தேன் சாரல் நீ  13.2

               நகைகள் வந்ததும் சுஜா  தாத்தாவிடம்,  “அண்ணனுக்கு பாத்த பொண்ணு யாரு? எந்த ஊரு?அண்ணி எப்படி இருப்பாங்க? அம்மாங்க போல அழகா இருப்பாங்களா? எப்ப நாம பாக்க போறோம்?” என ஆர்வமாக கேக்க

   “உலகமகா நடிப்புட சாமி”  என வாயில் கை வைத்தனர் சுஜாவின் குடும்பத்தினர்.

    சுஜாவின் முயற்சி புரிந்த தாத்தா “தரகர் கொண்டு வந்ததுல ஒரே ஒரு ஜாதகம்தான் மூத்தவனுக்கு பொருந்தி வருது. பொண்ணு நம்மூருதான். வசந்தி பொண்ணு  நீலாதான் அது. நல்ல பொண்ணு. படிப்ப முடிச்சிட்டு பேங்க் வேலைக்கு வீட்டிலிருந்தே படிச்சிக்கிட்டு இருக்கு.” என சொல்லி எல்லோரையும் பார்க்க,

    “ரெடி ஒன், டூ, த்ரீ…ம் ஆரம்பி வளரு..” என சுஜா ரெடியாக,

     எல்லோரும் வளரை பாக்க, ஏமாற்றாமல் வளரும், “அப்பா அந்த ஏமாத்துகாரி வீட்டுலயா? வேணாம். வேற ஜாதகம்…” என்கையிலே சுஜா,

     “சுபாஷம்மா வசந்தி அத்தை யாரை ஏமாத்தி நீங்க பாத்திங்க?  சொன்னா நல்லா இருக்கும்? யாருக்காச்சும் வந்த மாப்பிள்ளைய தந்திரமா இவங்க கட்டிக்கிட்டாங்களா?” என கேக்க

      “அவ உனக்கு அத்தை. நானு சுபாஷம்மாவா? பாருங்கம்மா! இப்பவே கழட்டி விட பாக்குறா இவ” என வளரு திசை திருப்ப நினைக்க, யாரும் உதவிக்கு வராததால

   “உங்க மாமாவ கட்டனுமுன்னு…” என மென்னு முழுங்க

     “உங்ககிட்ட மாமாவதான் கட்டிக்க போறேன்னு சொன்னாங்களா? உங்களுக்கு பாத்த மாப்பிள்ளைகிட்ட அதாவது மாமாகிட்ட தன்னை பாக்கதான் வந்ததா பொய் சொன்னாங்களா? மாமாவ பிடிக்கும் சொன்னாங்களா?” என்ற சுஜா

     “ உங்க திருட்டுத்தனம் இங்க எல்லாருக்கும் தெரியும். அதனால வேற ஏதாவது இருந்தா சொல்லுங்க.” என்க யாரையும் நிமிர்ந்து பார்க்க முடியாமல் வளரிருக்க, சூழ்நிலை தெரியாமல் ஈஸ்வரின் அப்பா “என்ன பாப்பா அது?” என்றார்.

     “ஐயோ இப்ப நெத்தி கண்ண திறக்கபோகுது பாப்பா. இந்த பசுபதிப்பா வேற நேரங்காலம் தெரியாம..” என முனகினான் சுகன்.

     “ ஐய்யோ உங்களுக்கு தெரியாதா பசுப்பா அந்த கதை? ஒரு ஊருல ரெண்டு ப்ரெண்ட்ஸ் இருந்தாங்க.”

     “ஸ்கூல் படிப்ப முடிச்சதும் ஒருத்தர் காலேஜ் போக ஆசப்பட்டாங்க. இன்னும் ஒருத்தர் என்னப் பண்ணறதுன்னு தெரியாம இருந்தாங்க.”

     “அப்ப காலேஜ் போக நெனச்ச பொண்ணுக்கு அவங்க உறவுகாரர் ஒரு சம்பந்தம் கொண்டுவந்தார்.”

    “அவங்க வீட்டுக்கு போற வழி தெரியாம அந்த மாப்பிள்ளை வழியில வந்த ரெண்டாவது பொண்ணுக்கிட்ட வழி கேக்க, அந்த மாப்பிள்ளையை பிடிச்சு போய் அந்த பொண்ணு பிரெண்டு வீட்டுக்கு வழிகாட்டாம அது வீட்டுக்கே வழிகாட்டிடுச்சி.”

    “ கல்யாணமும் பண்ணிக்கிச்சு. இது எதுவும் அந்த,படிக்க போன, பொண்ணுக்கு கடைசி வரை தெரியல.”

         “ஆனா தப்பு பண்ணின வளரு இப்ப வரை ஊருக்கு உண்மை தெரிஞ்சிடுமோன்னு அந்த முதல் பொண்ணு வசந்தியை எதிரியா, கேவலமா பேசுது.” என்க வளரு தலையை நட்டுக்கொண்டு நிமிர முடியாமல் நிற்க

      “இத மறைக்க எத்தனை வேஷம்? கேவலமா இல்லையா? ஆசபட்டிங்க சரி. அது தப்பா இல்லாம இருந்தா ரைட் ராயலா பண்ண வேண்டியதுதான?”

     “ ப்ரெண்டுகிட்ட எனக்கு பிடிச்சிருக்கு, நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி இருக்கலாமே. அவங்களும் படிக்க ஆசப்பட்டாங்க. தேங்க் யூ மை டியர்ன்னு வாழ்த்தி வழிவிட்டு இருப்பாங்க. நீங்களும் நிம்மதியா இருந்திருக்கலாமே?” என சுபாஷ் கேக்க, இப்படி ஒரு சூழ்நிலை வரவேகூடாது என நினைத்திருந்த வளர் பரிதாபமாக நின்றிருந்தார்.

     “பழச பேசாம, இனி நடக்க போறத பத்தி பேசலாமா மாமா?” என சுபாஷ் தன் பெரிய மாமாவை கேக்க

     “சுபாஷு இரு. இதுங்க தப்ப பண்ணிட்டு மத்தவங்கள கஷ்டப்படுத்தி பாக்கறதுல கெட்டி. அதனால நாளைக்கு வசந்தி பொண்ணும் பாதிக்கப்படும்.” என்ற தாத்தா

     “இனி இவங்க ரெண்டு பேரும் உள்கட்டுக்கு போக கூடாது. யாராவது பணம் வாங்க, கொடுக்க வந்தா வாங்கிக்கவோ, கொடுக்கவோ கூடாது.”

      “மருமகளுங்க சமைச்சுட்டு கொண்டு வந்து இங்க வச்சிடட்டும். இல்ல தனியா சமைக்கிறதுன்னு முடிவு பண்ணா, தனியா சமைச்சுக்கட்டும். தனியாதான், நான் யேன் மவனூட்டுலதான் சாப்பிடுவேன்.”

      “இவங்கள நம்பி என்னால சாப்பிட முடியாது. ஏன்னா இவங்க பிடிவாதமா என்னைய இன்சூரன்ஸ் எடுக்க வச்சாங்க. அப்ப தெரியல ஆனா இப்ப பயமா இருக்கு. பணத்துக்காக விசம் வச்சிட்டா என்ன பண்றது?”

       “நான் பாப்பா குழந்தைங்கள பாத்துட்டு போயிட்டா போதும். அதுவரை உயிரை கையில் பிடிச்சிக்கிட்டு காத்திருப்பேன்.” என்றார்.

      “வசந்தி வீட்டுக்கு நாளைக்கு காலையில போறோம். பாப்பா என்னென்ன வேணும்னு நினைக்கறயோ போய் வாங்கிகிட்டு வா.” என கூறி, சற்று நேரம் படுக்க சென்றார்.

     “பசுப்பா நாளைக்கு நாம புடவை குடுக்கணுமா?” என சுகன் கேட்டான்.

     பசுபதி “இல்ல சுகா! பொண்ணு பாக்க போனா புடவை எடுத்துட்டு போக தேவையில்லை” என்க

     “கண்ணு உங்கப்பா பேரு குணவேல்தான? ஏன் இப்ப பசுபதின்னு சொல்றிங்க” என சுபாஷ் பெரியப்பா கேக்க

     “அது ஒன்னும் பெரிய விசயமில்லைங்க  பெரிய மாமா. எங்க அப்பாக்கள் ரெண்டு பேரும்  தாய், தந்தை பக்தி முத்தி போய்  அவங்க எதை சொன்னாலும் சரின்னு சொல்லி மாடு மாதிரி தலைய ஆட்டுவாங்க. அதனால எங்க பாப்பா பசுபதின்னு கிண்டலா பேரு வச்சது. சித்தப்பா ரகுபதி. வீட்டுக்கு உள்ள பாப்பா வச்ச பேரே நிலைச்சிடுச்சி.” என்றான் ஈஸ்வர்.

    “ஆளுக்கு ஒரு பேரு வச்சிடும் எங்க பாப்பா.” என சுகன் சொல்ல

    “எனக்கு என்ன பேரு? உங்க அத்தைக்கு என்ன பேரு? உங்க வில்லி பாட்டிக்கு என்ன பேரு வச்சி இருக்கு பாப்பா?” சக்திவேல் ஆர்வமாக கேக்க

    “ உங்களுக்கு பாஜீன்னு பேரு வச்சிருக்கு பாப்பா” என்றான் ஈஸ்வர்.

     “இல்ல அவசர அவசரமா சொல்றத பாத்தா வேற ஏதோ பேர சொல்ற போல இருக்கு” என்ற சக்திவேல்

     “பாஜீயா அப்படின்னா என்ன சுகா?” என கேக்க

     ஈஸ்வர், சுபாஷ், சுகன் மூவரும் கோரஸாக, “பாவப்பட்ட ஜீவனோட ஸார்ட் பார்ம்” என்றனர்.

    “வளரு பேரு?” கேக்க

     “சூர்ப்பனகை” என்றான் சுபாஷ். “ஏன்டா அந்த பேரு வச்சிங்க?” என கேக்க

     “இராமாயணத்தில் அடுத்தவங்களுக்கு உரியவர்னு தெரிஞ்சும் ஆசைபடறாங்க, அவரை அடைய முயற்சியும் செய்யறாங்க, அண்ணங்கிட்ட பொய்யா சொல்லி அண்ணனோட அழிவுக்கு காரணமா இருக்காங்க. ஸோ தட் நேம் சூட்ஸ் ஹெர் வெரி மச்ப்பா.” என்றான் சுபாஷ் கூலாக.

    “உங்க பாட்டிக்கு…..?” கேள்விய முடிக்கும் முன்

    “சூன்யகாரின்னு வைக்க சொல்லு ஈஸ்வர். பேர் பொருத்தம் பக்காவா இருக்கும் உங்க பாட்டிக்கு” என்றார் தாத்தா, தனதறையில் கட்டிலில் படுத்தபடியே.

      “சூப்பர் தாத்தா நீங்க கரெக்டா சொல்லிட்டிங்க” என சுகன் கைதட்ட

     “ உங்கம்மாவை என்னன்னு கூப்பிடும் பாப்பா?” என சுஜா அப்பா ரகுபதி கேக்க

     “ அ1, அ2 இதான் அவங்களுக்கு வச்சது. ஆனா அப்படின்னா என்ன அர்த்தம்? அது மட்டும் தெரியல” என சுகன் புலம்ப

    “அடிமை நெம்பர் 1, அடிமை நெம்பர் 2” என்றார் தாத்தா உள்ளிருந்தபடியே.

     “தாத்தாக்கு என்ன பேரு வச்சிருக்கு பாப்பா?” மெதுவாக கேட்டார் சக்திவேல்.

     “ தாத்தாக்கு வச்ச பேரை பேத்தி மட்டும்தான் சொல்லனும். எங்களுக்கு நோ ரைட்ஸ் டூ சே இட்ப்பா” என்றான் சுபாஷ் இடக்காக.

     சுபாஷை காட்டி, “ தலையாட்டி பொம்ம”, ஈஸ்வரை காட்டி “வரன்”, என்ற சுகன் தன்னை காட்டி, “டமாரம்” என பேரைச் சொல்ல சக்திவேலும், அவர் அண்ணனும் சிரித்தபடி கேட்டுக் கொண்டிருந்தனர்.

    தாயும், மகளும் மறுநாள் நடக்கவிருக்கும் பெண் பார்க்கும் சடங்கின் போது குழப்பம் ஏற்படுத்தும் நோக்கில் சில பல விசயங்கள் செய்ய திட்டமிட்டனர்.

     “அம்மா நீங்க வழுக்கி விழுந்தது போல நடிங்க. நானு பாக்க போற பொண்ணோட ராசி, இப்பவே பார்க்க போகும் முன்னாடியே இப்படி பண்ணிடுச்சின்னு ஒப்பேரி வச்சிடுறேன். நாளைக்கு போகலன்னா அதே காரணத்தை அந்த தரகர்கிட்டயும் சொல்லலாம். அப்புறம் வசந்தி இந்தப்பக்கம் தலைய வச்சிக்கூட படுக்கமாட்டா.”

    “இந்த ஐடியா ஓகேவா ம்மா?” என வளர் கேக்க

     “ஏய் நான் விழுந்தா உங்கப்பனே கிடா வெட்டி பொங்க வைப்பாரு. நீ என்னய முடிக்காம போக மாட்ட போல?” என பாட்டி ஆத்திரத்தில் சண்டைக்கு வர

     “ஏதாவது செஞ்சி நிறுத்தலாமுன்னு பாத்தா நீ ஒத்து வரமாட்ட போல. சரி நாளைக்கு அங்க போய் ஏதாச்சும் காரணம் லட்டு போல கிடைக்காமையா போயிரும்? கிடைச்சா கோல் கோலா போட்டுடலாம்.” என வளர் உறுதியாக சொல்ல இருவரும் மகிழ்ச்சியாக தூங்க சென்றனர்.

     கிளம்பியது முதல் ஒவ்வொன்றுக்கும் குறை சொல்லிக் கொண்டே வர, சக்திவேல் சுஜாவிடம் ஏதோ சொல்ல, அவள் முடியாது என மறுக்க  “பாப்பா  நான் சொல்றத கேளு. இதுதான் சரியா வரும்” என்க, என்ன நடக்கிறதென்று தெரியாமலே வளர் அருகில் வந்து

      “என்னங்க நீங்க சொல்லறத கேக்க மாட்டேன்னு சொல்றாளா இந்த சிறுக்கி? பெரியவங்க சொல்றத செய்ய முடியாதுன்னு எகத்தாளம் பண்றயாடீ? அவரு சொல்லறத செய்டீ” என எகிற “உங்களுக்கு ஓகேன்னா எனக்கு ஒன்னும் இல்ல சுபாஷம்மா” என்றவள் வளரின் கழுத்தை தடவி பட்டென தட்ட, வளர் “என்னடி பண்ற”ன்னு கேக்க முயற்சிக்க குரல் வெளிவரவே இல்லை.

     மீண்டும் சக்திவேல் ஏதோ சொல்ல சுஜா முடியாது என ஜாடை காட்ட இப்போ பாட்டி வர வளர் தன் அம்மாவை தடுக்க, “விடுடீ. இத வச்சே நான் இந்த கல்யாணத்தை தடுத்து நிறுத்த போறேன்” என சொல்லிட்டு சுஜாவின் கையை பிடித்து இழுத்து, “யேன் மாப்பிள்ளைக்கு மரியாதை குடுடீ சின்ன கழுத! வயசுக்கு தகுந்தது போல நடக்க கத்துக்கோ மொதல்ல” என்க

    “ஐய்யோ வளரம்மா நீங்க இத உங்கள கண்ணாடியில பாத்து சொல்லுங்க மொதல்ல. வயசுக்கு தகுந்தது போல நடங்க. பேரனுக்கு பொண்ணுபாக்க போகும்போது பாட்டி போல நடங்க. மாப்பிள்ளையோட முறைபொண்ணு போல சிலுப்பிக்கிட்டு அலையாதிங்க சரியா” எனக் கேட்டு கழுத்தை தடவி தட்ட முழிபிதுங்கியது போல ஒரே வலி. பேசவும் முடியல. பாட்டி எல்லோரையும் கண்ணில் நீருடன் பார்க்க, அனைவரும் சந்தோசமாக சுஜாவை பார்த்தனர்.

      “வெல் டன் சுதி. இத நேத்து காலையிலேயே நான் பண்ணலாமுன்னு நெனச்சேன். மூச்சிக்கான முடிச்சியும்  பேச்சை கட்டுப்படுத்தும் முடிச்சிக்கு பக்கத்துல எங்கியோ இருக்கு. பாத்து பதமா செய்யனுமுன்னு குரு சொன்னது ஞாபகம் வந்துச்சா. இதுங்க மண்டைய போட்டுட்டா எங்க ரெண்டு பேரோட கல்யாணமும் பல மாசம் தள்ளிப்போயிடுமுன்னு பயந்து போய் விட்டுட்டேன்” என்று சுபாஷ் தன் தகப்பனை பார்த்து கண்ணடித்தபடி சொல்ல உயிருடன் எரித்ததைபோல உணர்ந்தனர் இருவரும்.

     “பாப்பா இப்போ எவ்வளவு அமைதியா இருக்கு பார்த்தியா? இதுக்காக நான் எவ்வளவு கெஞ்சினேன். முடியாதுன்னு முரண்டுபிடிச்ச. ஆனா உங்கத்தையும், பாட்டியும் சொன்னதும் பட்டுனு செஞ்சிட்ட பாரு அங்க நிக்கிற நீயி.” சக்திவேல் கலாய்த்தார்.

    “ நாம சொன்னா செய்வாங்களா மாமா? சொல்றவங்க சொன்னாதான் செய்வாங்க. அந்தந்த கோவிலுக்கு அந்தந்த பூசாரிதான் படைக்கனும்” என்று சுகனும் கலாய்க்க

     “பாப்பா கிழவி என்ன ஒன்னும் பேசாம வாரா? இதுக்கெல்லாம் சேர்த்து வச்சி அங்க என்ன பேசலாமுன்னு இருக்காளோ தெரியலையே?” என தாத்தா புலம்ப

     “கவலைபடாதிங்க. பாட்டிக்கு உங்க மேல நிறைய பாசமிருக்கு. உங்க ஆசப்படி இந்த கல்யாணம் நடக்கும். பாட்டி சிரிச்ச முகமா இருப்பாங்க. பக்கத்துல இருந்து நானே பாத்துக்கிறேன்.”

    “ நான் போடற மந்திரத்துல கல்யாணம் முடிஞ்சும் வாய திறக்க மாட்டாங்க பாட்டி.” என்றான் சுபாஷ் பாட்டியை நக்கலாக பார்த்தபடி.

     “நாங்க ஒன்னா வளர்ந்தோம். எங்களுக்குள்ள பிரிவினைய நீங்க ரெண்டு பேரும் புகுத்துனா எங்களுக்கு தெரியாதா? சண்டை போடறதுபோல வெளிய தெரிஞ்சாலும் மத்தவங்களுக்கு கஷ்டம் வரும்போது தோள் கொடுப்போம். அதனால உங்க விசப்பல்லை செயலிழக்க வச்சாச்சி. இது நிரந்தரம் ஆகாம இருக்கிறது உங்க கையிலதான் இருக்கு.” என்ற சுபாஷ், சுஜாவிடம் “சுதிமா இப்போதைக்கு சரி பண்ணு. அங்க ஏதாவது பேசினா நான் பேச்சையோ அல்லது மூச்சையோ நிறுத்திடறேன்” என்றான்.

    சுஜாவும் சிரித்தபடி இருவர் கழுத்திலும் ஒரு தட்டு தட்டிவிட்டு சென்றாள்.

   வலியினால் மூச்சிமுட்டுவது போல உணர்ந்தனர். சரியான பின் சுபாஷ் அவர்களை தாத்தாவுடனும், தன் அப்பாவுடனும் உட்காரச் செய்தான்.

    இருவரும் ஆப்பசைத்த குரங்கு போல செய்வதறியாமல் தடுமாறினர்..

   இவர்களின் இடையூறின்றி பெண் பார்க்கும் படலம் முடிந்து,  உறுதி செய்து கொண்டு மண்டபம் கிடைத்ததும் கல்யாணத் தேதி குறிக்க முடிவு செய்தனர் இரு வீட்டு பெரியவர்களும்.

      “சொல்லிக்காமயே ஒரு  காதல் ஜோடி கல்யாணம் செஞ்சிக்கிறாங்கப்பா. பாக்காத காதல படத்துல பாத்திருக்கோம். இங்க சொல்லாமயே… சூப்பர்…” என கிண்டல் அடித்தபடி சுகன் வர

   “அண்ணா அமைதியா வாங்க. வளர் உங்கள கவனிக்கிறது போல இருக்கு. ஏதாவது தெரிஞ்சா நீலா அண்ணிய வச்சி செய்யும் இந்த ராட்சசி.” என கண்டித்தாள் சுஜா.

    வளரிடம் நீலா தப்பித்தாளா?