ஜெயன் திருமணம் நின்றதால், நகை, பணம், சொத்து எல்லாம் கைவிட்டு போன வருத்தத்தில் கீதா,
“ஐய்யோ பகவானே எல்லா புருஷனும் அவங்க பொண்டாட்டிக்கு, அதும் புது பொண்டாட்டிக்கு புடிச்சத வாங்கி குடுத்து சந்தோசபடுத்தி, சந்தோசபடுவாங்கன்னு கேள்விபட்டிருக்கேன்.”
“அவளுக்காக மலையகூட பொரட்டி போடுவாங்கன்னு சொல்லுவாங்க. ஆனா எம்புருஷன் என்னோட நியாயமான ஆச, எந்தங்கச்சிய இந்தூட்டு பையனுக்கு கட்டிட்டு வர நினைச்சத கூட விடமாட்டேன்னு சொல்றாரே… இத கேக்க நாதி இல்லயா?” என பொலம்பிகிட்டு வர
“ஏய் ராட்சசி! இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசின உயிரோட ஊருக்கு போய் சேர மாட்ட பாத்துக்க.”
“பாசத்துல உன் தங்கச்சிய கட்டி வைக்க நீ ஆசபட்டிருந்தன்னா நானும், அக்காளும், தங்கையும் ஒத்துமையா இருக்கட்டுமுன்னு கல்யாணம் பண்ண ஒத்துக்கிட்டு இருப்பேன்.”
“ஆனா நீயி உன்னோட பேராசைக்கு என்னோட தம்பிய பலி கொடுக்க பாக்குற. நான் அத நடக்க விட மாட்டேன்.”
“ உனக்கு பணங்காசு, சொத்து சுகம் வேணுமுன்னா வயல்ல நீ உழைச்சி சம்பாரிச்சிக்க,”
“இத்தனை நாள் உன் சித்தப்பன் குடும்பத்த மொட்டை அடிச்சிங்க. இப்போ அவங்களோட சேர்த்து எந்தம்பியையும் மொட்டை அடிக்க பாத்திருக்கிங்க. சொத்துக்காக சொந்த பந்தங்களயே ஏமாத்துற பொழப்பெல்லாம் ஒரு பொழப்பு…ச்சே மானங்கெட்ட குடும்பம். இதுல போய் நான் மாட்டிக்கிட்டனே!” என்ற விஜயன், தன் அப்பனை பார்த்து,
“சொந்த புருஷனையும், கொழுந்தனையும் கல்யாணத்துக்கு ஒத்துக்கலன்னு கட்டிப்போட்டு அடிக்க வச்சிருக்கா, இவளாம் ஒரு பொம்பளை? இவளுக்கெல்லாம் ஒரு குடும்பம்?”
“இனி ஒரு நாளுகூட இங்க இருக்கமாட்டோம். ஏப்பா டிரைவர்! வண்டிய அங்க கார் ஸ்டேண்டுல நிறுத்து. நாங்க வாடகை வண்டி புடுச்சி ஹாஸ்பிடல் போய்ட்டு, நாங்க கிளம்பறோம்” என்க, உடனே சுசிலா,
“டேய் விஜயா, நா பண்ணது தப்புதான். எங்கப்பமுட்டு சொத்து பாதி வருதுன்ன உடனே எனக்கு ஒன்னும் புரியல. அதான் இப்ப எல்லாம் நல்லபடியா முடிஞ்சி நிர்மலா கல்யாணமும் முடிஞ்சுதே.”
“இனிமேல என்ன பிரச்சனை? நீங்க ரெண்டு பேரும் ஊருக்கு வாங்க. இந்த காயமெல்லாம் ஆறும்வரைக்கும் வீட்டுல இருங்க.”
“நல்லானதும் நீ ஆபீஸ் போ. இவனுக்கு காலேஜ் முடிஞ்சிடுச்சில்ல. இவன் என்னோட வந்து வயல்ல வேலை செய்யட்டும்.”
“நீயும் வேலைக்கு போயிட்ட. இவனும் படிச்சி வேலைக்கு போயிட்ட வயல என்ன பண்ண முடியும்? எனக்கும் வயசாகுது, முன்னப்போல வேலை செய்ய முடியல.”
“இவன விட்டுட்டு கீதாவ உங்கூட கூட்டிட்டு போ. போய் பொழப்ப பாரு. இப்ப வீட்டுக்கு வாங்க” என கெஞ்சலாக பேச
“ஆமா ஒரு முப்பது ஏக்கர உங்க பொறந்த வீட்டு சீதனத்துல வாங்கி வந்திங்க.”
“ உங்க புருசன் சம்பளத்தை மிச்சம் பண்ணி ஒரு பத்து ஏக்கர் வாங்கி போட்டிங்க.அது எல்லாம் வீணா போயிடும்.”
“இனி உங்கள நம்பி நாங்க வர்றதா இல்லை. நான் இப்பவே அந்த இன்ஸ்பெக்டருக்கு போன போடுறேன். எந்தம்பி படிப்ப கெடுக்க எங்குடும்பமே ரெடியா இருக்குன்னு.” என்க
“ஒரு ரெண்டு வாரமாச்சும் இருந்து காயத்துக்கு வைத்தியம் செஞ்சிக்கிட்டு…” என சுசிலா இழுக்க அவரை பார்த்த விஜயனுக்கு அங்கு மண்டபத்தில் கடைசியாக நடந்தது நியாபகம் வந்தது. நிர்மலா கல்யாணம் முடிந்ததும் அருகில் வந்த கீதாவின் பாட்டி சுசிலாவிடம்
“ ஜெயனுக்கு கல்யாணம் அப்படின்னு ஊரையே தெரட்டிகிட்டு வந்துட்டு சும்மா போன நல்லாயிருக்காது. கீதா தங்கச்சி சீதாவை கட்டி வச்சிடலாம்.”
“இவள கட்டினா ரெண்டு பேரும் ஒத்துமையா, ஒன்னா இருப்பாங்க. உனக்கும் உங்கப்பமுட்டு வளவுல கட்டினது சந்தோசமா இருக்கும்.” என அறிவுரை சொல்ல
“ஏய் கிழவி! உனக்கு அவ்வளவு தான் மரியாதை பாத்துக்க. நானே அவன் வாழ்க்கைய கெடுத்தாவது நான் பணக்காரியா ஆகனுமுன்ன பாக்கறேன்.”
“இந்த வழி போனா என்ன? இன்னொரு பணக்கார ஏமாளி கிடைக்காமையா போயிடுவா?”
“அவன் பணங்காய்க்கும் மரம் எனக்கு. அவன சாகவும் விடாம, வாழவும் விடாம, என்னோட குடும்பத்துக்காக சம்பாரிக்க வைக்கப்போறேன்.” என குதிக்க
“இதுவும் உங்குடும்பம் தானடீ பைத்தியகாரி” என பாட்டி திட்ட
“இது எங்குடும்பமா? யாரு சொன்னா? எங்குடும்பமுன்னா நானு, எம்புருஷன், பொறக்கப்போற எம்புள்ளை. நாங்க மூனு பேருந்தான். கண்ட கழிசடையெல்லாம் எங்குடும்பம் கிடையாது தெரியுதா கிழவி.” என கீதா எகிறிக் கொண்டு வர சுசிலா பேசாமடந்தையாக வாயடைத்து நின்றார்.
அதைக்கேட்டபடி வந்த விஜயன், “ ஏன்டி நீயே ஒரு சாக்கடை. உனக்கு ஒரு குடும்பம் எதிர்காலத்துல இருக்குமுன்னு நினப்பெல்லாம் இருக்கா? சந்தோசம்” என்றவன்
“பாட்டி இந்த குடும்பத்துல மறுபடியும் சம்பந்தம் பண்ற அளவுக்கு எங்களுக்கு தெம்பு இல்ல. இவளோட இருந்து அந்த புள்ளை காலத்துக்கும் அடிமையா இருக்கறதுக்கு இப்போவே ஒரு பாழுங்கிணத்துல அத தள்ளிவிட்டு கொன்னு, காரியம் பண்ணிடுங்க.”
“கிளம்புங்க ஸ்டேஷன் போகனும்” என அவர்களை கிளப்பினான்.
அதை நினைத்து பார்த்தவன், “எத்தனை திட்டம்தான் போடுவீங்க நீங்க ரெண்டு பேரும்? கல்யாணம் பண்ண ட்ரை பண்ணிங்க, முடியல. அடுத்து அவன படிக்க விடாம, விவசாயத்தை பாக்க வைக்க ப்ளான் போடறீங்க.”
“ஏம்மா குண்டு சட்டிக்குள்ள குதிரை ஓட்ற நீங்களே இவ்வளவு விவரமா இருக்கும்போது நல்லா படிச்சி, வெளியூருல தனியா வேல பாக்குற எனக்கு எவ்வளவு விவரம் இருக்கும்?” என்ற விஜயன்,
“நானே விவசாயம் பார்க்க வரேன். அதனால உனக்கு பின்னாடி உன்னோட சமஸ்தானம் அழிஞ்சி போயிடுமுன்னு அனத்தாம ஊரு போய் சேரு.” என்று சொல்லி ஜெயனை அழைத்துக் கொண்டு பெங்களூரு போகும் பஸ்ஸில் ஏறினான்.
ஏதேதோ தகிடுதத்தம் செய்தும் ஜெயன் கல்யாணமும் நடக்கல, அவன் படிப்பையும் தடுக்க முடியல என்ற ஆத்திரத்தில் கீதா சுசிலாவிடம் முகம் திருப்ப ஆரம்பித்தாள்.
கண்ணன், மகேஷ் மற்றும் ஜெயனும் தங்கள் கல்லூரி அருகிலேயே வீடெடுத்து தங்கி, அங்கிருந்த ப்ரஸ்ஸில் பார்ட் டைம் வேலை பார்த்தனர். ரிசல்ட் வந்ததும் அதே கல்லூரியில் முதுகலை வேதியியலில் ஐவருமே சேர்ந்தனர்.
விஜயன் வேலையை விட்டு வர கீதா பொங்கினாள். அவன் அவளை கண்டுக்காமல் விட அவள் கோபம் ஜெயன் மீது திரும்பியது.
“அத்த நல்லா படிச்சி, பெரிய வேலை வாங்கின எம்மாமனே வேலைய விட்டுப்புட்டு வந்து காட்டுல வேலை செய்யறப்போ, இவனுக்கு எதுக்கு படிப்பு? இவனையும் காலேஜை விட்டு நிறுத்தி ஏர் ஓட்ட, வரப்பு கட்ட, வெள்ளாம வைக்க சொல்லிக்குடுக்கிறத உட்டுட்டு எதுக்கு காலேஜ் படிப்புங்கறேன்?” என ஏத்திவிட, அவர் பொதுவில் பொங்க,
“எங்கம்மாவே மாடு மேய்க்குது. சாணி அள்ளுது. நீ மகாராணி போல உட்கார்ந்துகிட்டு சட்டம் பேசறயா? இனி நீ காட்டுக்கு வந்து வேலை செஞ்சாதான் உனக்கும் சோறு.” என்று சத்தம் போட்ட விஜயன், “சாமியே நடந்து போவுது, இதுல சூன்யகாரி உனக்கு ஏரோப்ளேனா? இருடீ உன்ன நான் பாத்துக்கிறேன்” என்று நினைத்து கொண்டே
“அம்மா அவன் ஸ்காலர்ஷிப் பணத்துல படிக்கிறான். அவனுக்கு வர்ற பணம் அவன் படிக்கலன்னா வீணா போயிடும். நல்லா யோசிங்க நீங்க பணம் கட்டல. கவர்மெண்ட் பணம் கட்டுது.”
“அவனால உனக்கு சல்லி பைசா செலவாகல. ஆனா இந்த அவலட்சணத்த அழகாக்க வாராவாரம் ஆயிரகணக்குல செலவு பண்ற. அதனால ஏதாவது முன்னேற்றம் தெரிஞ்சுதா?”
“பெயின்ட் அடிக்கறத விட்டு இயல்பா இருக்க சொல்லு. வேலை இல்லாததாலதான் கண்ட கருமத்தை எல்லாம் யோசிக்க சொல்லுது. அதனால ஒழுங்க காட்டுல வந்து வேலை செய்ய சொல்லு.”
“ விவசாயத்தை அப்புறம் கூட கத்துக்கலாம். அவன் படிச்சி முடிச்சிட்டு வந்து கத்துக்கட்டும். இப்போ நான் கத்துக்கிறது போல, ஸோ அவன் படிக்க போறான்.”
“படிச்சிருந்தா நாளைக்கு அந்த படிப்ப வச்சி லோன் வாங்கி பிஸ்னஸ் ஆரம்பிக்கலாம், காடு வாங்கலாம். ஆனா அதுக்கு படிச்சிருக்கனும்.” என்று சத்தமா சொல்லியவன்
“அம்மா படிக்க போகாம இங்க வந்துட்டான்னா அவன் செலவுக்கு நீங்க உங்க பட்ஜெட்ல இருந்து பணம் தரனும், மூனு வேலை அவனுக்கும் சேர்த்து சமைக்கனும், துணி துவைக்கனும். கீதா துரும்பகூட அசைக்கமாட்டா. நீங்கதான் கஷ்டப்படனும்.”
“பொம்பள புள்ளைங்க இப்பவெல்லாம் படிக்கறாங்க. ஏதோ ஒன்னு ரெண்டு கீதா மாதிரியான அறிவாளிங்கதான் படிக்கல. படிச்ச பொண்ணு நிறைய படிக்காத ஜெயன கட்டிக்க ஒத்துக்குமா? நாளைக்கு பெரிய இடத்துல பொண்ணு கட்ட படிப்பு வேணும்.” என மெதுவாக தன் தாயிக்கு கேட்கும் படியாக சொல்ல
“இப்பவே அவன் என்னையவிட நெறய படிச்சுட்டோமுன்ற திமிருல என்னைய மதிக்கிறதில்ல, எங்கிட்ட பேசறதில்ல. நாங்கேள்வி கேட்டா பதில சொல்லறதில்ல. இதுல இன்னமும் படிச்சிட்டு திமிரு புடிச்சி அலைஞ்சா நானெப்புடி அவனுக்கு பொண்ணு பாத்து கட்டி வைக்கிறது? நாலுபேரு எம்மூஞ்சில காறி துப்ப மாட்டாங்களா?” என கீதா எகிறிக்கிட்டு வர
“எட்டாங்கிளாஸ் பெயிலான நீ என்ன பொருளாதாரத்தை பத்தியா பேசுவ? அவன்கூட படிக்கிற பொண்ணுங்கள பத்தி தப்புத்தப்பா கேட்டா அவன் உங்கிட்ட முகத்த திருப்பாம இளிச்சிக்கிட்டே பேசுவானா? உன் புத்தி உன்னப்போல எல்லாரும் எல்லாரோடவும் பேசுவாங்கன்னு நினைக்குது.” என்று காரித் துப்பியவன்
“ஏய் இன்னும் ஒரு வார்த்தை பேசின, நீ அவ்வளவுதான். நீ ஏன்டீ என் தம்பிக்கு பொண்ணு பாத்து கட்டி வைக்கனும்? அவன் என்ன உன்னோட அத்தைய போல, உன்னப் போல உழைக்க, சம்பாதிக்க வக்கத்தவனா? இல்ல உன்னப்போல படிப்பு ஏறாத முட்டாளா? இல்ல அவன் அப்பன், ஆத்தா இல்லாத அனாதையா?”
“இப்பவும் சொல்றேன், எந்தம்பிக்கு பொண்ணு பாத்து கட்டி வைக்க அண்ணன் நான் மலையாட்டம் இருக்கேன். எந்த நாயாச்சும் நான் பொண்ணு பாக்கறேன்னு மூக்க நுழைச்சுது கண்டந்துண்டமா வெட்டி காக்காய்க்கு போட்டுடுவேன், ஞாபகம் வச்சிக்கிட்டா நல்லது.” என விஜயன் சண்டைக்கு வருவதுபோல சத்தமாக பேச, கீதா தன் அத்தையை பார்த்து, வேகமாக
“ஏய் ரொம்ப சிணுங்காதடி. எருமை சிணுங்குற மாதிரி இருக்கு, பாக்க சகிக்கல. நானும் எப்படியாவது கண்ணமூடிட்டாவது உன்னோட குடும்பம் நடத்தனுமுன்னு நெருங்கி வரும்போது இப்படி கொஞ்சறேன், சிணுங்கறேன்ற பேருல எதையாவது செஞ்சி என்னைய வெறுப்பேத்தற. கடைசிவரைக்கும் நீ வாழவே போறதில்லடி.”
“அடுத்தவங்க வாழ்க்கைய கெடுக்க நினைச்சா நீ வாழாமயே போயிடுவ பாத்துக்க” என சீறிச் செல்ல
“கீதா நீங்க இன்னும் வாழ ஆரம்பிக்கலியா? ஜெயனுக்கு இருபத்திரெண்டு வயசுதான் ஆகுது. அவன் படிச்சி முடிக்கிறவரை சும்மா இரு. அவனுக்கு கல்யாணம் பண்ண நாலஞ்சு வருசம் ஆகும். அதுக்குள்ள நீ விஜயனோட வாழ்ந்து அவன கைக்குள்ள வச்சிக்க பாரு.”
“இப்ப உன் வாழ்க்கைதான் முக்கியம். உனக்கு ஒரு குழந்தை பிறந்தா விஜயன் உன் பேச்சை கேப்பான். இப்ப அவன் மனசு கோணாம, அவனிஷ்டபடி நடந்து, அவன வழிக்கு கொண்டு வா” என சுசிலா ஓதினார்.
எப்படியோ ஜெயன் முதுகலை படிப்பு தொடர்ந்தது.
சுஜாவும், காயுவும் அதே கல்லூரியில் ஆங்கிலம், கணிதப் பிரிவுகளில் இளங்கலை வகுப்பில் சேர்ந்தனர்.
கண்ணனுக்கு காயு மீது ஏதோ ஒரு ஈர்ப்பு தோன்ற ஆரம்பித்தது.. சுகந்தன் சாப்ட்வேரில் வேலை கிடைத்து சென்னை, பெங்களூரு என பறக்க ஆரம்பித்தான்.
ஈஸ்வரும் தங்களூருக்கு அருகிலேயே ட்ரான்ஸபெர் ஆகி தன் குடும்பத்துடன் வசித்து வந்தான்.