“என்னா சார் நீங்க? ரெண்டு பேருமே சின்ன பசங்க. அவங்ககிட்ட எதுக்கு கேக்கனும்.” என கீதா தெனாவெட்டாக கேக்க, சதா பட்டென துப்பாக்கிய எடுத்தபடி,
“சின்ன பசங்களுக்கு கல்யாணம் பண்ணா அது குழந்தை திருமணம். சட்டப்படி தப்பு, உங்களை எல்லாம் கைது பண்ணனும். வர்றிங்களா ஸ்டேஷனுக்கு டூர் போலாம்” என கோபமா கேக்க,
ரகீதாவின் அப்பா கீதாவை பளீரென ஒரு அறை கொடுத்து, “நாங்க ஆம்பளைங்க இத்தனை பேரு இங்க இருக்கோமே எங்களுக்கு தெரியாதா பதிலை சொல்ல? அமைதியா இருக்கனும். இல்ல தொலைச்சி கட்டிடுவேன்” என்க, தான் என்ன செய்தாலும் ஒன்றும் சொல்லாத அப்பா இன்று எல்லோர்க்கும் முன்னால் அடித்ததை ஏற்க முடியாமல்
“அப்பா என்னையவே அடிச்சிட்டியா?” என அழ “மூச்சி சத்தத்தை தவிர உங்கிட்ட வேற ஏதாவது சத்தம் வந்துச்சி அவ்வளவுதான்”. என சதா எகிற
“சொல்லுங்க, சம்மதம் கேட்டிங்களா?” மறுபடியும் சதா கேக்க
“ பாப்பாக்கு தெரியும். ஆனா புடிக்குதா? புடிக்கலயான்னு கேக்கல.” என்ற கீதாவின் அப்பா, மேலும்
“அக்கா மாப்பிள்ளைகிட்ட சொல்ல வேண்டாமுன்னு சொல்லிடுச்சி.” என்க
“யோவ் வெண்ண உன் மாப்பிள்ளைகிட்ட எதுக்கு கேக்கனும். இந்த பொண்ண கட்டிக்கிற பையன்கிட்ட கேட்டிங்களா, இல்லையா?” என சதா சத்தமாக கேக்க, சுசிலா மெதுவாக
“யேன் பையனுங்க ரெண்டு பேருக்குமே இந்த கல்யாணத்தை பத்தி தெரியாது. அவங்க இந்த கல்யாணம் வேணாமுன்னு சண்டை போட்டாங்க.”
“ஆனா கீதாதான் இப்படி ரகசியமா ஏற்பாடு பண்ணிட்டு சின்னவனை கூட்டிட்டு வந்து மிரட்டி தாலி கட்ட வச்சிடலாமுன்னு சொன்னா. தாலிகட்டிட்ட அப்புறம் ஒன்னும் செய்ய முடியாது. வாழ்ந்துடுவாங்க அப்படின்னு சொன்னா” என்க
“புடிக்காதவங்கள கட்டி வச்சி கோர்ட், கேஸ்னு அலைய வேண்டியது” என்ற சதா
“சரி உன் மருமக சொன்னா உனக்கு புத்தியில்ல? சோத்ததான திங்கிற, இல்ல அவ வேற ஏதாவது அசிங்கத்த குடுத்தா தின்னுடுவையா?” என கேக்க, பதிலின்றி தலை குனிந்தார்
“சரி நாளைக்கு ரெஜிஸ்டர் பண்ண எல்லா ஏற்பாடும் பண்ணது யாரு?” என சேகர் கேட்க
“நாந்தான் சார் ரெடி பண்றேன்” கீதா அப்பா சொல்ல சேகர் விட்டான் ஒரு அறை. தடுமாறி கீழே விழுந்து வாயை பார்க்க நாலு பல்லு கையில்.
“ஏன்டா கொலை பண்ணி பொதச்சிட்டு அப்பனும், மவளும் சொத்த ரெஜிஸ்டர் பண்றிங்களா?” என்க எல்லாரும் “ஐய்யோ கொலையா?” என அதிர
“ரெஜிஸ்டர் பண்ண பத்திரத்துல எழுத ஒரு ரப் காப்பி ரெடி பண்ணியிருப்பிங்களே அது எங்கே?” என கேக்க
“அது வாங்கலிங்க சார்” என இழுக்க
“உன்கிட்டதான் இருக்கனும், அது எங்க? குடு இல்லன்னா நீயும், உன் பொண்ணும் ஸ்டேஷன் வாங்க” என்ற சேகர்
சதாவிடம், “சார் போன் போட்டு லேடீ போலீஸ் அனுப்ப சொல்லுங்க” என்க, கீதா அப்பா
“சார், சார் நான் குடுத்துடறேன். எம்பொண்ணு யாரையும் கொலையெல்லாம் பண்ணல சார். எல்லாமே அவளுக்கு மட்டுமே வேணுமன்னு கொஞ்சமா ஆசைபடுவா. வேற எதுவும் அவ பண்ணல சார்” என்று பத்திர மாதிரியை கை பையிலிருந்து எடுத்து தர, கீதாவோ,
“அப்பா இவங்க நிஜமாவே போலீஸாப்பா? அப்ப நம்ம பாப்பா கல்யாணம்?” என மறுபடியும் குறுக்கே பேச, கீதாவின் அப்பாவுக்கு அடுத்த அறை சதா குடுக்க மௌனமானாள் கீதா.
யாராயிருந்தா என்ன? யார் அடிவாங்கினா என்ன? நிர்மலா கல்யாணம் முடிந்து சொத்தும், நகையும் தனக்கு வந்தால் சரி என நடப்பதை கவனிக்க ஆரம்பித்தாள்.
“பொண்ணோட அப்பா யாரு?” வெள்ளை வேட்டி சட்டையில் ஒருவர் முன்னால வர “ இத படிங்க” என பத்திர மாதிரியை கொடுக்க படித்த அவர் முகம் பேயறைந்தது போல ஆனது.
“என்னாச்சி தம்பி? இப்படி முகம் வெளுத்து நிக்கிற?” என கீதாவின் பாட்டி, தாத்தா கேக்க, அவர்கள் கையில் அதை கொடுக்க, படித்துப் பார்த்த தாத்தா வேகமாக தன் பெரிய மகனை இரு கன்னங்களிலும் மாறி மாறி அறைந்தவர்,
“ நீயெல்லாம் ஒரு மனுசனா மானங்கெட்டவனே? உழைச்சி சம்பாதிக்க துப்பத்த நாயி ஊரான் சொத்துக்கு நாக்க தொங்க போட்டுக்கிட்டு அலையிற. உன்ன வந்து கவனிக்கிறேன் இரு” என்றவர் அங்கே வந்திருந்தவர்களை திரும்பி பார்த்தார்.
சற்று தொலைவில் நின்றிருந்த தன் நண்பனின் மகனிடம் போனார். “சாமிநாதா கீதா கல்யாணம் முடிஞ்சதும் உன் மகனுக்கு நிர்மலாவை கேட்ட. நான் உனக்கு பதில சொல்றதுக்கு முன்ன யேன் மூத்த மகன் பேசி முடிச்சிட்டான். ஆனா இப்போ மாப்பிள்ளைய என்ன பண்ணாங்கன்னு தெரியல.”
“இப்போ உன் மகனுக்கு யேன் பேத்திய குடுக்க ஆசைபடறேன். நீ என்ன சொல்ற?” என்க
“ஐய்யோ மாமா! மகாலட்சுமி வேணாமுன்னு யாராவது சொல்வாங்களா? நீங்க சம்மதிச்ச இந்த முகுர்த்தத்திலே கல்யாணத்த முடிச்சிடலாம்.” என்க, கீதா திடீரென
“தாத்தா இந்த கிரகங்க வாழ்ந்தா என்ன? செத்தா எனக்கென்ன? சொத்த மட்டும் எனக்கு எழுதி வைக்க சொல்லுங்க?” என்க
“இவள முடிஞ்சா தூக்குலகூட போடுங்க தம்பி. உங்களுக்கு புண்ணியமா போகும்” என பொரும
“தாத்தா நான் அவங்கள ஒன்னும் பண்ணல. அத்தை சொல்லுங்கத்தை. நீங்களும் தான ஜெயனுக்கு நிர்மலாவ கட்டி சித்தப்பா சொத்த வாங்க ஆசைபட்டிங்க. இப்போ இடிச்ச புளியாட்டம் நிக்கிறிங்க” என போட்டு குடுக்க
தாத்தா பாட்டிய பார்த்து, “உன்கிட்ட காலையில ஒரு பைய குடுத்தேனே அது எங்க?” என்க
“என் கையிலதானுங்க இருக்கு. இந்தாங்க” என பாட்டி கொடுக்க, வாங்கியவர் சேகரிடம் திரும்பி,
“தம்பி இதுல மூனு பத்திரம் இருக்கும். மேல பேரும் இருக்கும். பேரை பாத்து நீங்களே குடுங்க தம்பி” என்க வாங்கிய சேகர், கீதா அப்பா, சித்தப்பாக்களிடம் ஆளுக்கொன்றாய் கொடுக்க, படித்து பார்த்த கீதாவின் அப்பா “அப்பா நான் பண்ணினது தப்புதான். ஆனா நீங்க என்னைய பலிவாங்கிட்டிங்க. இது சரியா? சொத்த மூனாதான பிரிக்கனும்” என கேக்க
“எப்படி மூனா பிரிக்கிறது? என்னோட நிலத்தை வித்துதான் கடைய ஆரம்பிச்ச. ஆனா அந்த கடையில வந்த லாப பணம் எங்கே?”
“அதுமில்லாமல் உன் தம்பிங்க ரெண்டு பேரும் நிலத்துல கஷ்டப்பட்டாங்க. நீ அலங்காரம் பண்ணிக்கிட்டு, உன் பொண்டாட்டியோட ஜோடி போட்டுக்கிட்டு ஊரு சுத்தின. நிலத்துல அவங்க உழைப்புல வந்த வருமானத்துல பக்கத்து நிலத்தை வாங்கினேன். அது அவங்களுக்கு சேர வேண்டியது.”
“உன்னோட மக்கு மகளுக்காக நல்லா படிச்ச நிர்மலா படிப்ப நிறுத்தி, தம்பிக்கிட்ட காச வாங்கிகிட்டு எருமை வாங்கி விட்ட நியாபகம் இருக்கா? அந்த நிலத்தை அவ உழைப்பால வாங்கினா அது உங்க கொள்ளிக்கண்ண உறுத்துதோ?”
“ எங்க உன் சரி பாதி, உன் சம்பந்தி, இந்த ரெண்டு மந்திகளையும் நல்லதா பாத்து எடுத்திருந்தா எங்குடும்பத்துக்கு இந்த நிலைமை வந்திருக்குமா?”
“உழைக்க முடியாத இந்த தண்ட கருமாந்திரங்களால மத்தவங்க பொழப்ப கெடுக்க மட்டும் மூளை நல்லா வேலை செய்யுமே?” என்றவர்
“இவ்வளவு தான் குடுப்பேன். வேணுமுன்னா வாங்கிட்டு போங்க. வேணாமுன்னா இதையும் யேன் பேத்திக்கு கல்யாண சீரா குடுத்துக்கிறேன்.” என்றார். உடனே கீதா, “ அப்பா உங்களுக்கு வேணாம். நான் வாங்கிக்கிறேன்.” என்க “இவள என்னைக்கு தலைமுழுகிறையோ அன்னைக்கு தான் உன் பொழப்பு உருப்படும்..” என்ற தாத்தா,
“ஏய்யா சாமி புடவை, தாலி எல்லாம் காலையில முகுர்த்த நேரத்துக்குள்ள வேற எடுத்துக்கிட்டு வர முடியுமா?” என்க
“எல்லாம் ரெடி பண்ணிடலாம் மாமா. இந்த புடவை இவங்க எடுத்ததா மாமா” என்க
“இந்த அம்மாவும், அது மருமவளும் அங்க பரமசிவத்திடம் காச வாங்கிகிட்டு, நல்லா வாய் கிழிய பேசிப்பேசி இங்க நிர்மலா வீட்டையே செலவு பண்ண வச்சிடுச்சிங்க. இந்த ஏமாந்தவங்களும் யாரு செஞ்சா என்னன்னு கம்முன்னு இருந்திடுச்சிங்க.” என்றவர்
“இதுங்க போட்டிருக்கும் துணி கூட நிர்மலா காசுல வாங்கினதுதான். இதுங்க வெறும் ஆளாதான் ஒரம்பறைய கூட்டிட்டு வந்ததுங்க. இதுங்க காசு ஒத்த பைசா இதுல இல்லை.” என்க
“அப்போ தாலி மட்டும் ரெடி பண்ணினா போதும் மாமா. நான் போய் வாங்கிட்டு வரேன்” என சொல்லி கிளம்பினார் சாமிநாதன்.
கீதா குடும்பம் அவமானத்தில் தலை குனிந்தாலும், இன்னும் ஏதேனும் வாய்ப்பு கிடைக்கும் குழப்பத்தை ஏற்படுத்தலாம் என காத்திருக்க சுமூகமாக கல்யாணம் முடிந்தது.
சொத்தும் போச்சி, நிர்மலா தன்னைவிட வசதியான இடத்தில் கல்யாணம் பண்ணி போறத பாத்து வயிறு எரிய சாமிநாதனிடம் போய் “சொத்து வருமுன்னு எங்கொழுந்தனுக்கு முடிவு பண்ண பொண்ணை கட்டிட்டு போறிங்களே வெக்கமா இல்லையா உங்களுக்கு? அவன நெனச்சவ இப்ப உங்க மருமவ. அவன் நெனப்போட உங்க மகங்கூட…” என பேச அருகில் வந்த நிர்மலாவின் அம்மா முதுகில் ஒன்று ஓங்கி வைத்தார்.
“உனக்கு தான் இது திடீர் கல்யாணம். விஜி தம்பி ஏற்கனவே எல்லாத்தையும் ஏற்பாடு பண்ணிடுச்சி. போய் ஒரு ஓரமா உட்கார்ந்து இரு. கல்யாணம் முடிந்ததும் வக்கனையா ஓசி சோத்த மாமியாவும், மருமவளும் வழிச்சி தின்னுபுட்டு வெறுங்கையோட நடைய கட்டுங்க.” என கூற சுற்றிலும் யாராவது பாக்கறாங்களான்னு பாத்துட்டு போய் உட்கார்ந்தாள்.
காலையில அமைதியாக திருமணம் முடிந்தது. திட்டப்படி விஜியும், ஜெயனும் சில பல கட்டுக்களுடன் நொண்டிய படி வந்தனர்.
கூட்டத்தினர் திகைக்க, கூட வந்தவர் , “சார் நான் காலையில வேலைக்கு நடந்து போய்ட்டு இருந்தேன். அப்ப இவங்க பலசரக்கு கடைய தாண்டும் போது, அங்கே கதவை தட்டும் சத்தம் கேட்டுச்சு.”
“ அங்க அக்கம், பக்கத்துல இருந்தவங்க எல்லாம் சேர்ந்து கதவை ஒடச்சி பாத்தா இவங்க இரத்தகளறியோட கதவுகிட்ட கிடக்குறாங்க.”
சதா இப்போ துப்பாக்கிய கீதா அப்பாவினை நோக்கி திருப்பியபடி, “யோவ் என்னவோ நல்லவன் மாதிரி நடிச்ச? இப்ப இதுக்கு பதில் சொல்லு” என கேக்க
“ சதா சார் பொண்ணு மாப்பிள்ளை அவங்க சடங்குகளை பாக்கட்டும். இந்த கிரிமினல்ஸ நாம ஸ்டேஷன் கூட்டிட்டு போய் கவனிப்போம். வாங்க போலாம்” என கீதா அப்பா, கீதா, சுசிலா பரமசிவத்தை வண்டியில் ஏற்ற, ஒரு காரில் விஜயன் சகோதரர்கள் வர ஸ்டேஷன் வந்தடைந்தனர்.
அங்கே வைத்து விஜயனின் காலில் விழுந்த கீதாவும், அவளின் அப்பாவும், “நாங்க எதுவுமே பண்ணலைங்க. கல்யாணத்தை பண்ணதான் பார்த்தோம். நீங்க ரெண்டு பேரும் இருந்தாதானே கல்யாணம் நடக்கும். சொத்து கைக்கு வரும். உங்கள கொன்னுட்டா நாங்க ஜெயிலுக்குதானே போகனும். எங்களுக்கு அது தெரியாதா?” என்றனர்.
“யாரோ எங்களுக்கு ஆகாதவங்க இத பண்ணிட்டு எங்களை மாட்டிவிட பாக்குறாங்க. நான் உங்களை ஒன்னும் பண்ணமாட்டேன். என்னைய நம்புங்க” என கீதா விஜயனை பிடித்தபடி அழ,
“சார் இவங்க எல்லாம் என் சொந்தக்காரங்க. அதனால எனக்கோ, யேன் தம்பிக்கோ, நாளைக்கு அமைய கூடி அவன் குடும்பத்துக்கோ ஏதாவது ஒரு அசம்பாவிதம், விபத்து நடந்தா இவங்க நாலு பேரும்தான் பொறுப்பு. இவங்க மேல சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாமுன்னு எழுதி வாங்கிட்டு விட்டுடலாம் சார்.”
“அதே போல நிர்மலா பொண்ண பழிவாங்க அவங்கள உடல்ரீதியாவோ, மனரீதியாவோ, அவங்க தொழிலையோ, சொத்துலயோ ஏதும் பண்ணமாட்டோமுன்னும் தாத்தா எழுதி வாங்க சொல்லி அனுப்புனாருங்க சார்” என விஜயன் சொல்ல, வேறு வழியின்றி எழுதி கையெழுத்திட்டனர்.
கீதா விக்கித்துப்போய் நின்றாள். தன் கணவனே தன்னை நம்பவில்லை. “நாம் எப்படி இருந்தாலும் நம்மைதான நம்ம புருஷன் சப்போர்ட் செய்யனும். இருடா உன்னை கவனிச்சிக்கிறேன்”னு மனசுக்குள்ள கொதிச்சிக்கிட்டிருந்தாள்.
தம்பியையும், தங்கைக்கு சமமான நிர்மலாவையும் காப்பாற்றிய சந்தோசம் விஜயனுக்கு. அவர்களின் மருத்துவ அறிக்கையை ஆபீஸர்ஸ் கேட்பதாக ஒரு போலீஸ்காரர் சொல்லவும் பைலுடன் உள்ளறைக்கு போனான் விஜயன்.
“தாங்க் யூ சார்” என விஜயன் நன்றி சொல்ல,
“விஜயன் நாங்க சுகனோட ப்ரெண்டுக்கு ஹெல்ப் பண்ணோம். தட்ஸ் ஆல். ஈஸ்வர் கல்யாணத்துக்கு வரும்போது அந்த குட்டி பிசாசு சுஜாதாகிட்ட கொஞ்சம் எங்கள பத்தி நல்லதா சொல்லிட்டு வாங்க. இல்லன்னா அண்ணனுங்களாடா நீங்க எல்லாமுன்னு தொரத்தி தொரத்தி அடிப்பா. இதை செய்ங்க போதும்” என கைகொடுத்து அனுப்பினர்.
நிர்மலா கல்யாணம் முடிந்தது. ஒரு கண்டத்திலிருந்து தப்பித்தனர் ஜெய்யும், நிர்மலாவும். அடுத்த கண்டம் யாருக்கு? எப்போது? கீதா என்ன செய்ய காத்திருக்கிறாள்? விஜயனுக்கு நோட்டீஸ் ப்ரீயட் முடிந்ததா?