Advertisement

குடை 6:
அஸ்வினியும், விகாசும் பேசிக்கொண்டே வர, மித்ரன் தனிமையாய் உணர்ந்தான். அவன் தேடி வந்த தனிமைதான். ஆனால் இப்போது வேப்பங்காயாய் கசந்தது.
அவ்வளவு திடமானவன், பாட்டியின் மீது வைத்த பாசத்தின் பயனாக பைத்தியமாக திரிகின்றான். அதை அவன் உணர்ந்து கொண்ட தருணம் தான் மிகவும் கொடுமையானது.
அவனின் நினைவுகளில்…
அவன் அலுவலகத்தில் புயலென நுழைந்தாள் ஜெனிபர். அவன் ஒரு முக்கியமான மீட்டிங்கை முடித்துக் கொண்டு வெளியே வர, அங்கு வந்து ஜெனியைக் கண்டு,
“ஹேய் ஜெனி..! என்ன இன்போர்ம் பண்ணாம வந்திருக்க…? எனி பிராப்ளம்..?” என்றான்.
அவனை முறைத்தவள், அவனிடம் ஏதும் பேசாமல் அவன் அறைக்குள் சென்று அமர,
“என்ன ஆச்சு இவளுக்கு.?” என்று யோசித்தபடி அவனும் அறைக்குள் நுழைந்தான்.
“ஹேய்..! வாட்ஸ் யுவர் பிராப்ளம்..?” என்றான்.
“பேசாத ஜீவா..! நான் உன்மேல செம்ம கோவத்துல இருக்கேன்..!” என்றாள்.
“ஹேய்..! நான் என்ன பண்ணினேன்..?” என்றான்.
“நான் மார்னிங் இருந்து எத்தனை டைம் உனக்கு கால் பண்றது..? உனக்கு அட்டென் பண்ணத்தான் டைம் இல்லைன்னா, ஜஸ்ட் பிசின்னு ஒரு மெசேஜ் தட்டிவிடக் கூடவா நேரமில்லை..” என்றாள்.
“சாரி ஜெனி..! நான் முக்கியமான மீட்டிங்ல இருந்தேன்..!”என்றான் வருந்தும் குரலில்.
“ரொம்ப முக்கியம்..!”
“மீட்டிங் ரொம்ப முக்கியம் தான்..!” என்றான் சிரிக்காமல்.
“என்ன ஜோக்கா..?” என்றாள்.
“நீ தான் சிரிக்கலையே..?” என்றான்.
“என்னை இன்னைக்கு ஒருத்தன் ரொம்ப டீஸ் பண்ணிட்டான் ஜீவா. அவனைத் தூக்கணும்..!” என்றாள் ஜெனி.
“தூக்கிடுவோம்..! ஆள் மட்டும் யாருன்னு சொல்லு..!” என்றான்.
“யாருக்குத் தெரியும்..?”
“அடிப்பாவி ஆள் யாருன்னு தெரியாம தான் இவ்வளவு நேரம் பில்டப் குடுத்தியா..?” என்றான்.
“தெரிஞ்சிருந்தா நானே தூக்கியிருக்க மாட்டேனா..? உன்கிட்ட ஹெல்ப் கேட்பேனா..?” என்று அவள் பேசிக் கொண்டிருக்க, அப்போது அங்கு வந்தார் நேசன்.
“ஹாய் அங்கிள்..!” என்றாள்.
“ஹாய்மா ஜெனி..! ஹவ் ஆர் யு..? ஹவ் ஸ் யுவர் டாட் அண்ட் மாம்..?” என்றார்.
“போத் ஆர் பைன் அங்கிள்..!” என்றாள்.
“ஜீவா, இந்த எக்ஸ்போர்ட் ஆர்டர் நமக்கே கிடைச்சுடுச்சு..! எல்லாத்துக்கும் உன்னோட பெர்பார்மன்ஸ் தான் காரணம்..!” என்று அவர் மகிழ்ச்சியுடன் சொல்ல,
“தேங்க்யு டாட்..” என்றவனின் முகத்திலும் சந்தோசம்.
“ஜீவா, அப்படியே பாட்டி சொன்னதையும் யோசிக்கலாமே..? அவங்க உன்னோட நல்லதுக்கு தான் சொல்லுவாங்க..!” என்றார் நேசன்.
ஜெனி அவர்கள் இருவரையும் புரியாமல் பார்க்க,
“ப்ளீஸ் டாட்..! அந்த ஒரு விஷயத்தை மட்டும் என்னால செய்யவே முடியாது.அதுல நான் உறுதியா இருக்கேன்.நான் தான் ஏற்கனவே ஒரு பெண்ணை விரும்புறதா சொன்னேனே..!” என்றான்.
நேசன், ஜெனியை சந்தேகமாகப் பார்க்க,
“ஐயோ அங்கிள்..! என்னைய எதுக்கு டவுட்டா பார்க்குறிங்க..? எனக்கு, இவனுக்கு பிரண்டா இருக்குற கொடுமையவே தாங்க முடியலை. இதுல அடுத்த போஸ்ட்டிங்கா..! வாய்ப்பே இல்லை. கண்டிப்பா அது நான் இல்லை..” என்று அவள் பயந்து போய் சொன்ன விதத்தில் அவருக்கு லேசாக சிரிப்பு கூட வந்தது.
“ஏன்ம்மா என் பையனைப் பார்த்தா அவ்வளவு பயமா உனக்கு..?” என்றார்.
“எனக்கு ஜீவாவைப் பார்த்து பயம் இல்லை அங்கிள். ஜீவா கிராணியைப் பார்த்துதான். அவங்க ஒரு டெரர் பீஸ், நான் ஒரு ஜாலி பீஸ்…சுத்தமா செட் ஆகாது..!” என்றாள்.
“இப்ப யாரு உன்னைய மேரேஜ் பண்ணிக்கிறதா சொன்னாங்க..?” என்றான் மித்ரன் கடுப்புடன்.
“அதானே..! நீ என் நண்பன்டா..அதெப்படி சாத்தியம் ஆகும்..?” என்றாள் ஜெனி.
“சரி சொல்லு ஜீவா. உன் மனசுல இருக்குற அந்த பொண்ணு யாருன்னு சொல்லு. நான் பாட்டிகிட்ட பேசுறேன்..!” என்றார்.
“டாட், முதல்ல ஒரு விஷயம் நல்லா புரிஞ்சுக்கங்க..! யார்கிட்டயும் எடுத்து சொல்லி,கெஞ்சி, எனக்கான வாழ்க்கையை அமைக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.எனக்கு பிடிச்சா மட்டும் தான் நான் செய்வேன். நான் தான் ஒரு பொண்ணை காதலிக்கிறேன்னு சொன்னேன்ல. நேரம் வரும் போது நானே சொல்றேன். அதுவரைக்கும் என்னைக் கட்டாயப் படுத்தாதிங்க..!” என்றான்.
“உன்னோட வாழ்க்கையில ஒரு அப்பாவா நான் தலையிடக் கூடாதா..?” என்றார்.
“ஒரு அப்பாவா நீங்க தலையிடலாம். ஆனா உங்க விருப்பத்தை என் மேல திணிக்காதிங்க..! அதைத்தான் சொல்றேன். எனக்கான மனைவியை நான் தான் தேர்ந்தெடுப்பேன்..!” என்றான்.
“அதுக்கு மேல உன்விருப்பம் ஜீவா. ஆனா நான் எப்பவும் உன் விருப்பத்துக்கு மாறா எதுவும் செஞ்சதில்லை. அது உனக்குப் புரியும்ன்னு நினைக்கிறேன்..!” என்றார்.
“கண்டிப்பா டாட். அதே மாதிரி நானும் எந்த நேரத்திலும் தப்பான ஒரு டிசிஷன் எடுத்ததில்லை. இது உங்களுக்கும் புரியும்ன்னு நினைக்கிறேன்..!” என்று அவரின் மகன் என்பதை நிருபித்தான்.
அவர் சன்னமாக சிரித்துக் கொண்டே செல்ல,
“என்னடா நடக்குது இங்க..? என்ன பிரச்சனை..? எதுக்கு நேத்து அன் டைம்ல கால் பண்ணி, உடனே பார்க்கனும்ன்னு சொன்ன..?” என்றாள்.
“அதுவா..! பாட்டி எனக்குப் பொண்ணுப் பார்த்திருக்காங்க..!” என்றான்.
“வாவ்..! சூப்பர்..! பொண்ணு பேரு என்ன..? மும்பையா இல்லை தமிழ்நாடா..?” என்றாள்.
“என்ன கிண்டலா..?” என்றான்.
“இல்லை நக்கல். நீதான் ஏற்கனவே ஒரு பிகர் கூட கடலை போட்டுட்டு இருக்கியே..?” என்றாள்.
“ஜெனி எத்தனை தடவை சொல்லியிருக்கேன்..! அது கடலை இல்லை காதல்..!” என்றான்.
“சரி சரி..! காதல் தான்..! சரி எப்ப லவ்வ சொல்ல போற..? அதை முதல்ல சொல்லு..!” என்றாள்.
“கூடிய சீக்கிரம் சொல்லிடுவேன்..!” என்றான் தீவிரமாய்.
“பார்த்து ஜீவா..! உன்னை விட உன் பாட்டி ரொம்ப பாஸ்ட். நீ காதலை சொல்றதுக்குள்ள, அவங்க உனக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணிடுவாங்க..!” என்றாள்.
அவளை முறைத்தவன்..”அப்படி நடக்க ஓரு நாளும் விடமாட்டான் இந்த மித்ரன், ஜீவ மித்ரன்..” என்றான்.
“என்ன சொல்லு ஜீவா, நீ பேரை சொல்ற அந்த ஸ்டைலே தனிதான். நான் மட்டும் உனக்கு பிரண்டா இல்லாம இருந்திருந்தேன், நானே உன்னை லவ் பண்ணிருப்பேன்..!’ என்றாள்.
“வேண்டாம் சாமி..! அந்த கொடுமை மட்டும் இந்த பூமியில நடக்கவே வேண்டாம்..” என்றான்.
“உனக்கு எங்க என்னோட அருமை தெரிய போகுது..? என்னோட வேல்யுவே தனி..” என்று அவள் சட்டைக் காலரைத் தூக்கி விட…
“சரிமா…! சரண்டர்..” என்று அவளிடம் சரண்டர் ஆனான் ஜீவ மித்ரன்.
ஜெனிபர்- அவனுக்கு உயிருக்கு உயிரான தோழி. அவளுடைய அப்பா இவர்களுக்கு போட்டி கம்பெனி. ஆனால் இவர்களுக்குள் போட்டி இல்லை. நல்ல புரிதலுடன் கூடிய நட்பு மட்டுமே இருந்தது. ராணியம்மாளுக்கு இவளைக் கண்டாலே கொஞ்சம் ஆகாது. எவ்வளவு வசதியாய் இருந்த போதும்…அவர் சம்பிரதாயங்களில் ஊறிப் போனவர். இவள் வேறு மதம் என்பதே அவருடைய ஒதுக்கத்துக்குக் காரணம்.
அவரைப் பற்றி எல்லாம் ஜெனிபர் ஒரு நாளும் கவலைப் பட்டதில்லை. அவள் எப்போதும் போல் மித்ரனின் வீட்டிற்கு போவாள், வருவாள். மித்ரனின் தோழி என்பதால் ராணிப்பாட்டியும் பொறுத்துக் கொண்டிருந்தார்.
“மித்ரன் சார்..! மித்ரன் சார்..!” என்று அவனை உலுக்கினாள் அஸ்வினி.
“ன்காம்..! சொல்லு அஸ்வினி..!” என்றான்.
“என்ன யோசனை..!” என்றாள்.
“ரெண்டு பெரும் பேசி முடிச்சுட்டிங்களா..?” என்றான் அவளின் கேள்விக்கு பதில் சொல்லாமல்.
“ஆமா சார்..! ரொம்ப நாள் ஆயிடுச்சு இல்லையா..? அதான் நிறைய விஷயங்களைப் பேசிட்டு இருந்தோம். அந்த கேப்ல நீங்க எங்கயோ போயிட்டு வந்துட்டிங்க..!” என்று அஸ்வினி கிண்டல் பண்ண, அவளின் கிண்டல் அவனுக்கு ருசிக்கவில்லை போலும்.
“நீங்க ரெண்டு பெரும் பேச ஆரம்பிச்சா, பக்கத்துல ஒருத்தன் இருக்குறதே உங்க நினைப்புல இல்லை…” என்றான்.
“சாரி சார்..! ஒரே ஸ்கூல்ன்னு சொன்ன உடனே ஒரு ஆர்வம். தப்பா எடுத்துக்காதிங்க..!” என்றான் விகாஸ்.
“இதுல நான் தப்பா எடுத்துக்க என்ன இருக்கு விகாஸ். நாம யாரு..? ஜஸ்ட் ட்ரெயின்ல மீட் பண்ணின பீப்பிள். இதுக்கு மேல என்ன எதிர்பார்க்க முடியும்..?” என்றன மித்ரன்.
“என்ன மித்ரன் சார்..? நீங்க இன்னும் கோபமா இருக்குற மாதிரியே இருக்கே. ஏதோ இப்பதான் கொஞ்சம் பிரண்ட்லியா பேசுனிங்க..அதுக்கும் நாங்களே ஆப்பு வச்சிக்கிட்டோமா..?” என்றாள் அஸ்வினி.
“நோ..நோ அப்படி எல்லாம் இல்லை..” என்றான் மித்ரன்.
“உங்க சொந்த ஊரே மும்பையா சார்..!” என்றான் விகாஸ்.
“சொந்த ஊர் சென்னை தான். பிஸ்னஸ்க்காக மும்பைலையே செட்டில் ஆகியாச்சு..!” என்றான்.
“ஹோ சூப்பர் சார்..! நீங்க ஹிந்தி பேசுன விதத்துலையே தெரிஞ்சுகிட்டேன்… நீங்க ஒரு மும்பை வாசின்னு..!” என்று அஸ்வினி சொல்ல,
“ஹிந்தி பேச மும்பைவாசியா இருக்கனும்ன்னு அவசியம் இல்லை.கொஞ்சம் மூளை இருந்தாலே போதும்..!” என்றான்.
“எதுக்கு சார் என்னை இப்படி வாரிவிடுறிங்க..?” என்று அஸ்வினி சிரிக்க, செல்லில் எதையோ பார்த்துக் கொண்டிருந்த விகாஸ்….
“சோ சேட்..” என்றான்.
“என்னாச்சு..?” என்றாள் அஸ்வினி.
“நீ சொன்னியே…அந்த ஜேஎம் கம்பெனி..!” என்று விகாஸ் இழுக்க, அவனின் வார்த்தையில் மித்ரன் கவனிக்க,
“ஆமா…! அந்த கம்பெனிக்கு என்ன..? எவ்வளவு பெரிய கம்பெனி..?” என்று வாயைப் பிளந்தாள் அஸ்வினி.
‘அந்த கம்பெனியோட தேர்ட்டி பெர்சன்ட் ஷேர்ஸ் அந்த கம்பெனி எம்டியோட மனைவிக்கு குடுத்துட்டாங்களாம்…!” என்றான்.
“உனக்கு எப்படி தெரியும்..?” என்றாள்.
“ம்ம்..! இங்க பாரு நியூஸ் வந்திருக்கு..!” என்றான்.
“சோ வாட்…! மனைவிக்கு குடுக்குறதுக்கு என்ன..?” என்றாள் அஸ்வினி.
“அவங்க குடுக்கலை. அவங்க மனைவியா கேஸ் போட்டு வாங்கியிருக்காங்க..! அதேமாதிரி அவங்க முன்னால் மனைவி.இப்போ இல்லை..” என்றான்.
“அப்படின்னா..?”
“அப்படின்னா…! அவங்க ரெண்டு பேருக்கும் டிவோர்ஸ் ஆகிடுச்சாம்..!” என்றான்.
“பொம்பளைங்கன்னாளே ஆம்பிள்ளைங்களுக்கு கிள்ளுக் கீரைன்னு மனசுல நினைப்பு. கல்யாணம் பண்ணிட்டு என்ன கொடுமை பண்ணினானோ..! அதான் அவ தூக்கிப் போட்டுட்டு போயிருப்பா…இதுல தேர்ட்டி பர்சன்ட் ஷேர்ஸ்  என்ன? பிப்ட்டி பெர்சன்ட்டே குடுக்கலாம்..!” என்றாள்.
“உனக்குத் தெரியாத விஷயத்துல, உனக்குத் தெரியாத விஷயத்தைப் பத்தி கருத்து சொல்லாத..?” என்றான் மித்ரன் கோபமாய்.
“என்ன சார்..? இது ஒரு பொதுவான கருத்து. இதைக் கூட சொல்லக் கூடாதா..?” என்றாள்.
“சொல்லக் கூடாது..! யாரோட விஷயத்தையும் தெரியாம பேசுறது முதல் தப்பு. அப்படி பேசுறப்போ அவங்களை நீயா கற்பனை பண்ணிக்கிட்டு விமர்சனம் பண்றது இரண்டாவது தப்பு..” என்றான்.
“ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணி டிவோர்ஸ் பண்றது தப்பில்லையா..?” என்றாள்.
“யார் சொன்னா..? அந்த தப்பு பொண்ணு மேல கூட இருக்கலாம் இல்லையா..?” என்றான் மித்ரன்.
“இருக்கலாம் தான்…! அதுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்..?” என்றாள்.
“அப்போ வாயை மூடு..!” என்று எரிந்து விழுந்தான்.
“இதென்ன சார்..! யாரையோ சொன்னா உங்களுக்கு கோபம் வருது..! எல்லாரும் பேசுறது தான..?” என்றாள்.
“அஸ்வினி உன்னை வாயை மூடுன்னு சொன்னேன்..!” என்றான்.
“அஸ்வினி பேசாத…!” என்று சொன்ன விகாஸ், தன் மொபைலின் திரையையும், அருகில் இருந்த மித்ரனையும் மாறி மாறி பார்த்தான். ஆனால் அதையெல்லாம் மித்ரன் கவனிக்கவில்லை. அவனுக்கு உள்ளே தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. எல்லாமே பாட்டியின் செயல் என்று புரிவதற்கு அவனுக்கு சில நிமிடங்கள் ஆகாது.
எப்படியும் அவனை திரும்பி மும்பை வரவைப்பதற்கான முயற்சி என்றும் அவனுக்குத் தெரியும். ஆனால் தன்னுடன் சகஜமாக பழகிக் கொண்டிருந்த விகாஸ் மற்றும் அஸ்வினிக்கு விஷயம் தெரிவதில் அவனுக்கு உடன் பாடு இல்லை.
அவனுடைய வாழ்வில் இது தவிர்க்க முடியாத ஒன்று தான் என்றாலும், இன்று ஏனோ அதை முற்றிலும் தவிர்க்க நினைத்தது மனம். ஏற்கனவே தவித்துக் கொண்டிருந்த அவன் மனம், மேலும் தவிக்க ஆரம்பித்தது.
அஸ்வினி மெதுவாக விகாசின் அருகில் சென்று அமர்ந்ததையோ, விகாஸின் செல்லில் இருந்த அந்த பெண்ணின் புகைப்படத்தைப் பார்த்து அதிர்ந்ததையோ அவன் அறியவில்லை. அந்த அளவிற்கு கோபத்தில் மூழ்கியிருந்தான்.
“இந்த பொண்ணு, நேத்து நைட் இங்க வந்து உட்கார்ந்த அந்த அழகி தான..?” என்று அஸ்வினி மெல்லிய குரலில் கேட்க, விகாசின் தலையும் தானாக ஆடியது. அதில் ஷேவ் செய்து, கம்பீரமாக இருந்த மித்ரனையும், இவனையும் மாறி மாறி பார்த்தனர்.
“சார்…!” என்றாள் அஸ்வினி. குரலில் அத்தனை மரியாதை வந்திருந்தது.
அவன் நிமிரவில்லை.’சார்..!’ என்ற அவளின் மற்றொரு அழைப்பில் நிமிர்ந்தான்.
“என்ன..?” என்றான்.
“இல்லை..நீங்க தான் ஜே எம் கம்பெனியோட எம்டியா..?” என்றாள் கொஞ்சம் அமைதியான குரலில்.
அவளின் கேள்வியில் மித்ரனின் கண்கள் தெறித்து விடும் அளவிற்கு வெளியே தெரிய….
“அதைத் தெரிஞ்சு நீ என்ன பண்ண போற..?” என்றான்.
“இல்லை…இதுல போட்ருக்கு..!” என்று அவள் நியூசைக் காட்ட, செல்லைக் கையில் வைத்திருந்த விகாஸ்க்கு கூட அதிர்ச்சிதான்.அவ்வளவு பெரிய கம்பெனியின் முதலாளி, தங்களுடன் பயணிக்கிறானா..? என்று.
“அதான் விஷயம் தெரிஞ்சிடுச்சு இல்லையா..? அப்பறம் என்ன கேள்வி..?” என்றான் கோபமாய்.
அஸ்வினிக்கும், விகாசிற்கும் ஒன்றும் புரியவில்லை. நேத்து அங்கு வந்த அழகிதான் அவனுடைய மனைவி என்று வீடியோவில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். மித்ரனையும் காட்டியிருந்தார்கள்.
ஆனால் சம்பந்தப்பட்டவன், நேற்று அவன் மனைவியைக் கண்ட போதும், கண்டு கொள்ளாமல் இருந்தான். இப்போது இந்த செய்தியின் போதும் கண்டு கொள்ளாமல் இருக்கிறான். அவ்வளவு பெரிய பணக்காரன் இப்படி சாதரணமாக ரயிலில் வர வேண்டிய அவசியம் என்ன..? அந்த அழகி இங்கு வந்து சென்றதன் நோக்கம் என்ன..? இப்படி எதுவும் தெரியாமல் அவர்கள் முழித்துக் கொண்டு இருக்க,
சம்பந்தப்பட்டவனோ..எதையும் சொல்லாமல் வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வந்தான்.
இந்த செய்திக்கு பிறகு விகாசும், அஸ்வினியும் தன்னிடம் இருந்து கொஞ்சம் விலகுவதாகப் பட்டது மித்ரனுக்கு. இதைத்தானே அவனின் பாட்டியும் நினைத்திருப்பார். அவன் எங்கு சென்றாலும் அவனின் நிலை அனைவருக்கும் தெரிய வேண்டும், அவனைப்பற்றி அனைவருக்கும் தெரிய வேண்டும் என்று எண்ணி தான், இந்த செய்தியை வெளியிட அனுமதித்து இருப்பார் என்று அவனுக்கு நன்றாகத் தெரியும்.
ஆனால் இவ்வளவு நேரம் நன்றாகப் பேசிக் கொண்டு வந்தவர்கள் கூட, ஒதுங்க ஆரம்பித்தது தான் அவனுக்கு மனதிற்குள் மிகுந்த மன உளைச்சலைத் தந்தது.
ரயில் நண்டலூர் ஜங்க்ஷனை நெருங்கிக் கொண்டிருந்தது. மூவரும் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ளவில்லை.மித்ரனாக எதுவும் அவர்களிடம் பகிர்ந்து கொள்ளவில்லை. அவர்களாகவும் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.
“மணி இப்பவே பதினோரு மணி ஆகப் போகுது. எப்படியும் ஈவ்னிங் அஞ்சு மணிக்கெல்லாம் ட்ரெயின் சென்ட்ரல் போய்டும். அதுக்குப் பிறகு நாமளே நினைச்சாலும் இவங்க கூட பேச முடியாது..!” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டிருந்தாள் அஸ்வினி.
“அஸ்வினி உன்னோட மொபைல் நம்பர் தாயேன்..! நான் வீட்டுக்கு போன உடன் அம்மாவைப் பேச சொல்றேன்..!” என்றான் விகாஸ்.
“கண்டிப்பா..! நீ சென்னைல வீட்டுக்கு வந்து அம்மாவை மீட் பண்ணிட்டு போயேன்..!” என்றாள் அஸ்வினியும்.
மருந்துக்கு கூட மித்ரனின் நம்பரைக் கேட்கவும் இல்லை. அவனை வீட்டிற்கு அழைக்கவும் இல்லை. அதுவே மித்ரனுக்கு பெரிய ஏமாற்றம்.
“அவ யாரு உனக்கு..? அவ கூப்பிடலைன்னு நீ ஏன் பீல் பண்ற..?” என்று மனசாட்சி கேட்க,
காரணமே இல்லாமல் மித்ரனின் மனம் கனமாகிக் கொண்டே போனது. அவனின் முகத்தைப் பார்த்த அஸ்வினிக்கு என்ன தோன்றியதோ…
“சார்..! நீங்களும் ஒரு நாள் கண்டிப்பா வீட்டுக்கு வரணும்..!” என்றாள் சம்பிரதாயமாய்.
அவளை ஆழ்ந்து பார்த்தவன்..பதில் ஏதும் பேசாமல் முகத்தைத் திருப்பி வேடிக்கைப் பார்க்க, அஸ்வினிக்கு தான் கஷ்ட்டமாகிப் போனது.
“சாரி சார்..! நீங்க எவ்வளவு பெரிய ஆள். அது தெரியாம உங்களைப் போய் எங்க வீட்டுக்கு எல்லாம்..!” என்று அவள் சொல்லி முடிக்கவில்லை,
“எவ்வளவு பெரிய ஆள்..?” என்றான் கொஞ்சம் உக்கிரத்துடன்.
“சார்..! உங்க கம்பெனிக்கு பக்கத்துல இருந்த கம்பெனில தான் நான் வொர்க் பண்ணேன். நீங்க மும்பைல எவ்வளவு பெரிய ஆள்ன்னு, அங்க இருக்குற எல்லாருக்கும் தெரியும். எங்க நேரம் நாங்க இதுக்கு முன்னாடி உங்களைப் பார்க்காதது தான். ஏதாவது ஏடாகூடமா பேசியிருந்தா சாரி சார்..!” என்றாள்.
“அதான் இப்ப தெரிஞ்சுடுச்சுல்ல..! உங்க வேலையை மட்டும் பாருங்க..!” என்றான் மித்ரன். அவன் முகம் அப்படி இறுகிக் கிடந்தது.
தனது செல்லை எடுத்துக் கொண்டு எழுந்து சென்று விட்டான். சென்ற அவனையே இருவரும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

Advertisement