Advertisement

குடை 22:
ஆயிற்று,  இன்றோடு சுபஷ்வினி, சென்னை வந்து ஒரு மாதம் முடித்திருந்தது. இதற்கு இடையில் மித்ரன் ஒரு நாள் கூட அவளைத் தொடர்பு கொள்ளவில்லை. இவளும் அவனுடன் பேச முயலவில்லை. ரேகா மட்டும் தினமும் அழைத்து விடுவார். அவர் வாயிலிருந்து அறிந்த  செய்தி தான், மித்ரன் இன்னும் மும்பையில் தான் இருக்கிறான் என்று.
வசந்தாவிற்கு தான் கவலையாகப் போனது. இத்தனை நாட்கள் இருந்த மன அழுத்தத்தில் இருந்து, அவள் வெளி வந்து விடுவாள் என்று அவர் எண்ணிக் கொண்டிருக்க, நடக்கின்ற விஷயங்கள் அவருக்கு சரியாகப் படவில்லை. இருப்பதில் ஒரே ஆறுதல், ரேகா அவர்களுடன் தொடர்பில் இருப்பது தான்.
அன்று ஆபீசில் இருந்து வரும் போதே, கொஞ்சம் களைத்துப் போய் தான் வந்தாள் சுபஷ்வினி. தேஜஸ்வினியும், அவர்கள் அலுவலகத்திலேயே சேர்ந்திருந்தாள். இருந்தாலும் இருவருக்கும் நேர வித்யாசம் இருந்தது. இருவரும் வேறு வேறு டீம் என்பதால்.
“என்னாச்சு அஸ்வினி..? முகம் ஏன் ஒரு மாதிரி இருக்கு..? என்றார் வசந்தா.
“அதெல்லாம் ஒன்னும் இல்லைம்மா..! லேசா தலை வலிக்குது..! என்றாள்.
“நான் சூடா காபி போட்டுத் தரவா..? என்றார்.
“ம்ம்… என்றவள், அப்படியே சோபாவில் சாய்ந்து அமர்ந்தாள். அந்த தலைவலி எதனால் வந்தது என்று அவளுக்குத் தான் தெரியும். அது மித்ரனின் நினைவுகளில் வந்த தலைவலி.
கண்கள் கரித்துக் கொண்டு வர, அவளுக்கு அழ வேண்டும் போல் இருந்தது.
“என்கிட்டே பேசனும்ன்னு, அவருக்குத் தோணவே இல்லையா..? என்று, ஆயிரம் முறை யோசித்து வெம்பிப் போனாள்.
“இப்படி இன்னும் எத்தனை நாளைக்கு அழுதுகிட்டு இருக்க போற சுபஷ்வினி. நீ ஒன்னும் சின்ன குழந்தை கிடையாது..! என்று அவளின் மனசாட்சி அதட்டியது அவளை.
“நான் என்ன பண்றது..? அவர் இன்னும் வரலைன்னு அத்தை சொல்றாங்களே..? என்று பதில் சொல்லியது அவள் மனம்.
“அவன் வரலைன்னா என்ன..? உனக்கு மும்பைக்கு போகத் தெரியாதா…? இல்ல, நீ போனா அவன் தான் வேண்டாம்ன்னு சொல்லிடுவானா..? முன்ன மாதிரி அவன் யாரோ இல்லை. இப்ப உனக்கு புருஷன்… என்று அவள் மறந்திருந்த விஷயத்தை, நியாபகப்படுத்தியது மனசாட்சி.
“இப்படியே இருந்தால் கதைக்கு ஆகாது. என்னைய பத்தி என்ன நினைச்சுகிட்டு இருக்கான்..? நான் அவன் கண்ணுக்கு லூசு மாதிரி தெரியறேனா..? இனி இப்படியே இருந்தா, எனக்குன்னு ஒரு ஒரிஜினாலிட்டி இல்லாம போய்டும்..! என்று மனதிற்குள் ஒரு முடிவு எடுத்தாள்.
“அம்மா தாயே…, இப்பவாவது உனக்கு புத்தி தெளிஞ்சதே..? அந்த வரைக்கும் சந்தோசம். நான் பொறுப்பேன். படிக்கிறவங்க பொருப்பாங்களா..? என்று மனசாட்சி, அவளுக்கு கேட்காமல் கிண்டல் அடித்தது.
சூடான ஒரு கப் காபி, மங்கிப் போயிருந்த மனதிற்கு, புத்துணர்ச்சியாய் அமைந்தது.மும்பை செல்வதற்கு ஆயத்தமானாள்.
“என்ன, பலத்த யோசனை..? என்றபடி வந்து, பொத்தென்று அமர்ந்தாள் தேஜஸ்வினி.
“நான் மும்பை போக போறேன்..! என்றாள் மொட்டையாக.
“என்னாச்சு…? அங்க ஏதும் பிரச்சனையா..? என்றாள் தேஜு பதட்டமாக.
“அங்க பிரச்சனையில்லை. எனக்குத்தான் பிரச்சனை. என்ன நினச்சுகிட்டு இருக்கான் மனசுல. பெரிய இவன்னு நினைப்பு.ஒரு போன் பண்ணனும்ன்னு தோணுதா..? என்று சுபஷ்வினி பொரிந்து தள்ள,
“ஆகா,ஆகா..பார்ம்க்கு வந்துட்டா அஸ்வினி..! நீ நடத்து. நான் இருக்கேன் உனக்கு..! என்றாள்.
“என்ன கிண்டலா..?
“சத்தியமா இல்லை சகோதரியே..! உங்களுடன் நானும் துணைக்கு வரலாம் அல்லவா..? என்று அவள் அபிநயம் பிடிக்க,
“இல்லை, நானே போய்ப்பேன் என்றாள்.
“பொல்லாத உலகமடா இது. காதலுக்காக, உடன்பிறப்பை கழட்டி விடுவதா..? என்று தேஜு கத்த,
“இப்ப எதுக்குடி கத்துற, சரி வா..! என்றாள்.
“இந்த பயம் இருக்கட்டும்..! என்றாள் தேஜு.
வசந்தா, முதலில் யோசித்தாலும்…பிறகு சரி என்று சொல்லி விட்டார். ரேகாவிடம் சொன்ன சுபஷ்வினி, தான் வரப் போகும் விஷயத்தை, மித்ரனிடம் சொல்லக் கூடாது என்றும் சொல்லி விட்டாள்.
“அஸ்வினி, நாம எதுல போகப் போறோம்..? என்றாள் தேஜு.
“பிளைட்ல..! என்றாள்.
“நோ..! ட்ரெயின்ல போகலாம்.. என்றாள்.
“ரெண்டு நாள் ஆகும். அதுக்கு வாய்ப்பே இல்லை. எனக்கு உடனே பார்த்து, நாக்கைப் பிடுங்குற மாதிரி நாலு கேள்வி கேட்கணும்..! என்றாள் சுபஷ்வினி.
“யாரு நீ..? மித்ரன் சாரை..? நடக்கிற விஷயமா சொல்லு..! என்றாள்.
மறுநாள், மும்பை செல்லும் பிளைட்டில் ஏறியதில் இருந்தே, சுபஷ்வினிக்கு படபடப்புத் தொடங்கிவிட்டது. தைரியமா கிளம்பிட்டோம். அங்க அவன், எதுக்கு வந்தன்னு கேட்டா, என்ன சொல்றது..? என்று யோசிக்கத் தொடங்கினாள்.
“மறுபடியும் முதல்ல இருந்தா..? என்று மனசாட்சி நொந்து கொண்டது.
தேஜஸ்வினிக்கு அப்படி எந்த உணர்வுன் இல்லை போல, சந்தோஷமாக வந்தாள்.
“வீடு எந்த ஏரியாவுல இருக்கு..? என்றாள் தேஜு.
“யாருக்குத் தெரியும்..? என்றாள் சுபஷ்வினி.
“அடிப்பாவி..! அதுவே தெரியாதா..? அப்பறம் எந்த நம்பிக்கையில கிளம்பி வந்த..?  என்றாள்.
“இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா, வாடி வாயை மூடிகிட்டு..! என்றாள்.
“நல்ல முன்னேற்றம். வாய், வாய்க்கால் சைஸ்க்கு போகுது உனக்கு.. என்றாள் தேஜு.
உண்மையாலுமே அவளுக்கு முகவரி தெரியாது. அவனுடைய நம்பர் மட்டும், மனதில் அழியாமல் பதிந்திருந்தது. போனில் இருந்து மட்டும் தான் சங்கியால் அந்த நம்பரை அழிக்க முடிந்தது. அவளின் மனதில் இருந்து அழிக்க முடியவில்லை.
மும்பை ஏர்போர்ட்டில் இருந்து டாக்சியைப் பிடித்தனர். ஜேஎம் குழும வாசலில் இறங்க,
“இந்த ஆபிசை, நான் அண்ணாந்து தான் பார்த்துருக்கேன். இன்னைக்கு தான் உள்ளே போய் பார்க்கப் போறேன்…! என்றாள் தேஜஸ்வினி.
“ம்ம்.. என்று அஸ்வினி சொல்ல,
“இந்த ஐடியா, உனக்கு எப்படி வந்தது. எனக்குக் கூட தோணலை பாரேன். ஆனா மித்ரன் சார் இங்க இல்லைன்னா..? என்றாள் தேஜு.
“இல்லைன்னா, அப்பறம் பார்ப்போம்..! என்றாள்.
இருவரும் ஒரே கலரில் சுடிதார் அணிந்திருந்தனர். அந்த அலுவலகத்திற்கு உள்ளே நுழையும் போது, தேஜஸ்வினிக்கு பிரமிப்பாய் இருந்தது. இப்படி இருந்தவனா, எங்க கூட ட்ரெயின்ல வந்தான்..? என்ற யோசனை அவள் மூளையில் ஓடிக் கொண்டிருந்தது.
சுபஷ்வினிக்கு அந்த யோசனை எல்லாம் துளியும் இல்லை. அவளுக்கு மித்ரனைப் பார்த்தே ஆக வேண்டும். அந்த எண்ணம் மட்டுமே இருந்தது.
ரிஷப்ஷனில் கேட்க, அவர்கள் அப்பாயின்மென்ட் இல்லாமல் அனுமதிக்க மறுத்தார்கள்.
“என்னடி இது..? நமக்கு வந்த சோதனை..இப்ப என்ன பண்றது..? என்றாள் தேஜு.
சுபஷ்வினிக்கும் எரிச்சலாக வந்தது. ஜீவ மித்ரனை மனதிற்குள் வறுத்து எடுத்தாள்.
அந்த நேரத்தில் ஜெனி, வெளியில் இருந்து உள்ளே வந்தாள். வந்தவளின் கண்களில், ரிஷப்ஷனில் இருந்த இருவரும் பட,
“ஹாய் அஸ்வினி..! என்றாள்  இருவரையும் பார்த்து. யார் என்பது மட்டும் தெரியவில்லை.
“ரெண்டு பெரும் டிவின்சோ..? என்று யோசித்துக் கொண்டிருக்க, சுபஷ்வினிக்கு ஜெனியை அடையாளம் தெரிந்தது. ஒரு காலத்தில், அவனின் காதலி என்று நினைத்தவள் அல்லவா…? அதனால் அந்த முகம் மறையாமல் இருந்தது.
“ஹாய்..! என்று முதலில் கை நீட்டியவள், சுபஷ்வினி தான்.
“மித்ரன் வொய்ப்..! என்றாள் ஜெனி.
“எஸ்..! என்றாள்.
“வாவ் சூப்பர். நீங்க ரெண்டு பேரும் டிவின்சா..? என்றாள்.
“ம்ம்..ஆமா..! என்றனர்.
“மை குட்னஸ்..இந்த ஜீவா சொல்லவே இல்லை..? என்றாள்.
“ஏன் இங்க இருக்கீங்க..? என்றாள்.
“இவங்க விடலை..! என்றனர்.
“ஹோ..சாரி..! அவங்களுக்குத் தெரியாது இல்லையா…? அதான்..! என்ற ஜெனி,
“நீங்க வாங்க போகலாம்..! என்றாள்.
“மித்ரன்.. என்று அஸ்வினி இழுக்க,
“தெரியலையே..? இங்க இருக்கானா, இல்லையான்னு. நானும் கால் பண்ணேன், எடுக்கலை. அதான் வந்தேன். வாங்க பார்ப்போம்..! என்றபடி அவர்களை அழைத்து சென்றாள் ஜெனி.
அவர்களுக்கு ஜெனியை உடனே பிடித்துப் போனது. கொஞ்சமும் யோசிக்காமல் அவள் பேசிய விதம், பட்டென்று பழகிய விதம் இப்படி அவர்களிடம் பாஸ் மார்க் வாங்கிவிட்டாள்.
“அவங்க பாட்டிக்கு எப்படி இருக்கு..? என்றனர்.
“அவங்க தவறிட்டாங்க..! டுவென்ட்டி டேய்ஸ் ஆகிடுச்சு. மித்ரன் சொல்லலையா..? என்றாள் ஜெனி.
“இல்ல, சொல்லலை.. என்று சொன்ன சுபஷ்வினிக்கு குரல் உள்ளே போயிருந்தது.
அவளின் மனதை சரியாகப் படித்த ஜெனி,
“உங்களைக் கஷ்ட்டப்படுத்த வேண்டாம்ன்னு நினைச்சு தான், சொல்லியிருக்க மாட்டான். மத்தபடி வேற ஒண்ணுமில்லை.. என்றாள் சமாதானமாக.
“இது தான் மித்ரன் ரூம்..! இங்க வெயிட் பண்ணுங்க..எங்க இருக்கான்னு தெரியலை… நான் பார்த்துட்டு வரேன்..! என்று சொல்லி விட்டு ஜெனி செல்ல,
“அடேங்கப்பா, இது ரூமா…?இவ்வளவு பெருசா இருக்கு..! என்று இருவரும் மனதில் நினைக்க,
“அந்த பாட்டி இறந்ததைக் கூட சொல்லலை. ரேகா ஆன்ட்டி கூட சொல்லலை..! என்றாள் தேஜு.
“ஆன்ட்டிக்கும் கூட தெரிஞ்சிருக்காது..! என்றாள் அஸ்வினி.
“இப்பவே நல்லா சப்போர்ட் பன்றடி..! என்று வம்பிழுத்துக் கொண்டிருந்தாள்.
அந்த அறையின் ஒவ்வொரு பொருளையும், ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் சுபஷ்வினி. சுழல் சேரின் மேல் இருந்த கோட் , மித்ரன் அங்கு தான் இருக்கிறான் என்பதை உறுதிப் படுத்தியது.
ஆள் வரும் சத்தம் கேட்டு, மித்ரன் தான்… என்ற ஆசையுடன் திரும்ப, அங்கே நேசன் வந்து கொண்டிருந்தார்.
அவர் யாரென்று தெரியாமல் முழிக்க, மித்ரனின் ஜாடை அவரிடம் இருப்பது கண்டு, ஓரளவு ஊகித்து விட்டாள் சுபஷ்வினி.
“நல்லா இருக்கிங்களா மாமா..! என்றாள் எடுத்தவுடன்.
அவளை ஆச்சர்யமாகப் பார்த்தவர்,
“எப்படிம்மா கண்டுபிடிச்ச..? என்றார்.
“இதென்ன பெரிய விஷயம். மித்ரனுக்கு உங்க ஜாடை. அவ்வளவுதான்..! என்றாள் சுபஷ்வினி.
“ஹாய் அங்கிள்..! நான் தேஜஸ்வினி. இவ சுபஷ்வினி..! என்றாள் தேஜு.
“மாமான்னு கூப்பிட்டப்பவே தெரிஞ்சுடுச்சுமா..! என்றார் நேசன்.
“ஒரு போன் பண்ணியிருந்தா, அவனே ஏர்போர்ட் வந்திருப்பானே..? என்றார்.
“உங்களுக்கு சிரமம் வேண்டாம்ன்னு தான் சொல்லலை மாமா..! என்றாள்.
என்னம்மா சாப்பிடுறிங்க..? என்றார்.
“ஒன்னும் வேண்டாம் மாமா.. என்று சுபஷ்வினி சொல்ல,
“அங்கிள், எப்படி இப்பவும் இவ்வளவு எங்கா இருக்கீங்க. மித்ரன் சார்க்கு அப்பான்னு சொன்னா, நம்பவே மாட்டாங்க. அண்ணான்னு சொன்னா சரியா இருக்கும்..! என்றாள் தேஜஸ்வினி.
“அப்படியெல்லாம் இல்லைம்மா. ஆக்கிப் போட்டு, என்னை குண்டாக்க மனைவி இல்லாததுனால, நான் இப்படி வத்தலும், தொத்தலுமா இருக்கலாம் இல்லையா..? என்றார்.
அவர் ஆழ்மனது வேதனை, வார்த்தைகளில் வெளி வந்தது. யாரையும் பாதிக்காத வண்ணம்.
“நீங்க வத்தல், தொத்தல்ன்னு சொன்னா, நாடு தாங்காது அங்கிள்..! என்று தேஜஸ்வினி சொல்லிக் கொண்டிருக்க, சுபஷ்வினியின் கண்களோ, வேறு ஒரு நபரைத் தேடிக் கொண்டிருந்தது.
அவள் பார்வையின் தேடலை நன்கு உணர்ந்து கொண்டார் நேசன். ரேகாவின் தெரிவு சோடை போகவில்லை என்று அவருக்கத் தோன்றியது. தன் மகனுக்கு ஏற்ற பெண் தான், என்று பார்த்த சில நிமிடங்களிலேயே உணர்ந்து கொண்டார்.
“மித்ரன் இப்ப வந்துடுவான்மா..! என்றார்.
“சரி என்பதைப் போல், தலையை ஆட்டினாள் சுபஷ்வினி.
சில நிமிடம் தயங்கிவர்,
“ரேகா எப்படிமா இருக்கா..? என்றார் ஆதுரமாய்.
“அவங்க நல்லா இருக்காங்க மாமா. பாட்டி இறந்த விஷயத்தை ஏன் சொல்லலை மாமா..? என்றாள்.
“நான் தான் வேண்டாம்ன்னு சொன்னேன். எல்லாரையும் கஷட்டப் படுத்த வேண்டாம்ன்னு தான். அது மட்டும் இல்லாம, அவங்க கடைசி வரை, ரேகாவை மன்னிக்கவும் இல்லை. அவளைப் பார்க்க நினைக்கவும் இல்லை. அப்படிங்கிற பட்சத்தில், யாருக்கும் மன உளைச்சல் வேண்டாம்ன்னு தான் சொல்லலை..! என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
“என்ன டாட், அவசரமா வர சொன்னிங்க..? வாட் ஹாப்பன்..? என்று டன் கணக்கில் எரிச்சலுடன் வந்தான் மித்ரன்.
நேசன், பார்வையை முன்னால் காட்ட, அப்போது தான் கவனித்தான் அவர்களை. அந்த ஒரு விஷயமே, சுபஷ்வினிக்கு தீப்பற்றியதைப் போல் இருந்தது.
அவனைப் பார்த்து நன்றாகவே முறைத்தாள்.
“நீங்க எப்ப வந்திங்க…? என்ன திடீர்ன்னு..? என்றான் சாதரணமாக.
தேஜுவுக்கு கடுப்பாக, சுபஷ்வினி, நேசனின் முகத்துக்காக அமைதியாக இருந்தாள்.
மருமகளின் முகத்தைப் பார்த்த நேசனுக்கு, சிரிப்பை அடக்க முடியவில்லை.
“தேஜு, நீ வாம்மா….உனக்கு ஆபீசை சுத்திக் காட்டுறேன்.. என்று அவர் சொல்ல,
“நாங்க கிளம்புன உடனே,  மெதுவா வேண்டாம்..நல்லாவே நாலு சாத்து சாத்து..! கேள்வியைப் பாரு..! என்று சத்தமாகவே சொல்லி விட்டு சென்றாள் தேஜு. நேசனுக்கு தான் சிரிப்பை அடக்குவது பெரும்பாடாய் போனது.
அவர்கள் சென்ற பின்னும் முறைத்துக் கொண்டே நின்றாள் சுபஷ்வினி.
“இன்னும் எவ்வளவு நேரம் இப்படி நின்னுட்டே இருக்க போற..? என்றான் அசால்ட்டாய்.
“ஒரு போன் பண்ணனும்ன்னு கூட உங்களுக்குத் தோணலையா..? என்றாள் எரிச்சலுடன்.
“உன் நம்பர் என்கிட்டே இல்லவே இல்லை..! அப்பறம் எப்படி கூப்பிடுறது..? என்றான்.
“என் நம்பரே இல்லையா..? என்றாள்.
“ஆமா, நீ எப்ப குடுத்த..? என்றான்.
“நான் வாட்ஸ்அப்ல மெசேஜ் போட்டேனே..! நீங்க பார்த்த டிக்  தான கட்டுச்சு..? என்றாள்.
“நீ எங்க எனக்கு மெசேஜ் போட்ட…என்ன கிண்டலா..? என்றான்.
“நான் கிண்டல் பண்றேனா..? எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்..? என்று தலையில் அடித்துக் கொண்டாள்.
“இவ எங்க நமக்கு மெசேஜ் போட்டா..? என்று யோசித்தவன், தன்னுடைய செல்லை எடுத்துப் பார்க்க, அதில் அவள் பேர் போட்ட எந்த நம்பரும் இல்லை.
“என்னை நியாபகமாவது இருக்கா..? என்றாள்.
“அதெப்படி மறக்கும்..? நீதான்  எனக்கு  மனைவின்னு, எங்கம்மா கட்டி வச்சாங்களே..!  என்றான் செல்லைப் பார்த்துக் கொண்டு.
எதைப் பார்த்தானோ தெரியவில்லை.வேகமாக நிமிரந்தவன், அவள் முறைப்பதையும் பொருட்படுத்தாமல்,
“உன்னோட மொபைலைக் குடு..! என்றான்.
“எதுக்கு..? என்றாள்.
“குடுன்னு சொன்னேன்..! என்றான்.அவள் தயங்கியபடி செல்லை நீட்ட, அதை வாங்கியவன், சில நிமிடங்கள் ஆராய்ச்சியில் இறங்கினான். முடிவு என்னமோ, சந்தோஷமான விஷயம் தான். ஆனால் அதை வெளிக் கட்டவில்லை.
எதுவும் பேசாமல் அப்படியே நின்றான் . அவளும் எதாவது பேசுவான் என்று எதிர்பார்க்க, அவனோ பேசவேயில்லை. ஆனால் ரசித்துக் கொண்டிருந்தான்.
மெரூன் வண்ண,அனார்கலி சுடிதார் அவள் நிறத்திற்கு எடுப்பாய் இருக்க, கோபத்தில் சிவந்திருந்த முகம், அவளுக்கு மேலும் அழகாய் இருந்தது.
“மனுஷனைக் கொல்றதுக்காகவே அங்க இருந்து கிளம்பி வந்திருப்பா போல. தக்காளி, எப்படிப் பார்த்தாலும் அழகா இருக்காளே..? என்று மனதிற்குள் நினைத்தவன், வெளியே சொல்லவில்லை.
அவன் அப்படி நிற்பதைப் பார்த்த சுபஷ்வினிக்கு எரிச்சல் கூட, அங்கிருந்து கிளம்பப் பார்த்தாள்.
அதை அறிந்தவன், ஒரே இழுவையில் அவளை தனக்குள் அடக்கி இருந்தான்.
என்ன நடந்தது..? என்று அவள் உணரும் முன்னரே, அவனின் இறுகிய அணைப்பிற்குள் இருந்தாள். இத்தனை நாள் பிரிவையும் ஈடு செய்வதாய் இருந்தது அந்த அணைப்பு. முதலில் திமிறியவள், பின் கணவனின் அணைப்பிற்குள் பாந்தமாய் அடங்கிப் போனாள்.
கனவோ என்று கூட ஒரு நிமிடம் யோசித்தாள். அத்தனை நாள் தவிப்பையும், அவனின் அந்த ஒற்றை அணைப்பு சரி செய்திருந்தது. அவளுக்கு கண்கள் கலங்க, அவனுடைய சட்டையை நனைத்தாள்.
அவளின் முகத்தை நிமிர்த்தியவன்…இப்ப எதுக்கு கண் கலங்குற..? என்றான்.
“ஒண்ணுமில்லை.. என்பதைப் போல், தலையை ஆட்டியவள், மீண்டும் அவன் நெஞ்சத்திலே மஞ்சம் கொண்டாள்.

Advertisement