்காக கொஞ்சம் பொறுத்து போம்மா” என்றான்.

   பட்டெடுக்க செல்லும் நாளே தாலியையும் எடுக்க முடிவு செய்தனர்.

     தாலி எடுக்கும்போது “எனக்கு எடுத்த அதே டிசைனில் எடுத்துக்காட்டுங்க” என கீதா அதிகாரம் செய்ய

    தேன், நீலாவுடன், சுஜாவும், காயுவும், “ஐந்து பவுனில் தாலிச்செயின் காட்டுங்க” என பார்த்து அதில் பிடித்த டிசைனை தேர்ந்தெடுத்தனர்.

  விஜயன், “காயு எங்க கல்யாணத்துல ஒன்பது பவுனுல தாலிச்செயின் எடுத்தாங்க. நீங்க கம்மியா எடுத்திருக்கிங்க” எனச் சொல்ல

    காயுவின் கணவன் கண்ணன், நம்ப கடவுள் தாங்க, “அண்ணா பஸ்ஸுல தினமும் வேலைக்கு போயிட்டு வர கம்மி பவுனுல போட்டாதான் நல்லது. அந்த நாலு பவுனுக்கு ஒரு செட் வளையல் எடுத்து குடுத்துடுங்க. சரியா போயிடும்” என்க, கீதா முடியவே முடியாதென்க

    சப்தமிடாமல் பரமசிவம் பணத்தைக்கட்டி தாலிச்செயினையும், வளையலையும் வாங்கி வந்தார்.

       பட்டெடுக்கும் நிகழ்வில், கீதா சுஜாவிடம், “எங்க ஜெய் மாமாவுக்கு சபாரிதான் புடிக்கும். அததான் எடுக்கனும்”

    “கருநீலக்கலருதான் எங்க ஜெய் மாமாவுக்கு புடிக்கும். அந்த கலரிலேயே புடவை எடுங்க.” என வார்த்தைக்கு ஒரு மாமா போட, சுஜாவை ஜெய்யிடம் செல்ல கண்காட்டியபடி

 அருகில் வந்த விஜயன், “சுஜாம்மா, ஜெய்யோட மாமா அதான் எங்க மாமனாருக்கு சபாரியும், கருநீல புடவையும் கட்டிக்க வேணுமாம். நீதான் வேலைக்கு போற. அதனால அத எடுத்து இவகிட்ட பிச்சையா போடு. இவ குடும்பம் வக்கத்ததுதானே, வச்சிப்பாங்க”

     “ஏன்டி மரியாதை ஓவரா இருக்கு? நீ எங்கப்பனையே ‘யோவ்’ன்னு கூப்பிடற ஆளு. இந்த உள்குத்து இங்க வேலை செய்யாது. போயி துணிய அள்ளு. நாளைக்கு ஜெய் கல்யாண கணக்குல காட்டலாம்.” என பேச

     “நான் அம்மாகிட்ட பேசுனது கேட்டிங்களா? புது மருமக, பணக்காரி. அதனால அத்தை இருபதாயிரத்துல புடவை பார்க்கலாம் அப்படின்னாங்க. அதான் நானும் ஜெய் கல்யாண கணக்குல ஒரு ரெண்டு இல்லயில்ல ஒரு நாளு பட்டு சேலை இருபதாயிரம் விலையில எடுத்துக்கலாமுன்னு இருக்கேன்னு சொன்னத நீங்க தப்பா புரிஞ்சிக்கிட்டிங்க.”

    “அவங்க பெரிய குடும்பம். நிறைய சொந்தக்காரங்க. நல்லது கெட்டதுக்கு நாம போகனும். அப்ப தேவைப்படும். நாம நல்லா அழகா போகனும். அதான் இப்பயே, இங்கியே எடுத்துக்கலாமுன்னு நினைச்சேன்” என்க

   “சட்டியில இருந்தாதான் ஆப்பையில வரும். உன் மனசு வெள்ளையா இருந்தா நீ கிழிஞ்ச துணி போட்டாலும் அழகா தெரிவ. இங்க உள்ளயும் விசம், வெளியவும் அழுக்கு. நீ பன்னீருல குளிச்சாலும் வெளுக்க மாட்ட. போ போயி துணிய வாரிக்கிட்டு வா.” என பேசிவிட்டு போக, இவ முன்னாடி இந்தாள் நம்மள இப்படி மோசமா பேசறானேன்னு முனகிக்கொண்டே திரும்ப அங்கே ஒரு யாருமில்லை.

    “ எங்க போனா இந்த சிங்காரி? நாம பேசுனது கேட்டிருக்காதில்ல? ஆனா போன் இவதான பேசினா? அத தெரிஞ்சது போல ரியாக்ஷன் இல்லையே? ஒரு வேலை நாம வேற யாருக்காவது போன் போட்டுட்டோமோ?” என புலம்பியபடி முகுர்த்தப்புடவை செக்சன் வர, சுஜாவும், காயுவும் வெளிய வர,

     “என்ன புடவை எடுக்கலயா? நடக்காத கல்யாணத்துக்கு எதுக்கு புடவைன்னு திரும்பி வர்றிங்களா?” என்க

   “நீலாக்கா இவங்க நமக்கு என்ன முறை ஆகனும்? அண்ணி தானே?” என்ற தேன்,

    “அண்ணி! எங்க சுஜா சூப்பரா செலக்ட் செய்வா. புடவை பில்லிங் செக்சன் போயாச்சி. பில் போட்டாதான் முந்தியில முடிச்சி போட்டுக்குடுப்பாங்க” என சொல்லி செல்ல  கீதாவுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்துடுச்சி.

    ஓடி வந்து தன்  மாமியாரிடம் “அத்தை நான் வராம புடவை எடுத்துட்டாங்க. எனக்கு மரியாதையே இல்ல. இந்த கல்யாணம் நடக்காது. எனக்கு மரியாதை தராத இடத்துல யேன் ஜெய் மாமா நிக்க மாட்டாங்க” என அலப்பறையை கூட்ட

    “சார் இந்த ஏழு புடவை யாருடைய பில்லுல போடறது?” என பில்லிங் செக்சனில் கேட்க

   “சார் பொண்ணுக்கு ஒரு முகுர்த்தப் புடவைதான் எடுப்பாங்க. ஆனா ஏழு புடவை யாரு எடுப்பாங்க? இதுல ஒன்னை செலக்ட் பண்ணுவாங்களா இருக்கும் வெயிட் பண்ணுங்க” என அருகில் நின்றவர் சொல்ல

     “அத தனியே வைங்க. அதுக்கு வேலை இருக்காது. நிக்கிற கல்யாணத்துக்கு யாராவது ஏழு புடவை எடுப்பாங்களா? அதுவும் மாப்பிள்ளையோட அண்ணிக்கு? வேண்டாம் சார். அந்த செக்சனுக்கே திருப்பி அனுப்பிடுங்க” என விஜயன் சொல்ல, கீதா அசடு வழிந்தாள்.

    “அதில்ல மாமா! எனக்கும் பார்க்க ஆசை இருக்குமில்ல? அதான் கொஞ்சம் கோபமா கேட்டுட்டேன். நீங்க இத பில் போடுங்க”  என சொல்ல, விஜயன் தன் கார்டில்  தனியே பே பண்ணினான். நகைகடையிலே தனக்கும் வளையல் வேண்டுமென ஆடிய ஆட்டம் அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது. அங்கும் அவன் தன் பணத்தையே கட்டி இருந்தான்.