பாட்டி எல்லோரும் இருக்கும்போது ஒரு மாதிரியும், வீட்டில் ஆண்கள் இல்லாத நேரத்தில் ஒரு மாதிரியும் நடந்து கொள்ள, சுஜாவும், சுகனும் அதை மற்றவர்கள் அறியச் செய்தனர். அதனால் பாட்டி இப்போ பல் பிடுங்கிய பாம்பு போல வெளி ஆட்களிடம் சீறியும் வீட்டில் அடங்கியும் போக ஈஸ்வரன், நிலா வாழ்க்கை தெளிந்த நீரோடை போல சுமூகமாக சென்றது.
நிலா கர்ப்பம் தரிக்க குடும்பமே கொண்டாடியது. குழந்தை பிறக்கும் வரை நிலாவை கொண்டாடுவதையும், பெண் குழந்தை பிறக்கவும் மகாலட்சுமியே வந்து பிறந்ததாய் குழந்தையையும், நிலாவையும் எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு கொண்டாட பாட்டியும், வளர்மதியும் பொறாமையில் வயிறெரிந்தனர்.
தன் மருமகள் இப்போது போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்வதால், தற்சமயம் குழந்தை ஆசையை தள்ளி வைத்திருக்க, தன் அண்ணன் மகனின் குழந்தையை பார்க்கும் போதெல்லாம் ஏதும் செய்ய முடியாத தன் நிலையை எண்ணி எண்ணி சுஜாவின் மேல் வெறுப்பை வளர்த்து வந்தார் வளர்மதி.
விஜயன் இருப்பதால் ஜெயனும் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றான். கீதாவும் அவனை கண்கொத்தி பாம்பாக கவனித்தாள். அவன் பொருள்களை அவனறியாமல் சோதித்தாள்.
ஜெயன் ஊருக்கு வரும்போதெல்லாம் மனவருத்தத்துடனே திரும்பி சென்றான்.
இதற்கிடையில் விஜயனுக்கும் கீதாவுக்கும் ஒரு ஆண்குழந்தை பிறக்க, அவனுக்கு கவின் என பெயரிட்டனர்.
கீதாவின் அட்டகாசமும், அலட்டலும், அலட்சியமும் பல மடங்கு பெருகி இருந்தது.
ஒரு முறை ஊருக்கு வரும்போது படிக்க கண்ணனின் புத்தகத்தை மாற்றி எடுத்து வந்திருக்க, அதனால ஜெயனின் வாழ்வில் ஒரு திருப்பம் ஏற்பட்டது.
கண்ணன் காயு நம்பரை “மை சோல்” என ஒரு இடத்தில் கமுக்கமாக எழுதியிருக்க, கீதா கண்டுபிடிக்க வீட்டில் பிரச்சனை வெடித்தது.
புத்தகத்தை பிடுங்கிய ஜெயன், “இது கடவுளோட புத்தகம் அண்ணா. வர்ற அவசரத்துல என்னோட புத்தகத்தை தேட முடியல. அவனோடது முன்னாடி இருக்கவும் எடுத்துகிட்டு என்னோட புத்தகத்தை தேடி எடுத்து படிச்சிக்க சொல்லிட்டு வந்தேன்.” என விஜயனிடம் முறையிட,
“டேய் ஜெய், நேத்து நெல்லு வித்த பணத்தை உன் பைல வச்சேன். அது இருக்கா பாரு” என விஜயன் கேக்க
“பையே இங்கதான் கிடக்குது. நீயே தேடி பாத்துக்கண்ணா.”என ஜெயன் பையை பார்த்தபடி சொல்ல
“நீ ஹாஸ்டல் கிளம்பு. ஊருக்கு வராத. மாசத்துல ரெண்டு தடவை உன்னைய பாக்க நான் அங்க வர்றேன்..இப்போ பஸ் இருக்கும் போ” என தன் தம்பியை அனுப்பி வைத்த விஜயன், கீதாவிடம்
“உனக்கு ஏற்கனவே பலமுறை நான் சொல்லிட்டேன். எந்தம்பிய நீ பாக்கத் தேவையில்ல. அண்ணன் நான் இன்னும் உசுரோடதான் இருக்கேன்னு.”
“ அவன் பையில நான் பணம் வச்சிருந்தேன். இப்போ காணோம். யாரு எடுத்திங்க? பணத்தை குடுங்க” என மிரட்ட
“புத்தகம் தாங்க இருந்துச்சி. வேற எதுவும் அதுல இல்லை . என்னைய நம்புங்க. நான் பணத்தை எடுக்கல. பணம் அந்த பைல இல்ல” என கீதா கெஞ்ச
“இப்போ குளிக்க போறதுக்கு முன்னாடி பார்த்தேன், அங்கதான் பணம் இருந்துச்சி. நான் கதவ தாழ்போடுமுன் திரும்பி பார்த்தேன் நீதான் உள்ள போன”
“மாமியாகாரிதான் திருடி, நல்லா நடிப்பான்னு பாத்தா மருமவ மாமியாவ தூக்கி சாப்பிட்டுடுவா போலவே. நல்ல பொருத்தம்பா” என மனதினுள் சொல்லியபடி அமைதியாக பரமசிவம் நிக்க
தங்கள் அறையில் தேடிய விஜயன் நாலைந்து ஐநூறு ரூபாய் கட்டுகளை எடுத்து முன்னும்பின்னும் திருப்பி பார்த்தபடி வந்து, “இதோஈ உன் பீரோல இருந்துச்சி” என தன் தந்தையிடம் கொடுத்து, “ அப்பா முன்னாடி பின்னாடி நான் சொல்ற நம்பர் இருக்கா பாருங்க, “என தான் பார்த்த எண்களை கூற
“விஜயா நம்பர் சரியா இருக்குடா. உன் பணத்தை எடுத்தது உங்கம்மாவா இருக்கும். எடுத்து எங்க ரூமுல வச்சா மாட்டிக்குவோமுன்னு மருமவகிட்ட கொடுத்து வைக்க சொல்லிருப்பா”
“இதுங்க கையும் சுத்தமில்ல, வாயும் சுத்தமில்ல. இனிமே பணத்தை இப்படி பாதுகாப்பு இல்லாம வைக்காத சரியா?”
“இதுங்ககிட்ட பேசறதே வேஸ்ட். போய் ஆக வேண்டிய வேலய பாரு. நெல்லு வித்த பணமா இவ்வளவும்? ஆமா இந்த பணம் எதுக்கு?” என மகனை சமாளிக்க ஏதேதோ பேசியபடி விஜயனின் திட்டத்தை அறிய முயல
“அது ஒருத்தருகிட்ட கைமாத்து வாங்கியிருந்தேன். அதை திருப்பி குடுக்க நெல்லுகாசு பத்தல. அதான் நகையை பேங்க்ல வச்சேன்” என்க
“நகையா? எந்த நகை? உங்ககிட்ட நகை இருக்காதே?” என கீதா பதற, சுசிலாவும் பதட்டத்துடன் பார்க்க
“உங்கப்பமுட்டு சீதனம்தான்டி யேன் செல்ல பொண்டாட்டி. உனதும், உங்கத்தையிதும்தான் பேங்க்ல வைச்சிருக்கேன். ஒழுங்கா அடக்க ஒடுக்கமா இருந்தா திருப்பி வாங்கி குடுப்பேன். இல்ல வட்டி அசல கட்டாம ஏலத்துல விட்டுடுவேன். அப்புறம் குத்துது, குடையுதுன்னு அலறகூடாது பாத்துக்குங்க.” என நக்கலா சொல்லி வெளியில் சென்றான்.
வெளியே வந்தவன், தன் பைக்கை எடுத்துக்கொண்டு குத்தகைக்கு பயிரிடும் நிலத்திற்கு வந்து, சுற்றிலும் பார்த்து ஜெயனிடம் போனில் பேச அவன் வீட்டில் நடந்ததையும், தாயும் அண்ணியும் ஆடிய ஆட்டங்களையும் கேட்ட சத்தியங்களையும் சொல்ல,
“ஜெய் நான் பாத்துக்கிறேன். நீ படிக்கிற வேலைய மட்டும் பாரு. இவங்களை எல்லாம் மனிதர்கள் லிஸ்ட்ல சேர்க்காத.” என்றவன்
“அடுத்த வாரம் அப்பாவோட ரிட்டயர்மென்ட் பங்சனுக்கு கண்டிப்பா வந்துடு. நீங்க அஞ்சி பேர் மட்டும் வாங்க. கேர்ள்ஸ் வேண்டாம். சுகன்கிட்ட நான் பேசிக்கிறேன்.” என்று சொல்லி காலை கட் செய்தான்.
பின் அங்கிருந்தே ஒருசிலரிடம் போனில் பேசினான் தன் பையிலிருக்கும் பணம், தன் அப்பாவின் பணம் என்பது அவனுக்கு தெரியும்.
இது அப்பாவிடம் செலவுக்கு வாங்கி, அவருக்கு தெரியாமல் பதுக்கிய அம்மாவின் சிறுவாட்டு காசு. மொத்தத்தையும் கீதா தட்டிப்பறிக்க பார்க்க, இப்போது விஜயனிடம் சேர்ந்தது. கீதா தன் அத்தையிடம் அடித்ததை தன் பீரோவுல அங்கங்கே ஒளித்து வைத்திருக்க, அதில் ஒரு பகுதியை எடுத்து வந்திருந்தான் விஜயன்.
“திருடனுக்கு தேள் கொட்டியது போலன்னு” பழமொழி கேள்விபட்டிருக்கும் விஜயன் அதை நேரில் பார்த்தறிந்தான் இன்று. இப்பணத்தை அப்பாவின் பங்சன் அன்று வைக்கப்படும் விருந்துக்கு பயன்படுத்த முடிவு செய்தான்.
வீட்டிலோ கீதா, “அத்த உண்மையாவே நான் பணத்தை பாக்கல. பாத்திருந்தா அதை கம்முனு பதுக்கிட்டு ஒதுங்கி இருப்பேன். உங்க புள்ளதான் உள்ள வச்சிட்டு இங்க இருக்குன்னு தேடினாரோ என்னமோ? அஞ்சாறு கட்டு எப்படியும் ரெண்டு லட்சத்துக்கு மேல இருக்கும் போல”
“இந்த துரோகிய பாத்துட்டு பணத்தை கோட்டை விட்டுட்டேன். அவன வசதியான வீட்ல வித்தாவது அதை நான் சம்பாரிச்சிக்கிறேன்.” என்றவள்
“காலேஜ் போகாதன்னு சொன்னதுக்கும் ஒத்துக்கல, நான் சொல்ற பொண்ணதான் கட்டிக்கனுமுன்னு சொன்னதுக்கும் ஒத்துக்கல.”
“நீங்க சாவறேன்னு சொன்னதுக்கு உங்க பெரிய மகன் கயிரு, பால்டாயில் மருந்து கத்தி எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு வந்து உங்க பக்கத்துல வைக்கிறாரு.”
“யேன் மாமனாரு ஊமை மாதிரி வாயடைச்சி, செத்தா சாவுன்னு சொல்லறத போல நிக்கிறாரு. உங்க பாடு கஷ்டந்தான் அத்த.”
“அந்த சின்ன கழுதய அடக்கி நாம மூக்கணாங்கயிற மாட்டிட்டோமுன்னு வைங்க இன்னும் நாப்பது, ஐம்பது வருசத்துக்கு நம்ம அசைச்சுக்க இந்த ஜில்லாவிலே ஆளே கிடையாது.” என்றவள் திடீரேன,
“அத்த மாமா வெளிய போய்ட்டாங்களா பாருங்க? போனதும் சொல்லுங்க” என ஏதோ திட்டமிட
“அந்தாள் அப்பவே நான் திட்டுவேன்னு பயந்து வெளிய போயிருப்பாருடி. எதுக்கும் இரு பாத்துட்டு வர்றேன்” என தேடியபடி சென்று சிறிது நேரத்தில் “யாரும் இல்லை”யென சொல்லியபடி வர
போனை எடுத்த கீதா, அந்ந புத்தகத்தில் எழுதியிருந்த நம்பருக்கு போன் போட்டாள்.
மறுபுறம் யாரு போன எடுத்தது, ஆணா, பெண்ணா பேரு என்ன என எதுவும் கேட்காமல், அந்த பக்கமிருந்து பேசும் முன் வழக்கம்போல கீதா,
“ஏய் எடுபட்ட சிறுக்கி! காலேஜில படிக்க வந்தியா? எங்கூட்டு பையன மயக்க வந்தியா? படிக்க வந்தா அந்த வேலைய மட்டும் பாத்துட்டு மரியாதையா போயிடு.”
“உங்கூருல ஆம்பளயே இல்லயா? அங்கிருந்து இங்க வந்து வசதியானவனா பாத்து புடிச்சிட வேண்டியது”
“ஏற்கனவே அவனுக்கு பொண்ணு பாத்து கல்யாணம் பேசி வச்சாச்சி. பொண்ணோட அண்ணன் பெரிய ரௌடியாம். உன்ன, உங்குடும்பத்த எல்லாம் அவன் கொளுத்தி விட்டுருவான் பாத்துக்க. மரியாதையா பொழப்ப பாத்துக்க” என சொல்லி பேச இடங்கொடுக்காமல் வைத்தாள்.
மறுபுறம் போனை எடுத்த காயு மெஸ்ஸிலேயே மயங்கி விழ, வார்டன் பக்கத்துல இருக்கும் கிளீனிக்கில் இருந்து ஒரு மருத்துவரை அழைக்க, வந்தவர்
பீபி செக் செய்ய இருநூறை தாண்டியது ரத்த அழுத்தம். பதறிய அவர் ப்ரஷ்ஷரை குறைக்க ஊசி போட்டு அருகில் இருந்தவர்களிடம் காரணம் கேட்டார்.
“போன் வந்துச்சி சார். பேசினா அப்படியே மயங்கிட்டா” என தோழிகள் சொல்ல, வார்டனிடம் சென்றவர்
“மேம், அந்த பொண்ண வீட்டுக்கு அனுப்புங்க. ஒரு வாரம், பத்து நாள் கழிச்சி ஹாஸ்டல் வர சொல்லுங்க. ஏதோ அதிர்ச்சியில மயக்கம் வந்திருக்கு.” என்று சொல்லிச் செல்ல, சுஜா வந்து
“ மேம் சாரோட பீஸ் சொன்னா நான் இப்பவே பே பண்ணிடுவேன்” என்க,
“அவர் கிளம்பிட்டாரே! வேகமா போய் பாருமா. இருந்தா குடுத்துட்டு வந்து நோட்டுல அடிச்சிடு” என்று துரத்தினார்.
வேகமாக அவரை தேடி வந்த சுஜா பைக் பார்க்கிங்கில் அவரை கண்டு “சார் ஒரு நிமிஷம் நில்லுங்க. உங்க பீஸ் வாங்காம போறிங்க “ என சுஜா சத்தமாக கத்தியபடி வர, அவர் வண்டியை எடுக்காமல் நின்றார். பணத்தை கொடுத்துவிட்டு “சார் என் ப்ரெண்டுக்கு என்ன ஆச்சி? காய்ச்சல் கூட யேன் ப்ரெண்ட பாத்தா பதறி ஓடும். இப்போ எதனால இவ மயக்கம் போட்டு விழுந்தா? ஏதாவது பெரிய பிரச்சனையா சார்” என கவலையாக கேக்க, அவர் “உன்னோட க்ளோஸ் ப்ரெண்டா?” என விசாரிக்க
“எஸ் சார்.” சுஜா சொல்ல
“போன் வந்த உடன் அதிர்ச்சியில மயக்கம் வந்திருக்கு. ஏதாவது லவ் மேட்டரா இருந்து பிரச்சனை ஆயிடப்போகுது பாத்திருந்துக்குங்க.” என சொல்லி சென்றார்.
“லவ்வா? அதுவும் காயுக்கு? ஆண்டவா இதுவும் உன் திருவிளையாடலா?” புலம்பியபடி காயுவை ரூமுக்கு அழைத்து சென்று படுக்க வைத்தாள்.
காயு “ராங் நம்பரில் ராங்க ஒருத்தி பேசினா. என்னைய பேச விடாம அவளே பேசிட்டு அவளே வச்சிட்டா. அவ கண்டபடி பேசினதால என்னால என்னை கண்ட்ரோல் பண்ண முடியல. அதான்” என கூறியவள் மனதினுள்
“எவனாவது என்கிட்ட வந்து லவ், கிவ்ன்னு பேசட்டும். அவன உண்டு, இல்லன்னு பண்ணிடறேன்.” என சபதமெடுத்தாள். கண்ணனின் காதல் நிறைவேறுமா?
காயு ஒரு வாரம் வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுத்து வந்தாள்.
பரமசிவத்தின் ஓய்வூதிய பலன்களை கீதா பறித்துக்கொள்ள திட்டமிட, நான்கில் ஒரு பங்கை (சுசிலாவின் பங்கு) அவளிடம் கொடுக்கும்படி செய்து “இவ்வளவுதான் வந்துச்சி. பணம், பணமுன்னு கேட்டு தொந்தரவு செஞ்சதால எல்லா லோனையும் போட்டு கொடுத்துட்டாரு. இப்போ இவ்வளவு கம்மியாதான் வந்தது. இத நீங்களே வச்சிக்கங்கம்மா. பென்ஷன் கூட கம்மியாதான் வரும்” என வருத்தமாக சொன்னான்.
மீதமுள்ளதை பரமசிவத்தின் பேரில் வீட்டு மனையாக வாங்கி போட்டான். அவரிடம்
“அப்பா இதை அம்மாவிடமும், கீதாவிடமும் சொன்னிங்க எல்லாத்தையும் புடுங்கிட்டு உங்கள நடுரோட்டுல விட்டுடுவாங்க. பாருங்க உங்க பேருலதான் இருக்கு. இதே போல பென்ஷன் பணத்துலயும் நான் சொல்றது போல கொஞ்சம் மட்டும் குடுங்க. மீதிய உங்க பேருல ஆர்டி
போடுங்க.”
“கீதா மட்டும் உங்க மருமக இல்ல. நாளைக்கு ஜெயன கட்டிட்டு வர பொண்ணும் உங்க மருமகதான். அந்த பொண்ணுக்கும் கீதாவுக்கு குடுத்ததுபோல குடுக்கனும்” என சொல்ல அவர்
“தம்பி இதேயேதான் என்னோட வேலை செஞ்சவங்களும் சொன்னாங்க. சொந்தம் பந்தமுன்னு வர்ற பணத்தையெல்லாம் கொடுத்துட்டா மரியாதை இருக்காது. சோறு கிடைக்காது. அதனால பாதி பணத்தையாவது உங்களுக்குன்னு ஒதுக்கி வைங்க அப்படின்னு சொன்னாங்க. இனிமேல நீ சொல்றத மட்டும் கேக்கிறேன்பா” என்றார்.
சுசிலாவும், கீதாவும் விடுவார்களா? அவர்களுக்கு தெரிந்தால் பரமசிவத்தின் கதி? காத்திருப்போம் தெரிந்து கொள்ள.