அரசு கலைக்கல்லூரி நுழைவாயில் அருகே நின்றிருந்தனர் அந்த மாணவர்கள்.
“மகேஷ், ஏன்டா இங்க நிக்கிறோம். பெல் அடிக்கப் போகுது. வாங்க கிளாஸுக்கு போகலாம். பஸ்ட் ஹவர் நம்ம கெமிஸ்ட்ரி புரபசருது. லேட்டா போனா உள்ள விடமாட்டாரு, வச்சி செஞ்சிடுவாரு.” என்றான் ஜெயந்தன்.
“சுகந்தன் வர்றதா சொன்னான். அவனுக்காக வெயிட் பண்றோம். நீ கிளாஸ் போய் நோட்ஸ் எடு. நாங்க வந்து காப்பி பண்ணிக்கிறோம்.” என்றான் அந்த மகேஷ்.
“சுகந்தனுக்கு கிளாஸ் இருக்குமே? எப்படி இப்போ வருவான்? எங்காவது வெளியே போறோமா?” வரிசையாக கேட்டான் ஜெயந்தன். அவனை பார்த்து சிரித்தனர் அந்த நண்பர்கள்.
“மூச்சிவிட்டு பேசுடா பங்காளி. ஒவ்வொரு கேள்வியா கேளுடா. நான்லாம் கொசின் பேப்பர பாத்தாலே பத்தடி தள்ளி நிக்கறவன். இப்படி கேள்விக்கு பொறந்தவனாட்டம் கேட்டுக்கிட்டே போகாத.” கடுப்படித்தான் சதீஷ்.
“என்னங்கடா உங்க பிரச்சனை? சொல்லித் தொலைங்கடா!” ஜெயந்தன் டென்ஷன் ஆக
“சுகன் அவன் சிஸ்டர் பத்தி சொன்னானில்ல. அந்த பொண்ண சேர்க்க வர்றாங்க சுகனோட அப்பா. அதன் இங்க நிக்கிறோம். போதுமா தகவல்?” அவர்களில் ஒருவனான கண்ணன் பொறுமையாக சொல்ல
“அந்த பொண்ணு 1137 மார்க் இல்ல. நமக்கு டிரீட் வச்சானே மார்க் வந்த அன்னைக்கு. அப்புறம் இங்க என்ன வேலை? எண்ட்ரன்ஸ் எழுதினதுல கிடைச்ச கட்-ஆப் மார்க் பாத்துட்டு நாமகூட டாக்டர், என்ஜினீயர் ரெண்டும் கிடைக்கும். எது அவங்க விருப்பமோ அத செலக்ட் பண்ண ஐடியா கொடுத்தோமே, இங்க எதுக்கு?” ஜெயந்தன் வேகமாக, கேள்விகளாக தொடுக்க,
“சதீஷு எப்படிடா இவன பக்கத்துல வச்சிகிட்டு கிளாஸ்ல சமாளிக்கிற? அப்பா அறிவாளி! அவன் தங்கச்சிய இங்க சேர்க்க வரல. பக்கத்துல டீச்சர் ட்ரெய்னிங் இன்ஸ்டிடியூட் இருக்குல்ல அங்க சேர்க்க வர்றாங்க. டேய் கடவுளே, நான் காலையில ஹாஸ்டல்ல சாப்பிட்ட இட்லி இவனுக்கு பதில் சொல்லியே காலி ஆயிடுச்சி. இப்ப இவனை எனக்கு டீக்கடையில தீனி வாங்கித்தர சொல்லு.” என ஜெயந்தனையும் கண்ணனையும் சேர்த்து கலாய்த்தான் மகேஷின் அருகில் நின்றிருந்த செல்வன்.
அருகிலிருந்த டீக்கடைக்கு அவர்கள் சொல்ல முதுகலை இரண்டாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் மாணவர்கள் அங்கிருந்தனர். அவர்களில் ஜெயந்தனின் அண்ணனும் ஒருவன்.
இவர்கள் ஐவரும் அக்கல்லூரியின் பஞ்சபாண்டவர்கள். இவர்களை வகுப்பறை தவிர்த்து, தனித்தனியாக பார்ப்பது அபூர்வம். அதனாலேயே இப்பெயர் இவர்களுக்கு வழங்கப்பட்டு, இவர்களின் அடையாளமாக மாறிப்போனது.
இவங்க அஞ்சு பேரும் இளங்கலை வேதியியல் மூன்றாம் ஆண்டு படிக்கின்றனர். இவர்களில் மகேஷ், ஜெயந்தன் இருவரும் பள்ளித் தோழர்கள். மற்றவர்கள் கல்லூரியில் இணைந்தவர்கள். ஒருவர் அறியா விசயம் மற்றவரிடம் இல்லை எனும் அளவுக்கு ஆழ்ந்த நட்பு இவர்களிடத்தில்.
சுகந்தன் கண்ணனின் நண்பன். அவன் பக்கத்தில் இருக்கும் அரசு பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படிக்கிறான். இருவரும் பள்ளியில் படிக்கும்போது விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றவர்கள். ஓரிரு போட்டிகளில் இருவரும் அவரவர் பள்ளிக்காக பங்கேற்க அங்கு ப்ரெண்டானவர்கள். இப்போது அடுத்தடுத்த கல்லூரியில் படிப்பதால் இவர்களின் நட்பு தொடர்கிறது. பஞ்சபாண்டவரோடு அவனும் சேர்ந்து பல நேரங்களில் அறுவராக இருப்பர்.
இருபத்தோராம் நூற்றாண்டின் துவக்கத்தில் அரசு கல்லூரிகள் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த காலகட்டம் அது. ஆசிரியர் பட்டய படிப்பு முடித்தால் விரைவில் அரசு பள்ளிகளில் ஆசிரியராக வேலை கிடைக்கும் என்றிருந்த காலம் அது.
சுகந்தனின் தங்கை சுஜாதாவிற்கு மருத்துவ கனவிருந்தது. ஆனால் அவர்கள் ஊரில் பெண்களை மேற்படிப்பிற்கு அனுப்புவதே குதிரைக்கொம்பு. இதில் மருத்துவர்…சாத்தியமா?
ஆறு வருட படிப்பு, திருமணத்திற்கு பார்க்கும்போது டாக்டர் மாப்பிளையா தேடனும் , தங்களூருக்கு அருகில் இல்லாவிட்டால் தூரத்துல கட்டி குடுக்கனும், அப்படியே அமைந்தாலும் வரதட்சணை நிறைய கொடுக்கனும் இப்படி பாயிண்ட் பாயிண்டா பேசி சுஜாதாவின் அப்பாவை உறவினர்கள் குழப்ப, அவர் மகளையும் மகனை போல என்ஜினீயர் ஆக்க நினைக்க, அவளோ, ‘ஆசிரியர் பணி அறப்பணி, அதற்கே என்னை அர்ப்பணி’ன்னு நின்றாள்.
இப்படியாக இங்கே அட்மிஷன் செய்ய வர, தனக்கு துணையாக தன் நண்பர்களை அழைத்திருந்தான் சுகந்தன்.
அவர்கள் டீ, வடை என சாப்பிட்டு முடித்து வர, சுகந்தன் வேகமாக வந்தான்.
“அப்பா! அதோ பாரு கடவுளே, உன்னோட உடன்பிறப்பு.” கண்ணனிடம் ஆரம்பித்து “சுகந்தா நேரமா வந்து எங்களை கேள்விக்கணைகளில் இருந்து காப்பாத்தறதில்லையா நீ?” என சுகந்தனிடம் முடித்தான் செல்வன்.
“அப்பாவும், சுஜாவும் பத்து மணிக்குதான் வருவோமுன்னு சொன்னாங்க. நான் அரைமணி நேரம் முன்னாடியே வந்துட்டேன். அப்புறம் என்ன? சரிப்பா. நீங்க அஞ்சு பேருந்தான் இங்க பக்கத்துல இருக்க போறிங்க. கொஞ்சம் பாத்துக்குங்க.” என சுகந்தன் மெதுவாக சொல்ல,
“சுகா இது உனக்கே ஓவரா இல்லை. உன்னைவிட ஒரு அரை கிலோமீட்டர் பக்கத்துல இருக்கோம் அவ்வளவு தான். ஆனா சிஸ்டருக்கு பாதுகாப்பு தேவையா? நீயே யோசி” கண்ணன் கிண்டல் செய்ய,
“நான் சுஜாவுக்கு சொல்லல. உங்களுக்கு தான் சொல்றேன்” என சிரிக்க, அதற்குள்
அருகில் சிறு கூட்டம். ஏதோ சலசலப்பு. மாணவர்கள் நிறைய பேர் சட்டென கூடிவிட்டனர். யாரோ, யாரையோ அறைந்து விட்டனர் போலும். வாயில் கை வைத்து நின்றனர் சுற்றியிருந்தவர்கள்.
“அவனுக்கு வேணும். நம்ம காலேஜ் பொண்ணுகிட்ட வந்து லந்து பண்ணினானில்ல. இப்போ வாங்கிட்டான்.” மாணவர்களில் ஒருவன் மகிழ்ச்சியுடன் சொல்லிக்கொண்டே செல்ல, சுகந்தன் தலையில் கை வைத்தான்.
ஜெயந்தனும், அவன் அண்ணனும் சத்தம் வந்ததும் அங்கே சென்றிருந்தனர். இப்போது இவர்களும் அருகே செல்ல, இவர்கள் வகுப்பு மாணவி ஒருத்தி அழுது கொண்டிருந்தாள்.
அவளருகில் இருந்த பெண்ணொருத்தி, “அக்கா, மறுபடியும் அந்த ஆள் வந்து தொந்தரவு பண்ணினா சொல்லுங்க. நாங்க பக்கத்துல தான் இருக்கோம். பாத்துக்கலாம்” என்றாள் வெள்ளை சுடிதார் அணிந்திருந்த அந்த பெண்.
“இத்தனை பேர் இங்க இருந்திங்க. ஒருத்தர்கூட அவன மிரட்டல. சண்டை போடல. இப்போ மட்டும் இங்கென்ன வேலை உங்களுக்கு? வேடிக்கை பாக்கமட்டும் மொத ஆளா வந்துட வேண்டியது” என சுற்றியிருந்தவர்களை திட்டினாள் அவள்.
“அண்ணா நீங்களும் இங்கதான் இருந்திங்களா?” என சுகந்தனை பார்த்து அவள் கேக்க,
“இல்லமா காயத்ரி. இப்போ தான் வந்தேன். அதுக்குள்ள அடிக்கிற சத்தம். இவனுங்கள இழுத்துகிட்டு ஓடி வந்தேன்” சுகந்தன் சொல்லிக்கொண்டே திரும்பி “வாங்கப்பா. நீங்க ரெண்டு பேரும் நாளைக்கு வர்றதா சுஜா சொல்லுச்சி. நீங்களும் இன்னைக்கே அட்மிஷன் போடறிங்களா?” என்றான் அருகிருந்த அவள் தகப்பனிடம்.
“அப்பா நீங்க நாலு பேரும் ஒன்னாதான் வந்திங்களா?” என்று தன் அப்பாவிடம் கேட்டவன் தன் தங்கையை பார்க்க அவளும் அழுது கொண்டிருந்த பெண்ணுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தாள்.
“இந்த அண்ணனுங்க எல்லாம் எந்த டிப்பார்ட்மெண்ட்? எல்லாரும் சிஎஸ் தானா?” என சுஜா கேக்க
அறிமுகப்படுத்திக் கொள்ள அருகில் வந்த ஜெயந்தன் டக்குனு பின்வாங்கி சுற்றியிருந்த மற்றவர்களுடன் சேர்ந்து நின்றான்..
இதை இருஜோடி கண்கள் கண்டு நகைத்தன. ஒரு ஜோடி கண்களுக்கு சொந்தக்காரன் கண்ணன். மற்றொரு ஜோடி கண்களின் கண்டுபிடிப்பை யாரும் அறியவில்லை.
“இல்ல சுஜா. இவங்க பிஎஸ்சி கெமிஸ்ட்ரி. உங்க பக்கத்துல இருப்பாங்க. ஏதாவது தேவைன்னா இவங்கள பாத்தா சொல்லுங்க. எனக்கு தகவல் வந்துடும். ஓகே.” என்றவன்
“தேங்யூ ப்ரெண்ட்ஸ். என்னால நீங்க பஸ்ட் பீரியட் மிஸ் பண்ற மாறி ஆயிடுச்சி. அதுக்கு ஒரு சாரி. நான் இவங்களோட அட்மிஷன் போட போறேன். நீங்க கிளாஸ் போங்க” என அவர்களை அனுப்ப,
சிறிது தூரம் சென்ற சுஜா, “அண்ணா, அஞ்சு பேர்னு சொன்னிங்க. ஆனா நாலு பேர்தான் அறிமுகப்படுத்துனிங்க. ஓகே, இங்க அந்த அண்ணங்ககிட்ட அந்த இன்னொருத்தர் யாருன்னு கேட்டு நான் தெரிஞ்சிக்கிறேன்”னு சொல்லிட்டு சுஜா அப்பாவோட போக
காயத்ரியின் அப்பா, “ தம்பி காயத்ரி தைரியமான பொண்ணுன்னு நான் நினைச்சிக்கிட்டு இருந்தேன். ஆனா சுஜாதா, ரொம்ப தைரியமான பொண்ணு. இப்படி தட்டி கேக்கறது சரிதான். ஆனா…. அவன பாத்தா ரௌடி மாதிரி இருந்தான். பாப்பாகிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்க சொல்லுங்க. நீங்க கொஞ்சம் அடிக்கடி வந்து பாத்துக்குங்க” என வேண்டுகோள் வைக்க,
“ஆரம்பமே கண்ண கட்டுதே. இனி தினமும் இதே தானா?” புலம்பிக்கொண்டே காலேஜ் சென்றான்.
ஜெயந்தன் நோட்ஸ் எடுக்க கண்ணன் அவனை கவனித்தபடி இருந்தான். “என்னாச்சி இவனுக்கு? ஏன் டக்குனு பின்னாடி கும்பலுக்குள்ள போனான்? அப்போ அங்கிட்டு என்ன நடந்துச்சி? சரி ராகினிகிட்ட வம்பு செஞ்ச அந்த பன்னாடைய யாரு அடிச்சிருப்பா? பிரச்சனை நடக்கும் போது ராகினி, அவன், அப்புறம் இவங்க நாலு பேருந்தான் இருந்தாங்க. இவனும், அண்ணனும் அப்போ தான் கிட்டக்க போனாங்க. ஐய்யோ தலைய பிச்சிக்க வைக்கறானே. நாம எதுவும் பேசாம, யாருகிட்டையும் சொல்லாம இவன கவனிப்போம். கத்தரிக்காய் முத்தினா கடைத்தெருவுக்கு வந்துதான ஆகனும்” தனக்குள் பேசிக்கொண்டான்.
சுஜாவும், காயத்ரியும் தங்கள் படிப்பை தொடங்கினர் ஓரிரு நாட்களுக்கு பிறகு.
காலேஜ் ஓரிடத்திலும், ஹாஸ்டல் கொஞ்சம் தூரமாகவும் இருக்க பஞ்சபாண்டவர்களை இவர்கள் அடிக்கடி சந்திக்க நேர்ந்தது.
காயத்ரியை சுஜா, காயு என அழைக்க அனைவரும் அதையே பின்பற்றினர். காயுவும், சுஜாவும் வரும்போது இவர்கள் நால்வரை மட்டுமே சந்திக்க முடிந்தது. காயு தனியே வரும்போது ஐவரையும் சந்திப்பாள்.
அவள் அனைவரையும் பேரிட்டே அழைத்தாள். சுஜா எல்லோரையும் அண்ணா என்றே அழைத்தாள்.
கண்ணன் இதையும் கவனித்தான். காயுவிடம் பேசும் ஜெயன், ஏன் சுஜா வரும்போது மட்டும் எஸ்ஸாகிறான், அவனுக்கு புரியல. இன்னும் ஒரு வருடமிருக்கு பாக்கலாம் என்ன நடக்குதுன்னு என அமைதியாக இருந்தான்.
சுஜா தானுண்டு. தன் வேலையுண்டு என இருந்தாள். ஒரு நாள் ராகினி, அவள் தோழிகளுடன் வந்து “கண்ணா ப்ளீஸ் நான்….உங்ககிட்ட….. ஒன்னு…. சொல்லனும்….” என்க
“ராகினி எனக்கு அப்படி எந்த ஐடியாவும் இல்லை. ப்ளீஸ் தப்பா பேசியிருந்தா என்னை மன்னிச்சிடுங்க” என அவன் பதற
“ஐய்யயோ நான் அந்த அர்த்தத்துல உங்ககிட்ட பேசல. அன்னைக்கு எனக்கு ஹெல்ப் பண்ணின பொண்ணு உங்க ப்ரெண்ட்ஸ் கூட பேசினதை பார்த்தேன். அதான் அவங்கள எங்களுக்கு இண்ட்ரோ குடுக்கச் சொல்ல வந்தா, நீங்க இப்படி பதறிங்க” என சிரிக்க,
“ஓகே, ஓகே. நான் ஒரு நிமிசம் ராஜனை நினைச்சிட்டேன். நீங்க என்னை கை காமிக்க…..நான் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆக… அப்பப்பா ஒரு நிமிசத்துல உலகத்தையே சுத்திவந்துட்டேன்”னு சிரித்தவன்,
“ஆமா அங்க ரெண்டு பொண்ணுங்கதான் இருந்தாங்க. அதுல அவனை யாரு அடிச்சா? நீங்க பாத்திட்டுதான இருந்திங்க சொல்லுங்க” எனக் கேட்ட கண்ணன்
“ இல்ல நேரிலேயே காமிங்க யாருன்னு. இன்னைக்கு சாயங்காலம் வாங்க, பேசலாம்.” என்று தன் நண்பர்களுடன் சென்றான்.
“அண்ணா இவங்களுக்கு ஹெல்ப் பண்ண பொண்ணை இவங்க பாக்கனும் சொன்னாங்க, சொன்னிங்க. ஆனா அவங்க இங்க இல்லையே எப்படி பேச? கூட இருந்த எங்ககூட பேச ஓகேவா? கேட்டு சொல்லுங்க” சுஜா சிரிக்க
ராகினிக்கு அவளை ரொம்ப பிடித்தது. உதவி செய்தவளே அதை மறைக்க நினைக்க, ராகினியும்,
“இவங்களோடதான் அந்த பொண்ணும் இருந்தா. ஸோ இவங்கள நான் அவங்களாவே நெனச்சிக்கிறேன், ஓகேவா? கேட்டு சொல்லுங்க,” என சொல்லி சிரிக்க
“புதுசா ப்ரெண்ட்ஸ் ஆகியிருக்கிங்க. அதனால இன்னைக்கி நீங்க பப்ஸ், கூல்ட்ரிங்கஸ் வாங்கி தரனும்” மகேஷ் சொல்ல
“டுடே இஸ் மை டே. வாங்க. பேக்கரி போலாம்” என்ற சுஜா,
கண்ணனிடம் மெதுவாக, “அண்ணா சுகன் அண்ணா வருவாங்க. உங்க அஞ்சாவது விரலையும் கூப்பிடுங்க. என் கண்ணுல படவே கூடாதுன்னு இருக்காரு போல உங்க தோஸ்த்,” என்றாள் சுஜா.
“ப்ரெண்ட்ஸ் இப்போ இந்த டிரீட் எதுக்குன்னு தெரியுமா? நம்ம சுஜாவோட கவிதை தொகுப்பு கவிமன்றத்துல பஸ்ட் பிரைஸுக்கு செலக்ட் ஆகி இருக்கு. என்ஜாய் யுவர்செல்ப்” காயு சஸ்பென்ஸை உடைக்க, எல்லோரும் பெருமையாக பார்த்தனர் சுஜாவை.
“காயு நீ அமைதியா இருக்க மாட்டியா? அதுக்காக நான் இந்த டிரீட் கொடுக்கல. நாங்க இங்க வந்து ஒரு சில மாதங்கள் ஆயிருந்தாலும், இன்னும் நாமெல்லாம் பேசிக்க வாய்ப்பே கிடைக்கல. அதனால ஒரு கெட் டுகெதர் மாதிரி இத நான் நினைச்சேன். உங்க வாழ்த்துக்களுக்கு நன்றி” பேசி உட்கார,
சுகந்தனும், ஜெயனும் வந்தனர். சுகந்தன் தங்கையின் கை குலுக்கி வாழ்த்து சொல்லி கண்ணன் பக்கத்துல உட்கார்ந்தான். ஜெயன் வந்தவன், மகேஷ் பக்கத்துல உட்கார்ந்து சுஜாவை பார்த்தவன், திரும்பி மகேஷுடன் பேச ஆரம்பித்தான்.
சுஜாவும் சுகனுடன் பேசிக்கொண்டே ஜெயனை பார்த்தவள் ராகினியிடம் திரும்பி பேசிக்கொண்டிருக்க, சுகன் அவனிடம்,
“ஏன்டா இப்படி முழிக்கிற? என்னாச்சி? ஏன் இந்த டென்ஷன்? ஏதாவது பிரச்சனையா? சுஜாகிட்ட சொன்னா ஐடியா குடுப்பா? எந்த பேய் உன்ன அடிச்சது? சொல்லேன்டா. சொல்ல விருப்பம் இல்லேன்னா விடு.” என்க
“ஜெயன் சுஜாகிட்ட இன்னும் பேசல. காயுகிட்ட நல்லா பேசறான். சுஜா வந்தா இவன் ஓடிடுறான். இன்னைக்கு சுஜா அண்ணா உங்க அஞ்சாம் விரலையும் கூப்பிடுங்கன்னு சொல்லுது. இப்போ உன்னோட வந்தவன் சுஜாவை பாத்துட்டு, அவங்ககிட்ட பேசாம மகேஷ் கூட உட்கார்ந்து பேசிட்டு இருக்கான்.”
“சுஜாவும் திரும்பி இவன பாத்துட்டு, ஏதும் பேசாம ராகினிகூட பேசுறாங்க. என்ன தான்டா நடக்குது இங்க? உனக்கு ஏதாவது புரியதா? எனக்கு இதுங்கள கவனிக்கிறதே பொழப்பா போச்சி” கண்ணன் புலம்ப சுகன் சப்தமாக சிரித்தான்.
அனைவரும் திரும்பி பார்க்க, சுஜா எழுந்து வந்து அண்ணனுடன் உட்கார்ந்தவள், “ அண்ணா இந்த வாரம் நாம ஊருக்கு போலாமா?” என்க
“ஏம்மா சுஜா? போன வாரம்தான வீட்டுக்கு போயிட்டு வந்த? யாரை அடிச்ச? எப்போ அடிச்ச? கொஞ்ச நாளா யாரும் மாட்டலபோல?” கிண்டல் செய்து சிரிக்க
“அந்த ராஜன் நேத்து வந்தான். என்கிட்ட தெனாவெட்டா பேச ரெண்டு காட்டு காட்டி அனுப்பிட்டேன்.” கோவத்துல முகஞ்சிவக்க பல்லைக்கடித்துக் கொண்டு சொல்ல,
“அவன் ப்ரெண்ட்ஸை நான் பாத்திருக்கேன். பக்கா லோக்கல். அவனுங்க இருக்கிற திமிருல இவன் ஆடிக்கிட்டு இருக்கான். என்ன செய்ய காத்திருக்கானோ தெரியல” அடுத்த கவலை பிறக்க கண்ணனின் முகம் கருத்தது.
“அண்ணா கவலைபடாதீங்க. அவன பயமுறுத்தி அனுப்பிட்டேன். இனி இந்த பக்கம் தலைவச்சி கூட படுக்க மாட்டான். ஈஸ்வர் அண்ணா வந்தாங்க. அவங்கிட்ட இனி எனக்கு எது நடந்தாலும் ராஜன் கேங்தான் பொறுப்புன்ற மாதிரி எழுதி வாங்கிட்டு மிரட்டி அனுப்பினாங்க.” யாரையோ பார்த்தபடி சுஜா கூற, அங்கே பார்த்த சுகன் அதிர்ந்தான்.