Advertisement

குடை 23:
அங்கே நேசன், விகாஸ் இருந்த அறைக்கு….தேஜுவை அழைத்து சென்றார்.
“அப்பா..! என்று எழுந்தவன், அவர் பின்னால் வந்த தேஜுவை அப்போது தான் கவனித்தான்.
“ஹேய் தேஜு..எப்ப வந்த..? என்றான்.
“ம்ம்..இப்ப தான்..! என்றாள் முறைத்துக் கொண்டு.
“சுபஷ்வினி எப்படி இருக்காங்க..? என்றான் மரியாதையாய்.
“பாருங்கப்பா..! மரியாதை தூள் பறக்குது.. என்றாள்.
“அப்பதான் சொன்னாங்க..! என்ன இருந்தாலும் அண்ணி முறை ஆகிட்டாங்க இல்ல..! என்றான். அவனை பெருமை பொங்க பார்த்தார் நேசன்.
முதலில், தன்னிடம் நெருங்க மறுத்த மகனா இவன்..? என்ற எண்ணம் இப்போது வரை அவருக்கு உண்டு.
விகாசின் நடவடிக்களில்,ரேகாவின் வளர்ப்பைக் கண்டார் நேசன். விகாஸ் அருகில் இருக்கும் போதெல்லாம், ரேகாவே அருகில் இருப்பதைப் போன்ற பிரம்மை அவருக்கு.
விகாசிற்கும், முதலில் தயக்கமாக இருந்தது. அப்பா என்ற ஒரு பிம்பத்தை அவன் உணர்ந்ததில்லை. முதன் முதலாக உணரும் போது, அது வித்யாசமான உணர்வைக் கொடுத்தது. ஏதோ புதிதாய் யானை பலம் வந்த மாதிரி இருந்தது.
“ஏண்டா நல்லவனே..? ஒரு போன் பண்ண மாட்டியா…? என்றாள்.
நேசன் அவளை ஆச்சர்யமாகப் பார்க்க,
“என்ன அங்கிள் இப்படி பார்க்குறிங்க..? நான் சுபஷ்வினி அளவுக்கு நல்லவ எல்லாம் கிடையாது..? என்றாள் சிரிக்காமல்.
“என்னம்மா சொல்ல வர..? என்றார் சிரிக்காமல்.
“நான் ரொம்ப நல்லவன்னு சொல்ல வரேன்..! என்றாள்.
அவர்கள் சிரிக்க, அப்போது வந்தாள் ஜெனி.
“என்ன விகாஸ்..?முகத்துல பல்ப் எறியுது..? என்றாள் ஜெனி.
“அப்படியெல்லாம் இல்லையே..? என்றான்.
“நம்பிட்டேன்..! என்றவள்,
“நீங்க தமிழ்நாடு போகும் போது, என்னையும் கூட்டிட்டு போறிங்களா..? என்றாள் தேஜுவிடம்.
“கண்டிப்பா..! என்றாள் தேஜு, மகிழ்ச்சியுடன்.
அதே மகிழ்ச்சியுடன் கிளம்பினார்  நேசன். அவருக்கு வேறென்ன வேண்டும். இரண்டு மகன்களும் ஒன்று சேர்ந்து விட்டார்கள்.
ரேகாவைப் பார்த்துவிட்டால், அவருக்குப் போதுமென்று இருந்தது. பொறுப்புகளை மகன்களிடம் ஒப்படைத்து விட்டு, ஓய்வெடுக்கலாம் என்று எண்ணினார்.
சுபஷ்வினியும், மித்ரனும் காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அவள் அமைதியாக வர,
“என்னாச்சு..? என்றான் மித்ரன்.
அவள் கேள்வியாய் அவனைப் பார்க்க,
“இல்ல, அமைதியா வர..அதான் கேட்டேன்..! என்றான்.
“நீங்க என்னை பிடிச்சு தான மேரேஜ் பண்ணிங்க..? என்று இத்தனை நாள் சந்தேகத்தை இப்போது கேட்டாள் அஸ்வினி.
“ஆமா..! ஏன் கேட்குற..? என்றான்.
“நீங்க நடந்துக்கற விதத்தப் பார்த்தா, அப்படித் தெரியலை..! என்றாள்.
“எப்படி நடந்துக்கணும்..? என்றான்.
“ஒரு புருஷனா..? என்றாள்.
“நீ கூடத்தான் ஒரு மனைவியா நடந்துக்கலை. அதுக்காக, நானும் அதே கேள்வியை கேட்கவா..? என்றான்.
“என்ன சொல்ல வரீங்க..? என்றாள்.
“நான் தான் கணவனா எந்த கடமையும் செய்யலை. அதே மாதிரி நீயும் மனைவியா எந்த கடமையையும் செய்யலை..! என்றான்.
“புரியலை..! என்றாள்.
“நான் பேசலை, வைக்கலை… அப்படின்னு அமைதியா தான இருந்த..? என்றான்.
“வேறென்ன செய்யணும்..?
“சண்டை போட்டிருக்கணும். உரிமையா கேட்டிருக்கணும். அந்த உரிமை உனக்கும் தெரியலை. எனக்கும் குடுக்க நீ விரும்பலை..! என்றான்.
“அப்படியெல்லாம் இல்லை..! என்று அவள் கண்கள் கலங்க,
“முதல்ல, எதுக்கெடுத்தாலும் அழுகுறத நிறுத்து. என்கிட்டே என்ன தயக்கம். அப்கோர்ஸ் நமக்குள்ள இன்னும் எந்த அண்டர்ஸ்டேண்டிங்குமே இல்லை தான். ஆனா, புதுசா மேரேஜ் ஆன பீல் இல்லையே..? அது ஏன்னு யோசிச்சியா..?
ஏன்னா, நான் ஏற்கனவே கல்யானமானவன்னு உன் மனசில பதிஞ்சுடுச்சு. அதை மாத்திக்க, நான் கொஞ்சம் டைம் கொடுத்தேன். அவ்வளவுதான். மத்தபடி உன்மேல எனக்கு எந்த கோபமும் இல்லை. இன்பேக்ட் பீலிங்க்ஸ் தான் இருக்கு..! என்றான்.
அவள், அவனை ஆச்சர்யமாகப் பார்த்தாள். அவனைப் பற்றிய பிம்பம், அவள் மனதில் உயர்ந்து கொண்டே போனது.
கார் பீச்சில் சென்று நின்றது.  அந்த பீச்சின் நியாபகங்கள் அவளுக்கு வர, இப்போது கண்ணீர் வரவில்லை. மாறாக, புது விதமான ஓரு ஏகாந்தம்.
அன்று அவனை எட்டி நின்று ரசித்தாள். இன்று அருகில், மிக அருகில். அதுவும் அவளுக்கு உடமைப் பட்டவன்.
அவள் கைகள் தானாக, மித்ரனின் கைகளுக்குள் கோர்த்துக் கொண்டது. அதைக் கண்ட மித்ரனுக்கு, மனதிற்குள் மழைச்சாரல். இதமாகவும் இருந்தது.
அந்த கடற்கரை காற்றில், அவள் துப்பட்டா பறக்க, அந்த சிலுசிலுப்பை ரசித்துக் கொண்டிருந்தாள்.
“எனக்கு ஒன்னு சொல்லணும்..! என்றாள்.
“என்ன..? என்றான்.
“இதுக்கு முன்னாடி, இதே பீச்ல நான் உங்களைப் பார்த்திருக்கேன்..! என்றாள்.
அவனுக்கு பழைய செய்தி என்பதைப் போல் நின்றிருந்தான். ஆனால் அவள் அதை கவனிக்கவில்லை. அவள் போக்கில் பேசிக் கொண்டிருந்தாள். அவன், பேசும் அவள் உதடுகளைத் தான் கவனித்துக் கொண்டிருந்தான். அவள் பேசிய எதுவும் காதில் விழ வில்லை.
ஒரு நிலைக்கு மேல் தாங்க முடியாதவன், அவளை இழுத்து, பேசிக் கொண்டிருந்த இதழ்களை சிறை செய்தான். சுற்றம் மறந்து, சுயம் மறந்து, அவர்கள் இருவரும் வேறு உலகில் இருக்க, அவனின் இதழ் முத்தத்தில், தன்னைத் தொலைத்து, அவனுள் கரைந்து கொண்டிருந்தாள். காலைத் தொட்ட அலையின் பேரிரைச்சலில், நினைவு திரும்பி, அவளை விட்டான் மித்ரன்.
அவளை தோளோடு அணைத்தபடி கடலைப் பார்த்தவன்,
“என்னன்னு தெரியலை..? இந்த முப்பது நாளும், உன்னோட முகம் மட்டும் தான் என் மனசுக்குள்ள ஓடுது. உன்னைத்தான் அதிகம் நினைக்கிறேன். இதுக்கு முன்னாடி எனக்கு காதல் பீலீங் வந்ததில்லை. ஆனா அப்படித்தான் மேரேஜ் பண்ணனும்ன்னு இருந்தேன். பட், முடியலை. என்னோட வாழ்க்கை எங்கோ போய், எப்படியோ வளைந்து, கடைசியா உன்கிட்ட வந்து நிற்குது.
சின்ன வயசுல, நாம கணவன், மனைவியா நடிச்சிருக்கோம். இப்போ நிஜத்துலயும் கணவன்,மனைவி ஆகிட்டோம்.அதோட தாக்கம் என் மனசுல இருந்திருக்கணும். அதான் ட்ரெயின்ல தேஜஸ்வினியைப் பார்த்தப்ப கூட, எங்கயோ பார்த்த மாதிரியே இருந்தது.
நான் உன்ன லவ் பண்றேன்னு நினைக்கிறேன். உன்கிட்ட பேசலைன்னாலும்,  உன்னோட நினைப்பு என்னை விட்டு போகவேயில்லை. அங்க இருந்த மூணு நாள்ல தெரியாத ஒரு விஷயம், மும்பைக்கு வந்து இறங்குன முப்பது நிமிஷத்துல தெரிஞ்சுடுச்சு.
இங்க இருக்குற பிரச்சனைகளை எல்லாம் ஓரளவுக்கு சரி பண்ணிட்டு, உன்கிட்ட வரலாம்ன்னு இருந்தேன். ஆனா, நீயே வந்துட்ட. நீ என்னைத் தேடி வரனும்னு நான் நினைக்கலை. ஆனா, இப்போ ரொம்ப நிம்மதியா இருக்கு… என்றான்.
“இவன் இவ்வளவு பேசுவானா..? என்று வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டிருந்தாள்.
“நான் உங்க கூட சண்டை போடனும்ன்னு தான் வந்தேன். ஆனா உங்களைப் பார்த்தாலே, எனக்கு வேற எதுவும் மைண்ட்ல ஓட மாட்டேங்குது. என்றாள்.
அவளைப் பார்த்து மென்மையாக சிரித்தான் ஜீவ மித்ரன்.
“ஏன் சிரிக்குறிங்க..? என்றாள்.
“நான் எவ்வளவு கோவக்காரன் தெரியுமா..? ஆனா இப்போ நானே ரொம்ப மாறிட்டேன்..! என்றான்.
“நான் ஒன்னு சொல்லணும்..! என்று தயங்கினாள்.
“ம்ம் சொல்லு..! என்றான் சிரிப்புடன். அவனின் அந்த சிரிப்பு கூட கவிதையாய் இருந்தது.
“எனக்கு…எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். உங்களை அதிகமா காதலிக்கிறேன். ஐ லவ் யு..மித்ரன்..! என்றாள் ஒருவழியாக.
அவளின் இமைகளையே இமைக்காமல் பார்த்தான் மித்ரன். ஒருவழியா என்கிட்டே சொல்லிட்ட போல. நான் கூட, எங்க நமக்கு குழந்தை பிறந்த பின்னாடி தான் இந்த வார்த்தையை சொல்லுவியோன்னு நினைச்சேன்..! என்றான்.
அவனுக்கு விஷயம் தெரியும் என்பது, அவளுக்குத் தான் அதிர்ச்சி.
“உங்களுக்கு எப்படித் தெரியும்..? என்றாள் கண்கள் கலங்க.
“ஏற்கனவே ஒரு கெஸ் இருந்தது. நீ அனுப்புன மெசேஜ் அனுப்பிய நம்பர், என் மொபைல்ல ராங் நம்பர்ன்னு இருந்தது. நான் கூட பழையபடி ராங் நம்பர்ல இருந்து தான் வருதுன்னு நினச்சேன். அதான் ரிப்லே பண்ணலை. ஜெனியும் சொன்னா..? எல்லாத்தையும் கூட்டி, கழிச்சுப் பார்த்தேன். எல்லா ஆன்சரும் எனக்கு பேவரா தான் வந்தது…ஆனா, நீ தற்கொலை வரைக்கும் போயிருப்பன்னு நான் நினைக்கலை.. என்றான்.
“மித்ரன்..! என்று அவனை பாய்ந்து அணைத்துக் கொண்டாள் சுபஷ்வினி.
“ஐ லவ் யு., ஐ லவ் யு சோ மச்.. என்றாள் அவன் மார்பில் புதைந்தபடி.
அவள் முகத்தை நிமிர்த்தியவன், அவள் முகம் எங்கும் முத்தமிட,
“தேங்க்யு டியர்..! “ என்றபடி அவனும் இறுக  அணைத்துக் கொண்டான்.
“போகலாமா..? என்றான்.
“ம்கூம்..! என்றாள்.
“இப்படியே இங்கயே நிற்குறதா..? மழை வர மாதிரி இருக்கு..! என்றான்.
“பரவாயில்லை.. என்றாள்.
“எல்லாரும் பார்க்குறாங்க..
“பரவாயில்லை.. என்றாள்.
“இப்படியே எவ்வளவு நேரம் இருக்கிறதா உத்தேசம்..? என்றான்.
“வாழ்க்கை முழுசுக்கும்..! என்றாள்.
அந்த வார்த்தையே அவனின் வாயையும் அடைக்க, அவளுடன் அந்த நிமிடத்தை ரசிக்க ஆரம்பித்தான்.
அதே நேரத்தில், சாரல் விழ ஆரம்பிக்க, அது கொஞ்சம் கொஞ்சமாக மழையாக மாறத் தொடங்கியது. அவளுடைய துப்பட்டா அவனுக்குக் குடையாக மாற, அவனுடைய நெஞ்சம், அவளுக்கு குடையாக மாறியது.
மீண்டும் அதே சென்னை எக்ஸ்பிரஸ்….
“இன்னைக்காவது டைம்க்கு வந்து ட்ரெயினைப் பிடிச்சோம்..! என்றபடி, தேஜஸ்வினி பொத்தென்று அமர்ந்தாள். அவள் ஏறிய சில நிமிடங்களில், அவள் அருகில் வந்து அமர்ந்தான் விகாஸ். தேஜு அவனை நிமிர்ந்து பார்க்க,
“ஹாய்..! ஐ ஆம் விகாஸ் நேசன். சென்னைக்கு போறேன்.அதுவும் எனக்கு பிடிச்ச பொண்ணு கூட. அங்க போய் அவங்க அம்மாகிட்ட பொண்ணு கேட்கலாம்ன்னு இருக்கேன். உன்னோட அபிப்ராயம் என்ன..?
“ம்ம்.. என்று அவனை முறைத்தவள்,
“வாய்ப்பில்லை.. என்றாள்.
“அத, நான் அங்க போய் பார்த்துக்கறேன்..! என்றபடி, அவளை உரசியவாறு அமர்ந்தான். அந்த உரசலில், தேஜஸ்வினியின் மனமும் சேர்ந்து அவனுடன் உறவாடியது.
அவர்களுக்கு எதிரில் வந்து அமர்ந்தனர், சுபஷ்வினியும், ஜீவ மித்ரனும்.
“ஹலோ சார், என் பேர் அஸ்வினி, உங்க பேர்..? என்றாள் தேஜு. மித்ரன் அவளை முறைக்க,
“ஹலோ சார்..! நான் விகாஸ், உங்க பேர்..? என்றான் விகாஸும். மித்ரன் அவனையும் முறைக்க,
“என்ன நடக்குது இங்க..? என்று புரியாமல் கேட்டால் சுபஷ்வினி.
அவளின் குழப்ப முகத்தைப் பார்த்த மூவரும், பட்டென்று சிரித்து விட்டனர்.
“அதுவா, லாஸ்ட் டைம், எங்க முதல் சந்திப்பு இப்படி தான் இருந்தது. அதை மறுபடியும் ட்ரை பண்ணிப் பார்த்தோம்,! என்றனர்.
“இப்போ நான் தான் எக்ஸ்ட்ராவா..? என்றாள் சுபஷ்வினி.
“ஆமான்னு சொன்னா, என்ன செய்ய போற..? என்றாள் தேஜு.
“சிம்பிள், என் புருஷனை கூட்டிட்டு கிளம்பிடுவேன்..! என்றாள் அசராமல்.
“பாருங்கப்பா, இப்பல்லாம் நல்லா பேச கத்து வச்சிருக்க அஸ்வினி.. என்றாள் தேஜு.
“என் அண்ணனோட ட்ரெயினிங் அப்படி..! என்று காலரை தூக்கி விட்டுக் கொண்டான் விகாஸ்.
“எருமைங்களா..? என்னை விட்டுட்டு ஏண்டா வந்திங்க..? என்றபடி வந்தாள் ஜெனி.
“ஹி..ஹி..அதான் வந்துட்டல்ல.. என்றனர்.
“ஆமா, ஒரு தமிழ்நாட்டு பையனா பார்த்து  சைட் அடிச்சு கல்யாணம் பண்ணாம, நான் மும்பைக்கு திரும்பறதா இல்லை..! என்றாள் வீர வசனமாக.
“ரொம்ப நல்ல முடிவு..! நாங்களும் உனக்கு ஹெல்ப் பண்றோம்..! என்றாள் தேஜு.
மீண்டும் அவர்களுடைய பயணம். நேசன் ஏற்கனவே சென்று விட்டார். அவருக்கு ரேகாவை பார்த்தே ஆக வேண்டும் போல் இருக்க, உடனே கிளம்பியிருந்தார். இப்போது ஊட்டியில் தான் இருக்கிறார்.
பத்து நாட்களுக்குப் பிறகு இவர்களும் கிளம்பியிருக்கிறார்கள். விகாஸ் – தேஜஸ்வினி திருமணத்தை பற்றி பேசுவதற்காக.
“எப்படியோ ஒரு வழியா, அப்பா-அம்மா சேர்ந்தாச்சு. அண்ணா-அண்ணி சேர்ந்தாச்சு. லக்சனா பிரச்சனை கிளியர், பாட்டி டிக்கெட் வாங்கியாச்சு. இப்படி எல்லார் பிரச்சனையும் முடிஞ்சிருச்சு. என்ன, எனக்கு தான் பிராப்ளம் ஸ்டார்ட் ஆகிடுச்சு..! என்றான் சோகமாய்.
“உனக்கு என்ன பிரச்சனை…ஸ்டார்ட் ஆகுது..! என்றாள் தேஜு.
“எல்லாருக்கும், பொண்டாட்டியால பிரச்சனை வரும். ஆனா எனக்கு பிரச்சனையே பொண்டாட்டியா வரப் போகுது..! என்றான் விகாஸ், சிரிக்காமல்.
“நான் பிரச்சனையா..? சொல்லுவியா,சொல்லுவியா..? என்று தேஜு, அவனைப் போட்டு மொத்தி எடுக்க, அதை மித்ரனின் கைவளைவில் இருந்து, ஆனந்தமாய் ரசித்திருந்தாள் சுபஷ்வினி.
மனைவியின் அந்த வசந்த முகத்தை பார்த்த மித்ரன், அவளையே பார்த்துக் கொண்டிருக்க,
“ம்க்கும்..! நாங்களும் இருக்கோம்..! என்றனர் ஜெனியும், தேஜுவும்.
“சோ வாட்..? பார்க்குறது என்ன…இப்படி முத்தம் கூட குடுப்பேன்..! என்றவன் பட்டென்று அவளுக்கு முத்தமிட, வெட்கத்தில், அவன் நெஞ்சிலேயே அடைக்கலம் புகுந்தாள் சுபஷ்வினி.
அவர்களின் இந்த ரயில் பயணமும், வாழ்க்கை பயணமும் இனிதாக அமையட்டும். நாமும் அவர்களிடம் இருந்து விடை பெறுவோம்.
 
 
 
 

Advertisement