Advertisement

அத்தியாயம் : 17
கீழே விழுந்திருந்த யுவியை தூக்கி சக்கர நாற்காலியில் அமர வைத்த யாதவன், “தீரா! நீ இங்க பார்த்துக்கோ நானும் ரோஜாவும் யுவியை டாக்டரிடம் காமிச்சுட்டு வரோம்!” என்றான்.
“நீங்களும் போங்க யதீந்திரன். யாமினி இங்க இருக்கால்ல, எங்களால தான் உங்களுக்கு இந்த நிலைமைன்னு ரொம்ப வருத்தமா இருக்கு. ப்ளீஸ் தயவு செஞ்சு கம்பளைன்ட் வாபஸ் வாங்கிடுங்க. எங்களை நான் பார்த்துக்கிறேன். இது வரைக்கும் செஞ்ச உதவிகளுக்கு எல்லாம் நன்றி!!” என்று கூறினாள் யசோதரா.
“இப்போ எதுவுமே பேச வேண்டாம் யசோதரா. யுவிய டாக்டர் கிட்ட கூட்டிக்கிட்டு போறேன். வந்து பேசிக்கலாம். எந்த முடிவும் எடுத்துடாதீங்க ப்ளீஸ்.!” என்று யசோதராவிடம் அவசரமாக கூறிவிட்டு யாதவன் மற்றும் ரோஜாவுடன் சென்றான் யதீந்திரன்.
யுவி மயக்கம் எல்லாம் அடையவில்லை. அவளின் தலை சுவற்றின் நுனியில் பலமாக மோதியதால்  அடிப்பட்டிருந்தது. இரத்தமும் வழிந்துக்கொண்டிருந்தது. தலையில் அடிப்பட்டிருந்த வலியை விட கேட்ட வார்த்தைகளினால் மனதில் பட்ட அடியே அவளுக்கு வலித்தது. அதை விட தன்னைப் பெற்ற தாயே தன்னை விட்டு சென்றிருக்கிறாள் என்று அறிந்த போது முற்றிலுமாக அவள் உடைந்து தான் போனாள்.
“தீராண்ணா!” என்று அழைத்து யதீந்திரனின் கையைப் பிடித்த யுவராணியின் கண்களில் நீர் வழிந்தது.
“ஷ் யுவி! அழக்கூடாது!” என்றான் யதீந்திரன்.
“ஏண்ணா என் கிட்ட சொல்லல? ரொம்ப வலிக்குதுண்ணா. அடிப்பட்ட இடம் இல்ல. பெத்த அம்மாவே இப்படி என்னை விட்டது தான் வலிக்குது. கால் ஊனமா பிறந்தது என் குத்தமா, என்ன? என்னால எல்லாருக்குமே தொந்தரவு தான். இப்படி ஒரு பிறப்பு எனக்கு இல்லாமலே இருந்திருக்கலாம்.”
“என்ன பேச்சு இது யுவி? கொஞ்சம் அமைதியா இரு. உனக்கு ட்ரீட்மென்ட் முடிஞ்சதுக்கு பிறகு நடந்ததை முழுசா சொல்றேன். இந்த தங்கை மட்டும் பிறக்காம இருந்திருந்தா, உன் அண்ணன் கொலைகாரனாக தான் இருந்திருப்பான். உனக்காக மட்டும் தான் எனக்குள்ள இருந்த கோபத்தை கட்டுப்படுத்திக்கிட்டேன் யுவி.” என்று கூறிய யதீந்திரனை வாஞ்சையாகப் பார்த்தாள் யுவராணி.
“அண்ணா நீ கம்ப்ளைன்ட் வாபஸ் வாங்காதே. யாமினியை உன் கூடவே வச்சு பார்த்துக்கோ. யசோதராவை நம்ம எல்லாரும் பார்த்துக்கலாம். மிஞ்சி மிஞ்சி போனா என் பேரு கெடும் அவ்வளவு தானே! நல்ல பேரை வச்சுக்கிட்டு நான் என்ன செய்ய போறேன்? விடுண்ணா கவலைப்படாத. அந்த கேடு கெட்ட கூட்டத்துக்கு நாம ஒரு முடிவு கட்டலாம்.”
“இது தான் எங்க யுவி!” என்று யுவியின் கையை தட்டிக் குடுத்தான் யாதவன்.
யதீந்திரனும் யுவி மற்றும் யாதவனின் கையின் மேல் கை வைத்து தட்டினான்.
இவர்களையே பார்த்திருந்த ரோஜாவின் விழிகளில் நீர் கோர்த்தது.
“தீராண்ணா, யசோதராவே நம்ம அம்மாவா இருந்திருக்கலாம் இல்ல? இந்த சின்ன வயசிலேயே யாமினியை எப்படி பார்த்துகிறாங்க!” என்று மேலும் ஏதோ பேச முற்பட்டவளை டாக்டரின் வருகை தடுத்தது.
யுவியின் தலையில் காயம் ஆழமாக இருந்ததால், அந்த இடத்தில் தையல் போடப்பட்டது. காலில் ஏற்பட்ட காயத்திற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவளுக்கு முதலுதவி முடிந்ததுமே வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என்று சொல்லியிருந்தார்கள். யுவியின் சிகிச்சைகள் முடிந்து யசோதாவிடம் சொல்லிவிட்டு கிளம்ப முடிவு செய்து யசோதராவின் அறைக்கு சென்றார்கள்.
“இப்போ எப்படி இருக்கு யுவி!” என்று கேட்ட யாமினிக்கு மௌனமாக ‘இப்பொழுது பரவாயில்லை’ என்பதாக தலையை ஆட்டினாள் யுவராணி.
யுவராணி யசோதராவிடம் தன்னுடைய சக்கர நாற்காலியை நகர்த்தி சென்றாள்.
யசோதராவும் யுவியின் நலம் விசாரித்தாள். யுவியும் நன்றாக இருப்பதாக தலையை ஆட்டி யசோதராவின் கையைப் பற்றிக்கொண்டாள்.
“யசோ! யாமியை பார்க்கும் போது பொறாமையா இருக்கு. அக்கா ரூபத்துல ஒரு அம்மா. யாமி ரொம்ப கொடுத்துவச்சவ.!” என்று கண் கலங்கினாள் யுவராணி.
யசோதரா பதிலேதும் பேசாமல் யுவியின் கையை ஆதரவாக தடவினாள்.
“ஏன் யதீந்திரன் உங்க ஆசிரம நிர்வாகி அவங்க மேல கேஸ் போடல? போட்டு இருந்தா இன்னிக்கு வந்து பொண்ணுன்னு உரிமை கொண்டாடுவாங்களா?” என்றாள் யசோதரா.
“அது உரிமை இல்லை யசோ, வெளி வேஷம்.!” என்று சலித்துக்கொண்டாள் யுவராணி.
யுவராணியின் கோபம், வருத்தம், வெறுப்பு, பெற்றவளிடம் சொந்தம் கொண்டாடும் ஆசை என்று எல்லாம் கலந்த அவளின் மனநிலையை அங்கிருந்த அனைவருமே உணர்ந்துக்கொண்டார்கள்.
பெற்றவர்களே இல்லை என்று நினைத்திருந்தவளுக்கு, பெற்றவளே கண் முன்னே வந்து நின்றும் கூட அவரின் அன்பு கிடைக்காதது அவளுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அன்பாக இருப்பது போல் நடித்தாவது இருந்திருக்கலாம் என்ற யோசனையே அவளின் அடி மனதில் ஓடிக்கொண்டிருந்தது. இன்று தான் தன்னை அநாதையாக உணர்ந்தாள். இல்லத்தில் வளர்ந்தபோது கூட அவள் தன்னை அநாதையாக உணர்ந்ததில்லை. ஆனால் பெற்ற அன்னை அருகில் இருந்தும் கூட அவரின் கண் பார்வைக் கூட தன் மேல் விழாததை நினைத்து நினைத்து அவள் மிகவும் மனதொடிந்து தான் போனாள்.
“தாத்தா தான் யசோதரா ஆசிரம நிர்வாகி கிட்ட நடவடிக்கை எடுக்க வேண்டாம்ன்னு சொல்லிட்டார்.” என்ற யதீந்திரனின் குரலில் தன்னுள் மூழ்கியிருந்த யுவராணி, தன் அண்ணன் கூற வருவதை கவனிக்கலானாள்.
“எங்க தாத்தா ஆசிரம தலைவர் கிட்ட சொன்னதை சொல்லி சொல்லி தான் என்னை வளர்த்தார் எங்க ஆசிரம தலைவர். அது தான் என்னுடைய கோபத்தை வன்மமா வளரவிடலை. வன்மமா மாறியிருந்துச்சுன்னா இன்னிக்கு ஒரு கொலைகாரனா கம்பி தான் எண்ணிட்டு இருந்திருப்பேன்.” என்றவன் தன் தாத்தா சொன்னதை அனைவரிடமும் பகிர்ந்துக்கொண்டான்.
‘உங்க ஆசிரமத்துல இந்த குழந்தைங்க வளர்ந்துச்சுன்னா அதுக வயிறு வாடாம இருக்கும். பசிக்கு சோறு கூட பொங்கி போடமாட்டா எம்பொண்ணு. பசிக்கு சோறு கிடைக்குதோ இல்லையோ பிள்ளைங்க ஒழுக்கமா வளரனும். எந்த சென்மத்துல என்ன பாவம் பண்ணினேனோ தெரியல. அந்த பாவங்களோட தண்டனை தான் எனக்கு என் பொண்ணு ரூபத்துல கிடைச்சிருக்கு. எம்பொண்ணு தேடப் போயிருக்கிறவனும் அவளை மாதிரியே கேடுக்கெட்டவனா தான் வருவான். அவங்க கிட்ட பிள்ளைங்க வளர்ந்தா,  யதீந்திரன் சாப்பாடுக்கு கூட வழியில்லாம ஒழுக்கமில்லாம சமூக விரோதியா தான் வளருவான்.
அதேப்போல  கால் முடியாத இந்த குழந்தையை பிச்சை எடுக்க விட்டாலும் விட்டுடுவா என் பொண்ணு. நான் செஞ்ச பாவத்துனால இந்த புள்ளைங்க வாழ்வு கெட வேண்டாமய்யா!! இந்த குருத்துங்க ரெண்டும் இந்த உலகத்துல நல்லா இருக்கணும் அய்யா!! பணங்காச விட இந்த பிள்ளைகளின் எதிர்காலம் நல்லா இருக்கனும்ன்னு தான் என் பொண்ணுக்கிட்ட இருக்கிற சொத்துக்களை கூட நான் விட்டுக்கொடுத்துட்டேன். என் பொண்ணு அவ எக்கேடோ கெட்டு போறா!! இந்த குருத்துகளை நீங்க தான் அய்யா நல்லா ஒழுக்கமா வளர்க்கணும்!’ என்று தாத்தா சொன்னதை பகிர்ந்துக்கொண்டான் யதீந்திரன்.      
“தாத்தாக்கு சொத்துக்களை திரும்ப பெறுவதோ இல்லை அவர்கள் மேல் வழக்கு தொடர்ந்து எங்களை அந்த லேடியுடன் இணைக்கவோ பிடித்தமே இல்லை யசோதரா. எங்களின் வளர்ப்பு ஒழுக்கமாக இருக்கவேண்டும் என்று தான் விரும்பினார். ஆசிரம நிர்வாகிக்கு அதில் இருந்த நியாயம் புரிந்ததால் எந்தவித வழக்கும் தொடரவில்லை.”
“புரியுது யதீந்திரன்.!” என்ற யசோதரா தொடர்ந்து, “யுவியை வீட்டுக்கு கூட்டி போங்க. ரெஸ்ட் எடுக்கட்டும். நாளைக்கு கேஸ் வாபஸ் வாங்கிடுங்க. பிளீஸ் எங்க ப்ரச்சினையை இனிமே நானே பார்த்துக்கிறேன். இதுவரைக்கும் செஞ்ச எல்லா உதவிகளுக்கும் ரொம்ப நன்றி. என் தங்கையைப் பார்த்துக்கிட்டதுக்கும் நன்றி. இப்போ எல்லோருமே கிளாம்புங்க. இனிமே யாருமே இங்க வரவேண்டாம்.” என்றபடியே அவர்களைப் பார்த்து கையைப் கூப்பினாள் யசோதரா.
யசோதரா அவ்வாறு கூறியதும் யதீந்திரன் யாமினியின் முகத்தை தான் பார்த்தான். அவளின் முகத்தில் தெரிந்த பயம் கலந்த விரக்தியே சொன்னது ‘அக்காவின் முடிவு தான் இறுதி முடிவு’ என்பது போல்.
அவளிடம் தன் காதலின் அடையாளத்தை தேடினான்.
யாமினிக்கு யதீந்திரன்  காதலை சொன்னது நினைவில் இருந்தால் தானே அதற்கான அடையாளத்தைகொடுக்க முடியும். தற்போது அவளுக்கிருந்தஒரே சிந்தனை, சுஜி பிரச்சினையில் இருந்து முழுமையாக விடு பெற வேண்டும் என்பதே!!
யசோதாரா மட்டுமே அதை செய்வாள், அவளால் மட்டுமே செய்ய முடியும் என்று யாமினி உறுதியாக நம்பினாள்.
எதிர்பார்ப்பு என்ற ஒன்று இருந்தால் ஏமாற்றம் வருவதும் இயற்கை தானே!! இங்கு யதீந்திரனின் யாமினி மீதான எதிர்பார்ப்பு அவனுக்கு ஏமாற்றத்தையே பரிசளித்தது.
அவனின் ஏமாற்றத்தை மறைத்து யசோதராவிடம் பேச ஆரம்பிக்கும் முன்னே யுவராணி குறுக்கிட்டிருந்தாள்.
“யசோதரா நீங்க என் பேர் கெட கூடாதுன்னு தானே நினைக்கறீங்க? என்னை பற்றி என் குடும்பத்தாருக்கு தெரிந்தால் போதும். என் குடும்பத்துல நீங்களும் அடக்கம். என் அண்ணன் மனைவியின் அக்கா என்ற முறையில் நீங்களும் எங்கள் சொந்தம் தான்!!” என்ற யுவராணி அண்ணன் மீதான காதலை யாமினியிடம் தேடினாள்.
யதீந்திரனைப் போல யுவராணிக்கும் ஏமாற்றத்தையே பரிசளித்தாள் யாமினி. மேற்கொண்டு,
“யதுக்கா, அப்போ யுவி நமக்கு சொந்தமா?” என்று கேட்டு அனைவரையும் ஒருநொடி அதிர வைத்தாள் யாமினி.
யுவராணி கேலியாக யதீந்திரனைப் பார்த்து புன்னகைத்தாள். யாதவனும் ரோஜாவும் ஒருவருக்கொருவர் பார்த்து லேசாக முறுவலித்துக்கொண்டனர்.
யசோதராவிற்கு தங்கையின் மனமுதிர்ச்சி சற்று அதிக கவலையையே கொடுத்தாலும், யாமினியின் குழந்தைத்தனத்தில் தன்னையும் அறியாமல், யதீந்திரனைப் பார்த்து கேலியாக புன்னகைத்தாள்.
யசோதராவின் புன்னகை யதீந்திரனுக்கு சற்றே வெட்கத்தை  தந்தாலும், யாமினியை தன்னிடம் சீக்கிரமே யசோதரா சேர்ப்பாள் என்ற நம்பிக்கையையும் சேர்த்தே கொடுத்தது.
அந்த இடத்தை சுற்றியிருந்த இறுக்கத்தை தன் கேள்வியின் மூலம் தகர்த்தியிருப்பதை அறியாத யாமினி, “சொல்லு யதுக்கா!! என்ன சொந்தம் இவங்க நமக்கு?” என்று கேட்டுக்கொண்டிருந்தாள்.
“இதைப்பத்தி பிறகு சொல்றேன் யாமிம்மா!!” என்ற யசோதரா யுவியிடம் திரும்பி, “எனக்கு யாமினி மாதிரி தான் நீங்களும் யுவி. இந்த பிரச்சினையை நானே பார்த்துக்கிறேன். ப்ளீஸ் வீட்டுக்கு போய் ரெஸ்ட் எடுங்க. உங்க எல்லோரோட உதவிகளுக்கும் நன்றி. ப்ளீஸ் தயவுசெஞ்சு இதுக்கு மேல அந்த கூட்டத்துக்கு கூட பிரச்சினையை வளர்த்துக்காதீங்க!!. நன்றி!!!” என்று கைகூப்பி விடை கொடுக்க முற்பட்டாள் யசோதரா.
“கண்டிப்பா நீங்க எனக்கு சகோதரி இல்லை யசோதரா. நமக்குள்ள சகோதர உறவு முறையே வேண்டாம். அது நல்லாவும் இருக்காது யசோ!!வேணும்ன்னா உங்க அம்மாவை நாங்க அத்தையா ஏத்துக்கறோம். நீங்க ரெண்டு பேரும் எங்க அத்தைப் பொண்ணுங்க. சரியா? இப்போ நாம எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு, அதனால இந்த பிரச்சினையே நாம எல்லோரும் சேர்ந்தே ஒரு முடிவுக்கு கொண்டுவரலாம்.” என்ற யுவராணியைப் பார்த்து யசோதரா தலையில் கைவைத்தாள்.
“இல்லை யுவி நான் சொல்றதை கொஞ்சம் புரிஞ்சுக்க முய….” என்று யசோதரா சொல்லிக்கொண்டிருக்கும்போதே யுவராணி அவளின் தலையில் இருந்த கட்டை வேகமாக பிரித்து அதில் போடப்பட்டிருந்த தையல்களையும் பிய்த்து எடுத்தாள்.
“நான் உயிரோட இருந்தா தானே யசோதரா என் பேர் கெட்டு போகும்!!” என்று ஆவேசமாக கூறிய யுவி, “இங்க பாருங்க நாம எல்லாரும் சேர்ந்து தான் இந்த பிரச்சினையை முடிக்கணும் யசோ!! அதை நீ மீறினா நான் என்னையே முடிச்சுக்குவேன்!!” என்ற யுவியின் கைகளை தலையிலிருந்து பிரித்தெடுக்க முயற்சிக்கொண்டிருந்தான் யதீந்திரன்.
“விடுங்க தீராண்ணா..!! நான் பொறந்ததே வேஸ்ட்.. பெத்த அம்மாவுக்கே பிடிக்கல. இப்போ உங்களோட  வாழ்க்கையை கெடுக்கறேன். எதுக்கு நான் உயிரோட இருக்கணும்?”
“ஷ்..ஷு!! என்ன பேச்சு யுவிமா இது?” என்று கண்டித்தபடியே அவளின் கைகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டான். யுவராணி திமிறியதில் அவளின் அடிப்பட்ட கால் யசோதரா படுத்திருந்த கட்டிலில் வேகமாக இடித்து, இரத்தம் பெருகியது.
இவர்களின் சத்தத்தில் அங்கிருக்கும் செவிலியர் உள்ளே வந்தார். “என்னம்மா இங்க சத்தம்? இது ஹாஸ்பிடல். கொஞ்சம் அமைதியா இருங்க!!” என்றவர் யுவராணிக்கு முதலுதவி செய்ய துவங்கினார்.
யுவராணி மயங்கி சரியவும் அவளை செவிலியர் உதவியுடன் மருத்துவரிடம் அழைத்து சென்றனர்.
மருத்துவரின் ஆலோசனைப்படி யுவராணியை அந்த மருத்துவமனையிலேயே அட்மிட் செய்தனர்.
யசோதராவின் அறைக்கு அருகிலேயே இருந்த அறையே யுவராணிக்கு தரப்பட்டதால், நோயாளிகள் இருவரையும் மற்றவர்கள் நன்றாகவே கவனித்துக் கொள்ள முடிந்தது.
மருத்துவமனையிலேயே ஒருவாரம் கழிந்தது யுவராணிக்கு.
யசோதரா அதற்குள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு யதீந்திரனின் வீட்டிற்கு யாமினியுடன் சென்றிருந்தாள்.
யுவராணியின் கோரிக்கைக்காக மட்டுமே சகோதரிகள் இருவரும் அங்கே தங்கினர்.
ஓரிரு நாட்களில் யுவராணிமருத்துவமனையிலிருந்து வரும்போது, யசோதராவை அவளின் தேர்வுகளுக்காக யாதவன் அழைத்து செல்ல, யாமினியை கல்லூரிக்கு அழைத்து சென்றிருந்தான் யதீந்திரன்..
ரோஜாவும், அவளைப் பெற்றவர்களும் யுவராணியை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
யாமினியை கல்லூரியில் விட்ட யதீந்திரன் அடுத்து நேராக சென்றது யுவராணியை பெற்றவளின் வீட்டிற்கு தான்.
கோபமாக உள்ளே சென்று அங்கிருந்த அழைப்புமணியை கையெடுக்காமல் அடிக்க ஆரம்பித்தான்.

Advertisement