தேன் சாரல் நீ 14

    பெண் பார்க்கும் படலம் முடிந்து தங்கள் பணிக்கு திரும்பினர். சுகன் தன் அண்ணனின் திருமணம் விரைவில் நடக்கப்போவதாக சொல்ல, ஜெயனும் தன் அண்ணனுக்கு திருமணம் முடிவானதை பற்றி சொல்ல, “பாரப்பா ரூட் கிளியர் ஆனதை எவ்வளவு சந்தோசமா சொல்றாங்க” என மகேஷ் கிண்டல் செய்தான்.

    “ அண்ணனுக்கு அடுத்தது கல்யாணம் உனக்குதானா சுஜா?” என்றான் கண்ணன்.

    “சுகன் அண்ணா இருக்கும்போது அடுத்தது நான் எப்படி? நானெல்லாம் இன்னும் ஆறேழு வருசத்துக்கு குடும்ப சுமைய சுமக்கிறதா இல்லை அண்ணா.” என்ற சுஜா

     “அண்ணா  கல்யாணம் எல்லாரும் தான் பண்ணிக்கிறாங்க. இது ஒரு பெரிய விசயமா? கல்யாணம் பண்ணி குழந்தை பெத்துக்கிறதுதான் சாதனையா?படிச்சி வேலைக்கு போகனும். ஏதாவது சாதிக்கனும். நம்ம சாதனை நம்மை உலகுக்கு அடையாளம் காட்டனும். அட்லீஸ்ட் நம்ம சொந்தக்காரங்க மத்தியில ஒரு ரோல் மாடலாவாச்சும் இருக்கனும். இப்படி ஏகப்பட்ட ஆசைகளை எனக்குள்ள வச்சிருக்கேன்.”

     “சாதிக்க வேண்டியது நிறைய இருக்கு. அதுவரை நான் கடிவாளம் கட்டின குதிரை போல என்னோட கவனத்தை படிப்புல மட்டுந்தான் காட்டப் போறேன். அதுவரை இந்த காதல், கல்யாணம் கச்சேரிக்கு எல்லாம் என் லைப்ல தடாதான்” என்றாள் தெளிவாக.

     கண்ணன் ஜெயந்தனை பார்க்க, அவன் முகம் சட்டென சுருங்கி பின் இயல்பானது.

      “வீட்டுல மகளை வச்சிக்கிட்டு எப்படி மகனுக்கு கல்யாணம் செய்வாங்க? சொல்றதுக்கு நல்லா இருந்தாலும் இதை யாரு ஏத்துப்பாங்க?” என கண்ணன் கேட்க

      “அண்ணா நான் மெடிக்கல் படிக்க போயிருந்தா ஆறேழு வருசம் கழிச்சிதான கல்யாணம் பண்ணியிருப்பாங்க? அதுல என்னோட விருப்பத்த நிறைவேத்த முடியாததால தாத்தா இந்த விசயத்துல எனக்கு சப்போர்ட் பண்ணுவாங்க.  ரெண்டு அண்ணாஸும் என் பக்கம்தான். அதனால அடுத்த பலியாடு சுகன் அண்ணாதான்.” என்றாள் சுஜா.

    “என்ன கண்ணா? உங்களுக்கு சந்தேகம் தீரலியா? இப்போ ஈஸ்வரண்ணா கல்யாணமே சுஜாவோட சாதனைதான். யெஸ் இது ஒரு சாம்பிள் தான். அதனால எப்பவும் ஜெயிக்கிற குதிரையில பணம் கட்டறது புத்திசாலித்தனம். அதனால நாங்க ரெண்டு பேரும் சுஜா பக்கம்தான்.” என சுகன் கிண்டலடித்தான்.

      விஜயனின் திருமணம் முடிந்து, தானும் படித்து முடித்து வேலை கிடைத்து, ஓரிரு ஆண்டுகள் கழித்தே தன் முறை வரும். அதற்குள் சாதிச்சி முடிக்கட்டும் என ஜெயன் மனதினில் ஓர் எண்ணம் மனதினுள் தோன்ற, ஏதோ போலானது அவனது முகம்.

     “இது சாத்தியமா?” ஜெயன் விலகி போனாலும் கண்ணனும், மகேஷும்  சுஜாவை நினைவு படுத்தி அவனை இம்சித்தனர்.

     “டேய் ஜெயா! அந்த புள்ள கல்யாணமே வேணாங்கிற நெனப்புல இருக்கும் போலடா. அதும் மனசுல உன்ன பத்தின எண்ணம் ஏதாச்சும் இருக்கா, இல்லையான்னு தெரிஞ்சக்க வழிய பாரு. அமைதியா இருந்து இலவு காத்த கிளி ஆயிடாதடா.” என்றான் கண்ணன் கவலையோடு.

    “டேய் கடவுளே! மச்சான குழப்பாத! நீ நல்லா யோசி. சுஜா நம்மையெல்லாம் வாய்நிறைய அண்ணான்னு சொல்லி கூப்பிடுது. ஆனா ஜெயனை அப்படி கூப்பிட்டு நீ பாத்திருக்கியா? இல்லையில்ல! அப்புறம் ஏன் அவன குழப்புற?” மகேஷ் கண்ணனிடம் வாதாட

      “சுஜா முறை சொல்லி கூப்பிடறது பத்தி அப்புறம் பேசலாம். மொதல்ல இவங்கிட்ட ஒரு வார்த்தை பேசி இருக்குதா? இவன் மூஞ்ச நல்லா பாத்திருக்குதான்னே தெரியல. இவன் தனியா இருந்தா அடையாளம் தெரியுமான்னே தெரியல. இதுல மச்சான், மண்ணாங்கட்டின்னு அவன குழப்பிக்கிட்டிருக்க. இது அவன் வாழ்க்கை. புரிஞ்சிக்கோ மகேஷ். இது விளையாட்டில்ல.” என கண்ணன் பதற

     “கடவுள் சொல்றதும் சரியாதான் இருக்கு ஜெய். தங்கச்சி உன்னை பாக்குதான்னே தெரியல. யோசிச்சு முடிவெடு.” மகேஷும் அறிவுரை சொன்னான்.

   விஜயனின் திருமணத்திற்கு சுஜா, காயு உட்பட நண்பர்கள் எல்லாருக்கும் அழைப்பிதழ் கொடுத்தான் ஜெய்.

     ஈஸ்வர் திருமண பட்டெடுக்க, குலதெய்வ கோவிலுக்கு பத்திரிகை வைக்க செல்ல என சுகனும், சுஜாவும் பிஸியாக இருந்ததால், அடுத்த விசேசத்திற்கு வந்துவிடுவதாக சுகன் ஜெயனிடம் சொல்லிச் சென்றிருந்தான்.

   காயுவும் தன் நெருங்கிய உறவினர் வீட்டு திருமணத்திற்கு திருப்பதி சென்றிருந்தாள். காயு, சுஜா, சுகனை தவிர மற்றவர்கள் விஜயனின் திருமணத்திற்கு சென்றிருந்தனர்.

    ஜெயனும், விஜயனும் அவர்கள் அனைவரையும் மணப்பெண் கீதாவுக்கு அறிமுகம் செய்தனர்.

     “என்னங்க ஒரே பாய்ஸா இருக்காங்க? கேர்ள்ஸ் யாரும் வரலயா? இல்ல  நீங்க பயந்துகிட்டு அறிமுகம் செய்யலியா?” கீதா சிரித்தபடி கேட்க

      “என்னோட கிளாஸ்மேட் ஜெனிபர்க்கும் இன்னைக்கு கல்யாணம். ஸோ எல்லாரும் அங்க போயிட்டாங்க. ப்ரெண்ட்ஸுக்கு தனியா ஒரு பார்ட்டி அடுத்த வாரம் அரேஞ்ஜ் பண்ணியிருக்கோம்.” என்ற விஜயன்

      “எங்க ஜெய் சுகன காணோம்? நாளைக்கு காலையில வர்றானா?” என கேட்க

     “பூனே காவல்துறைக்கு அடுத்த வாரம் கல்யாணம். நம்மூரு ஹீரோவுக்கு இன்னும் இருபது நாள்ல கல்யாணம். அதுவரை சுகன் பிஸியோ பிஸி.” என்றான் மகேஷ்.

    தான் கேட்ட கேள்விக்கு பதில் நேரடியாக விஜயனிடமிருந்து வர,  சற்றே அசடுவழிய சமாளித்தாள் கீதா.

       ஜெயந்தனின் தாய் வழி உறவு தான் அவனின் அண்ணி. பெண் பிள்ளைகளற்ற அவ்வீட்டில் விஜயனின் மனைவிக்கு மரியாதை ஏகபோகமாக இருந்தது.

     ஏற்கனவே தான் வைத்ததுதான் சட்டமென தன் வீட்ல அரசாண்ட கீதா அமைதி விரும்பியான விஜயனை திருமணம் செய்ய ஒத்துக்கொண்டதே விஜயனின் அம்மா அதாவது தன் ஒன்றுவிட்ட அத்தை கொடுத்த சிலபல வாக்குறுதிகளை வைத்துதான்.

   அத்தை வீட்டு வசதியும், இருபத்து நான்கு வயதில் பலரும் வேலை தேடிக்கொண்டிருக்க, நல்ல வேலையிலிருக்கும் அத்தை மகனின் ஐந்திலக்க சம்பளம், அத்தை மகனின் பெர்சனாலிட்டி என தன்னை ஈர்க்கும் பல காரணிகள் இருந்தாலும் ஏதோ போனால் போகிறதென விஜயனுக்கு தான் வாழ்க்கை குடுத்தது போல நடமாடினாள் கீதா.

     தன் மதிப்பு என்றைக்கும் குறையவே கூடாது. தன்னைவிட படிச்ச, வசதியான வேலைக்கு செல்லும் பெண்ணை தன் கொழுந்தனுக்கு கட்டி வைக்க கூடாது. தன்னை வேலை செய்ய சொல்லக்கூடாது. கேள்வி கேட்க கூடாது என கண்டிசன் பட்டியல் நீண்டு கொண்டே செல்ல விஜயனின் அம்மா எல்லாவற்றிற்கும் தலையாட்டி  தன் மகனின் வாழ்க்கையில்???? விளக்கேற்றினார்..

    இவையெல்லாம் தெரியாத விஜயனும் தன்னை விரும்பி??? மணந்த தன் மனைவியை நேசித்தான். அவளும் தன் கணவனைவிட அவன் சொத்துக்கள், அவன் வருமானம் பெரியதென நினைத்தாலும் தனது மாமியார் சுசிலாவிடமும், மாமனார் பரமசிவத்திடமும், மற்றவர்களிடமும் பணிவாக இருப்பதுபோல நடித்தே தனக்கு தேவையானதை சாதிக்க தொடங்கினாள்.

    ஆளுக்குத்தகுந்தது போல பேசி, குழப்பி, தனக்கு வேண்டிய தகவல்களை  அவர்களிடமே பெற்று அவர்களின் திட்டங்களை தவிடுபொடியாக்கி அவர்களின் வருத்தத்தில் சந்தோசம் அடைந்தாள்.

   யாருக்கும் தெரியாமல் இதை செய்வதாய் அவள் நினைக்க  விஜயனுக்கும், ஜெயனுக்கும் கொஞ்சம் கொஞ்சமாய் புரியத் துவங்கியது அவர்களின் கல்லூரி வாழ்க்கையை பற்றிய பேச்சுக்களால்தான்.

    விஜயன் தாங்கள் இருவரும் ஒரே கல்லூரில் படித்ததாக சொல்லவும், அவளே ஜெயனின் நட்புகள் பற்றியும், அவன் வகுப்பு பெண்கள் பற்றியும் கேட்டாள்.

    வெளியே தோட்டத்தில் இதை கேட்டபோது  “ யாரும் இல்லை அதனால தைரியமா சொல்லுங்க. உங்க தம்பி எனக்கும் தம்பி போலதான். அண்ணி அம்மாவுக்கு சமம். எல்லாம் தெரிஞ்சாதான் நாளைக்கு அவருக்கு தகுந்ததுபோல ஒரு நல்ல வாழ்க்கையை நாம அமைச்சி குடுக்க வசதியா இருக்கும்” என்றாள் கீதா.

    “ஏய் அவன்  பேச்சுலர் டிகிரியே இன்னும் முடிக்கல. படிச்சி முடிச்சி வேலைக்கு போயி….. அப்பப்பா அதுக்குள்ள உன்னோட அக்கரை, அவசரமிருக்கே! முடியலடி….அவன் வாழ்க்கைய பத்தி அவனுக்கு நிறைய கனவுகள் இருக்கும். அதனால உன்னோட அக்கரை, சக்கரை எல்லாத்தையும் புருசன் என்மேல முதல்ல காட்டு.” என்ற விஜயன்

     “கீதா யூ ஆர் ஸோ நைஸ் பார் எவ்ரிவென், எக்ஸப்ட் மீ. கல்யாணம் முடிஞ்சி இன்னும் விருந்தே முடியல. இப்பவே டிபிகல் இன்டியன் வொய்பா வேலைய ஆரம்பிச்சிட்ட போல? அதான் ஹஸ்பண்ட் வீட்டு நாய், பூனைவரை கேர் பண்றத சொல்றேன் ஓ…புரியலயா? உன்னோட பர்ஸ்ட் பிரிபரன்ஸ் எப்பவும் நானாதான் இருக்கனும் ஓகே” என அவளை அப்போதைக்கு நக்கலாகவும், பாசமாகவும் பேச்சை மாற்றினான்.

     ஏற்கனவே ஜெயனிடம்,  அவர்களின் காலேஜ் பத்தி  அவனது நட்புகள் பற்றியும் விசாரணை செய்து விட்டாள். கேர்ள் ப்ரெண்ட்ஸ் இருக்காங்களா? அதுல எத்தனை பேருக்கு லவர் இருக்காங்க? அவங்க அரேஞ்ச்சிடு மேரேஜா, இல்ல லவ் மேரேஜ் பண்ண போறாங்களா? நீங்க எப்படி? என வரிசையாக கேள்விகள் வர ஜெயன் திகைத்தான். ஹாலில் இந்த பேச்சுகள் ஓடும் போது வெளியே சென்றிருந்த விஜயன் திரும்பி வந்தான்.  ஜெயன்

     “நல்ல காலேஜ் அண்ணி. யாராவது விசாரிச்சா சொல்லுங்க. கேரியர் நல்லா இருக்கனுமுன்னு நினைச்சா எங்க காலேஜில சேர்த்து விட சொல்லுங்க.”

      “பாய்ஸ், கேர்ள்ஸ் அப்படின்ற வேறுபாடே இல்லாம நேருக்கு நேர் பார்த்த ஹாய், ஹலோ சொல்லுவாங்க. அவ்வளவு தான். அவங்க அவங்கபாட்டுக்கு படிப்பாங்க, விளையாடுவாங்க. தட்ஸ் ஆல்.” என்று ஆரம்பிக்க, உள்ளே வந்த விஜயன்,

     “அவங்க காலேஜ்க்கு விளம்பரம் பண்ண போறியா? இதையே என்கிட்டயும் கேட்ட, அன்னைக்கு இவன் ப்ரெண்ட் கண்ணன்கிட்டயும் கேட்ட, இப்போ இவன்கிட்டயும் கேக்கிற? ஏன் இத்தனை விசாரணை? உனக்கு எதைப்பற்றி தெரியனும்?”  என அழுத்தி கேட்க

      “என்னோட தங்கச்சி நிர்மலாவை உங்க தம்பிக்கு பார்க்கலாமான்னு தோணுச்சி. அதான் ஒத்துவருமான்னு…..” என கீதா பசப்ப

     “பொண்ணு, அதான் உன் தங்கச்சி, என் கொழுந்தியா, என்ன பண்றா? எந்த காலேஜில படிக்கிறா?” விஜயன் நக்கலாக கேட்க

     “ ராணி நானே பத்தாவதுதான் படிச்சேன். நல்லா படிச்சா மட்டும் அவள அதுக்கு மேல படிக்க வைப்பாங்களா? ஏழாவதிலேயே நிறுத்தி மாடு நாலு வாங்கி பால் பண்ணை வச்சிக்குடுத்தாங்க. வர்ற காசயெல்லாம் மாட்டை பாத்துக்கவே செலவு பண்ணிக்கிட்டிருக்கா. இப்போ பதினேழு மாடு இருக்கு. இப்போ தினமும் சாணி அள்ளிக்கிட்டிருக்கா”

      “அதான் மாட்டுப்பண்ணை முதலாளியம்மாவ ஜெய்க்கு கல்யாணம் பண்ணி வச்சி, இவரையும் முதலாளி ஆக்கலாமுன்னு பாக்கிறேன்” எனவும் கேலியாக கீதா சொல்ல, திகைத்தனர் இருவரும்.

    “அண்ணா எவ்வளவு நாள் லீவு போட்டிருக்கிங்க? எப்போ திரும்ப போகனும்?” என ஜெயன் கேக்க

    “பேப்பர் போட்டுட்டேன். அடுத்து எப்போ, எங்கேன்னு யோசிச்சு முடிவு பண்ணலாம்” என விஜயன் தம்பியிடம் மெதுவாக சொல்ல,

     “மாமா எப்போ நாம பெங்களூர் போக போறோம்? சீர் எப்ப கொண்டு வர்றதுன்னு எங்கூட்டுல கேட்டுக்கிட்டே இருக்காங்க. எனக்கு சீர் தர அங்கேயே எங்கப்பனை வரச்சொல்லி சொல்லிடறேன்.”

    “ரெண்டு மூனு பஸ்ஸுல என் சொந்தபந்தம் எல்லாரும் வருவாங்க. நான் அவங்ககிட்ட அங்க ஒரு வாரமிருந்து ஊர சுத்திபாத்துட்டுதான் வரனுமுன்னு ஏற்கனவே சொல்லி வச்சிட்டேன். அப்பதான் நமக்கு சீர் கொண்டு வந்ததை போல தனக்கும் சீர் கொண்டு வரனுமுன்னு ஒவ்வொரு பொண்ணும் ஏங்குவா. என்னை எல்லாரும் பெருமையா பார்ப்பாங்க, பேசுவாங்க.” என கண்கள் மின்ன பேச

     “செலவு யாரோடது கீதா? சீரும் கொண்டுவந்து அதுக்கு செலவுக்கு பணமும் தருவாங்களா உங்க வீட்டுல? இங்க நம்ம வீட்டுக்கே வந்துடட்டுமே! கிடா வெட்டி, கோழி, முட்டை, மீனு எல்லாம் வச்சி அமர்க்களப்படுத்திடலாம்” என விஜயன் சொன்னான்.

     “அப்ப அவங்க எப்போதான் பெங்களூரை பார்க்கிறது? பணமும் குடுக்கனுமா?  உங்களுக்கெல்லாம் பொண்ணு குடுக்கிறதே பெருசு. இதுல சீரும் குடுக்கறாங்க. ஒரு இருநூறு பேருத்துக்கு தங்க வைக்க, ஒரு வாரம் சோறு போட முடியாதா  உங்களால?”

    “ஐய்யோ அப்பா பெங்களூருல வேலை பாக்கறான்னு சொல்லி ஒரு ஓட்டாண்டிய யேன் தலையில கட்டி வச்சிட்டிங்களே! இவன் நம்ம சொந்த பந்தத்த வீட்டுக்கு கூப்பிட மாட்டானாம். என்ன ஏதுன்னு கேக்க இங்க நாதியில்லயா?” என சத்தம் போட்டு அழ ஆரம்பித்தாள் கீதா.

    சுசிலா பதறிக்கொண்டு ஓடி வந்து “ என்னம்மா கீதா? உடம்புக்கு முடியலயா? திடீர்னு ஏம்மா சத்தம்போட்டு அழுவுற?”

     “இந்த விஜயன் உடனே ஊருக்கு போலமுன்னு சொல்றானா? அவன் வேணுமுன்னா போகட்டும். நீ இங்கியே அத்தை கூட கொஞ்ச நாள் இரும்மா” என சொல்ல

     “ஐயோ அத்தை மாமா சீரை இங்கியே கொண்டு வர சொல்றாரு. அங்க போய் நம்ம வீட்ட பாத்து, அந்த ஊரை பாத்து எல்லாரும் வாய பிளக்கனுமுன்னு நாம முன்னாடியே முடிவு செஞ்சமில்ல, அத மாத்தினா எப்படி?”  என கீதா  மாமியாரை கொஞ்ச,

    “ நீங்க பந்தா பண்ண நான் ஊரையே கூட்டிட்டு போகனுமா? செலவு ஆகிற பணத்தை யாரு உங்கப்பனா அவுத்து குடுக்க போறாரு?”  என கோபமாக சொல்லி

      “அம்மா சீரு கொண்டு  வர்றதை நான் சொன்ன பின்னாடி வச்சிக்கலாம் சரியா” என்றான் விஜயன்.

     “டேய் விஜயா! நம்ம கீதா ஆசைப்படறாடா. பணம் போனா போகுது. சீரை அங்கயே கொண்டு வந்து கொடுக்க சொல்லலாம்டா.” என சுசிலா தன் கருத்தை சொல்ல

    “பொருளையெல்லாம் மறுபடியும் இங்கதான் கொண்டுவரனும். அங்க கொண்டு போய்ட்டு, அங்கிருந்து மீண்டும் இங்க கொண்டு வர ஆகும் செலவை கணக்கு போட்டா ஒரு கிடாவிருந்தே திருப்தியா போடலாம். யோசிங்க” என்றான் விஜயன்.

    “சீர் எனக்கு தான குடுக்கறாங்க. நானிருக்கிற இடத்துல வந்து குடுக்க சொல்லுங்க. இங்க உங்கம்மாவுக்கு வேணுமுன்னா உங்கப்பனை வாங்கி போட சொல்லுங்க.” என கீதா கத்திவிட்டு கோபமாக ரூமுக்கு போய் கதவை பட்டென சாத்தினாள்.

     “அண்ணா இது என்ன புதுசா ஒரு குழப்பம்? நீ இன்னும் உன் முடிவை வீட்ல யாருக்கும் சொல்லலியா? அண்ணி உன் முடிவ ஏத்துப்பாங்களா? மறுபடியும் ஒரு முறை யோசி. உன் முடிவ முடிஞ்சா மறுபரிசீலனை பண்ணு.’ என்றான் ஜெயன் விஜயனிடம் தனிமையில்.

   விஜயன் சீரை பெங்களூருக்கு கொண்டு வர வேண்டாம் என சொல்லும் காரணம்தான் என்ன?

காத்திருப்போம்.