“கந்தசாமி எதுக்கும் எக்ஸ்ட்ரா போலீஸ் போர்ஸ வர சொல்லுங்க.” என்று கூறிக்கொண்டே தனது கால்சராயிலிருந்து துப்பாக்கியை எடுத்துக் கொண்டான். அவர்கள் இருவரையும் தன் அழைப்பு வரும் வரையிலும் வெளியே காத்திருக்குமாறு கூறிவிட்டு உள்ளே சென்றான்.
அந்த பாழடைந்த பங்களாவிற்குள்ளே குப்பையும் தூசியும் குவிந்துக்
கிடந்தன. கீழே உள்ள அறைகளை யாரும் உபயோகப்படுத்தியது போன்ற எந்த சான்றும் இல்லை. மேலே செல்ல படிகளில் கால் வைத்த போது அப்படிகளில் இருந்த காய்ந்து கிடந்த இரத்தத் துளிகளைக் கண்டான். மேலும் சில படிகளில் ஏறும் போது பெண்களின் உள்ளாடைகள், உடைந்த வளையல்கள் என ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. இதையெல்லாம் பார்த்த அபிஜித்திற்கு அங்கே என்னென்ன பயங்கரங்கள் நிகழ்ந்திருக்கும் என்று யூகிக்க முடிந்தது. அந்த பங்களாவின் மேற்புறத்தில், மூன்று அறைகள் இருந்தன. அவற்றில் ஒன்று பூட்டப்பட்டிருந்தது. மற்றொரு அறையைத் திறந்தவனின் கண்கள் அங்கே இருந்தனவற்றை ஆராய்ந்தன. அவ்வறை முழுவதுமே சோதனைக்குழாய்களும் அளவைகளும் இரசாயனங்களும்
நிறைந்திருந்தன. ஒவ்வொன்றையும் அளவெடுத்துக்கொண்டே நடந்தவனின் கால்கள் அவ்வறையின் ஓரத்தில் இருந்த மேசையிடம் சென்றன. அங்கேயிருந்த வெள்ளை நிறப்பொடியை ஆராய்ந்து அது போதை மருந்து என்பதை உறுதி செய்தான். ஆம் அவ்வறையே போதை மருந்து தயாரிக்கும் தொழிற்ச்சாலையின் மினியேச்சர் போன்று தான்
இருந்தது. அங்கிருந்த ஒவ்வொரு மருந்தும் பல புதிய சேர்க்கைகளினால் வீர்யமிக்கவையாக இருந்தது. கிட்டத்தட்ட 2 வருடங்கள் இவை நடந்துக்கொண்டிருக்கின்றன என்பதை ஏற்கனவே யூகித்திருந்தான். மேலும் இவை யாவும் எந்த வித இடர்பாடுமின்றி தொடர்ந்து நடந்துவருகிறதென்றால் இன்னும் சில பெரிய தலைகளின் தொடர்பும் இதிலிருக்கும் என்பதையும் புரிந்துக்கொண்டான்.
அப்போது பக்கத்து அறையிலிருந்து மெல்லிய முனங்கல் ஒலி கேட்டது. அங்கிருப்பவர்களின் எண்ணிக்கை மற்றும் நிலை பற்றி அறியாமல் அங்கு செல்வது நல்லதில்லை என்றறிந்த அவன், கந்தசாமியைத் தொடர்பு கொண்டான்.
“என்ன கந்தசாமி போலீஸ் போர்ஸ் வந்தாச்சா?”
“வந்தாச்சு சார். நாங்க உள்ள வரவா?”
“ம்ம்ம் உள்ள வாங்க கந்தசாமி. மேல ரைட்ல இருக்க ரூம்லயிருந்து தான் சத்தம் வருது. சோ எல்லாரையும் அந்த ரூமை ரவுண்டப் பண்ண சொல்லுங்க” என்று உத்தரவிட்டான். பிறகு அங்கிருந்தனவற்றில் சிலவற்றை ஆதாரத்திற்காய் எடுத்து வைத்துக்கொண்டான். அபிஜித் அந்த அறையை விட்டு வெளியே வந்தபோது மற்ற காவலர்கள் மற்றொரு அறையை சுற்றி வளைத்திருந்தனர். அனைவரும் அவனின் ஆணைக்காக காத்திருக்க, அவனோ அறைக்கதவை லேசாகத் திறந்து உள்ளே எட்டிப் பார்த்தான். ஆனால் இவர்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் வீணாகுமாறு அங்கிருந்தவர்கள் அனைவரும் ஒரு வித போதையில் இருந்தனர். அவர்களின் அருகே சென்று பார்த்தவன் அவர்கள் போதையின் பிடியிலிருந்து வெளிவர நீண்ட நேரமாகும் என்பதை கணக்கிட்டான். பின் மற்றவர்களைப் பார்த்து அங்குள்ள ஆதாரங்களைச் சேகரித்து அங்கிருப்பவர்களைக் கைது செய்யுமாறுக் கூறினான். தானும் ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தவன் கந்தசாமியின் சத்தம் கேட்டு அங்கு சென்றான். அங்கு ஒருவன் உயர்ரக ஆடை அணிந்து தலை கலைந்து ஒருக்களித்து படுத்திருந்தான். அபிஜித் கந்தசாமியை யாரிவன் என்பது போல பார்த்தான்.
“சார் இவர் தான் பிரதீப், எக்ஸ் மினிஸ்டர் கங்காதரனோட மகன்.”
அவன் சிறு தலையசைப்புடன் அங்கிருந்து நகர்ந்து மற்ற ஆதாரங்களைப் பார்வையிட ஆரம்பித்தான். ஆனால் அவன் மனதிற்குள் அப்பெண்ணைப் பற்றிய சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது.
‘அந்த பொண்ணு எதுக்காக பொய் சொல்லணும். உண்மையவே சொல்லிருக்கலாமே.’
இவனின் எண்ணவோட்டத்தை தடைச் செய்வதுப் போல அங்கிருந்த காவலர்களில் ஒருவர் வந்து, “சார் உங்கள பாக்க பிரஸ் வெளிய வெயிட் பன்றாங்க.”
“அதுக்குள்ள பிரஸ்க்கு யாரு இன்போர்ம் பண்ணது?” சற்று எரிச்சலுடனே கேட்டான்.
“சார் பக்கத்துல ஏதோ சூட்டிங் நடக்குது. அது பேமஸ் ஹீரோ **** வோட படம்ங்கிறதால அவரை பேட்டி எடுக்க பிரஸ் வந்திருக்காங்க. இந்த எடம் ஏற்கனவே பல கிசுகிசுக்களுக்குப் பேர்போனதால இங்க போலீஸப் பாத்தவோடனே ஏதோ பிரச்னைன்னு அவங்க வந்ததா சொல்றாங்க சார்.”
“சரி நான் வரேன்னு சொல்லுங்க.” தன் தலையைக் கோதியவாறு நடந்து சென்றான்.
அங்கிருந்த பத்திரிக்கையாளர்களைப் பார்த்துத் தலையசைத்தான்.
“சார் இங்க என்ன நடக்குது? காலைலயிருந்தே இந்த பக்கம் போலீஸ் கூட்டமா இருந்துச்சு. இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இந்த பங்களால ஏதோ சர்ச் பண்ண மாதிரி இருந்துச்சு. சோ இங்க என்ன நடக்குதுன்னு சொல்லுங்க சார்.”
“வெல் உங்க எல்லாருக்கும் இந்த பங்களா பத்தின நெறய கட்டுக்கதைகளைத் தெரியும். இதைப் பத்தின ஹாரர் ஜெனர்ல வந்த நெறய ஆர்ட்டிக்கிள்ஸ் நானும் படிச்சுருக்கேன். பட் கொஞ்ச நாளாவே இந்த பங்களா பத்தி கம்ப்ளைன்ட்ஸ் வந்துட்டு இருந்துச்சு. நேத்து நைட் இங்க நெறய இல்லீகல் ஆக்டிவிட்டிஸ் நடக்குறதா வந்த கம்ப்ளைன்ட் படி நாங்க இங்க விசாரிச்சுட்டு இருக்கோம்.”
“சார் உங்க விசாரணை எந்த அளவுல இருக்கு. இங்க நடக்குற இல்லீகல் ஆகிட்டிவிட்டிஸுக்கான ஆதாரங்கள் ஏதாவது கெடச்சுதா? அப்படி என்ன இல்லீகல் ஆக்ட்டிவிட்டீஸ் இங்க நடக்குது?”
ஒரு நீண்ட பெருமூச்சு விட்டு, “இந்த பங்களா ஒரு மினி போதை மருந்து தொழிற்ச்சாலையா இயங்கிட்டிருந்துருக்கு. தமிழ்நாட்டிலிருந்து போதை மருந்து கடத்தலுக்கு மெயின் சப்ளை இங்க இருந்து தான் அனுப்பப்பட்டிருக்கறதுக்கான ஆதாரங்கள் கெடச்சுருக்கு. இப்போதைக்கு இவ்ளோ தான் சொல்ல முடியும். மத்தத விசாரணை முடுஞ்சதுக்கப்பறம் சொல்றோம்.”
“இதுல நிறைய பெரிய புள்ளிகள் சம்மந்தப்பட்டிருப்பங்கன்னு சொல்றாங்க. இது எந்த அளவு உண்மை?”
“இதைப் பத்தி இப்போ நான் எதுவும் சொல்ல முடியாது. சோ ப்ளீஸ் அண்டெர்ஸ்டாண்ட் அவர் சிட்ஸுவேஷன்.”
“சரி சார். நீங்க அவங்க பேர இப்போ சொல்ல வேண்டாம். பட் இதுல சம்மந்தப்பட்டிருக்கவங்க பெரிய புள்ளியா இருந்தா பார் எக்ஸாம்பில் எக்ஸ் மினிஸ்டராவோ இல்ல அவரோட மகனாகவோ இருந்தா என்ன பண்ணுவீங்க? பெரிய இடத்து விஷயம்னு கண்டுக்காம விட்டுருவிங்களா இல்ல சட்டத்தின் படி தண்டனை வாங்கி குடுப்பீங்களா?” – ஒரு துடுக்குத்தனமான பத்திரிக்கையாளர் இப்படி கேள்வி கேட்டார்.
அவரின் கேள்வியிலேயே பிரதீப் மற்றும் கங்காதரன் இதில் சம்மந்தப்பட்டிருப்பது அவர்களுக்கு தெரிந்துவிட்டது என்பதை அறிந்துக்கொண்டாலும், தற்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு மேம்போக்காகவே பதில் கூற விரும்பினான்.
“இதைப் பத்தி விசாரணை முடுஞ்சவோடனே ஒரு பிரஸ் மீட்ல சொல்றேன். மேலும் எனக்கு சொல்லுறத விட செயல்ல காட்டுறது தான் பிடிக்கும். சோ செஞ்சிட்டு அதப் பத்தி விரிவா சொல்றேன். நன்றி.”
ப்ரஸில் பேசிவிட்டு அபிஜித் தனிமையை நாடினான். அவனுக்கு இன்று காலையிலிருந்து நடந்தனவற்றை சிந்தித்துப் பார்க்க வேண்டியிருந்தது. ஒரு பெண் தன் கணவனைக் காணவில்லை என்று புகார் கொடுத்தது, 2 மாதமாக தன்னை நல்லவனாகக் காட்டிக்கொள்ளும் பிரதீப்
திடீரென்று அந்த பங்களாவிற்கு வந்தது, பத்திரிக்கையின் கவனத்தை ஈர்க்க பெரிய ஹீரோ ஒருவரின் படபிடிப்பைப் பயன்படுத்திக்கொண்டது என்று எல்லாமே முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுத்தியிருப்பதாகத் தோன்றியது. ஆனால் எதற்காக இந்த நாடகம் என்று தான் புரியவில்லை. அப்போது அவனின் கைப்பேசியில் ஒரு காணொளி வந்ததற்கான அறிவிப்பு வந்தது. அது இன்று காலையில் புகார் கொடுத்த பெண்ணுடையது என்று அறிந்து அதை ஓடவிட்டான்.
“ஹாய் சார். நான் சுஷ்மிதா சுப்ரமணியன். நான் உண்மைச் சுடர் பத்திரிக்கையின் ஜூனியர் ரிப்போர்ட்டர். இன்னிக்கு காலைலயிருந்து நடந்த விஷயங்கள் உங்கள குழப்பியிருக்கும்னு நினைக்கிறேன். முதல்ல நான் இதில் எப்படி சம்மந்தப்பட்டிருக்கிறேன்னு சொல்லிடுறேன். 6 மாசத்துக்கு முன்னாடி நீங்க இப்போ இருக்க அதே ஸ்டேஷன்ல ஒரு ரிப்போர்ட்டர் வந்து அந்த பங்களால நடக்குற விஷயங்களைப் பத்தி கம்ப்ளைன்ட் பண்ணாறு. ஆனா அவருக்கிட்டேயிருந்து ஆதாரங்களை ஏமாத்திப் பறித்து காசுக்காக அதை விற்று அந்த ரிப்போர்ட்ரையும் அடிச்சுப் படுக்க வச்சுட்டாங்க.அந்த ரிப்போர்ட்டர் வேற யாரும் இல்லை என்னோட அண்ணா அர்ஜுன் சுப்ரமணியன் தான். அவனோட லட்சியமே ஜர்னலிஸம் படிச்சு மக்கள்கிட்ட அன்றாடம் நடக்குற நிகழ்ச்சிகளை நேர்மையாகக் கொண்டுபோய் சேர்க்குறது தான். அதுக்காகத் தான் அவன் ரொம்ப கஷ்டப்பட்டு ஆதாரங்களையெல்லாம் சேகரிச்சான். அவன் பண்ண ஒரே தப்பு தப்பான ஒருத்தர்கிட்ட அந்த ஆதாரங்களைக் கொடுத்தது. அதுவே அவனைப் படுத்தப்படுக்கை ஆக்கிருச்சு.”
அவளின் முகம் ஒரு நிமிடம் வேதனையைத் தத்தெடுத்தது. மறுநிமிடமே முகத்தை நிர்மலமாக்கித் தொடர்ந்தாள்.
“அவனோட லட்சியத்தைக் காப்பாற்றவே இந்த கேஸக் கையில் எடுத்தேன். திருப்பி ஆதாரங்களை முதல்ல இருந்து சேகரிச்சேன். அது ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு. ஒரு மாசம் அவங்கள ஃபாலோ பண்ணி பல தகவல்களைச் சேர்த்தேன். 2 மாசத்துக்கு முன்னாடி பிரதீப் அந்த பங்களாக்கு வரதில்லைன்னு கேள்விப்பட்டேன். அப்போதான் அவனோட பிரெண்ட்ஸ் கேங்க்லேயிருந்து அவன் ஒரு பொண்ணு பின்னாடி சுத்துறதா தகவல் கிடைச்சது.எனக்கு சந்தேகமா இருந்துச்சு. அந்த பொண்ணு பேரு நிகிதா பரத்வாஜ். அந்த பொண்ணப் பத்தி பேக்ரௌண்ட் செக் செஞ்சப்போ தான் அந்த பொண்ணோட அப்பா ரவீந்தர் பரத்வாஜ் மும்பை போர்ட்ல பெரிய பவர்ல இருக்கறவரு. அவர பிடிச்சு இங்க தயாரிக்குற போதை மருந்த வெளிநாட்டுக்கு எக்ஸ்ப்போர்ட் பண்ணுற பிளான்ல இருந்துந்துருக்காங்க. அதுக்காகத் தான் அந்த பொண்ண லவ் பண்ணுற மாதிரி ஏமாத்த நல்லவன் மாதிரி நடிச்சுருக்கான். இந்த பிளனெல்லாம் எங்களுக்கு தெரிஞ்சப்போ இதுக்கு மேல விட்டா பிரெச்சனை பெருசா ஆகிடும் பிளஸ் அவங்களுக்கு சரியான தண்டனை வாங்கி தர முடியாத அளவுக்கு பெரிய ஆளாகிடுவங்கனு தோணுச்சு. அப்போ தான் அந்த ஸ்டேஷனுக்கு புது போலீஸா நீங்க வந்துருக்கிங்கன்னு தெரிஞ்சுது. உங்களப் பத்தி விசாரிச்சதுல நீங்க நேர்மையானவருன்னு தெரிஞ்சாலும் முன்னாடி மாதிரி எதுவும் தப்பாகிடக் கூடாதுன்னு இந்த ட்ராமாவ போட வேண்டியதாகிடுச்சு. இதுக்காக நாங்க ரொம்ப பிளான் பண்ணி சரியான நாளுக்காக காத்திட்டிருந்தோம். பிரதீப்பை அந்த பங்களாக்கு வர வைக்குறதுக்காக அவங்க பங்களால சில குளறுபடிகளைப் பண்ணோம். அவன் வந்ததும் மீடியாவோட கவனத்தை இவங்க பக்கம் திருப்பனும்னு **** ஹீரோவோட ஷூட்டிங்க டார்கெட் பண்ணி இந்த டேட்ட பிக்ஸ் பண்ணோம். அப்பறம் உங்க ஸ்டேஷன்ல ப்ளாக் கலர் பேக்ல இது சம்மந்தப்பட்ட எல்லா ஆதாரங்களும் இருக்கு. உங்க நேர்மையும் திறமையும் பார்த்து இந்த எவிடேன்ஸ்ஸ உங்ககிட்ட ஒப்படைக்கிறேன். நீங்க அவங்க எல்லாத்துக்கும் சரியான தண்டனை வாங்கி தருவீங்கனு நம்புறேன்.” இத்துடன் அக்காணொளி முடிவடைந்தது.
அதைப் பார்த்த அபிஜித்திற்கு அப்பெண்ணை வியக்காமல் இருக்கமுடியவில்லை. அவனுக்குத் தெரியும் அவள் அந்த ஆதாரங்களைஸ் சேகரிக்க என்னென்ன கஷ்டங்களை அனுபவித்திருப்பாளென்று.
அவன் உடனே தன் காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு அங்கு அந்த கருப்பு நிற பை இருக்கிறதா என்று உறுதிப்படுத்திக்கொண்டான். பின்பு அக்காணொளிக் காட்சிகளைப் பற்றி கந்தசாமியிடம் விவாதித்து தங்களது விசாரணையை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்று
கலந்துரையாடினர்.
கிளம்பும் சமயம் சுஷ்மிதாவிற்கு தொடர்பு கொண்டு அவளைப் பாராட்ட வேண்டும் என்று நினைத்தான். அவனுக்கு அந்த காணொளி வந்த அலைப்பேசி எண்ணைத் தொடர்பு கொண்டான். ஆனால் அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது. அதை கந்தசாமியிடம் கூறினான். கந்தசாமி உடனே உண்மைச் சுடர் பத்திரிக்கையின் தொலைப்பேசி எண்ணை அழுத்தி அபிஜித்திடம் கொடுத்தார்.
“ஹலோ நான் கொடைக்கானல் இன்ஸ்பெக்டர் அபிஜித் பேசுறேன்.”
“வணக்கம் சார். நான் உண்மைச் சுடரோட இன்–சார்ஜ் மனோஜ் பேசுறேன். இப்போ தான் டிவில உங்க இன்டெர்வியூ பாத்தேன். கங்கிராட்ஸ் சார். உங்க விசாரணை நல்லா அமைய வாழ்த்துக்கள்.”
“தேங்க் யூ சார். நான் உங்களுக்கு கால் பண்ணது மிஸ்.சுஷ்மிதா சுப்ரமணியன் பத்தி பேசத்தான். அவங்க சேகரிச்ச ஆதாரங்கள் தான் இந்த கேஸ்ல ரொம்ப யூஸஃபுல்லா இருக்கப்போகுது. சோ அவங்ககிட்ட தேங்க்ஸ் சொல்லத் தான் கூப்பிட்டேன்.”
“சார் சுஷ்மிதா இப்போ உயிரோட இல்லை. அவங்க இந்த ஆதாரங்களையெல்லாம் கலெக்ட் பண்றதுக்காக அவங்க உயிரையே பணயம் வச்சுருக்காங்க. அவங்க கடைசியா அந்த பிரதீப் கேங்க ஃபாலோ பண்ணத அவங்க கேங்லயிருக்க ஒருத்தன் பாத்துட்டான். அதுக்கப்பறம் சுஷ்மிதா இந்த பிளான எங்ககிட்ட சொல்லி ஒரு வீடியோவ ரெகார்ட் பண்ணங்க. அப்பறம் அவங்ககிட்ட இருந்த ஆதாரங்களையெல்லாம் எங்க கிட்ட கொடுப்பதாகச் சொல்லி அத எடுத்துட்டு வர போனவங்க ஆக்ஸிடெண்ட்ல இறந்துப் போய்ட்டாங்க. அந்த ஆதாரங்களையும் அவங்க இடத்தில காணோம். நாங்க என்னப் பண்றதுன்னு யோசிச்சுட்டு இருந்தப்போ தான் இன்னிக்கு காலைல உங்க இன்டெர்வியூ பாத்தோம். நீங்க அந்த குற்றவாளிகளுக்கு வாங்கி தர தண்டனை தான் அந்த பொண்ணுக்கும் அவங்க அண்ணனுக்கும் கெடைக்கப்போற நியாயம்.”
அபிஜித்திற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. தான் சட்டப்படி ஆவண செய்வதாகக் கூறி தொடர்பைத் துண்டித்தான்.
சுஷ்மிதா ஒரு வாரத்திற்கு முன்பே இறந்துவிட்டாளென்றால் இன்று காலையில் வந்த பெண் யார்?????
இடம்: திண்டுக்கல் **** தனியார் மருத்துவமனை
நேரம்: காலை 9 மணி
தூங்கிக் கொண்டிருக்கும் தன் அண்ணனை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு வெளியில் வந்து அமர்ந்தாள் அவள். அங்கு தொலைக்காட்சியில் செய்திகளில் கொடைக்கானல் பங்களாவில் அபிஜித்திடம் நடந்த நேர்க்கானல் ஒளிப்பரப்பாகிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட அவளின் கண்கள் மின்னின. அவள் அஷ்மிதா சுப்ரமணியன்!!!